அடங்காத அதிகாரா 38

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 38

பெங்களூருவை அடைந்திருந்த நேத்ராவும் பூமிகாவும் மறுநாள் அந்தப் பார்க்கின் வாயிலில் தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர்.

அன்று பகல் முழுவதும் பெங்களூரிவில் உள்ள மால்கள் திரையரங்கு மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டு இடங்கள் என்று சென்று பகல் பொழுதை முழுவதும் கழித்தவர்கள் மாலை மயங்கிய நேரத்தில் தான் பார்க்கிற்கு சென்று சற்று நேரம் மக்களை வேடிக்கை பார்த்துவிட்டு இரவு ஹோட்டலுக்கு சென்று தூங்கி மறுநாள் சென்னை திரும்பிவிடும் எண்ணத்தில் இருந்தனர்.


பார்க்கின் உள்ளே நுழைந்தவர்கள் மெல்ல கைகளை கோர்த்துக்கொண்டு சுற்றி ஆங்காங்கே இருந்த மக்களை வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தனர்.



பச்சிளம் குழந்தை முதல் நடக்க முடியாமல் தடி ஊன்றி நடந்த தாத்தா வரை அவர்களுக்கு பார்க்கவும் யோசிக்கவும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் சுற்றி இருந்தனர்.

ஒரு நோக்கத்தோடு ஒரு இடத்திற்குச் சென்று வேலையை முடித்துவிட்டு வரும்பொழுது நாம் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை கவனிப்பதோ அவர்களை வாசிக்க முயல்வதோ இல்லை.

ஆனால் தனிப்பட்ட முறையில் நம்மை நாமே வேலைகளில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காகவும் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காகவும் இப்படி எங்காவது செல்லும்போது தான் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை படிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

கள்ளமில்லாத சிரிப்பை உதிர்க்கும் மழலையும் வாழ்ந்து முடித்த வயோதிகர்களின் அனுபவப் புன்னகையும் நமக்கு பல பாடங்களை அங்கே கற்றுக் கொடுக்கும். யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் கூட அதை பார்க்க நமக்கு சுவாரசியமாக இருக்கும். அதிலிருந்தும் நாம் ஏதாவது கற்றுக்கொள்ள ஒரு விஷயம் கிடைக்கும்.

இப்படி ஏதேதோ எண்ணிக் கொண்டு ஒவ்வொருவரையும் கண்களால் அளந்தபடி அவ்விரு பெண்களும் அங்கிருந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர்.



தொலைவில் தெரிந்த ஒரு பெஞ்சில் ஒரு பெண் தனியே அமர்ந்து மிகவும் சோகமாக தன் முகத்தை வைத்துக் கொண்டிருப்பது அந்த மங்கிய ஒளியில் கூட அவர்களுக்கு புலப்பட்டது அதைவிட அம்முகத்தில் தெரிந்த பரிட்சையம் பூமிகாவை லேசாக மகிழ்ச்சி அடைய வைக்க நேத்ராவோ மெல்ல நடுங்கத் துவங்கினாள்.

“அண்ணி அது லாவண்யா தானே?” என்று பூமிக்கா மகிழ்ச்சியாக தன் கைகளை பற்றி இருந்த நேத்ராவை நோக்க


அவளோ பயத்திலும் பரிதவிப்பிலும் கண்களின் நீருடன் அப்பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணி என்ன ஆச்சு?”என்று பூமிகா பதற,

“அவ இப்படி இருக்க நான் தானே காரணம்? மூன்று வருடத்திற்கு முன்னாடியே என் அண்ணன் கிட்ட நான் எல்லா உண்மையும் சொல்லி இருந்தா ஒருவேளை இன்னைக்கு அவ வாழ்க்கைய ஏதோ ஒரு விதத்துல நிம்மதியா வாழ்ந்துக்கிட்டாவது இருந்திருப்பா. இவ்வளவு சோகமா உட்கார்ந்து இருக்கான்னா அவ தன் கூட பிறந்த இன்னொருத்தியை இழந்த சோகத்தில் தானே இன்னும் உழன்றுகிட்டு இருக்கா?” என்று நேத்ரா பதட்டத்துடன் கூறவே

பூமிகா அவளை தட்டிக் கொடுத்து “அது நடந்து மூன்று வருஷம் ஆகுது அண்ணி. என்னதான் நம்ம உயிருக்கு உயிரான ஒருத்தரை நாம பிரிஞ்சாலும் மூணு வருஷத்துக்கு யாரும் இப்படி சோகமா ஒரு மூலையிலேயே உட்கார்ந்து இருக்க மாட்டாங்க. ஒருவேளை வெளியே வந்து இருக்கும்போது அவளுக்கு தானியா நினைவு வந்திருக்கலாம் அதனால கூட அவ அப்படி இருக்கலாம். இல்ல இன்னிக்கு அவளோட வாழ்க்கையில நடந்த ஏதோ ஒரு சம்பவத்துக்காக வருத்தப்பட்டு சோகத்தோட உட்காந்து இருக்கலாம். எல்லாத்தையும் உங்க தலையிலேயே எடுத்து போட்டுக்காதீங்க.

முதல்ல அவளை பார்த்தப்ப போய் பேசணும்னு ஆர்வமா இருந்துச்சு. ஆனா உங்கள பார்க்கும்போது இப்போ அது சரியான முடிவா எனக்கு தெரியல. வாங்க நம்ம ரூமுக்கு போகலாம் ஊருக்கு போனதும் மாமா கிட்ட எல்லாத்தையும் சொல்லி இதுக்கு ஒரு முடிவை தெரிஞ்சுக்கிட்டு சரியான முடிவோட நாம அவளை வந்து பாப்போம். அன்னைக்கு கண்டிப்பா அவ இப்படி இருக்க மாட்டா.” என்று நேத்ராவை தேற்றி தன்னோடு அழைத்துச் சென்றாள் பூமிகா.


****

வசீகரன் அன்று அலுவலகத்திற்கு வந்தபோது அவனுடைய புதிய அலுவலகத்தில் இருந்து மேலாளர் அவனே அழைத்திருந்தார் இன்று அவனை சந்திக்க வருமாறு திருமூர்த்தி அழைத்திருந்ததை அவர் நினைவு படுத்தினார்.

அவரிடம் அவசர வேலையாக அவன் ஹைதராபாத் செல்வதாகவும் திருமூர்த்தியை பின்னொரு நாளில் வந்து சந்திப்பதாகவும் தகவல் தெரிவித்தும் விடுமாறு கூறிய வசீகரன் தன்னுடைய வேலைகளை கவனிக்கலானான்.

இதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் “என்னடா இங்கே உக்காந்துட்டு ஹைதராபாத் போக போறேன்னு சொல்ற? எனக்கு தெரியாம வேற எதுவும் பிளானா? அடேய் இத்தனை நாள் கழிச்சு இன்னிக்குதாண்டா இந்த ஆபீஸ் பக்கமே நீ வந்திருக்க. உன்னை நம்பி ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு ஜாலியா என் கேர்ள் பிரண்டோட ஊர் சுத்தலாம் நினைச்சா அதுக்கு வேட்டு வச்சுருவ போல இருக்கே?” என்று பதறினான்.

“நான் எங்கேயும் போகல. இங்க தான் இருக்கேன். எனக்கு இப்ப அவரை மீட் பண்ண விருப்பம் இல்ல. அந்த அரசியல் விஷயத்தில் வந்து கொஞ்சம் விலகி இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். இப்போ போனாலும் அவரு விலக விடமாட்டார் அப்படின்றது எங்க மாமாவோட எண்ணம். எங்க மாமா சொன்னா சரியாத்தான் இருக்கும். சோ.. அவர பார்த்து அவர் பேச்சுல கன்வின்ஸ் ஆகி சரின்னு ஒத்துக்கிறதோ, இல்ல வேண்டாம்னு அழுத்தமா சொல்லி இது ஒரு பிரச்சனையா மாறி நாளைக்கு என்னோட நேத்ராவை கல்யாணம் பண்ணிக்கிறதுல பிரச்சனை வருவதோ, இரண்டையுமே நான் விரும்பல. சோ… பிரச்சனையை நான் இங்க இல்லன்னு சொல்லி தள்ளி போட போறேன். வர்றப்ப பாத்துக்கலாம். இப்போதைக்கு எனக்கு அது வேண்டாம். அவ்வளவுதான்” என்று கூறிவிட்டு தன் எதிரில் இருந்த பெரிய திரையில் தன்னுடைய வேலையை கவனித்தபடி இருந்தான் வசீகரன்.


அவர்கள் பில்டிங் செக்யூரிட்டி அவனுடைய கைபேசியில் அழைத்து அவனைப் பார்க்க ஒருவர் வந்திருப்பதாக கூறவும் யாரென்று புரியாமல் உள்ளே அனுப்பும் படி கூறியவன் தன் நண்பனை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

நீரூபன் நடந்து உள்ளே நுழைய அவனை கண்டதும் மகிழ்ச்சியோடு துள்ளி எழுந்த வசீகரன்,

“மாமா நீங்களா? வரேன் எனக்கு ஒரு போன் கூட பண்ணலையே! நீங்க செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு நேரா வர வேண்டியதுதானே? பர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு!!” என்று முதல் முறையாக தன்னுடைய சொந்த அலுவலகத்திற்கு வரும் தன்னுடைய மைத்துனனை வரவேற்றான் வசீகரன்.

“ஒன்னும் இல்ல. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். போன்ல பேசறதை விட நேரில் பேசறது பெட்டர்ன்னு தோணுச்சு. அதுதான் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி உன்ன பாத்துட்டு போகலாம்னு வந்தேன். காலையில நாலு மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பிட்டதா பூமிகா எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தா. இடையில பிரேக் எடுத்தாலும் மேக்ஸிமம் இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க சென்னைக்குள்ள வந்துடுவாங்க. நீ நேத்ரா கிட்ட எதையும் கேட்க வேண்டாம்ன்னு பூமிகா சொல்ல சொன்னா.

அவங்க ரெண்டு பேருமே ஏதோ ஒரு விஷயத்தை என்கிட்ட சொல்ல போறதா முடிவு எடுத்து இருக்காங்களாம். ஊருக்கு வந்துட்டு நேத்ரா எப்ப கூப்பிடுறாளோ அப்போ என்ன வந்து அவளோட மீட் பண்றதா பூமிகா சொல்லி இருந்தா. எது சொல்றதா இருந்தாலும் இனிமேல் நீயும் எங்க கூட இருக்கணும் இனிமே நம்ம நாலு பேருக்குள்ள பெருசா எந்த ஒளிவு மறைவும் இருக்கிறத நான் விரும்பல. ஏன்னா எனக்கு எப்படி பூமிகா கிட்ட எதையும் மறைக்கக் கூடாதோ, அதே மாதிரி தான் உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எந்த ஒளிவும் மறைவும் இருக்க வேண்டாம் அதனால இனி எப்படி இருந்தாலும் நம்ம நாலு பேரும் தான் அடுத்த ஜெனரேஷன் நம்மளோட குடும்பம் நாமளே பேசி முடிவு பண்ணிக்கலாம்.

அதேநேரம் அவ பேசின விதமே ஏதோ பெரிய விஷயத்தை வெளியே சொல்ல போற மாதிரி எனக்கு தோணுது. பெட்டர் நாம ரெண்டு பேரும் அதுக்கான பிரிப்பேர் மைண்ட் செட்டில் இருக்கிறது நல்லது. அல்ரெடி நம்மகிட்ட ஒரு பெரிய விஷயம் இருக்கு. அதோட பின்னணியை பார்த்த வரைக்கும் நான் தெரிஞ்சுக்கிட்டத இப்போ உன் கிட்ட சொல்றேன்.

அந்த வீடியோல இருக்கிறது எல்லாமே கட்சி பாரபட்சம் இல்லாம அரசியல் காரணங்களுக்காக நடக்கப்பட்ட கொலை, மிரட்டல், விபத்து இப்படி எல்லாம் தான். இந்த கட்சி அந்த கட்சியின் எந்த பாகுபாடும் இல்லை. முருகப்பன் பெரியப்பா சொன்ன மாதிரி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அதை தேவையான நேரத்துல உபயோகப்படுத்திக்கிறதுக்காக யாரோ ஒருத்தர் சேகரிச்சு வச்சிருக்காங்க. அந்த ஒருத்தர் யாருன்னு என்னால இப்போ கண்டுபிடிக்க முடியல. ஆனா அதுல இருந்த எல்லா விஷயத்தையும் ரிலேட் பண்ணி பார்க்கும்போது கிட்டத்தட்ட பத்து வருஷமா இது நடந்துகிட்டு இருக்கு. அதாவது அப்பா அவருடைய ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்தே இதில் இருக்கக்கூடிய விஷயங்கள் நடந்திருக்கு.

இனிமே நாம ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமா தான் எடுத்து வைக்கணும்.” என்று நீரூபன் கூற,

“நான்தான் சொன்னேனே மாமா, இந்த அரசியல் எல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு நேத்ரா கூட நிம்மதியான ஒரு வாழ்க்கை தான் வேணும். ப்ளீஸ் மாமா நான் உங்களோட பேச்சை மீறக் கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று அவனுக்கு புரிய வைத்துவிடும் பிடிவாத குரலில் வசீகரன் கூறினான்.

“நீ எப்போ அரசியல்வாதியோட பொண்ண காதலிச்சியோ அப்பவே அரசியல் உன்கூட ஒட்டிக்கிச்சு. எப்ப அரசியல்வாதிக்கு பிள்ளையா பிறந்தேனோ அப்பவே எனக்கும் இது ஒட்டிக்கிச்சு. கிட்டத்தட்ட ரொம்ப வருஷமா நான் அது கிட்ட இருந்து விலகி ஓட தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் என்னதான் விலகி ஓடினாலும் அது என்ன துரத்திக்கிட்டே வருது. ஓடுற எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு அடுத்து ஓட போற உன்கிட்ட சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனா என்னால ஓட முடிஞ்சுது,அதனால ஓடினேன். நின்னு அது கிட்ட மாட்டிகிட்டாலும் என்னால அதை சமாளிக்க முடியும். ஆனா ஓடுற நீ நின்னா, நீ அதுகிட்ட மாட்டிக்க மாட்ட, அது உன்னை முழுங்கிடும். ஏன்னா இந்த நிமிஷம் வரைக்கும் சொசைட்டியோட பார்வையில நீ இன்னும் அரசியல்வாதி குடும்பத்தில் ஒருத்தனா சேரல.

அதனால அந்த அரசியல் உன்ன மொத்தமா முழுங்கிடும் வசி. நான் என்னதான் உன்னை மீட்க நினைச்சாலும், சட்ட ரீதியா ஒருவேளை யாராவது உன்னை ஏதாவது செஞ்சாங்கன்னா, என்னால அதிலிருந்து உன்னை காப்பாத்த முடியாது!” என்று எங்கோ வெறித்தபடி கூறினான்.

“என்ன மாமா நீங்களே இப்படி சொல்றீங்க!” என்று வசீகரன் ஏமாற்றத்துடன் வினவ

“இந்த அரசியல் வேணாம்னு ஓடின நான் தான் சொல்றேன். கண்டிப்பா இந்த அரசியலுக்குள்ள நான் வரவேண்டிய சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமா உருவாகிக்கிட்டு இருக்கு. இந்த அரசியலுக்குள்ள நான் வரணும்னா எனக்கு நம்பிக்கையானவங்க வேணும். ஏற்கனவே இந்த சாக்கடைக்குள்ள ஒளிந்து கொண்டு இருக்கிற யாரும் இதை சுத்தம் பண்றதுக்கு உதவியா இருக்க மாட்டாங்க. அதனால நான் நம்பி இதை சுத்தம் பண்ணனும்னு நெனச்சு உள்ள இறங்கும்போது எனக்கு துணையா இருக்கிற சிலராவது நம்பிக்கையானவர்களா என்கூட இருக்கணும். அதுல நான் உன்ன தான் பெருசா நம்பி இருக்கேன். என் நம்பிக்கையை நீ கெடுக்க மாட்டேன்னு நினைக்கிறேன்”

நீரூபன் நம்பிக்கையுடன் வசீகரிடம் தன் மனதில் இருந்ததை கொட்டி விட்டான். வசீகரனுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தன் வருங்கால மைத்துனனுக்கு துணையாக இருப்பதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவன் செல்ல நினைக்கும் பாதையில், தான் அவனை முதலில் தள்ள நினைத்தோம் என்று இப்போது நினைக்கும் போது வருத்தமாக இருந்தது. அதன் விளைவுகளை கண்முன்னால் பார்த்தவனுக்கு மீண்டும் இதற்குள் இறங்க வேண்டுமா என்று சலிப்பாக இருந்தது.

“நான் அந்த வீடியோவை வைத்து மட்டும் இது வேண்டாம் என்று சொல்லல மாமா. இந்த தேர்தலுக்காக சோசியல் மீடியால, இந்த கட்சிகளோட உள்ளுக்குள்ள இருக்கிற அரசியல் இதெல்லாம் பார்த்து எனக்கு ச்சீனு இருக்கு மாமா. என்ன மனுஷங்க? ஒருத்தர ஒருத்தர் மரியாதை இல்லாம பேசுறாங்க. அவங்கள பேசிக்கிட்டா பரவால்ல. அவங்களைப் பெற்ற அம்மாவை கூட மரியாதை இல்லாம பேசுறாங்க. நாம பேசறது இன்னொருத்தரைப் பற்றின்னு ஒரு பிரக்ஞையே இல்லாம, வெளி உலகத்துல எல்லாரும் பார்க்க பேசுறோம் அப்படிங்கற ஒரு பொறுப்பில்லாம, அசிங்கமா ஒருத்தர அவமானப்படுத்துற வார்த்தைகளை ரொம்ப சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்துறாங்க. ஈசியா இன்னொருத்தரை விரல் நீட்டி குற்றம் சுமத்துறாங்க. இதெல்லாம் என் குணத்தோட ஒத்து வராத விஷயங்கள் மாமா. நான் இதெல்லாம் பார்த்தா ஒதுங்கி போற வீட்ல இருந்து வந்தவன். இது எல்லாத்தையும் கடந்து நான் உங்களுக்கு உதவி செய்யணும் அப்படின்னா இது எல்லாத்தையும் நான் முதல்ல ஜீரணச்சிக்கனும். எனக்கு அதுக்கு கொஞ்ச நாள் ஆகும் மாமா.” என்று வசீகரன் தவிப்புடன் கூறினான்.

“நீ சொல்றது புரியுது சொல்லப்போனா இத்தனை வருஷம் ஆகி என்னாலேயே அதை நூறு சதவிகிதம் ஜீரணிக்க முடியல தான். நீ சொல்ற எல்லா விஷயங்களும் எனக்கு உறுத்தலான விஷயங்கள் தான். இது எல்லாத்தையும் மாத்தணும்ன்னு தான் நான் நினைக்கிறேன். இதை மட்டும் இல்ல நம்ம நிறைய மாற்ற வேண்டி இருக்கு.” என்று சொன்னவன் குரலில் தீவிரம் இருந்தது.

“திடீர்னு ஏன் மாமா இந்த மாற்றம்? முதல்ல இந்த அரசியல் வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தீங்களே!” என்று தன் மனதில் இருந்த குழப்பமான கேள்வியை கேட்டுவிட்டான் வசீகரன்.

“வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் யார் என்ன சும்மா விட்டீங்க? எங்க அப்பா வீட்டாரா? பூமிகா விட்டாளா? இல்ல நீ தான் விட்டாயா? ஏன் அந்த போட்டோ சூட்டுக்கு சத்தமில்லாம நீ என்னை அனுப்பி விடல?? எனக்கு என்ன எதுவும் தெரியாதுன்னு நினைத்தாயா?” என்று சிரித்தான் நீரூபன்

“ஐயோ மாமா நான் அப்படி நினைக்கல. உங்களோட நல்ல பெயர் அவருக்கு உதவியா இருக்கும்னு தான் நினைச்சேன்.” என்று தயங்கி தயங்கி பதில் கூறினான்.



‘நான் சும்மாதான் சொன்னேன். தப்பா எல்லாம் நினைக்கல. ஆனா இன்னிக்கு நிலைமைக்கு நாம் எல்லாரும் தயங்கத் தயங்க தான் இவங்க எல்லாரும் இந்த அரசியலை இன்னும் மோசமா கொண்டு போறாங்களோன்னு தோணுது. இறங்கி அதை சரி பண்ணி தான் பார்ப்போமே! நம்மளால முடிஞ்ச வரைக்கும் செய்வோம். முடியலன்னா இருக்கவே இருக்கு நமக்கு நம்மளோட தொழில். அதை பார்த்துட்டு நம்ம வாழ்க்கையை கவனிக்க ஆரம்பிப்போம். ஒரு தடவ ட்ரை பண்றதுல தப்பு இல்லையே!” என்று அவன் தோளில் கை போட்டு சிரித்துவிட்டு அவரிடம் விடை பெற்று சென்றான் நீரூபன்.