அடங்காத அதிகாரா 36

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 36

பூமிகாவும் நேத்ராவும் சென்னையின் எல்லையை கடந்து சென்று கொண்டிருந்தனர்.

இருவருக்கும் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் ஆயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடந்தன.

நேத்ரா பூமிகாவிடம் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லிக் கேட்டாள்.

காரணங்களை வினவாமல் பூமிகாவும் சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினாள்.

இருவரும் வாகனத்தில் லேசாக சாய்ந்து நின்றபடி போய் வந்து கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கை பார்த்தனர்.

“எதிர்க்காதடிக்குதா, மூச்சு முட்ட மாதிரி இருந்துச்சு. அதான் ஒரு டூ மினிட்ஸ் நின்னுட்டு போலாமேன்னு உன்னை நிறுத்த சொன்னேன்.” என்று அவளாகவே காரணத்தை பூமிகாவிடம் உரைக்க அவளும் சிரித்துக் கொண்டே

“இதுக்கெல்லாம் காரணம் சொல்லணுமா அண்ணி நிறுத்துன்னு நீங்க சொன்னா நான் நிறுத்த போறேன்” என்று அன்புடன் கூறினாள்.

“இப்படி எல்லாம் இருக்காத. அப்புறம் எல்லாரும் உன்னை ஏமாத்திட்டு போயிடுவாங்க. அன்பு இருக்க வேண்டியதுதான். ஆனால் என்ன ஏதுன்னு எப்பவும் கேள்வி கேட்கணும் புரியுதா?” என்று செல்லமாக அவள் தலை முடியை கலைத்துவிட்டு நேத்ரா அறிவுரை கூறினாள்.

“யாராவது சொன்னா கேக்க மாட்டேன். என் அண்ணி சொன்னா கேக்காம இருப்பேனா?” என்று அவளும் சலுகையாக சாய்ந்து கொள்ள

இருவரும் பக்கத்தில் இருந்த சின்ன மண் ரோடு ஒன்றைப் பார்த்து அதன் எதிரில் இருந்த பச்சை நிற பெயர் பலகையில் எழுதி இருந்த கன்னட எழுத்துக்கள் புரியாமல் உதட்டை பிதுக்கி செல்போனில் எந்த இடம் என்று கூகுள் செய்ய எண்ணினார்.

சுத்தமாக நெட்வொர்க் இல்லாமல் இருக்க அப்பொழுதுதான் வானம் இருட்டிக் கொண்டிருப்பதை கவனித்த பூமிகா “அண்ணி மழை வரும் போல இருக்கு என்ன பண்ணலாம்?” என்றாள் அவசரமாக.

“மழை வந்தா என்ஜாய் பண்ணலாம்” என்று விளையாட்டாக கூற,

“வண்டில போலாமா இல்ல வெயிட் பண்ணி மழை நின்னுதும் போலாமா?” என்று அவள் விளையாடுவது கூட தெரியாமல் தீவிரமாக கேள்வி எழுப்பிய பூமிக்காவை குறுகுறுவென்று பார்த்து

“நீ வேணும்னு செய்றியா இல்ல, என்ன சிரிக்க வைக்கவும் சாதாரணமா மாத்தவும் இதெல்லாம் செய்றியா?” என்று அவள் தாடை தொட்டு கேள்வி எழுப்பினாள் நேத்ரா.

“எனக்கு தெரியும், கொஞ்ச நாளா நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்டா இருக்கீங்க. மாமா சொன்னாங்க. நானும் உங்க கிட்ட பேசுறேன்னு மாமா கிட்ட சொல்லி வச்சிருந்தேன். ஆனா நான் சொல்லி புரியற அளவுக்கு நீங்க சின்ன பிள்ளை இல்ல.

உங்களுக்கே கொஞ்ச நாளா நம்மள சுத்தி இருக்குற விஷயங்களோட வீரியம் குறைஞ்சு புரிஞ்சுடும். மாமாவுக்கு அந்த பொறுமை இல்ல. அதனால நான் பார்த்துப்பேன்ற நம்பிக்கையை மட்டும் மாமா கிட்ட கொடுத்துட்டு அமைதியா இருந்தேன்.

இன்னிக்கி நீங்க சந்தோஷமா தான் வந்தீங்க. அதுல இருந்து நீங்களே ஓரளவுக்கு வெளியில வந்துட்டது எனக்கு தெரியுது. இருந்தாலும் இன்னும் உங்க மனசுல ஏதோ ஒன்னு ஆழமா அழுத்துது அது என்னன்னு சொன்னாதானே அண்ணி ஏதாவது உதவி செய்ய முடியும்?” என்று தலை சாய்த்து பூமிகா கேட்டவுடன்,

“உதவி கேட்கிறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லயே பூமி! உனக்கு தெரியும் ஒரு உதவி கேட்டுட்டு அதுக்காக இன்னைக்கு வரைக்கும் நானும் நீயும் மனசளவுல எவ்ளோ கஷ்டப்படுகிறோம்? அப்படி இருக்கிறப்ப எந்த தைரியத்துல உதவி கேட்க சொல்ற?” என்ற அவள் கண்களில் லேசாக கண்ணீரின் சாயல்.

“அண்ணி அன்னைக்கு நடந்தது எப்பவுமே நடக்கணும்னு அவசியம் இல்ல. அதே நேரம் அத பத்தி மாமா கிட்ட சொல்லிட்டுறது நல்லதுன்னு எனக்கு தோணுது.

ஏன்னா எங்க அப்பா சொன்னதா ஆனந்த் சொன்னத மாமா கேட்டுட்டு அதை பத்தி விசாரிக்கிறதா சொன்னாரு. மாமா ஒரு விஷயத்தை விசாரிக்க ஆரம்பிச்சா தொட்டு தொட்டு கண்டிப்பா இந்த விஷயமும் மாமாக்கு தெரிய வந்துரும். அவரா தெரிஞ்சுக்கிட்டு நம்மள கேள்வி கேட்டா நம்மளால அவர நிமிர்ந்து கூட பார்க்க முடியாது. அதுக்கு நாமளே மாமா கிட்ட சொல்லிட்டா நல்லதுன்னு தோணுது.” என்று நேத்ராவின் கைகளில் மெல்லமாக அழுத்தம் கொடுத்து தன் மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினாள்.

“நீ சொல்றது உண்மைதான் அன்னைக்கே அண்ணா என்ன என்னன்னு கேட்டாங்க ராகேஷ் மாமா அடிச்சுட்டு அதை எதிர்க்கட்சியோட சதி மாதிரி ஒரு மாயமான நியூஸ பரப்புனது அண்ணா தான்னு தெரிஞ்சதும் நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். எங்க அண்ணனும் அஞ்சுக்கா மாதிரி இருந்துருவாங்களோன்னு நான் பயந்து கோபத்துல என்னென்னவோ பேசிட்டேன். அதுக்கே என்னால இன்னும் அண்ணனுக்கு என்ன விளக்கம் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று சிந்தனை வயப்பட்டவளாக நேத்ரா கூறிக் கொண்டிருக்கும் போதே சின்ன சின்னதாக மழைத்துளிகள் விழத் துவங்கின.

“அண்ணி அங்க தெரியுது பாருங்க அந்த மண் ரோட்டுக்குள்ள ஒரு பஸ் ஸ்டாப். அது பக்கத்துல வண்டி நிறுத்திட்டு நம்ம பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணுவோம். மழை நின்னதும் போகலாம்.” என்று பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு ஹைவேஸிலிருந்து பக்கத்தில் இருந்த கிராமசாலைக்கு மாறினார்.

அது உயர்தரமான பேருந்து நிறுத்த குடை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஒரு சாதாரண மினிபஸ் வருவதற்கு ஐந்திலிருந்து ஆறு பேர் காத்திருக்க தேவையான அளவு சிறியதாக அமைந்த சிமெண்ட் கட்டிடமாக இருந்தது. ஏற்கனவே அதில் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருக்க மழைக்கு ஒதுங்கி ஓரமாக இருவரும் நின்றனர்.

நேத்ரா விழும் மழைத்துளிகளை விரித்தபடி “இப்படித்தானே அன்னைக்கு மழை பெய்தது? நாம மட்டும் அன்னைக்கு அந்த ஹெல்ப் வேணும்னு கேட்காம இருந்திருக்கலாமோ? அப்படின்னு ஒவ்வொரு மழை நாளுக்கும் நான் நினைக்காமல் இருந்ததே இல்ல பூமி.” என்று உள்ளார்ந்து கூறினாள்.

“அண்ணி நாம ஜஸ்ட் ஒரு ஹெல்ப் தான் கேட்டோம். அது அப்படி நடக்கும்னு நமக்கும் தெரியாது ஏன் நடத்துனவங்களுக்கும் தெரியாது. இது நமக்கு நல்லா தெரிஞ்ச உண்மை. ஆனால் நாம.. இழந்துட்டோம் தான். அதையும் மாத்த முடியாது. நம்ம இழந்ததை விட நம்ம இழந்ததற்கு அவங்க கற்பித்த காரணம் தான் இன்னைக்கு வரைக்கும் என் நெஞ்சுக்குள்ள தீயா எரியுது. ஒவ்வொரு தடவையும் மாமாவை பார்க்கும் போது சொல்லிடனும்னு என் நுனி நாக்கு வரைக்கும் வந்து சொல்ல முடியாம நான் நிறுத்திடுறேன். சொல்ல தைரியம் இல்லைன்னும் வச்சுக்கலாம். ஏன்னா இன்னைக்கு சொல்ற நாம அன்னைக்கே சொல்லல நூறு கேள்வி வரும். அந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை அண்ணி. “என்று கூறிய பூமிகாவின் கண்களிலும் மழை தான்.

மெல்ல இருவரும் தங்களது கல்லூரி காலத்திற்கு பயணித்தனர். பூமிகா கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது நேத்திரம் நேத்ராவும் வேறொரு கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று கொண்டிருந்தாள். இருவரும் விளையாட்டின் காரணமாக ஒரே அணியில் இணைந்து பல்கலைக்கழகத்திற்காக விளையாடிய போது அறிமுகமாகி பின் உறவினர் என்ற அறிந்து நகமும் சதையுமாக உலா வந்தனர்.

அவர்களின் விளையாட்டு அணியில் 15 பேரில் இரட்டையர்கள் ஆன தானியாவும் லாவண்யாவும் இவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள் நால்வரும் ஆக விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும்போது சுற்றி இருப்பவர்களை கிண்டலும் கேலியுமாக மகிழ்ச்சியடையச் செய்து அந்த இடத்தையே உயிர்ப்புடன் வைத்திருப்பர்.

அது திருமூர்த்தி முதலமைச்சராக இருந்த காலம். முதலமைச்சர் மகள் என்ற பந்தா இல்லாமல் அதற்கான எந்த காவல் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சாதாரண கல்லூரி பெண் போல நேத்ரா வருவதைக் கண்டு அவளுடைய நெருங்கிய தோழிகள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.அதைவிட பலருக்கும் அவள் முதல்வர் மகள் என்பதே தெரியாத அளவுக்கு அவள் அதனை பார்த்துக் கொண்டாள்.

எந்த விழாக்களுக்கும் தந்தையுடன் செல்வதில்லை. தன்னுடைய குடும்ப படம்களை வெளியிடும்போது தன்னுடைய முகம் மறைக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக கூறுவதுடன் அனைத்திலும் நேத்ரா தன்னுடைய தனித்தன்மையும் உலகத்தின் கண்களின் முன்பு முதல்வர் மகள் என்ற பட்டத்தோடு தனிப்பட்டு நிற்பதை விரும்பவில்லை என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தபடியே இருந்தாள்.

அன்று முக்கிய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள பெண்கள் அனைவரையும் வரச் சொல்லி பல்கலைக்கழக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அழைத்திருந்தார்.

அது ஒரு மழை நாள் என்பதால் நேத்ராவும் பூமிகாவும் பயிற்சிக்கு செல்ல விரும்பவில்லை. வீட்டில் இருந்தபடி மழையை ரசிக்கவே இருவரும் எண்ணி இருந்தனர்.

அதுவும் இல்லாமல் மொத்த குழுவும் விளையாட்டில் கைதேர்ந்து இருந்த நேரத்தில் மழையில் விளையாடி உடல் நிலை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அந்த குழுவின் தலைவியாக நேத்ரா எண்ணினாள். ஆனால் அதை கோச்சிடம் கூற அவள் விரும்பவில்லை.

ஏற்கனவே ஒரு முறை இது தொடர்பாக அவருக்கும் நேத்ராவுக்கும் பிரச்சினை வந்திருக்க அவரிடம் கூறுவதை பூமிகாவிடம் ஒப்படைத்தாள். ஆனால் பூமிகாவும் அதே மனநிலையில் இருந்ததால், இருவரும் இணைந்து தானியா மற்றும் லாவண்யா இருவரிடமும் கோச்சை சந்தித்து கூறிவிட்டு வரும்படி உதவியாக கேட்டனர். அதுவும் ஏற்கனவே அவ்விருவரும் பல்கலைக்கழகத்தை அடைந்து விளையாட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்ததால் அவ்விண்ணப்பத்தை அவர்களிடம் வைத்தனர்.

அந்த மழை நாள் மாலை முடிவுக்கு வந்திருந்த போது நல்லவிதமாக முடியவில்லை என்பதை ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தானியா அவர்கள் அனைவருக்கும் உணர்த்தி இருந்தாள்.

முதலில் என்ன நடந்தது என்று புரியாமல் மருத்துவமனைக்கு ஓடிய நேத்ராவுக்கும் பூமிகாவுக்கும் உண்மை புரிந்த போது தலையில் இடி இறங்கியது போல இருந்தது.

நேத்ராவும் தானியாவும் உயரத்தில் ஒன்று போல இருந்ததும் விளையாட்டு போட்டிக்காக அணியும் ஜெர்ஸி ஒரே மாதிரி அனைவரும் அணிவதும் , இதெல்லாம் கூட ஒருவரின் உயிரைப் பறிக்கப் போதுமானதாக இருக்கும் என்று அன்று வரை அவர்கள் யாரும் நம்பியதில்லை. ஆனால் அன்று அதுதான் நடந்தேறியது.

கோச்சை சந்திக்க நேத்ராவும் பூமிகாவும் வருவதாக முதலில் குறிப்பிட்டிருக்க இவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட மாற்றத்தை வெளியிலிருந்த யாரும் அறிந்திருக்கவில்லை.

நேத்ராவும் பூமிகாவும் தான் வருவார்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்த நேத்ராவின் உயரத்தில் இருந்த தானியா தான் நேத்ரா என்று எண்ணி கொலை முயற்சித் தாக்குதல் நடந்தது

குற்றுயிரும் குலையுருமாக தானியா அந்த பல்கலைக்கழக அறையின் வாசலில் கிடந்தாள். லாவண்யா உதவிக்காக வெளியே ஓடி வந்திருக்க அவள் உயிர் தப்பி இருந்தாலும் தானியா மோசமாக அடிபட்ட நிலையில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவள் உயிர் பிரிந்தது.

எதற்காக நேத்ராவை கொல்ல வந்தார்கள் என்றோ அதற்கு பதிலாக தானியாவை கொன்றார்கள் என்றோ இன்று வரை நேத்ராவோ பூமிகாவோ ஏன் லாவண்யாவுமமே அணிந்திருக்கவில்லை. ஆனால் கொல்ல வந்தது நேத்ராவைத்தான் என்பதை அவர்களுக்கு கூறியவள் லாவண்யா.

“இதோ வரா பாரு முதலமைச்சர் பொண்ணு. போட்டு தள்ளு” என்று கதவை திறந்து உள்ளே நுழைந்த தானியாவை அங்கிருந்தவர்கள் அடித்ததாக லாவண்யா அழுதபோது,

இதைப்பற்றி நேத்ரா அங்கு வந்த தன்னுடைய அக்காவிடம் குறிப்பிட்டாள். அப்போது நீரூபன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் நேத்ரா அழைத்து அஞ்சனா தான் மருத்துவமனை வந்து இருந்தாள். தனக்கு பதிலாக யாரோ சிலர் தன் தோழியை கொன்றிருக்கிறார்கள் என்ற கோபத்தில் நேத்ரா கதறிய போது அஞ்சனா அவளை தட்டிக் கொடுத்து தான் பார்த்துக் கொள்வதாக அழைத்துச் சென்று விட்டாள்.

ஆனால் அடுத்த நாள் வந்த செய்தியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி அதன் காரணமாக விபத்தில் அடிபட்டு தானியா இறந்ததாக செய்தி வெளியானது.

இதைப்பற்றி கேட்க நேத்ரா மீண்டும் போது அஞ்சனா அவளை தவிர்த்து விட்டாள். அன்று முதல் நேத்ரா அஞ்சனாவின் அருகில் கூட செல்வதை விரும்புவதில்லை. பழைய எண்ணங்களின் பிடியிலிருந்து வெளியேறிய இரண்டு பெண்களும் சாலையில் கொட்டிக் கொண்டிருந்த மழை நீரை பார்த்து நல்ல மெல்ல நடப்புக்கு திரும்பினார்.

“கண்டிப்பா ஊருக்கு போனதும் மாமா கிட்ட சொல்லிடலாம் அண்ணி” என்று உறுதியுடன் பூமிகா கூட நேத்ராவும் ஆம் என்று தலையசைக்க அந்த நொடி அவர்கள் மனதில் அழுத்தி இருந்த பல பாரங்கள் விலகியது போல இருவரும் மென்மையாக உணர்ந்தனர்.

தங்களை அறியாமல் மழை நீரை ரசிக்கவும் தொடங்கினர். இருவரும் இறங்கி மழை நீரில் ஆட்டம் போட இத்தனை நேரம் அவர்களை பிடித்து இருந்த மிகப்பெரிய துன்பம் அந்த மழை நீரில் கரைந்து போனது போல இருந்தது .