அடங்காத அதிகாரா 06

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 6

அஞ்சனாவின் தலையீட்டால் மிகவும் கோபத்தில் இருந்தார் கோதண்டம்.

திருமூர்த்திக்கு அடுத்த நிலையில் கட்சியில் முக்கியமான ஆட்கள் நான்கு பேர். கோதண்டம், சேலம் சேகர் ராஜா, மலைச்சாமி, ஆலந்தூர் ஆறுமுகம்.

திருமூர்த்தி இவர்கள் நால்வரையும் நல்ல மரியாதையுடன் நடத்துவார். திருமூர்த்தி ஆட்சியில் இருந்த காலத்தில் பொதுப்பணித்துறை, தகவல்தொடர்பு, நிதி அமைச்சகம், வேளாண்துறை, கல்வித்துறை, மின்சாரம் என்று முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் இவர்களிடம் தான் இருக்கும். சுற்றுப்பயணம் செல்லும் போது அவசர முடிவுகளை இவர்களே கூடி எடுக்கும் அளவுக்கு இவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருந்தார் திருமூர்த்தி.

ஆம் நம்பிக்கை வைத்திருந்தார். இப்பொழுது இல்லை. அதற்கு முழு காரணம் அஞ்சனா தேவி. அவளது அரசியல் தலையீடு மகளிர் அணித் தலைவி என்ற கோட்டைத் தாண்டி அனைத்து கட்சி பணியிலும் தலையிடும் அளவுக்கு மாறியதும், பின் அவளது தந்தை மகள் எது கூறினாலும் அது தங்கள் நன்மைக்கே என்று நம்ப ஆரம்பித்ததும் தலைகீழாக மாறியது.

எல்லா முடிவுகளும் தலைவர் மகளிடம்  மட்டும் ஆலோசித்து எடுக்க ஆரம்பித்தார். இவர்கள் பொதுத் தேர்தலின் போது கூறிய பல திட்டங்களை அஞ்சனா வேண்டாம் என்று நிராகரிக்க, சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகள் எதிர்க்கட்சிக்கு போய் இவர்களே எதிர்கட்சியாக மாறும் நிலை உருவானது.

அதன் பின்னும் திருமூர்த்தி மாறவில்லை. ஆனால் இறுதி முடிவுக்கு முன் மற்றவர்களிடம் ஆலோசிக்க தவறவில்லை. அந்த வரையில் யாரும் கட்சியை விட்டு தாவிச் செல்ல முயலவில்லை.

நம்பிக்கையும் மரியாதையும் அளித்தாலே ஒரு கட்சியில் நீடித்து இருக்க மாட்டார்கள் அரசியல்வாதிகள். அப்படி இருக்க, திருமூர்த்தி மேல் இருந்த மரியாதை மற்றும் கட்சி அடுத்த தேர்தலில் கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும், அப்பொழுது அமைச்சர் பதவி வேண்டும் என்று தான் பொறுமையாக காத்திருந்தனர்.

ஆனால் ஒரு உள்ளாட்சி தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத அளவுக்கு கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதை பிரபல கல்லூரி எடுத்த கருத்துக் கணிப்பில் தெரிந்து கொண்டு, அதை சீர்செய்ய கோதண்டம் முயல, சரியான நேரத்தில் குறுக்கே வந்து அதனை தடுத்த அஞ்சனா மேல் அவருக்கு பொல்லாத கோபம்.

நீரூபன் தான் திருமூர்த்திக்குப் பின் அரசியலுக்கு வருவான் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏன் கோதண்டம் கூட அதை தான் நம்பி வந்தார்.

நீரூபன் கல்லூரி மேல்படிப்பு முடிந்ததும் அரசியலில் எத்தனை ஆர்வம் காட்டினான் என்பதை கோதண்டம் மட்டுமே அறிவார். ‘மாமா மாமா’ என்று அன்புடன் பழகிய அவன் திடீரென்று ஒருநாள் தனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்று மொத்தமாக ஒதுங்கிக் கொண்டது ஏன் என்று இன்றளவும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்றைய தேதியில் மக்கள் திருமூர்த்தி என்ற ஒருவர் மேல் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர். அஞ்சனாவின் பல முடிவுகளால் பலருக்கு அவள் மேல் அதிருப்தி இருப்பதால் நிலைமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பை திருமூர்த்திக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நால்வரும் எடுத்துக் கொண்டனர். நீரூபனிடம் பேசி அவனை சரிகட்டி அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று  முடிவு செய்தனர் .

அதற்காக அவனை சந்திக்க முன் அனுமதி கேட்டு அவனது பி.ஏவுக்கு அழைத்திருந்தார் கோதண்டம்.

அழைப்பை ஏற்ற அவனது உதவியாளர் நேரடியாக அவனுக்கே இணைப்பை வழங்க,

“சொல்லுங்க மாமா, நல்லா இருக்கீங்களா?” என்று அன்புடன் வினவினான் நீரூபன்.

“நல்லா இருக்கேன் தம்பி. உங்களை கொஞ்சம் பர்சனலா பார்த்து பேசணுமே!” என்று வினவ,

“நீங்க என்னைப் பார்க்க பர்மிஷன் கேட்கணுமா மாமா? வாங்க. நான் காலைல ஃபார்ம்ல தான் இருப்பேன். ரெண்டு மணிக்கு மேல தான் கல்வித்துறை அமைச்சரை பார்க்க போறேன் மாமா.” என்று கூறினான்.

“பத்து மணிக்கு மேல வர்றேன் தம்பி.” என்று அழைப்பைத் துண்டித்தார் கோதண்டம்.

அவர் மனதில் அன்பு மாறாமல் இன்றும் ‘மாமா’ என்று அழைக்கும் நீரூபன் எங்கே? கோதண்டம் ‘அண்ணே ‘ என்று அழைத்தாலும் அதில் அதிகாரம் காட்டும் அஞ்சனா எங்கே?  நேரில் எப்படியாவது பேசி நீரூபன் மனதை மாற்றிவிட வேண்டும் என்ற நிலையான முடிவில் இருந்தார் கோதண்டம்.

தன் மகன் சந்திரனை அரசியலில் இறக்க அவரும் நேரம் பார்த்து வருகிறவர் என்பதால் நீரூபன் உள்ளே நுழையும் போது அவனையும் சேர்த்தே தள்ளினால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக அரசியல் செய்து கொண்டு அவர்களை அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளாக உருவாக்க நினைத்தார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் உலகத்தில் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் மறைந்து விடும் அல்லவா?


பூமிகா தன் டான்ஸ் மாஸ்டர் வடிவமைத்த நாட்டிய அமைப்பை அந்த படத்தின் கதாநாயகிக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அந்த பெங்காலி பெண்ணுக்கு இடுப்பு வெண்ணெய் போல இருந்ததே தவிர நளினமான நடன அசைவுகள் கைவரவில்லை.

சொல்லிக் கொடுத்து சலித்து, வெறுத்துப் போய் அமர்ந்திருந்தாள் பூமிகா.

ஆனால் அந்த பெண் பழச்சாறு குடிப்பதும் இடைவெளி கேட்டு உறங்குவதுமாக இருந்தாள்.

பூமிகா அவளது செயல்களில் கடுப்பாகி நடன இயக்குநருக்கு அழைத்து,

“மாஸ்டர் அந்த ஹீரோயின் கொஞ்சம் கூட ஒத்து வர மாட்டேங்கறாங்க. எவ்வளவோ சொல்லிக் கொடுத்துட்டேன் மாஸ்டர். ஆனா ஒரு ஸ்டெப் கூட பிராக்டிஸ் பண்ணல.”
என்று கூற,

“என்ன பூமிகா எவ்வளவோ கஷ்டமான ஸ்டெப்ஸ் எல்லாத்தையும் கூட நீ ஹீரோயின்ஸ்க்கு சொல்லிக் கொடுத்து ஸ்கிரீன்ல நல்லா பெர்பார்ம் பண்ண வச்சிருக்க. நீயே இப்படி சொன்னா எப்படி மா?” என்று வினவினார்.

“என்னை என்ன மாஸ்டர் பண்ண சொல்றீங்க? படத்துல ஷோ காட்ட தானே இந்த மாதிரி வெண்ணெய் கட்டி போல உள்ள பொண்ணுங்களை ஹீரோயினா போடுறாங்க, அட்லீஸ்ட் டான்ஸ் ஆடத் தெரிஞ்ச பொண்ணுங்களை செலக்ட் பண்ணலாம்ல? எவ்வளவு பொண்ணுங்க நல்ல நடிப்பு திறமையோட, பல திறமைகளை வளர்த்து வச்சுக்கிட்டு நடிகையாக காத்திருக்காங்க தெரியுமா? அவங்களுக்கு எல்லாம் சான்ஸ் கொடுக்காம, இப்படி உடம்புல வளைவும், கலரும் மட்டும் பார்த்து பொம்மை வேஷம் கொடுக்க தான் எல்லாரும் தயாரா இருக்காங்க.” என்று மனம் வெறுத்துப் பேசினாள்.

“நீ சொல்றது புரியுது பூமிகா. ஆனா அந்த பொண்ணு தான் ஹீரோயின், அவளுக்கு நாம டான்ஸ் பிராக்டிஸ் கொடுத்து  நாளைக்கு ஷூட்டிங் கூட்டிட்டு போகணும் மா.”என்று அவரது நிலைமையைக் கூறினார்.

“என் பிரென்ட் ஆனந்த் தெரியும்ல மாஸ்டர் உங்களுக்கு. அவன் கையில ரெண்டு நல்ல ஸ்கிரிப்ட் வச்சுக்கிட்டு ஒரு பிரட்யூசர் கிடைக்காம சுத்திட்டு இருக்கான். ஆனா போன வாரம் ரிலீஸ் ஆன ஒரு படம் முழுக்க முழுக்க ஒரு கொரியன் படத்தோட காப்பி. இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் மாஸ்டர் வாழ்க்கை கிடைக்குது. இப்படி ஆனந்த் மாதிரி திறமையான ஆட்களுக்கு ஏன் மாஸ்டர் வாய்ப்பு கிடைக்கிறது இல்ல?”என்று ஆதங்கம் கொண்டாள்.

“நீ சொல்றதுல உள்ள நியாயம் எனக்கு புரியுது. ஆனா இதெல்லாம் பேசி எதுவும் ஆகாது. இப்போ உள்ள பிரச்சனைக்கு வா பூமிகா, அந்த பொண்ணுக்கு டான்ஸ் மூவ் வருதா இல்லையா?” என்றார் எரிச்சலுடன்.

“எங்க? இடுப்பை ஆட்டுன்னு சொன்னா தலையை ஆட்டுது. ரெண்டு நாளா ரொம்ப போராடிட்டேன் மாஸ்டர்.” என்று வெறுப்புடன் மொழிந்தாள்.

“ஓகே மா. நான் டான்ஸ் கிளாஸ்க்கு வர்றேன். முடிஞ்சா சொல்லிக் கொடுப்போம் இல்லன்னா, சிம்பிள் மூவ்ஸ் வச்சு இந்த பாட்டை முடிப்போம்.” என்று இறுதியாக கூறினார்.

பூமிகாவுக்கு சலிப்பை மீறி ஒரு வித வெறுமை சூழ்ந்தது.

ஆனந்த் அவளிடம் கூறிய கதை அத்தனை அம்சமாக இருந்தது. கதையில் கதாநாயகன், நாயகி, வில்லன் மூன்று பத்திரங்களும் சரி விகிதத்தில் படைக்கப்பட்டு நல்ல முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அதனை ஒரு தயாரிப்பாளரிடம் கூற இன்று செல்வதாக ஆனந்த் கூறிவிட்டு அவளை நடன வகுப்பில் இறக்கி விட்டுச் சென்றிருந்தான்.

இந்த பெண்ணின் செயலால் சலித்திருந்தவள் மனம் நண்பனிடம் அவனது வேலை எந்த அளவில் முடிந்தது என்று கேட்க அழைப்பு மேற்கொண்டாள்.

ஆனந்த் இரண்டு முறை அழைப்பை ஏற்கவில்லை. வேலையாக இருப்பான் என்று எண்ணியவளுக்கு அப்படி இருந்தால், அதனை குறுஞ்செய்தியாக அனுப்பும் பழக்கம் அவனிடம் இருக்கிறது என்பதை எண்ணி புரியாமல் மூன்றாம் முறை அழைத்தாள்.

இம்முறை அழைப்பை ஏற்றவன், “ஏய் என்ன டி உன் பிரச்சனை? ஒருத்தன் போன் எடுக்கலன்னா திரும்பித் திரும்பி கூப்பிட்டுட்டு இருப்பியா? அறிவில்லையா? இப்போ உனக்கு என்ன வேணும்? இல்ல இல்ல.. எங்க போகணும்? உன் மாமாவை பார்க்க ஃபார்ம் போகணுமா? இல்ல வேற எங்கயாவது பாலோ பண்ணி போகணுமா? உனக்கு டிரைவர் வேலை பார்க்க தான இந்த ஜென்மம் எடுத்திருக்கேன்? சொல்லு டி சொல்லு. கொண்டு போய் தள்ளுறேன்.” என்று கோபத்தில் கொதித்துப் போய் பேசினான் ஆனந்த்.

அவன் பேசியதைக் கேட்டும் பொறுமையாக, “என்ன சொன்னாரு அந்த பிரட்யூசர்? அவனை வாணலில போட்டு கிண்ட முடியாத கோபத்தை தானே என்கிட்ட காட்டிட்டு இருக்க?”என்று சரியாக நண்பனின் மனக்குமுறல் அறிந்து வினவினாள் பூமிகா.

சட்டென்று உடைப்பெடுத்த வானம் போல கண்ணீரை மழையென பொழிந்த ஆனந்த்,

“அந்த ஆளுக்கு இப்படி கதையெல்லாம் வேண்டாமாம். மசாலா படம் தான் வேணுமாம். கமர்ஷியல் ஹிட் கொடுக்குற டைரக்டர் தான் அவருக்கு வேணுமாம். என்னால முடியல டி. இதோட இந்த ஸ்கிரிப்ட்ட பதினாலு பேருக்கு சொல்லிட்டேன். எல்லாரும் கதை நல்லா இருக்கு. ஆனா கமர்ஷியல் படமா மாத்தி எடுத்துட்டு வான்னு சொல்றாங்க.” என்று நொந்தான்.

“ஏன் டா உன்னால கமர்ஷியலுக்கு தேவையான எலிமெண்ட்ஸ் சேர்க்க முடியாதா?” என்று கோபமாக வினவினாள் பூமிகா.

“பூமி புரியாம பேசாத மச்சி. என் ஹீரோ ஒரு சாதாரண பைக் மெக்கானிக். அவனுக்கு கமர்ஷியல் எலிமென்ட் வைக்க நான் ட்ரை பண்ணினா, பாயாசத்துல பிரியாணியை கொட்டினது போல இருக்கும்.” என்றான் எரிச்சல் மண்ட.

“சரி விடு டா. நாம முயற்சியை கைவிடாம ட்ரை பண்ணுவோம். என்னைக்காவது நம்ம நினைக்கிறது நடக்கும் டா” என்று ஆறுதலாக கூறினாள்.

“எனக்கு உன் அளவுக்கு பொறுமையும் நிதானமும் இல்ல பூமி. இன்னும் ஒரு வருஷத்துல ஏதோ ஒரு படமாவது செஞ்சு பேர் எடுத்தா தான் வீட்ல என்னை மதிப்பாங்க. இப்போவே தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கறத பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. பணத்தையும் நம்ம பொசிஷனையும் வச்சு தான் பூமி நமக்கு இங்க மதிப்பு. அது குடும்பமோ சமூகமோ நம்மளை அந்த கோட்டை வச்சு தான் அளவு எடுக்கும்.’ என்றான் வெறுப்பாய்.

“டேய் ஃபீல் பண்ணாத. உனக்கு நல்ல பிரட்யூசரும் எனக்கு என் நீரு மாமாவும் சீக்கிரமே கிடைப்பாங்க”என்று ஆறுதலாகக் கூறினாள் பூமிகா.

அவளுக்கு தெரியாது அவள் சொன்ன வார்த்தைகள் அப்படியே பலிக்கப் போகிறது என்று.