வஞ்சிக்கொடியின் வசீகரனே – 25 (Final)

அத்தியாயம் – 25

அட..டா..டா… வா வா அடி ஆத்தி, ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி!

உன் இஷ்டப்படி என்னைக் கட்டிப்புடி!
அட நீயாச்சி நானாச்சு…

தங்க நிறம் இடுப்புல, தாமரப்பூ சிரிப்புல
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு…

சம்மதிச்சேன் மறுக்கல, சத்தியமா வெறுக்கல
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு…

-என்று பாட்டு பாடி தன்னைச் சீண்டி கொண்டிருக்கும் கணவனைக் கண்டு கனல் பார்வை பார்த்து வைத்தாள் சம்பூர்ணா!

“உன் இஷ்டப்படி என்னைக் கட்டிப்புடி!” அவளின் முறைப்பை கண்டு கொள்ளாமல் அந்த வரியை மட்டும் அழுத்தி மீண்டும் பாடி வைத்தான் ராகவ்!

“அத்தை வந்திட போறாங்க… என்ன செய்றீங்க வசீ?” சமையலறையில் தன்னை வேலை செய்ய விடாமல் முதுகின் பின் நின்று உரசிக் கொண்டே பாடிய கணவனை அடக்க முயன்றாள் அவனின் வஞ்சிக்கொடி!

“அம்மா அவங்க பேத்தியை சின்சியரா கொஞ்சிட்டு இருக்காங்க. அதான் என் பொண்ணோட அம்மாவை என்னைக் கொஞ்ச கூப்பிடுறேன்…” என்றவன் அவளின் இடுப்பில் கை வைத்து தன் பக்கம் இழுத்தான்.

“அச்சோ! விடுங்க… கிச்சன்ல இருந்துகிட்டு என்ன சேட்டை இது?” துள்ளி விலக முயன்றாள்.

அவளை விலக விடாமல் தடுத்தவன், “நமக்குக் கல்யாணமான ஒன்றரை வருஷத்தில் இப்போ ஐஞ்சு மாசமா டெலிவரிக்காக அம்மா வீட்டுக்கு போயிட்டு நேத்து தான் நம்ம வீட்டுக்கு வந்துருக்க. நேத்தும் உன் பக்கத்துலயே வர முடியாம நம்ம அப்பா, அம்மா நம்மளை சுத்தி இருந்ததில் என்னை நீ உன் பக்கத்திலேயே விடலை. இன்னைக்குத் தான் அம்மாவை தவிர எல்லாரும் கிளம்பிருக்காங்க. இப்போ அம்மாவையும் ஏதோ சமாளிச்சுட்டு உன்னைப் பார்க்க வந்தா இப்படியா என்னை விரட்டுவ?” என்று சோக கீதம் வாசித்தவனைக் கண்டு அவளுக்குச் சிரிப்புப் பொங்கியது.

“என் வசீ செல்லம் ரொம்பத் தான் ஏங்கி போயிருக்காங்க போலயே? கொஞ்சல் எல்லாம் நைட் பாப்பா தூங்கின பிறகு தான். இப்போ போய்ச் சமத்தா நம்ம சஹானா பாப்பா கூட விளையாடுங்க…” என்று விரட்டினாள்.

“என் சஹானா பேபி சமத்தா அவங்க பாட்டி கூடச் செட்டில் ஆகிட்டா. இப்போ எனக்கு நீ செட்டில் பண்ண வேண்டியதை செட்டில் பண்ணு. அப்போ தான் நான் இந்த இடத்தை விட்டு போவேன்…” வேண்டுமென்றே அடம் பிடித்தான்.

அவனின் பிடிவாதத்தில் தளர்ந்தவள் கணவனின் கை வளைவுக்குள் இருந்த படியே முன் பக்கமாகத் திரும்பி அவனின் கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்தாள்.

“அடியேய்! போடி, இதெல்லாம் செல்லாது… செட்டில் பண்றதை எல்லாம் இங்க மட்டும் தான் சரியா செட்டில் பண்ணனும். அதை விட்டுக் கன்னத்தில் எல்லாம் ஏத்துக்க முடியாது…” என்றவன் தன் உதட்டை அவளின் இதழ்களுக்கு நெருக்கமாகக் காட்டினான்.

“யோவ்! போய்யா… அங்கவெல்லாம் இப்போ குடுக்க முடியாது…” தலையைச் சிலுப்பி இதழ்களுக்கு இடைவெளி விட்டாள்.

“இப்போ நீ கொடுக்கப் போறீயா இல்லையா…?” அவனின் குரல் மென்மையில் இருந்து கடுமைக்குத் தாவி கொண்டிருந்தது.

அவனின் அலும்பலில் அலுத்தவள், “நீங்க நல்லவரா? கெட்டவரா?” என‌ எப்பவும் போல் கேட்டு வைத்தாள்.

“இன்னுமா அதுக்கு நீ விடை கண்டு பிடிக்கலை?” இந்த முறை தன்னுடைய வழக்கமான பதிலை சொல்லாமல் திருப்பிக் கேள்வி கேட்டான்.

“அதெல்லாம் கண்டு பிடிச்சாச்சு… ” அலட்சியமாகச் சொன்னாள்.

“அப்போ நீயே பதிலை சொல்லு…!”

“நல்லவளுக்கு நல்லவன்!
கெட்டவளுக்குக் கெட்டவன்!”

-என்று மனைவி சொன்ன பதிலை கேட்டுப் புன்னகைத்தான்.

“இதுக்கு அர்த்தம் தான் என்னவோ…?”

“நான் நல்லவளா உங்ககிட்ட நடந்து கிட்டா நீங்களும் என்கிட்ட நல்லவனா இருப்பீங்க. கெட்டவளா நான் அடம் பிடிச்சு நடந்து கிட்டா நீங்களும் கெட்டவன் போல இதோ இப்போ போலக் கோபப்படுவீங்க…” என்று விளக்கினாள்.

“ஹேய்! சூப்பர்டி பொண்டாட்டி! என்னைச் சரியா புரிஞ்சு வச்சுருக்க! அப்படியே உன் புருஷனை கெட்டவனா மாத்தாம நான் கேட்டதைச் செட்டில் பண்ணு பார்ப்போம்…” என்றவன் தான் கேட்டது கிடைக்காமல் இங்கிருந்து நகர முடியாது என்பது போல் அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.

“விட மாட்டீங்களே…!” என்று அலுத்துக் கொண்டவள் பட்டும் படாமல் அவனின் உதட்டுடன் தன் உதட்டை உரசினாள்.

உரசலை உறுதியாக பற்றிக் கொண்டு தனக்குத் தேவையானதை அழுத்தமாகக் கொடுக்க ஆரம்பித்தான்.

அதே நேரத்தில் சஹானா தன்னுடைய பல்லவியைப் பாடி, பெற்றவர்களின் இறுக்கத்தை இலகுவாக்க வைத்தாள்.

கணவனிடம் இருந்து வேகமாகப் பிரிந்த பூர்ணா, மகளின் அழுகை என்னும் பல்லவியை நிறுத்த செல்ல,

“ச்சே… சஹானா பேபி என்னடா இது? இப்படியா சரியான நேரத்தில் அழுவ? இப்போ பார் நான் தனியா புலம்ப வேண்டியது இருக்கு. உனக்குக் கொஞ்சம் ட்ரைனிங் கொடுக்கணும்டா பேபி… அப்பப்போ நீ உன் அம்மா போல இடக்கு பண்ற. இந்த அப்பா போல இருக்க உனக்குக் கொஞ்சம் ட்ரைனிங் தேவைப்படுது. சீக்கிரம் கொடுத்திட வேண்டியது தான்…” என்று வாய் விட்டு புலம்பிய கணவனைச் செல்லமாக முறைத்து விட்டே அங்கிருந்து சென்றாள் சம்பூர்ணா.

அவள் முறைத்தாலும் அவளின் இதழ்கள் புன்னகையில் பூத்திருந்தது.

அதைக் கண்டு தானும் புன்னகைத்துக் கொண்டே அவளின் பின் சென்றான்.

பூர்ணா அறைக்குள் மகளைக் கவனித்துக் கொண்டிருக்க, ராகவ்வும், நளினாவும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

“உனக்குக் கல்யாணமாகி இப்போ எனக்குப் பேத்தியே வந்துட்டா மகனே! இன்னும் நீ எனக்கும், என் மருமகளுக்கும் ஒட்டியாணம் வாங்கித் தரலை…” என்று அலுப்பாகச் சொல்லிக் கொண்டார் நளினா.

“ஹா… ஹா…! நீங்க சொன்ன மாதிரி உங்களுக்குப் பேத்தி வந்த பிறகும் கூட உங்க வெயிட்டை நீங்க கொஞ்சம் கூடக் குறைக்கலையே மாம்…!” என்று கேலியாகக் கேட்டான்.

“நானா மாட்டேன்னு சொல்றேன். நானும் என்னென்னவோ பண்ணிட்டேன் குறைவேனானு அடம் பிடிக்குது… ம்ம்ம்…” என்று பெருமூச்சு தான் கிளம்பியது அவரிடமிருந்து.

“சரி விடுங்க…! ஆனா நான் சொன்ன மாதிரியே ஒட்டியாணம் வாங்கித் தர்றேன் மாம். நம்ம சஹானா குட்டி பிறந்தநாளுக்கு உங்களுக்கும், உங்க மருமகளுக்கும் சேர்த்தே வாங்கித் தர்றேன். இரண்டு பேரும் ஜோடியா போட்டு பிரத்டே பங்ஷனையே ஒரு கலக்கு கலக்குங்க…” என்றான் உறுதியுடன்.

“சமத்துடா மகனே நீ…!” என்று மகனை கொஞ்சியவர், “ஆனாலும் என் மருமக பரவாயில்ல. குழந்தை பிறந்த பிறகும் உடம்பை கட்டுப்கோப்பா வச்சுருக்கா…” நளினாவிடமிருந்து மருமகளைக் குறித்துப் பெருமிதமும் மிளிர்ந்தது.

“அவ எல்லாம் ஸ்பெஷல் டிப்ஸ் ஃபாலோ பண்றவ மாம். அடுத்த ஒரு மாசம் உங்க பேத்தியை கவனிச்சுக்க இங்கே தானே இருக்கப் போறீங்க… உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க. உங்க மருமகள்கிட்ட அந்த ஸ்பெஷல் டிப்ஸை சொல்லி எடையைக் குறைச்சு விடச் சொல்றேன்…” என்றான்.

“என்ன சொல்ற ராகவ்? ஸ்பெஷல் டிப்ஸா? அப்படி எதுவும் இல்லனு பூர்ணா சொல்லிருக்காளே?” மகன் எதுவும் கேலி செய்கின்றானோ என்று சந்தேகத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டார்.

“அதெல்லாம் ஸ்பெஷல் டிப்ஸ் வச்சுருக்கா மாம்…” என்றவன் கண்கள் சிரிப்பில் சுருங்கியது.

“அப்படியா? அப்போ எனக்கும் கேட்டு சொல்லுடா ராகவ். அப்போ நான் திரும்ப வேலைக்குப் போகும் போது கொஞ்சமாவது வெயிட்டை குறைச்சுட்டு தான் போகப் போறேன்…”

“அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க மாம். இருங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்களே பார்த்து முடிவு பண்ணுங்க…” என்றவன் கடிகாரத்தைப் பார்த்தான்.

சிறிது நேரம் செல்ல காத்திருந்தவன், பின் “மாம்… இப்போ வாங்க…” என்று அன்னையை ரகசியமாக அழைத்தான்.

“என்னடா பில்டப் எல்லாம் பலமா இருக்கு? அப்படி என்ன செய்வாள் என் மருமகள்?” என்று மெதுவான குரலில் கேட்டுக் கொண்டே மகனின் பின் சென்றார்.

அவனுக்குத் தான் மனைவி எந்த நேரம் என்ன செய்வாள் என்று நன்றாகத் தெரியுமே?

தங்களுக்குள் ஊடல் இருந்த வரை ஆடலை குறைத்தவள், அனைத்தும் சரியானதும் அவனையும் சேர்த்தல்லவா அவளுடன் ஆட வைப்பாள்.

கர்ப்பம் தாங்கவும் தன் ஆட்டத்தை நிறுத்தி வைத்திருந்தாள். பின்பு மகள் பிறந்து கொஞ்சம் உடல் தேறியதும், எந்த நேரத்தில் தன் ஆட்டத்தைத் தொடர்வாள் என்று கணவனிடம் சொல்லி வைத்திருந்தாளே!

மகளுக்குப் பசியாற்றி விட்டு தூங்க வைத்தவள் வழக்கம் போல அறைக்குள் மகள் எழுந்து விடாத வண்ணம் காதில் இயர்ஃபோனை மாட்டிக் கொண்டு கணவன், மாமியாரிடம் மாட்டி விடப் போவதை அறியாமல் ஆடிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

மாமியார் ஊருக்குச் செல்லும் வரை தான் தனியாகத் தான் ஆட வேண்டியது இருக்கும் என்ற எண்ணம் மனதில் சுழல விட்டுக் கொண்டே ஆட்டத்தை நளினமாகத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

மனைவியின் கவனத்தைக் கவராமல் மெள்ள கதவை சத்தம் வராமல் திறந்த ராகவ், அவளின் ஆடலை பார்த்து விட்டு தன் பின் புறம் இருந்த அன்னையை அழைத்துப் பார்க்க சொன்னான்.

இடுப்பையும், உடலையும் அசைத்து உற்சாகமாக ஆடி கொண்டிருந்த மருமகளைப் பார்த்து “ஆ…!” என்று வாயை பிளந்து பார்த்த நளினா, அவள் இடுப்பை ஒரு சுழற்று சுழற்றி ஆடியதை பார்த்து “அம்மாடியோவ்…!” என்று வாய் விட்டே கத்தியிருந்தார்.

இயர்ஃபோனை மீறி கேட்ட மாமியாரின் குரலில் பூர்ணா “அச்சோ…!” என்று அலறி ஆட்டத்தை நிறுத்தினாள்.

“என்ன மாம், உங்க மருமகளின் ஸ்பெஷல் டிப்ஸ் எப்படி? நீங்களும் ஃபாலோ பண்றீங்களா?” என்று கேலியுடன் கேட்டான்.

“என்னால கண்டிப்பா முடியாதுடா மகனே…” தன் இடுப்பை பார்த்து அலறினார் நளினா.

தன்னை மாமியாரிடம் மாட்டி விட்டு அவனின் வழக்கமான கண் சிமிட்டலை காட்டிய படி வசீகரமாகச் சிரித்துக் கொண்டிருந்த கணவனை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தாள் சம்பூர்ணா.

மனைவியின் முறைப்பையும் காதல் பார்வையாக மாற்ற வைக்கும் வித்தை கற்ற வசியக்காரனின் பார்வை இப்போது குறும்புடன் சேர்த்துக் காதலையும் பிரதிபலிக்க, அதை வாங்கித் தானும் பிரதிபலித்தாள் அவனின் வஞ்சிக்கொடி!

மனைவியை மயக்கிய மகிழ்ச்சியில் மீண்டும் நிறுத்தி நிதானமாகக் கண்சிமிட்டினான் வஞ்சிக்கொடியின் வசீகரன்!

சுபம்