முதல் துளி
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
முதல் துளி
பழக்கமில்லா பஞ்சு வைத்த செருப்பில் கட்டை விரலை சிரமத்துடன் உள்நுழைத்து வெடிப்பு நிறைந்த பாதங்களைப் புறா போல அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து நின்ற ஆச்சி, “ஏன்டி… இதென்ன அந்தரத்துலயா பறந்து வருது?” கையை நெற்றி மேல் குவித்து இரு கண்களையும் முட்டையாய் விரித்தாள்.
வாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சி கேட்ட அழகில் பேரனும் பேத்தியும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டாகச் சிரித்தார்கள். “ஆச்சி… இது பறக்குற ரயில்…”
“ஹாம்…. ரயில் கூடவாய்யா பறக்கும்…? காலம் போற வேகத்துக்கு மனுஷன் மக்கய கூடப் பறக்க வச்சிடுவானுக போலருக்கே… அட சேவுக பெருமானே…” வண்டி வந்து நின்றதும் மகனும் மருமகளும் பெட்டிகளைத் தூக்கிக் கொள்ள, பிள்ளைகள் கை பிடித்து ஆச்சி ஏறினாள்.
எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் உட்கார்ந்திருக்க, மூக்கு மழுங்கிய சீனர்கள் சிலர் வாரை பிடித்து நின்றார்கள். உள்ளே நுழைந்த நொடி இடுப்பில் கை வைத்து முதுகை வளைத்து நிற்க முடியாதது போலத் தள்ளாடி நின்றாள் ஆச்சி. வண்டி கொள்ளா மனிதஜனத்துடன் ஆடு கோழிகளை அடைத்து தொங்கிக் கொண்டே வரும் ஊர் பேருந்தில் ஏறியவுடன் இந்தத் தந்திரம் தான் செய்வாள்.
ஏதாவது இளந்தாரி அகப்பட்டால் அவனையே வைத்த கண் விலக்காமல் பாவமுழி முழிப்பதில் எப்பேர்ப்பட்ட கொடாக்கொண்டனாக இருந்தாலும் எழுந்து தான் ஆக வேண்டும். “யார் பக்கத்துல போய் நிக்கலாம்?” என்று ஆச்சி நினைத்துத் தன்னைச் சுற்றி பார்ப்பதற்குள் ஏதோ ‘கிய்யா முய்யா’ என்றபடி குட்டை பாவாடை போட்ட யுவதி ஒருத்தி எழுந்து இடம் கொடுத்தாள்.
வசதியாய் உட்கார்ந்து கொண்ட ஆச்சி தன் மேல் சாய்ந்தவாக்கில் நின்ற பேத்தியிடம் “ஏட்டி… இந்தப் பிள்ளை என்ன உடுப்புடி போட்டிருக்கு… மனைல இருக்கிற ஆத்தாக்காரி என்ன செய்யுறா இதை இப்படி அலையவிட்டுப்புட்டு…” நாக்கைக் கடித்துக் காண்பித்த பேத்தி, “ஆச்சி…” தன் சின்னக்கரம் கொண்டு ஆச்சியின் வாயை அடைத்தாள்.
“பேசக்கூடாதா? சரி, பேசலடியம்மா… ஆனாலும் இந்த ஊருக்கார பயலுக நல்ல பாசமா தான் இருக்கானுக இல்ல. பார்த்தவுடனே என்னத்தையோ முனகி தலையைத் தலையை ஆட்டுறானுக… கேக்காமாயே எழுந்து இடம் கொடுக்குறானுக…” தலையைத் திருப்பி மகனும் மருமகளும் எங்கே என்று பார்த்தாள் ஆச்சி. நான்கு இருக்கைகள் தள்ளி நின்றிருந்தார்கள்.
ஊர் பேருந்தில் ஏறியவுடன் உட்கார்ந்திருப்பவர் மடியில் கையில் இருப்பதைத் தொப்பெனப் போட்டு திமிராக நிற்கும் மருமகள் கூடத் தான் கொண்டு வந்திருந்த கனத்த தோள் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கையை ஆட்டி ஆட்டி மகனுடன் எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.
“ஊருக்குள்ள சண்டையடிச்சு சுத்திட்டு இருந்தவ இங்க வந்தப்புறம் எத்தனை பதவிசா மாறிட்டா? செல்வாக்கு ஏற ஏற கருத்த குட்டியா திரிஞ்சவ இப்ப செவத்த குட்டியா ஆயிட்டாளே… சேவுக பெருமான் புண்ணியத்துல நல்லா இருக்கட்டும், நல்லா இருக்கட்டும்….“ மனதுக்குள் சந்தோசமாய் வாழ்த்திக் கொண்டாள் ஆச்சி.
இப்போது மருமகள் என்றாலும் சின்னதில் இருந்து தான் நெஞ்சில் போட்டு வளர்த்த ஒன்று விட்ட தம்பி மகள் தான். உறவின் நெருக்கத்தில் அழகர் கோவில் அடிவாரத்தில் அருகருகே வசித்து ஒத்தாசையாய் இருந்த குடும்பங்கள் மகன் தலையெடுத்து துடியாய் இருப்பது கண்டு பெண் கொடுத்து இன்னும் நெருங்கிய உறவானது.
வானம் பார்த்த பூமி காய்ந்து வாழ வழியில்லாமல் ராமநாதபுரம் விட்டு ஆச்சியும் அவள் கணவரும் ஒற்றை மகனுடன் மதுரை வந்தபோது இந்தத் தம்பி குடும்பம் தான் வீடு பிடித்துத் தங்களுக்கு அருகேயே குடி வைத்து பார்த்துக் கொண்டது.
தம்பி மனைவியுடன் சேர்ந்து ஆச்சியும் கயிற்றுக் கட்டிலில் கோவில் சாமான்கள் பரப்பி விற்கத் துவங்க, ஆச்சியின் கணவர் வேலை வந்தால் செல்வார், இல்லை இவர்களுடன் கடையில் அமர்ந்து அர்ச்சனை தட்டு அடுக்குவார். சொல்லப்போனால் வருடத்தின் முக்கால்வாசி மாதங்கள் அவருக்கு வேலை என்று ஒன்றும் கூடி வராது.
சித்திரை மாதங்களில் வெக்கை ஆரம்பிக்கும் பருவத்தில் மட்டும் ஆட்கள் தேடி வருவார்கள். எங்கெங்கிருந்தோ வருபவர்கள், “நீங்க வந்து ஒரு நல்ல வழி காண்பிக்கணும்…” தட்டில் பூ, தேங்காய், வெற்றிலைப் பாக்கு வைத்து மரியாதையாக அழைப்பார்கள்.
நல்ல கைராசிக்காரர் என்று சுற்று வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயர். இரண்டு தென்னங்குச்சிகளைக் கையில் பிடித்துக் கொண்டு குலதெய்வத்தை மனதில் வணங்கியபடி எங்குக் கிணறு தோண்ட வேண்டுமோ அந்த நிலத்தில் கால் வைக்கும்போதே மனதுக்குள் ஊற்று இருக்கும் இடம் பிடிபட்டு விடும். குச்சிகள் வேகமாய்ச் சுழல, ஒரு சுழியையே சுற்றி சுற்றி வந்து உறுதிபடுத்திக்கொள்பவர், “இங்க தோண்டுமய்யா….” ஒரு வட்டத்தை வரைந்து காண்பிக்க, அவர் குறித்த குறி ஆயுசு முழுமைக்கும் தப்பியதில்லை.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
சில நேரம் நான்காவது கடப்பாரை குத்திலேயே ஊற்று வெளிப்பட்டுத் தண்ணீர் குபுகுபுவென்று வந்த கதையெல்லாம் உண்டு. கண்கள் பனிக்க உணர்ச்சிவசப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் காலில் விழுந்து கும்பிட்டு வேட்டி துண்டு மரியாதை செய்து அனுப்புவார்கள்.
“நல்லது.. நல்லது…” தலையாட்டிக் கொள்பவர் அவர்கள் அன்பின் மிகுதியில் கொடுக்க முற்படும் எதையும் தொட கூட மாட்டார். தனக்குண்டான பதினோரு ரூபாய் மட்டும் வெற்றிலை பாக்குடன் மடியேறும்.
கிளம்பும்போது, “காபித்தண்ணி குடிச்சுட்டு போங்க.. தண்ணியாவது குடிங்க…” என்று எத்தனை வற்புறுத்தினாலும் “இருக்கட்டும், இருக்கட்டும், நீங்க வேலையை ஆரம்பிங்க….“ என்று தொண்டையைக் கூட நனைக்காமல் கிளம்பும் வழக்கம். வசதியோ, குடுக்க மனமோ இல்லை என்றால் வாய் விட்டு கேட்டதும் இல்லை. தன் கைக்காசை செலவழித்துப் போய் ஊற்றுக்கண்ணைக் காட்டி கொடுத்துவிட்டு வருவார்.
தொழிலுக்குப் போய் விட்டு வீடு திரும்புவர் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேச மாட்டார். கைகள் மட்டும் கடை வேலையைப் பார்க்க, ஆச்சி கணவனின் உணர்வற்ற முகத்தை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்வாள். ஒவ்வொரு முறையும் ஏதோ விரதம் போல நீளும் அந்த மௌனச் சடங்கு முடிந்து மீண்டும் இயல்புநிலை திரும்ப ஒன்றிரண்டு நாட்களாகும்.
அந்த மாதிரியான நேரங்களில் ஆச்சியும் கனத்த அமைதியை சுமந்து திரிவாள். பேச்சற்ற மௌனத்தில் வேலை மட்டும் சுணங்காமல் நடக்க, எப்படியோ பல்லைக் குத்தி ரத்தம் குடித்து இருந்த ஒற்றை மகனை வளர்த்து ஆளாக்கியாயிற்று.
பிழைக்கத் தெரியாத மனிதராக இருந்தாலும், நல்லவர் என்ற பேருடன் கணவர் பத்து வருடங்களுக்கு முன்னால் போய்ச் சேர்ந்தார். அவர் இருக்கும்போதே மகன் தலையெடுத்து மருமகளும் வந்திருக்க, கணவரின் மறைவில் அழுது கரைந்த ஆச்சி மெல்ல மெல்ல அந்த இழப்பை மென்று தனக்குள் ஜீரணித்துக் கொண்டாள்.
நடுவில் சாலை ஒப்பந்த பணி என்று மகன் வேலை செய்த நிறுவனத்திலேயே அவனை வெளிநாடு அனுப்புவதாக வந்து நிற்க, “மகராசனா போயிட்டு வா…” எந்தச் சுணக்கமும் இல்லாமல் சம்மதித்தவள், மகன் வீடு, வேலை என்று சீரமைத்துக் கொண்டதும் மருமகளையும் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தாள்.
“என் பையன் சிங்கப்போருல இருக்கான்..” கோவிலுக்கு வருபவர் போகிறவரிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் ஆச்சி மகன் தன்னுடன் வந்து கொஞ்ச நாட்கள் தங்கும்படி அழைக்கும்போதெல்லாம் இதோ, அதோ என்று ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.
தம்பியும், தம்பி மனைவியும் கூட இரண்டு பிரசவ நேரத்திலும் போய்த் தங்கி விட்டு வந்தார்கள். “நான் அங்கனே வந்து என்ன செய்யப்போறன் ராசா… நீ பிள்ளைங்கள இங்க கூட்டிட்டு வந்து காண்பி…. கருப்பனுக்குப் படையல் போட்டுட்டு சேவுக பெருமானை கும்பிட்டுட்டு போவீங்களாம்…” என்று மறுத்துக் கொண்டே இருந்த ஆச்சி இந்த முறை எல்லோருமாகச் சேர்ந்து அழுத்தியதில் மறுக்க முடியாமல் பெட்டியை கட்டி இருந்தாள்.
“பரவால்ல…. சும்மா சொல்லக்கூடாது… நல்லாதான் வச்சிருக்கானுக…” வழி நெடுக தரச்சான்றிதழ் கொடுத்துக் கொண்டே வந்த ஆச்சி வீடு வந்தவுடன் மருமகள் கொடுத்த உணவை உண்டு விட்டுத் தனக்கெனக் காட்டிய படுக்கைக்குள் சுருண்டு விட்டாள்.
பழக்கமில்லாத விமானப் பயணம், மகன் குடும்பத்துடன் வருகிறான் என்று இந்த ஒரு மாதமாக ஓயாத வேலை, அலைச்சல் என எல்லாமுமாகச் சேர்ந்து அவள் எழுந்து நடமாட சில நாட்களாகின. நான்கு அறைகள் கொண்ட வீடும், வெளியே விரிந்து கிடந்த தோட்டமும், அப்படியே சோறு போட்டுச் சாப்பிடலாம் போலச் சுத்தமாய் இருந்த சாலையும் அவளைப் பிரமிப்பு ஊட்டியது.
அரசாங்கம் இலவசமாய்க் கொடுத்துள்ள டிவி பெட்டியில் பார்க்கும் சினிமா வாழ்க்கை போல மகன் ஜோராக வாழ்வதில் கள் குடித்த மந்தி போல அவள் கிறங்கித் தான் போனாள்.
அன்று மதியம் உண்ட களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள், விலுக்கென்று விழித்தாள். காதில் தபதபவென்று விழுந்த சத்தத்தில் தடுமாறி எழுந்தவள், சத்தம் வந்த அறையை நோக்கிப் பாய்ந்து கதவை படபடவெனத் தட்டினாள்.
“டேய்… யாருடா அது? உள்ள யாரு…?”
“ஆச்சி… அண்ணன் தான் உள்ள இருக்கான்.. குளிக்கிறான்”
“கடன்காரன், எதுக்கு இப்படித் தண்ணியைக் கொட்டுறான்? வெளில வாடா டேய்…” ஆவேசம் வந்தது போல நின்ற ஆச்சி தான் தட்டுவதை நிறுத்துவதில்லை. துவாலைக் குழாயில் இருந்து அருவியாய் தண்ணீர் கொட்டும் வேகத்தை அவளால் தாங்க முடியவில்லை. செவிகளை எதுவோ அடைப்பது போலிருக்க, அவள் உடல் நடுங்கியது.
இவள் கத்தும் சத்தம் கேட்டு “என்ன… என்ன ஆச்சு? ” மகனும் மருமகளும் ஓடி வந்தார்கள். “என்ன நொன்னாச்சு.. பிள்ளைய வளர்த்து வச்சிருக்கிற லட்சணத்தைப் பாரு… தபதபன்னு இப்படிக் கொட்டுறான்… எல்லாம் ஆத்தாக்காரிய சொல்லணும்”
“சரி வா.. வா..” மகன் அவளை இழுத்து அமர வைக்க முயல, மருமகள் ஆச்சியை முறைத்தாள்.
உள்ளே இருந்து தலையைத் துவட்டிக் கொண்டே வந்த பேரன் ஒன்றும் புரியாமல் விழிக்க, , “ஏய்…. கோட்டிகார பயலே. உங்கப்பனா ஆறு வெட்டி வச்சிருக்கான். குழாயை இப்படித் தொறந்து விடுற? விரலை அப்படியே ஒடிச்சுப்புடுவேன் பார்த்துக்க…” வெறி வந்தது போல அவள் கத்தியதில் பேரன் பின்னடைந்தான். அதிகமாய்த் திட்டு வாங்கியிராத பிள்ளையின் கண்கள் கலங்கி கண்ணீர் தேங்கியது.
“டேய்… நீ போ… ஏய்… நீ கூட்டிட்டு போ..” மகன் அம்மாவின் தோளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அன்றிலிருந்து பிள்ளைகள் அதுவரை பார்த்த ஆச்சியாக இல்லை அவள்.
யார் குளியலறைக்குள் சென்றாலும். ‘ஏன் இத்தனை நேரம்? ஏன் பக்கெட்டுல குடிச்சு குளிக்க மாட்டீகளோ? பெரிய சட்டான் வீட்டுப் பிள்ளை ?’ என்று நொடிக்க ஆரம்பித்து இருந்தாள். மருமகளிடமும் கூட, “ஏன் இதைக் கொட்டுற? ஏன் இதைச் சாய்க்கிற?” என்று பின்னாலேயே நின்று கொண்டு ஒரே அக்கப்போர்.
ஊருக்குச் செல்லும் ஓரிரு வாரங்களில் ‘இந்த ஒரு கோப்பை தண்ணில தான் பல்லை விளக்கி முகத்தைக் கழுவிட்டு வரணும்’ என்று சட்டம் சொல்லி கட்டுப்படுத்துகிற ஆச்சியாக இருந்தாலும் குறுகிய காலம் என்பதால் அவள் இத்தனை கடுமை காட்டியதில்லை.
பின்னாலே நின்றபடி துளைக்கும் ஆச்சியின் இந்தக் கோபமும், கத்தலும் பிள்ளைகளுக்கு முதலில் வியப்பாகவும், சில நாட்களிலேயே வெறுப்பாகவும் மாறியது.
“ஆச்சி எப்பம்மா ஊருக்குப் போவும்?” பேரன் மருமகளிடம் கேட்பதும், அவள் ஏதோ சொல்வதும் காதில் விழ உள் அறையில் அமர்ந்திருந்த ஆச்சி கலங்கிய கண்களைத் துடைத்துக் கண்டாள். வந்த புதிதில் இருந்தது போல இல்லாமல் பிள்ளைகள் ஒதுங்கி செல்வதை அவள் உணராமல் இல்லை.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
சாப்பாடு துணிக்குச் சிரமப்பட்டுக் கரை சேர்ந்தவளுக்கு அடுத்தத் தலைமுறையின் அபரித வளர்ச்சி தாளாத பெருமிதத்தைக் கொடுத்தது தான். எனினும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்….
எதையும் காணாதது போல, கேட்காதது போல அவளால் இருக்க முடியவில்லை. என்ன முயன்றாலும் காலை எழுந்ததும் முழுக் குழாயை திறந்து பல் விலக்கும் பிள்ளைகளைப் பார்த்தவுடன் வெலம் வந்தது போல உடல் நடுங்குவதில் தன்னையும் மீறி கத்தித் தீர்த்து விடுகிறாள்.
“வாடா ராசா… எங்கிட்ட வந்து படுத்துக்க… நான் கதை சொல்றேன்..” தன்னைக் கடந்து தன் படுக்கையில் சென்று படுக்கும் பேரனை அழைத்தாள். “நான் இங்கேயே படுத்துக்கிறேன்…” அவன் மறுத்து சுவர் பார்த்து திரும்பிக் கொள்ள “கதை கேட்க நான் வரேன் ஆச்சி…” பேத்தி அருகில் வந்து படுத்துக் கொண்டாள். “மதுரை மீனாட்சிடி நீ…” பிரியமாகப் பேத்திக்கு முத்தமிட்டவள், “ராசா, வாய்யா… ஆச்சி ஆசையா கூப்பிடுறேன்…” பேரன் வேண்டாவெறுப்பாக வந்தான். ஆச்சி இருவர் மேலும் கை போட்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
“ஆச்சிக்கு வயசாகிடுச்சு இல்ல.. அதுதான் எங்க என்ன பேசணும்னு தெரியாம வஞ்சுப்புடுறேன்… மனசுல வச்சுக்காதீங்க மக்களே…” பேத்தி காலைத் தூக்கி மேலே போட்டு ஆச்சியின் கண்களைத் துடைத்து விட்டாள்.
“கதை சொல்லு ஆச்சி..” “என்ன கதை ராசா சொல்லட்டும்..” “ஏதாவது…” பேரன் அசுவாரசியமாகச் சொன்னான். “உனக்குப் பிடிச்சதா ஏதாச்சும் சொல்லு ஆச்சி…” முகம் சுண்டிய ஆச்சியின் கன்னங்களை வருடி விட்டாள் பேத்தி.
“எங்க ஊர்ல ஓடுற ஒரு ரயிலு கதை சொல்லட்டுமா?”
“ம்ம்.. சொல்லு…”
”ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்தாளாம், அவங்க ஊர்ல தண்ணிக்குக் கஷ்டமான கஷ்டமாம். ஊர் விட்டு ஊரு நடையா நடந்து ஊத்துத் தண்ணி பிடிக்க ஜனங்க ரொம்பக் கஷ்டப்பட்டாங்களாம்.”
“ஆச்சி.. நீ ரயில் கதை தானே சொல்றேன்ன…?”
“இருடி கண்ணு. ரயிலு வந்துட்டே இருக்கு…” பேத்தியின் கன்னம் வழித்து முத்தினாள்.
“புழங்க குடிக்கத் தண்ணி இல்லாம பாடாப்பட்டவங்க வேறெங்க தண்ணி கிடைக்கும்னு யோசிச்சு யோசிச்சு ஒரு வழி கண்டுபிடிச்சாங்க. அந்த ஊருக்கு வர்ற ரயில் வண்டில தண்ணி வரும்ல, அந்தத் தண்ணியைப் பிடிச்சிட்டு வந்தா குடிக்கிறதுக்காவது ஆகும்னு யோசனை பண்ணினாங்க. அதனால எல்லாப் பொண்ணுங்களும் அடிச்சு பிடிச்சு ரயிலடிக்கு போய் ஒரு குடம் தண்ணி பிடிச்சுட்டு வருவாங்களாம்.”
“அப்படி ஒரு நாள் ரயிலுக்குள்ள ஏறின அந்தப் பொண்ணு மெலிசா வந்த தண்ணியைக் குடத்துல பிடிச்சு நெப்பறதுக்குள்ள ரயில் கிளம்பிடுச்சாம். கால் குடம் கூட நிரம்பாம வீட்டுக்குப் போனா குடிக்ககூட நாதியிருக்காதேன்னு அந்தப் பொண்ணு மெல்ல நகர்ற ரயிலை விட்டு இறங்காம தண்ணியைப் பிடிச்சிட்டே இருக்க, நடைபாதையை விட்டு ரயிலு ஓட ஆரம்பிச்சது. இதுக்கும் மேல இருந்தா ரயிலோட போக வேண்டியது தான்னு அந்தப் பொண்ணு இறங்குறதுக்குள்ள இன்னொரு பொம்பளை வேகமாக ஓடி வந்து ‘தற்கொலை பண்ணிக்கிறியா’ன்னு பிடிச்சு நிறுத்திட்டாளாம்.”
“அச்சோ…. அப்புறம்?”
“ரயிலோட போன பொண்ணைக் காணலைன்னு இங்க ஊரே அல்லகோலப்பட்டுப் போச்சாம். அடுத்த நிறுத்தத்துக்கு ஆள் அனுப்பி அங்கேயும் புள்ள இறங்கலனு ஆத்தாக்காரி வாயிலும் வயித்துலயும் அடிச்சிக்கிட்டு அழ, தண்டவாளத்துல தூரமா ஒரு உருவம் நடந்து வந்துச்சாம். பார்த்தா அந்தப் பொண்ணு பல நிறுத்தங்களைத் தாண்டி நடந்தே வர்றாளாம்.”
“……….”
“வந்தவ சும்மா வரல. அத்தன தூரம் தண்டவாளத்துல நடந்தே வந்தவ இடுப்புல ஒரு குடம் தண்ணியைச் சிந்தாம சிதறாம சுமந்து வந்திருக்கா. அதைப் பார்த்த அவ அம்மா, ‘அடிப்பாவி மகளே, இதையுமா சுமந்துட்டு இத்தனை தூரம் வந்த’ன்னு அழுதாளாம்… அதுக்கு மகக்காரி சொன்னாளாம், ‘ம்க்கும்… இது இல்லேனா நாளைக்கு வரைக்கும் குடிக்க எங்கப் போறதுன்னு..”
கதை முடிந்ததற்கு அத்தாட்சியாக ஒரு முறை செருமிய ஆச்சி, “இப்படி ஒவ்வொரு ஜனம் குடிக்கக் கூடத் தண்ணியில்லாம விசனப்ப்படும்போது நாம கிடைக்குதுன்னு அதை வீணாக்கலாமா ராசா…?” இருவரையும் பார்த்து கேட்டாள்.
அவள் கேள்விக்குப் பதில் சொல்லாத பேரன் “உனக்குத்தான் படிக்கவே தெரியாதே. இதை மட்டும் எப்படிப் படிச்ச?” ஆச்சியை இடக்காகப் பார்த்தான். “கூறு கெட்ட கிழவி எனக்கென்னடா தெரியும்? பூ கொண்டு வந்து கொடுக்கிற வர்ற ஒரு பெரியவரு சொன்ன கதை இது. கந்தர்வன்னு ஒரு எழுத்தாளரு எழுதின கதையாம். நல்லா இருக்கா?”
பேரன் ஒன்றும் சொல்லாமல் அலட்சிய பாவத்தில் திரும்பிப் படுத்துக் கொள்ள, “நல்லா இருந்துச்சு ஆச்சி… பாவம்ல அந்தக்கா. ஒரு குடம் தண்ணிக்கு எத்தனை கஷ்டப்பட்டுருக்கு?”
“அதுக்குத் தான்டி மகளே ஆச்சி அடிச்சுக்கிறேன். கங்கை நிறையத் தண்ணி ஓடினாலும் எனக்குண்டான தண்ணி இது மட்டும் தான் ஒரு கோப்பையைக் காட்டி காந்தி சொன்னாராம். எல்லாத்தையும் நாமளே உபயோகப்படுத்தி வீணாக்கிட்டு போனா எப்படி, நமக்குப் பின்னாடி வர்ற பிள்ளைகுட்டி குடிக்கத் தண்ணி இல்லாம வறண்ட நிலத்தை வச்சு என்ன செய்யும்?”
“பொறுப்பில்லாம இருக்கானுகளே இந்த மனுஷப் பயகன்னு பூமாதேவி கோவிச்சுக்க மாட்டா… இதெல்லாம் சொன்னா… ம்ம்… வளர்ந்த பெரியவங்களுக்கே புரியல.. இதுல சின்னப் புள்ளைங்க உங்களுக்கெங்க?” நடுநடுவே ‘ம்ம்ம்’ கொட்டிக் கொண்டிருந்த பேத்தி கண் அசந்திருந்தாள்.
“என் ராசாத்தி…” உறக்கத்தில் மலர்ந்திருந்த பிள்ளையின் முகத்தை ஆசையுடன் பார்த்தாள் ஆச்சி.
“அப்படியே இவ அத்தைக்காரி மாதிரியே அனுசரணை. அதே கண்ணு, மூக்கு, குழி விழுற தாவாங்கட்டைன்னு ஒத்த ஜாடை.. மகராசியா பேரன் பேத்தி கண்டு வாழ்வாங்கு வாழனும்” தூங்கும் பேத்தியை கொஞ்சியவள், “இருக்கிற நாள்ல எதையும் கண்டும் காணாம இருந்துக்கிடணும்” என்று தனக்குள் எண்ணிக் கொண்டதெல்லாம் அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டும் தான்.
அன்று வெளியே சென்று ஊர் சுற்றிப் பார்த்த அசதியில் வலித்த உள்ளங்காலை அழுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆச்சி.
அடுத்த அறையில் ஒரே குதியாட்டம், சத்தம். தான் உள்ளே வந்து விடக்கூடாது என இப்போது அறையை மூடிக் கொள்கிறார்கள் எனப் புரிய, பெருமூச்சுடன் தைலத்தைத் தடவினாள். மகன் துண்டை எடுக்கக் கதவைத் திறந்து வெளியே வர, அதற்கு மேல் பொறுக்க முடியாத ஆச்சி மெல்ல எழுந்து எட்டிப் பார்த்தாள்.
பெரிய பீங்கான் குளியல் தொட்டி முழுக்க, தண்ணீர் நிரம்பியிருக்க, கண்ணாடியாய்ப் பரவியிருந்த சோப்புக்குமிழிகளுக்குள் அமிழ்ந்திருந்த பேரனும் பேத்தியும் தண்ணீரை ஒருவர் மேல் ஒருவர் அடித்தபடி கும்மாளமடித்துக் கொண்டிருந்தார்கள். குளியலறையே நீச்சல் குளம் போல அரம்பரமாக இருக்க, பார்த்த ஆச்சிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
“அட… படுப்பாவி பசங்களா…. ஒரு குடும்பமே இரண்டு நாளைக்குப் புழங்குற தண்ணியை….?’
உள்ளே வந்த மகன் ஆச்சியை அங்குக் கண்டு மிரண்டு நின்றான். “பொறுப்பத்த பயலே… வளந்த வளர்ப்பெல்லாம் நினைவுல இல்லாம இப்ப பவிசு கூடிப்போச்சோ துரைக்கு…? தெரு தெருவா அலைஞ்சு அடிபம்பு அடிச்சு சைக்கிள்ல டயர் சுத்தி குடம் தூக்கினது எல்லாம் காசு பணம் சொகுசு வந்தொன்ன மறந்து போச்சு நாய்க்கு”
படபடவென மகனின் தோளில் அடித்தபடி கண்டமேனிக்கு ஏசித் தீர்த்தவளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அடக்க முடியவில்லை. மகன் கல்லாய் நிற்க, “இந்தக் கிழவியோட நெதைக்கும் ஒரே ரோதனையா போச்சு….” மருமகள் ஆச்சியைத் தரதரவென இழுத்துக் கொண்டு அடுத்த அறையில் விட்டுவிட்டு கதவை அடித்துச் சாற்றி விட்டுப் போனாள்.
அன்றிலிருந்து ஆச்சியுடன் யாரும் பேசுவதில்லை. பேத்தி மட்டும் ‘சாப்பிட வா ஆச்சி… அம்மா இதைக் கொடுக்கச் சொன்னுச்சு ஆச்சி..’ என்று கையில் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். ‘நான் இங்க வந்திருக்கவே கூடாது’ அந்த இறுக்கம் ஆச்சிக்கு நெருப்பில் நிற்பது போலத் தகிக்கத் தொடங்கியது.
பெரு மழை வந்து கழுவிவிட்ட ஓர் இரவில் ஆச்சி தன்னுணர்வை அடக்க முடியாத காற்றாறாய் மாறி குண்டு சிண்டு பாத்திரங்களைத் தோட்டத்தில் வைத்து மழைத்தண்ணீர் பிடிக்க, பக்கத்தில் இருந்த மலேய குடும்பங்கள் அதை வேடிக்கை பார்ப்பதைக் கண்ட மருமகள் தலையில் அடித்துக் கொண்டாள்.
மற்ற எல்லா விஷயங்களிலும் பாங்காய் நடந்து கொள்ளும் ஆச்சி, தண்ணீர் விஷயத்தில் மட்டும் பத்ரகாளி அவதாரம் எடுப்பதும், வீட்டில் உள்ளவர்கள் அந்த ஆவேசத்தைத் சமாளிக்க முடியாமல் சமைந்து நிற்பதும் வாடிக்கையாக….
அடுத்த வாரத்தின் ஒரு மாலை வேளையில், எதிர் வீட்டுத் தோட்டத்தில் மூடப்படாமல் கொட்டிக் கொண்டிருந்த குழாயைக் கண்டு அவள் கதவைத் தட்டி சண்டை பிடிக்கப் போக, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ஆச்சிக்கான விமானச் சீட்டுகள் பதிவேறின.
மகன் கொண்டு வந்து விட வர, ஆச்சி பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தாள். ஆரம்பத்தில் இருபக்கமும் இறுக்கமாய்ச் சென்ற நாட்கள், அலைபேசியில் நலம் விசாரிக்கும் அளவுக்கு மெல்ல இயல்பாகின.
‘ஆச்சியை மட்டும் இன்னொரு தரம் இங்க கூட்டிட்டு வந்துடக் கூடாது’ என்று பேரனும் மருமகளும் அடிக்கடி நினைத்துக் கொண்டார்கள். ஆறு மாதங்கள் கழிந்த ஒரு நள்ளிரவில் மகனின் அலைபேசி அழைத்து அவசர செய்தியை சொல்ல, அடித்துப் பிடித்து விமானம் ஏறி நால்வரும் ஊர் வந்து சேர்ந்தார்கள்.
ஆச்சி தன் இறுதிப் பயணத்திற்குக் கிளம்பிய அடுத்த நாள் மருமகளும் அவள் அம்மாவும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். “யாரும்மா அது…?” ஆச்சியின் கட்டில் காலில் சொருகி இருந்த மஞ்சளேறிய புகைப்படம் ஒன்றை எடுத்துக் காட்டி பேத்தி கேட்டாள்.
“அது யாருமில்ல… ஒன்னை யாரு அதை எடுக்கச் சொன்னா? கொடு..” மருமகள் அதட்ட, “ஏன்டி, அது யாருன்னு சொன்னதாம் என்னவாம்?” அவள் தாய் தடுத்தாள்.
“அது உன் அத்தைடி குட்டி…”
“அத்தையா? நாங்க பார்த்ததே இல்ல…”
“உங்கம்மாவே அவளைப் பார்த்தது இல்ல. சின்ன வயசுலயே போயிடுச்சு. இது போகவும் தான் உங்க ஆச்சியும் தாத்தாவும் சொந்த ஊரை விட்டு இங்கன வந்தாங்க”
“அச்சோ பாவம், என்ன ஆச்சாம் இந்த அத்தைக்கு…?”
“யம்மா, சும்மா இரும்மா. பிள்ளைங்க பயந்துக்கப் போகுதுங்க…”
“இதுல என்னடி பயம் கெடக்கு? பிள்ளைங்களுக்கும் நம்ம ஆச்சி தாத்தனெல்லாம் எத்தனை சிரமப்பட்டு இருக்காங்கன்னு தெரிய வேணாமா?” மகளை அடக்கியவள், பேத்தியிடம் தொடர்ந்தாள்.
“பஞ்சம் தான் கண்ணு காரணம். எப்பயுமே வானம் பாத்த பூமியா இருக்கிற ராமநாதபுரத்துல அந்த வருஷம் சொட்டு மழை இல்லாம பயிரு பட்டு எல்லாம் கருகிப் போச்சு…. ஆடு மாடுன்னு பார்த்து பார்த்து வளர்த்ததெல்லாம் தாகத்துக்குத் தவிச்சு கண்ணு முழிக்க முடியாம செத்துப் போக, மனுஷனுக்கே தண்ணி இல்லையே, அப்புறம் எங்க வாயில்லா சீவனுக்குத் தண்ணி காட்டுறது?”
“நாலு வயசுல கைக்குழந்தையா உங்கத்தை. அப்படியே உன்னை மாதிரியே இருக்கும். ஆச்சி அப்ப நிறைமாசம், உங்கப்பன் வயத்துல… கைல கொஞ்சம் பணம் கிடைச்சா தான் பிரசவத்தைச் சமாளிக்க முடியும்னு உங்க தாத்தன் கிணறு ஊத்துக் காண்பிக்கத் திருநெல்வேலி ஜில்லா பக்கம் போயிருந்தாக…”
“வெயிலு கொடுமை தாங்க முடியாம ஆச்சிக்கும், இந்தப் புள்ளைக்கும் மேலுக்கு ஆத்தா இறங்கிட்டா. தண்ணி வேணும்னா எட்டு எட்டு பதினாறு மைலு நடந்து போயி தான் ஊத்துத் தண்ணி பிடிக்கணும். உங்க ஆச்சிக்கு ஆத்தா கோரமா இறங்கியிருக்க, உடம்புல சுத்தமா தெம்புல்ல. சுத்துபத்து இருந்த வீடெல்லாம் காலி பண்ணி ஊரை விட்டே போயிருக்க, உதவிக்கு யாருமில்லாம, இருந்த தண்ணியைச் சொட்டுச் சொட்டா தனக்கும் பிள்ளைக்குமா தொண்டையை நனைச்சுக்கிட்டா…”
“ஊர்ல இருந்து உங்க தாத்தா வந்துட்டா தேவலையே, பிள்ளையையாவது காப்பாத்திப்புடலாம்னு அவ கெடக்க, ராத்திரியோட ராத்திரியா புள்ளைக்குக் கண்ணெல்லாம் மேல போயிடுச்சு. உங்க ஆச்சி ஒத்தையா குடிசைக்குள்ள அல்லாட, ஊருக்கெல்லாம் தண்ணியைக் காட்டிப்புட்டு உங்க தாத்தா வூடு வந்து சேரதுக்குள்ள ‘தண்ணி தண்ணி’னு கேட்டுட்டே அந்தப் புள்ளை போய்ச் சேர்ந்துருச்சு… அதுக்கப்புறம் தான் பாவம் அங்க இருப்பு கொள்ளாம இங்கன வந்தாங்க…”
“பாவம் எங்க ஆச்சி…” திண்ணையில் அமர்ந்து கதைக் கேட்டுக் கொண்டிருந்த பேரன் மெலிதாகச் சொன்னான். நேற்று முழுவதும் சொட்டுக் கண்ணீர் விடாதவனின் கண்கள் நனைந்து இருந்தன.
“ஏம்பா, இதை ஒரு தடவையாவது எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்பா…” அவன் தன் பெற்றோரை திரும்பிப் பார்க்க, மருமகள் மகனின் முகம் பார்க்க முடியாமல் மிடறு விழுங்கினாள்.
“சொல்லி இருக்கணும், எதுக்குப் புள்ளைங்ககிட்ட பழைய கதையெல்லாம்னு நினைச்சுட்டேன்..” மகன் வழிந்த கண்ணீரை துண்டால் துடைத்துக் கொண்டான்.
ஒன்றுமே பேசாமல் பாத்திரம் கழுவும் அங்கணத்தில் ஆச்சி சிக்கனமாய் நிரப்பி வைத்திருந்த பானைகளை, சின்னச் சின்ன மண் சட்டிகளை, குடுவைகளைத் தன் கோலிக்குண்டு கண்களால் வெறித்தபடி பேத்தி நிற்க, பேரனின் பார்வையும் அவளைத் தொடர்ந்தது.
தொண்டையை அடைத்த உணர்வுடன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் ஆச்சி தோட்டத்தில் நிரப்பி வைத்திருந்த தொட்டி நீரை மொண்டு அவன் முகம் கழுவ சென்றான். அச்சிறுவனின் கையில் சிந்தாத சிதறாத கவனத்துடன் கூடிய ஒரு கோப்பை நீர் இருந்தது.
- 2020 ஜூன் மாத தென்றல் இதழில் வெளியான சிறுகதை