மனம் கொய்த மாயவனே – 40 (Final)
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 40
அல்லிராணியின் கழுத்தில் தாலி கட்டிவிட்டு அவளின் முகம் பார்த்துச் சிரித்தான் வெற்றிவேற்செழியன்.
அவளோ சிரிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“நம்ம கல்யாணம் ஆள்முழுங்கி. சந்தோஷமா இருடி. ஏன் இப்படி உம்முன்னே இருக்க?” என்றான்.
அவன் சொல்லவும் பெயருக்குச் சிரித்தவள் மீண்டும் இறுக்கமாக அமர்ந்து கொண்டாள்.
“இன்னும் என்ன சொல்லித்தான் உன்னை நான் இயல்பா மாத்துவது? ஏற்கனவே உன்னைச் சமாதானம் பண்ண வாய் வலிக்கிற அளவுக்குப் பேசியாச்சு…” என்றவன் குரலில் சோர்வு தெரிந்ததோ?
பட்டென்று அவனின் புறம் திரும்பி “நான் நல்லாத்தான் இருக்கேன்…” என்று சொல்லி விட்டு மென்மையாகச் சிரித்தாள்.
“குட்! இந்தச் சிரிப்பை அப்படியே கன்டின்யூ பண்ணுவியாம்…” என்றான்.
அல்லிராணி திருமணத்திற்குச் சம்மதித்த பிறகும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் தான் இருந்தாள்.
“என்ன உன் மனசை போட்டுக் குடையுதுன்னு சொல்லு அல்லி…”
“உனக்கு இவள் பொருத்தமில்லை. இவளை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு யாராவது கேட்டா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டாள்.
“சொன்னா சொல்லிட்டுப் போறாங்க. அதனால் நமக்கு என்ன வந்தது?” என்று திருப்பிக் கேட்டான்.
“மனசு வலிக்குமே…” என்றாள் வருத்தமாக.
“அது எதுக்கு வலிக்கணும்?” என்று மீண்டும் கேள்வியில் முடித்தவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம். ஒரு கல்யாணம் முழு வெற்றி அடைவது ஒரு தம்பதி வாழும் வாழ்க்கையில் தான் இருக்கு. மனப்பொருத்தம் இருந்தாலே அந்த வெற்றியை அடைந்து விடலாம்.
நம்ம வாழ்க்கையை வாழப் போறது நாம. இதில் மூணாவது மனுஷங்க எங்கிருந்து வந்தாங்க? பொருத்தம் இல்லைன்னு சொன்னால் நாம எவ்வளவு பொருத்தம் பார்னு வாழ்ந்து காட்டணுமே தவிர, அப்படிச் சொல்லிட்டாங்களேன்னு வருத்தப்பட்டுட்டு உட்கார்ந்து இருக்கக் கூடாது.
அவங்க அந்த நிமிஷம் தோன்றதை சொல்லிட்டுப் போயிடுவாங்க, அவ்வளவுதான். அதுக்குப் பிறகு நாம என்ன பண்றோம் ஏது பண்றோம்னு பார்த்துட்டே இருப்பாங்கன்னு நினைக்கிறீயா?
அவங்களுக்கு அடுத்தச் சாப்டர் கிடைச்சா அடுத்து அதைக் குறை சொல்ல கிளம்பிப் போய்ட்டே இருப்பாங்க. அதனால அடுத்தவங்க என்ன சொல்வாங்கனு யோசிக்கக் கூடச் செய்யாதே…” என்றான்.
“நான் பத்தாவது பெயில் தான். அது உங்களுக்குக் குறையா தெரியலையா?”
“படிப்பு வாழ்க்கைக்கு முக்கியம் தான். ஆனா படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியமில்லை. ஒண்ணுமே படிக்காதவங்க கூட வாழ்க்கையில் ஜெயிச்சிருக்காங்க. நான் படிச்சிருக்கேன். உனக்கும் எழுத படிக்கத் தெரியும். பிறகேன் கவலை? விடு…” என்றான்.
அவளின் எல்லாக் கேள்விக்கும் அவனிடம் பதில் இருந்தது. ஏதாவது அவள் ஏற்றுக்கொள்ளும் படி சொல்லி அவளின் வாயை அடைத்தான்.
ஆனால் அவளின் பழைய கலகலப்பை மட்டும் அவனால் மீட்டெடுக்க முடியவில்லை.
அதில் மட்டும் இன்னும் முழு வெற்றியடையாமல் இருந்தான் வெற்றி.
இப்போது கோவிலில் திருமணத்தை வைத்திருந்தனர்.
நெருங்கிய சொந்தங்கள், மிக நெருங்கிய நட்புகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர்.
உறவுகளுக்கு இடையே அல்லி பற்றிச் சலசலப்பு எழவே செய்தது. ஆனால் அது அவளின் காதில் விழாதவாறு பார்த்துக் கொண்டான்.
அவனுக்கு உதவியாக ஆனந்தும், ரத்னாவும் கூடவே இருக்கத் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
மற்ற அலுவலக நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் தனியாக வரவேற்பு வைப்பதாக முடிவு செய்திருந்தான் வெற்றி.
சரோஜா திருப்தியும், நிம்மதியுமாக மகளையும், மருமகனையும் பார்த்தார்
அவரை இனி சித்தாள் வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லியிருந்தான்.
தன் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையென்பதால் அவரை இனி தங்கள் கூடவே இருக்கச் சொல்லிவிட்டான்.
சரோஜாவுக்கு அதில் விருப்பமே இல்லை. ஆனால் அவனுக்குப் பேச சொல்லியா கொடுக்க வேண்டும்? பேசியே அவரைத் தங்கள் கூட வந்து தங்க சம்மதிக்க வைத்திருந்தான்.
“செழியா, இந்தப் பக்கம் திரும்பு. இப்படிப் பார். இந்த லுக் சரியில்லை, முகத்தை இப்படி வை…” என்று புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்கும் போதெல்லாம் அவனை ஏதாவது சொல்லி ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள் ரத்னா.
அவள் செய்யும் அட்டகாசத்தை அசராமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அவளின் கணவன் முருகானந்தம்.
கடந்த வாரம் தான் இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது.
புதுமணப் பெண்ணிற்கான பூரிப்பு ரத்னாவின் முகத்தை இன்னும் அழகாக்கியிருந்தது.
ஏற்கனவே அவள் தனக்குப் பொக்கிஷம் என நினைத்துக் கொண்டாடுபவன், இப்போது மனைவியின் அழகை சுற்றியுள்ள யாரையும் பொருட்படுத்தாமல் ரசித்துக் கொண்டிருந்தான் அவளின் கணவன்.
“டேய் ஆனந்த், போதும் சைட் அடிச்சது. உன் பொண்டாட்டி அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்து. இல்லைனா…” என்று செழியன் கடுப்பாகி கத்த,
“இல்லனா இன்னும் கொஞ்சம் கடுப்பாகி கத்துவான். வேற ஒன்னும் செய்ய மாட்டான்…” என்று குறும்பாகச் சொல்லிச் சிரித்துக் கணவனைப் பார்த்து கண்சிமிட்டினாள்.
அதில் இன்னும் அவன் தலைசுற்றிப் போக, நண்பனாவது அவன் மிரட்டலாவது என்று அவனின் வேலையைத் தொடர்ந்தான்.
“இவன் ஒருத்தன், காணாததைக் கண்டது போலப் பார்ப்பான்…” செழியன் முனங்கிக் கொண்டான்.
“அவர் பொண்டாட்டி அவர் பார்க்கிறார்…” என்று அல்லியும் முணுமுணுத்தாள்.
“அவன் பார்த்தால் எனக்கென்ன? ஆனா அவன் பொண்டாட்டி என்னை என் பொண்டாட்டியைப் பார்க்க விடாம சதி பண்ணிட்டே இருக்காளே…” என்று கடுப்பாகப் பல்லைக் கடித்தவன் அவளின் புறம் திரும்பினான்.
“செழியா வா, அடுத்து நாம சாப்பிட போகலாம்…” என்று அந்த நேரம் சரியாக அழைத்தாள் ரத்னா.
‘இவ ஒரு முடிவோட தான் இருக்கா போலவே’ என்று புலம்பிக் கொண்டான்.
“நீயும், ஆனந்தும் முன்னாடி போங்க. நாங்க பின்னாடி வர்றோம்…” என்றான்.
“அதெல்லாம் நடக்காது ராசா. எங்க கூடவே வந்தாகணும்…” என்றவள், அல்லியின் கையை அவள் பிடித்துக் கொண்டு கணவனுக்குக் கண்களால் கட்டளையிட, செழியனின் கையை ஆனந்த் பிடித்துக் கொண்டான்.
“டேய், புருஷனும், பொண்டாட்டியும் சொல்லி வச்சு பிளான் பண்றீங்களா? எங்களைக் கொஞ்ச நேரம் தனியாத்தான் விடுங்களேன்டா…” என்றான்.
“நீங்க தனியா இருக்க இன்னும் ரொம்ப நேரம் இருக்கு…” அதற்கும் பதிலளித்தவள் ரத்னா தான்.
“என்ன ஆனந்த் மௌன விரதம் இருக்கியா? உனக்கும் சேர்த்து ரத்னா தான் பேசுறா…” என்றான் செழியன்.
“அடுத்த வாரம் நீயும் இப்படித்தான் இருப்ப செழியா…” என்று வாயைத் திறந்தான் ஆனந்த்.
அவர்களின் கலாட்டாவை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லிராணி.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே கோவில் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த உணவு உண்ணுமிடத்தில் உறவினர்கள் எல்லாம் உண்டுவிட்டு எழுந்ததும் மணமக்களும், நண்பர்களும் அமர்ந்தனர்.
அல்லியின் அருகில் அமர்ந்திருந்த ரத்னா தன் முன் இலை விரிக்கப்பட்டதும் “ஆனந்தமானவனே…” என்று செழியன் அருகில் அமர்ந்திருந்த கணவனை அழைத்தாள்.
“சொல்லு ரத்னா…”
“நான் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் என்னை யாரும் தொந்தரவு பண்ணாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு…” என்றாள்.
“சரி ரத்னா. நீ சாப்பிடு, நான் பார்த்துக்கிறேன்…” என்று தலையாட்டினான் ஆனந்த்.
“நல்ல ஜோடி போ. இவனைத் தலையாட்டிப் பொம்மையாகவே மாத்தி வச்சுட்டாள். இவளுக்குச் சாப்பாட்டைப் பார்த்ததும் சகலமும் மறந்திடுமே…” என்று தோழியைக் கிண்டல் அடித்தான் செழியன்.
யாரோ யாரையோ சொல்கிறார்கள் என்பது போல் சாப்பாட்டில் மட்டும் கவனத்தை வைத்தாள் ரத்னா.
அன்று முழுவதும் ரத்னாவின் கலாட்டா தொடர்ந்தது.
அல்லியுடன் தான் பெரும்பாலான நேரம் இருந்தாள் ரத்னா.
வெற்றி மனைவியைத் தனியாகச் சந்திக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் அதில் ஒன்று கூட நிறைவேறவில்லை.
இரவு தான் அவனுக்கான நேரம் கிடைத்தது.
“நாங்க கிளம்புறோம் செழியா. உங்க இல்லற வாழ்க்கை இனிமையாகத் தொடர வாழ்த்துகள்…” என்று ஆனந்தும், ரத்னாவும் வாழ்த்தி விட்டு மகிழ்ச்சியாகத் தன் இல்லம் கிளம்பினர்.
அல்லியை அலங்கரித்து விட்டுக் கிளம்பியிருந்தாள் ரத்னா.
கணவனின் அறைக்குள் அழகு பதுமையென நுழைந்தாள் அல்லிராணி.
வெற்றி அவனின் படுக்கையில் அமர்ந்து மனைவியின் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தான்.
கதவை மூடி விட்டு அவனின் அருகில் அல்லி வர, “ஆள்முழுங்கி…” என்று படுக்கையில் அமர்ந்திருந்த வண்ணமே அழைத்தான்.
“ம்ம்…” என்று மென்மையாக முனங்கி அவன் முகம் பார்த்தாள்.
“ம்கூம்… இது சரிவராது…” என்றவன், “நீ என் ஆள்முழுங்கி இல்லை. நீ போய் என் ஆள்முழுங்கியை அனுப்பு. அப்புறம் பர்ஸ்ட் நைட்டை வச்சுக்கலாம்…” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.
“என்னங்க இது? நான் தானே உங்க ஆள்முழுங்கி?” என்று கேட்டாள்.
“ம்கூம்… நீ என் ஆள்முழுங்கி இல்லவே இல்லை. என் ஆள்முழுங்கியா இருந்திருந்தால் என்னை ‘ங்க’ போட்டுக் கூப்பிட்டிருக்க மாட்டாள். முதலில் இவ்வளவு அமைதியா அவள் இருக்கவே மாட்டாள்.
என் ஆள்முழுங்கி திரும்பக் கிடைச்ச பிறகு தான் பர்ஸ்ட் நைட் பத்தி யோசிக்கணும். இப்படி யாரோ போல நிக்கிற அல்லி வேண்டாம். நீ வெளியே போடி…” என்றவன் பின் ஏதோ யோசித்தது போல, “இல்ல, நானே போறேன்…” என்றவன் கதவைத் திறந்து வெளியே செல்லப் போனான்.
“யோவ் வெற்றி, நில்லுயா!” என்று அல்லியின் ஆர்ப்பாட்டமான குரல் கேட்க, ஆர்வமாகத் திரும்பினான் வெற்றி.
அவனின் அருகில் வேகமாக நெருங்கியவள், “புதுப் பொண்ணுனா அப்படித்தான் வெட்கம், கூச்சம்னு நிற்பா. அதை எப்படிப் போக்குறதுன்னு யோசிப்பானா, அதை விட்டு வெளியே போறானாம்.
இனி நீயும் போக முடியாது. நானும் போக மாட்டேன். நீ விரட்டியதும் போக நான் ஒன்னும் இப்ப அல்லிராணி மட்டுமில்லை. என் வெற்றியோட பொண்டாட்டி…” என்றவள் அவனின் சட்டையைப் பிடித்து இழுத்து தன் மேல் மோதவிட்டாள்.
“மை ஆள்முழுங்கி இஸ் பேக்…” என்று சிரித்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“அவ எப்பவோ ‘பேக்’கு(back). நீ தான் அது புரியாமல் பேக்கு மாதிரி முழிக்கிற…” என்றவள் அவனின் மார்பில் சுகமாகச் சாய்ந்து கொண்டாள்.
“என்னது, எப்பவோவா? என்னடி விளையாடுறீயா? இன்னைக்கு நம்ம கல்யாணத்தில் கூட உர்ருன்னு தான் இருந்த. நம்ம கல்யாண போட்டோ வந்ததும் பாரு. அதுலயே நீ எப்படி இருக்கன்னு தெரியும்…” என்றான்.
ஆனால் அவளோ “நீ உன் போனை எடுத்துப் பாரு…” என்றாள்.
“இந்த நேரம் அது எதுக்கு?”
“எடுத்துப் பாரு, உனக்கே தெரியும்…” என்று அவள் சொல்லவும் யோசனையுடன் கைபேசியை எடுத்துப் பார்த்தான்.
“ரத்னா வாட்ஸ்அப் பண்ணிருப்பாங்க அதைப் பாரு வெற்றி…” என்றதும் திறந்து பார்த்தான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரிசையாக ரத்னாவிடமிருந்து குறுந்தகவல் வந்து கொண்டே இருந்தது.
அதைத் திறந்து பார்க்க, புகைப்படம் அனுப்பியிருந்தாள்.
அப்புகைப்படங்களைப் பார்த்தவன் கண்கள் வியப்பை பிரதிபலித்தன.
அவன் பார்க்கும் போதெல்லாம் சிரிக்கவே மறைந்திருந்த அல்லிராணி அந்தப் புகைப்படத்தில் மலர்ந்த சிரிப்புடன், அவள் கண்களில் எப்போதும் இருக்கும் குறும்புடன் நின்றிருந்தாள்.
“இது எப்போ நடந்துச்சு ஆள்முழுங்கி? நான் பார்க்கும் போதெல்லாம் உர்ருன்னு இருந்த. போட்டோவில் மட்டும் எப்படி இப்படி?” வியப்பு மாறாமல் கேட்டான்.
“நீ பார்க்கும் போது மட்டும் முகத்தை உர்ருன்னு வைக்க எம்புட்டுக் கஷ்டப்பட்டேன் தெரியுமா? எல்லாம் நானும், ரத்னாவும் சேர்ந்து போட்ட பிளான் தான்…” என்றவள் ஈஈஈ என்று சிரித்துக் காட்டினாள்.
“அது தான் போட்டோ எடுக்கும் போதெல்லாம் ரத்னா என்னை ஒரு வழி ஆக்கிக்கிட்டு இருந்தாளா?”
“அதே… அதே…! உனக்கு ஊருல ஒரு குடும்பம் இருக்கு. தங்கச்சி, தம்பி இருக்கு. அவங்களைக் காப்பாத்தணும், அதுக்கு நீயும் என் கூடத் துணையா இருக்கணும்னு எத்தனை பொய்? எம்புட்டு நடிப்பு? ஏன் நீ மட்டும் தான் நடிப்பியா? என் நடிப்பு எப்பிடி?” என்று இல்லாத காலரை தூக்கி விடாத குறையாகக் கேட்டாள்.
“சில நேரம் பொய் சொன்னாத்தான்டி என் தொழிலில் பொழைச்சு கிடைக்க முடியும்…” என்றவன்,
“இன்னும் நீ என் வேலையை வச்சு என்னை ஏத்துக்கத் தயங்குறியோன்னு நினைச்சுட்டு இருந்தேன். எத்தனை தடவை பேசியும் நீ முன்னாடி மாதிரியே கலகலப்பாகவே இல்லை…” என்றான்.
“கருத்துக் காத்தவராயன் அட்வைஸ் பண்ண பிறகும் நான் மாறாம இருந்தால் தான் அதிசயம்…” என்று கிண்டலாகச் சொன்னாள்.
“கருத்துக் காத்தவராயனா? என்னடி நக்கலா?” என்று கேட்டுக் கொண்டே அவளைத் தன் அருகில் இழுத்தான்.
“சும்மா நீங்க உயரம், நான் குடிசைன்னு உளறிக்கிட்டே இருக்கியேன்னு என்னென்னவோ சொல்லி உன்னைச் சமாதானம் செய்தால் நீ எனக்குப் பட்டப் பேரா வைக்கிற?” என்று அவளின் கன்னத்தில் வலிக்காமல் கிள்ளினான்.
“நீ ஆபிசர்னு தெரிஞ்சதும் நான் பயந்து, மனசு குழம்பிப் போனது உண்மை தான் வெற்றி. அன்னைக்கு அந்தப் பயத்தில் சரிவராதுன்னு சொல்லிட்டு ஓடிட்டேன்.
ஆனா உன்னைப் பார்க்காம என்னால் இருக்கவே முடியலை. நீ திரும்பக் குடிசைக்கு வருவன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை. நீ வந்ததும் எனக்கு எவ்வளவு நிம்மதியா இருந்துச்சு தெரியுமா?
“அப்பயே நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. ஆனாலும் அடுத்தவங்க பேசினால் நம்ம வாழ்க்கையில் தடுமாற்றம் வந்துருமோன்னு பயமா இருந்துச்சு.
அதான் கொஞ்சம் தயங்கினேன். அதோட எனக்கே தெளிவு தேவைப்பட்டுச்சு. உன்கிட்ட எல்லாத்துக்கும் பதில் இருந்தது. நீயும் தெளிவா இருந்த.
அதோட நான் காதலிச்சது, உன் படிப்பையோ, வேலையையோ, வசதியையோ பார்த்து இல்லை. வெற்றியை, அவன் மனசை மட்டும் தான் காதலிச்சேன்.
உன் அடையாளம் மாறினாலும் நீ அதே மனசு உள்ள வெற்றி தான் என்னும் போது இன்னும் ஏன் நான் உன்னைக் கட்டிக்கத் தயங்கணும்னு நான் தெளிவான பிறகு தான் உன்கிட்ட கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்…” என்றாள்.
“பிறகு ஏன்டி இன்னைக்கு வரை குழப்பமா இருக்குறவ மாதிரி நடிச்ச?”
“பின்ன இவரு வருவாராம், நடிப்பாராம். திடீர்ன்னு ஆபீசர்னு டிப்டாப்பா வந்து நின்னு ஷாக் கொடுப்பாராம். ஒரு மனுஷியை எவ்வளவு குழப்பி விட்டு குளிர் காஞ்சிருக்க. உன்னையும் கொஞ்சம் சுத்தலில் விடணும்னு தான்…”
“சேட்டை… கொழுப்பு… என்னா நடிப்புடா சாமி…” என்று அவளின் காதை திருகினான்.
“பின்ன அல்லிராணியா கொக்கா…ஆஆ…” காது வலிக்கக் கத்தினாள்.
காதை விட்டுவிட்டுக் கத்திய வாயை தன் வாயால் அடைத்தான் வெற்றி.
இதழ்கள் சில நொடிகள் நலம் விசாரித்துக் கொண்டன.
“எங்கிருந்தோ திடீர்னு வந்து என் மனசை கொள்ளையடிச்சுட்டு என்னோட ‘மனம் கொய்த மாயவனா’ மாறிட்ட வெற்றி…” என்று அவனிடமிருந்து தன் உதடுகள் பிரிந்ததும் காதலுடன் முணுமுணுத்தாள் அல்லி.
“ஹகூம்… உன் மனசை கொள்ளையடிக்க வச்சது நீ தான் என் ஆள்முழுங்கி…” என்றான்.
“பின்ன…” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க,
“நீ யாரு? அல்லிராணி, அடங்காத ராணி. என் ஆள்முழுங்கி ராணியாச்சே…” என்றவன், அவளைக் காதலுடன் அணைத்துக் கொண்டான்.
அவளும் அவனின் அணைப்பில் வாகாக அடங்கிக் கொண்டாள்.
வெற்றியின் இதயத்தில் குடிபுகுந்து அவனின் இதயராணியாக முடிசூடிக் கொண்டாள் அல்லிராணி.
***சுபம்***