மனம் கொய்த மாயவனே – 37
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 37
“செழியன் கூட ஒட்டுதலாக இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டால், நீ பொறாமை பட்டு என்கிட்ட ஏதாவது பேச வருவன்னு நினைச்சேன். ஆனா என் நினைப்பை எல்லாம் பொய்யாக்கி, இப்போ கூட நான் கேட்ட பிறகு தான் உன் காதலை என்கிட்ட சொல்லியிருக்க…” என்று சண்டை போடுவது போலச் சொன்னாலும் ரத்னாவின் குரலில் வேதனையும் இருந்தது.
அதைப் புரிந்து ஆனந்த் அவளிடம் சமாதானமாக ஏதோ சொல்ல வர,
“ஆனந்த் அவளைச் சமாதானப்படுத்துவதை எல்லாம் நீயும், அவளுமா தனியா செய்துக்கோங்க. இப்போ அல்லிக்கும், உனக்கும் தெரிய வேண்டிய சில பொதுவான விஷயத்தை மட்டும் கிளியர் பண்ணிடுறேன். அதுக்குப் பிறகு நான் அல்லிக்கிட்ட தனியா பேசணும்…” என்றான் செழியன்.
“சொல்லு செழியா…” என்றான் ஆனந்த்.
“அதுவும் சரிதான். இவனை வெளுத்து வாங்க நாங்க தனியா போறது தான் சரியா இருக்கும்…” என்று ஆனந்தை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரத்னா.
“அம்மா தாயே! உன் சண்டை எல்லாம் அப்புறம் வச்சுக்கோ. நான் சொல்வதை எல்லாம் கேட்டுட்டு அப்புறம், நீ அவனை வெளுத்து வாங்க போறீயா, இல்ல அவன் உன்னை வெளுத்து வாங்க போறானான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க…” என்ற செழியன் மேலும் விவரம் சொல்ல ஆரம்பித்தான்.
“ரத்னா உன் காதலை உன்னையே சொல்ல வைக்கிறேன்னு, உன் பொறாமையைத் தூண்ட போறேன்னு என்கிட்ட ஒட்டுதலாக இருக்குற மாதிரி ஒரு பிம்பத்தை அவளே உருவாக்க நினைச்சாள்.
ஆனா அதை நான் கண்டுபிடித்துக் கேட்கவும், உன்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். அதை அவன்கிட்ட போய்ச் சொல்லுன்னு சொன்னால் அவனைத் தான் மனம் திறந்து பேச வைக்கணும். அதுக்கு உன் உதவி வேணும்னு சொன்னாள்…”
“நீயும் உடனே சரின்னு சொல்லிட்டீயாக்கும்?” என்ற ஆனந்தின் குரலில் லேசான எரிச்சல் இருந்தது.
“ஐயோ! இவனா? என்னைத் தலைகீழா தண்ணி குடிக்க வச்சான்…” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ரத்னா.
“பின்ன நீ சொன்ன பொய்யை நானும் மெயிட்டன் பண்ணியதில் எத்தனை குழப்பம் வந்ததுன்னு நீயும் தானே பார்த்த? நான் சொன்ன மாதிரி நீ நேரா இவன்கிட்ட காதலை சொல்லியிருந்தால் அன்னைக்கே எல்லாம் சரியா இருந்திருக்கும்…” என்றான் செழியன்.
“சரி, சரி கோவிச்சுக்காதே செழியா, நான் ஏதோ நினைச்சுச் செய்யப் போய் அது எங்கங்கோ போய் முட்டிக்கிச்சு…” என்றாள் ரத்னா.
“நீ எப்படி இவ இஷ்டத்துக்குச் சரின்னு சொன்ன செழியா?” என்று கேட்டான் ஆனந்த்.
“நான் எங்க சரின்னு சொன்னேன். இவள் தான் என்னைச் சொல்ல வச்சாள். நீ என்னைக்காவது இவள் அழுது பார்த்திருக்கியா?” என்று ஆனந்திடம் கேட்டான்.
‘இல்லை’ என்று அவன் தலையசைக்க, “நான் பார்த்திருக்கேன்…” என்று செழியன் சொன்னதும், வேகமாகத் திரும்பி ரத்னாவின் முகத்தைப் பார்த்தான் ஆனந்த்.
அவளோ இவனைப் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“நம்ம கிட்ட விளையாடுவதில் தான் இவ குறும்பு ஆனந்த். ஆனா நீன்னு வரும் போது அவள் ரொம்பச் சென்சிட்டிவ்னு எனக்கு அன்னைக்குத் தான் புரிஞ்சது.
அவள் மீதான உன் காதல் எப்படியும் உன்னைப் பொறாமை பட வைக்கும். நீ ரியாக்ட் பண்ணுவ. அப்போ உன் காதலை வெளிப்படையா சொல்ல வைச்சுக்கிறேன்.
அதுக்கு நீ கொஞ்சம் நடிச்சா போதும்னு இவள் என்கிட்ட கேட்டப்ப எனக்கு அதில் உடன்பாடே இல்லை. ஆனா அவள் கண்கலங்கி ப்ளீஸ் செழியான்னு கெஞ்சினப்ப என்னால் மறுக்க முடியலை.
சீக்கிரம் உன் நாடகத்தை முடிச்சுக்கோனு சொல்லியே தான் அவள் கேட்டதுக்குச் சம்மதிச்சேன். ஆனாலும் அப்பயும் அவள்கிட்ட நான் ஃபிரண்டாதான் பிகேவ் செய்தேனே தவிர வேற மாதிரி நடிப்புக்கு கூடப் பிகேவ் பண்ணலை. ஆனா நாங்க நினைச்சதுக்கு மாறா நீ இன்னும் அவளை விட்டு விலகிப் போய்ட்ட…” என்றான் செழியன்.
“ஹா… அது நீ லவ் பண்ற பொண்ணை நான் எப்படிப் பார்க்க முடியும்ன்னு தான்…” என்று அவன் தயக்கத்துடன் இழுக்க,
“நீ அப்படி நினைக்கிறன்னு தான் நானும் நினைச்சேன். அதுக்குத்தான் இந்த வேலை எல்லாம் வேண்டாம். அவன்கிட்ட நேரா பேசுன்னு சொன்னேன். ஆனா அவள் அதுக்குப் பதில் வேற ஒரு ஐடியா சொன்னாள்…”
“என்ன ஐடியா?”
“உன் வீட்டிலும், அவள் வீட்டிலும் பேசி நேரா கல்யாணத்துக்கு ரெடி பண்ண போறேன். அவன் எப்படியும் காதலை சொல்லப் போறது இல்லை. சோ, கல்யாணம் முடிச்சுட்டு அவனைப் பார்த்துக்கிறேன்னு சொன்னாள்.
அவள் வீட்டில் அவளும், உன் வீட்டில் நான் பேசுவதாகவும் முடிவு செய்திருந்தோம். ஆனா அதுக்குள்ள நமக்கு வெளியூர் போக வேண்டிய வேலை வந்திருச்சு.
சோ, போய்ட்டு வந்து பேசுவோம்னு தள்ளிப் போட்டோம். ஆனா அதுக்குள்ள கிருதி அவளா என்னென்னவோ நினைச்சுக்கிட்டு நான் திரும்பி வந்த பிறகு இங்கே கிருதி ஒரு குழப்பம் செய்து வச்சுருந்தாள்…”
“ஏன் செழியா கிருதிகிட்ட உங்களைப் பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கலாமே?”
“சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்னு நீ நினைக்கிற?” என்று திருப்பிக் கேட்டான்.
“அது நீங்க லவ்வர்ஸ்ன்னு நினைச்சுத் தானே கிருதி ஏதேதோ செய்தாள். இல்லைன்னு சொல்லியிருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டாள் தானே?” என்று கேட்டான் ஆனந்த்.
“உனக்கு அவளைப் பத்தி சரியா தெரியலை ஆனந்த். நான் ரத்னாவை காதலிக்கிறேன்னு தவறாக நினைச்ச போதே அவளை விட்டுட்டு என்னை லவ் பண்ணுன்னு சொன்னாள். இதுவே நான் யாரையும் லவ் பண்ணலைன்னு தெரிஞ்சால், அதான் நீ யாரையும் லவ் பண்ணலை இல்ல.
அப்போ என்னை லவ் பண்ணுன்னு மட்டும் சொல்ல மாட்டாள். அதுக்கு மேலேயே போய்த் தாலி எடுத்துட்டு வந்து கட்டுன்னு என்னைக் கட்டாயப்படுத்தி என்னை ரொம்ப இக்கட்டான நிலைக்குத் தள்ளி விட்டுருப்பாள். எங்க இரண்டு பேர் வாழ்க்கையையே சிக்கலாக்கி விட்டுருப்பாள். அது தான் நடந்திருக்கும்.
நான் அவளைத் தங்கை மாதிரி நினைக்கிறேன்னு சொன்னதைக் கூட அவள் புரிஞ்சிக்கலை. ஏன்னா அவள் குணம் அதுதான்!” என்று உறுதியாகச் சொன்னான் செழியன்.
“நான் கூட என் பொய்யினால் தான் கிருதி அப்படி ஒரு முடிவு எடுத்தாளோன்னு கில்டியா பீல் செய்திருக்கேன். அன்னைக்கு அவள்கிட்ட உண்மையைச் சொல்லிருவோம்னு நினைச்சு வீட்டுக்கு வந்தேன். ஆனா அவள் என்னைப் பேசவே விடலை. ரொம்பக் கில்டியோட தான் திரும்பிப் போனேன்…” என்றாள் ரத்னா.
“இல்ல ரத்னா. நீ உண்மையைச் சொல்லியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாள். அதுக்குப் பிறகு அவளின் யோசனை வேற மாதிரி போயிருக்கும். சரியா யோசிக்கிறவளாக இருந்தால் நான் முதலில் அவளுக்கு எடுத்துச் சொன்ன போதே யோசித்து இருப்பாள்.
நான் யாரையும் லவ் செய்திருந்தாலும், செய்யலைனாலும் தங்கை என்ற வார்த்தையை விட அதுக்கு மேல யோசிக்க என்ன இருக்கு? சொல்லு… ஆனா அதைக் கூட அவள் யோசிக்கவே இல்லையே? சோ, உன்னால் என்று நினைக்காதே…” என்றான் செழியன்.
“அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியுமா செழியா?” என்று கேட்டான் ஆனந்த்.
“ம்ம், தெரியும். கிருதி, ரத்னாவை லவ் பண்றீயான்னு கேட்டுச் சண்டைப் போட்ட அன்னைக்கு அம்மா என்கிட்ட விசாரிச்சாங்க. அப்பவே உண்மையை அம்மாகிட்ட சொல்லிட்டேன்…”
“அம்மாவும் நீ கேட்ட கேள்வியே தான் கேட்டாங்க. அவங்களுக்கும் இதே பதில் தான் சொன்னேன். நாம சொல்வதைப் புரிந்து கொள்பவர்கள் கிட்ட என்ன வேணும்னாலும் பேசலாம்.
ஆனா நான் முயலை பார்க்கவே இல்லை. ஆனா அதுக்கு மூணு காலு இருந்ததுன்னு வீண்பிடிவாதம் பிடிச்சவள்கிட்ட என்ன பேச முடியும், சொல்லு?” என்று கேட்டான்.
‘புரிந்தது’ என்னும் விதமாகத் தலையை அசைத்தான் ஆனந்த்.
“வெற்றிமாறன் கேஸ் கைக்கு வந்த அன்னைக்குக் கூட உன்கிட்ட மெல்ல பிட் போட்டுப் பார்த்தேன் ஆனந்த், நீ ரத்னாவை என்னவா நினைக்கிறன்னு. அப்போ நான் கேட்டதும் உன் முகத்தில் ஒரு திடுக்கிடல் வந்து போனது.
ஆனா ஃபிரண்டுன்னு சொல்லி மழுப்பிட்ட. அப்பவே எனக்குப் புரிந்தது இன்னும் உன் மனசில் ரத்னா இருக்கா. எனக்காக உன் மனசை மறைச்சுக்கிட்டு நீ கஷ்டப்படுறன்னு.
அன்னைக்குக் கூட உன்கிட்ட உண்மையைச் சொல்லிடலாம்னு நினைச்சேன். ஆனா ரத்னா நானா சொல்ற வரை நீ சொல்லக்கூடாதுன்னு என்கிட்ட கேட்டுகிட்டு இருந்தாள். அதான் சொல்ல முடியலை.
அதோட வெற்றிமாறன் கேஸ் முடிஞ்சதும் உங்க இரண்டு பேரு விஷயத்தைப் பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா அப்படி நினைச்சதுக்கு இந்த மேடம் என் வாழ்க்கையிலும் நல்லா விளையாடிட்டாங்க…” என்று ரத்னாவைப் பார்த்துக் கடுப்பாகச் சொன்னான்.
“என்ன செய்தாள்?” என்று ஆனந்த் கேட்க,
ரத்னாவோ ‘அப்படித்தான் செய்வேன்’ என்ற பார்வை பார்த்தாள்.
செழியனோ அவளைப் பார்க்காமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த அல்லியைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னான்.
அவனின் பார்வையைக் கண்டதும் அல்லி அவனைப் பார்க்காமல் தன் தாவணியின் முந்தானையைத் திருகி கொண்டிருந்தாள்.
“எந்தக் கேஸ்லயும் என்னைச் சேர்த்துக்க மாட்டிங்கிறயேன்னு ரத்னா புலம்பினாளேன்னு வெற்றிமாறன் கேஸ்ல இவகிட்ட சில பொறுப்புகளைக் கொடுத்தோம்ல ஆனந்த், அதுக்குப் பகலில் அவள் நம்மைப் பார்க்க வந்தால் நம்மைத் தேவையில்லாமல் யாராவது சந்தேகப்படலாம்.
வெற்றிமாறனுக்கும் ரத்னாவை பற்றித் தெரியாமல் இருப்பது தான் நல்லதுன்னு சில இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணிட்டு இவள் நைட் வருவாளே, லாஸ்ட் டைம் வந்தப்ப என்ன செய்தாள்னு நீயே கேளு…” என்றான்.
“என்ன செய்த ரத்னா, இவன் இவ்வளவு கடுப்பாகுறான்?”
“லாஸ்ட் டைம் உன்னால் செழியனை பார்க்க போக முடியலைன்னு என்கிட்ட சேம்பிள் ட்ரக்சை கொடுத்துக் கொடுக்கச் சொன்ன இல்ல? அப்போ நைட் போனப்ப அல்லி கோபமா குடிசைக்கு வந்தாள்.
அவள் என்னை ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டாள்னு எனக்குப் புரிஞ்சது. சரி, கொஞ்சம் விளையாடிப் பார்ப்போம்னு வெற்றி நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன்…” என்று குறும்பாகச் சொல்ல,
செழியன் உக்கிரமாக அவளை முறைக்க, அல்லியோ ‘நீ வேணும்னே செய்த வேலை தானா அது?’ என்பது போல் பார்த்தாள்.
“எதுக்கு அப்படிச் சொன்ன?” என்று ஆனந்த் கேட்க,
“பின்ன லவ்வில் சீனியர் நான். இன்னும் உங்கிட்ட லவ்வையும் சொல்ல முடியலை, உன்னையும் சொல்ல வைக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். இவன் என்னென்னா எதிர் வீட்டுலயே லவ்வரை வச்சுக்கிட்டு குஜாலா இருக்கான்…” என்றாள் ரத்னா.
“சதிகாரி…” என்று பல்லைக் கடித்தவன், “நீ சொன்னதை அல்லி வேற மாதிரி புரிஞ்சுகிட்டாள்.
அதுக்குத் தகுந்த மாதிரி வெற்றிமாறன் பெயரையும், நான் அங்கே இருக்குறதுக்காக யூஸ் பண்ணிக்கிட்ட வெற்றி என்ற பெயரையும் குழப்பிக்கிட்டு நான் தான் கடத்தல்காரன்னு நினைச்சு என்கிட்ட சண்டைக்கு வந்து, என்னைப் போலீசில் காட்டிக் கொடுக்கவே கிளம்பிட்டாள்…” என்று செழியன் எரிச்சலுடன் சொல்ல,
ரத்னாவோ நகைச்சுவையைக் கேட்டது போல, “ஹாஹாஹா…” என்று சிரித்தாள்.
“நான் உன் வேலையை மீன் பண்ணி கொஞ்சம் விளையாடி பார்ப்போம்னு தான் சொன்னேன். வேற எந்தத் தவறான எண்ணத்துலயும் சொல்லலை.
ஆனா அல்லி இன்னைக்குப் போலீஸ்ல உன்மேல கம்ளைன்ட் கொடுத்தே ஆவேன்னு சொன்னாள் பாரு… ஹாஹாஹா…” என்று சிரித்தவள்,
“ஆனாலும் ரொம்ப ரொம்ப நல்லவளை லவ் பண்ணிருக்கச் செழிப்பானவனே!” என்று நண்பனை பாராட்டினாள்.
அதைக் கேட்டுக் காதலுடன் அல்லியைப் பார்த்தான் வெற்றி.
ஆனால் அல்லியின் முகமோ அதைக் கேட்டு இறுகிப்போனது. அவளின் முகப்பாவத்தைக் கண்டு யோசனையானான் செழியன்.
“அல்லி நான் உன்கிட்ட ஸாரி சொல்லணும்…” என்ற ஆனந்தின் குரலில், அல்லி அவனின் புறம் கேள்வியாகத் திரும்பினாள்.
“இதுவரை நாங்க பேசியதிலேயே நிறைய விஷயம் உனக்குப் புரிஞ்சிருக்கும். நான் செழியனும், ரத்னாவும் விரும்புறாங்கன்னு நினைச்சுத்தான் அங்கே நீ என்கிட்ட வெற்றி பத்தி பேச வந்தப்ப எல்லாம் அவன் உனக்குச் சரி வரமாட்டான்னு சொன்னேன்.
நீ மனதை பறிகொடுத்துட்டு ஏமாந்துற கூடாதுன்னு தான். அதோட உன்னை லாஸ்ட்டா பார்த்தப்ப வெற்றிமாறன் ஆளுங்க என்னை உன்னோட பார்த்து எதுவும் பிரச்சினை ஆகிட கூடாதுன்னு, ஏதேதோ சொல்லிட்டு அவசர அவசரமா உன்கிட்ட பேசிட்டு அங்கிருந்து போயிட்டேன். ஸாரி…” என்று ஆனந்த் சொல்ல,
“எனக்குப் புரியுதுங்க சார்…” என்றாள் அல்லி.
“சாரா?” என்று அவளை அதிர்ந்து நோக்கினான் ஆனந்த்.
முதல் முறையாகத் தன்னிடம் பேச வந்த போது கூட ‘அண்ணே’ என்று உரிமையுடன் அழைத்தாளே. ஆனால் இப்போது? என்று நினைத்துப் பார்த்தவன், பின் நண்பனைப் பார்த்தான்.
செழியனும் அவனின் அதிர்ந்த முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘என்ன செழியா இது?’ என்று அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவனோ லேசாகத் தோளைக் குலுக்கினான்.
அவனையும், அல்லியையும் மாறி மாறிப் பார்த்த ஆனந்த், ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.
இப்போது அல்லியிடம் செழியன் தனியாக அவன் மனதை சொல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்தவன், இருக்கையை விட்டு எழுந்தான்.
“செழியா, ரத்னாகிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும். நான் அந்த ரூம் யூஸ் பண்ணிக்கிறேன்டா…” என்றவன், நண்பனுக்கு ‘அவளிடம் பேசு’ என்று கண்களால் சேதி சொல்லிவிட்டு,
“வா ரத்னா…” என்று அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான் ஆனந்த்.
உள்ளே சென்று ஆனந்த் கதவை மூடிய மறுகணம் அவனின் முகத்தில் வந்து விழுந்தது ஒரு தலையணை.
அந்தத் தனிமைக்காகவே காத்திருந்தது போல் முதல் ஆளாக உள்ளே சென்ற ரத்னா அவனின் முகத்தில் தலையணையை வீசி அடித்திருந்தாள்.
“என்ன ரத்னா இது?” என்று தன் முகத்தில் மோதி கீழே விழுந்த தலையணையை எடுத்துக் கொண்டே கேட்டான்.
“ம்ம்… தலையணை… பார்த்தால் தெரியலை? ஏதாவது கனமா எடுத்து எறிவோம்னு தான் பார்த்தேன். ஆனா ஏற்கனவே உடைஞ்சிருக்கிற மண்டையை மேலும் உடைக்க வேண்டாம்னு தான் தலையணையோட நிறுத்திக்கிட்டேன்…” என்றாள் நக்கலாக.
அவளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவன், “நியாயமா பார்த்தால் நான் தான் உன் மேல கோபமா இருக்கணும். ஆனா இங்கே எல்லாம் தலைகீழ் நடக்குது…” என்றான்.
“உன் மேல தப்பை வச்சுக்கிட்டு நீ என் மேல கோபப்படுவியா?” என்று கேட்டாள்.
“என் மேலயும் தப்பு இருக்குத்தான். ஆனா அதை விட நீ செய்தது?” என்று கேட்டு நிறுத்தினான்.
“நான் என்ன செய்தேன்?”
“நீயும், செழியனும் காதலிப்பதாக என்னை நம்ப வச்சது தப்பு இல்லையா?”
“அது உன் பொறாமையைத் தூண்டி விட…” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல,
“உன்கிட்ட நான் ஒரு உண்மையை ஒத்துக்கிட்டே ஆகணும் ரத்னா…” என்று ஆரம்பித்தவனை யோசனையுடன் பார்த்தாள்.
“நீ சொன்னது சரிதான். எனக்கு, என் நிறம், தோற்றம், பெயர் எல்லாத்தைப் பற்றியும் தாழ்வு மனப்பான்மை இருக்கு…” என்றவனை முறைத்தாள் ரத்னா.
“முறைக்காதே ரத்னா! உண்மையைச் சில நேரம் பேசித்தான் ஆகணும். நீ நல்லா அழகா, ஏஞ்சல் போல லட்சணமா இருக்க. ஆனா நான்?” என்றவன் தன் உடலை சுட்டிக் காட்டினான்.
“என் கண்ணுக்கு நீ அழகாத்தான் தெரியுற ஆனந்தமானவனே…” என்று வேகமாகச் சொன்னவளைக் காதலுடன் பார்த்தான்.
“ஆனா உன் கண்ணுக்கு நான் அழகா தெரிவேன்னு எனக்குத் தெரியாதே. அதான் நீ செழியனை லவ் பண்ற மாதிரி என்கிட்ட காட்டிக்கவும், அவன் தான் உனக்குப் பொருத்தமா இருப்பான்னு எனக்குத் தோனுச்சு. அதான் உன்கிட்ட என் மனசைக் காட்டிக்காம விலகிப் போனேன்.
ஆனா நீ நினைச்ச மாதிரி உன் கூடச் செழியனை பார்க்கிறப்ப எல்லாம் எனக்குப் பொறாமை வந்துச்சு. ஆனா என்னால் அதை வெளிப்படையாகக் காட்டிக்க முடியலை. ஆனா உள்ளே ரொம்ப வலிச்சது…” என்று இதயத்தைத் தட்டிக் காட்டிச் சொன்னவன் குரல் மட்டுமில்லாமல் கண்களும் கலங்கியது.
கரடுமுரடான அந்த ஆண்மகன் கலங்கியதை பார்த்து அவனை மனதில் சுமந்து கொண்டிருப்பவளின் கண்களும் கலங்கின.
“ஆனந்தமானவனே…” என்றபடி அவள் அவனின் அருகில் வர,
“பக்கத்தில் வராதே ரத்னா!” என்று வேகமாகத் தடுத்து நிறுத்தினான்.
அவள் அதிர்வுடன் அப்படியே நின்று விட, “இப்ப நீ என் பக்கத்தில் வந்தால் எங்கே நான் கதறி அழுதிடுவேனோன்னு பயமா இருக்கு…” என்று உடைந்த குரலில் சொல்ல, முதலில் திகைத்தவள், அடுத்த நொடி ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் ரத்னா.
“ஏண்டா… ஏண்டா… இப்படி எல்லாம் பேசுற? சாரி… வெரி வெரி சாரி. உன்னை அழ வச்சுட்டேன். நீ பொறாமையில் ஏதாவது செய்வன்னு நினைச்சேனே தவிர, இப்படி நீ உடைந்து போவன்னு நான் எதிர்பார்க்கலை. சாரி…” என்று சொல்லிக் கொண்டே தன் அணைப்பின் மூலம் நான் உனக்குத் தான் என்று உணர்த்த முயன்றாள்.
அவளின் அணைப்பில் அடங்கியவன் கண்களும் கலங்கிப் போனது.
“உன் சாரிக்கு அவசியம் இல்லை ரத்னா. என்னைப் பேச வைக்கணும்னு நீயும் ஏதேதோ முயற்சி பண்ணிருக்கன்னு எனக்கும் புரியுது. ஆனா நீ அந்த முயற்சி செய்யலைனாலும் நான் என் காதலை நானா வந்து உன்கிட்ட சொல்லியிருக்க மாட்டேன் என்பது தான் நிஜம்…” என்றவனை விட்டு வேகமாக விலகி அவன் முகம் பார்த்தாள் ரத்னா.
அவளை இழுத்து மீண்டும் அணைத்துக் கொண்டவன், “என்னைத் தவறாக நினைக்காதே ரத்னா. உனக்கு நான் பொருத்தம் இல்லைன்னு இப்ப கூட என் மனசுல ஒரு உறுத்தல் இருக்கு. ஆனா உன்னை விட்டுக் கொடுக்கவும் என்னால் முடியலை…” என்றவன் தன் அணைப்பை இறுக்கினான்.
அதற்கு அவள் ஏதோ சொல்ல வர அதற்குள் அவனே மீண்டும் பேசினான்.
“உங்க இரண்டு பேரையும் ஜோடியா பார்க்கும் போதெல்லாம் அப்படியே சில்லுசில்லா நொறுங்கிப் போயிட மாட்டோமான்னு இருக்கும்.
ஆனாலும் ரத்னாவுக்குப் பிடிச்சவன் அவன் தான்னா நீ உன் ஆசையைக் குழி தோண்டி புதைத்து விடுவது தான் நல்லதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு விலகிப் போனேன்…” என்றான் கலக்கத்துடன்.
“நீ இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கவே தேவையில்லை ஆனந்தமானவனே, நீ என்னையும், செழியனையும் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்திருந்தாலே நாங்க இரண்டு பேரும் ஃபிரண்டாத்தான் பழகுறோம்னு நீ ஈசியா கண்டுபிடிச்சிருப்ப. அப்படி நீ கண்டுபிடிச்சிருவன்னு நானும் நினைச்சேன். கண்டு பிடிக்கணும்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.
ஆனா இந்தச் சிபிஐ சரியான மரமண்டை. இந்தத் தலைக்குள் யோசிச்சுக் கண்டுபிடிக்கிற அளவுக்கு ஒண்ணுமில்லைனு இப்பத்தானே தெரியுது…” என்று அவனின் தலையில் லேசாக அடித்தாள்.
அவளை விட்டு விலகியவன், “ஸ்ஸ்… ஆ…” என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.
“அச்சோ! சாரி, சாரி… தலையில் அடிப்பட்டிருப்பதை மறந்துட்டேன்…” என்று இதமாகப் பிடித்து விட்டாள்.
அவளின் கையை மென்மையாக பற்றிக் கொண்டவன், “உன் விஷயத்தில் என்னால் எதையும் யோசிக்க முடியலை ரத்னா…” என்றான்.
“அது தான் உன் தப்பு…” என்றாள் அவள்.
“அப்படி யோசிக்க முடியாததற்குக் காரணம் நீயும் தான்…” என்றான் அவன்.
“முன்னாடியாவது செழியன்கிட்ட பேசுற மாதிரியே என்கிட்டயும் பேசுவ. ஆனா செழியனை லவ் பண்றதாக என்கிட்ட காட்டிக்கிட்டப்ப என்னை விட்டு விலகித் தான் இருந்த. அவன் கிட்ட பழகுற அளவு ஃபிரண்ட்லியா கூட என்கிட்ட நீ பழகலை. அது எனக்கு வித்தியாசமா தெரிஞ்சது…”
“ஏன்னா நான் தான் உன்னை லவ் பண்ணினேனே…” என்றவளைப் புரியாமல் பார்த்தான்.
“செழியன் என் ஃபிரண்டுடா. அவன்கிட்ட எப்பவும் போல என்னால் பேசிப் பழக முடிந்தது. ஆனா நீ அப்படி இல்லையே?”
“ஏன் அப்படி? என்கிட்ட மட்டும் அப்படிப் பழக முடியலை?”
“ம்ம்.. உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன். ஃபிரண்ட்கிட்ட ஃபிரண்ட்லியா பழகலாம். ஆனா லவ்வர்கிட்ட அப்படிப் பழக முடியுமா? எனக்கும் வெட்கம் வராதா?” என்று கொஞ்சலாகச் சொன்னவள் அவனின் தோளின் மீதே தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
“அட! என் ரத்னாவுக்கு வெட்கமா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட ஆனந்த், அவளின் முகத்தை நிமிர்த்திப் பார்க்க முயன்றான்.
“ச்சு, போ…” என்று வெட்கத்துடன் சிணுங்கியவளைத் தன்னுடன் நிம்மதியுடன் அணைத்துக் கொண்டான் முருகானந்தம்.
“எனக்கு இப்போ எவ்வளவு நிம்மதியா இருக்குத் தெரியுமா? நான் விரும்புற பொண்ணு, என்கிட்ட எந்தக் குறையும் பார்க்காம என்னையும் விரும்புது…” என்று மனநிறைவுடன் சொன்னான்.
“சும்மா, சும்மா உன்கிட்ட குறை இருக்கு. தாழ்வு மனப்பான்மை இருக்கு, அது இதுன்னு உளறாதே ஆனந்தமானவனே. நீயும் சரி உன் மனசும் சரி ரொம்ப ரொம்ப அழகானது.
தான் காதலிக்கிற பொண்ணு வேற ஒருத்தனை லவ் பண்றாள்னு தெரிஞ்சா அவளோட மனசை பார்க்காம குத்திக் கொல்றதும், அவள் முகத்தில் ஆசிட் ஊத்துவதுமாக இருக்குற காலம் இது. ஆனா, நீ உன் வலியை மறைச்சுக்கிட்டு விலகித்தான் போன. ஏன்னா நீ அவ்வளவு நல்லவன்…” என்றாள்.
மேலும் அவர்கள் இத்தனை நாட்கள் பேசாததற்கும் சேர்த்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ரொம்ப நேரம் ஆச்சு ரத்னா, செழியன் அல்லிக்கிட்ட பேசி முடிச்சிருப்பான். வா, வெளியே போவோம்…” என்று இருவரும் வெளியே வந்தனர்.
தங்கள் பக்கம் அனைத்தும் தெளிவானது போல், செழியன் பக்கமும் எல்லாம் சரியாகியிருக்கும் என்று நினைத்தபடி வெளியே வந்த அந்தக் காதலர்களுக்கு, வருத்தமும், வேதனையும் கலந்த முகத்துடன் தலையை அழுத்தமாகப் பிடித்தவண்ணம் தனியாக அமர்ந்திருந்த அவர்களின் நண்பன் மட்டுமே அங்கே காணக் கிடைத்தான்.