மனம் கொய்த மாயவனே – 35

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 35

ஆனந்தின் நெற்றிப்பொட்டில் வைத்திருந்த துப்பாக்கியின் விசையை அழுத்த சென்ற வெற்றிமாறன், கடைசி நொடியில் விசையிலிருந்து விரலை எடுத்துக் கொண்டான்.

“உனக்குக் கடைசிச் சான்ஸ் செழியா. ஒழுங்கா நீயும், உன் ஆளுங்களும் இங்கிருந்து போயிடுங்க. இல்லனா உன் ஃபிரண்ட் பொணத்தைத் தான் நீ தூக்கிட்டுப் போகணும்…” என்று மிரட்டினான்.

“இவன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாதே செழியா. நான் செத்தாலும் பரவாயில்லை. இவனைப் பிடிச்சுட்டு இவனோட தான் நீ இந்த இடத்தை விட்டுப் போகணும்…” என்றான் ஆனந்த்.

“திமிர்! ம்ம்… திமிர்!” என்றவன் ஆத்திரத்துடன் ஏற்கனவே காயம் பட்டிருந்த ஆனந்தின் நெற்றியில் ஓங்கி அடித்தான் வெற்றிமாறன்.

அதில் ஆனந்த் வலி தாங்க முடியாமல் குனிந்து அமர்ந்தான்.

“டேய்!” என்று கத்திய செழியன், “அப்படிச் சொல்லாதே ஆனந்த். எனக்கு நீயும் முக்கியம்…” என்று நண்பனிடம் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு என இருக்கும் சங்கேதமொழி ஒன்றை கணநேரத்தில் ஆனந்திடம் பகிர்ந்து கொண்டான்.

அதைப் புரிந்து கொண்ட ஆனந்த், மேலும் பேச்சை வளர்க்க முடிவு செய்தான். அதே நேரத்தில் வெற்றியைத் தாக்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்.

“என்னை அடிச்சாலும் சரி, கொன்னாலும் சரி இங்கேயிருந்து நீ தப்பிக்கவே முடியாது வெற்றிமாறா…” என்று ஆனந்த் சொன்ன மறுநிமிடம், வெற்றிமாறனின் ஆக்ரோஷம் அதிகரித்தது.

“உன்னை எல்லாம் அப்படியே போட்டுத் தள்ளிட்டுப் போய்ட்டே இருக்கணும்டா. என் இடத்துக்கே வந்து, எனக்கே உன் மேல நம்பிக்கை வர வைச்சு, என் பக்கம் வேலை பார்த்துட்டே வேவு பார்த்த உன்னை எல்லாம் கொல்லணும்டா…” என்றான் ஆத்திரமும் கோபமுமாக.

“அவனை நீ கொல்ல மாட்ட வெற்றிமாறா. ஏன்னா இப்போ உன் உயிரே ஆனந்த் கையில் தான் இருக்கு. நீ இப்போ அவனைக் கொன்னா அடுத்த நிமிஷம் நான் உன்னைப் போட்டுத் தள்ளிடுவேன். உன் உயிரை காப்பாத்திக்கணும்னா அவனை நீ கொல்லாமல் இருப்பது தான் உனக்கு நல்லது…” என்றான். வெற்றிவேற்செழியன்.

“கொன்னு தான் பாரேன்…” என்று அலட்சியமாகச் சொன்னான் முருகானந்தம்.

“உன்னை…” என்று ஆத்திரமாகக் கத்திய வெற்றிமாறன், மீண்டும் ஆனந்தை தாக்கப்போனான்.

அதில் வெற்றிமாறனின் கவனம் சிதறிக் கொண்டிருந்தது. அவனின் கோபத்தைத் தங்களின் ஆயுதமாக மாற்ற முயன்ற செழியன் இங்கே உன்னிப்பானான். அவனின் கண்கள் சுற்றிலும் ஒருமுறை வலம் வந்தன.

ஆனந்த் பணய கைதியாக மாட்டிக் கொண்டிருந்ததால் செழியனுடன் வந்த அவனின் குழு அதுவரையில் தயங்கி நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு எல்லாம் கண்களால் சமிக்ஜை கொடுத்த செழியன் அவர்களை அலர்ட் ஆக்கினான்.

சரியாகச் சரக்கு எடுக்கச் சென்ற நேரத்தில் தன் ஆட்கள் மாட்டிக் கொண்டார்கள் என்றதுமே வெற்றிமாறனுக்கு முதலில் கிரி மீதும், முருகன் மீதும் தான் சந்தேகம் வந்தது. முதலில் கிரியை நோட்டமிட்டவன், பின் முருகனை நோட்டமிட்டான்.

ஆனாலும் முருகன் மேல் சந்தேகப்பட முடியாதவாறு அவனின் நடவடிக்கை இருந்தது.

ஆனாலும் சில மாதங்களுக்கு முன் அவனிடம் பணியில் சேர்ந்தவன் முருகன் தான் என்பதால் அவனின் மற்றொரு நம்பிக்கையான ஆள் மூலம் முருகனைப் பற்றி விசாரிக்கச் சொன்னான்.

அதோடு தன் ஆட்களைப் பிடித்தவர்கள் போலீஸ் போல் இல்லை என்று கிரி சொன்னது அவனின் மனதை நெருடியது.

போலீஸ் இல்லை என்றால் வேறு யார் என்ற கேள்விக்குப் பதில் தேட முயன்றான்.

வெற்றிமாறனுக்கு அனைத்து உயர்மட்ட இடத்திலும் ஆட்கள் உண்டு. அதனாலேயே பல முறை போலீஸிடமிருந்து தப்பியிருக்கிறான்.

செழியன், வெற்றிமாறன் கேஸை கேட்டு வாங்கிய அதே நேரம் அதை ஒரு ரகசிய கேஸாகப் பார்த்துக் கொள்ளும் படி அவனின் உயர் அதிகாரியிடம் கோரிக்கை வைத்திருந்தான்.

அதனால் வெற்றிமாறனுக்குச் சிபிஐ குழு தன்னைப் பிடிக்கத் தன்னிடமே வேலைக்கு ஆள் அனுப்பியிருக்கிறது என்று தெரியாமல் போனது.

முருகன் மேல் சந்தேகம் வந்ததும் வெற்றிமாறன் அடுத்தடுத்து விசாரிக்க, அவனின் ஆட்களைப் பிடித்தது சிபிஐ குழு என்ற தகவல் மட்டுமே முதலில் அவனுக்குக் கிடைத்தது.

ஆனாலும் முருகனை பற்றி விசாரித்ததிலேயே மேலும் சில விவரங்கள் கிடைக்க வெற்றிவேற்செழியனை பற்றிய தகவலும் அவனுக்குத் தெரிய வந்தது.

வெற்றிவேற்செழியன் தான் தன்னைப் பிடிக்கக் காத்திருக்கும் சிபிஐ அதிகாரி என்று தெரிந்தே தான் துணிந்து இன்று சரக்கை அவனே எடுக்க வந்திருந்தான்.

இத்தொழிலில் பலம் தின்று கொட்டை போட்டவனான வெற்றிமாறனுக்கு முடிந்தால் ‘என்னைப் பிடித்துப் பாரடா’ என்று வெற்றிவேற்செழியனுக்குச் சவால் விடும் எண்ணமும், அதையும் மீறி தான் மாட்டிக் கொண்டால், இத்தனை நாட்கள் தன்னிடம் நடித்த ஆனந்த் மூலமே தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள, துணிந்து சரக்கை எடுக்க வந்திருந்தான்.

எத்தனை விவரமான, விவேகமான ஆளாக இருந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் தன் பலவீனத்தை வெளியிட்டே தீருவான் என்பது வெற்றிமாறன் விஷயத்தில் சற்று நேரத்தில் உறுதியானது.

முருகன் தன்னிடம் மாட்டிக் கொண்டிருக்கிறான் என்ற லேசான அவனின் அசட்டையே அவனுக்கு அந்த நேர பலவீனம் ஆனது.

வெற்றிவேற்செழியனின் கண்ணசைவில் அவனின் குழுவினர் அலர்ட் ஆக, அதே நேரத்தில் நண்பனின் மீது தன் சிறு கவனத்தை வைத்திருந்த ஆனந்த் அவன் சொன்ன ஜாடையைப் புரிந்து கொண்டு வெற்றிமாறன் எதிர்பாரா விதமாகச் சட்டென்று தரையில் உருண்டு படுத்தான்.

அத்தனையும் செழியனின் கண்ணசைவில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து கொண்டிருந்தது.

அவன் ஏன் உருளுக்கிறான் என்று புரியாமல் வெற்றிமாறன் நடப்பதை உணர்ந்து சுதாரிக்கும் முன் அவனின் காலில் தோட்டா பாய்ந்து துளைத்தது.

அவனின் காலில் தோட்டாவை பாய்ச்சிய அடுத்த நொடி அவன் மேலும் செயல்படாத வண்ணம் அவனின் மீது பாய்ந்தான் செழியன்.

அவனின் தாவாகட்டையில் தன் கைமுட்டியால் ஓங்கி அடித்துப் பதம் பார்த்த அதே நேரத்தில் துப்பாக்கி இருந்த வெற்றிமாறனின் கையைச் செயல்படுத்த விடாமல் செய்திருந்தான்.

அடுத்தடுத்து மேலும் அவன் சுதாரிக்காத வண்ணம் செழியன் அவனைத் தொடர்ந்து தாக்க ஆரம்பித்தான்.

அவனுடன் ஆனந்தும் இணைந்து கொள்ள, இருவருக்கும் இணையாக வெற்றிமாறன் அவர்களிடம் போராடினான்.

ஆனால் ஏற்கனவே காலில் குண்டு பாய்ந்திருந்த நிலையில் வெற்றிமாறனின் பெலன் குறைய அந்த நேரத்தை சரியாக உபயோகித்துக் கூடைக்குள் மாட்டிய கோழியாக வெற்றிமாறனை சிறைப்பிடித்தான் வெற்றிவேற்செழியன்.

“என்னைப் பிடிச்சா என்னால் வெளியே வர முடியாதுன்னு நினைச்சீங்களாடா?” என்று அந்த நேரத்திலும் துள்ளினான் வெற்றிமாறன்.

“நீ வெளியே வர முடியாம செய்யணும்னு தானேடா வலுவான ஆதாரத்துக்கு இத்தனை நாள் காத்திருந்தோம். உனக்கு எதிரான பல சாட்சிகள் எங்ககிட்ட இருக்கு. அதோட கையும் களவுமா சரக்கோட பிடிப்பட்டுருக்க. இனி உன் ஆயுசுக்கும் வெளியே வர முடியாது…” என்ற செழியன் அவனைக் கைது செய்து வண்டியில் ஏற்ற, அவனின் கண்ணசைவில் செயல்பட்ட அவனின் குழுவினர் வெற்றிமாறன் ஆட்கள் அனைவரையும் மடக்கிப் பிடித்து வண்டியில் ஏற்றினர்.

அதோடு வெற்றிமாறனுக்கு உதவியாக இருந்த ஹார்பரில் இருந்த அதிகாரிகளையும் தகுந்த ஆதாரத்துடன் கைது செய்தான் வெற்றிவேற்செழியன்.


“வெல்டன் வெற்றிவேற்செழியா! வெற்றிமாறனை சரியாக லாக் செய்து பிடித்து வெற்றி அடைந்து விட்டீங்க. ஐ’ம் ப்ரெளட் ஆஃப் யூ!” என்று அவன் தோளில் தட்டி வாழ்த்தினார் அவனின் உயரதிகாரி சுதாகர்.

“தேங்க்யூ சார். இந்தக் கேஸை நடத்த நீங்க எனக்குப் பெர்மிஷன் கொடுத்ததால் தான் சார் இது சாத்தியம் ஆச்சு…” என்றான் வெற்றிவேற்செழியன்.

“உங்க திறமையை சரியா இந்தக் கேஸில் பயன்படுத்தியிருக்கீங்க செழியா. வெரிகுட்! இன்னைக்கே கேஸ் டீடைல்ஸ் சம்மிட் பண்ணிடுங்க…” என்றார்.

“எஸ் சார்…” என்றவன் அவரிடம் விடைப்பெற்றுக் கொண்டான்.

வெளியே வந்தவன் நேராக ஆனந்திடம் சென்றான்.

“தலை இன்னும் வலிக்குதா ஆனந்த்?” என்று விசாரித்தான்.

“இப்போ ஓகே செழியா…” என்ற ஆனந்த்,

“ஆமா இப்போ நான் உன்னை எப்படிக் கூப்பிடணும்? வெற்றி என்றா? செழியன் என்றா?” என்று குறும்பாகக் கேட்டான்.

“ஹாஹா… வெற்றியா இருக்கும் போது வெற்றின்னு கூப்பிடு முருகா. செழியனா இருக்கும் போது செழியன்னு கூப்பிடு ஆனந்த்…” என்று சொல்லி கண்களைச் சிமிட்டி அட்டகாசமாகச் சிரித்தான் வெற்றிவேற்செழியன்.

★★★

“வெற்றிமாறன்! ஆரம்பத்தில் சாதாரணத் தொழில் செய்து வந்தவன். ஒரு கட்டத்தில் போதை பொருள் கைமாற்றும் வேலை பார்க்க ஆரம்பித்தான்.

அதன் மூலம் வந்த அதிகப் பணம் அவனை அந்தத் தொழிலை நிரந்தரமாகச் செய்ய வைத்து, பின் பெரிய அளவில் வளர்ந்து அவனே போதை பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டவன்.

அவன் தொழில் வளரவளர, போலீஸிலிருந்து தப்பிக்கும் மார்க்கங்களையும் வளர்த்துக் கொண்டவன்.

ஆரம்பத்தில் அவனே போதை பொருட்களை வாங்க சென்றவன், பின் தன் ஆட்களை மட்டும் அனுப்பி வைக்க ஆரம்பித்தான். அதனால் வெற்றிமாறன் தன் அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டவன்.

அதனால் போலீஸில் மாட்டிக் கொண்டாலும் அவனின் ஆட்கள் தான் மாட்டிக் கொண்டனர்.

அவர்களையும் போலீஸ் பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்து விடுவதையும், அப்படி அவர்களைக் கொண்டு வர முடியாத நிலையில் அவர்களைக் கொன்று விடுவதையும் சர்வசாதாரணமாகச் செய்பவன்.

அவனின் செயல்களை எல்லாம் தன்னைத் திரையின் மறைவில் மறைத்துக் கொண்டே செய்தானே தவிர வெளியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை…”

“அப்படிப்பட்டவனை எப்படிப் பிடிப்பது? என்ற கேள்வியுடன் இந்தக் கேஸை கையில் எடுத்தேன்…” என்று தன்னுடன் வேலை பார்த்த குழுவினருடன் அவனின் உயர் அதிகாரி சுதாகரிடம் வெற்றிமாறனின் வழக்கு சம்பந்தமான அறிக்கையைச் சமர்பித்துக் கொண்டிருந்தான் வெற்றிவேற்செழியன்.

“என் வீட்டுப் பொண்ணு ட்ரக்ஸ் யூஸ் பண்ணி மன உளைச்சலில் தற்கொலை பண்ணிக்கிட்டது இங்கே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்…” என்று சொன்ன போது அவனின் குரலில், லேசான குன்றலும், கமறலும் வந்தது.

பின் சுதாரித்துத் தன்னைச் சமாளித்துக் கொண்டவன் “அவளுக்கு எப்படி ட்ரக்ஸ் கிடைச்சதுன்னு தேடிய போது தான் அவளோட காலேஜ் ஃபிரண்ட் சந்துரு பற்றித் தெரிய வந்தது.

அவன் ட்ரக்ஸ் மட்டுமில்லாமல் சில பொண்ணுங்களை ஏமாத்தி வீடியோஸ் எடுத்து வச்சிருந்ததும் தெரிய வந்து அதைத் தனிக் கேஸா பைல் பண்ணிருக்கேன். அவன் இப்போ சிறையில் இருக்கான்.

அவன் மூலமாத்தான் காலேஜ் பக்கத்தில் ட்ரக்ஸ் விக்கிறவனைப் பிடிச்சோம். அவன் எங்கிருந்து ட்ரக்ஸ் கொண்டு வர்றான்னு தேடிப் போன போது தான் இது சங்கிலி தொடராக நடப்பதாகத் தெரிய வந்தது.

சில்லரை வியாபாரிகளைப் பிடித்ததில் அது முடிந்த இடம் போதை பொருள் வாங்கிப் பல பிரிவுகளாகப் பிரித்து மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைக்கும் வெற்றிமாறனிடம்.

அவன் சாதாரண டீலரா மட்டும் இருக்க மாட்டான் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அவனைப் பற்றிய தகவல் திரட்ட திரட்ட அது உறுதியும் ஆனது.

அவனுக்கு ஒரு குறிப்பிட்ட பழக்கம் இருக்கு. அது அவனின் ஆட்கள் மூலம் வரும் காலேஜ் ஸ்டுடண்டை அப்பப்போ தன் கண் முன்னால் வரவைத்து, அவர்கள் ட்ரக்ஸ் கேட்டுக் கெஞ்சுறதை பார்த்து ரசிக்கிறது தான். இது நம்ம ஆனந்த், முருகன் என்ற பெயரில் அங்கே இருந்த போது நோட் பண்ணி சொன்னது…”

“ஆனந்த் என்ற முருகானந்தத்தை எப்படி வெற்றிமாறன் கிட்ட வேலைக்கு அனுப்பி அவனை ஆனந்தை நம்பும் படியா செய்தீங்க செழியன்?” என்று கேட்டார் சுதாகர்.

“வெற்றிமாறன் பற்றி நிறையச் சாட்சியங்கள் கலெக்ட் பண்ணவும், ஆளை மட்டுமே பயன்படுத்திச் சரக்கை வாங்குறவனை வெளியே வர வைக்கவும் நாங்க தள்ளி இருந்தால் செயல்படுத்த முடியாதுன்னு எனக்கும், ஆனந்துக்கும் புரிந்தது. அதனால் அவன் இருக்குற இடத்துக்கே போய் அவனை மடக்கணும்னு முடிவு பண்ணினோம்.

ஆனா அது உடனே முடியக் கூடிய காரியம் இல்லை. அதுக்கு முதல் கட்டமா வெற்றிமாறனின் வீடு இருக்கும் அடுத்தத் தெருவில் குடியிருக்க முடிவு செய்தோம். அந்தத் தெருக் குடிசை வாழ் மக்கள் இருக்கிற தெருவாக இருந்தது.

அவன்கிட்ட வேலை செய்யும் சிலரின் வீடுகளும் அந்தக் குடிசைப் பகுதியில் தான் இருக்கு. அந்தப் பகுதியில் தங்கணும்னா அதுக்குத் தகுந்த மாதிரி நாங்களும் வேலை பார்க்கணும் என்ற முடிவில் ரோட்டோரம் மலிவு விலை துணி விக்கிறவங்களா எங்களைக் காட்டிக்கிட்டோம்…” என்ற செழியன் ஒரு நொடி அந்த இடத்தில் பேச்சை நிறுத்தினான்.

அவனின் மனம் மானசீகமாகச் சில நினைவுகளைக் கொண்டு வர முயல, தலையை உலுக்கி அதை உதறியவன் மேலும் விவரம் சொல்ல ஆரம்பித்தான்.

“சாதாரண வியாபாரிகள் என்று சொல்லி அந்த ஏரியாவில் எங்கள் முழுப்பெயர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வெற்றி என்ற பெயரில் நான் ஒரு குடிசையிலும். முருகன் என்ற பெயரில் ஆனந்த் ஒரு குடிசையிலும் தங்க முடிவு செய்தோம்…” என்றான்.

“ஏன் அப்படிச் செழியா? இரண்டு பேரும் ஒரே இடத்தில் தங்கியிருக்கலாமே?” என்று கேட்டார்.

“இல்லை சார், எங்க திட்டமே ஒரு ஆள் வெற்றிமாறன்கிட்ட வேலை பார்க்கணும். ஒருத்தர் வெளியே இருந்து வெற்றிமாறன் கண்ணில் மண்ணைத் தூவி வேலை பார்க்க வேண்டும் என்பது தான். அதுக்கு நாங்க தனிதனியா இருப்பது தான் நல்லதுன்னு முடிவு பண்ணி அதைச் செயல்படுத்தினோம்.

“முதலில் நான் தான் வெற்றிமாறன்கிட்ட வேலைக்குச் சேர்வதாக இருந்தது. ஆனா ஆனந்த் நீ வெளியே இருப்பது தான் சரியா இருக்கும். நான் அவன்கிட்ட வேலைக்குப் போறேன்னு சொல்லி அவன் போனான். ஆனந்த் அங்கே முருகனாகச் சென்று வேலைக்குச் சேர உதவியது காளி…”

“அவன் ஒரு குற்றவாளி தானே செழியா?”

“யெஸ் சார், போதை மருந்து விற்பனையில் பிடிபட்ட ஒருத்தன் தான் காளி. அப்ரூவரா மாறுகிறேன்னு சொன்னவனை எங்க வேலைக்கு யூஸ் பண்ணிக்கிட்டோம். அவனுக்கு வெற்றிமாறனைப் பற்றித் தெரிந்திருந்தது. சோ அவன் மூலமாக முருகன் உள்ளே சென்றான். சில மாதங்கள் அவனிடம் வேலை செய்து அவனிடம் தகவல் திரட்ட முடிவு செய்தோம்.

நாங்க பஜாரில் துணி விக்கிறவங்களாகக் காட்டிக்கிட்டதுக்கு இன்னொரு காரணம் வெற்றிமாறனின் கடை அந்தப் பஜாரில் தான் இருந்தது…”

“கடையா? என்ன கடை?”

“அவன் வெளியே தன்னைச் சாதாரணமா காட்டிக்கிட்டான்னு சொன்னேனே சார். அப்படி அவன் காட்டிக்கப் பயன்படுத்தியது தான் அந்தக்கடை. அது ஒரு மரக்கடை. அதுவும் வெளிப்பார்வைக்கு மட்டும் தான். அதன் அடுத்தப் பக்கம் போதை மருந்து கை மாத்துறதுக்கும் பயன்படுத்திக்கிறாங்க…”

“வெற்றிமாறன் வீட்டுப்பக்கம் செக் பண்ணியதில் அவனோட தொழில் எதையும் அவன் வீட்டில் வைத்துக் கொள்வது இல்லை. அதற்கு என்று வேற ஒரு ஏரியாவில் வீடு வச்சுருக்கான். பொண்ணு பழக்கம், பசங்களை வரவைத்து கெஞ்ச வைத்து ரசிப்பது எல்லாத்துக்கும் அந்த வீடு தான் யூஸ் பண்றான். அது போகத் தன்னோட ஆளுங்களோட மீட்டிங் போடவும் அந்த வீடு தான் பயன்படுத்துறான்.

ஆனந்த், முருகனா அங்கே நடப்பதை நோட் பண்ணி சொல்ல, நான் வெளியில் இருந்து அதுக்கான சாட்சியங்களைத் திரட்டினேன். முருகன் உள்ளே இருந்ததால் அவனோட ஆள் மாதிரியே போதை மருந்து கை மாத்துறதும் கட்டாயமா இருந்தது.

அதனால் அவனால் எனக்குத் தகவல் மட்டுமே கொடுக்க முடியும். அவன் தகவல் கொடுத்ததும், எங்கே வைத்துக் கை மாத்துறாங்க, யார்கிட்ட மாத்துறாங்க என்று பின்னணியில் இருந்து வீடியோ, போட்டோ எடுத்து தகவல் திரட்டினேன்.

அப்படிப் போனப்ப ஒரு முறை என்னை ஒருத்தன் நோட் பண்ணிட்டான். இந்த நேரத்தில் நான் பிடிபட்டால் வெற்றிமாறனை பிடிக்கும் காரியமே கெட்டுப் போகும்னு அங்கிருந்து தப்பிச்சு வந்துட்டேன். அப்போ எனக்குச் சின்னக் காயமும் பட்டது…” என்றவன் பேச்சு மீண்டும் தடைப்பட்டு நின்றது.

தண்ணீரை எடுத்து ஒரு மிடறு பருகிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“ஆனந்த் அங்கே வேலைக்குச் சேர்ந்த பிறகு ஒரு முறை ஹார்பர்ல இருந்து சரக்கை எடுத்தான் வெற்றிமாறன். அப்போத்தான் யார் யார் அங்கே உள்ள அதிகாரிகள் வெற்றிமாறனுக்கு உடந்தைன்னு தெரியவந்தது.

இரண்டாவது முறை சரக்கு வரும் போது வெற்றிமாறனையே வரவைத்துப் பிடிக்கத் திட்டம் போட்டோம்.

அதற்கு முதல் கட்டமா ஆனந்த் எனக்கு எந்த டைம் சரக்கு எடுக்கப் போவோம்னு தகவல் கொடுத்தான். அந்த நேரம் சரியா நம்ம ஆளுங்க கூடப் போய் வெற்றிமாறன் ஆளுங்களைச் சுத்தி வளைச்சு பிடிச்சோம்.

வெற்றிக்குச் சந்தேகம் வரக் கூடாதுன்னு ஆனந்த் நெற்றியில் காயம் ஏற்படுத்தினோம். அதோட எங்களுக்கு உதவி செய்த காளியை அவன் கண்டுபிடிச்சிட கூடாதுன்னு அவனையும் கைது செய்தோம்.

இத்தனை வேலை செய்தும் வெற்றிமாறன் அவனே சரக்கு எடுக்க வருவானா, வர மாட்டானா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் அவனுக்கு எங்கள் மேல் சந்தேகம் வந்துருச்சு. ஆனாலும் இவனுங்க நம்மை என்ன செய்ய முடியும் என்ற அலட்சியமும், லட்சக்கணக்கான பெறுமானம் உள்ள சரக்கை ஹார்பரில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என்ற கட்டாயமும் அவனை வர வைத்தது.

முருகானந்தத்தைச் சிபிஐ ஆபீசர் என்று கண்டுபிடித்து விடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எப்படியும் அவனின் சந்தேகம் ஆனந்த் பக்கம் திரும்பவும் செய்யலாம் என்று சற்று அலர்ட் ஆகவே இருந்தோம். எங்கள் முன்னெச்சரிக்கை அவனைப் பிடிக்க உதவியது…” என்று சொல்லி முடித்தான்.

“குட் ஜாப், வெற்றிவேற்செழியா அண்ட் முருகானந்த். உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள்…” என்று இருவரையும் மட்டுமில்லாது அவர்களின் குழுவினரையும் பாராட்டினார் சுதாகர்.

“நன்றி சார்…” என்று அவரின் பாராட்டை ஏற்றுக் கொண்டனர்.

“இத்தனை விஷயம் அவர்கிட்ட சொன்ன நீ, ஒரே ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டியே டா…” என்று செழியனின் அருகிலிருந்த ஆனந்த் முணுமுணுத்தான்.

“என்ன விஷயம் ஆனந்த்?”

“ம்ம்… இத்தனை கலவரத்திலும் நீ தனியா ஓட்டினயே ஒரு லவ் பிலீம். அதுதான்…” என்றான் நக்கலாக.

அவன் அதைச் சொன்னதும். செழியனின் உதட்டோரம் புன்னகையால் லேசாகத் துடித்தது.

“மவனே, அவருக்கு அதுக்கு விளக்கம் சொல்றியோ இல்லையோ எனக்குச் சொல்லியாகணும்டா. ஒரே நேரத்தில் இரட்டை குதிரை ஓட்ட நினைச்சவன் தானே நீ…” என்று கடுப்பாகச் சொன்னான்.

“ச்சீ, உளராதேடா ஆனந்த். இதுக்குக் கண்டிப்பா உனக்கு விளக்கம் சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் வேற ஒருத்திக்கு விளக்கம் சொல்லியாகணும்…” என்ற வெற்றிவேற்செழியனின் கண்கள் காதலியை நினைத்துக் குறும்பாக மின்னின.


காவல்நிலையத்திற்குள் நுழைய போனவள் “அல்லி…” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுப் பின்னால் திரும்பி பார்த்தாள் அல்லிராணி.

“உன்கிட்ட பேசணும். இங்கே வா…” என்று அழைத்தவளை விழிகள் விரிய பார்த்தாள்.

“நீயா? நீ வெற்றி வீட்டுக்கு வந்த பொண்ணு தானே?”

“ஆமா…”

“நீ என்கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு?”

“நிறைய இருக்கு. முதலில் இங்கே இருந்து வா. அந்த நிறைய என்ன என்பதைச் சொல்றேன்…”

“இல்லை. நான் வர மாட்டேன். நான் வெற்றி பத்தி இங்கே கம்ளைண்ட் கொடுக்கணும்…” என்று பிடிவாதமாகச் சொன்ன அல்லி, மீண்டும் காவல்நிலையத்தின் பக்கம் திரும்ப, அவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.

“அட நல்லவளே! நான் சொல்றதை முதலில் கேளு. நீ கம்ளைண்ட் கொடுத்தாலும் இங்கே எடுத்துக்க மாட்டாங்க…”

“ஓ! போலீஸையே சமாளிச்சுட்டுத் தான் அவன் அந்த வேலை பார்க்கிறானா?” என்று எகத்தாளமாகக் கேட்டாள் அல்லிராணி.

“நான் சொன்னதுக்கு அது அர்த்தமில்லை. நீ நினைக்கிற மாதிரி வெற்றி இல்லைன்னு சொல்றேன்…”

“அதான் அன்னைக்கே சொன்னியே. வெற்றி நான் நினைக்கிற மாதிரி சாதாரண ஆள் இல்லைன்னு. அதுக்குப் பிறகு தானே அவன் சுயரூபமே எனக்குத் தெரிய வந்தது…” என்றாள் அல்லி.

“இப்பயும் அதே தான் சொல்றேன். நீ நினைக்கிற மாதிரி வெற்றி சாதாரண ஆள் இல்லை தான். ஆனா அதுக்கு அர்த்தம் வேற…” என்றவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

“என்ன சொல்ற நீ?”

“உன் எதிர் வீட்டிலிருக்கும் வெற்றி, நீ நினைக்கிற மாதிரி போதை மருந்து கடத்துறவன் இல்லை. அவன் வேலையே வேற…”

“வேற என்ன வேலை?” என்று அதிர்ச்சியும், குழப்பமும் சந்தேகமுமாகக் கேட்டாள்.

“வெற்றியோட பெயர் வெறும் வெற்றி மட்டுமில்லை. அவனின் முழுப்பெயர் வெற்றிவேற்செழியன். அவன் ஒரு சிபிஐ ஆபிஷர்…” என்று அல்லியின் எதிரே இருந்த ரத்னா சொன்ன நொடியில் அல்லிராணியின் வாய் ஆச்சரியத்தில் பிளந்து கொண்டது.

கண்கள் அதிர்ச்சியில் விரித்தன.

“என்ன?” நம்பவே முடியாமல் கேட்டாள்.

“ம்ம் நம்பு அல்லி. சிபிஐ ஆபீசர் வெற்றிவேற்செழியன் தான் அவன்…” என்றாள் ரத்னா.