மனம் கொய்த மாயவனே – 32

அத்தியாயம் – 32

“செழியா, வெற்றி கேஸ் இன்னும் நம்ம கைக்கு வரலையே?” என்று கேட்டான் ஆனந்த்.

“சுதாகர் சார் கொஞ்சம் டைம் ஆகும்னு சொல்லியிருக்கார் ஆனந்த்…”

“அப்ப அதுவரை நாம என்ன செய்யப் போறோம்?” என்று ஆனந்த் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,

“ஹான், மட்ட மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பாருங்க…” என்று நக்கலாகச் சொல்லிக் கொண்டே அங்கே வந்தாள் ரத்னா.

“ஏய், என்ன நக்கலா?” என்று கோபமாக ஆரம்பித்த ஆனந்த் சட்டென்று தன் வாயை மூடிக் கொண்டு அமைதியாகி விட்டான்.

அவள் இப்போது தன்னுடைய தோழி மட்டுமல்ல. நண்பனின் காதலியும் கூட. அப்படியிருக்கத் தான் முன் போல் உரிமை எடுத்துப் பேச முடியாது என்று நினைத்தவன் அமைதியாகி விட்டான்.

அவளின் பேச்சில் செழியனுக்கும் கோபம் வந்திருக்க, ஆனந்த் அமைதியானதை உணராமல், “ரத்னா…” என்று அதட்டி அழைத்தான்‌.

“வெற்றி கேஸ் எவ்வளவு முக்கியமானதுனு தெரியும்ல? பல மாணவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியா ஆக்கிக் கொண்டு இருக்கான். இன்னும் அவன் கேஸ் எங்க கைக்கு வரலையேனு நாங்களே டென்ஷன்ல இருக்கோம். அப்படியிருக்கும் போது என்ன விளையாட்டு பேச்சு இது? நீ ஒரு சிபிஐ ஆபிஷர்னு தான் பேரு. ஆனா பேசுறது பூரா சில்லித்தனமாத்தான் இருக்கு…” என்று அதட்டினான் செழியன்.

“சிபிஐ சில்லித்தனமா பேசக் கூடாதுன்னு எந்தச் செக்ஷன்ல சட்டம் போட்டுருக்காங்க?” என்று மேலும் வாயடித்தவளை முறைத்தான்.

“விளையாட்டுப் பேச்சுப் போதும் ரத்னா. இப்ப நீ இப்படிப் பேசுறது கடுப்பா இருக்கு…” என்று செழியன் இன்னும் அதட்டினான்.

அவனின் அதட்டலில் முகம் சுருக்கியவள், “ரொம்ப டென்ஷனா இருக்கீங்கன்னு கூல் பண்ணத்தான் இப்படிப் பேசினேன்…” என்று முனங்கியவள், அங்கிருந்து சென்றாள்.

“ரொம்ப ஹார்ஷா பேசிட்ட போலச் செழியா. ரொம்ப வருத்தமா போறாள்…” என்றான் ஆனந்த்.

“போகிறாள் விடு…”

“போய்ச் சமாதானம் பண்ணு செழியா…” என்று ஆனந்த் சொல்ல, செழியன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவனின் முகத்தையும், சென்ற ரத்னாவையும் பார்த்த ஆனந்த், “செழியா, நான் ஒன்னு கேட்கலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டான்.

“என்ன ஆனந்த், எதுக்கு இவ்வளவு தயக்கம்? கேளு…”

“நீயும், ரத்னாவும் லவ் பண்றீங்கனு தெரியும். ஆனா இப்பவும் நான் பல நேரம் சட்டுன்னு அவளை ஸாரி ரத்னாவை பழக்கத்தோஷத்தில் ஒருமையில் பேசிடுறேன். அதில் என் மேல உனக்கு எதுவும் வருத்தம் உண்டா?” என்று கேட்டான்.

அவனுக்குப் பதில் சொல்லாமல் அவனைக் கூர்மையாகப் பார்த்தான் செழியன்.

“என்ன செழியா?” அவனின் பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்க,

“நீ ரத்னாவை என்னவா நினைக்கிற?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

அவனின் கேள்வியில் நொடியில் விதிர்த்துப் போனான் ஆனந்த்.

ரத்னாவின் மீது முன்பு சலனம் வந்தது என்னவோ உண்மை. ஆனால் செழியனும், ரத்னாவும் என்று காதலை சொல்லிக் கொண்டதை கேட்டானோ, அதன் பிறகு தன் சலனப்பட்ட மனதை அடக்கிக் கொண்டான்.

அதனால் தயங்காமல், “என் ஃபிரண்டா நினைக்கிறேன்…” என்றான்.

“அப்போ உன் ஃபிரண்டுக்கிட்ட நீ ஒருமையில் பேசினா நான் எப்படி வருத்தப்படுவேன்?” என்று அவனிடமே திருப்பிக் கேட்டான்.

அதில் ஆனந்தின் முகம் மலர்ந்தது.

“நீ எதுவும் நினைச்சுக்குவியோனு யோசனையா இருந்தது. அதான் கேட்டேன்…” என்ற ஆனந்தின் தோளில் தட்டிக் கொடுத்தான் செழியன்.

“போய்ச் சமாதானம் பண்ணு செழியா. ரத்னா கோவிச்சுட்டுப் போனாள்…”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஆனந்த். அவளே வருவாள். வர வர கொஞ்சம் ஓவராத்தான் பேசுறாள். அதட்டி வைக்கலைனா அவ நம்மளை அதட்டிப் போடுவாள். நீ வேணும்னா உன் ஃபிரண்டை போய்ச் சமாதானம் பண்ணு…” என்றான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, சுதாகரிடமிருந்து இருவருக்கும் அழைப்பு வர, எழுந்து சென்றனர்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த போது இருவரின் முகமும் பிரகாசமாக ஜொலித்தது.

அதைக் கண்ட ரத்னா தன் கோபத்தை மறந்து வேகமாக இருவரின் அருகிலும் வந்தாள்.

“என்ன இரண்டு பேர் மூஞ்சிலயும் லைட் எரியுது. சார் வெற்றி கேஸை நடத்த பெர்மிஷன் கொடுத்துட்டாரா?” என்று கேட்டாள்.

“யெஸ் ரத்னா. கேஸ் கைக்கு வந்தாச்சு. இனி எங்க வேட்டை ஆரம்பம்…” என்றான் செழியன்.

“சந்தோஷம் செழிப்பானவனே. ஆனா இந்தக் கேஸுலயும் நீ என்னைக் கழட்டி விட்டது எனக்கு வருத்தம் தான்…” என்று முதலில் சந்தோஷமாக வாழ்த்தியவள் பின் சோக ராகம் பாடினாள்.

“ஆனந்த் வா, போய் நம்ம வேலையை ஆரம்பிப்போம். இங்கே இருந்தா இந்தக் கொசு நொய்ங்னு நம்ம காதுலயே கத்தி நம்மை ஒழுங்கா வேலை பார்க்க விடாது…” என்று அலட்டலாகச் சொன்ன செழியன் தன் இருக்கையை நோக்கி நடக்க, ஆனந்தும் அவளைக் கிண்டலாகப் பார்த்துவிட்டு நண்பனின் பின் சென்றான்.

அவர்கள் இருவரையும் இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டு நின்றாள்.

அதை உணர்ந்தாலும் அவளைக் கண்டுகொள்ளாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று இருவரும் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்றதும் புஸ்புஸ் என்று மூச்சை இழுத்து விட்டு அவர்கள் அருகில் வேகமாகச் சென்றவள், “இந்தக் கேஸ்ல ஜெயிக்க வாழ்த்துகள்டா தடியன்களா…” என்று போகிற போக்கில் சொல்லி விட்டு தன் இருப்பிடம் சென்று விட்டாள்.

அவள் வந்த வேகத்தில் ஏதோ கோபமாகத் திட்டப் போகிறாள் என்று நினைத்த செழியனும், ஆனந்தும் அவள் வாழ்த்தி விட்டுப் போனதும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

பின் கேஸ் விஷயமாகப் பேச ஆரம்பித்தனர்.

வெற்றி கேஸ் கைக்கு வந்த அதே நேரத்தில் செழியனை சில துன்பங்களும் சூழ ஆரம்பித்தன.

அதன் முதல் அறிகுறியாக வீட்டிலிருந்து அவசர அழைப்பு வர, பதறி அடித்துக் கொண்டு கிளம்பினான் செழியன்.


வெற்றியிடம் பேச வேண்டும் என்று அல்லிராணி முடிவெடுத்தால் மட்டும் போதுமா? அதை முடித்து வைப்பவனும் அதற்கு உதவ வேண்டும் அல்லவா?

அவளின் முடிவு எடுத்ததுடன் அப்படியே நின்று போனது.

அல்லியின் கண்களிலேயே மாட்டவில்லை வெற்றி.

‘எங்கே போய்த் தொலைந்தான் இவன்?’ என்று எரிச்சல் பட மட்டுமே அவளால் முடிந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் வெற்றி அவன் வீட்டிற்குக் கூட வரவில்லை.

மூன்றாவது நாள் முருகனைத் தான் அவளால் தற்செயலாகக் காண முடிந்தது.

சாலையில் சென்றவனைக் கண்டதும், “அண்ணே… ஒரு நிமிசம் நில்லு…” என்று அவனின் முன் போய் நின்றாள்.

அவளை எதிர்பாராதவன் சட்டென்று முகம் சுருக்கிப் பார்த்தான்.

“வெற்றி எங்க அண்ணே ஆளே காணலை. நீ பார்த்தியா?” என்று கேட்டாள்.

“இல்லைமா, எனக்குத் தெரியாது. நான் பார்க்கலை…” என்றவன் அங்கிருந்து நகர்ந்து செல்ல,

அவனை வழி மறைத்து நின்றவள், “இதை என்னை நம்பச் சொல்றீயா? நீயும் அவனும் கூட்டாளிங்க தானே. தொழில் எல்லாம் கூட ஒன்னா பார்க்குறீங்க போல இருக்கு…” என்று நக்கலாகக் கேட்டாள்.

“ஆமா, நாங்க ரெண்டு பேரும் ஒரே தொழில் செய்றது ஊரறிந்த விஷயம் தானே. இதுல புதுசா நக்கலடிக்க என்ன இருக்கு?” என்று சாதாரணமாகக் கேட்டான்.

“நான் சொல்றது நீங்க பார்க்கிற ஊரறிந்த தொழிலை இல்ல. யாருக்கும் தெரியாம மறைமுகமாக ஒரு தொழில் செய்றீங்களே, அதைச் சொல்றேன்…” என்று அவள் சொன்னதும் அவன் கண்களில் ஒரு திடுக்கிடல் வந்து போனது.

“என்ன இவளுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு யோசிக்கிறயா? அதுதான் கண்முன்னாலேயே பார்த்தேனே…” என்றவள் பூங்காவில் அவர்களைப் பார்த்ததைச் சொன்னாள்.

“உனக்கும், வெற்றிக்கும் ஏன் அண்ணே புத்தி இப்படிப் போச்சு? உங்களுக்குப் பார்க்க வேற தொழிலே கிடைக்கலையா?” என்று கோபமாகக் கேட்டாள்.

“நாங்க என்ன தொழில் பார்க்கணும்னு நாங்க தான்மா முடிவு பண்ணனும். நீ இல்லை. இதுக்குத் தான் வெற்றியை விட்டு விலகியே இருன்னு சொன்னேன். ஆனா நீ தான் கேட்கலை. இதோ இப்போ எங்களைக் கேள்வி கேட்க வந்துட்ட பார். வெற்றிக்கும், உனக்கும் சரியே வராது. விலகிப் போயிடு…” என்று அவளை விடக் கோபமாகச் சொன்னவன், அங்கிருந்து விறுவிறுவென்று நடந்து சென்று விட்டான்.

அவனின் கோபத்தில் செய்வதறியாது மலைத்து நின்று விட்டாள் அல்லிராணி.

இவனே இப்படிப் பேசுகிறான் என்றால்… அப்போது வெற்றி? என்ற கேள்வி தான் அவளுக்குத் தோன்றியது.

நான்காவது நாள் அல்லி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வெற்றியின் வீட்டில் அவனின் நடமாட்டம் தெரிய, தன் வீட்டிற்குள் கூட நுழையாமல், நேராக அவனின் வீட்டிற்குச் சென்றாள்.

ஆனால் அந்த நேரம் சரியாக வெளியே வந்த வெற்றி வீட்டை பூட்டிக் கொண்டு தன்னை நோக்கி வந்தவளைக் கண்டுகொள்ளாமல் பக்கத்தில் இந்தச் சந்து பாதை வழியாக அடுத்தத் தெருவிற்குச் செல்ல ஆரம்பித்தான்.

“வெற்றி நில்லு. நில்லுன்னு சொல்றேன்ல…” அவள் அழைக்க, அழைக்கக் காதில் விழாதது போல் சென்று கொண்டே இருந்தான்.

வேகநடை வைத்து நடந்து சென்றவனை ஓடிச்சென்று கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

அவள் பிடித்த வேகத்தை விட, விரைந்து தன் கையை வெடுக்கென்று அவளிடமிருந்து பறித்துக் கொண்டவன், கடுமையாக முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனின் கடுமையில் கணநேரம் உறைந்து போன அல்லி, அவன் செல்லவும் உணர்வு வந்து சந்தை விட்டு வெளியேற முடியாமல் அவனின் முன் ஓடி தடுத்து நிறுத்தி இருப்பக்கமும் கையைச் சுவற்றில் ஊன்றி அவன் மேலே நகர முடியாதவாறு செய்திருந்தாள்.

“ஏய், வழியை விடுடி…” என்று கண்களை உருட்டி அதட்டினான்.

“நான் உன்கிட்ட பேசியே ஆகணும். நான் பேசிய பிறகு எங்க வேண்டுமானாலும் போ…” என்று பிடிவாதமாக நின்றாள்.

“உன்கிட்ட பேச எனக்கு எதுவுமில்லை. இடத்தைக் காலி பண்ணு…”

“என்கிட்ட நின்னு பேச முடியாத அளவுக்கு அய்யா பெரிய ஆள் ஆகிட்டீங்களோ? உன் மேல நான் தான் கோபமா இருக்கணும். பெரிய இவன் மாதிரி நீ கோபமா இருக்க…” என்றவளை அலட்சியமாகப் பார்த்தான்.

“உன்கிட்ட நிறையப் பேசணும்னு நினைச்சேன் வெற்றி. ஆனா நீ இப்படி என்னை அலட்சியமா பார்க்கும் போது ரொம்ப வலிக்குது.

ஒரு தப்பானவனையா உயிரா காதலிச்சுக்கிட்டு இருக்கேன்னு நினைச்சு வலிக்குது.

சட்டத்துக்குப் புறம்பான வேலை பார்க்கிறவன் பின்னாடி என் மனது இப்படிச் சுத்துதே… இது சரியா, தப்பான்னு தெரியாம வலிக்குது.

என் கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணு கூடக் கூத்தடிக்கிறன்னு தெரிஞ்சும் வெட்க கெட்டத்தனமா இப்படி வந்து உன்கிட்ட பேச வேண்டியது இருக்கேன்னு ரொம்ப வலிக்குது வெற்றி…” என்றவளின் கண்களும், முகமும் அவளின் வலியை அப்பட்டமாகக் காட்டியது.

ஆனால் அவளின் வலியைப் பொருட்படுத்தாதவன் போல் அவளைச் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி.

“ஆனா பாரேன், நீ இப்படிப் பார்க்கும் போதும் உன்னை விட்டுட்டுப் போயிடலாம்னு மட்டும் எனக்குத் தோணவே மாட்டேங்குது. அவ்வளவு சொரணை கெட்டவளா ஆகிப்போனேன்னு என் மேலேயே எனக்குக் கோபம் வருது…” என்றாள்.

“ஆனா எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை. நீ அடிப்பட்டு இருந்தப்ப, என்கிட்ட பெரிய நல்லவன் மாதிரி பேசினியே வெற்றி, அதெல்லாம் என்ன? நானும் உன்னை லவ் பண்றேன். கல்யாணம் பண்ணிக்கலாம். வீட்டில் பேசலாம்னு என்னென்னவோ சொன்னீயே வெற்றி, அதுக்கு எல்லாம் அர்த்தம் என்ன?” என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லாமல் அவன் நிற்க,

“ஓ, அந்த நேரத்தில் சேவை செய்ய நான் தேவைப்பட்டேன். அதான் காதல், கல்யாணம்னு எனக்கு ஏத்தது போலப் பேசி நடிச்சிருக்க அப்படித்தானே?” என்று அவளாக ஊகித்துக் கேட்டாலும் அதை அவன் இல்லையென்று சொல்லி விட வேண்டுமே என்று அவளின் மனது துடித்தது.

ஆனால் அவன் அதற்கும் மௌனமே பதிலாகத் தர, அந்த மௌனமே அவள் சொன்னது தான் உண்மை என்று எடுத்துரைக்க, உள்ளுக்குள் அவள் உடைந்து போனாள் என்பதை அவளின் கண்கள் உடைப்பெடுத்துக் கண்ணீரை உதிர்த்து உரைத்தது.

அப்போதும் அவன் எந்த முகமாற்றமும் காட்டாமல் நிற்பதை பார்த்துத் தன்னை அடக்கிக் கொண்டவள் “என் வலி கூட உன்னைப் பாதிக்கல இல்ல? சரி, போகட்டும் விடு. நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். அந்தப் போதை மருந்து தொழில் உனக்கு வேணாம் வெற்றி. அந்தத் தொழிலை விட்டுடு. அது ரொம்பப் பாவம் வெற்றி. நிறையப் பேரை பாதிக்க வைக்கும் தொழில். அது வேண்டாம் வெற்றி. சொன்னா கேளு…” என்றாள்.

“ஆமா, இதெல்லாம் எனக்குத் தெரியாது பாரு? பெருசா சொல்ல வந்துட்ட. போ போய் உன் வேலையை மட்டும் பாரு. எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நீ பெரிய இவ இல்லை…” என்று இப்போது வாயைத் திறந்து கடுப்படித்தான்.

“நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனா அந்தத் தொழில் மட்டும் வேணாம். விட்டுடு…”

“விடலைனா என்ன பண்ணுவ?”

“ஏதாவது பண்ணுவேன்…” என்றவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன், “அப்படி என்னமா பண்ணுவ?” என்று கிண்டலாகக் கேட்டான்.

அவனின் கேள்வியில் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவள் பின் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, “நானே போலீஸ்ல போய் உன்னைப் பத்தி சொல்லிடுவேன்…” என்றாள்.

“ஓகோ, அப்படியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“நம்ம பின்னாடி இப்படிச் சுத்துறவ எப்படிப் போலீஸ்ல சொல்லுவாள்னு தைரியம்… ம்ம்? ஆனா நீ மாறலைனா, நான் மாத்த முயற்சி பண்ணுவேன் வெற்றி. அதனால் போலீஸ்ல சொல்ல தயங்க மாட்டேன்…” என்றாள் உறுதியாக.

“அதையும் பார்க்கலாம். உன்னால் முடிஞ்சா செய்…” என்று சட்டென்று பதில் சொன்னவன் அதே வேகத்தில் தன்னை மறைத்துக் கொண்டிருந்த அவளின் கையைப் பட்டென்று தட்டி விட்டு அவளைத் தாண்டி வேகமாக அங்கிருந்து நகர்ந்தான் வெற்றி.