மனம் கொய்த மாயவனே – 28

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 28

மாலை போடப்பட்டிருந்த கிருதிலயாவின் புகைப்படத்தைப் பார்த்து இன்னும் அவளின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறித்துப் பார்த்தான் செழியன்.

இன்னொரு இருக்கையில் அமர்ந்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தார் பவானி.

அவருக்கு ஆறுதல் சொல்ல கூடத் திராணியற்றுக் கண்களில் கண்ணீர் தேங்க, பவானியின் கையை அழுத்தமாக பற்றிய வண்ணம் அமர்ந்திருந்தாள் ரத்னா.

நண்பனைத் தேற்றுவதா? அவனின் தாயைத் தேற்றுவதா? என்று புரியாத குழப்பத்துடனும், தான் அருகில் இருந்தும் கிருதியைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்ற குற்றவுணர்வும், வேதனையும் கலந்து செழியனின் அருகில் அமர்ந்திருந்தான் ஆனந்த்.

துக்கத்திற்கு வந்த உறவுகள், நட்புகள் அனைவரும் கிளம்பியிருக்க, இவர்கள் அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டனர்.

“அவள் என்ன செய்தாலும் கண்டுக்காம, அவள் எப்படி இருந்தாலும் அப்படியே இருக்கட்டும்னு விட்டுருந்தால் இந்நேரம் கிருதி உயிரோட இருந்திருப்பாள் தானே டா ஆனந்த்?” என்று கிருதியின் புகைப்படத்தை வெறித்த வண்ணம் கேட்டான் செழியன்.

அவனுக்கு உள்ளுக்குள் இப்போது அந்தக் கேள்வி மட்டுமே உறுத்திக் கொண்டிருந்தது. ‘தான் அவளுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்துத் தானே அவளைக் கொன்று விட்டோமோ?’ என்று நினைத்தவனின் மனது துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது.

அவனின் தோளில் கை வைத்து அழுத்திய ஆனந்த், “நீ அவளுக்கு நல்லது தானேடா செய்த? ஆனா அவள் அதைப் புரிஞ்சுக்காம இப்படி ஒரு முடிவு எடுத்தது அவளோட முட்டாள்தனம் செழியா. இதில் உன் தப்பு எதுவுமில்லை…” என்று நண்பனைச் சமாதானப்படுத்த முயன்றான்.

“இல்லை ஆனந்த், நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணும். நான் தான் அவசரப்பட்டுட்டேன். அவளைக் கொஞ்சம் விட்டுப் பிடிச்சிருக்கணும்…” என்றான் வேதனையுடன்.

“விட்டால் பிடிக்கக் கூடியவள் கிருதி இல்லை செழியா. இதை நான் சொல்ல வேண்டியது இல்லை. உனக்கே தெரியும்…” என்றான் ஆனந்த்.

அதுதான் முற்றிலும் உண்மை. அவன் கொஞ்சம் கண்டிப்போடு இருக்கும் போதே, போதை பழக்கம் வரை சென்று விட்டவள் அவள். அவள் விருப்பபடி எதுவும் செய்யட்டும் என்று விட்டுருந்தால் கடிவாளம் இல்லாத குதிரையாகத் தறிகெட்டு ஓடும் நிலைக்குச் சென்றிருப்பாள்.

அதோடு அவள் எதுவும் அவளுக்கே தீமை தரக் கூடிய செயலை செய்து விடும் போது தான் கண்டித்து இருக்கின்றானே தவிர எந்த நேரமும் கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டே இருந்தவனும் இல்லை.

அது வீட்டினர் யாரும் செய்யக் கூடியது தானே! ஏன் அவளின் அப்பா, அம்மா உயிரோடு இருந்திருந்தால் அவர்களும் அதைத்தானே செய்திருப்பார்கள். அதையும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தாளா? என்று தவித்துப் போனான் செழியன்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இந்த வீட்டிற்கு வந்த நாள் முதலாக அவளைத் தன் சகோதரியாக, விளையாட்டுத் தோழியாக, தன் வீட்டு பொண்ணாகத் தானே கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான்.

கிருதிலயாவின் இழப்பு அவனைத் துடிக்க வைத்துக் கொண்டிருந்தது. அதுவும் கடைசி நேரத்தில் போதை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்து, அது கொடுக்காததால் உயிரை விட்டாள் என்பதை அவனால் தாங்கவே முடியவில்லை.

அவளின் கடைசி நிமிடங்களை நினைத்துப் பார்த்தான் செழியன்.

செழியன் மருத்துவமனையை விட்டுச் சென்றதும், அறைக்குள் கோபமாக அமர்ந்திருந்த கிருதியின் அருகில் வந்த ஆனந்த், “ஜுஸ் வாங்கிட்டு வந்துருக்கேன் குடி கிருதி…” என்று கேண்டினில் வாங்கி வந்திருந்த பழச்சாறை நீட்டினான்.

அவனை முறைத்துப் பார்த்த கிருதி அவன் கையில் இருந்த டம்ளரை தட்டி விடப் போனாள். ஆனால் அதை ஆனந்த் லாவகமாகத் தடுத்துவிட, அதில் இன்னும் முறைத்தவள், “நான் இங்கிருந்து போகணும் மிஸ்டர் ஆனந்த். உங்க பிரண்டுகிட்ட சொல்லுங்க…” என்றாள்.

“போகலாம் கிருதி. உன் ட்ரீட்மெண்ட் முடியட்டும் இங்கிருந்து போகலாம்…” என்றவன் அவள் கையில் பழச்சாற்றைக் கொடுத்து அவளைக் குடிக்க வைத்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தான்.

கிருதி அறைக்குள் இருக்க, பவானியும், ஆனந்தும் வெளியே இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அறைக்குள் இருந்த கிருதிக்கு நேரம் செல்ல செல்ல பதட்டமாக இருந்தது. தினமும் இரவு தான் ஊசி போட்டுக் கொண்டாள் என்றாலும், கல்லூரி விட்டு வரும் போதே ஊசியை வாங்கி வந்துவிடுவாள். இரவு எப்போது வரும் ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று மாலையில் இருந்தே காத்திருக்க ஆரம்பித்து விடுவாள்.

அதுவும் சில நாட்களாகத் தினமும் ஊசி போட்டுக் கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள். அப்படியிருக்க, இன்றோ இன்னும் போதை ஊசி வாங்கி வைத்துக் கொள்ளாததே அவளின் உள்ளுக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தது.

இப்போது எப்படி வெளியே சென்று ஊசி வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவளின் கைபேசி வீட்டில் இருந்தது.

ஆனந்தின் போனை வாங்கி, சந்துருவை எப்படியாவது இங்கேயே ஊசியைக் கொண்டு வரச் சொல்லுவோமா என்று யோசித்தாள். அதைச் செயல்படுத்திவிடும் நோக்கத்தில் ஆனந்திடம் கைபேசியைக் கேட்க, அவனோ அவளைச் சந்தேகமாகப் பார்த்தான்.

“யாருக்குப் பேசணும்னு சொல்லு கிருதி. நானே போட்டுத் தர்றேன்…” என்றான்.

காரியம் கெட்டது என்பது போல் பார்த்தவள், அவனிடம் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.

மருத்துவர்கள் ஏற்கனவே அவளுக்கு இன்னும் சில டெஸ்ட்கள் எடுத்து விட்டுச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இரவு ஒரு மருத்துவரிடம் கவுன்சிலிங் செய்யக் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அதற்குள் நேரம் செல்ல செல்ல தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் எப்படியாவது ஊசியை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் வலுக்க ஆரம்பிக்க ஆனந்திடம் நேராகவே கேட்டுவிட்டாள்.

“எனக்கு ட்ரக்ஸ் இப்பவே வேணும்…” என்று அவள் கத்த, அவன் உடனே மருத்துவரை அழைத்து வர ஓடினான்.

அதனைக் கண்டு அவளின் ஆத்திரமும், பதட்டமும் இன்னும் அதிகரித்தது.

அதனால் அவன் மருத்துவரை அழைத்து வரும் முன் இப்படித் தன்னை மருத்துவமனையில் அடைத்து விட்டானே என்று செழியன் மீதிருந்த கோபம், ட்ரக்ஸ் கேட்டால் டாக்டரை கூப்பிட போகின்றானே என்று ஆனந்த் மீதிருந்த கோபம், மருத்துவர் வந்தால் எங்கே தன்னைக் கட்டுப்படுத்தி விடுவார்களோ என்ற ஆத்திரம், அது எப்படி என் விருப்பத்திற்கு விடாமல் என்னைத் தடுக்கலாம் என்று அவளுக்கு எப்போதும் இருக்கும் வீம்பு என அனைத்தும் சேர, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று முழுதாக அவளே உணரும் முன் அந்த மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்திருந்தாள் கிருதிலயா.

எதற்கு இப்போது அறையை விட்டுக் கிருதி ஓடி வருகிறாள் என்று பவானி மலைத்து நிற்கும் போதே நொடியில் அவள் குதித்து விட அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தார்.

தற்கொலை கண நேர உணர்வு குவியல்களின் வெளிப்பாடு. அவள் அங்கிருந்து குதிக்க வேண்டும் என்று சற்று நேரத்திற்கு முன் கூடச் சிந்தித்தது இல்லை. தன்னை இங்கே கொண்டு வந்து இப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டார்களே என்ற கோபம் மட்டுமே மிகுதியாக இருந்தது.

ஆனால் நேரம் செல்ல செல்ல போதை ஊசி வேண்டும் என்ற வெறி வர, அது நீங்கள் என்னை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்ற ஆங்காரத்தைக் கொடுக்க, அடுத்து என்ன செய்ய வேண்டும். ஏது செய்ய வேண்டும் என்று புரியாத ஒரு குழப்பநிலைக்கு ஆட்கொள்ளப்பட்டவளுக்குத் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஓங்கி வளர ஆரம்பித்தது.

அவள் ஒரு நொடி நிதானித்திருந்தால் அவளே கூட அந்த முடிவு எடுத்திருக்க மாட்டாள்.

ஆனால் அவளையும் மீறி, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தானே உணராமல் உணர்ச்சி வேகத்தில் மாடியிலிருந்து குதித்து விட்டிருந்தாள்.

கிருதியின் அந்தச் செயலுக்கு அவளின் போதையினால் மழுங்கியிருந்த புத்தியும் காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இதுவே நார்மலான கிருதியாக இருந்திருந்தால், ‘நீ என்னைக் காதலிக்கவில்லை என்றதற்காக நான் ஏன்டா சாகணும்?’ என்று நினைக்கக் கூடியவள் அவள்.

அப்படியிருக்க அவள் அந்த வேலையைச் செய்தாள் என்றால் அவளின் மூளை எவ்வளவு மழுங்கி இருந்திருக்க வேண்டும்?

செழியன் வந்து பார்த்த போது முகம் முழுவதும் ரத்தத்தில் குளித்திருக்க, அவளை உயிரற்ற உடலாகத்தான் கண்டான்.

அவள் ஓடி வந்து குதித்த வேகத்தில் அவளின் தலை தரையில் பலமாக மோதியிருந்தது.

“செழியா, உன் வருத்தம் புரியுது. ஆனா இப்போ நமக்கு அடுத்த வேலை இருக்கு. அந்தச் சந்துருவைப் பிடிக்கணும். அவன் இன்னும் எத்தனை பேருக்குப் போதை மருந்தை கொடுத்துக்கிட்டு இருக்கான்னு தெரியலை…” என்று செழியனின் நிலையைக் கலைத்தான் ஆனந்த்.

“ஏற்கனவே பிடிக்க ஏற்பாடு பண்ணிட்டேன் ஆனந்த். கிருதி சூசைட் பண்ணிக்கிட்டது தெரிஞ்சதுமே அவன் எங்கோ போய் ஒளிஞ்சிக்கிட்டான். அவனைத் தேடிக் கண்டுபிடிச்சு நம்ம இடத்துக்குக் கொண்டு வந்தாச்சு. வா அவனைப் போய்ப் பார்ப்போம்…” என்று இருக்கையை விட்டு எழுந்த செழியன், ரத்னாவின் புறம் திரும்பி, “அம்மாவைப் பார்த்துக்க…” என்று பொறுப்பை அவளிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினான்.

“என்னை எதுக்கு இங்கே கொண்டு வந்து அடைச்சுப் போட்டுருக்கீங்க?” என்று கதவைத் திறந்து உள்ளே வந்தவர்களைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினான் சந்துரு.

அந்த அறையில் மங்களான வெளிச்சம் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

கைகள் மட்டும் கட்டப்பட்டு நடு அறையில் இருந்து கத்திக் கொண்டிருந்த சந்துருவைச் சலனமே இல்லாமல் பார்த்தான் செழியன்.

அவனிடம் கோபமோ, ஆத்திரமோ, ஆவேசமோ எதுவுமே இல்லை.

நிதானமாகச் சந்துருவின் முன் வந்து நின்றவன், “கிருதிக்கு ஏன்டா ட்ரக்ஸ் பழக்கி விட்ட?” என்று கேட்டான்.

“இதென்ன கேள்வி? அவள் கேட்டாள் கொடுத்தேன்…” என்று அலட்சியமாகவே பதில் சொன்னான் சந்துரு.

“முதலில் அவள் கேட்டு நீ கொடுத்தியா? நீ கொடுத்த பிறகு அவள் கேட்டு வந்தாளா?” மீண்டும் நிதானமாகவே வந்தது அவனின் கேள்வி.

‘சொல்ல முடியாது’ என்பது போலச் சந்துரு முகத்தைக் காட்ட, “சொல்லுடா?” என்று அதட்டினான் ஆனந்த்.

“அவள் தான் என் மாமா என்னை விட்டு வேற பொண்ணைக் காதலிக்கிறார். அதனால் எனக்கு மனசு வலிக்கிது. அந்த வலி போக ஏதாவது இருந்தா கொடுன்னு கேட்டாள். பாவமே, கஷ்டப்படுறாளேனு கொடுத்தேன்…” என்றான் நல்லவன் போல்.

கிருதி இவனிடம் அனைத்தையும் ஒப்பித்திருக்கின்றாளே என்று கசப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான் செழியன்.

அவள் அப்படிச் சொன்னது தான் இவனுக்குத் தோதாக அமைந்து விட்டதும் புரிந்தது.

“எப்படி நல்லவன் மாதிரி நடிக்கிறான் பார். இவனைப் பொடதிலேயே ஒரு போடு போடட்டுமா செழியா…” என்று ஆத்திரத்துடன் கேட்டான் ஆனந்த்.

“கொஞ்சம் பொறு. அதுக்கு இன்னும் நேரமிருக்கு…” என்று இப்போதும் அலட்டிக் கொள்ளாமல் சொன்ன செழியன், சந்துருவைக் கூர்மையான பார்வையால் அளந்தான்.

“நீ கொடுத்ததுமே கிருதி வாங்கிட்டாளா? அவளுக்கு எப்படி உன்கிட்ட ட்ரக்ஸ் இருக்குறது தெரியும்? ட்ரக்ஸ் யூஸ் பண்றதை நினைச்சுக் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டலையா?” என்று யோசனையுடன் கேட்டான்.

“அவ அதுக்கு முன்னாடியே சிகரெட், ட்ரிங்க்ஸ் எல்லாம் என் மூலமா ட்ரை பண்ணி பார்த்திருக்காள். அதனால நான் ட்ரக்ஸ் பத்தி சொன்னதும் அவளுக்கு அது எதுவும் வித்தியாசமா தெரியலை…”

“என்ன சொல்ற? சிகரெட், ட்ரிங்க்ஸா?” அதிர்ந்து கேட்டான் செழியன்.

“ஆமாம்” என்று தலையை அசைத்த சந்துரு, அவள் சிகரெட், மதுவை தன்னிடம் கேட்டு தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதைச் சொன்னான்.

அதைக் கேட்டதும் செழியனின் மனம் அதிர்ந்தது. எந்த அளவு துணிந்திருக்கிறாள் இந்தக் கிருதி? ‘அப்படி என்ன கிருதி கெட்டப் பழக்கங்களை முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை?’ மானசீகமாக இறந்து போனவளிடம் கேட்டுக் கொண்டான்.

அவன் நேரடியாகக் கேட்டாலே அலட்சியமாகப் பதில் சொல்பவள் அவள். இப்போது மட்டும் அவனுக்குப் பதில் கிடைத்து விடவா போகின்றது?

அவள் ட்ரக்ஸ் எப்படி இப்படித் திடீரென எடுத்துக் கொண்டாள்? தங்கள் மீது கோபம் என்றாலும் அதெப்படி முடிந்தது? என்ற கேள்வி அவன் மனதை குடைந்து கொண்டிருந்தது.

இப்போதோ அவள் முன்பே சிகரெட், மது என்று முயற்சி செய்ததால் தான் ட்ரக்ஸையும் சட்டென்று எடுத்திருக்கிறாள் என்று புரிந்தது.

“இன்னும் யார் யாருக்கு ட்ரக்ஸ் இன்ஜெக்சன் போட்ட?” என்று கிருதியின் நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டுக் கேட்டான் செழியன்.

“அதெல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க? உங்க வீட்டுப் பொண்ணை விசாரிச்சீங்கல? அதோட நிறுத்திக்கோங்க. இப்போ என் கட்டை அவுத்து விடுங்க நான் போகணும்…” என்றான் சந்துரு.

“நாங்க கேட்காம வேற யாருடா கேட்பா? நாங்க தான் கேட்போம். இது மட்டும் இல்லை. இன்னும் கூட உன்கிட்ட கேட்க எங்ககிட்ட கேள்விகள் இருக்கு. எல்லாத்துக்கும் நீ பதில் சொல்லியே தீரணும்…” என்று அழுத்தமாகச் சொன்ன செழியன், “சொல்லு, இன்னும் யார் யாருக்கு ட்ரக்ஸ் பழகி விட்ட?” என்று கேட்டான்.

“இங்க பாருங்க. நான் யாருன்னு தெரியாம என்னை இங்கே கடத்திட்டு வந்து இப்படிக் கட்டிப் போட்டுக் கேள்விக் கேட்டுட்டு இருக்கீங்க. இதெல்லாம் உங்களுக்கு நல்லதுகில்லை சொல்லிட்டேன். ஒழுங்கு மரியாதையா என்னை விட்டுருங்க…” என்றான்.

“நீ யாரு, உன் அப்பன் யாரு, அவன் என்ன தொழில் பண்றான். நீ எங்கெங்க எல்லாம் ஊர் மேய போவ… எல்லா விஷயமும் தெரிஞ்சே தான்டா உன்னைத் தூக்கியிருக்கோம். கிருதிக்காக மட்டும் உன்னைத் தூக்கியிருக்கோம்னு நினைச்சீயா? கிருதிக்காகவும் தான் தூக்கினோமே தவிர அவளுக்காக மட்டுமில்லை…” என்று கோபமாகச் சொன்ன செழியன், “ஆனந்த் இவன் மேல கை வைக்க ஆசைப்பட்டியே, அதுக்கான வேலை வந்திருச்சு ஆரம்பி…” என்றான்.

அவன் சொன்ன மறு நொடி சந்துருவின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தான் ஆனந்த்.

“என்ன தைரியம் இருந்தா என்னை அடிப்பீங்க?” என்று கோபத்துடன் எகிறினான் சந்துரு.

“எங்க தைரியத்தின் அளவை முழுசா பார்க்க ஆசை இல்லனா இப்பயே வாயைத் திறந்து உண்மையைச் சொல்லிடு…” என்றான் செழியன்.

செழியன் கேட்க, சந்துரு சொல்லாமல் அடம்பிடிக்க என்று சிறிது நேரம் கடந்து சென்றது.

ஆனாலும் செழியனும், ஆனந்தும் அவனைப் பேச வைத்தனர். அதன் பலனாக “சொல்லிடுறேன்…” என்று அலறினான் சந்துரு.

“சொல்லு…”

“கிருதிக்கும், மிருதுளாவுக்கும் தான் கொடுத்தேன். வேற யாருக்கும் இல்லை…” என்றான்.

அவனை நம்பாமல் பார்த்த செழியன், “இப்ப நீ உண்மையை அப்படியே கக்கலைனா நாங்களே கக்க வைப்போம் சந்துரு. எப்படி வசதி?” என்று புருவத்தை ஏற்றி இறக்கிக் கேட்டான்.

அவனின் கேள்விக்கு ஏற்ப சந்துருவைச் சொல்ல வைத்து விடும் வேகத்துடன் அவனை நெருங்கினான் ஆனந்த்.

“இல்லை அடிக்காதீங்க. நான் சொல்லிடுறேன்…” என்று ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி அவனை வழிக்குக் கொண்டு வந்தது.

“ம்ம்… ஒன்னு விடாம சொல்லு. பொய் சொல்லி ஏமாத்தினா நாங்களே உண்மையைக் கண்டுபிடிக்கும் போது இதை விடப் பல மடங்கு ட்ரீட்மெண்ட் கிடைக்கும்…” என்றான் செழியன்.

“சொல்றேன், சொல்லிடுறேன்… காலேஜ் கிளாஸ்மேட் பொண்ணுங்க இன்னும் ஐஞ்சு பேருக்குக் கொடுத்தேன். என் பிரண்ட்ஸ் சர்க்கிளில் ஒரு ஆறு பேருக்கு ட்ரக்ஸ் பழக்கி விட்டேன்…” என்றான்.

“நீ கெட்டுச் சீரழியணும்னா நீ ஆக வேண்டியது தானேடா. அடுத்தவங்களையும் கெடுக்க உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என்று கேட்டான் செழியன்.

“அது…” அவன் தயங்கிய படி இழுக்க…

“சொல்லுடா…” என்று அதட்டினான்.

“அடுத்தவங்களுக்கும் ட்ரக்ஸ் பழக்கி விட்டா தான் எனக்குத் தடங்கல் இல்லாம ட்ரக்ஸ் கிடைக்கும்…” என்றான்.

“என்ன சொல்ற நீ?”

“எனக்கு வழக்கமா ட்ரக்ஸ் கொடுக்குறவங்க ரூல்ஸே அது தான்…” என்றான்.

“விவரமா சொல்லுடா…” என்று கேட்டான் செழியன்.

“நான் வழக்கமா ஒருத்தர்க்கிட்ட ட்ரக்ஸ் வாங்குவேன். நான் வாங்கிட்டு இருக்கும் போதே ஒரு நாள் எனக்கு ட்ரக்ஸ் இல்லைன்னு சொல்லிட்டான். ஏன்னு கேட்டதுக்கு உன் கூட உன் பிரண்ட்ஸ் யாரையாவது ட்ரக்ஸ் வாங்க கூட்டிட்டு வா அப்பத்தான் உனக்கு ட்ரக்ஸ் தருவேன்னு சொல்லிட்டான்.

நான் தான் காசு தர்றேன்ல, எனக்குக் கொடுன்னு கேட்டதுக்குக் காசு எல்லாம் அப்புறம் தான். முதலில் நான் சொன்னதைச் செய்ன்னு என்னை விரட்டி விட்டுட்டான். எனக்கு ட்ரக்ஸ் எடுத்துக்காம பைத்தியம் பிடிச்சது போல ஆகிருச்சு. அப்போ தான் என் பிரண்ட் ரவி ஞாபகம் வந்துச்சு. அவனைத் தாஜா பண்ணி அவனுக்கும் சேர்த்து ட்ரக்ஸ் வாங்க வச்சேன்.

அதுக்குப் பிறகு இது போல அப்பப்போ அந்த ஆள் வேற பசங்களையும் வாங்க வைக்கச் சொல்லுவான். நானும் எனக்கு ட்ரக்ஸ் கொடுக்குறதை நிறுத்திட கூடாதுன்னு பசங்களைக் கூட்டிட்டுப் போவேன்.

எனக்குச் செக் வச்ச மாதிரி நான் கூட்டிட்டுப் போன பசங்களுக்கும் செக் வச்சு அவங்க மூலமா ஆள் கூட்டிட்டு வரச் சொல்லுவான். அவங்களும் வேற ஆளுங்களைக் கூட்டிட்டு வந்து ட்ரக்ஸ் வாங்க வைப்பாங்க…” என்று சந்துரு சொல்ல, செழியனின் முகம் ஆக்ரோஷமாக மாறியது.

இவன் ஒருவன் மூலமாக ஆறு ஆண்கள் போதை மருந்துக்கு அடிமை ஆனது மட்டுமில்லாமல் அந்த ஆறு பேரும் அவரவர்கள் சிலரை ட்ரக்ஸ் வாங்க வைத்தால் அது ஒரு சங்கிலி தொடர் போல் அல்லவா நீண்டு கொண்டே செல்லும்.

அதுவும் இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையானால் அது அவர்களின் வீட்டிற்கும் மட்டுமில்லாது, நாட்டிற்கும் எவ்வளவு பெரிய கேடு? என்று நினைத்த செழியனுக்கு ரத்தம் கொதித்துக் கொண்டு வந்தது.

“இதில் பொண்ணுங்க எப்படி வந்தாங்க?” என்று மேலும் விவரம் கேட்டான்.

“பசங்க போலவே தான். பொண்ணுங்களையும் வாங்க வச்சேன்…” என்றான்.

“அப்போ அவங்களும் மேலும் சிலருக்கு ட்ரக்ஸ் யூஸ் பண்ண பழக்கி விட்டுருப்பாங்க. அப்படித் தானே?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

சந்துரு ‘ஆமாம்’ என்று தலையை அசைக்க, “ஆனந்த்…” என்றான் செழியன்.

அவனின் பெயரைச் சொல்லி அழைத்து முடிக்கும் முன்பே ஆனந்தின் கை இடியாகச் சந்துருவின் மேல் விழுந்தது.

சில நொடிகள் கடக்க மூச்சை இழுத்து விட்டுக் கொண்ட செழியன், “இதில் மிருதுளாவும், கிருதியும் எப்படிச் சம்பந்தம்?” என்று கேட்டான்.

“அது…” என்று மீண்டும் தயங்கினான்.

“இந்த இழுவை எல்லாம் வேண்டாம். பட்டுன்னு சொல்லி, சட்டுனு முடி…” என்றான்.

“மிருதுளா நினைச்சா ஆள் மாத்தி போயிருவாள்னு என் கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்க நினைச்சேன். அவளுக்கு ட்ரிங்க்ஸ் தான் கொஞ்சம் பழக்கம். ட்ரக்ஸ் யூஸ் பண்ண கேட்டப்ப பிடிக்கொடுத்தே பேச மாட்டேன்னுட்டாள். அதான் அவளுக்குத் தெரியாம போட்டுப் பழக்கப்படுத்தி விட நினைச்சேன்…” என்றான்.

“அந்தப் பொண்ணை நீ எடுத்த வீடியோ எங்கே?”

“வீட்டுல இருக்கு…”

“இங்க விசாரிச்சு முடிச்சதும் அந்த வீடியோவை எடுத்துக் கொடுக்குற…” என்றவன், “கிருதியை என்ன செய்றதா இருந்த?” என்று இறுக்கத்துடன் கேட்க, அவனைப் பயத்துடன் ஏறிட்டான் சந்துரு.

“ம்ம்… சொல்!” என்று உறுமினான் செழியன்.

“கிருதி கொஞ்சம் அவளுக்கு ஏத்த மாதிரி பேசினாலே வழிக்கு வர்ற ஆளா தெரிஞ்சாள். அதனால் கொஞ்ச நாள் ட்ரக்ஸ் பழக்கிவிட்டு அப்புறம் நான் என்ன சொன்னாலும் கேட்கிற நிலைமைக்குக் கொண்டு வந்து, நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் அவ கூடச் சேர்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதுவரை அவன் மீது கை வைக்காத செழியன், ஓங்கி அவனின் வயிற்றில் ஒரு எத்து எத்தியிருந்தான்.

அதில் சந்துரு சுருண்டு விழ, அவனின் சட்டைக் காலரை பிடித்துத் தூக்கிய செழியன், “அவளை எதுவும் செய்தீங்களாடா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.

“இல்ல… இல்ல… நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். ஆனா அதுக்குள்ள செத்துப் போய்ட்டா…” என்று அவன் சொல்லி முடித்த போது சுவற்றில் போய் மோதி விழுந்தான் சந்துரு.

தன் ஆத்திரத்தை எல்லாம் திரட்டி அவனைத் தூக்கி எறிந்திருந்தான் செழியன்.

அவனின் ஆத்திரம் அடங்க சில நொடிகள் பிடித்தன.

பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு ஆனந்தை பார்க்க, அவன் சென்று வலியில் முனங்கிக் கொண்டிருந்த சந்துருவை இழுத்து வந்து செழியனின் முன் நிறுத்தினான்.

“உனக்கு ட்ரக்ஸ் கொடுக்குறவன் யார்? அவன் பேர் என்ன?” என்று கேட்டான்.

“பேர் எல்லாம் தெரியாது. கேட்டாலும் சொல்ல மாட்டான். உனக்குத் தேவை ட்ரக்ஸ் தானே, அதை வாங்கிட்டுப் பேசாம போன்னு மிரட்டுவான். அதனால் பேர் எல்லாம் எனக்குத் தெரியாது…” என்றான்.

“அவனோட கான்டாக்ட் நம்பர் எதுவும் தெரியுமா? அவனை எப்படி எங்க வச்சுப் பார்த்து ட்ரக்ஸ் வாங்குவ?”

“நம்பர் இல்லை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாயந்தரம் காலேஜ் பக்கத்தில் இருக்குற பெட்டிக் கடைக்கு வருவான். கடைக்குப் பின்னாடி வச்சுத்தான் கொடுப்பான். எனக்கு அவ்வளவு தான் தெரியும்…” என்றான்.

அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டு முடித்த செழியன், “ஆனந்த், இவன் வீட்டிலிருந்து மிருதுளா போக, வேற யார் வீடியோவும் எடுத்து வச்சுருந்தால் அதையும் சேர்த்தே எடுத்துட்டு வந்திடு. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, வியாழன் அன்னைக்குத் தான் அவனைப் பிடிக்க முடியும். இவனை நம்ம இடத்திலேயே வச்சுரு…” என்றான்.

நாட்கள் நகர்ந்து வியாழனும் வரப் போதை மருந்து விற்பவனைச் செழியனும், ஆனந்தும் மடக்கிப் பிடித்தனர்.

அவனையும் தனியாக அடைத்து வைத்து விசாரிக்க ஆரம்பிக்க, அவனோ அவ்வளவு சுலபமாக வாயைத் திறக்கவே இல்லை. இது போல் தொழில் செய்பவர்கள் சாமானியத்தில் வாயைத் திறக்கவும் மாட்டார்கள் என்பதால் செழியனும், ஆனந்தும் சற்று மெனக்கெட வேண்டியதிருந்தது.

இருவரும் சேர்ந்து அவனின் வாயைத் திறக்க வைத்திருந்தனர்.

அவன் சொன்ன தகவலில் “தான் ஒரு டீலர் தான் என்றும், தனக்கு மேலே இன்னொருவன் தனக்கு வழக்கமாகச் சப்ளை செய்வான்” என்றும் சொன்னான்.

அவன் வழக்கமாக வாங்கும் நபரைப் பிடித்து விசாரிக்க, அவனையும் வெகுவாக முயற்சி செய்து வாயைத் திறக்க வைத்தனர்.

மாணவர்களை எப்படிச் சங்கிலித் தொடராக வாங்க வைத்தார்களோ, அதே போல் விற்பவர்களும் சங்கிலித் தொடராகத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

அவன் தனக்கு விநியோகம் பண்ணும் இன்னொருவனின் பெயரைச் சொன்னான்.

அவன் சொன்ன பெயர் “வெற்றி”.