மனதோடு உறவாட வந்தவளே – 24(Final)

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 24

ஜீவா ஏதோ நினைத்தது போல விலகி அமர தனு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் பார்வை புரிந்து “முதலில் நாம இன்னும் பேசிக்கலாம்டா. இதை என்னைக்கு வேணும்னாலும் பகிர்ந்துக்களாம்” என்று கட்டிலைக் காட்டி சொன்னவன், “ஆனா இத்தனை நாளும் இருந்ததைப் போல இனியும் வேணாம். முதலில் மனசை முழுசா பகிர்ந்துப்போம்” என்றான்.

“நீயே என் மனசை படம் பிடிச்சது போல எல்லாத்தையும் சொல்லிட்ட. ஆனாலும் என் மனசை நானே சொல்லி கேட்கும் போது உனக்கும் எனக்கும் இடையில் இத்தனை நாளும் இருந்த கண்ணுக்கு தெரியாத திரை விலகும்னு எனக்குத் தோணுது.

அதுக்கு நான் பேசியே ஆகணும்” என்று சொல்லி விட்டு… “இத்தனை நாளும் நான் பேசாம இருந்து உன்னைத் துடிக்க வைச்சதுபோல நான் இனியும் நடக்க விட மாட்டேன்” என்றான்.

“ம்ம் சரி சொல்லுங்க” என்றவள், அவனை விட்டு விலகி அமர்ந்து கலைந்திருந்த முடியை ஒதுக்கி விட்டுக் கொண்டவளின் மனதில் அவன் சற்று முன் தன் காதலை சொல்லி தன்னைத் தித்திக்க வைத்ததை நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

தனுவின் முகத்தில் வெட்கம் சூழ, அவளின் உதட்டில் புன்னகை தவழ துவங்கியது.

அந்தப் புன்னகையுடனேயே ‘அதிரடி மன்னன்’ என்று முணுமுணுத்தாள்.

அவள் ஏதோ சொல்லியது ஜீவாவின் காதிலும் விழ… அவனும் நேராக அமர்ந்து “என்ன முணங்குற?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம், சொல்ல முடியாது” என அவள் முகத்தை அவனிடம் காட்டாமல் திரும்பினாள்.

அவளைத் தன் புறம் திருப்பியவன், “இப்ப சொல்றியா? இல்ல” என இழுத்தவன், அவளையும் சேர்த்து தன் பக்கம் இழுத்தான்.

“ச்சு போதும்” என அவனை விலக்கியவள். “அதிரடி மன்னன்னு சொன்னேன்” என்றாள்.

“என்னது! அதிரடி மன்னன்னா? நிஜமாவா? இல்ல வேற சொன்னியா?” எனக் கேட்டான்.

“இல்லையே! அதான் சொன்னேன். வேற சொல்லையே? ஏன் இப்படிச் சந்தேகத்தோட கேட்குறீங்க?” எனக் கேட்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நீ என்னை ‘அமைதி மன்னன்’னு தானே சொல்லுவ? இப்ப இப்படிச் சொல்றியேனு கேட்டேன்”.

“ஹேய்! உங்களுக்கு எப்படி அது தெரியும்?” என ஆச்சரியமாகக் கேட்டாள்.

“நீ சத்தமா சொன்னா என் காதில் விழாதா? நம்ம கல்யாணமான மறுநாள் நீ சொன்னதைக் கேட்டேன்” என்றான்.

“என்ன! அப்பயே தெரியுமா? ஆனா இத்தனை நாளில் ஒரு நாள் கூட நீங்க தெரிஞ்சதா காட்டிக்கலையே?” எனக் கேட்டாள்.

“அது” என்றவன் அடுத்துப் பேசாமல் இருந்தான்.

அவன் பேச்சை நிறுத்தவுமே அவளுக்குப் புரிந்தது. ‘இப்போது பேசும் அளவில் கூட அவன் முன்பு பேசியது இல்லையே? அதனால் தான் என்பது புரியவும்’ அவன் நிறுத்திய பேச்சை அவள் தொடர்ந்தாள்.

“நீங்க மட்டும் எனக்கு ஸ்பெஷல் பேரு வைக்கலையா? அது போலத் தான்” எனச் சொல்லி பேச்சை மாறினாள்.

அத்தோடு “எப்படி அது எனக்குப் பேர் வச்சீங்க? அன்னைக்குக் கூடச் சொன்னீங்க, இப்பவும் சொன்னீங்க, அதிசயம் தான்!” என்றாள்.

‘அன்று’ எனத் தனு சொல்லவும் ஜீவாவிற்கு அந்த நேரத்தை நினைத்து உடல் இறுகியது. பின்பு சிறிது நேரத்தில் தளர்ந்த உடலுடன் அவளின் பேச்சுக்குச் செவிச் சாய்த்து “ஏன் இதில் என்ன அதிசயம்?” என்றான்.

அவனின் உடல் இறுகலையும் பின்பு தளர்ந்ததையும் கண்டாலும் பேச்சை மாற்ற விரும்பாமல் “உங்களுக்குத் ‘தனு’னு கூப்பிடத்தானே பிடிக்கும்” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம், தனுவும் பிடிக்கும். அதை விட ஸ்ரீம்மு ரொம்பப் பிடிக்கும்” என்றான்.

“அப்புறம் ஏன் அதை வச்சு எப்பயேயும் கூப்பிட மாட்டிங்கிறீங்க? அன்னைக்குப் பிறகு இன்னைக்குத் தான் சொல்லிருக்கீங்க!”

“அது ஸ்பெஷல் பேர்டா. அதை எப்பவாவது ஸ்பெஷலா கூப்பிட்டாத்தான் அழகு” என்றான்.

“ஓ!” என இதழ் குவித்துக் கேட்டாள்.

அவளின் இதழின் அழகில் தன்னை அறியாமல் அவனின் கைகள் நீண்டு அந்த இதழ்களை வருடிக் கொடுத்த படி “என்ன ஓ?” எனக் கேட்டான்.

அவனின் விரல்களை அசைய விடாமல் பிடித்தவள் “அது என்ன ஸ்ரீம்மு” எனக் கேட்டாள்.

“அது ‘ஸ்ரீ, அம்மு’ எனக்கு ‘ஸ்ரீ’யும் வேணும் ‘அம்மு’வும் வேணும். இரண்டையும் தனியா பிரிச்சு கூப்பிட பிடிக்கலை. அதான் இரண்டையும் சேர்த்து ஸ்ரீம்மு” என்றான்.

“வாவ்! இன்னைக்கு நிறைய விளக்கம் வருதே” என உற்சாகமாகச் சொன்னாள் தனு.

அதைக் கேட்டதும் முகம் வாடியவன், “இதுக்கு முன்னாடி உன்கிட்ட எதுவும் சொல்லாம, சரியா பேசாம இருந்து உன்னை ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன்ல?” என வருத்ததுடன் கேட்டான்.

அவனின் வருத்தத்தைப் போக்கும் விதமாக “என்ன ரஞ்சன் இது? உங்க நேட்சர் அது. அதுக்காக வருந்துவீங்களா என்ன? அதோடு நீங்க பேசாம இருந்தது எனக்குக் கஷ்டமா தான் இருந்துச்சு. உங்களைப் போலச் சிலர் இருக்கத் தான் செய்வாங்க. அவங்க எல்லாம் வெளியே சரியா பேசாம இருந்தாலும் அவங்க மனசுக்குள் தன் உறவுகள் மேல் ரொம்பப் பாசம் வச்சிருப்பாங்க.

அதை வெளியே காட்ட மாட்டாங்கன்னு சொல்றதை விட அவங்களுக்குக் காட்ட தெரியாது. அதைப் போல் நீங்களும் டிப்ரஷன் இருந்த நாட்களில் கூட ஏதாவது ஒரு விதத்தில் உங்க அன்பை எனக்கு உணர்த்த தான் செய்தீங்க. அதனால சும்மா கவலைப்படாம இருங்க” என்று அவனைச் சமாதானப் படுத்தினாள்.

அவளின் சமாதானத்தில் நெகிழ்ந்து, தனுவின் தோளில் கை போட்டு அணைத்த ஜீவா, “நீ என் மனைவியா கிடைக்க நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கணும் தனு” என்றான்.

“ஓ! அப்படியா?” என அவள் கேலியாக உதடு சுழிக்க…

அந்த உதட்டை பிடித்து இழுத்தவன் “என்ன கிண்டலா?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் உதட்டை பிடித்தப்படியே இன்னும் தன் அருகில் இழுத்தான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஹேய்! என்ன சும்மா, சும்மா இழுத்துக்கிட்டு இருக்கீங்க?” என அவன் கையில் ஒரு அடி போட்டவள் நகர்ந்து அமர்ந்தாள்.

“இனி தள்ளி, தள்ளி உட்கார்ந்தா நான் அப்படித்தான் செய்வேன். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் உட்காரு” என்றான்.

அவள் நகர்ந்து அமரவும் “நான் மௌனசாமியாரா இருந்து உன்னைப்படுத்தி வச்சது போல வேற வீட்டில் இது மாதிரி நடந்திருந்தா நிச்சயம் அந்தக் கணவன், மனைவிக்கிடையில் பெரிய பிரச்சனை வந்திருக்கும். ஆனா நீ என்னை எவ்வளவு பொறுமையா ஹேண்டில் பண்ணி இப்ப இந்த அளவுக்கு நான் பேசுற மாதிரி மாத்திருப்ப. அதுக்கு நான் உண்மையிலேயே பெருமைப்பட்டுத்தான் ஆகணும்” என்றான்.

“இல்லை ரஞ்சன். நான் மட்டும் இல்ல. நிறையப் பெண்கள் என்னைப் போல இருக்கத் தான் செய்வாங்க. அவங்களும் அப்படிப் பொறுமையா இருந்து தன் கணவனைச் சரி பண்ண தான் செய்திருப்பாங்க. நான் மட்டும் உசத்தி இல்லை” என்றவள்,

பின்பு அவனைப் பார்த்து லேசாகக் கண் சிமிட்டி “இல்லையா நமக்கு வாய்ச்சது அவ்வளவு தான்னு பொறுத்துப் போய்ருவாங்க” என விளையாட்டு போலச் சொன்னவள், பின்பு சீரிஸாக “ஆனா அப்படி இருக்குறது தான் உண்மையிலேயே ரொம்பக் கஷ்டம். அப்படி இருக்க ரொம்பப் பொறுமை வேண்டும்” என்றாள்.

“ஹ்ம்ம் யார் வேணா எப்படி வேணா இருக்கட்டும். எனக்கு என் ஸ்ரீம்மு உசத்திதான்” என்றவன் தொடர்ந்து, “கொஞ்ச நேரத்துக்கு முன்ன நான் உன்மேல வச்ச காதலை எப்படி எல்லாம் நீ உணர்ந்தேனு சொன்னே இல்ல? அதில் ஒன்னை மிஸ் பண்ணிட்ட” என்றான்.

“என்னது? வேற என்ன?” எனத் தனு யோசித்த படியே கேட்டாள்.

“அது நான் முதல் முதலா உன் போட்டோ பார்த்தே மயங்கினதை தான்” என்றான்.

“என்ன?” எனத் தனு முழித்தபடி ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“ம்ம் ஆமா. அன்னைக்கே இங்க பிக்ஸ் ஆகிட்ட” எனத் தன் நெஞ்சை தொட்டு காட்டியவன், “அன்றையில் இருந்து என் நினைவிலும் சரி, கனவுலயும் சரி, நீ தான் நீ மட்டும் தான் இருந்த” என்றவன் தொடர்ந்து,

“அன்னைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வந்தப்ப என் கண்ணு அதிகமா இருந்தது உன் மேல மட்டும் தான்” என்றான்.

“என்னது இது? எனக்கு ஷாக் மேல ஷாக் கொடுக்குறீங்க? நான் அன்னைக்கு உங்களுக்குப் பிடிக்கமா எதுவும் வந்தீங்களோனுல நினைச்சேன். அப்படி ஒரு சம்பிரதாயப் பார்வை பார்த்தீங்க!” என்றாள்.

“பிடிக்காமயா? பிடிக்கலைனா நான் வந்துருக்கவே மாட்டேன். அது அப்படிப் பார்த்ததுக்குக் காரணம் நீ எனக்கே உரியவளா என்கிட்ட வந்த பிறகுதான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நினைச்சேன். அதான் அப்படி இருந்தேன். அப்ப என்ன இருந்தாலும் உங்க அப்பா, அம்மாவோட பொண்ணு மட்டும் தானே? அதான் என்னாலே ரொம்ப ஆர்வமா பார்க்க முடியலை” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் ஜீவாவின் கண்ணியத்தை நினைத்து நெகிழ்ந்தவள் அவர்களுக்குள் இருந்த சிறு இடைவெளியையும் குறைத்து மனம் நெகிழ காதலுடன் அவனை அணைத்திருந்தாள் தனுஸ்ரீ.

அதை இருவரும் சிறிது நேரம் ரசித்து விட்டு விலகி அமர்ந்தனர்.

பின்பு சில நிமிடங்கள் கழித்து “ஆனாலும், நீங்க இவ்வ்வ்வளவு நல்லவரா இருக்கக் கூடாது” எனக் குரலில் கேலி இழையோட சொன்னாள்.

“என்ன உனக்கு நக்கலா? ஆனா அப்படிப் பார்க்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத் தான் தெரியும்” என்றான் ஜீவா.

“சரி சரி கேலி பண்ணல. மேலே சொல்லுங்க” என்றாள்.

ஜீவா விட்டதில் இருந்து சொல்ல ஆரம்பித்தான்.

“அப்புறம் புடவை எடுத்த அன்னைக்கும் நம்ம கல்யாணம் நடந்தப்பவும் அப்படித் தான். அதுவும் கல்யாணம் முடிஞ்சு எனக்கே எனக்கா நீ மாறின அன்னைக்கு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தையால் வடிக்க முடியாது” என்றான்.

”அதுக்கு அப்புறம் நீ சொன்ன மாதிரி நீ அழுகுறப்ப எல்லாம் எனக்கு மனசை பிசையிற போலக் கஷ்டமா இருக்கும். உன்கிட்ட கோபப்பட்டுட்டு அப்புறம் நிறைய நாள் வருத்தப்பட்டிருக்கேன்.”

“அதுவும் நீ பேசாம இருந்தது எனக்கு ரொம்ப வலிச்சது தாங்கவே முடியல. ஏன் நீ என் கிட்ட பேச மாட்டீங்கிறனு அதுக்கு வேற கோபம் வரும். உன் மௌனத்தைத் தாங்க முடியாத தவிப்பு எனக்குள்ள அதிகரிக்க ஆரம்பிச்சது.”

“அதோட நீ என் அருகாமையில் இருந்து வேற விலகவும் ஏதோ சொல்லத் தெரியாத வலியா இருந்தது. அன்னைக்கு நைட் என் அருகாமையை விரும்பாம நீ அவாய்ட் பண்ணினப்ப ஏதோ கோபத்தில் உனக்கு விருப்பம் இல்லைனு நீ சொல்லியும் உன்கிட்ட தப்பா நடந்துக்க முயன்றது ரொம்பவே தப்பு. அப்ப ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் அப்படிப் பக்கத்தில் வந்துட்டேன். ஆனா அதன் பிறகு நானா இப்படின்னு வெட்கி போகுற போல என் மனசு என்ன காரியம் பண்ண இருந்த மடையா? மனைவியா இருந்தாலும் விருப்பம் இல்லைன்னு சொன்ன பிறகும் எப்படி நீ அப்படிச் செய்யலாம்னு கேள்விக் கேட்டு என் மூளை எல்லாம் குடைய ஆரம்பிச்சது போல இருந்தது. அன்னைக்கு நைட் முழுவதும் தூங்காம மனசு கேட்ட கேள்வி தாங்க முடியாம தவிச்சேன்.”

“மறுநாளும் ஆபிஸ்ல இருந்த பொழுது எல்லாம் உன் ஞாபகம் மட்டும் தான். அன்னைக்கு நைட் வீட்டுக்கு வந்தா எங்கே மறுபடியும் உன்னைக் காயப்படுத்திருவேனோன்னு பயம் வந்திருச்சு. அதுக்குப் பயந்து ஓடி ஒழியிறது போல வீட்டுக்கு வராமல் இருந்தேன். எனக்கு ஏற்கனவே எங்கே உன்னைக் காயப்படுத்திருவேனோன்னு பயம் இதுல ஆனந்த் வேற வீட்டுக்கு வானு சொல்லி அடம் பிடிக்கவும், எங்க இருந்து தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்ததுன்னு தெரியலை. அப்படி மூர்க்கத்தனமா மாறிட்டேன்.

ஆனா அவ்வளவு ஏன் கோபம் வந்ததுன்னு அப்ப தெரியல. ஆனா டிப்ரஷன்ல தான் அப்படி இருந்திருக்கேன்னு இப்ப புரியது. நீ பேசாம இருந்தப்ப தான் மௌனத்தோட வலி எனக்குப் புரிஞ்சது. நான் அப்படி இருந்தப்ப உனக்கும் அப்படிதானே இருந்திருக்கும்? சாரிடா” என்றவன் தொடர்ந்து,

“அதுவும் என்னைக் காணாம நீ எப்படித் துடிச்சு போய்ருப்ப? அன்னைக்கு நைட்டே வீட்டுக்கு வந்திருந்தாலும் நிச்சயமா உன்னை ரொம்பக் காயப்படுத்திருப்பேன்.”

“நீ சண்டை போட்டப்ப தான் மண்டைல அடிச்சது மாதிரி உறைச்சது. உன்கிட்ட என் மனசை கூடக் காட்டாம எவ்வளவு உன்னை வேதனைப் படுத்திருக்கேன்னு. அதுவும் ஏற்கனவே நீ பேசாத கோபம். இதில் நீ உன் மனசை நான் காதலிக்கவே இல்லைங்கிறது போலச் சொல்லவும், அந்த வார்த்தையை என்னால தாங்க முடியாம அடிச்சிட்டேன்”

“அப்போ நீ கெஸ் பண்ணினது சரிதான். நீ கன்னத்தில் கை வச்சுக்கிட்டு நானா அடிச்சேங்கிறதை நம்ப முடியாம நீ திகைச்சு நின்னப்ப தான் என்ன காரியம் செய்துட்டேன்னு தோனுச்சு. அதான் அந்தக் கைக்குத் தண்டனை கொடுக்க டீப்பாய்ல அடிச்சுக்கிட்டேன். அதோட திரும்ப உன்னை அடிச்சுறக் கூடாதேனு பயந்து போய்த் தள்ளி போகச் சொன்னேன். ஆனா அதுவே உனக்கு வினையா போகும்னு நினைக்கலை” என மனம் வருந்திச் சொன்னான்.

அவனின் வருத்தத்தைப் போக்கும் வகையில் அமைதியாகத் தனு அவனின் முதுகை தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தினாள்.

“அதுவும் மாமா உன்னைக் கூப்பிட்டதும், எங்க நீ என்னை விட்டு போய்ருவியோனு எப்படித் துடிச்சிப் போனேன் தெரியுமா? நீ போகலைன்னு சொல்லவும் அவ்வளவு நிம்மதியா இருந்துச்சு. ஆனா திரும்ப அப்பா உன்னை ஊருக்கு கூப்பிட்டதும் எனக்கு அந்த நேரம் உன்னை அடிச்சதுல தான் இத்தனை பெரிய பிரச்சனையா மாறக் காரணம்னு தோனுச்சு. அதான் அந்தக் கைக்குத் தண்டனை கொடுக்கணும்னு திரும்ப அடிச்சுக்கிட்டேன்” என்று சொல்லி முடித்தான்.

ஜீவாவின் மனம் திறந்த பேச்சை அத்தனை நேரமும் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்த தனு “அம்மாடியோ! பேசாம இருந்த உங்களுக்குள்ள இத்தனை காதலான்னு இருக்கு. நல்லவேளை நான் முன்பே உங்க காதலை கண்டு பிடிச்சிட்டேன். இல்லனா நீங்க இப்ப சொன்ன பிறகுதான் உங்க காதல் எனக்குத் தெரிஞ்சிருந்தா. எனக்கு அதிர்ச்சில நெஞ்சே வெடிச்சிருக்கும்” என்றாள் கேலி போல.

கேலியை ரசிக்காமல் அவள் அப்படிச் சொன்னதும் “இப்ப நீ என்கிட்ட அறை வாங்க போறே” என்றான் கோபமாக.

“ஏன்?” எனத் தயங்கியவாறே தனு கேட்க…

“நல்ல நேரத்தில் என்ன வார்த்தை பேசுற?” எனக் கடிந்தான்.

“அது” எனத் தனு என்னவோ சொல்ல வர… அவள் பேச்சை இடையிட்ட ஜீவா “எனக்கே நீ என்ன சொல்லப் போறனு தெரியும்” என்றான்.

“ஓ! தெரியுமா? என்னது சொல்லுங்க பார்ப்போம்” எனத் தனு ஆவலாகக் கேட்டாள்.

“நான் இவ்வளவு நேரம் என் மனதில் உள்ளதை பேசவும் என்னை முழுதாகப் பேசவிட்டு அமைதியா உள்ளவாங்கிக் கொண்ட நீ. நான் பேசி முடிச்சதும் கேலி போலப் பேசினதுக்குக் காரணம் நான் பேசும் போது கொஞ்சம் எமோஷனல் ஆனேன். சோ என் மனதை டைவர்ட் பண்ண கேலி போலப் பேசுறன்னு புரிஞ்சது” என்றான்.

ஜீவா அப்படிச் சொன்னதும் அசந்து தான் போனாள். அவள் மனதை உணர்ந்தவன் போல உண்மையை அப்படியே சொல்லிவிட்டானே? அவனின் இந்த அளவிற்கான மனமாற்றம் தனுவிற்கு மனநிறைவாக இருந்தது.

தனு மன மகிழ்வுடன் அமர்ந்திருக்க அவளை இழுத்து அணைத்துக் கொண்ட ஜீவா “அவள் காதில் என் மனதில் இருக்கும் அழுத்தத்தை எல்லாம் வெளியே வர வைச்சு என் “மனதோடு உறவாட வந்தவள்” நீ. உன்னை இனி பொக்கிஷமா பார்த்துப்பேன் ஸ்ரீம்மு” என்றான் உறுதி மொழி எடுத்துக் கொண்டதை போல.

சிறிது நேரம் தம்பதிகள் மன நிறைவுடன் அணைத்துத் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் உணர்த்திக் கொண்டிந்தார்கள்.

பின்பு தன் கைகளை அவளின் மீது உறவாட விட்ட ஜீவா அவள் காதில் ரகசியமாக “உனக்குச் சம்மதமாடா” எனக் கேட்டான்.

கூசி சிலிர்த்தப்படி ‘ம்ம்’ எனத் தனு சம்மதத்தைச் சொல்ல, அவளின் ரஞ்சன் காதலுடன் தனக்குள் அவளைச் சுருட்டிக் கொண்டான். அவனுடன் சுகமாய் மூழ்கிப் போனாள் தனுஸ்ரீ.


நான்கு வருடங்கள் கழித்து…..

ஜீவாவும், தனுவும் புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்கள். தனுவின் மடியில் மூன்று வயது குட்டி தேவதை மதுனிதா வீற்றிருந்தாள்.

புதுச்சேரிக்கு இப்போது சென்றதற்குக் காரணம் ஜீவாவின் தம்பி ஆனந்தின் திருமணத்திற்கு. பத்து நாட்கள் அங்கே இருந்து ஆனந்தின் திருமணத்தைச் சந்தோசமாகச் செய்து கொடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த் தன் அண்ணனுக்குத் தப்பாத தம்பியாக அம்மா, அப்பா பார்த்த பெண்ணையே இப்பொழுது திருமணம் செய்யத் தயாராகி மேடையில் அமர்ந்திருந்தான்.

திருமண வீட்டில் மூத்த மருமகளாகத் தனுஸ்ரீ அழகாக வலம் வந்து மாமியாருடனிருந்து அத்தனை வேலையிலும் பங்கெடுத்துச் செய்து கொண்டும், அவ்வப்போது தன் பொண்ணும், கணவனும் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்துக் கொண்டும் இருந்த மகளைப் பார்த்துப் பூரித்துத் தான் போனார்கள் சேகரனும், சங்கரியும்.

அவள் வாழ்க்கை அன்றைக்குப் பிறகு எந்த வித குழப்பமும் இல்லாமல் சந்தோஷமா சென்று கொண்டிருப்பதைப் பார்த்து இனியும் அப்படியே தொடர கடவுளை வேண்டியப்படி மகிழ்வுடன் இருந்தார்கள்.

அறிவழகனுக்கும், தமிழரசிக்கும் ஜீவாவின் மாற்றத்தை பார்த்துப் பெருமையாக இருந்தது. அதுவும் அவனின் குட்டி தேவதையை விடாமல் கையில் வைத்துக் கொண்டு, திருமண வேலையைச் செய்து கொண்டும், அவனின் மகள் கேட்கும் அத்தனை கேள்விக்கும் பதிலும் சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிந்தவனைப் பார்க்க, பார்க்க அவர்களுக்கு நிம்மதி பெருகியது.

ஆம்! மதுனிதா அத்தனை கேள்விகள் கேட்டாள். அவள் பார்வையில் படும் அத்தனையிலும் அவளுக்குக் கேட்க ஒரு கேள்வி இருந்தது. அவளுக்குப் பதில் சொல்லும் ‘அகராதி’யாக ஜீவாவை பயன்படுத்திக் கொண்டாள்.

ஜீவாவை இப்போது பார்ப்பவர்கள் ‘இவனா மௌன சாமியாராக இருந்தான்?’ என நினைக்கும் வண்ணம் அவனைப் பேச வைத்தாள் மதுனிதா. ஜீவா அலுவலகம் விட்டு வந்ததும் அவனைத் தொத்திக் கொண்டே திரிபவள், தூங்கும் வரைக்கும் ஏதாவது பேச வைத்துக் கொண்டே இருப்பாள்.

இப்பொழுது திருமணத்தில் ஜீவாவும், தனுவும் வேறு, வேறு பக்கம் நின்று கல்யாண வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் கண்கள் தங்கள் துணையை அடிக்கடி பார்த்துக் கொண்டது.

ஆனந்த் தாலிக்கட்டும் பொழுது இருவரும் அருகருகே நின்று தங்கள் தேவதையுடன் சேர்ந்து ஆனந்தின் திருமணத்தை மனம் மகிழ கண்டார்கள்.

திருமணம் முடிந்து மேலும் நான்கு நாட்கள் அங்கே இருந்து விட்டு இப்போது சென்னை வந்து கொண்டிருக்கிறார்கள்.

தனுவின் மடியில் இருந்த மதுனிதா இதுவரை “அந்த மரம் எல்லாம் ஏன் நம்ம கூடவே வருது? ரோட்டில் ஏன் கோடு கோடா போட்டுருக்காங்க? என்பது போலப் பார்ப்பதை எல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டே வந்தவள், தன் தந்தையிடம் பதிலை வாங்கிக் கொண்டுதான் அவனை விட்டாள்.

அவன் அப்படிப் பதில் சொல்லும் போதெல்லாம் தனுவின் இதழில் ஒரு புன்னகை இழந்தோடிக் கொண்டே இருந்தது.

மகளுக்குப் பதில் சொன்னாலும் தனுவின் புன்னகையையும் கவனித்தான் ஜீவா.

மதுனிதா தந்தையின் பதிலைக் கேட்டு விட்டு இப்போது தூங்கிக் கொண்டு வந்தாள்.

அவள் தூங்குவதைப் பார்த்து விட்டு “என்ன தனு? சிரிப்பு அதிகமா இருக்கே என்ன விஷயம்? சொன்னா நானும் சிரிப்பேன்” எனக் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்கவும் இன்னும் அதிகமாகச் சிரித்தவள் “ஒன்னும் இல்லை” எனச் சொல்லிவிட்டு “எனக்குத் தூக்கம் வருது” எனச் சீட்டில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள்.

தனுவின் நடிப்பை பார்த்து “ஹேய்! என்ன வேலையாடுறியா? சொல்லிட்டு தூங்குடா” என்றான்.

கண்ணைத் திறக்காமல் “நான் தூங்கிட்டேன்” என மட்டும் தனு சொல்ல,

“இரு உன்னை வீட்டில் போய்ப் பார்த்துக்கிறேன்” என்ற ஜீவா அதன் பிறகு கார் ஓட்டுவதில் மட்டும் கவனத்தை வைத்தான்.

பத்து மணி அளவில் வீடு வந்து சேர்ந்தார்கள். மதுனிதா நன்றாகத் தூங்கவும் அவளைப் படுக்கையில் விட்ட தனு குளியலறை சென்று தன்னைத் தூய்மை படுத்திவிட்டு வந்தாள். அடுத்து தானும் உடை மாற்றி விட்டு வந்த ஜீவா தனுவின் அருகில் வந்தவன் அவளைப் பிடித்துத் தோளில் கை போட்டு தன்னோடு இறுக்கிக்கொண்டே “ம்ம், இப்ப சொல்லுங்க மேடம். என்ன அப்படி ஒரு சிரிப்பு?” எனக் கேட்டான்.

அவன் கையைத் தன் மேல் இருந்து எடுத்து விட முயன்று கொண்டே “அதெல்லாம் சொல்ல முடியாது” என்ற தனு இப்பொழுதும் அப்போது போலவே சிரித்தாள்.

“ஹேய்! என்னனு சொல்லிட்டு சிரிமா” என ஜீவா பாவம் போலக் கேட்டான்.

அவன் பாவனையைப் பார்த்து ‘ஏதோ போனால் போகிறது’ என்பது போல “இல்ல நீங்க குட்டிக்குப் பதில் சொல்லும் போதெல்லாம் நீங்க பேசாமையே என்னைக் கடுப்பேத்தின நாட்களை நினைச்சேனா? அதோட ஒரு ஜோக்ல சொல்றது போல எப்படி இருந்த நீங்க எப்படி ஆகிட்டீங்கன்னு தோனுச்சா அதான் காரில் சிரிப்பு வந்துருச்சு” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் “வரும், வரும்! உனக்கு ஏன் சிரிப்பு வராது? என்னை அம்லு கிட்ட மாட்டி விடுறதே நீ தானே? உனக்குச் சிரிப்பு வர தான் செய்யும்” என்றான் கோபம் போல.

அவனின் பொய் கோபத்தைக் கண்டு “என்ன? நானா? நான் என்ன செய்தேன்?” எனத் தனு பயந்தது போலக் கேட்டாள்.

“பின்ன, நீ தானே அவளுக்கு ட்ரெயினிங்? நீ தானே அவளை இப்படி மாத்தி வச்சிருக்க. இத்தனை நாளும் என்னைப் பேச வைக்கிற வேலையை நீ பார்த்த. இப்போ அந்த வேலையை அம்லுக்குக் கொடுத்திட்டு சிரிக்க வேற செய்ற. உன்னை என்ன செய்தா தகும்? என்றவன் அவள் கன்னத்தைக் கடிப்பதை போலச் செய்தான்.

“ஹேய்! விடுங்க ரஞ்சன் வலிக்குது” எனப் பொய்யாக மெதுவாகக் கத்தியவள், தன் கன்னத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டே “நானெல்லாம் ஒன்னும் சொல்லிக் கொடுக்கலை. நம்ம குட்டிக்கே உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. நீங்க பேசணும்னா என்னவெல்லாம் செய்யணும்னு” என்று சொல்லி விட்டு தோளை குலுக்கினாள்.

அவள் அப்படிச் செய்யவும், “உன்னை!” என இன்னும் இறுக்கி தோளை பிடித்துக் கொண்டவன், “அது என்னமோ தெரியலை எனக்குன்னு வர்றவங்க எல்லாம் என்னை நல்லா புரிஞ்சி வச்சுருக்குறாங்க” எனச் சொன்னவன்,

மனம் நெகிழ்ந்து குரல் கமற “என் வாழ்வை ‘வண்ண மயமா மாற்றும் தேவதைகள்! நீங்க இரண்டு பேரும்! உங்களை எனக்குக் கொடுத்ததுக்குக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்” என்று விட்டு,

“நீ என் ‘மனதோடு உறவாட வந்தவள்’னா, நம்ம அம்லு என் வாழ்க்கையை இன்னும் அர்த்தமாக்க வந்தவள்” என்று சொல்லி தனுவை அணைத்துக் கொண்டான்.

அவனின் குரலில் கமறலை உணர்ந்த தனு அவன் மன நிலையை மாற்ற, தன்னை அணைத்திருந்தவன் காதில் “உங்க வாழ்க்கையை அர்த்தமாக்க நம்ம அம்லு மட்டும் போதுமா?” எனக் கிசுகிசுத்தாள்.

அவளின் கிசுகிசுப்பில் தன்னிலை அடைந்தவன் “ஹ்ம்ம்! இன்னும் ஒருத்தரும் இருந்தா நல்லாத்தான் இருக்கும் ஸ்ரீம்மு” என்று சொல்லிக்கொண்டே தனுஸ்ரீயை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றான் ஜீவரஞ்சன்.

ஜீவரஞ்சனின் மனதோடு சந்தோஷமாக என்றும் உறவாடுவாள் தனுஸ்ரீ.

***சுபம்***