மனதோடு உறவாட வந்தவளே – 22
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 22
மருத்துவமனையில் அன்றைய கவுன்சிலிங்கை முடித்துக் கொண்டுவிட்டு நால்வரும் வீடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்கள்.
ஆனந்திற்குப் படிக்க வேண்டியது இருந்ததினால் அவன் அன்று காலையிலேயே புதுச்சேரிக்கு கிளம்பிச் சென்று விட்டான். அறிவழகனும், தமிழரசியும் இன்னும் சில நாட்கள் மட்டும் இங்கே இருக்க முடிவு செய்திருந்தார்கள்.
“எப்படிப் பீல் பண்ற ஜீவா? டாக்டர்கிட்ட பேச எதுவும் கஷ்டமா இருந்ததா?” எனக் கேட்டார் அறிவழகன்.
“இல்லப்பா ஒன்னும் கஷ்டமில்லை. பிரண்ட்லியா பேசினார். மனசை ரிலாக்ஸா வச்சுக்கச் சில டிப்ஸ் கொடுத்துருக்கார். அதை எல்லாம் தொடர்ந்து செய்தாலே போதுமாம் மன அழுத்தம் குறைஞ்சிடும்னு சொல்லிருக்கார்” என்று பதில் சொன்ன ஜீவா தன் அருகில் அமர்ந்திருந்த தனுவின் கையைப் பற்றிக் கொண்டு வந்தவன் அதை அழுத்திக் கொண்டு “ஆனா நான் உங்க எல்லாருக்கும் ரொம்பக் கஷ்டம் கொடுத்துட்டேன். அதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்றான்.
“ஹ்ம்ம் புரியுது ஜீவா. ஆனா நடந்து முடிஞ்சதை நினைச்சு வருத்தப்படுறதை விட்டுட்டு இனி நடக்கப் போறதை மட்டும் பாரு. முடிஞ்சு போனதை நினைச்சா இப்ப உள்ள இதத்தை ரசிக்க முடியாது. என்ன விஷயமானாலும் மனசு விட்டு பேசிப் பழகு அதுவே போதும். இனி உன் வாழ்க்கையை எப்படியெல்லாம் சந்தோசமா அமைச்சுக்கிறதுனு மட்டும் யோசி” என்றார் அறிவழகன்.
“சரிப்பா” என்ற ஜீவா அப்படியே சீட்டில் கண் மூடி சாய்ந்து அமர்ந்தான். கண் மூடி இருந்தவன் மனதில் ராகவை பார்த்துவிட்டு கிளம்பும் முன் அவன் சொன்ன விஷயம் ஓடியது.
“நான் இப்ப உங்ககிட்ட சொன்னேன். அன்றாட வாழ்க்கையில் யாருக்கு எப்ப வேணும்னாலும் ஸ்ட்ரெஸ் வரலாம். ஆனா அவங்க எல்லாம் ஏதாவது ஒரு வழியில் தங்கள் கவனத்தைச் செலுத்தி தங்கள் மனதை சரி படுத்திக்குவாங்கன்னு” என ஜீவாவைப் பார்த்து சொல்லவும்,
ஜீவா ‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்டினான். ‘ஏன் திரும்பவும் சொல்கிறார்?’ என நினைத்துக் கொண்டே.
“இதை நான் திரும்பச் சொல்றதுக்குக் காரணம் இதுக்கு உதாரணமா உங்க கூடவே ஒருத்தர் இருக்கார்ன்னு சொல்றதுக்குத் தான்” என்றான்.
ராகவ் அப்படிச் சொல்லவும் ‘என்ன என் கூட இருப்பவரா? யார் அது?’ எனக் குழம்பிய படி, “யாரை டாக்டர் சொல்றீங்க?” எனக் கேட்டான்.
“இன்னும் சிறிது நாட்கள் நீங்களும் இப்படியே இருந்து தனுவும் உங்களுக்கு என்னனு தெரிஞ்சுக்காம இருந்திருந்தா அவங்களுக்கும் மன அழுத்தம் வந்திருக்க வாய்ப்பு இருக்கு. இதைக் கன்பார்ம்மா வரும்னு சொல்லலை. ஆனா அவங்களுக்கு வர அளவுக்கு உங்களைப் பத்திய குழப்ப சிந்தனை அவங்களுக்கு இருந்திருக்கு” என்ற ராகவ் மேலும்,
“எப்படிச் சொல்றேன்னா என்கிட்ட பேசும் போது அவங்க கிட்ட அத்தனை பதட்டம் டென்ஷனை பார்த்தேன். அப்புறம் நித்யாகிட்ட கூட அவங்க சில நாள் பேசாம தவிர்த்ததை வச்சும் தான். அது மட்டும் இல்லாம உங்களுக்குக் காத்திருக்கிறேன்னு சொல்லி அவங்களுக்கும் தூக்கமின்மை இருந்திருக்கு. அதோட நீங்க ஏன் அப்படி நடந்துக்குறீங்கனு தெரியாத டென்சன். உங்க பிரண்ட் வந்து அவங்க கிட்ட பேசுவதற்கு முன் உங்களைப் பத்தி வீட்டு ஆளுங்ககிட்ட கூடச் சொல்ல விருப்பம் இல்லாம அவங்களுக்குள்ளேயே வச்சுக்கிட்டதும் இல்லாம அவங்ககிட்ட மறைக்க அவங்க பட்ட கஷ்டம், எல்லாம் சேர்ந்து தனுவிற்கும் வந்திருக்கலாம்னு சொல்றேன்”
“அப்புறம் உங்க பிரண்ட் வந்து பேசவும் உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியவும் அவங்க மனசு உங்களை எப்படிச் சரி பண்றதுனு யோசிக்க ஆரம்பிச்சதுல தான் அவங்க மனசு டைவட் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா நிச்சயம் அவங்களுக்கும் பாதிப்பு வந்திருக்கும்”
“அதுதான் நேத்துச் சண்டை போடும் போது அவங்க உங்களைப் பேச வைக்க முயற்சி எடுக்குறேன்னு அவங்க மனதில் இத்தனை நாளா பாரமா அழுத்திட்டு இருந்ததை எல்லாம் கொட்டி இருக்காங்க. அவங்க வாய் விட்டு சொல்லிவிடவும், தான் அவங்ககிட்ட இன்னைக்குக் கூடுதல் தெளிவு வந்துருக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்குள்ள சண்டை வந்து அடிப்பட்டது வருத்தமா இருந்தாலும், அந்தச் சந்தர்ப்பம் தான் உங்க இரண்டு பேருக்கும் மருந்தாவும் இருந்திருக்கு” என்றான் ராகவ்.
டாக்டர் சொன்னதை எல்லாம் கேட்ட ஜீவா அப்படியே உறைந்து போய் அமர்ந்து விட்டான். தன் கைகளால் நெற்றியை தடவி விட்டப்படி “இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலை டாக்டர். வேலை தான் முக்கியம்னு இருந்து குடும்பத்தைக் கவனிக்காம விட்டுட்டேன். எனக்குத் தான் வேலையையும், குடும்பத்தையும் பிரிச்சு பார்த்து எப்படி நடந்துக்கணும்னு தெரியாம போயிருச்சு. இப்ப அதனால் எத்தனை கஷ்டம்? தனுவிற்குப் பாதிப்பு வந்திருந்தா நான் என்ன பண்ணிருப்பேன்?” என மனம் வருந்தினான்.
“இதை நீங்க வருத்தப்படணும்னு மட்டும் நான் சொல்லலை ஜீவா. அவங்க நிலையையும் நீங்க யோசிக்கணும்னு தான் சொல்றேன். இனியாவது நீங்க கவனமா இருக்கணும் இல்லையா? அதுக்குத் தான். அதுவும் ஆண்களுக்கு வெளியே நடக்கிறது எல்லாம் வீட்டில் சொல்லுணுமான்னு ஒரு எண்ணம் இருக்கும். ஆனா சில நேரம் சொல்லாம விடுறதுனாலயும் பிரச்சனை வரும்னு புரியறது இல்லை. உங்களுக்கு என்ன பிரச்சனையா இருக்கும்னு நினைச்சே அவங்க உள்ளுக்குள் குழம்பிப் போய் டென்ஷன் ஆகியிருப்பாங்க. அந்த டென்ஷன் எல்லாம் சேர்ந்து தான் உங்க கூடச் சண்டைப் போட்டு இப்படி அடிப்படுற அளவுக்குக் கொண்டு போய் விட்டு இருக்கு” என்றான்.
“ஹ்ம்ம். எல்லாத்துலேயும் அசால்ட்டா இருக்காம இனி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமா இருக்கணும்னு புரிஞ்சிருச்சு. என்னோட மனநிலையை மட்டும் பார்க்காம என்னைச் சுத்தி இருக்குறவங்க மனநிலையையும் நான் கவனத்தில் வைக்கணும்னு புரியுது டாக்டர்” என்றவன், “ தனுக்கு எதுவும் இப்ப பிரச்சனை இல்லையே” என ஜீவா கேட்டான்.
“இல்லை ஜீவா. அவங்க நல்லா இருக்காங்க. ஒரு பிரச்சனையும் இல்லை. உங்களைப் பத்தின கவலை தான் அவங்க டென்ஷனாகக் காரணம். ஆனா இப்போ தான் அவங்களுக்கு இருந்த டென்ஷனை எல்லாம் நீங்க இங்க வந்து குறைச்சிட்டீங்களே? சோ, அவங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இனியும் அவங்க டென்ஷன் ஆகாம பார்த்துக்கிறது உங்க கையில் தான் இருக்கு” என்றான்.
தனுவிற்கு ஒன்றும் இல்லை எனச் சொல்லவும் நிம்மதி பெருமூச்சு விட்ட ஜீவா, “ம்ம் புரியுது டாக்டர் இனி டென்ஷன் ஆகாம பார்த்துக்கிறேன்” என்றான்.
“சந்தோஷம் ஜீவா. சரி இவ்வளவு நேரம் ஒரு டாக்டரா பேசிட்டேன். இனி ஒரு பிரண்டா பேசலாமா?” எனக் கேட்டான் ராகவ்.
“பேசலாம் டாக்டர்” என ஜீவா சம்மதம் சொல்லவும்,
“அதான் பிரண்ட்ன்னு சொல்லிட்டேனே? நீங்க என்னை இப்ப ராகவ்னே கூப்பிடலாம்” என்றான்.
அவன் அப்படிச் சொல்லவும் சிரித்த ஜீவா “ஓகே ராகவ் சொல்லுங்க” என்றான்.
“இன்னைக்கு நிறைய அட்வைஸ் தந்துட்டேன். ஆனாலும் இது சொல்ல வேண்டியது அவசியம்னு படுது. அதுவும் தனு எங்க நித்யாவோட பெஸ்ட் பிரண்ட் வேற. அவங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் சொல்றேன்” எனப் பீடிகை போட்டான்.
எதற்கு இத்தனை பீடிகை என நினைத்தாலும் “பரவாயில்ல சொல்லுங்க ராகவ்” என்றான் ஜீவா.
“எதுக்கு நான் இத்தனை இழுக்குறேன்னு நீங்க நினைக்கலாம். உங்க பர்சனல் பேஸ்குள்ள நுழையுற விஷயமாச்சே அதான்” என்ற ராகவ்,
“உங்களுக்கும், தனுவிற்கும் நிறைய அன்டர்ட்ஸ்டான்டிங் இருக்கு. இரண்டு பேருமே ஒருவர் மேல ஒருவர் அதிகமான காதலை வச்சிருக்கீங்கன்னு புரியுது. ஆனா அதை வார்த்தைகளில் வெளிப்படுத்திக்க மாட்டீங்கிறீங்கன்னு நினைக்கிறேன். அதுவும் நீங்க மௌனமா இருந்த விதம் தனுவை ரொம்பவே பாதிச்சிருக்கும்னு தோணுது. நம்ம இன்பம், துன்பத்தைப் பகிர்ந்துக்கிறது எவ்வளவு முக்கியமோ அதே போலத் தங்கள் அன்பை வெளிபடுத்திக்கிறதும் முக்கியம்”
“அது ஐ லவ் யு னு சொல்லிக்கிட்டா தான் உங்களுக்கு அவங்க மேல காதல் இருக்கும்னு அர்த்தத்தில் சொல்லலை. ஆனால் சில நேரங்களில் வார்த்தையில் அன்பை வெளிப்படுத்துறதும் அன்பை இன்னும் அதிகரிக்க உதவுது. இதுவரை இல்லை என்றாலும் இனியாவது முயன்று பாருங்க” என்றான்.
“ம்ம் சரிதான் ராகவ். இதை நான் நேத்தே புரிஞ்சிக்கிட்டேன். என்னுடைய தவறுகள் என்னன்னு நான் நினைச்சு பார்த்தப்ப இதுவும் எனக்குத் தோன்றிய ஒன்னு தான். இனி நிச்சயம் என் அன்பை புரிய வைக்க முயலுவேன்” என்றான் ஜீவா.
ராகவ் எழுந்து நின்று கை குலுக்கி “ஓகே ஜீவா நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி” என்றான்.
“ஒரு பிரண்டா நீங்க எங்க நலத்தை மனதில் வைத்து பேசினதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் ராகவ்” என்றான் ஜீவா.
“சரி சரி மாற்றி மாற்றி நன்றி சொல்ல வேண்டாம் தனுவை உள்ள கூப்பிடலாம்” என்ற ராகவ் தனுவை அழைத்தான்.
உள்ளே வந்தவளிடம் “இனி ஒன்னும் கவலை இல்லை தனு. இன்னும் ஒரு நாலு நாள் பிறகு வாங்க. ஜீவா புரிந்து கொள்ளும் வேகத்திற்கு இன்னும் இரண்டு, மூன்று கவுன்சிலிங் கூடப் போதும்னு தோணுது” என்றவன்,
“ஆனாலும் நான் சொன்ன டிப்ஸ் எல்லாம் விடாம தொடர்ந்து செய்ங்க. அப்ப தான் நீங்க டிப்ரஷன்ல இருந்து சீக்கிரம் வெளியே வர முடியும்” என முடித்தான் ராகவ்.
“ஓகே டாக்டர்” என ஜீவா சொல்ல… “ரொம்பச் சந்தோசம் டாக்டர்” என்றாள் தனு மகிழ்ச்சியாக.
“ஹ்கும் இனி டாக்டர் இல்லை. நாம முதல்முறை பார்க்கும் போது உன் பெர்ஷனல் சொல்ல நீ தயங்கக் கூடாதுன்னு தான் டாக்டர் சொல்லச் சொன்னேன். இனி நீ அண்ணன்னு தான் கூப்பிடனும் இல்லைனா திவ்யாகிட்ட யார் திட்டு வாங்குறது?” என்றான் ராகவ் விளையாட்டாக.
அவனின் பேச்சில் சிரித்த தனு “சரி அண்ணா” என்றாள்.
ராகவ் சொன்னதை எல்லாம் இப்போது நினைத்து பார்த்த ஜீவா கண்ணைத் திறந்து தன் அருகில் இருந்த தனுவை பார்த்தான்.
அவள் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு வரவும் அவளை இன்னும் நெருங்கியவன் நன்றாக உரசிக் கொண்டு அமர்ந்தான்.
அந்தப் பக்கம் திரும்பி இருந்தவள் தூக்கத்தில் தான் ஜீவா தன் பக்கம் சாய்கிறான் என நினைத்து பார்க்க… அவன் அவளையே கண்களால் பருகிக் கொண்டிருந்ததைப் பார்க்கவும், ‘என்னடா இது புதுசா இப்படி ஒரு பார்வை?’ எனக் கேள்வியுடன் முதலில் திருத் திருவென முழித்தவள்,
பின்பு முன்னே மாமனார், மாமியார் இருப்பதைச் சுட்டிக்காட்டி நகர்ந்து அமர சொன்னாள்.
அவள் சொன்னதைத் தலையாட்டி மறுத்தவன், அவள் கைகளுடன் தன் கையைக் கோர்த்து அவள் தோளில் லேசாகத் தலை வைத்து சாய்ந்தவன் மீண்டும் தூங்குவதாகக் காட்டிக்கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
‘என்ன இப்படிச் செய்கிறான்?’ என நெளிந்த தனு அவனை எழ சொல்லி பேசினால் எங்கே முன்னால் கேட்டு விடுமோ என நினைத்து மௌனமானவள் தன் கையை லேசாக இடிப்பது போல அசைத்தாள்.
ஹ்கும்! அவளின் ரஞ்சன் சிறிது கூட அசையாமல் இருக்கச் சரி தான் என அவனை அப்படியே விட்டு விட்டவள் அவனின் அருகாமையை மனதிற்குள் ரசிக்க ஆரம்பித்தாள்.
அன்றைய இரவில் தனுவின் கை கட்டை மெதுவாக விரலால் வருடிய ஜீவா “சாரிடா தனு” என்றான்.
“பரவாயில்லை ரஞ்சன் அதை விடுங்க. இன்னைக்கு நீங்க எப்படி இருக்கீங்க? எதுவும் கஷ்டமா இருந்ததா டாக்டர்கிட்ட போனது?” எனக் கேட்டாள்.
“இல்லை தனு. டாக்டர் கிட்ட பேசின பிறகு தான் இத்தனை நாளும் இருந்ததை விட இன்னைக்கு மனசு லேசா இருக்கு. எனக்குள் இருந்த அத்தனை அழுத்தமும் இன்னும் போகலைனாலும் ரிலாக்ஸா பீல் பண்றேன். ஆனா உன்னைத்தான் படுத்தி எடுத்துட்டேன் ஸாரிடா தனு” என்றான் வருத்தமாக.
“நீங்க நல்லானதே எனக்குச் சந்தோஷம் தான். ஸாரி எல்லாம் வேண்டாம். இனி எதையும் போட்டு மனசை குழப்பிக்காம ரிலாக்ஸா இருங்க. அது போதும்” என்றாள் அவனின் வருத்ததைப் போக்கும் விதமாக.
அவனைக் கடிந்துக் கொள்ளாத தனுவின் இந்தக் குணம் அவனுக்குக் குற்றவுணர்வை குடுத்தது. ஆனாலும் குற்றவுணர்வில் தவிப்பதை விடத் தானும் கஷ்டப்பட்டு அவளையும் இனி காயப்படுத்த விரும்பாமல் தன் மனதை சமாதானபடுத்திக் கொண்டவன், அவளின் நெற்றியில் முத்தமிட்டு “தேங்க்ஸ் டா” என்றான்.
“எனக்குச் சாரியும் வேணாம், தேங்க்ஸும் வேணாம். தேங்க்ஸ் சொன்னா இது வேண்டவே வேண்டாம்” என்றவள் வேகமாகத் தன் நெற்றியை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.
அவளின் செயலில் சிரித்தவன் “சரி சாரி சொல்லலை. வாபஸ்” என்று சொன்னவன் மீண்டும் தன் இதழை அவளின் நெற்றியில் ஒற்றினான்.
தனுவின் நெற்றியில் முத்தமிட்டு அருகில் இழுத்து இருவர் கையிலும் இடித்து விடாமல் இதமாக அணைத்துக் கொண்டவன் மனதில் தனுவை பற்றி டாக்டர் சொன்னதைச் சொல்ல கூடாது என்னும் முடிவு இருந்தது.
அந்த எண்ணத்திற்குக் காரணம் முன்பை போல எதையும் சொல்லாமல் இருக்கும் குணம் அல்ல. ‘தன்னுடைய செயல் தான் அவளின் டென்ஷனுக்குக் காரணம். அதற்குத் தான் மாறினாலே அவளுக்கு இனி டென்ஷன் வராது’ என அவனுக்குத் தெளிவு வந்ததினால் தான்.
அதுவும் அவள் இதுவரைபட்ட வருத்தங்களே போதும். இனியும் அவளுக்கு எந்தவித குழப்பமும் வராமல் தான் பார்த்துக் கொண்டாலே தங்கள் இருவரின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். அதற்கான வழியை மட்டுமே இனி தான் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதி இருந்தது.
அதே உறுதியுடன் தான் அணைத்திருந்தவளை மெதுவாக விலக்கி அவள் கண்ணோடு கண் சிறிது நேரம் பார்த்தவன் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான்.
அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள் தனுஸ்ரீ.
மேலும் நான்கு நாட்கள் சென்னையில் இருந்த தமிழரசியும், அறிவழகனும் தனுவின் பெற்றோரை பார்த்துப் பேசிவிட்டு ‘இனி பிரச்சனை எதுவும் வராது’ எனச் சொல்லி அவர்களைச் சமாதானப் படுத்தி விட்டு தனுவிற்கு உதவியாக வீட்டு வேலை செய்ய ஆள் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு புதுச்சேரிக்குச் சென்றார்கள்.
அரசி செல்லும் முன் ஜீவாவிடம் “வாழ்க்கையில் வேலை முக்கியம் தான். ஆனா அது மட்டுமே முக்கியமில்லை ஜீவா. நீங்க ஆண்கள் உழைக்கிறதே உங்க கூட வாழ்றவங்களுக்காகத் தான். அவங்க கூடக் கொஞ்சம் கூட நேரம் செலவளிக்காம வேலை, வேலைன்னு ஓடி என்ன பலன் இருக்கு? பணம் காசு சம்பாதிக்கலாம். ஆனா போன காலத்தை யாராலும் திருப்பிக் கொண்டு வர முடியாது. வேலை பார்க்குறதோட சேர்த்து குடும்பத்துக்கும் நேரம் செலவிடப் பழகிக்கோ” என்றார்.
“புரியுதுமா. இனி நீங்க புது ஜீவாவை தான் பார்ப்பீங்க” என்றான் ஜீவா.
ஜீவாவிடம் தெரிந்த தன்னம்பிக்கையுடனான தெளிவு பெற்றவர்களின் மனதை நிறைத்து அவர்களைச் சந்தோஷமாகக் கிளம்ப வைத்தது.
அவர்கள் சென்ற மறுநாள் தனுவின் வீட்டிற்கு வந்த தருண் தன் அக்காவிடம் மட்டும் பேசிக் கொண்டு ஜீவாவிடம் முகத்தைக் கோபமாகக் காட்டிக் கொண்டு இருந்தான். தனு அவன் அப்படி இருப்பதைப் பார்த்து கண்டிக்க…
“விடு தனு அவனை ஏன் திட்டுற? அவனுக்கு என் மேல கோபம். அதான் அப்படி இருக்கான்” என்ற ஜீவா “சாரி தருண்” என்றான்.
ஜீவா சாரி சொல்லவும் “ஹய்யோ! என்ன மாமா நீங்க என்கிட்ட போய்ச் சாரி கேட்குறீங்க?” எனப் பதறினான் தருண்.
ஜீவா சாரி கேட்கவும் இருவரையும் ஒருச்சேர முறைத்தாள் தனு.
அதைக் கவனித்த ஜீவா “இப்ப எதுக்கு நீ முறைக்கிற? நாங்க மாமன், மச்சினன் எதுவும் பேசுவோம். நீ எங்களை ஏன் பார்க்குற? போ போய்த் தருணுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டுவா” என்றான் சிரிப்புடன்.
அவன் அப்படிச் சிரித்துப் பேசுவதை அதிசயம் போலத் தருண் பார்த்தான். ஜீவா முன்பும் பேசுவான் தான் ஆனால் இவ்வளவு இலகுவாகச் சிரித்துப் பேசுவது என்பது அபூர்வம் தான். அதுதான் தருண் அப்படிப் பார்த்தான்.
தனுவிற்கு அது எதுவும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அவன் அப்படித் தான் இந்த நான்கு நாட்களும் இருப்பதால் அவளுக்குப் பழகிப் போய் இருந்தது.
ஆம்! ஜீவா தன் மனதில் அடைத்து வைக்கும் பழக்கத்தை மாற்ற ஆரம்பித்து விட்டான்.
அதற்கு முதல் படியாகத் தான் சொல்ல நினைப்பதை உடனே சொல்ல பழகிக் கொள்கிறான். அப்படி உடனே மாற அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இனியும் அவன் யாருக்கும் கஷ்டம் கொடுக்கத் தயார் இல்லை. தான் கஷ்டப்பட்டாலும் அது தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே என நினைத்துத் தன்னைக் கொஞ்சம், கொஞ்சமாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறான்.
தனு எழுந்து செல்லவும், தன்னைப் பார்த்த தருணை “என்ன தருண் என்னை அப்படிப் பார்க்கிற? சொல்லு இன்னும் என் மேலே கோபமா இருக்கீயா?” எனக் கேட்டான்.
“இப்ப இல்லை மாமா நேத்து தான் அம்மா சொன்னாங்க. அவங்க சொன்னப்ப எனக்குக் கோபம் தான். ஆனா அக்கா உங்களுக்கு எப்படிச் சப்போர்ட்டா பேசினானும் சொன்னாங்க. அவளே சப்போர்ட்டா பேசுறானா, நிச்சயமா உங்க மேல முழுத் தவறும் இருக்காதுன்னு புரிஞ்சது. ஆனா இங்க வந்து அக்கா கையில் கட்டை பார்க்கவும் கஷ்டமாகிருச்சு. அதான் உங்ககிட்ட கோபமா பேசிருவேனோன்னு பயந்து அமைதியா இருந்தேன்” என்றான்.
அவனின் புரிதலில் ஜீவா அமைதியாகிப் போனான். அவனின் அமைதியை பார்த்து “என்ன மாமா, எதுவும் உங்களை ஹட் பண்ணிட்டேனா?” எனத் தருண் கேட்டான்.
“இல்ல தருண் உங்க வீட்டுப் பெரியவங்களில் இருந்து, உன்னில் வரைக்கும் எல்லாரும் பெருந்தன்மையா நடந்துக்குறீங்க. உங்க பெருந்தன்மை என்னைக் குறுகி போக வைக்குது” என்றான் ஜீவா.
அவன் அப்படிச் சொல்லவும் “என்ன மாமா இது? பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? நீங்க எப்பவும் அப்படியே கம்பீரமா இருக்குறதை விட்டுட்டு இப்படியெல்லாம் பேசாதீங்க” என்ற தருண், ஒரு கையால் கஷ்டப்பட்டுத் தனு தட்டை எடுத்து வருவதைப் பார்த்து வேகமாகச் சென்று கையில் வாங்கியவன், “ஏன்கா என்னைக் கூப்பிட வேண்டியது தானே?” எனச் சொல்லிவிட்டு, “இந்த மாமா பேசுறதை பார்த்தீயாகா?” என ஜீவா சொன்னதைச் சொல்லி புகார் வாசிக்க ஜீவாவை முறைத்துப் பார்த்தாள் தனு.
முறைத்துக் கொண்டே “என்ன பெருசா தப்பு செய்தீங்கன்னு இப்படிப் பேசிக்கிட்டு இருக்கீங்க? இதை விடப் பெரிய, பெரிய தப்பு பண்றவன் எல்லாம் அசால்ட்டா இருப்பாங்க. நீங்க உங்களை அறியாமைலேயே செய்த தப்புக்கு எதுக்குக் குறுகி போறேன் எல்லாம் சொல்றீங்க?” எனக் கேட்டாள்.
“அப்படி இல்லை தனு. சின்னத் தப்போ, பெரிய தப்போ அதை அறிந்து செய்தாலும் அறியாம செய்தாலும் தப்புன்னு உணர்ந்தா கண்டிப்பா மன்னிப்புக் கேட்கணும். வேற யாரும் எப்படியும் அசால்டா இருக்கட்டும். ஆனா நான் இப்படித் தான்” என்றான்.
அவன் பேசுவதைக் கேட்டு அவனைக் கண்ணில் காதலுடன் பார்த்தவள் அழகாகச் சிரித்தாள்.
அவனும் தனுவை வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவர்கள் இருவரையும் மாறி, மாறி பார்த்த தருண் தட்டை எடுத்துக் கொண்டு தொலைக்காட்சியின் புறம் தன் கண்ணைத் திருப்பினான்.