மனதோடு உறவாட வந்தவளே – 18

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 18

ஜீவா சொன்னதை நிதின் தனுவிடம் சொல்ல, அவளுக்கோ அவளின் ரஞ்சனை நினைத்துப் பெருமையாக இருந்தது.

“ஜீவா சொன்னது போலவே சரியான நேரத்தில் வேலையை முடிச்சி கொடுத்த காரணத்தைச் சொல்லி அவன் மேல எதுவும் நடவடிக்கை எடுக்காம பார்த்துக்கிட்டான்”

“ரஞ்சிவ்க்கு இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சிட்டாலும் அவன் வேற கம்பெனிக்கு மாற இன்னும் ஒரு மாதம் இருக்குறதால வேற வேலை கொடுத்து மேனேஜர் அவனை வேற டீமுக்கு மாத்திட்டார்” என்றவன்,

“ஜீவாவா இருக்கப் போய் ரஞ்சிவை அப்படியே விட்டுட்டான். அவன் இடத்தில் வேற யாராவது இருந்தா அவனுக்கு வேலையில் ப்ராபளம் வர்றது போலச் செய்திருப்பாங்க. இருந்தாலும் ஜீவா இவ்வளவு நல்லவனா இருந்துருக்க வேண்டாம்” என்றான் ரஞ்சிவை அப்படியே விட்ட ஆதங்கத்துடன்.

அவன் அவ்வாறு சொல்லவும் தனு ‘விடுங்கண்ணா. அவர் சொன்னது போலப் பழிக்குப் பழினா போக முடியும்?” என்றவள் தொடர்ந்து,

“ஏன் அண்ணா அவர் ரஞ்சிவ்கிட்ட அதுக்குப் பிறகு பேசலையா? ஏன் இப்படிப் பண்ணினனு கேள்வி கூடக் கேட்கலையா?“ என விசாரித்தாள்.

“இல்லம்மா அன்னைக்கு அவன் பேசியதை கேட்டு ரொம்ப வருத்தமா தெரிஞ்சான். அப்புறம் அவனுக்கு வாழ்த்து சொன்னவன் தான் அதுக்குப் பிறகு அவன் கிட்ட பேசவே இல்லை. பிறகு ரஞ்சிவ் வேற டீம் போறப்ப என்கிட்ட பேச வந்தான். அப்ப ஜீவாவும் என் பக்கத்துல தான் இருந்தான். ஆனா ரஞ்சிவை கண்டுக்காம அவாய்ட் பண்ணிட்டான்.

நானும் என்கிட்ட இனி பேச வராதேன்னு சொல்லவும் போனவன் தான். அப்புறம் நாங்க அவனைப் பார்க்கலை. ஜீவா அவன் நடந்துக்கிட்ட விதத்தை எப்படி எடுத்துக்கிட்டானே தெரியலை. அவனைப் பத்தி அதுக்கு அப்புறம் சாதாரணமா கூட என்கிட்ட பேசலை. நானும் ஜீவாகிட்ட கேட்டு அவனை வருத்தப்படுத்த வேணாம்னு அதை அப்படியே விட்டுட்டேன்” என முடித்தான்.

அவன் சொல்லதை எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டவள் ‘ஓ’ என மட்டும் சொல்லிவிட்டு ஏதோ நினைவு வந்தது போல வேறு கேட்க ஆரம்பித்தாள்.

“அதான் ப்ராஜெக்டும் முடிஞ்சது. அவர் பிரண்டும் இப்ப கூட இல்லையே. இன்னும் அவர் லேட்நைட் தானே அண்ணா வீட்டுக்கு வர்றார்? அவர் டென்சனும் குறைஞ்சது போலத் தெரியலையே? அப்படியே தான் இருக்கார்” என்றாள்.

“அதைத் தான்மா முக்கியமா சொல்ல வந்தேன். ரஞ்சிவ் வேற இடத்துக்குப் போய்ட்டாலும் அவன் விட்டு சென்ற காயத்தின் வடு ஜீவாகிட்ட ஆழமா பதிஞ்சிப் போயிருச்சு போலன்னு நினைக்கிறேன்மா” என்றான்.

“என்னண்ணா சொல்றீங்க? அந்த அளவுக்கா ரஞ்சன் பாதிக்கப்பட்டிருப்பார். பிரண்டு இப்படிச் செய்துட்டான்னு வருத்தம் இருக்கும் தான். அதோட அன்றாட வாழ்வில் நம்ம இது போல எத்தனை பேரை பார்ப்போம். அதுக்காகவா இப்படிச் செய்வார்?“ என்றாள்.

“நீ சொல்றதும் சரி தான்மா. ஆனா ஜீவா ஏன் இப்படி நடந்துக்குறான்னு தெரியலையே? எதுவும் பேச முடியாத அளவுக்குக் கோபமாவே வேற சுத்துறான். அவன் மனசுல என்ன ஓடுதுனே தெரியலமா” என்ற நிதின் தொடர்ந்து,

“அந்தப் பிராக்ஜெட் வெற்றியை மனசுல வச்சுகிட்டு அந்தக் கிளைன்ட் உடனே ஜீவா தலைமையிலேயே இன்னொரு ப்ராஜெக்ட் கொடுத்துட்டாங்க. அதை முடிக்க இன்னும் மூன்று மாதம் டைமும் இருக்கு. அந்த வேலை எல்லாம் ஜீவா அசால்ட்டா முடிக்கிற வேலைதான். ஆனா ரஞ்சிவ் செய்ததை மனதில் வைச்சுக்கிட்டு கடைசி நேரத்தில் அந்த மாதிரி டென்சனை இழுத்து விட்டுக்கத் தான் தயார் இல்லைன்னு சொல்லி இப்ப இருந்தே தீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டான். அதெல்லாம் நல்லா செய்தரலாம். ஏன் இப்படிப் பயப்படுறனு? கேட்டா முறைப்பு தான் பதிலா வருது“

“ஏற்கனவே அந்த ப்ராஜெக்ட்லையே அவனுக்குச் சரியான தூக்கம் இல்லை. இப்ப திரும்பக் கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம இந்த வேலையைச் செய்திட்டு இருக்கான். அதுவும் இப்ப இந்த நியூ ப்ராஜெக்ட்க்கு என்னையும் சேர்த்து ஐந்து பேர் குழுவில் இருக்கோம். ஆனா எங்களை எல்லாம் சரியான நேரத்திற்கு வீட்டு அனுப்பிட்டு அவன் நடுசாமம் வரை உட்கார்ந்திட்டு இருக்கான். ஏன் இப்படிச் செய்றான்னு ஒன்னும் புரிய மாட்டிங்குது”

“இப்படியே அவன் விடாம வேலை செய்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது? அதான் உன்கிட்ட சொல்லி அவனை நேரத்தோடு வீட்டுக்கு வர வைக்கச் சொல்லலாம்னு வந்தேன்”

“ஹ்ம்ம் சரிண்ணா! நான் ஏதாவது இதுக்குச் செய்ய முடியுதான்னு பார்க்குறேன். ஏன் அவர் நடவடிக்கையில் இத்தனை மாற்றம்னு கண்டுப்பிடிப்போம். அதையும் விட முக்கியம் மூச்சு திணறலை சரி பண்றது. நான் அதுக்கு என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்ணா. எப்படியாவது நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய்க் காட்டுறேன்” என்றாள்.

“ஆமாமா அவன் மூச்சு விடச் சிரமப்படுறது எனக்குச் சாதாரண விஷயமா தெரியலை. அதை முதலில் சரி பண்ண வைக்கனும்னு தான் உன்னைப் பார்க்க வந்தேன்மா” என முடித்தான்.

“உங்களோட நட்பு அவருக்குக் கிடைச்சதுல ரொம்பச் சந்தோசம்ணா. நான் ஏற்கனவே அவரை எப்படி ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டு போறதுன்னு யோசிக்கிட்டு தான் இருந்தேன்ணா. இப்ப நீங்க சொன்னதெல்லாம் வச்சு அதைச் சீக்கரமே செய்யனும்னு தோணுது. நான் பார்த்துக்கிறேன். என்னைச் சந்திச்சு அவர் மேல அக்கறை வச்சு வந்து பேசினதுக்கு ரொம்ப நன்றிண்ணா” என்றாள்.

“எனக்கு நன்றி எல்லாம் வேண்டாம்மா. ஜீவாவும், நீயும் சந்தோசமா இருந்தா போதும்” என்று நிதின் அன்று சொல்லிச் செல்ல அதை இப்போது தன் மாமனார், மாமியாரிடம் சொல்லி முடித்திருந்தாள் தனு.

அவள் சொன்னதைக் கேட்ட அரசி “என்னமா இது ரஞ்சிவா அப்படி நடந்து கிட்டான்? என்னால நம்பவே முடியலமா. ஜீவாவை டென்ஷன் படுத்திப் பார்க்குறதுல அப்படி என்ன அவனுக்குச் சந்தோசம்? அங்க படிக்கும் போது வீட்டுக்கு அடிக்கடி வருவான். ஜீவா பின்னாடியே சுத்துவான். ஆனா இப்படி ஒரு பொறாமையோட எப்படி இருந்திருக்கான் பாரு. அவனை மட்டும் எப்பவாவது பார்த்தேன் நறுக்குன்னு நாலு கேள்வி கேட்பேன்” என்றார். ஆதங்கமும் கோபமுமாக.

“சரி விடு அரசி. ஜீவா சொன்னது போல அவன் புத்தி அவ்வளவு தான். ஒரு சிலருக்கு தன் கூடவே இருக்குற ஆள் தன்னை விட உயர்ந்த நிலைக்குப் போகும் போது இப்படித் தான் எரியும். என் கூடப் படிச்சவன் அவன் மட்டும் என்ன உயர்வு? அவன் மட்டும் எப்படி உயரலாம்னு சில்லியா பொறாமை படுவாங்க. அந்த ஹேட்டகரி போல ரஞ்சிவ்? அவன் பொறாமையால நல்ல நண்பர்களை இழந்துட்டான். அவன் புத்தியை அவன் காட்டிருக்கான். இதுக்கு மேல அவனுக்கு மதிப்புக் கொடுக்கறது போல நாம இனி அவனைப் பத்தி பேச வேண்டாம். நாம இப்ப என்ன பிரச்சனைன்னு பார்ப்போம்” என்ற அறிவழகன் தனுவை பார்த்து,

“எல்லாம் சரிமா! நடந்தது நடந்திருச்சு. ஆனா வீட்டில் எப்படிப் பிரச்சனை வந்தது? உன் மேல எதுக்குக் கோபப்பட்டுச் சுத்திக்கிட்டு இருந்தான்? அவனைச் சரி படுத்துறேன்னு அவனை மேலும் கோபப்படுத்தி இந்த நிலைக்கு இழுத்து விட்டுக்கிட்டயா? “ எனத் தனுஸ்ரீயின் கையைக் காட்டி கேட்டார்.

“ம்ம் சொல்றேன் மாமா” என்றவள் மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

.

நிதின் வந்து சென்ற அன்று வெளிவேலையாகச் சேகரன் சென்றிருந்ததால் அவன் வந்து அவ்வளவு நேரம் பேசி சென்றது எதுவும் அவருக்குத் தெரியாமல் போனது.

அன்று முழுவதுமே நிதினிடம் பேசின விஷயமே தனுவின் மனதினுள் சுழன்று கொண்டிருந்தது.

அதே நினைவில் மாலை வீட்டிற்குச் சென்ற பிறகும் சுற்றிக் கொண்டிருந்தவளை கலைக்க நித்யாவின் போன் கால் வந்தது.

ஜீவா பற்றின ஞாபகத்திலேயே ‘ஹலோ’ என இவள் ஆரம்பிக்க “ போச்சுடா இன்னைக்கும் ஹலோவா? அம்மா தாயி தனுஸ்ரீ நான் போன் போடும்போதெல்லாம் நீ உன்னவர் நினைப்பிலேயே சுத்துவியா என்ன? எங்களையும் கொஞ்சம் ஞாபகத்தில் வச்சுக்கோமா” என அதிரடியாய் ஆரம்பித்தாள்.

அவள் பொரிய ஆரம்பிக்கவும் லேசாகப் புன்னகை இதழ்களில் நெளிய “ஹேய் பட்டாசு! நிறுத்து, உன் கத்தலை. என்ன உன் காத்து இந்தப் பக்கம் எல்லாம் அடிக்குது? உனக்கு இத்தனை நாளா போனும் கையுமா ஒருத்தர் கூடக் கடலை போட மட்டும் தான் நேரம் இருக்குனு கேள்விப்பட்டேனே?” எனத் தனு பதிலுக்கு அவளை வாரினாள்.

ஆம்! நித்யாவிற்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. அவளின் வருங்காலக் கணவனுடன் அவள் பேசிய பேச்சில் போன் கதறிக் கொண்டிருக்கிறது. இருவரும் போனிலேயே மூழ்கி கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருக்கின்றார்கள்.

தனு அதைச் சொல்லி கிண்டல் செய்யவும். ‘ஹிஹி’ என வழிந்தது போலச் சிரித்தவள், “பின்ன உன்னைப் போலவா என்னை நினைச்ச? நாங்க இப்பயே ஒருவருக்கொருவர் மற்றவருக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன எல்லாம் பிடிக்காதுனு தெரிஞ்சுக்கிற முயற்சியில் இருக்கோமாக்கும்” எனப் பெருமையாகச் சொல்லிக் கொண்டாள்.

அவள் அப்படிச் சொல்லவும் மேலும் புன்னகை பொங்க “நீ நல்லா தெரிஞ்சுக்கோ தங்கம். உன்னை யார் வேணாம்னு சொன்னது? ஆமா என்ன அங்க போன் போட்டு தெரிஞ்சுக்குற வேலை பார்க்காம இங்க போட்டிருக்க?“ எனக் கேட்க…

“அதுவா? அவர் இன்னைக்குப் பிஸி. எனக்குப் பேசுறதுக்கு ஆள் கிடைக்கலையா? வீட்டில் வேற எல்லாரும் கல்யாண வேலையா வெளியே போயிருக்காங்களா? அதன் உன் ஞாபகம் வந்தது. உடனே போட்டுட்டேன்” என்றாள்.

“அடிப்பாவி! அப்ப உனக்குப் பொழுது போகலைன்னு தான் போட்டியா? உனக்குப் பொழுது போக நானா கிடைச்சேன்? “ எனத் தனு கேட்க.

“ஆமா, நான் அப்படியாவது பேசுறேன். ஆனா நீ போனே போட மாட்டிங்கிற” என நித்யா பதிலுக்குக் கோபித்துக் கொண்டாள்.

அவள் கோபத்தில் இதழில் ஒட்டிருந்த புன்னகை மறைய “சரி சரி விடு. உன் கல்யாண வேலை எல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?” எனக் கேட்டு அவளின் பேச்சை மாற்றினாள்.

“அதுக்கென? அது சூப்பரா போய்க்கிட்டு இருக்கு. என்னை விடு! உன் பேச்சு சரியில்லையே? என்னை ஏதோ டைவர்ட் பண்ணுற மாதிரி இருக்கே? நீ போன் எடுத்ததுமே கவனிச்சுட்டேன். என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரி பேசின?“ எனக் கேட்டுப் பாய்ண்டை பிடித்தாள் நித்யா.

இதோ இதற்காகத் தான் இவளிடம் இத்தனை நாளும் சரியாகப் பேசாமல் தவிர்த்தது. தன்னைத் தன் தோழி சரியாகக் கணித்துவிடுவாள் எனத் தெரியும். எத்தனை விளையாட்டாக இருப்பாளோ அத்தனை விவரமானவளும் கூட.

நித்யாவின் கேள்விக்கு “ஒன்னும் இல்ல விடு! நான் நல்லாத்தான் இருக்கேன்” எனத் தனு சமாளிக்கப் பார்க்க “இப்ப சொல்ல போறீயா இல்லையா? “ எனக் கடுப்புடன் கேட்டாள்.

நெருங்கின உறவினர்களிடம் கூடப் பகிர தயங்கும் சில விஷயங்களை நண்பர்களிடம் பகிர தோன்றும். தனுவும் முதலில் தயங்கினாலும் பின்பு மேலோட்டமாக நடந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டவள். ஜீவாவின் உடல் நிலையைப் பற்றியும் சொன்னாள்.

தனு சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட நித்யா “வேலை வேலைனு இருக்குறத்துக்கு உன்னை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்? அந்த வேலையையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான?“ எனக் கோபமாக ஆரம்பித்தாள்.

அவள் சொன்னத்தைக் கேட்டு “ நித்து” என அழுத்திக் கூப்பிட்டு அவள் பேச்சை நிறுத்திய தனு “அவரைத் திட்டுறதா இருந்தா இனி மேற்கொண்டு நான் உன்கிட்ட இந்த விஷயம் எதுவும் பேசலை” என்றாள்.

“ஆமா உனக்கு உடனே கோபம் வந்துருமே? உன்னவரை நான் ஒன்னும் சொல்லலை. சரி இப்ப நீ என்ன பண்றதா இருக்க? அண்ணாவை ஹாஸ்பிட்டலில் காட்ட கூட்டிட்டு போக வேண்டியது தானே?“ எனக் கேட்டாள்.

“நானா கூட்டிட்டு போக மாட்டேங்கிறேன்? வீட்டில் இருந்தா தானே நான் கூட்டிட்டு போக முடியும்? அதுக்கு வழி இல்லாமதானே இப்ப நான் என்ன செய்றதுனு தெரியாம குழம்பி போய் இருக்கேன்” என்றாள்.

“ம்ம் என்ன செய்யலாம்?“ என யோசித்த நித்யா “ஏன் தனு இப்படிச் செய்தா என்ன?“ எனக் கேட்டாள்.

“எப்படி?“

“என் அக்கா நர்ஸ் தானே. இப்ப அவ கன்சீவ் ஆகியிருக்குறதால மாமா இங்க கொண்டு வந்து விட வந்திருக்கார். இரண்டு பேரும் இப்ப கோவிலுக்குப் போயிருக்காங்க. அக்கா வீட்டுக்கு வந்ததும் இந்த மாதிரி அண்ணாக்கு இப்படி இருக்குனு சொல்லி என்ன செய்யலாம்னு கேட்குறேன். அவ ஏதாவது ஐடியா கொடுப்பா அவளுக்கு இங்க சில டாக்டர்ஸ் தெரியும். அதை வச்சு ஏதாவது செய்ய முடியுதான்னு பார்ப்போம்” என்றவள்,

“அதோட எனக்கு முதல உன் பயத்தைப் போக்குறது நல்லதுன்னு படுது. என்கிட்ட விவரம் சொல்லும் போதே உன் குரல் எல்லாம் நடுங்குது. உன் பயத்தைத் தெளிய வச்சாதான் நீ இன்னும் தெளிவா முடிவெடுத்து அண்ணாகிட்ட பேசி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர முடியும்னு நினைக்கிறேன்” என முடித்தாள்.

நித்யா சொன்னது தனுவிற்கும் சரி என்று தோன்றியதால் “ம்ம் சரி நித்யா. நீ அக்காகிட்ட கேளு. அவங்களுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கும் எதனால் இப்படி மூச்சு திணறல் வருதுன்னு” என நித்யா சொன்னத்திற்குச் சம்மதம் சொன்னாள்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துருவாங்க. நான் அக்காகிட்ட பேசிட்டு உனக்குப் போன் போடுறேன்” எனச் சொல்லிவிட்டு வைத்தாள்.

நித்யாவின் அக்கா திவ்யா செவிலியாக இருக்கின்றார். திருமணத்திற்கு முன் ஒரு பெரிய மருத்துவமனையில் வேலைக்குப் போய்க் கொண்டியிருந்தாள். அவளின் கணவன் ராகவ் மனநல மருத்துவராக இருக்கிறான். அவனும் சென்னை தான். திவ்யா திருமணம் முடிந்த பிறகு கணவன் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே வேலைக்குச் சேர்ந்துக் கொண்டாள். இப்பொழுது கர்ப்பமாக இருப்பதால் விடுமுறை எடுத்துக் கொண்டு அம்மாவின் வீட்டில் இருக்க வந்து விட்டாள்.

திவ்யாவும், ராகவும் வீட்டுக்கு வந்த பிறகு அவளிடம் பேச சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்தாள் நித்யா.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டுச் சோபாவில் போய் அமரவும், பின்னாடியே அவளும் சென்றாள். செல்வதற்கு முன் தன் அம்மாவும், அப்பாவும் என்ன செய்கிறார்கள் எனக் கவனித்தாள். அவள் அப்பா ஏதோ கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சமையலறையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்தவள் இது தான் சந்தர்ப்பம் என நித்யாவின் பின் சென்று நின்றாள்.

அவள் அப்போதிருந்து ஏதோ பேச தவிப்பதை கவனித்த ராகவ். “என்னமா கல்யாண பொண்ணு உன் போனுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டீயா என்ன? என் சகலைக்கிட்ட கடலை போடாம எங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க என்ன விஷயம்? “ எனக் கிண்டலுடன் கேட்டான்.

“அத்தான் வேண்டாம் கிண்டல் பண்ணாதீங்க. உங்க கல்யாணத்தப்ப நீங்க செய்ததை விட நான் கடலை போடுறது கம்மி தான்” எனப் பதிலுக்கு வாரியவள், “ இப்ப நான் அக்காகிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும். ப்ளீஸ் அத்தான் அப்புறமா நான் உங்ககிட்ட பேசுறேன்” என்றுவிட்டு திவ்யாவின் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தாள். ராகவ் அவர்கள் பேசட்டும் எனக் கொஞ்சம் தள்ளி இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.

“என்ன நித்தி என்ன பேசணும் என்கிட்ட?” எனக் கேட்ட திவ்யாவிடம் யாருக்குப் பிரச்சனை எனச் சொல்லாமல் ஒரு பிரண்ட் என மட்டும் சொல்லி ஜீவா பற்றித் தனு சொன்னதையும், அவன் நண்பன் சொல்லிச்சென்றதையும் சொல்லி அவனுக்கு ஏற்படும் கோபம், எரிந்து விழுதல், சரியாகத் தூங்காமல் இருப்பது, மூச்சு திணறல் எல்லாவற்றையும் சொல்லி அதனால் பிரண்ட் பயந்து போய் இருப்பதையும் சொல்லிவிட்டு “எதனால் அப்படி இருக்கும்கா? உனக்கு என்ன தோணுது?“ எனக் கேட்டாள்.

“மூச்சுத்திணறல் இருந்தா ஹாஸ்பிட்டல் போக வேண்டியது தானே நித்தி?” என நித்யா திருப்பிக் கேட்டாள்.

“அது தானே இங்கே பிரச்சனை. வீட்டில் நிக்காம ஆபீஸே கதினு இருந்தா பாவம் அவளும் என்ன செய்வா? அட்லீஸ்ட் ஹாஸ்பிட்டல் போகும் வரைக்குமாவது என்ன பிரச்சனையா இருக்கும்னு தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கலாம்னு உன்கிட்ட விவரம் கேட்குறேன்” என்றாள்.

‘ஹ்ம்ம்’ என யோசித்த திவ்யா பேச போகும் முன் இவ்வளவு நேரம் அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் இருந்தாலும் கவனத்தை டிவியில் வைத்திருந்த ராகவ். நித்யா சொன்ன சில விஷயங்கள் காதில் விழவும் அவனும் கவனிக்க ஆரம்பித்திருந்தவன் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டான்.

“நித்யா நீ சொன்ன சிம்டம்ஸ் எல்லாம் வச்சு பார்த்தா நீ சொல்ற பிரண்ட் ஹஸ்பண்டுக்கு உடல் ரீதியான பிரச்சனையா இருக்கும்னு எனக்குத் தோணலை” என்றான்.

அவன் குறுக்கே பேசவும் கவனித்தவள் அவன் சொன்னதைக் கேட்டு “என்ன அத்தான் சொல்றீங்க?” எனப் புரியாமல் குழம்பிப் போய்க் கேட்டாள்.

“யெஸ்! என் யூகத்தைத் தான் சொல்றேன். இது உடல் ரீதியான பிரச்சனையா இருக்க வாய்ப்பில்லை. எனக்கு என்னமோ இந்த ஸ்டேஜ்லேயே டாக்டர்ரை பார்க்குறது நல்லதுனு படுது. இல்லனா இந்தப் பிரச்சனை பெரிய ஆபத்தில் கூடக் கொண்டுபோய் விடலாம்” என்றான்.