மனதோடு உறவாட வந்தவளே – 13

அத்தியாயம் – 13

கதவை திறந்த ஜீவரஞ்சன் அதிர்ந்து இருந்த சில நொடியில் அவனை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தார்கள் தமிழரசியும் அறிவழகனும்.

உள்ளே நுழைந்து அங்கு இருந்த சூழ்நிலையையும், இருவரின் கையில் இருந்த கட்டையும் பார்த்து பதட்டத்துடன் “இங்க என்ன நடக்குது ஜீவா? என்ன இரண்டு பேர் கைலேயும் கட்டு?” எனக் கேட்டார் தமிழரசி.

“அம்மா அதெல்லாம் நாம அப்புறம் பேசுவோம். தனுக்கு நிறைய ரத்தம் வந்தது. முதல ஹாஸ்பிடல் போகலாம்” என்றவன், “அப்பா கார் சாவி கொடுங்க” என்றான்.

டீப்பாய் உடைந்திருந்த விதத்தைப் பார்த்து அவன் தான் உடைத்திருக்க வேண்டும் எனக் கணித்த அறிவழகன் அவனைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.

ஆனால் இப்போது எதையும் பேசும் நேரமில்லை என உணர்ந்து “கைல காயத்தை வச்சுக்கிட்டு எப்படி ஒட்டுவ? நட வெளியே! அரசி தனுவை கூட்டிக்கிட்டு வா. நான் போய் வண்டியை ஸ்டார்ட் பண்ணி வைக்கிறேன்” எனச் சொல்லிவிட்டு பார்வையால் ‘நீயும் நட’ என ஜீவாவிடம் சொல்லிவிட்டு சென்றார்.

நால்வரும் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவரின் ‘எப்படி அடிப்பட்டது?’ என்ற கேள்விக்கு ஏதோ சமாளித்தவர்கள் தனுவின் கையில் இருத்த காயத்தில் இருந்த கீறலில் தையல் போட்டுச் சிகிச்சை செய்தனர்.

ஜீவாவின் கைக்கும் தையல் போட்டு அங்காங்கே கண்ணாடி குத்தி இருந்த இடத்திலும் சிகிச்சை செய்து கட்டுப் போட்டு விட்டனர்.

மருத்துவமனை வந்ததில் இருந்து ஜீவாவிடம் பேசுவதைத் தவிர்த்த படி தனுவை மட்டுமே கவனித்துக் கொண்டு இருந்தார் அரசி.

அறிவழகனுக்கும் ஜீவாவின் மீது அதிகமான கோபம் இருந்தாலும் வெளியிடங்களில் அதைக் காட்ட முடியாமல் அவனுக்குத் துணையாக அவனின் அருகிலேயே இருந்தார்.

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தவர்கள், அமைதியாக ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இருந்தனர்.

ஜீவாவிற்குத் தான் செய்த காரியம் மனதை அறுத்தது. ‘நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்? எனக்குள் இப்படி ஒரு மூர்க்கத்தனமா?’ எனத் தன்னையே கீழாக நினைத்துக் கொண்டான். தன் மனைவியின் கையில் பார்த்த ரத்தம் அவனை நிதானப்படுத்தி இருந்தது. தன் செய்கையை நினைத்து தன்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டான்.

இன்னும் டீப்பாய் உடைந்தது அப்படியே இருந்ததால் அதனைக் சுத்தம் பண்ண ஆரம்பித்தார் அறிவழகன்.

அதைப் பார்த்து ஜீவா அருகில் வரவும் “கையை இப்படி வச்சுக்கிட்டு நீ என்ன பண்ண போற? போ அந்தப் பக்கம்” என்றவர், தானே கவனமாக ஒதுக்கி வைத்துவிட்டு “அரசி சாப்பாடு எதுவும் இப்ப சாப்பிடுற மனநிலை இல்லைனாலும் அவங்க இரண்டு பேருக்கும் கை வலிக்கும். மாத்திரை போட்டா தான் நல்லது. சிம்பிளா ஏதாவது செய்” என்றார்.

வீட்டில் மாவு இருக்கவும் இட்லி ஊற்றி சட்னி மட்டும் வைத்து ரெடி செய்த அரசி, ஜீவாவை மட்டும் விடுத்து மற்ற இருவரையும் சாப்பிட அழைத்தார்.

அதைக் கவனித்த தனு “வாங்க ரஞ்சன் சாப்பிட” என அழைத்தாள். தன் அம்மா அழைக்காததை நினைத்து வருத்தப் பட்ட ஜீவா. தனு அழைக்கவும் அமைதியாகச் சாப்பிட அமர்ந்தான்.

ஜீவாவின் வலது கையில் கட்டு இருந்ததால். அவனிடம் பேசவில்லை என்றாலும் அவன் சாப்பிட எதுவாக இட்லியை பிய்த்துப் போட்டு ஸ்பூன் போட்டுக் கொடுத்தார். தனுவிற்கு இடது கையில் அடிப்பட்டிருந்தது. எல்லாரும் சாப்பிட அமர்ந்து விட்டாலும் யாருக்கும் உணவு இறங்கவில்லை.

“நான் உங்க ரெண்டு பேருக்கிட்டேயும் பேசணும். சாப்பிட்டு மாத்திரை போடுங்க. சாப்பிடாம தவிர்த்தா மட்டும் எல்லாம் சரி ஆகிருமா என்ன? பசில எதுவும் தெளிவா பேச முடியாது. ம்ம் சாப்பிடுங்க” என அறிவழகன் விரட்ட, அரையும் குறையுமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள்.

அவர்கள் இருவரும் மாத்திரை போட்டு முடிக்கவும், “ஹ்ம்ம் இப்ப சொல்லுங்க? என்ன பிரச்சனை இரண்டு பேருக்கும்? இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு” என விசாரிக்க ஆரம்பித்தார் அறிவழகன்.

பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தான் ஜீவரஞ்சன்.

அவன் நின்றிருந்த நிலையைப் பார்த்துக் கோபம் கொண்டு “கேட்குறதுக்குப் பதில் சொல்லாம தலை குனிந்தா என்ன அர்த்தம்? அப்ப நீ செய்தது தப்புன்னு உனக்கே புரியுதா?” எனக் கேட்ட தந்தைக்கு “கொஞ்சம் வொர்க் டென்சன் வேற ஒன்னும் இல்லப்பா” எனச் சமாளித்தான்.

“வேலை பார்க்கிற இடத்தில் டென்சன்னா அதை அங்கே மட்டும் வைத்துக் கொள்ளனும். இப்படி வீடு வரை கொண்டு வந்து இந்த நிலைக்கு வர்ற வரை விடக்கூடாது” என்றவர்,

“நீ சொல்லும்மா தனு. அதிகாலையில் நீ போன் போடவும் உங்க அத்தை என்கிட்ட எதுவும் சொல்லாம கிளம்பிவர வைச்சா. கார்ல வரும் போது மேலோட்டமா உங்க இரண்டு பேருக்கும் ஏதோ பிரச்னைன்னு மட்டும் சொன்னா. இங்க வந்து பார்த்தா இப்படி இரண்டு பேரும் ரத்தத்தோட நிற்கிறீங்க. என்ன சொன்ன உன் அத்தை கிட்ட? எனக் கேட்டார்.

“அது நேத்து அவர் நைட் எல்லாம் வீட்டுக்கு வரலை. ஆனந்த்கிட்ட சொன்னேன். அவர் வந்து இவரைப் போய்க் கூட்டிட்டு வந்தார். ஏன் வீட்டுக்கு வரலைன்னு கேட்டேன் சண்டை வந்திருச்சு” எனச் சொல்லிவிட்டு எப்படி அடிப்பட்டது என மேலோட்டமாக மட்டும் சொன்னாள் தனு.

“என்ன எதுக்கு வீட்டுக்கு வரலை? அதுவும் இப்படிக் கண்ணாடியை உடைக்கிற அளவுக்கு ஏன் கோபம் வந்தது? அதுவும் அவளை அடிச்சிருக்க. அவ கன்னத்தில் பாரு தடத்தை. அதுவும் இல்லாம உடைஞ்ச கண்ணாடி மேல தள்ளி விட்டுடிருக்க. என்ன இதெல்லாம்?” என ஜீவாவை பார்த்து கோபமாகக் கேட்டார் அறிவழகன்.

அவன் தான் செய்த தவறை உணர்ந்து அமைதியாக நிற்க, தனுவே தாங்கள் என்னென்ன சொல்லி சண்டை போட்டோம் எனச் சொல்லாமல் மேலோட்டமாக விஷயத்தைச் சொல்லிவிட்டு நிறுத்த, அதை கண்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன் தந்தையின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அவரைப் பார்த்து “நான் வேணும்னு தள்ளலைபா. எங்க அவளைத் திரும்ப அடிச்சிருவேனோன்னு நினைச்சு தள்ளி போகச் சொன்னேன். அது இப்படி ஆகிருச்சு” என்றவன் அதற்கு மேல் வேறு எதையும் சொல்லாமல் அமைதியாகினான்.

அதைக் கவனித்தவர் அரசி பக்கம் திரும்பி “இப்பவாவது வாயை திற அரசி. என்ன நடக்குது இங்க? இவன் இன்னும் மென்னு முழுங்கிட்டு தான் இருக்கான். நீயாவது முழு விவரமும் சொல்லு” என்றார் அறிவழகன்.

“ஜீவா நேத்து நைட்டெல்லாம் வீட்டுக்கு வரல. அதான் இன்னைக்குப் பிரச்சனை. அதுக்கு முன்பே அவன் டென்சனாவே சுத்திருக்கான். வேலை வேலைனு நைட் எல்லாம் லேட்டா வந்துருக்கான். அது மட்டும் இல்லை இன்னும் என்னமோ பிரச்சனை இருக்கு அது என்னனு ஜீவா தான் சொல்லனும்” என அனைத்தையும் ஒப்புவித்தார் தமிழரசி.

அவர் பேச பேச அதிர்ந்து போய்ப் பார்த்தான் ஜீவா. ‘அத்தனையும் இவருக்குத் தெரியுமா?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தவன் “வேற என்ன பிரச்சனை? வேற ஒன்னும் இல்லை” என மழுப்பினான்.

அவன் மழுப்பலைப் பார்த்துக் கோபம் கொண்டவர் “உன்னோட இந்தக் குணம் எப்போ போகும் ஜீவா? இன்னும் எத்தனை நாள் இப்படி உனக்குள்ளே எல்லாத்தையும் மூடி வச்சுக்கிற பழக்கத்தை விடப் போற?” என ஆதங்கமாகக் கேட்டவர்,

“உன்னை நல்லப்படியா வளர்த்திருக்கோம்னு பெருமைப்பட்டுக்கிட்டு இருந்தேன் ஜீவா. ஆனா கட்டின மனைவியைக் கை நீட்டி அடிக்கிற அளவுக்குப் போவேனு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. இத்தனை வருஷ வாழ்க்கைல உங்க அப்பா கோபம் வந்தா திட்டுவாறே தவிற என்னை ஒரு நாளும் கை நீட்டினது இல்லை. ஆனா நீ செய்திருக்கிற வேலை என் மகனா இப்படினு? எனக்கு வெட்கமா இருக்கு. ச்சே போ ஜீவா!” என வேதனையுடன் பேசியவர் தனுவின் புறம் திரும்பி “என்னை மன்னிச்சுருமா. இப்படி என் மகனை வளர்த்தது என் தப்பு தான். சின்ன வயசுலேயே அவனோட இந்தக் குணத்தை மாத்தியிருக்கனும். தப்புப் பண்ணிட்டேன் மன்னிச்சுரு” என மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார்.

“அய்யோ என்ன அத்தை நீங்க மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க? நீங்க மன்னிப்பு கேட்குற அளவுக்கு உங்க பையன் ஒன்னும் கெட்டவர் இல்ல. அவருக்கு ஏதோ டென்சன் இப்படிப் பண்ணிட்டார். அதுக்காக ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க” என அவரைச் சமாதானப் படுத்தினாள்.

தன் அம்மா பேசியதிலேயே குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்த ஜீவா. தனு தனக்கு ஆதரவாகப் பேசியதில் இன்னும் தவித்துப் போனான்.

வேகமாகத் தன் அன்னையின் அருகில் வந்தவன் அவரின் கையைப் பிடித்துத் தன் முகத்தை மூடி “ஸாரிம்மா ஸாரி. நீங்க இவ்வளவு வருத்தப்பட்டு இன்னைக்குத் தான் பார்க்குறேன். அதுவும் நீங்க என்னால வருத்தப்படும்படி ஆனது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு. எனக்கே தெரியலைமா, நான் ஏன் இப்படி ஆனேன்னு? எதுக்குக் கோபம் வருது?

எதுக்கு அடிக்கடி எரிச்சல் படுறேன்னு எதுவுமே புரிய மாட்டிங்குது. இப்ப கூடத் தனுக்கு இப்படி அடிப்பட்டதுக்கு நான் காரணம் ஆகிட்டேன்னு நினைக்கும் போது அப்படியே எனக்கு நானே ஏதாவது தண்டனை கொடுத்துக்கனும் போல இருக்கு. நான் என்னம்மா செய்யட்டும்?” என மனம் வேதனையில் ததும்பி இருக்க அதை வார்த்தைகளாக வடித்தான்.

இத்தனை வேதனையுடன் பேசின போதும் தனுவின் பக்கம் பார்வையைத் திருப்பாமல் அரசியை மட்டும் பார்த்துப் பேசினான்.

அவனின் வேதனையைப் பார்த்த அரசி, தாயாய் தவித்துப் போய் அவனின் வேதனையைக் குறைக்க அவனின் தலையைத் தடவி ஆறுதல் படுத்த முயன்றார். அறிவழகன் நடப்பத்தைப் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜீவாவிடம் ஏதோ கேட்க அரசி வாயை திறந்த நேரத்தில் வீட்டு அழைப்பு மணி அழைத்தது. ‘இப்போது யார்?” என ஒருவரை தவிர மற்றவர்கள் கேள்வியுடன் வாயிற்கதவை பார்த்தார்கள். அறிவழகன் சென்று கதவை திறந்தார்.

உள்ளே வந்தவர்களைப் பார்த்து ‘இப்போது என்ன செய்வது?’ எனக் கூடப் புரியாமல் அறிவழகனை தவிர மற்றவர்கள் திகைத்துப் போய்ப் பார்த்தார்கள். மருத்துவமனையில் இருக்கும் போதே அவர்களுக்குப் போன் செய்திருந்தார் அறிவழகன்.

உள்ளே வந்த சேகரனும், சங்கரியும் அவர்களின் திகைப்பை பார்த்து ஒன்றும் புரியாமல் ஒரு நிமிடம் முழித்தவர்கள் தன் மாப்பிள்ளை, பொண்ணு இருவர் கையிலும் கட்டுடன் இருக்கவும் பதறி போய்த் தனுவின் அருகில் வந்து “என்னம்மா தனு என்னாச்சு? இவ்வளவு பெரிய கட்டு? எப்படி அடிப்பட்டுச்சு? மாப்பிள்ளை கையிலும் அடிப்பட்டிருக்கு? என்ன நடந்தது?” எனப் படபடவெனக் கேட்டார் சங்கரி.

தனு அவர்களை அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால் ‘என்ன பதில் சொல்ல?’ எனத் தெரியாமல் அமைதியாக இருக்கவும் “என்னயிது ஏன் பேச மாட்டிங்கிற?” எனக் கேட்ட சங்கரி, அரசியைப் பார்த்தார்.

“என்னாச்சு அண்ணி? நீங்க இங்க வந்துருக்கிறதாகவும் நீங்களும் இங்க வந்துருங்க கொஞ்சம் பேசணும்னு அண்ணா போன் போட்டார். என்னனு வந்து பார்த்தா இப்படி இரண்டு பேருக்கும் அடிப்பட்டுடிருக்கு. என்னனு கேட்டா எதுவும் யாரும் பேச மாட்டீங்கிறீங்க. நீங்களாவது என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்” என்றார்.

‘அது’ எனத் தயங்கியவர் தன் கணவரை பார்த்தார்.

இவ்வளவு நேரமும் ‘இங்கே என்ன நடக்கிறது?’ எனப் புரியாமல் தனுவின் அடிப்பட்ட கையையே பார்த்துக் கொண்டிருந்த சேகரன் யாரும் காரணத்தைச் சொல்லாமல் இருக்கவும் அறிவழகன் பக்கம் திரும்பி “என்ன சம்பந்தி? எங்களைத் திடீர்னு வரச்சொல்லி போன் போட்டீங்க. இங்க வந்தா இப்படி இருக்காங்க. சங்கரி கேட்குறதுக்கும் யாரும் பதில் சொல்ல மாட்டீங்கிறீங்க. நீங்க சொல்லுங்க! என்ன நடக்குது இங்க?” எனக் கேட்டார்.

அதற்கு மேலும் பேசாமல் இருப்பது அழகில்லை என அவர்களின் சண்டையையும் சற்று முன் தமிழரசி தன்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயத்தையும் சொன்னவர், “நான் உங்களை வரச் சொன்னத்துக்குக் காரணம் உங்களுக்குத் தெரியாம நாங்களா எதுவும் பேசக்கூடாதுனும், உங்களுக்கும் விஷயம் தெரியனும்னு தான் வரச்சொன்னேன்”

“நாங்க சொல்லாம உங்களுக்கா விஷயம் தெரிய வரும் போது நம்மகிட்ட ஒருவார்த்தை சொல்லலையேனு நீங்க நினைச்சுட்டா அங்கே உறவுக்குள் விரிசல் விட ஆரம்பிச்சிரும். என்ன பேசுறதா இருந்தாலும் உங்களையும் வச்சுக்கிட்டுப் பேசுறதுதான் நல்லதுன்னு உங்களை வரச்சொன்னேன்”

“ஜீவா ஏதோ கோபத்துல தள்ளி விட்டதுல தனுக்கு அடிப்பட்டிருச்சு .அவன் செய்தது ரொம்பத் தப்பு மன்னிச்சிருங்க” என மன்னிப்புடன் தன் பேச்சை முடித்தார் அறிவழகன்.

அவர் பேச, பேச தனுவின் முகத்தையே கூர்ந்துப் பார்த்த சேகரன், அவர் பேசி முடிக்கவும் ஜீவாவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.

அவர் அப்படிப் பார்க்கவும் அவரின் அருகில் வந்து “சாரி மாமா நான் வேணும்னு தனுவை தள்ளிவிடலை மன்னிச்சிருங்க” என்றவன் அவரின் கையைப் பிடிக்கப் போனான்.

வேகமாக அவனிடம் இருந்து விலகியவர், “உங்க மேல நான் நிறைய மரியாதை வச்சிருக்கேன். ஆனா நீங்க செய்த காரியத்தால அது குறைஞ்சிருமோன்னு தோணுது. ப்ளீஸ்! நம்ம எதுவும் பேச வேணாம். நானும் தனு மேல இருக்குற பாசத்துல எதுவும் கோபமா பேசிட்டா எல்லாருக்குமே கஷ்டம் வர மாதிரி ஆகிரும்.

என்ன இருந்தாலும் என் பொண்ணு உங்களை இத்தனை நாளும் எங்ககிட்ட கூட விட்டுக் கொடுக்காம இருந்துருக்கா. அவ ஏன் அப்படிச் செய்தானு தெரியல? ஆனா உங்களை நாங்க தப்பா எதுவும் நினைச்சிக்கக் கூடாதுனு தான் அப்படிச் செய்திருப்பானு நினைக்கிறேன். ஆனாலும் நீங்க இப்படி அடிப்பீங்கன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை” என்றவர்,

தனுவின் பக்கம் திரும்பி “இவ்வளவு நடந்திருக்கு. ஏன்மா இத்தனை நாளும் எங்ககிட்ட சொல்லலை? நாம தினமும் கடைல பார்த்துக்கிட்டோம். அப்பயும் கூட எதுவும் காட்டிக்கலை. விடியுற நேரத்துல போன் போட்டு பாண்டிச்சேரில இருக்குறவங்களுக்குச் சொல்லிருக்க. இங்க இருக்குற எங்ககிட்ட சொல்லலை. என்னமா இதெல்லாம்? இப்படியா எங்களை ஒதுக்கி வைப்ப?” என வருத்தத்துடன் கேட்டார்.

சங்கரியும் நடந்ததைக் கேட்டு திகைத்துப் போனவர் “என்ன தனு அம்மா தினமும் போன் போட்டேனே என்கிட்டயாவது சொல்ல வேண்டியது தானே?” என ஆதங்கத்துடன் கேட்டார்.

“இல்லம்மா, நீங்க வருத்த படுவீங்கன்னு தான் சொல்லலை. அதுவும் இல்லாம ஜீவா பத்தி நீங்க எப்பயும் குறைவா நினைக்கக் கூடாதுனு தான் எதுவும் சொல்லாம இருந்தேன்” என்றவள்,

“நைட் நான் முதல ஆனந்த்க்கு தான் சொன்னேன். அவர்ன்னா அவர் அண்ணா கோபமா இருந்தா என்ன செய்வார்னு தெரிந்திருக்கும். அதுவும் இவரைத் தேட உறவினரா ஒரு ஆள் கூட இருக்குறது நல்லதுனு தான் அவர்கிட்ட சொன்னேன். அப்புறம் தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு வரணும்னா அத்தை இங்க வரணும்னு தோனுச்சு. இவரை சமாளிக்க அத்தை இருந்தா பரவாயில்லைன்னு தான் அவங்களுக்குப் போன் போட்டேன். உங்களை ஒதுக்கிவைக்கணும்னு நான் நினைக்கலைப்பா” எனத் தனு தன் நிலையை இருவரிடமும் எடுத்து சொன்னாள்.

“நீ என்ன தான் சமாதானம் செய்தாலும் மனசுக்கு வேதனையா இருக்குமா. சரி விடு வேற எதையும் பேசி நேரத்தையும் வார்த்தையையும் வீணடிக்க வேணாம். கிளம்பு நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றார் சேகரன்.

அவர் அப்படிச் சொன்னதும் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த ஜீவரஞ்சன் திகைத்துப் போய்த் தனுவின் முகத்தைப் பார்த்தான்.