மனதோடு உறவாட வந்தவளே – 11
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 11
மனதில் ஏதோ வெறுமை தோன்ற வேலை முடிந்து வீட்டிற்கு கூடச் செல்லாமல் தன் வண்டியில் அந்தக் கடற்கரை சாலையில் இலக்கில்லாமல் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு, தற்போது தான் வண்டியை நிறுத்தி ஏதோ சிந்தனையிலேயே அமர்ந்திருந்த ஜீவரஞ்சனை சிறிது தூரத்தில் வரும் போதே கவனித்து விட்டான் ஆனந்த்.
ஜீவாவின் அருகில் வந்தவன் வண்டியை விரைவாக நிறுத்திவிட்டு “ஹேய் அண்ணா! இங்க என்ன பண்ணுற?” எனக் கேட்டுக் கொண்டே ஜீவாவின் அருகில் வந்தான்.
தன் தம்பி வந்ததையோ அருகில் வந்து அழைத்ததையோ கூட உணராமல், அதே நிலையில் இருந்தவனைப் பார்த்துத் தோளில் கை வைத்து உலுக்கி “அண்ணா என்ன பண்ற? நான் கூப்பிடுறது காதுல விழுதா இல்லையா?” எனச் சத்தமாகக் கேட்டான்.
ஆனந்த் உலுக்கியதும் ஏதோ கனவுலகில் இருந்துவிட்டு வந்ததைப் போல ‘ஹா’ எனப் பட்டெனத் திரும்பி பார்த்தான் ஜீவா.
தன் தம்பியை திடீரென அங்கே பார்க்கவும், சட்டென ஒன்றும் புரியாமல் வண்டியை விட்டு இறங்கியவன் “டேய் ஆனந்த்! நீ எங்க இங்க? எப்போ ஊரில் இருந்து வந்த? என்ன விஷயம்? எனக் கேட்டான்.
ஜீவாவின் கேள்வியில் தன் அண்ணனை விநோதமாகப் பார்த்தான் ஆனந்த்.
“டேய்! என்ன நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ என்னமோ என்னைப் புதுசா பார்க்கிற மாதிரி அப்படிப் பார்க்கிற?”
“நீ எனக்கு இப்ப புதுசா தான் தெரியுறணா”
அவனைப் புரியாமல் பார்த்தவன் “நான் என்ன கேட்கிறேன் நீ என்ன உளர்ற? புதுசா தெரியுறனா என்ன அப்படி என்கிட்ட புதுசா பார்த்த?”
“பின்ன நான் நேத்து காலையிலேயே போன் போட்டு என்னோட பிரண்ட் அண்ணன் மேரேஜ் இருக்கு. மதியம் போலச் சென்னை வந்துருவேன். மேரேஜ் முடிஞ்சதும் உன் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தேன். நீ என்னடானா எப்ப வந்த? எதுக்கு வந்தனு கேட்குற?”
அப்போது தான் நேற்று அலுவலத்தில் நுழைந்த போது ஆனந்த் போன் செய்து சொன்னது நினைவில் வந்தது. ‘அண்ணியிடமும் சொல்’ என்றதற்கு “நான் ஆபீஸ் வந்துட்டேன். நீ போன் போட்டு சொல்லிரு” என்று சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது.
‘ச்சே’ எனத் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டவன், “ஸாரிடா மறந்துட்டேன்” என்றான்.
“நீ என்னை மட்டுமா மறந்த? அண்ணியையும் தான் மறந்துட்ட! நீ காணலைனு வீட்டுல அண்ணி அழுதுக்கிட்டு இருக்காங்க. நீ என்கிட்ட நிதானமா கேள்விக் கேட்டுட்டு இங்க நின்றுக்கிட்டு இருக்குற. ஆமா நீ ஏன் வீட்டுக்கு போகாம இப்படி நடு ரோட்டுல வந்து நிக்கிற? என்னாச்சு உனக்கு?”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அண்ணி என்றதும் தான் அவனுக்குத் தான் ஏன் இங்கே வந்தோம் என்பது ஞாபகத்திற்கு வர முகம் இறுகினான்.
அவன் முக மாறுதலை கவனித்த ஆனந்த் “என்னதான் ஆச்சுண்ணா? ஏன் இப்படி இருக்க? என்ன பிரச்சனைனாலும் நீ வீட்டுக்கு போகாம இருக்கலாமா? என் அண்ணன் இப்படி இருக்க மாட்டானே? ஏன் இப்படி மாறிட்ட?” என வருத்தமாகக் கேட்டான்.
அவன் வருத்ததைக் கவனித்தாலும் எதுவும் சொல்ல விருப்பமற்றுப் பேச்சை மாற்றும் விதமாக “ஆமா நீ எப்படி இங்க வந்த? நான் இங்க இருக்குறது உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.
தன் அண்ணன் பேச்சை மாற்றுவது உணர்ந்து ‘ஆமா இதில் மட்டும் இரண்டு பேரும் ஒற்றுமையா தான்பா இருக்காங்க’ என மனதில் முணங்கியவன்,
“ஹ்ம்ம் உனக்குக் கோபம் வர்றதே அபூர்வம். அப்படியே வந்தா நம்ம ஊர்லயும் கடற்கரை பக்கமா தான சுத்திகிட்டு இருப்ப? அதான் அதை நினைச்சு வந்தேன். நான் வந்தது சரியாதான் இருக்கு” என்றவன் தொடர்ந்து,
“ஆனா அங்க நீ நைட் வீட்டுக்கு வராம சுத்தினது இல்லை. இப்ப தான் என்னென்னம்மோ புதுசு புதுசா செய்ற” என்றான்.
ஏற்கனவே ஏதோ டென்ஷனில் இருந்த ஜீவா, தன் தம்பியின் பேச்சில் எரிச்சல் அடைந்து “சரிதான் நிறுத்துடா. இப்ப எதுக்கு என்னைத் தேடி வந்த? நீ கிளம்பு! கல்யாணத்துக்குத் தான வந்த போய் வந்த வேலையைப் பாரு” என்றான் கோபத்துடன்.
“என்னை வரவச்சதே நீ தானே?” என்ற ஆனந்த், “சும்மா வளவளனு பேசாம கிளம்பு! வீட்டுக்கு போவோம். அண்ணி அங்க தவிச்சு போய் இருக்காங்க” என்றான்.
அவன் திரும்பத் திரும்ப அண்ணி என்றதும் இன்னும் கோபம் ஏற “நீ முதல கிளம்பு எனக்கு வீட்டுக்குப் போகத் தெரியும். அவ தவிச்சா எனக்கென்ன?” எனச் சத்தமாகச் சொன்னவன்,
‘என்னை மட்டும் அவ தவிக்க விடுறா. வீட்டுக்கு போனாலும் அப்படியே என்கிட்ட சந்தோஷமா பேசிறவா போறா? அப்படியே முகத்தைத் திருப்பிக்கிட்டு திரிவா. இப்ப மட்டும் என்னை எதுக்குத் தேடனும்?’ எனத் தன் மனதில் நினைத்துக் கொண்டதை தம்பியிடம் எதுவும் காட்டாமல் மறைத்து அங்கேயும் இங்கேயும் நடக்க ஆரம்பித்தான்.
நைட்டெல்லாம் வீட்டுக்கு வராமல் அண்ணியைத் தவிக்க வைச்சதும் இல்லாமல், இப்போது தான் தேடி வந்து அழைத்தும் வராமல் தன்னை விரட்டும் அண்ணனை முறைத்த ஆனந்த் ஒன்றும் பேசாமல் சற்று தள்ளி நின்று தன் போனை எடுத்து தனுவிற்கு அழைத்தான்.
அவன் போனை கையில் எடுத்ததும் நடந்து கொண்டிருந்தவன் நின்று “டேய்! யாருக்கு போன் போடுற அம்மாவுக்கா? அவங்ககிட்ட எதுவும் சொல்லிகிட்டு இருக்காதே” என வேகமாகத் தடுக்க வந்தவனைக் கை நீட்டி நிறுத்தினான்.
இவன் போனுக்காகவே காத்திருந்த தனு “ஹலோ ஆனந்த்! அவரைப் பார்த்துட்டீங்களா? எங்க இருக்கார்?” எனப் படபடவெனக் கேட்ட சத்தம் அந்த விடியல் ஆரம்பித்த பொழுதில் போனைத் தாண்டி கேட்டது.
தனுவின் குரல் காதில் விழுந்ததும் திரும்பி நின்று கொண்டான் ஜீவரஞ்சன்.
அவனைக் கவனித்துக் கொண்டே “அண்ணி பதட்டப்படாதீங்க. அண்ணனை பார்த்துட்டேன். என் பக்கத்தில தான் இருக்கான். இப்ப கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்திருவோம். கவலை படாம இருங்க” என்று சமாதானப் படுத்தினான்.
“ஹோ” என நிம்மதி பெருமூச்சு விட்டவள். “அவருக்கு வேற எதுவும் இல்லையே?” எனத் தயங்கி கேட்டாள். விபத்து எதுவுமோ என அவள் பயந்த பயம் அவளுக்குத்தானே தெரியும்.
அதை உணர்ந்தவன் போல “ச்சே, ச்சே! இல்ல அண்ணி. எதுவும் பிரச்சனை இல்லை. நல்லா இருக்கான். நீங்க போனை வைங்க. நாங்க வந்திருவோம்” என்றான்.
“சரி” என அவள் வைக்கவும், ஜீவாவை பார்த்து “கிளம்புண்ணா போவோம்” என்றான்.
“நான் தான் சொன்னேன்ல? நான் போய்க்குவேன். நீ கிளம்பு! கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு வா!” என்றான்.
“நீ சரி வரமாட்ட” என்றவன், “அம்மா இந்த நேரம் எழுந்திருச்சிருப்பாங்க. உடனே கிளம்பி வர சொல்றேன்” எனச் சொல்லிக் கொண்டே மீண்டும் போனை எடுத்தான்.
அவன் அரசியை அழைக்கப் போவதாகச் சொல்லவும் பொறுமை இழந்த ஜீவா “டேய்! இப்ப நீ என்கிட்டே அடி வாங்க போற” எனச் சொல்லிக் கொண்டே வெறி வந்தவன் போல அவன் போனை பாய்ந்து வந்து பறித்துச் சட்டெனத் தூக்கி கீழே போட்டான்.
ஜீவாவை வீட்டிற்கு வரவைக்கத் தன் அம்மாவின் பெயரை சொல்லி, போன் பண்ணப் போவதாகப் பாவ்லா காட்டிக் கொண்டிருக்கும் போதே, அதற்குத் தன் அண்ணன் ரியாக்ஷன் என்ன என ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தவன், சற்றும் எதிர்பாராத விதமாக ஜீவாவிடமிருந்து வெளிப்பட்ட ஆவேசமான செயலைக் கண்டு அப்படியே திகைத்து நின்றுவிட்டான் ஆனந்த்.
ஒரு நாளும் தன் அண்ணனிடம் இப்படி ஒரு கோபத்தைக் கண்டதில்லை. அவனுக்கு அதிக கோபம் வந்த போதும், அதை ஒரு நாளும் அவன் இப்படி இதுவரை வெளிபடுத்தியது இல்லை. ஜீவரஞ்சன் முகத்தில் அவ்வளவு ஆக்ரோஷமான கோபத்தை கண்டு பயந்தே போனான்.
அவனின் கோபத்தில் தன்னிச்சை செயலாக ஒரு அடி பின் வாங்கியவன் திரும்பி போனை பார்க்க அது உடைந்திருந்தது தெரிந்தது. கையில் எடுத்து அதன் உயிரை சோதித்தான். ஆனால் அது தன் ஆயுளை முடித்திருந்தது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
தன் அண்ணனின் செய்கையில் அதிர்ந்திருந்தவன், கொஞ்சம் தெளிந்து தன் குரலில் பிடிவாதத்தைக் காட்டி இன்னும் கோபத்துடன் இருந்த ஜீவாவை பார்த்து “நீ என்னை அடிச்சாலும் பரவாயில்லைணா. நீ வராம நானும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” என்றான்.
அவன் இன்னமும் நின்றுக்கொண்டு நிதானமாகப் பேசவும் கடுப்படைந்து “ச்சே! ஏண்டா யாரும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா? எனக் கத்தியவன், “வந்து தொலை” எனச் சொல்லிக்கொண்டே தன் வண்டியை விருட்டென்று கிளப்பினான்.
அவன் வேகத்தைப் பார்த்து பயந்த ஆனந்த் தானும் வேகமாகப் பின் தொடர்ந்தான்.
வேகமாகச் சென்ற ஜீவரஞ்சன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வண்டி நிறுத்தத்தில் போய்த் தான் வேகத்தைக் குறைத்து நிறுத்தினான்.
வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்த போது, அவன் அருகில் அவனின் நண்பன் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்து இன்னும் டென்சன் ஆனவன் ‘உன்னையும் வர வச்சுட்டாளா அவ?’ என முணுமுணுத்துக் கொண்டே பல்லை கடித்தான்.
அவனின் நண்பன் அருகில் தான் இருந்ததால் ஜீவா முணுமுணுத்தது நன்றாகக் கேட்டது.
“நீ தப்பு செய்துட்டு இப்ப ஏன் சிஸ்டரை திட்டுற? அவங்க என்னை வர வேண்டாம்னு தான் சொன்னாங்க. நான் தான் கிளம்பி வந்தேன். உன்னை எங்க எல்லாம் தேடுறது? தேடி நீ கிடைக்கலைங்கவும் எவ்வளவு கவலையா இருந்துச்சு தெரியுமா? இப்ப தான் சிஸ்டர் திரும்பப் போன் போட்டுச் சொன்னாங்க. உன்னை ஆனந்த் பார்த்திட்டதா. அதான் உன்னைப் பார்க்காம போனா நிம்மதியா இருக்காதுன்னு உடனே இங்க வந்தேன்” என அவன் சொல்லவும்,
“உன்னை யாரு என்னைத் தேட சொன்னா? போய்த் தொலையட்டும்னு விடவேண்டியது தான?” எனச் சிடுசிடுத்தவன் தன் நண்பனின் முறைப்பை பார்த்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு “அதான் நான் வந்துட்டேன்ல? நீ கிளம்பு! அப்புறம் பார்க்கலாம்” என விரட்டினான்.
“இப்ப எதுக்கு நீ என்னைத் துரத்துற? நீ வரவர சரியில்லை. வீட்டுக்கு வராம எங்க போன?” எனக் கேட்டவனைப் பார்த்து “இப்ப நான் யார்கிட்டேயும் எதுவும் பேசுறாப்புல இல்லை. நீ கிளம்பு!” என்றவன் நிற்காமல் அவன் சென்றானா இல்லையா எனக் கூடப் பாராமல் வேக நடை போட்டவன் கதவை படபடவெனத் தட்டினான்.
அவனின் தட்டலில் வேகமாகக் கதவை திறந்து விட்ட தனுவின் முகத்தைக் கூடக் காணாமல் அவர்களின் அறையில் போய்ப் புகுந்து கொண்டான்.
அவனின் நடையில் தெரிந்த கோபத்தைப் பார்த்து ஒரு நிமிடம் மலைத்து நின்றவள் திரும்பி வாசலை பார்த்தாள்.
ஆனந்த் நின்றிருந்தான். அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் “உள்ளே வாங்க!” என்றவள், அவனுக்குப் பின் ஜீவாவின் நண்பன் இருக்கிறானா எனப் பார்த்தாள். அவளின் பார்வையை உணர்ந்து “அண்ணா கிளம்பிட்டாங்க. உங்ககிட்ட கிளம்புறேன்னு சொல்ல சொன்னாங்க. ஜீவாணாக்கிட்ட அப்புறம் பேசுவாங்களாம்” என்றான்.
“சரி நீங்க உள்ள வாங்க ஆனந்த். ஏன் இன்னும் வெளியேவே நிக்கிறீங்க? வந்து உட்காருங்க” என அழைக்கவும்,
வரவேற்பறைக்கு வந்தவன் “இல்ல அண்ணி நான் கிளம்புறேன். கல்யாணத்தை அட்டென் பண்ணிட்டு ஈவ்னிங் போல வர்றேன். அண்ணா ரொம்பக் கோவமா இருக்கான் பார்த்துக்கோங்க. எனக்கு அவனை இப்படியே விட்டுட்டு போக இஷ்டமில்லை தான். ஆனா உங்க இரண்டு பேருக்குள்ள இப்ப நான் இருக்க விரும்பலை. நான் வர்றதுக்கு முன்னாடி போன் பண்ணிட்டு வர்றேன். என் பிரண்ட் நம்பர் தர்றேன் குறிச்சிக்கோங்க. எதுவும் அவசரம்னா அந்த நம்பருக்கு கூப்பிடுங்க” என்றான்.
“எதுக்கு உங்க பிரண்ட் நம்பர்? உங்க போன் என்னாச்சு?” எனக் கேட்டவளிடம் “உடைஞ்சிருச்சு அண்ணி” என்றான்.
“உடைஞ்சிருச்சா எப்படி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூடப் பேசினீங்களே?” என வியப்பாகக் கேட்ட தனுவிற்குப் பதில் சொல்ல தயங்கி, தன் அண்ணன் இருந்த அறைக்கதவை பார்த்தான்.
அவன் பார்வை சென்ற பக்கத்தைக் கவனித்தவள் ‘ஒஹ்! போனை உடைக்கும் அளவிற்குக் கோபமா’ என அதிர்ந்து பார்த்தாள்.
அவளின் அதிர்வை பார்த்து “ஒன்னும் இல்லை அண்ணி சரியாகிரும். அவன் கோபம் குறையும் வரை கொஞ்சம் பொறுமையா இருங்க. நான் போய்ட்டு வர்றேன்” என்று அவனின் நண்பனின் நம்பரையும் கொடுத்து விட்டுச் சென்றான்.
அவனை அனுப்பிவிட்டு வந்த தனு, இத்தனை நாளும் அமைதியாக இருந்தவள் ஆனந்த் சொல்லிச் சென்ற பொறுமையைப் பறக்க விட்டு வேகமாகத் தாழ்ப்பாள் போடாமல் வெறுமனே மட்டும் மூடியிருந்த ஜீவா இருந்த அறைக்குச் சென்றாள்.
அங்கே படுக்கையில் படுத்து முகத்தைக் கையை வைத்து மறைத்துப் படுத்திருந்த ஜீவாவிடம் வந்து “உங்களுக்கு என்னாச்சு ஜீவா? ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க? அப்படி என்ன என்மேல கோபம்? வீட்டுக்கு கூட வர பிடிக்காத அளவுக்கு? நான் எதுவும் தப்பு பண்ணிருந்தா ஏன் இப்படிப் பண்றேன்னு கேளுங்க. இல்ல எனக்கு நீ செய்றது எதுவும் பிடிக்கலைன்னு என் கூடச் சண்டை போடுங்க.
அதை விட்டு நைட் எல்லாம் வீட்டுக்கு வராம இருந்ததும் இல்லாம ஆனந்தோட போனை வேற உடைச்சிருக்கீங்க. என்ன இதெல்லாம்? எனக்குப் பதில் சொல்லுங்க” என மூச்சுவிடாமல் கோபமாகக் கேட்டவளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அசையாமல் படுத்திருந்தான் ஜீவரஞ்சன்.
அவனின் அமைதியில் தனுவிடம் இருந்த கொஞ்ச நஞ்சம் இருந்த பொறுமையும் பறக்க, அவனின் முகத்தை மறைத்திருந்த கையைப் பட்டென்று எடுத்துவிட்டவள் கையைப் பிடித்து எழுப்ப முயன்றாள்.
தனு பேசப் பேச காது கேளாதவன் போல இருந்தவன் அவள் எழுப்பவும், கோபம் பொங்க அவளைக் கண்டு கொள்ளாமல் எழுந்து அறையை விட்டு செல்லப் போனான்.
தன்னை ஒரு பொருட்டாக நினைக்காமல் அவன் வெளியே செல்வதைப் பார்த்து அவனைத் தடுக்க வேகமாக அவனின் சட்டையைப் பிடித்து நிறுத்தினாள்.
“நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க ஒன்னும் சொல்லாம எழுந்து போனா என்ன அர்த்தம்? என்னனாலும் வாயை திறந்து சொன்னாத்தானே தெரியும்? எதையும் வெளியில் சொல்லாம உங்களுக்குள்ளே வச்சுக்கிட்டு ஏன் இப்படி என்னை வேதனை பட வைக்கிறீங்க?” எனக் கத்தி கேட்டவளின் கையை வேகமாகத் தட்டி விட்டவன்,
“என்ன நான் வேதனைப்பட வைக்கிறேனா? நீங்க எல்லாரும் தான் என்னை டார்ச்சர் பண்றீங்க. என் நிம்மதியே போய்ருச்சு. ஆபீஸ் போனா அங்க உயிர் போகுது. வீட்டுக்கு வந்தா நீ முகத்தைத் திருப்பிக்கிட்டு போற. போங்க எல்லாரும். எனக்கு யாரும் வேண்டாம். நான் எங்கயாவது போய்த் தொலையுறேன்” எனப் பதிலுக்கு ஜீவாவும் கத்தினான்.
அவனின் ‘தொலைகிறேன்’ என்ற வார்த்தையில் ஜீவாவை அதிர்ந்து பார்த்தாள் தனுஸ்ரீ.