மனதோடு உறவாட வந்தவளே – 10

அத்தியாயம் – 10

அன்று காலை எழுந்ததில் இருந்து ஒருவருவரை ஒருவர் பார்க்காமல் விலகி போனதாலோ என்னமோ அன்று முழுவதுமே மீண்டும் அவர்கள் பார்த்துக் கொள்ள முடியாமல் போனது.

இரவு வழக்கம் போல அவனுக்காகக் காத்திருந்த தனுஸ்ரீ டிவியில் ஒரு கண்ணும் அவன் வருகிறானா? எனக் கதவில் கண்ணுமாக இருந்தவள் மணி என்ன எனப் பார்த்தாள். மணி பன்னிரண்டு ஆகியிருந்தது.

அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவள் கண்ணையும் கசக்கி விட்டுக் கொண்டாள். ஜீவரஞ்சன் நேரம் கழித்து வர ஆரம்பித்ததில் இருந்து அவளின் தூக்கமும் தொலை தூரம் சென்றிருந்தது.

‘இன்னும் சிறிது நேரம் பார்ப்போம். அப்படியும் வரவில்லை என்றால் போன் செய்து விடவேண்டியது தான். வழக்கம் போல நான் போன் செய்து பேசியிருந்தாலும் இந்த நேரம் வீடு வந்திருப்பார். இப்போது நான் பேசாமல் இருக்கவும் அதுவும் அவருக்கு வசதியாகப் போயிருக்கும்’ என நினைத்துக் கொண்டாள்.

மேலும் ஒரு மணி நேரம் கடக்கவும் அவளைப் பதற்றம் தொற்றிக் கொண்டது. போனை கையில் எடுத்து ‘அழைக்கலாமா?’ என நினைத்தவள் ‘எப்படியும் வந்துவிடுவான். அவசரப்பட்டுப் போன் செய்து மௌனத்தை முடித்துக் கொள்ள வேண்டாம்’ என நினைத்து மீண்டும் போனை கீழே வைத்துவிட்டாள்.

இரண்டு மணி ஆகவும் அவளின் பதட்டம் கூடியது. அதற்கு மேலும் மனம் பொறுக்காமல் அவனைப் போனில் அழைத்துப் பார்த்தாள். அழைப்பு போனதே தவிர எடுக்கபட வில்லை. ‘ஒருவேளை பைக்கில் வந்து கொண்டு இருப்பாரோ?’ என நினைத்து ‘இன்னும் கொஞ்சம் நேரம் பார்ப்போம்’ என அமைதியானாள்.

மணி இரண்டையும் தாண்டி வெகுநேரம் ஆகியும் ஜீவரஞ்சன் வந்தபாடில்லை. அதில் அதிகப் பயத்துடன் கூடிய பதட்டத்திற்கு உள்ளானவள், மீண்டும் போன் போட்டாள். இப்பொழுது அணைத்து வைக்கபட்டுவிட்டதாகச் சொல்லவும் உடைந்தே போனாள்.

“அச்சோ என்னாச்சுனு தெரியலையே? ஒருவேளை என் மேல உள்ள கோபத்தில இப்படிச் செய்கிறாரா? இப்ப நான் என்ன செய்யறது?” எனப் புலம்பிக் கொண்டே விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். அதே ‘அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது’ என வந்தே அவளின் பொறுமையைச் சோதித்தது.

‘அய்யோ கடவுளே ரஞ்சன் பத்திரமா வீட்டுக்கு வந்திறணும். எனக்கு இப்ப என்ன செய்றதுனு தெரியலயே?’ எனத் தலையைக் கைகளில் தாங்கி கடவுளிடம் சில நொடிகள் புலம்பினாள்.

பின்பு தன்னை நிதானித்துக் கொண்டவள் ‘நோ! நான் டென்சன் ஆகக் கூடாது. நிதானம்! நிதானம்!’ எனத் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு மூச்சை இழுத்து விட்டுத் தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள்.

‘முதலில் ஆபீஸில் இருக்குற ரஞ்சன் டேபிள் லேண்ட்லைன்க்கு போன் போட்டு பார்ப்போம்’ என நினைத்து அதற்கு அழைத்தாள். அவளின் நேரம் அதுவும் எடுக்கப்படாமல் போனது.

‘டேபிளில் ரஞ்சன் இருந்திருந்தா போனை எடுத்திருப்பாரே? எடுக்கவில்லை என்றால் அப்போ ஆபீஸ் விட்டு கிளம்பிட்டாரா?’ என யோசித்துக் கொண்டே தலையைப் பிடித்துக் கொண்டாள்.

இரவின் தனிமையும், ஜீவரஞ்சன் பற்றிய பயமுமாக என்றும் இல்லாத அளவின் அவள் மனது துடித்தது. ஆனாலும் சும்மாவும் இருக்க முடியாதே? ‘அடுத்து என்ன செய்வது?’ என்று தான் அவளின் சிந்தனை ஓடியது. ஜீவாவின் நண்பன் அவளின் ஞாபகத்திற்கு வந்தான்.

உடனே அவனை அழைத்தாள். இப்போது இந்த நேரத்தில் அழைத்தால் என்ன நினைப்பார்களோ? என்ற எண்ணம் கூட அவளின் மனதில் தோன்றவில்லை. இப்பொழுதே அவளின் ரஞ்சன் பற்றி அவளுக்குத் தெரிய வேண்டும். அது மட்டுமே தனுவின் அணுவில் இருந்தது.

அந்தப்பக்கம் போன் நிற்க போகும் நேரத்தில் எடுக்கப்பட்டது. தூக்க கலக்கத்தில் இருந்த அவன் “யாரது இந்த நேரத்தில்?” எனத் தூக்கம் போன எரிச்சலில் கடுப்பாய் கேட்டான். அவனின் எரிச்சல் கூடத் தனுவின் மூளையில் ஏறவில்லை.

“அண்ணா நான் தனுஸ்ரீ. ஜீவா எப்போ ஆபிஸ் விட்டு கிளம்பினார்?” எனப் படபடவென வேகமாய்க் கேட்டாள்.

‘ஜீவா’ எனக் காதில் விழுந்ததுமே தூக்க கலக்கத்தை விரட்டியவன் “என்னம்மா? என்ன இந்த நேரத்தில் ஜீவா பத்தி கேட்குற? அவன் பன்னிரெண்டு மணி போலயே கிளம்பிட்டானே? நானும் அவனும் தானே ஒண்ணா ஆபிஸில் இருந்து கிளம்பினோம்” என்றான்.

“என்னது? பன்னிரெண்டு மணிக்கே கிளம்பிட்டாரா? என்ன அண்ணா சொல்றீங்க? இன்னும் அவர் வீட்டுக்கு வரலையே?” எனப் படபடத்தாள். கிளம்பியவன் இன்னும் வரவில்லை என்றதும் ‘அச்சோ எங்க போனார்னு தெரியலையே? ஒருவேளை விபத்து எதுவும்மா?’ என அவள் நினைத்து அப்படியே உறைந்து போய் அமர்ந்து விட்டாள்.

அவன் அந்தப் பக்கம் இருந்து “ஹலோ! ஹலோ! என்னாச்சுமா? லயனில் இருக்கியா?” எனக் கத்தியது கூட அவளுக்கு உரைக்காத நிலையில் உறைந்து போனாள். தன் போக்கில் ஏதேதோ எண்ணி குழம்பியவள் தன்னை அறியாமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.

அவன் மீண்டும் அழைப்பு விடுக்கத் தன் சிந்தனையில் இருந்து மீண்டு “ஹலோ” என்றாள். “என்னம்மா ஆச்சு? நான் கிளம்பி வரவா?. ஜீவா எங்கேனு தேடி பார்ப்போம்” என்றான்.

‘அவனை வர சொல்லவா? வேண்டாமா?’ என யோசித்தவள் பின்பு “இல்லண்ணா நீங்க எதுக்கு இந்த நேரத்தில் அலைஞ்சிக்கிட்டு? நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

ஆனால் அவனோ “ஏன்மா? இந்த நேரத்தில் நீ எங்க போய்ப் பார்ப்ப? இவன்கிடட போய் என்ன உதவி கேட்கனு நினைக்கிறியா? அவன்(இன்னொரு நண்பன்) தான் ஜீவா கிட்ட அப்படி நடந்துக்கிட்டானா? நானும் அப்படித் தான்னு நினைச்சியா?” என வருத்தமாகக் கேட்டான்.

“ச்சே! ச்சே! அப்படி இல்லண்ணா! சரி நீங்க அவர் ஆபிஸ் வர வழில தேடி பார்த்துட்டு சொல்லுங்க” என வேறு பேச்சை வளர்க்காமல் சோர்வாகச் சொன்னாள்.

அவளின் வருத்தத்தை உணர்ந்தவன் “கவலைப்படாதமா! ஜீவாக்கு ஒன்னும் ஆகியிருக்காது வந்துருவான். நான் போய்த் தேடி பார்த்துட்டு சொல்றேன்” எனச் சமாதானப்படுத்திவிட்டு ஜீவாவை தேடி பார்க்க கிளம்பினான்.

பதில் கூடப் பேச முடியாமல் போனை வைத்தவள் சில நாட்கள் வைராக்கியமாக அழக்கூடாது என இருந்தவளின் கண்கள் ஜீவாவின் நிலை தெரியாமல் கண்ணீரால் நிரம்பியது.

மெல்ல தன்னைத் தேற்றிக் கொண்டு கண்ணீரை துடைத்தவள், அப்போது தான் ஞாபகம் வந்தது போல இன்னொருவருக்கு அழைத்தாள்.

அந்தப்பக்கம் தூக்கத்தில் இருந்தவன் மெதுவாகக் கண்திறந்து ‘யார் இந்த நேரத்தில்’ எனப் போனைப் பார்த்து விட்டு அதில் தெரிந்த பெயரை பார்க்கவும் படக்கென எழுந்து அமர்ந்தான் ஆனந்த்.

‘என்ன இது? அண்ணி இந்த நேரம் போன் பண்றாங்க? எதுவும் பிரச்சனையா?’ என நினைத்துக்கொண்டே போனை வேகமாக இயக்கியவன் “அண்ணி என்னாச்சு? இந்த நேரம் கூப்பிடுறீங்க? அண்ணா எங்க?” எனப் படபடப்பாகக் கேட்டான்.

“அதான் தெரியலை ஆனந்த்?” என்றவளின் பேச்சுப் புரியாமல் “என்ன அண்ணி சொல்றீங்க? தெரியலையா எங்க போனான்?” எனக் கேட்டவனிடம்.

“தெரியலை. காலையில் ஆபீஸ் போனவர் இன்னும் வீட்டுக்கு வரலை. எங்க போனார்னு தெரியலை” எனத் லேசாகத் தேம்பி கொண்டே சொன்னவள்,

“ப்ளீஸ் ஆனந்த் நீங்க இங்க கொஞ்சம் கிளம்பி வர்றீங்களா? எனக்கு என்ன செய்றதுனே தெரியல. பயமா இருக்கு. அப்பா அம்மாவை கூப்பிட்டு சொல்லுவோம்னு பார்த்தா நிச்சயம் அவங்க தாங்க மாட்டாங்க .இந்த நேரத்தில் அவங்களை டென்சன் படுத்தவானு இருக்கு. நீங்க வர்றீங்களா?” எனக் கெஞ்சலாகக் கேட்டவளிடம்,

“என்ன அண்ணி என்கிட்ட போய்க் கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க. நான் இதோ வந்துடுறேன். அண்ணா வந்துருவான். கவலை படாதீங்க!” எனச் சொல்லிவிட்டு வேகமாக எழுந்து உடையை மாற்றியவன் தன் நண்பனை எழுப்பினான்.

ஆனந்த் சென்னையில் தான் அன்று இருந்தான். நண்பனின் அண்ணன் கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்தவன் கல்யாணம் முடிந்த பிறகு அண்ணன் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு நண்பர்கள் கூடவே ஹோட்டலில் தங்கி விட்டான்.

‘இந்த இக்கட்டான நேரத்தில் ஆனந்த் இருந்தால் அவன் அலைந்து தேட உதவுவான். அதுவும் இல்லாமல் ஒன்றாக வளர்ந்தவர்கள் அவனுக்கு ஜீவாவின் மனது என்னை விட நல்லா தெரிந்திருக்கும். அவன் கோபமாக இருக்கும் நேரங்களில் இது போல வீட்டிற்கு வராமல் இருப்பானா? அப்படி இருந்தால் அவன் அந்த மாதிரி நேரத்தில் எங்கே செல்வான்? என அவனுக்குத் தெரிந்திருக்கலாம். அதுவும் உறவினன் ஒருவர் உதவிக்கு இருப்பது தெம்பைத் தரும்’ என நினைத்தே அவனை அழைத்தாள்.

‘அதுவும் இல்லாமல் அப்பா, அம்மாவை நிச்சயம் இப்போ கூப்பிட முடியாது. அப்படி அவங்க வந்தாங்கனா இதுவரை நடந்தது எல்லாம் சொல்லனும். அதை இப்போ செய்து ஜீவா மேல அவங்க கோபப்பட்டுட்டா அதை என்னால் தாங்க முடியாதே’ என அவளுக்குள்ளேயே ஏதேதோ நினைத்துக் கொண்டு மனதை குழப்பிக் கொண்டாள்.

‘ஏன் ரஞ்சன் இப்படிப் பண்றீங்க? வீட்டுக்கு வந்துருங்களேன். உங்களுக்கு என்னாச்சோ? ஏதாச்சோனு பயமா இருக்கே. என் மேல நீங்க கோபப்பட்டுத் திட்டிருந்தாலும் பரவாயில்ல. ஆனா நீங்க கொடுத்த இந்தத் தண்டனை எனக்கு வலிக்குதே’ எனத் தன்னுள் அழற்றிய படி கண்ணீர் விட்டாள்.

பின்பு ஏதோ யோசித்தது போலப் போனை எடுத்து இன்னும் ஒருவருக்கு அழைத்துப் பேசியவள் ஆனந்தின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் வீட்டு அழைப்பு மணி சத்தத்துடன் “அண்ணி” என்ற குரலும் கேட்க, வேகமாகச் சென்று கதவை திறந்தாள்.

உள்ளே நுழைந்த ஆனந்த் “என்ன அண்ணி அண்ணா வந்துட்டானா இல்லையா?” எனப் பதட்டத்துடன் கேட்டான்.

“இன்னும் வரலை ஆனந்த். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு” எனக் கரகரப்பான குரலில் சொன்னவளிடம் இருந்து மெல்லிய கேவல் ஒலி கேட்டது.

“என்ன நடந்தது அண்ணி? எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான்.

இவனிடம் இப்ப என்ன சொல்ல என யோசித்தவள் “ஹ்ம்ம் கொஞ்சம்” என முணங்கினாள்.

அவளின் முணங்களைக் கேட்ட ஆனந்த் கணவன் மனைவிக்கிடையே உள்ள பிரச்சனையை அதற்கு மேல் கேட்காமல் ஒதுக்கி “சரி அண்ணா ஆபீஸ் விட்டு கிளம்பினானா இல்லையானு தெரிஞ்சதா அண்ணி? வேற யார்கிட்டேயும் விசாரிச்சிங்களா?” எனக் கேட்டான்.

“பன்னிரண்டு மணிக்குக் கிளம்பினாராம் அவர் பிரண்ட் சொன்னார்” எனவும்.

“என்ன அண்ணி சொல்றீங்க பன்னிரண்டு மணி வரை ஆபிஸில் என்ன செய்தான்?”

“அவர் கொஞ்ச நாளாவே அப்படித்தான் வர்றார்”

“ஓ” என்றவன் “சரி நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். கதவை பூட்டிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே போகும் போது “அவர் எங்க போய்ருப்பார்னு உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா?” எனக் கேட்டாள்.

“ஒரு கெஸ் இருக்கு. சரிதானானு பார்த்துட்டு வர்றேன். நீங்க கவலைப்படாம இருங்க” என்றுவிட்டு வெளியேறினான்.

தன் நண்பன் பைக்கில் பறந்த ஆனந்த் நேராகக் கடற்கரைச் சாலையில் வண்டியை விட்டான்.

அங்கே அந்தக் கடற்கரை சாலையில் தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து தலையைக் கையால் இறுக பிடித்தபடி அமர்ந்து அசையாமல் அமர்ர்ந்திருந்தான் ஜீவரஞ்சன்.