மனதோடு உறவாட வந்தவளே – 1

அத்தியாயம் – 1

அந்த நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலுவலக வளாகமே விளக்கொளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்திலும் சிலர் தங்களுடைய வேலையில் மும்முரமாக இருந்தார்கள். அவரவர்கள் வேலையில் அங்கே இருந்தவர்கள் மூழ்கி இருக்க, அங்கிருந்த யாரையும் கருத்தில் கொள்ளாமல், தன் கடமையே கண்ணாகத் தன் மடிக்கணினியில் மூழ்கி இருந்தான் அவன்.

அவனுக்கு அப்பொழுது தன்னைச் சுற்றிலும் ஓர் உலகம் இருக்கின்றது என்பது கூட மறந்து போயிருந்தது. அந்த அளவு சுற்றுப்புறம் மறந்து வேலையில் தன்னைத் தொலைத்திருந்தான்.

அந்த அமைதியான நேரத்தில் ‘நீ என்னை எப்படி இவ்வளவு நேரம் கவனிக்காமல் இருக்கலாம்?’ என்பது போல அந்த ஆடவனின் கைப்பேசி அதிர ஆரம்பித்தது.

மேஜையில் அதிர்வை உணர்ந்து தன் கவனத்தைத் திருப்பிக் கைப்பேசியைக் கையில் எடுத்துப் பார்த்தான்.

சற்று நேரத்திற்கு முன் இரண்டு முறை வந்த அதே அழைப்பு தான். அந்த இரண்டு முறையும் செய்தது போலத் தான் இப்பொழுதும் செய்தான்.

அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்துவிட்டுச் சிவப்பு நிறத்தை அழுத்தி அணைத்து வைத்து விட்டான். அவன் அழுத்திய அழுத்தத்தில் அந்தக் கைப்பேசிக்கு வாய் இருந்தால் கண்டிப்பாக அழுதிருக்கும்.

நிஜ உயிரையே இப்பொழுது அழ வைத்துக் கொண்டிருப்பவனுக்கு அந்தக் கைப்பேசியின் அழுகையா கேட்டு விடப் போகின்றது?

கைப்பேசியை அணைத்து வைத்த கையுடன் தன் மடிக்கணினியையும் அணைத்து வைத்தான்.

அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும் பொழுதே அவனின் உதடுகள் “நிம்மதியா வேலை செய்ய விடாம எப்ப பார் போன் போட்டு உயிரை வாங்க வேண்டியது” என்று கடுப்புடன் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

கணினியை எடுத்து தன் தோள் பையில் வைத்தவன், கிளம்பி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனின் முகத்தில் கோபம் ஒட்டிக் கொண்டிருந்தது.

அதே கோபத்துடன் தன் வண்டி நிற்கும் இடம் வந்தவன் தன் கைப்பேசியை எடுத்துத் தன்னை மூன்று முறை அழைத்த எண்ணிற்கு இப்பொழுது அவன் அழைத்தான்.

அவன் செய்தது போல அல்லாமல் அந்தப் பக்கம் உடனேயே அழைப்பு எடுக்கப் பட்டது. அந்த வேகத்தை உணர்ந்தவனின் முகம் சிறிது கோபத்தைக் குறைத்தது.

ஆனாலும் இன்னும் சிறிது ஒட்டிக் கொண்டிருந்த கோபத்துடன் “ஏன் சும்மா, சும்மா போன் போட்டுகிட்டே இருக்குற?” என எடுத்ததும் கோபமாகச் சிடுசிடுத்தான்.

………………

“நேரம் ஆனா என்ன? எப்படியும் வீட்டுக்குத் தானே வருவேன். வராம எங்க போகப் போறேன்?”

……………….

“சொல்லலைனா முக்கியமான வேலையா இருப்பேன்னு புரிஞ்சுக்கணும். அதை விட்டு சும்மா போன் போட்டுகிட்டு” என மீண்டும் கடிந்தான்.

……………..

“ம்ம், வருவேன்! வருவேன்! வேலை பார்க்க விடாம தொந்தரவு பண்ணிட்டு எப்போ வருவேன்னு கேள்வி வேற. ச்சே!” என மீண்டும் வெளிப்படையாகவே சலித்தான்.

அவனின் சலிப்பில் அந்தப்பக்கம் வார்த்தைகள் அற்று அமைதியாகியது.

அந்த மெளனம் அவனை ஏதோ செய்ய, கொஞ்சம் மலையிறங்கியவன் “உடனே அமைதி ஆகிற வேண்டியது. சரி விடு! நான் ஆபிஸ் விட்டு வெளியே வந்துட்டேன். போனை வை! நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்” என்றான்.

‘இதை முதலிலேயே சொல்ல வேண்டியது தான?’ என்று அந்தப் பக்கம் முணுமுணுவிட்டுப் போனை வைக்கும்முன் “சரி முனங்காதே! கதவு எல்லாம் நல்லா பூட்டிருக்கியா? கவனமா இரு!” என்று குரலில் அக்கறை மிகச் சொன்னவன் போனை வைத்தான்.

‘ஆமா இப்ப மட்டும் அக்கறை வந்துருச்சு’ என அந்தப் பக்கம் மெல்லிய குரலில் நொடித்துக் கொண்டது இவனுக்குக் கேட்கும் முன் போன் அமைதியாகி இருந்தது. அதுவும் அவன் காதில் விழுந்தால் என்ன சொல்லிருப்பானோ?

எந்த நேரம் குளிராய் இருப்பான். எந்த நேரம் அனலாய் இருப்பான் என்றே சொல்ல முடியாத மனநிலையில் தான் இருந்தான் அவன்.

இப்பொழுது கூட ‘ஏன் போன் செய்கிறாய்?’ என்று அனலாய் காய்ந்தவன், உடனே குளிர்நிலவாக அந்நபரின் பாதுகாப்பைப் பற்றி அக்கறை படுகின்றான்.

தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் மனம் இப்பொழுது வேறு சிந்தனைக்குத் தாவி இருந்தது. சில நாட்களுக்கு முன் அவன் அனுபவித்த துரோக செயல் இன்னும் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது.

எங்கோ, எவருக்கோ நடக்கும் துரோகம் கண்டு, ‘இதற்குப் போயா இப்படி அலட்டிக் கொள்கின்றார்கள்?’ என்று நினைப்பவர்கள் கூடத் தனக்கெனச் சிறிதளவில் துரோகம் இழைக்கப் பட்டாலும் துவண்டு போகின்றார்கள். அதிலும் உடன் பழகியவர்களின் துரோகம் தூக்கத்தில் கூடத் துரத்தும். அவனையும் அந்தத் துரத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது.

அவனுக்கு இன்னும் கூட அந்தச் செயலை ஜீரணிக்க முடியவில்லை. அதனால் அவன் அடைந்த மனவேதனையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள்ளேயே போட்டு புதைத்து, அதனுள் அவனும் புதைந்து கொண்டிருக்கின்றான்.

தன் இந்தச் செயலால் இன்னொரு ஜீவனும் பாதிக்கப் படுகின்றது என்று அவன் உணரவே இல்லை. அப்படி உணராமல் போவதால் அதில் தான் இன்னும் வலியை அனுபவிக்கப் போகின்றோம் என்று சிறிதும் அவன் நினைத்துப் பார்த்தான் இல்லை.

அரைமணி நேரப் பயணத்தில் தான் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தை அடைந்தவன், அங்கே நான்காவது மாடியில் இருந்த வீட்டின் கதவை தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு திறந்து உள்ளே சென்றான்.

சென்றவன் கண்கள் தன்னால் வரவேற்பு அறையில் இருந்த சோபாவிற்குத் தான் தாவியது. அங்கே அவன் எதிர்ப்பார்த்தற்கு மாறாக, சில நாட்கள் போல் இல்லாமல் இன்று அங்கு அவனுக்கு வெறுமையே காட்சியாகக் கிடைத்தது.

அந்த வெறுமை அவனை யோசனையில் முகத்தைச் சுருங்க வைக்க, ‘இன்னைக்கு என்ன அதிசயமா ஆளை காணோம்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கதவை பூட்டிவிட்டு படுக்கையறைக்குச் சென்றான்.

அங்கே சென்று அணைந்திருந்த விளக்கை போட்டதுமே அவனின் கண்கள் கட்டிலுக்குத் தாவியது. இப்பொழுது அவன் கண்களுக்கு ஏமாற்றத்தைத் தராமல் அவனுக்குக் காட்சி தந்தாள் அந்த அழகிய பதுமை.

அவள் அவனின் மணவாட்டி தனுஸ்ரீ. ஆறுமாதத்திற்கு முன் பெரியவர்களின் ஆசீர்வாதத்தில், ஜீவரஞ்சனின் கரம் சேர்ந்த தனுஸ்ரீ ஜீவரஞ்சன்.

ஜீவரஞ்சன் தன் அழகிய பதுமையின் முகம் காண அருகில் சென்றான். அவள் விழிகள் சிறிதும் அசைவில்லாமல் மூடியிருந்தது. அதைப் பார்த்தவன் ‘ஓ அதற்குள் தூங்கி விட்டாளா? நல்லது தான். நான் இருக்கும் மனநிலையில் அவள் எதுவும் கேள்வி கேட்டால் விளக்கம் சொல்ல வேண்டிய நிலையில் இல்லை’ என எண்ணிக் கொண்டான்.

பின்பு குளியலறைக்குச் சென்று இலகுவான உடைக்கு மாறி வெளியே வந்தவன், படுக்கை அருகில் சென்று நின்று மீண்டும் அவளை இன்னும் கவனித்துப் பார்த்தான்.

அந்தப் பதுமையின் கண்ணுக்குக் கீழ் கன்னம் முழுவதும் கண்ணீர் காய்ந்த தடம் தெரிந்தது. அதனைக் கண்டவன் மனதிற்குள் மிகவும் வருந்தினான்.

அந்த வருத்தம் அவனையே கேள்வி கேட்க தூண்டியது. ‘நான் ஏன் இப்படி மாறிப் போனேன்? என் இயல்பு இது இல்லையே? என் குணம் எப்படி இப்படி ஆனது? யாரையும் வருத்தக் கூடாது என நினைக்கும் நான் இப்பொழுது என்னை நம்பி வந்தவளை அழவைக்கும் வேலையைச் செய்கிறேனோ?’ என எண்ணிக் கொண்டிருந்தவன், திடீரென ‘அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என் சூழ்நிலை அப்படி!’ எனவும் நினைத்துக் கொண்டான்.

இப்படி இருவேறு மனநிலையில் தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டவன் அவளின் முகம் காணக் காண அதற்கு மேல் மனம் கேட்காமல் கட்டிலில் பதுமையின் அருகில் அமர்ந்து அவளின் ஒரு கையை எடுத்து தன் இரு கைகளுக்குள்ளும் வைத்து சிறிது நேரம் வருடிக் கொடுத்தான்.

பின்பு மெல்ல அவளின் முகத்தின் அருகே குனிந்தவன், அவளின் முகத்தைக் காற்றில் பறந்து வந்து மறைத்துக் கொண்டிருந்த கேசக் கற்றைகளை மெதுவாக ஒதுக்கி அந்தப் பிறை போன்ற நெற்றியில் இதமாகத் தன் முத்திரை ஒன்றை பதித்துவிட்டு நிமிர்ந்தான்.

அவன் தொடுகை எதற்குமே அவள் அசையாமல் இருக்கவும், தன்னவளின் முகத்தையே வைத்த கண்வாங்காமல் சிறிது நேரம் பார்த்துவிட்டு எழுந்து விட்டான்.

இரவு சாப்பாடு அலுவலகத்தில் அரைகுறையாகச் சாப்பிட்டது இப்போது பசியை உண்டாக்கி இருந்தது.

அவளை எழுப்ப மனம் இல்லாமல் தானே சமையலறைக்குச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பாலை எடுத்து சுடவைத்துக் கப்பில் ஊற்றிக் கொண்டு மீண்டும் அறைக்குள் வந்து மேஜையில் வைத்துவிட்டு தன் தூக்கத்தை மறந்து மடிக்கணினியை எடுத்து பாலை குடித்துக் கொண்டே பாதியில் விட்ட வேலையில் மீண்டும் மூழ்க ஆரம்பித்தான்.

அதுவரையும் தூங்குவதாகக் காட்டிக் கொண்டிருந்த பதுமை மெல்லக் கண் திறந்து சத்தமில்லாமல் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

கணவன் அவளின் கையை வருடும் போதும், முடியை ஒதுக்கும் போதும், நெற்றியில் உணர்ந்த அவனின் உதட்டின் ஈரத்திலும், எந்த உணர்வையும் காட்டாமல் சமாளித்தவள், அவன் தன் முகத்தையே கூர்ந்து பார்ப்பதாகத் தோன்றவும் தன்னைச் சமாளிக்கத் திணறித்தான் போனாள் தனுஸ்ரீ.

அவன் சமையலறைக்குச் சென்றதை பார்த்தவள், ‘இப்போது தான் இருக்கும் மன நிலையில் எழுந்தால் கண்டிப்பாகத் தான் ஏதாவது பேசிவிடக் கூடும். அது இருவருக்குமே மன வருத்தம் தரும் தருணமாக மாறிவிடும்’ என்று நினைத்தவள் அப்படியே படுத்திருந்து கண்ணை மூடிக் கொண்டாள்.

அவன் வந்து மீண்டும் அமரவும் மெதுவாகக் கண் முழித்துப் பார்த்தவள், தனக்கு முதுகு காட்டி அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த கணவனையே கண்ணில் நீர் கசிய பார்க்க ஆரம்பித்தாள்.

தூக்கம் மறந்து வேலையில் அமர்ந்திருக்கும் கணவனைப் பார்க்கப் பார்க்க அவளின் மனம் வலிக்க ஆரம்பித்தது. வலித்த மனதைக் கட்டுப்படுத்தியவள், மீண்டும் கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

இவ்வளவு நேரம் தனியாக இருந்ததினால் தூக்கம் வராமல் தவித்தவள், ‘கணவன் தன் அருகில் தான் இருக்கிறான்’ என்ற எண்ணம் தன்னையும் அறியாமல் வந்து அவளின் கண்கள் தூக்கத்தைத் தேடி சென்றது.

அவள் பார்த்தது, கண்ணீர் விட்டது, தான் இருக்கும் நிம்மதியில் அமைதியாக உறங்கியது என எதையும் அறியாமல் தன் வேலையில் மட்டும் கவனத்தை வைத்து அதைத் தொடர்ந்து கொண்டிருந்தான் ஜீவரஞ்சன்.

சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவியிருந்தாள் பதுமையவள் தனுஸ்ரீ.

தன் வேலையை விடிய சில மணி நேரங்களே இருந்த பொழுதில் ஓரளவு முடித்திருந்த ஜீவா அதற்கு மேலும் அந்தக் கணினித்திரையின் வெளிச்சத்தைக் காண முடியாமல் மூடி வைத்துவிட்டு எழுந்தான்.

கைகளை நெட்டி முறித்துவிட்டு எழுந்து தனுஸ்ரீயின் அருகில் வந்து ‘அவள் தூங்குகிறாளா? இல்லை முழித்து இருக்கின்றாளா?’ என எதையும் கருத்தில் கொள்ளாமல் ஏதோ சிந்தனையிலேயே படுக்கையில் வந்து சாய்ந்தான்.

அவனின் சிந்தனை தன் புது மனைவியிடம் சிறிதும் இல்லை. ஏன் இந்த நேரத்தில் சிந்திக்கின்றோம்? எதைப் பற்றிச் சிந்திக்கின்றோம்? என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எதை எதையோ நினைத்து தன் மனதைப் போட்டு குழப்பிய படி படுத்திருந்தான்.

மனைவியின் அருகாமை கூட அவனின் சிந்தனையைக் கலைக்கவில்லை. அவனே அவனாக இல்லாத போது அவனவளின் நினைவா அவனுக்கு வரப் போகின்றது?

‘நீ ஏன் இப்படி இருக்கின்றாய்?’ என்று யாராவது கேட்டால் கண்டிப்பாக அவனுக்கே பதில் தெரியாது. அந்த நிலையில் தான் இருந்தான் அவன்.

தன் அருகில் உணர்ந்த கணவனின் ஸ்பரிசத்தில் தனுவின் தூக்கம் கலைந்தது. மெல்ல கண்ணைத் திரும்பி கணவனைப் பார்த்தாள்.

அவன் முழுதாகக் கண்ணைத் திறந்த வண்ணம் மேலே சுழலும் காற்றாடியில் கவனத்தை வைத்திருக்கவும், அவனின் அந்த நிலையைப் பார்த்துத் தன்னையறியாமல் பெருமூச்சு ஒன்று அவளிடம் கிளம்பியது.

“ஏன் ரஞ்சன் இப்படி இருக்கீங்க? நார்மலா தான் இருங்களேன்” என்று தனுவிற்கு அவனைக் குலுக்கி கேட்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அப்படிக் கேட்கும் நேரம் இது இல்லை. அவனே சிறிது நேரம் தான் படுக்கின்றான். அந்தச் சிறிது நேரத்தையும் போர்க்களமாக்கும் எண்ணம் இல்லாமல் அமைதியாக வேறு பக்கம் திரும்பிப் படுத்தாள்.

அவளின் அசைவில் கவனம் கலைந்து மனைவியின் புறம் திரும்பிப் படுத்த ஜீவா, அவள் மீது தன் கையைப் போட்டு லேசாக அணைத்தபடி கண்ணை மூடித் தூங்க முயற்சி செய்தான்.

அந்த முயற்சியை உணர்ந்த தனு சிறிது நிம்மதி அடைந்தாள். தன் மேல் இருந்த அவனின் கையைத் தூக்க கலக்கத்தில் செய்வது போல இதமாக வருடி விட்டு கணவனை உறங்க வைத்தவள், அவளின் உறக்கம் தொலைத்தாள்.

அவளுக்குத் தான் முதல் முதலில் அவளின் ரஞ்சனை சந்தித்த நாளை நினைக்கத் தோன்றியது. தங்கள் திருமணப் பேச்சு, அதைத் தொடர்ந்து தாங்கள் கணவன், மனைவியாக இணைந்த நாள் எல்லாம் மனதில் உலா வர, அந்தச் சுகமான நினைவிற்குள் தன்னை நுழைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.