தீராதது காதல் தீர்வானது – 22

அத்தியாயம் 22 :

திருமணம் இரு மனங்கள் கூடுவது
திரு திருமதி சுகதுக்கம் பகிர்தல்
ஆணின் அதிகாரமும் வலிமையும் கூடி
பெண்ணை அடக்குமுறை செய்வதல்ல…

டானியா ஆரியன் இருவருக்கும் அன்று சற்றுநேரம் கிடைத்தது. நியூயார்க் வீட்டில் தான் இருந்தனர். மிச்சம் வைத்திருந்த அவர்களின் ரிசப்ஷன் காணொளிகளில் மூன்றாவது பாகத்தைக் காண அமர்ந்திருந்தனர். நீண்ட நாட்களாகத் தள்ளிப் போக, அந்த ஓய்வு நேரத்தை உபயோகப்படுத்திக் கொண்டனர்.

காணொளி ஓடிக் கொண்டிருந்தது.

ஆரியனின் அருகில் அமர்ந்திருந்தவள், வெகு ஸ்மார்ட்டான அந்த நெடியவனைக் கண்டதும்,

“ஹே ஹே ஸ்டாப் ஸ்டாப். கொஞ்சம் ரீவைண்ட் பண்ணுங்க. யா யா இங்க இங்க தான். பாஸ்.. பாஸ் ஹியர்!” என்றாள் டானியா.

அவள் சொன்னதைச் செய்து கொண்டிருந்தவன், மனைவியின் ஆர்வத்தைப் பார்த்து, “இவ்ளோ ஆசையா பார்க்கிற அளவு யார் அப்படி?” எனக் கேள்வி கேட்டுக்கொண்டே தொலைகாட்சி திரையில் பார்வையைப் பதித்தவன் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான்.

‘இவனா?’

அவன் அதிர்ச்சியையெல்லாம் டானியா எங்கே கவனித்தாள்?

“அந்த நெடியவன் யார்? ஆள் பார்க்க செம ஹேண்ட்ஸம். பட், அவனைப் பார்த்ததும் நீங்கெல்லாம் ஒரு மாதிரி சேன்ஞ் ஆனது போல ஒரு ரியாக்‌ஷன். முன்னமே கேட்க வேண்டும் என நினைச்சேன். மறந்துடுச்சு. ஏன் அப்படி? அவன் யாராம்?” எனவும்,

‘இவனைப் பார்க்கவா ரீவைண்ட் பண்ண சொன்ன?’ என்பது போல் டானியாவை பார்த்தவன், படக்கென அவளிடமிருந்து விலகி எழுந்து போனான்.

திடீரென அங்கு இனிமை கலைந்து கணம் பரவியது.

தொடு பொத்தானை அழுத்தவும், சன்னல்களை மூடியிருந்த திரைசீலைகள் விலகின. வெளியில் இன்னும் ஆதவன் வான்மகளுக்குப் பை சொல்ல மனமற்று, தன் கதிர் வீச்சுகளைக் குறைத்து மங்கலாய் குலவிக் கொண்டிருந்தான்.

வீட்டின் பக்கவாட்டில் அமைத்திருத்த டென்னிஸ் பந்தாடுமிடத்தை ஆரியனின் விழிகள் வெறித்துக் கொண்டிருந்தன.
டானியாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

‘இவனுக்கு என்னாச்சு? ஏன் இப்ப படக்கென எழுந்து போனான்? இவன் பாட்டுக்கு வெளியே வெறிச்சு அப்படி என்னத்தைப் பார்க்கிறான்? அங்க விளையாடிட்டிருக்க வேண்டிய நாங்க இங்க நிற்கையில்..’

‘ரிசப்ஷன் நடந்திட்டிருக்கும் போதும் அந்த ஆள் வந்து நின்ற போது, இப்படித்தான் அந்தச் சிட்டுவேஷன் உடனே மாறிச்சு. இதோ வீடியோவிலும் அந்தச் சில நிமிசங்கள் தெரியுதே. ஹ்ம்ம்..’

“என்னாச்சு ஆரியன்? அந்த ஆள் யார்? அவனைப் பார்த்ததும் நீங்க அப்செட்டான மாதிரி தெரியுது.”

“…”

கணவனிடமிருந்து பதில் வரவில்லை என்பதைக் கண்டவள், அருகில் போய் அவனைத் தொட்டு திருப்பினாள். அவன் உடல்மொழியில் இறுக்கம் வந்திருந்தது.

நீல விழிகளில் சிவப்பை கண்டு திகைத்தாள். முதல் முறை அப்படிப்பட்ட மாற்றம் அந்த நயனங்களில்!

அதில் கோபத்தைவிட வேதனையுற்ற தோற்றம். முகத்திலும் இயலாமை கண்டிருந்த வருத்தம்.

அவளுக்கு எப்போதும் நேசத்தைக் காண்பித்துக் காதலை தூண்டும் மனம் கவர்ந்தவனின் விழிகள், தன் இயல்பை தொலைத்து கவர்ச்சியை இழந்து துன்புறுத்தின.

இப்படிக் கணவன் இருந்ததில்லையே?

“நம்ம வீடியோ பார்க்க வேண்டாம். அப்படியே விடுங்க. நீங்க எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம். எதுக்கு இந்த ஸ்ட்ரெஸ்? ரிலாக்ஸ்…”

ஆரியனை கண்டு கவலையுற்றவள், அவனைத் தழுவி நின்று துயரத்தை போக்க விழைந்தாள்.

அந்நேரம் டானியாவின் அணைப்பை உணர்ந்தவனாக ஆரியனின் கைகளும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டன. மனைவியவளின் அருகாமையில், சொல்லொணா துயரத்தை சுமந்து நின்றவனின் மனம் அரவணைப்பைக் கண்டது.

பல வருடங்களாக மனதில் பதிந்திருந்த வேதனையை அவளிடம் மெல்ல பகிர்ந்தான்.

“நம்ம தாத்தாவும் விவேக் மித்ராவும் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ். இரண்டு தலைமுறை பழக்கம் இருவருக்கும். அவருடைய பேரன் தான் அவன். நீ யாரெனக் கேட்கும் அந்த நெடியவன். நவீன் மித்ரா. ஆதிராவின் முன்னாள் கணவன்.”

“ஆங்.. என்னது! என்ன சொல்றீங்க. அண்ணியின் ex? Ex-husband? அவனா?”

“ஹ்ம்ம்.. ஓரிரு மாதங்களே அவங்க கல்யாணத்தால் இணைந்து இருந்தது. அதுவும் அக்காவின் பொறுமையால். பிறகு அவனே வேணாம்னு அனுப்பி வச்சுட்டான்.”

“ஹோ! அவனே அனுப்பி வச்சுட்டானா. உங்க அக்காவையா?”

“ஆமாம் டானியா.”

டானியாவினால் நம்பவே முடியவில்லை. முதலில் ஆதிரா ஏற்கெனவே வேறொருவனை மண முடித்திருந்தாள் என்பதே ஓர் அதிர்ச்சி. கௌதம் இடத்தில் நவீன் இருந்தானா?

அதிலும், ஆதிராவை வேண்டாம் எனச் சொல்லி நவீன் விலக்கி வைத்தான் என்பது பேரதிர்ச்சியே! ஆதிரா, ஆரியன், அஸ்வின் என அந்த உடன்பிறப்பு மூவரின் சகோதரம், பாசம், புரிந்துணர்வு டானியாவை கவர்ந்த பண்புகள். அவற்றையும் தாண்டி ஒவ்வொருவரில் இவள் குப்புற விழுந்தது எதனால்?

ஆரியனின் அளவிட முடியாத நேசமும் விடாமுயற்சியும். அஸ்வினின் தூய நட்பும் பிரியமும். ஆதிராவின் இன்முகமும் தாய்மை உணர்வும். அதற்குப் பின்னால் இப்படி ஒரு பின்னணியா?

‘எப்படி.. எப்படி எனக்குத் தெரியாம போச்சுது! எனக்கு இதுவரை யாரும் சொல்லவில்லை. எனினும் இப்படி ஒரு விசயம் இருந்திருக்க, ஒரு க்ளூ கூடக் கிடையாதே.’

டானியாவின் முகம் பல உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆரியனுக்கு மனைவியின் முக மாறுதல்களைக் கண்டு என்னவோ போலாகி விட்டது. அதுவும் அவளின் ‘அண்ணி’ வேறு ‘உங்க அக்கா’ என்றானதும் சற்றுப் பதட்டமளித்தது.

‘இவளிடம் முன்பே கூறியிருக்க வேண்டுமோ. எங்கே சான்ஸ் கிடைச்சது. ரிசப்ஷன்ல வச்சா சொல்லியிருக்க முடியும்? வெடிங்க்கு முன்னால் 2~4 தடவை தானே பேசியிருந்தேன். எப்படிச் சொல்லியிருக்க முடியும்?

அதிலும் அப்போ வெட்டிங்க்கு ஓக்கே வாங்கும் போது ஆதிரா, அஸ்வின் பற்றிப் பேசவும், அதைக் கூட இவள் எங்கே முழுதாகச் சொல்ல விட்டாள்?’ அதற்குப் பிறகு எத்தனை நாட்கள், மாதங்கள் ஆரியா?

‘க்ஹூம்’ எனத் தொண்டையைச் செருமிக் கொண்டு தொடர்ந்தான்.

“டானியா.. உன்கிட்ட முன்னமே சொல்லியிருக்கணும். நவீன் விசயம் பற்றி. உனக்குத் தெரியப்படுத்த கூடாதுன்னு எனக்கு எண்ணமில்லை. இதைப் பேசக் கூடிய சந்தர்ப்பமும் மனநிலையும் வரலை.”

கரகரத்து ஒலித்த கணவனின் குரல் டானியாவின் சிந்தனையைக் கலைத்தது.

“ஹோ டியர், கூல்! நீங்க எதுக்கு இப்படி என்கிட்ட சொல்லாததுக்கு ஃபீல் பண்றீங்க? ரிலாக்ஸ்! நான் அப்படியெல்லாம் தப்பா யோசிக்கலை.

அண்ணியும் கௌதம் அண்ணாவும் எவ்வளவு க்ளோஸ். நவீன் முன்னாடி அவங்க லைஃப்ல இருந்தாங்கிறது ஷாக். எப்படி என் கவனத்துக்கு வரலைன்னு தான் நினைச்சேன்.”

மனைவியை நெருங்கி அவள் கரங்களைப் பற்றிக்கொண்டான்.

“ரொம்ப நன்றிடா. நீ புரிஞ்சுக்குவன்னு தெரியும். இருந்தாலும் முன்னமே..”

“உஷ்ஷ்.. அதை விடுங்க. இந்த விசயம் அண்ணி சம்பந்தப்பட்டது. உங்களுக்கும் எனக்கும் இடையில் வர்றது இல்லை. இப்போ கூட நவீன் பற்றி என்கிட்ட நீங்க எல்லாம் சொல்லணும்ங்கிற கட்டாயமில்லை.”

“நடந்தது எல்லாமும் எனக்கும் தெரியாது. அக்கா எங்களுக்கு அத்தனை விசயமும் சொன்னதில்லை. ஒருவேளை அம்மா இருந்திருந்தா சொல்லியிருக்கலாம்.

அப்பாகிட்ட அக்கா ரொம்ப க்ளோஸ். ரெண்டு பேரும் அப்போ எங்களை விட்டுப் போயிருக்க, தாத்தாவுக்கும் உடல்நிலை சரியில்லை. அஸ்வின் சின்னப் பையன்.

நான் பிஸினஸ் நுழைந்த சமயம் வேறு. யாரிடமும் ஒன்னும் சொல்லாமல் பொறுமையா இருந்திருக்கா.

யூ நோ, ஆதிரா எவ்வளவு அழகு, அறிவு. பணத்துக்கும் பஞ்சமில்லை. அந்த நவீன் அப்படிப் பேசுவானாம். ரொம்ப அசிங்கமா. கெட்ட வார்த்தைகள்.

Verbal abuse! பாவி! பிடிக்கலைன்னா ஏன் கல்யாணம் செய்யணும்? அப்படிக் கொடுமை படுத்திப் பூப் போல மனசு இருக்கிறவளை கசக்கி எறியவா?

அப்போ முன்னமே அவன் அப்படியொரு ஐடியாவிலத் தான் இருந்திருக்கான். என்ன ஒரு கெட்ட எண்ணம்? இவனையெல்லாம் சும்மா விட்டிருக்கக் கூடாது. ஆனால் நாங்க இதுவரை அவனை ஒன்னும் செய்யலை. ஹ்ம்ம்… பெருசா ஒன்னும் செய்யலை அப்படியே விட்டு வச்சிருக்கோம்.”

அவனின் இதயத்தின் வலியும் இயலாமையும் வெளிப்பட்டது.

“Sadist!” டானியா முணுமுணுத்தாள். அவளுக்கும் வேதனையாக இருந்தது.

“அண்ணி அவனுக்கு நல்லா திருப்பிக் கொடுத்திருக்கணும். நீங்களும் சும்மா விட்டிருக்கக் கூடாது. பிஸிக்கலி அண்ணியை ஏதும் கொடுமை..” தயக்கத்துடன் கேட்டவளுக்கு மறுப்பாகத் தலையசைத்தான் ஆரியன்.

“இல்லை. அப்படி எதுவும் செய்யலை. அப்படிக் கை வச்சிருந்தா வெளியே தெரிஞ்சிருக்கும். அதுவுமில்லாமல் எப்படி என்ஜாய்ப் பண்றது. சுகம்? அத்தனை பேச்சு பேசி அனுபவிச்ச கொடுமைக்காரன். எல்லாம் பண்ணிட்டு, அக்கா தப்பு பண்ண மாதிரி வேண்டாம்ன்னு சொல்லி பிரிஞ்சுட்டான்.

அவனை லீகல்லி ஏதாவது செய்யணும்னா ரெண்டு தாத்தாக்கள். அக்காவும் பெரிதா வெளியே தெரியறதை விரும்பலை. அதுவும் இல்லாமல் சின்ன வயசுல இருந்து பார்த்து வந்தவன்.

எத்தனை கஷ்டத்தை உள்ளே வச்சு வேதனை பட்டிருக்காங்கிறதை அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டோம். அஸ்வினுக்கு இவ்வளவு விசயம் கூடத் தெரியாது. அவனுக்கு அக்கா அம்மா மாதிரி.”

கொதித்துப் போனாள் டானியா.

“எப்படி அண்ணி பொறுமையா இருந்தாங்க? ஏன் அப்படிச் சகிச்சிட்டு இருக்கணும்? இந்த நாட்டில், not only physical, verbal abuse is also against law. அவனை நல்லா மாட்டி விட்டிருக்கணும்.”

“தாத்தா.. அவங்க உடல்நிலை. ப்ரண்ட்ஷிப். இப்படி யோசிச்சு பொறுமையா இருந்து சகித்துக் கொண்டிருந்திருக்கிறாள். பட் நான் அவனை அப்படியே விட்டுடலை.

டிவோர்ஸ் ஆனதும் பிசினஸ்ல அவனுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்தேன். கௌதம் மாமா சப்போர்ட் இருந்ததால் வெளியே தெரியாம நவீனுக்கு நிறைய நஷ்டத்தை ஏற்படுத்தினோம். சில வருசங்களாச்சு அவன் அதிலிருந்து மீண்டு வருவதற்கு.”

“ஹ்ம்ம்.. எனக்கு என்ன ஆறுதல் சொல்லன்னு தெரியலை. பட், ஒரு விசயம் ரொம்ப ஃபீல் பண்றேன். பெண்கள் இப்படிப் பிறருக்காக யோசிச்சுத் தங்கள் நிலையை இழந்து தாழ்த்திக் கொள்வது கூடாது. கொடுமையை எதிர்த்து நிற்க பழகணும்.”

“ஹ்ம்ம்.. நீ சொல்றது ரொம்பச் சரி. இப்படிப்பட்ட ஆண்களுமே தங்களை மாத்திக்கணும். ஒரு நல்ல விசயம் என்னன்னா பெண்களும் நிறையப் பேர் தைரியமாக இருக்காங்க. ஆதிரா போல ஒரு சிலர் மட்டுமே இன்னும் இப்படி அங்கங்கே இருப்பது. இந்த நாட்டில் laws are tough.”

மௌனமான மணித்துளிகள் கடக்க, இருவரின் மனதின் கனம் சற்றுத் தளர்ந்தது. டானியாவிற்குள் பெரிதும் சிந்தனை. அதைக் கணவனிடமும் பகிர்ந்து கொண்டாள்.

“Marriage is a hit or miss. அப்படித் தானே? பந்தாட்டம் போல இதுவும் கேம் மாதிரி ஆகிப் போவது வேதனை தான் இல்லையா?”

“ஹூம், அப்படி உலகில் நடக்கும் எல்லாத் திருமணத்தையும் சொல்லிவிட முடியாது. சிலர் புரிந்துணர்வின்றித் திமிர் பிடிவாதம் கொண்டு திருமணத்தை மதிப்பதில்லை. சிலருக்குச் சூழ்நிலைகள் காரணமாகி விடுகின்றன.”

அந்த நேரம் டானியாவிற்குள் அவள் அம்மாவின் முகம் வந்து போனது. ஏனோ அவளுக்கு ஒரு பெருமூச்சு எழும்பியது.

“என்னாச்சு டானியா? எதுக்கு இப்படி ஒரு பெருமூச்சு?”

“அம்மாவை நினைத்தேன். அண்ணியைப் போலக் கஷ்டமான நிலை அம்மாவுக்கு எப்போதும் இருந்ததில்லை. அப்பாவுக்கு அம்மா மேல் அவ்வளவு பிரியம், காதல் இருந்தது. ஆனாலும் அப்பாவை விட்டு அம்மா பிரிஞ்சாங்க.

நவீன் போலக் குணமுள்ளவங்க ஒரு வகை. ரொம்ப மோசமான எக்ஸ்ட்ரீம் நிலமை. அப்படி மோசமான குணம் இல்லாமலும் வெவ்வேறு காரணங்களால் பிரிவு ஏற்படுகிறது. அம்மாவுக்கு இதில் ஏதோ ஒரு காரணம்.”

“டானியா, ஒரு திருமணம், அல்லது, காதலின் வெற்றி, தோல்வி என்பது சம்மந்தப்பட்ட அந்த இருவரைப் பொறுத்து அமைவது. வெளியே இருந்து அந்த வெற்றி, தோல்வியைப் பற்றி மற்றவர்கள் எப்படி வேணும் என்றாலும் அலசிப் பார்த்துக் கமெண்ட் பண்ணலாம்.

ஆனால், உண்மை நிலவரம் அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். மனதில் விரிசல் வந்து விட்டால் புரிதல் காணாமல் போய் விடுகிறது. உன் பேரண்ட்ஸ் விசயம் பற்றி இனி நாம் யோசிப்பது கூடச் சரியல்ல.

இப்படி நினைச்சுக்கோ டானியா. அவங்க ரெண்டு பேரும் மனக் கசப்புடன், உனக்காக மட்டுமே சேர்ந்து வாழ்ந்து இருந்தா, உனக்குச் சந்தோஷம் தந்திருக்குமா? கண்டிப்பாக இருந்திருக்காது.

நீங்க மூணு பேரும் இயல்பு நிலையில் இல்லாமல் இருந்தால், அங்கே சுமூகமான வாழ்க்கை என்பது கேள்விக்குறி இல்லையா? பழையபடி ஒரு நல்ல சந்தோஷமான குடும்பமாக வாழ்வது சாத்தியமில்லை என்ற முடிவில் தான் பிரிவு வந்திருக்கும்.”

சில மாதங்களுக்கு முன் விடுமுறைக்கென டேம்பா சென்ற பொழுது பெட்ரா சொன்ன அதே கருத்துக்கள். அப்போது விளையாட்டாக, ‘பெரிய லெக்சர் அபௌட் லவ்’ என அவனைக் கிண்டலடித்துப் பேச்சை மாற்றிவிட்டாள்.

ஆனால் இன்று அப்படி விளையாட்டுப் போல் அவளால் பேச முடியவில்லை. ஆரியன் சொன்னதை ஏற்றுக் கொண்டவளாக,

“ம்ம்.. நீங்க சொல்றது ரொம்பவே சரி. எப்போது ஒரு பந்தத்தில் couples must stay committed. நல்ல புரிதல் வேணும். இது தான் சிறந்த தீர்வு” என்றாள்.

“ஆழமான காதல்.. தம்பதியருக்கு தீர்வை கொடுப்பது காதல். உனக்கு நடந்தது போல். முன்னர் எத்தனை குழப்பத்தை வச்சிருந்தாய். அதெல்லாம் எங்க போச்சாம் இப்போ?” என மனைவியை அருகில் இழுத்துக் கொண்டவன், பார்வையால் ஊடுருவி குறும்பாகப் புன்னகைத்தான் ஆரியன்.

“தெரியலை.. ஓடிப் போயிருச்சாம். ஹஹ்ஹா..”

“இப்போ உனக்குன்னு நான் இருக்கேன். நம் குடும்பம் இருக்கு. இனி உன் லைஃப் வேறு.”

கணவனின் அணைப்பிலும் சரி, வார்த்தைகளிலும் சரி இதம் கண்டாள் டானியா.

ஆரியன் மதியத்தோடு அலுகலத்திலிருந்து திரும்பியிருந்தான். முக்கியமான சில வேலைகள் வீட்டிலிருந்து பார்க்கும்படி இருந்தன. அதில் இப்போது முதன்மையாக நின்றது, ஒரு செப் / பட்லரை வேலைக்கு அமர்த்துவது. தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தவனின் கவனம் அந்த வேலைக்கான விண்ணப்ப படிவங்களை ஆராய்வதில் இருந்தது.

ஜேகப் எனும் நம்பகமான ஒருவரை அறிந்தவனுக்குப் புதிதாக யாரையும் தேர்ந்தெடுக்க மலைப்பாக இருந்தது. நம்பிக்கையும் பொறுப்பும் சேர்ந்திருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வீட்டில் டானியா மட்டும் தனித்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். அதான் குழப்பம், கவலை.

இது வரை ஓரளவு ஓக்கே எனத் தோன்றிய இரண்டு விண்ணப்பங்களைக் குறித்து வைத்தான். இறுதியில் ஒரு படிவத்துடன் லயித்தவனின் இதழ்கள் புன்னகையால் விரிந்தன.

Sailesh Muthupandi. ஏற்கெனவே அலுவலகக் கேட்டரர்ஸ் மூலம் ஆரியனுக்குச் சைலேஷ் அறிமுகமாகி இருந்தான். இந்தியாவிலிருந்து cruise shipஇல் வேலைக்காக வந்தவன்.

சில வருடங்கள் அங்குப் பணி புரிந்துவிட்டு நல்ல வாய்ப்பொன்று கிட்டியதும் அமெரிக்க மண்ணில் கால் பதித்திருந்தான். பன்னாட்டுச் சமையலைக் கற்று தேர்ந்தவன்.

‘இவனைத் தான் நமக்குத் தெரியுமே. சரியான சாய்ஸ். பேப்ஸ் வரட்டும். கன்பர்ம் பண்ணிடலாம்.’

இருவரும் சேர்ந்து அவனையே தேர்வு செய்து வேலைக்கு அமர்த்தினர். நாட்கள் ஓட, சைலேஷ் அவ்வீட்டுச் சூழலுக்கு அழகாகப் பொருந்திக் கொண்டான்.

ஆரியன் நிம்மதியாகப் பழையபடி அலுவலகப் பயணங்களை மேற்கொண்டான். அஸ்வினும் சேர்ந்து கொண்டதால் ஆரியனின் வேலைப்பழு பாதியானது. பயணங்களும் அவ்வாறே. அண்ணன் தம்பி இருவருள் ஒருவர் நியூயார்க்கில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.

மாதத்தில் டானியாவுடன் இருக்கும் நாட்கள் ஆரியன் நினைத்ததை விட அதிகமாகவே கிடைக்க, அனைவருக்குமே சந்தோஷமான மனநிலையில் மாதங்கள் உருண்டோடின.

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என அனைத்தையும் குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு அவரவர் ரொடீனில் சென்று கொண்டிருந்தனர்.

இடையில் இருமுறை அஸ்வின் ரோகனை சந்தித்திருந்தான். தனியாகப் போய்ச் சிகாகோவில் ஒரு முறை. மற்றொரு முறை ரோகனை சான் ஃப்ரான்சிஸ்கோ வர வைத்து.

ரோகன் முன்பு போல இல்லாவிடினும், நன்றாகப் பேசினான். சாதாரணமாகத் தெரிந்தான். கவலை, வேதனையின் சாயல் இப்படி ஏதுமில்லை. அதில் அஸ்வின் ஏமாந்து போனான்.

டானியாவிற்கு இளங்கலை படிப்பு முடிய ஓரிரு மாதங்களே எஞ்சியிருந்தன. ஆரியன் அவளை அவ்வப்போது அலுவலகத்திற்கு வரச் சொல்லி பணிகளைக் கற்று கொடுக்க முனைய,

“அஸ்வின், பாருடா உன் ப்ரோவை. அவர் என் கூட இருப்பதே மன்த்லி பாதி நாட்கள் தான். அதிலும் என் ஸ்டடீஸ், அசைன்மெண்ட்ஸ் இப்படி டைம் எடுத்துக்குது.
இதில் நான் ஆபீசில் வந்து கத்துக்கணும்னா எப்படிடா? நீயே சொல்லு அவங்கட்ட” எனக் கூறி அஸ்வினை தன் பஞ்சாயத்துக்கு அழைத்தாள். அவனோ அவளையே வாரினான்.

“பார்றா! என் அண்ணிக்கு இப்போ தான் நான் கண்ணுக்கு தெரியறேன். இத்தனை நாள் யாரு பின்னாடி இருந்தீங்களோ அவங்களையே கேட்க வேண்டியது தானே?”

“டேய், நீயும் என்னைப் படுத்தாதடா. முதல்ல இந்த அண்ணி சொல்றதை விடு.”

“சரிங்க விட்டுடறேனுங்க.”

அடக்கப்பட்ட சிரிப்பில் அவன் உதடுகள் துடிக்க, தம்பியின் குறும்பை ரசித்துச் சத்தமாகவே சிரித்து வைத்த ஆரியனை பின்னி பெடலெடுத்து விட்டாள் அவனின் பேப்ஸ்.

“பேப்ஸ்! விடுடா. போதும் ரொம்ப வலிக்குது. ஹா! விட்டுடு ப்ளீஸ்..”

அப்புறம் அஸ்வின் தான் தன் அண்ணனை காப்பாற்ற வந்தான்.

“To your rescue bro…” கண் சிமிட்டி சிரித்த அஸ்வினுக்கு மனைவி அறியாமல் கண் சிமிட்டி ஒரு புன்னகையுடன் தன் கட்டை விரலை உயர்த்திய ஆரியன்,

“நீ நடத்துடா” என்றான் உதட்டசைவில்.

“என் ப்ரோ பாவம், விட்டுடு டானியா. ப்ளீஸ்..”

தோழனின் குரலுக்குச் செவிமடுத்தாள் அன்புத் தோழி. ஆனால், இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ப்ரோ, நீ ஏன் என் ப்ரண்டை டார்ச்சர் பண்ற? ஃப்ரீயா விடு. நான் இங்க இருக்கும் போது அவளுக்கு ட்ரெயினிங் தந்துக்கறேன். உன் வேலை அவளைச் சந்தோஷப்படுத்தறது மட்டும் தான். புரிஞ்சுதா?”

கணவனை மிரட்டி வைத்த நண்பனுக்கு மனம் கொள்ளா புன்னகையுடன் ஹை-பை கொடுத்தாள் டானியா. அவள் மட்டுமே அந்த அவஸ்தையை அறிவாள்.. நீல நிறக் கண்களுடன் காதல் செய்யலாம். வேலை செய்வது எப்படி?

அதிலும் நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டுமாம். எதை? வேலையையா? ஹய்யோ! முடியலை ரேஞ்சில் இருந்தாள்.

கணவனிடம் சொன்னா ஒரு பெரிய லெக்சர் தருவான். ஆமாம், ஆரியன் சில விசயங்களில் கறார் தான். காதலால் உருகி கரைபவனும் அவனே. கடமையைக் கட்டிப்பிடித்துக் கொள்பவனும் அவனே.

நல்லவேளையாக அஸ்வின் அவளை அவஸ்தையிலிருந்து காப்பாற்றினான். இதைக் கொண்டாட ஐஸ் க்ரீம் ட்ரீட் கொடுத்தவளை பிரியத்துடன் பார்த்தனர் மற்ற இருவரும்.