காதல் கஃபே – 5

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

5

தொட்டிச் செடியில் உள்ள காய்ந்த இலைகளைக் கிள்ளி, சில தண்டுகளை வெட்டிவிட்ட ஜெனி, மண்ணைக் கிளறி அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலில் இருந்த கலவையான அழுக்கு நீரை வேரில் ஊற்றினாள்.

வாழைப்பழத் தோல், முட்டை ஓடு, கேரட் பீட்ரூட்டின் மேல் தோல், கொஞ்சம் வேப்பிலைகள் என எல்லாமுமாய்ப் போட்டு வைத்திருந்த கலவை நான்கு நாட்களாய் நொதித்து ஊறியிருந்த உர நீர் அது.

அந்த நீரை எல்லாத் தொட்டிகளுக்கும் பகிர்ந்து ஊற்றி விட்டு, சுருங்கியிருந்த இலைகளுக்குக் கூடுதலாகக் கொஞ்சம் நல்ல தண்ணீரை ஸ்ப்ரே பண்ணினாள்.

மழை வரும் அறிகுறியாய் வானம் ஈரக்காற்றைத் தூதனுப்ப, மாலை நான்கு மணிக்கே நல்ல ஜில்லென்று இருந்தது தட்பவெட்பம்.

போஸா நோவாவின் மழைநேர ஜாஸ் மெலிதாய் மொபைலில் கசிந்து கொண்டிருக்க, காபியை மிடறு மிடறாய் விழுங்கியபடி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

‘டக் டக் டக்….’

இசையையும் மீறி ஒலித்த ஷு கால்களின் சத்தத்தில் குனிந்து கீழே பார்த்தாள் ஜெனி.

“ஹேய்.. நீ எங்க இங்க?”

மேலே நிமிர்ந்து இவளைப் பார்த்த சித்தார்த் ‘ஹாய்…’ என்பது போலக் கை ஆட்டி விட்டுப் படிகளில் விறுவிறுவென ஏறி வந்தான்.

நொடியில் மேல் படியில் வந்து நிற்பவனை ஜெனி இங்கே இந்த நேரத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காததால் ‘ஆ…’ எனப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பயங்கர பிஸி போல” இரண்டு குட்டைப் படிகளைத் தாண்டி அவளருகே வந்தவன், மேலும் கீழும் கேலியாகப் பார்க்க…

‘கையும் களவுமா மாட்டுறதுனா இது தானா?’

“ஹி ஹி..” அசடு வழிந்த ஜெனி தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

அழுக்குக் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், ஒரு கடமுடா நைட் பேண்டும்… கூந்தலை உயர தூக்கி முறுக்கி முறுக்கி உச்சியில் கிளிப் கொண்டு அடக்கியபடி…

அதையும் மீறிய முடிக்கற்றைகள் நெற்றியில் புரள, வராண்டா தரையில் பப்பரக்காவென்று சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் பாதிக் காலியான காபி மக். சின்னப் பீங்கான் தட்டில் ஆப்பிள் துண்டுகளும், இரண்டு ஸ்ட்ராபெரிகளும்… மடியில் கவிழ்ந்த நிலையில் ஆங்கில நாவல் ஒன்று.

“ஏதோ வேலை இருக்குன்னு ஓவரா சீன் போட்டுச்சு ஒரு பொண்ணு… அதான் என்ன வேலைன்னு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்…”

“பார்த்தாச்சா…? சரி, கிளம்பு.. கிளம்பு…” கேலியாகச் சொல்லிக் கொண்டே எழுந்தவள் அவனுக்கு மோடாவை இழுத்துப் போட்டாள்.

“உட்காரு சித்தார்த். வீடு இங்க தான்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“ரியல்-டைம் லொகேஷன் போட்டுப் பார்த்தேன்.” அவன் நக்கலாகச் சொன்னான்.

“பாருடா.. நான் அவ்ளோ பெரிய டெக்கி பக்கிலாம் இல்ல. சொல்லு, எப்படிக் கண்டுபிடிச்ச?”

“அதான் ஒரு தங்கப்பதக்கம் சிவாஜி வச்சிருக்கியே. அவர்கிட்ட கேட்டேன். நீ சொன்ன பொய்யை வச்சு கஃபேல இருப்பியோன்னு அங்க போனேன். அவரு மட்டும் தான் இருந்தாரு.”

நுனி நாக்கை கடித்துக் கொண்டாள் ஜெனி.

“ஹ ஹா… தாத்தாகாருவா? அவரு தங்கப்பதக்கம் சிவாஜியா… கொழுப்பு? அவரு நிஜமாவே மிலிட்டரில இருந்தவரு, தெரியுமா?”

“ஹம்… சொன்னாரு.. சொன்னாரு… பார்டர்ல உட்கார்ந்து ரொட்டி சுட்ட கதையெல்லாம் சொல்லிட்டு தான் அட்ரஸ் தருவேன்னு மனுஷன் ஒரே அடம்…”

“சித்தார்த்…..” சிரிப்புடன் முறைத்தவள், “சரி, என்ன சாப்பிடுற…?” ஹாலுக்குள் சென்றபடியே கேட்டாள்.

“நான் சாப்பிட வரல ஜெனி… ஒரு நிமிஷம் இங்க வாயேன்….” அவன் குரலின் தொனி மாறியதை உணர்ந்தவள், கொஞ்சம் பம்மியபடி அவன் அருகே வந்தாள்.

“நேத்து நீ என்ன சொன்ன?”

“இல்ல சித்தார்த்… நிஜமாவே ஒரு பார்ட்டி ஆர்டர் இருந்துச்சு. கடைசி நிமிஷம் கேன்சல் ஆயிடுச்சு…”

“ப்ச்… போதும் ஜெனி” தலையைக் குறுக்காக ஆட்டியவன், “குழந்தைத்தனமா பிகேவ் பண்ணாதே… வரப் பிடிக்கலேன்னா வர இஷ்டம் இல்லேன்னு நீ டைரக்டாவே சொல்லியிருக்கலாம்… அதை விட்டுட்டு எதுக்கு இத்தனை பொய்?” அவனது அடிப்பட்ட பாவனை அவளை வருத்தியது.

எதற்கு வீணே…? என்ற எண்ணத்தில் தான் நேற்று அவன் வெளியில் அழைத்தபோது வாயில் வந்த காரணம் சொல்லி மழுப்பி இருந்தாள்.

“என்ன, என்னை டேட்டுக்கு கூப்பிடுறியா சித்தார்த்?” அவளது நேரடி கேள்வியில், “யெஸ்… ஐ’யம்” கொஞ்சமும் சளைக்காமல் துளி தயக்கத்தின் சுவடும் இன்றிப் பளிச்சென்று வந்த அவன் பதிலில் கொஞ்சமே கொஞ்சம் அசந்து தான் போனாள் இவளும்.

‘ஐ லைக் யூ… நாம கொஞ்சம் பேசிப் பழகலாமே…’ வாய் வார்த்தையாகச் சொல்லவில்லையே தவிர எதிரில் நின்றிருந்தவனின் கண்கள் வழித் ததும்பும் ஆசை அத்தனையையும் சொல்லாமல் சொல்ல…

‘ஐ’யம் நாட் இண்டரஸ்டட்’ வீம்பாய் பதில் சொல்லி அந்தச் சிரிப்பையும், ஆர்வத்தையும் பட்டென்று ஒடித்துப் போட ஏனோ அந்த நேரம் ஜெனிக்கு மனம் வரவில்லை.

 அதனால் தான், “நாளைக்கு எனக்கு வேலை இருக்கே, ஸாரி…” என்று நாகரீகமாய் மறுத்திருந்தாள். அவன் நம்ப வேண்டுமே என்று ஏன் அந்த நொடி அத்தனை அழுத்தமாய்த் தோன்றியதோ, கூடுதலாக ஒன்றிரண்டு பிட்டுகளையும் சேர்த்து சொல்ல….

அதற்கு மேல் அவனும் வற்புறுத்தவில்லை. விழிகளில் சற்றே தென்பட்டு மறைந்த ஏமாற்றத்தின் நிழலைக் கூடக் காட்டிக் கொள்ளாமல் “ஓகே.. ” என்றபடி தோளை ஏற்றி இறக்கினான்.

“அப்ப அடுத்த வாரத்துல பார்க்கலாம்.” என்றவாறு அவன் கிளம்பிவிட, வெளியே வந்து மூவரையும் வழி அனுப்பிய ஜெனிக்கு தான் சங்கடமாய்ப் போனது.

இப்போது இவன் வீட்டுக்கே வந்து தான் பிடிபட்டதும் இல்லாமல், இவ்வளவு தீவிரமாகச் சித்தார்த் பேசும் விதம் சங்கடத்தையும் மீறிய அயர்ச்சியைக் கொடுத்தது அவளுக்கு.

“நான் ஒன்னும் உன்னை கம்பெல் பண்ணலையே… எதுவா இருந்தாலும் நேரே பேசுறது தான் எனக்குப் பிடிக்கும்.”

அவளையே ஆழ்ந்து பார்த்தவனின் கண்கள் இவள் கண்களில் நிலைகொள்ள, விழிகளைக் களவு கொடுக்க விருப்பமில்லாமல் தன் பார்வையைத் தழைத்துக் கொண்டாள் ஜெனி.

“கஃபேல நீ இல்லன்னவுடனே கூட எனக்கு எதுவும் தோணல. கதிர் சொல்றாரு அந்த மாதிரி எந்த ஆர்டரும் இல்ல. தலைகீழா நின்னாலும் திங்கட்கிழமைனா எந்த ஆர்டரும் எடுக்காது எங்க ஜெனிம்மானு…”

“ஒருவேளை அவருக்குத் தெரியாதோ என்னவோ, தனியா இருக்கிற பொண்ணாச்சே, வீட்டுக்குப் போய் ஒரு பார்வை பார்த்துட்டு போலாம்னு வந்தேன். வந்து பார்த்தா தான் தெரியுது, நிஜமாவே மேடம் ரொம்ப பிஸின்னு…” எள்ளலாகச் சொன்னவன், “சரி… நான் வரேன்.” எழுந்து விட்டான்.

“சித்தார்த்… ஸாரி…” ஜெனிக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னைத் தாண்டி நகர்பவனின் கையைப் பற்றியவள், “கோச்சுக்காதே, உக்காரு ப்ளீஸ்…” என்றாள் தீனமாய்.

அப்போதும் தன் முகத்தைப் பார்க்காமல் இறுகிய முகத்துடன் நின்றவனைத் தானே இழுத்து இருக்கையில் மீண்டும் அமர வைத்தாள்.

“இரு… ஒரு நிமிஷம்…. இதைக் குடிச்சிட்டு இரு, வந்துடுறேன்”

பிரிட்ஜில் இருந்த பழச்சாறு ஒன்றை உருவி அவனிடம் கொடுத்துவிட்டு உள்ளறைக்குச் சென்று கதவடைத்துக் கொண்டவளைக் கண்டு வாஸ்தவத்தில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன, உள்ள போய்க் கத்தி, கபடான்னு எதையாச்சும் எடுத்துட்டு வரப் போறியா?”

“உனக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல, சித்தார்த்” உள்ளிருந்தே வந்த குரலில், “உன்னை…? வெளில வா, சொல்றேன்…” இறுக்கம் தளர்ந்து சிரித்தவன், டின்னை உடைத்துப் பானத்தை அருந்த…

“வா.. வா. கிளம்பலாம்” அடுத்த ஐந்தாம் நிமிடம் எதிரில் வந்து நின்றாள் ஜெனி.

கூந்தல் சீராக வெள்ளை ரப்பர் வளையத்தில் அடங்கியிருக்க, கருப்பு வெள்ளை நீளக் கோடுகள் வரைந்த குர்தியும், வெள்ளை பேண்டும் அணிந்து வெளியில் கிளம்பும் தோற்றத்தில் தயாராகி வந்தவள் அவனை வேகமாகக் கிளப்பினாள்.

“எங்க…?”

“டின்னருக்குத் தான். வேறெங்க? கம் ஆன்… கெட் அப்…” வேகமாக இங்கும் அங்கும் ஓடியபடி கைப்பையை, வாட்சை, மொபைலை தேடி தேடி எடுத்தவளிடம், “ப்ச்… நான் வரல” என்றான் சித்தார்த் அலுப்பாக.

“பூக்வா..? வை..? க்யூம்..? ஏன்..?”

“எங்களுக்கும் ரோஷம் இருக்கு”

“அந்தப் புண்ணாக்கெல்லாம் நமக்கெதுக்குச் சித்தார்த்…? ப்ரீயா விடு..”

அசால்ட்டாகத் தன் சட்டையைப் புறங்கையால் தட்டிக் காண்பித்தவள், “சாப்பிட போலாம்னு ஒரு பொண்ணுகிட்ட சொல்லிட்டு கூட்டிட்டு போகாம இருந்தா தெய்வக் குத்தமாயிடும், சித்தார்த். சாமி கனவுல வந்து சூலத்தால குத்தும், உனக்குத் தெரியாதா?”

“ம்ம்ம்…????”

“ம்ம்ம்ம்… சீரியஸா…” கண்களை உருட்டியபடி அவள் வம்பு வளர்த்ததில் சித்தார்த் தன்னையும் மீறி சிரித்து விட்டான்.

“சரி வா… வந்து தொலை…” சலிப்பாய் சொல்லி எழுந்தாலும் இவளுடன் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உயிர்ப்புடன் இருப்பதை, மறையும் மணித்துளிகள் சிரிப்பும், கொண்டாட்டமுமாக நகர்வதை உணர்ந்தபடி உடன் வந்தது அவன் இதயம்.

“எங்க கூட்டிட்டுப் போற சித்தார்த்?” காரில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட் மாட்டிக் கொண்டவள் திரும்பிக் கேட்டாள்.

“என்ன நொங்க கூட்டிட்டுப் போற? நேத்து புக் பண்ணின டேபிளை வேற கேன்சல் பண்ணிட்டேன்..” அவன் போனில் எதையோ நோண்டியபடி கடுப்படிக்க…

“ஓ.. டேபிள் புக் பண்ணி…!!!? நீ கேட்டவுடனே நான் ஓகே சொல்லிடுவேன்னு உனக்கு அவ்ளோ கான்பிடன்ஸ்…ஹாம்???” ஜெனி முறைத்தாள்.

“அதுதான் ஓவர் கான்பிடன்ஸ்னு நீ என் மூக்கை உடைச்சுட்டியே…. அப்புறம் என்ன?” இலகுவாகத் தன் ஈகோவை விட்டுக் கொடுத்தவன், வண்டியை வேகம் எடுக்க…

வாகனம் புதுவையின் வீடுகள், மீன் சந்தை, பிரதான சந்தியை கடந்து கடற்கரை சாலையைப் பிடித்தது.

கடைச் சிப்பந்தி சேலையை உதறி அலையலையாய் விரிப்பது போலத் தூரத்துக் கடல் சலிக்காமல் தன் நீலப் புடவையை விரித்து விரித்துக் கரை அனுப்பிக் கொண்டிருந்தது.

கூடவே ஓடி வரும் கடலை, அதன் தொடர்ச்சியாய் விரிந்திருக்கும் நீல வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெனி, ஏதோ யோசனையில் வெகு நேரம் மூழ்கிப் போனாள்.

“எங்கப் போறோம்…?” திடுமென விழித்துக் கொண்டு தனக்குள்ளே கேட்பது போல அவள் முணுமுணுக்க, பக்கத்தில் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

ப்ரோமனட் பீச்சை கடந்து, இந்திராகாந்தி ஸ்டேடியம் தாண்டி மரப்பாலத்தையும் கடந்து செல்ல…

”என்ன சித்தார்த், எங்கயாச்சும் என்னைக் கடத்திட்டுப் போறியா?” அருகில் இருந்தவனிடம் சீண்டலாகப் புருவம் உயர்த்தினாள்.

“ம்ம்ம்.. கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே…. யாருக்கும் தெரியாம உன்னைக் கடத்திட்டுப் போய் அடைச்சு வச்சுக் குடும்பம் நடத்தப் போறேன்” சித்தார்த் வில்லத்தனமாய்க் கண்களை உருட்ட….

“தோடா… கதைல வர்ற மாதிரி கடத்திட்டுப் போனா காதல் எல்லாம் வராது பாஸ். வெட்டுக் கத்தி தான் வெளில வரும்… எடுக்கட்டுமா…?” தோரணையாய் ஜெனி கைப்பையைப் பிரித்தாள்.

“எடேன், அதையும் தான் பார்க்கலாம்…”

“உனக்கெல்லாம் கத்தி எதுக்கு? என் கையே போதும்.” இல்லாத ஆயுதத்தை அவள் எங்கே தேடுவாள்? விரல் மடக்கி தன் முகத்தில் குத்த வந்தவளின் முஷ்டியை மறித்து ஒற்றைக் கையில் அடக்கியவன், “பூனைக்குட்டி மாதிரி இருந்துட்டு புலிக்குட்டி மாதிரி சவுண்டு வுடுற?”

“வேணாம்… கையை விடு…. அப்புறம் டேனியை மடுக்குற மாதிரி கையை மடக்கி கிச்சுகிச்சு மூட்டிடுவேன்…” அவளது பயங்கரப் பயமுறுத்தலில் இன்னுமே சத்தமாகச் சிரித்தவன், போனால் போகிறது என்று கையை விட்டான்.

“ஹேய்… யாரு அந்த டேனி…?” சாலையில் சென்ற ஊர்வலத்தால் வாகனத்தின் வேகம் குறைந்தது.

“சித்தார்த், இது என்ன கோவில்?” முளைப்பாரிகளும், நீர்க்குடங்களும் செல்ல மஞ்சள் சிகப்பு ஆடை அணிந்த பெண்களும், ஆண்களும் பெரும் திரளாய் நடந்து கொண்டிருந்தனர்.

தூரத்துக் கோபுரத்தைப் பார்த்தவன், “அம்மன் கோவிலா தான் இருக்கணும். இரு, ஜிபிஎஸ்ல பார்க்கலாம்.”

“ம்… ஆமா, இப்ப வீராம்பட்டிணத்துல இருக்கோம், இது செங்கழுநீர் அம்மன் கோவில்…” போனை நோண்டி பார்த்துவிட்டு அவளிடம் காட்டினான்.

செல்லும் வழியெங்கும் பந்தல் இட்டு நீர்மோர் பந்தல்களும், இலவச உணவு, தண்ணீர் பந்தல்களும் நிறைந்திருக்க, அங்கங்கே சிலர் வேண்டுதலாகக் காய்ச்சிய கூழை விநியோகித்துக் கொண்டிருந்தனர்.

“செங்கழுநீர் அம்மன் கோவிலா?” அவள் இன்னொருமுறை கேட்டுவிட்டு, “சித்தார்த், நாம கோவிலுக்குப் போயிட்டு போலாமா?” என்றாள்.

அவன் வியப்பாகத் திரும்பி பார்த்தான்.

“ஜெனி, நீ இவ்ளோ சென்டியா இருப்பேன்னு நினைச்சே பார்க்கல…”

குழைந்த அவன் குரலில் ஜெனி படபடத்துப் போனாள்.

“ஸ்டாப் ஸ்டாப். உன் கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் நிறுத்து, நிறையத் தமிழ் சினிமா பார்த்து கெட்டுப் போயிருக்க நீ…” கையிலிருந்த கர்சீப் கொண்டு சிவந்த தன் கன்னங்களைத் துடைத்துக் கொண்டாள்.

“இது எங்க அம்மம்மாவோட ஃபேவரைட் கோவில். நான் இங்க வந்த புதுசுல அம்மாவோட நச்சு தாங்காம பிரெண்ட்ஸோட வந்திருக்கேன். வந்து நாளாச்சு இல்ல… இதுதான் அந்தக் கோவில்னு தெரியல…”

“வாட் எவர்…!!!”

தோளைக் குலுக்கிக் கொண்டாலும் இருவரும் சேர்ந்து முதன்முதலாக வெளியே வருகையில் ‘கோவில்’ என்று அவள் வாயிலிருந்தே வந்ததில் மிக இனிமையாக உணர்ந்தான் சித்தார்த். அவளுக்கு இந்த மாதிரி நம்பிக்கைகள் இருப்பதே அவனுக்குச் சந்தோசமாய் இருந்தது.

காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு சித்தார்த் தன் பேன்ட் கால்களை மடித்து விட்டுக் கொள்ள, கழுத்தில் சுருண்டு கிடந்த ஸ்டோலை தளர்த்தி முடியை உயரத் தூக்கி குதிரைவால் போட்டுக் கொண்டாள் ஜெனி.

இருவரும் இணைந்து நடக்க, வழியெங்கும் காகிதத் தோரணங்கள் கட்டி, வேப்பிலை, மாவிலை கொத்துகள் சொருகி கோவில் திருவிழா கோலம் பூண்டிருந்தது.

பத்தடி நடப்பதற்குள் பூ விற்கும் பெண்கள் மொய்த்துக் கொள்ள, “சாமிக்கு பூ வாங்கணுமா…?” அவளிடம் கேட்டு என்ன வேண்டுமோ வாங்கினான்.

விசேஷக்காலத்தின் உற்சாகம் பக்தகோடிகளின் பக்தி பரவசத்தில் வியாபித்து இருக்க, கூட்டமான கூட்டம் இருந்தது கோவிலை நெருங்க நெருங்க… ஆடி மாதத்தில் தேர் இழுக்கப்படும் வைபவம் என்பதால் ஏற்பாடுகள் பிரமாண்டமாக இருந்தன.

உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து வெளியே வந்தவர்கள் வியர்வையில் குளித்திருந்தார்கள். வழியில் கொடுத்த சக்கரைப் பொங்கல் தொன்னையை வாங்கிக்கொண்டு பிரகாரத்தில் இருந்த தீர்த்தக் குளப் படிக்கட்டில் சற்று நேரம் அமர்ந்தார்கள்.

“திடீர்னு கோவிலுக்குள்ள போகச் சொல்லி ப்ரோக்ராமை குழப்பிட்டனோ?” கேட்டவள் நெற்றியில் தீற்றியிருந்த குங்குமம் வியர்வையில் கலைந்து அவள் மூக்கில் வழிந்திருந்தது.

சற்றுமுன் அந்தப் பூ விற்கும் சிறுமி “வாங்கிக்கக்கா, வாங்கிக்கக்கா…” என அடம்பிடித்துக் கையில் திணித்திருந்த ஜாதி மல்லி அந்தக் குட்டைக் கூந்தலில் இடம் போதாமல் தோளில் சரிந்திருக்க, அந்த மலர்சரமும் சும்மா இருக்காமல் காற்றில் இவன் பக்கம் பறந்து சட்டை நுனியை அவ்வப்போது தீண்டிச் செல்ல….

அம்மலரின் வாசமோ, இல்லை அம்மலர் சூடியிருந்த மங்கையின் நெருக்கமோ, அந்த நேரம் அவன் அவனாக இல்லை.

‘கொல்றடி….’ சித்தார்த்தின் கண்கள் தொடர்ந்து எதிரில் இருப்பவளைப் பார்க்க முடியாமல் தடுமாறி தழைந்து குளத்து நீருக்கு இடம் பெயர்ந்தது.

“ஹலோ உன்னைத்தான்… பேசுறதை கூடக் காதுல வாங்காம எங்க பராக்கு பார்க்குற?” மீண்டும் அவள் அதே கேள்வியைக் கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ சொல்றது தான் ப்ரோக்ராம்”

அமைதியான மௌனத்தில் மேலும் பத்து நிமிடங்கள் கழிந்தன.

எழுந்து கொள்ள இருவருக்குமே மனம் வரவில்லை. சித்தார்த் அவள் அருகாமையை ரசித்தான் என்றால் ஜெனி சுற்றுப்புறத்தை, ஏகாந்தமான வானத்தை, குளிர்ச்சியான காற்றை அனுபவித்தபடி அமர்ந்திருந்தாள்.

“போலாமா?”

“ம்ம்..” முதலில் எழுந்தவன் இவளுக்குக் கை கொடுத்தான்.

விருத்திருந்த கால்கள் மக்கர் பண்ண, தானே எழவும் முடியாமல், கை கொடுப்பவனை மறுக்கவும் முடியாமல் லேசாக விரல் பற்றி ஒரு மாதிரி சமாளித்து எழுந்து நின்றாள்.

“நான் கூட உனக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுக்கிற ஐடியா ஏதாச்சும் இருக்கா, இல்லையா, இப்படி உட்கார்ந்துட்டே இருக்கானேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்?”

மற்ற விஷயங்களில் இருக்கும் தயக்கமோ, கட்டுப்பாடோ வாயாடும் விஷயத்தில் மட்டும் இல்லை, போல…

வம்பிழுத்தவளை முறைத்தவன், “உன்னை வேற எங்கயாச்சும் வேற கூட்டிட்டு போறாங்களாக்கும். வாசல்ல இதே மாதிரி உண்டக்கட்டி தருவாங்க, வாங்கிச் சாப்ட்டுட்டுக் கிளம்பலாம், வா…” முன்னே நடந்தான்.

“எனக்கு டபுள் ஓகே. கோவில் பிரசாதம் டேஸ்டி டேஸ்டி… வா வா..”

“ஜெனி… யூ ஆர்…!!!” சித்தார்த் அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தான். உண்மையில் உவகை நிறைந்த மன மலர்ச்சியான புன்னகை அது.

‘யூ ஆர் சோ ஸ்வீட்…’

எந்தச் சூழ்நிலையிலும் அலட்டாமல் எல்லாவற்றையும் விளையாட்டாக, இலகுவாக எடுத்துக்கொள்ளும் பெண்ணவளின் தன்மை அவனை வெகுவாக ஈர்த்தது.

தன் எண்ணமும் விருப்பமும் மிகச் சரியானவை, அவை சாதாரணச் சலனமல்ல என்று அந்த நொடி பரிபூரணமாகப் புரிய, அவன் இதழ்களில் நிறைவான புன்னகை அரும்பியது.

ஆழ்ந்து ஒருமுறை சுவாசித்தவன் பின்னால் திரும்பிப் பார்க்க, ஜெனி அவனைக் கண்டு கொள்ளாமல் பொருட்காட்சியில் இருந்த கடைகளைப் ‘ஆ’வென வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்.

‘இந்த மக்கை வச்சிட்டு என்ன தான் பண்ணப் போறேனோ…!!!??’

இடக்காக நினைத்தாலும் கூட்டத்தின் நெரிசலில் சிக்கவிடாமல் அவளை முன்னால் விட்டு இவன் பின்னால் நடந்தான். இருவரும் மௌனமாகப் பிரகாரம் சுற்றி, வெளியே நடந்து, காரை எடுத்து, கோவில் வளாகத்தைத் தாண்ட மேலும் ஒரு மணி நேரம் பிடித்தது.

“எதுக்கு இவ்ளோ ப்ரொடக்ஷன்…?” வழியெங்கும் போலீஸ் தலைகள். ஏகப்பட்ட செக் போஸ்டுகள்.

“எங்கெங்க இருந்தோ ஜனங்க வருவாங்க… திருட்டு, ஈவ் டீஸிங் எல்லாம் நடக்காம பார்த்துக்கணும்ல…. அதுவும் இல்லாம இன்னும் இரண்டு வாரத்துல கவர்னரும், சீஃப் மினிஸ்டரும் வந்து தேரை வடம் பிடிச்சு தொடங்கி வைப்பாங்க இங்க. அதுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடா இருக்கும்.”

“ரியல்லி…!!! ஏன், என்ன ஸ்பெஷல் இங்க?” ஜெனிக்கு இது புதுத் தகவலாக இருந்ததால் ஆர்வமாகக் கேட்டாள்.

“இது ஆடி மாசம் ஜெனி. இந்த மாசத்தோட கடைசி வெள்ளிக்கிழமை இங்க தேர் இழுப்பாங்க… ஆறாவது வெள்ளிக்கிழமை முத்துப்பல்லக்கு பவனி வரும்…”

“ஓஓ.. அது சரி…. ஆனா கவர்னர் எதுக்கு வர்றாங்க? ஏதாவது வேண்டுதலா அவங்களுக்கு?” அவள் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“ஆமா… கவர்னரானா பால்குடம் எடுத்து மாவிளக்கு போடறேன்னு அவங்க வேண்டிக்கிட்டாங்களாம், அதுக்குத்தான் வராங்க….”

“ஹம்ம்… பரவாயில்லையே… அவ்வளவு பக்தியா அவங்களுக்கு!!!” அதிசயமாகக் கேட்டவள், கொஞ்ச நேரம் கழித்தே உணர்ந்தாள் அவன் தன்னை ஓட்டுவதை.

“ஏய்… திமிரா உனக்கு? என்னன்னு மரியாதையா சொல்லு…” அவள் மிரட்ட,

“அது ஒன்ஸ் அபான் தி டைம் கதை மேடம்…. சொன்னா அறுக்கிறேன்னு திட்டுவ… ஆளை விடு…”

“ஹேய்… சொல்லு ப்ளீஸ்.. கதை கேட்குறதுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும்…”

“பச்சை குழந்தை பாரு, கதை வேணுமாம்” கொட்டையாய் கண்கள் அகற்றி கேட்டவளின் பின்னந்தலையை விளையாட்டாகத் தட்டினான் சித்தார்த்.

நின்று நின்று நகரும் வாகனத்தில் அமர்ந்து கொண்டு வேறு என்ன தான் செய்ய முடியும்…? கதை சொல்வதையும் கேட்பதையும் தவிர….

ரொமாண்டிக்காக ஏதாவது பேசினால் இந்தக் குழந்தை முகந்திருப்பி இறங்கி சென்றாலும் சென்று விடும், தன்னையே கிண்டலாக நொந்து கொண்டவன் மேலும் மறுக்காமல் சொல்லவும் செய்தான்.

 “பாண்டி பிரெஞ்சு ரெஜிமென்ட்டுக்கு கீழ இருந்தப்ப பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இந்தக் கடற்கரை பிரதேசங்கள் மேல எப்பயும் ஒரு கண்ணு இருந்துச்சாம். கடலோரமா இங்கிலீஷ் சோல்ஜர்ஸ் ஊடுருவி உள்ள வர முயற்சி பண்ணும்போதெல்லாம் அப்படி நடக்காம இருக்க இங்க இருக்கிற மீனவ மக்கள் தான் அரசாங்கத்தோட கை கோர்த்து நின்னுருக்காங்க”

“ம்ம்ம்…”

“அந்த உதவிக்குப் பிரதிபலனா என்ன வேணும்னு கேட்டப்ப இந்தக் கோவில் தேரை கவர்னர் தன் கையால இழுத்து தொடங்கி வைக்கணும்னு ஊர் மக்கள் விருப்பப்பட்டு இருக்காங்க…”

“அந்த மக்களோட ஆசைப்படியே பிரெஞ்சு கவர்னர் ஒவ்வொரு வருஷமும் இந்தக் கோவிலுக்கு வந்து தேரை தொடங்கி வைச்சிருக்காரு. இந்த வழக்கம் பாண்டி இந்தியாவோட ஒன்றிணைஞ்சதுக்கு அப்புறமும் தொடருது. இப்ப யூனியன் டெர்ரிடரியோட கவர்னர் வந்து தொடங்கி வைக்குறாங்க”

“வாவ்… இன்ட்ரெஸ்டிங்…” என்றவள், “இந்தக் கதையை ஏன் மம்மா எனக்குச் சொன்னதே இல்ல…? இன்னிக்கு பேசுறப்ப கேட்குறேன்.” ரொம்பத் தீவிரமாக யோசிக்க, அதை விடத் தீவிரமாகச் சித்தார்த் அவளிடம் கேட்டான்.

“ஜெனி, யாரந்த டேனி?”