கண்கள் தேடுது தஞ்சம் – 30
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 30
அரசு, நங்கை பதிலுக்காகப் பெற்றவர்கள் வரவேற்பறையில் காத்திருக்கக் கதவை திறந்து இரண்டு பேரும் மகிழ்ச்சியாக வெளியே வரவும், அவர்களின் முகமே சந்தோஷ செய்தியை சொல்ல ஆர்வமாக இருவரையும் பார்த்தார்கள்.
நேராகத் தன் தந்தை, மாமாவின் அருகில் சென்ற அரசு “மாமா என்னைக்குக் கல்யாணம்?” என்று எடுத்ததும் கேட்டான்.
மருதன் உடனே மகளின் முகத்தைப் பார்க்க தன் அன்னை, அத்தை பக்கத்தில் நின்றிருந்தவள் தந்தையைப் பார்த்து “சம்மதம் ப்பா” என்று மட்டும் முணுமுணுத்தாள்.
வேணியும், ஈஸ்வரியும் குளிர்ந்து போய் அவளுக்குத் திருஷ்டி கழிப்பது போல் செய்து சந்தோஷப்பட்டார்கள்.
தானும் சந்தோஷப்பட்ட நாயகம் “என்னடா தம்பி கல்யாணத்துக்கு அவ்வளவு அவசரமா?” என்று கிண்டலுடன் கேட்டார்.
“பின்ன இல்லையாபா? என் அப்பாவும், மாமாவும் எங்க கல்யாணம் நடந்து சீக்கிரம் சம்பந்தி ஆகணும்னு ரகசியமா சில வேலையெல்லாம் பார்த்துருக்காங்க. அதுக்குப் பலன் கிடைக்கணும்னா எங்க கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் தானேப்பா?” என்று கேலியுடன் கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் மருதனும், நாயகமும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்து “நீயுமா…?” என்று ஒன்று போலக் கேட்டுக் கொண்டவர்கள், தமிழரசனை பார்த்து திருதிருவென முழித்தார்கள்.
அவன் அவர்கள் இருவரையும் நமட்டு சிரிப்புடன் பார்த்தவன் தன் அன்னையின் புறம் திரும்பி “அம்மா! ஏன் ம்மா நீங்க அத்தை கூட இவ்வளவு வருஷமா பேசலை?” என்று கேட்டான்.
இவன் எல்லாம் தெரிந்தே இப்படிக் கேட்குறானே என்று நினைத்தவர் “உனக்குத் தான் தெரியுமேடா…? உங்க அப்பா, அண்ணன் கூடச் சண்டை போட்டுட்டார். அவங்க கூட இனி பேச கூடாதுன்னு அவர் தானே சொன்னார். அவர் வார்த்தையை எப்படி மீற? அதான் பேசலை” என்றார்.
அவர் சொல்லி முடித்ததும் ஈஸ்வரியின் புறம் திரும்பி “அத்த நீங்க?” என்று கேட்டான்.
“மதினி சொன்னதே தான்ய்யா! நாயகம் அண்ணனை விட உங்க மாமா ரொம்பக் கோபகாரர்ல…? நான் பேசினா சும்மா விடுவாரா என்ன? அப்படி ஒருவேளை பேசி பிரச்சனை பெருசாச்சுனா என்ன பண்றது? அதான் ய்யா பேசாம இருந்தேன்” என்றார்.
“நீங்க இரண்டு பேரும் இப்படிச் சொல்றீங்க. ஆனா இவங்க இரண்டு பேரும் என்ன பண்ணி வச்சுருக்காங்கன்னு தெரியுமா?” என்று இருவரையும் பார்த்துக் கேட்டான்.
“என்ன பண்ணினாங்க? என்று கேட்டப் படி தங்கள் தங்கள் கணவனைப் பார்க்க,
அவர்கள் இரண்டு பேரும் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தார்கள்.
எதுக்கு இவர் இப்படி முழிக்கிறார் என்று புரியாமல் “என்னய்யா தமிழ்? என்ன விஷயம்? எதுக்கு இவங்க இரண்டு பேரும் ஆட்டை திருடினது போல முழிக்கிறாங்க?” என்று கேட்டார் ஈஸ்வரி.
“சொல்றேன் அத்த!” என்றவன் “அம்மா நம்ம கனிக்கா கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரியுமா?” என்று வேணியிடம் கேட்டான்.
அவன் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டதில் கடுப்பான வேணி “நீ என்னடா சம்பந்தம், சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்குற? இப்ப எதுக்குக் கனி கல்யாணம் எல்லாம் வருது? நீயே எல்லாத்துக்கும் பதில் சொல்லிரு!” என்றார் எரிச்சலுடன்.
“சரி… சரி…! சொல்றேன். அப்பா கனி அக்காவுக்கு வந்த வரனை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு மதுரையில் அக்காவோட மாமனார் தன் மகனுக்குப் பொண்ணு தேடிட்டு இருந்த தரகரை தேடி புடிச்சு, அக்கா ஜாதகத்தைக் கொடுத்து அவர் வீட்டில் போய்ப் பேச சொல்லிருக்கார். நடராசன் மாமா நாயகத்தோட பொண்ணு போட்டோ வரவும் அவர் மருதன் மாமாக்கு போன் போட்டுச் சொல்லிருக்கார்.
இப்படி நாயகம் பொண்ணு போட்டோ கிடைச்சுருக்கு என்ன பண்ணலாம்னு அவர் இவர்கிட்ட கேட்க… இவர் உடனே சரின்னு சொல்லி கல்யாணத்தை முடிச்சு வை அண்ணான்னு சொல்லிருக்கார்” என்று சொல்லிவிட்டு “என்ன சரிதானே மாமா?” என்று கேட்டான்.
அவர் ‘ஆமா’ என்பது போலத் தலையசைக்க… தன் தந்தையின் புறம் திரும்பியவன் “அப்பா… அக்காவோட மாமனார் சரினு சொன்னதும் நீங்க உங்களுக்கு ஒன்னுமே தெரியாதது போல என்னவெல்லாம் சொன்னீங்க? மொத எங்களை நம்ப வைக்க வேண்டாம்னு சொன்னவர், அப்புறம் நல்ல சம்பந்தம் மருதனுக்காக எல்லாம் இந்தச் சம்பந்தத்தை விட முடியாதுன்னு சொல்லி… அம்மாடியோ…! அம்மா வந்து என்னனு கேளு. இந்த அப்பா எப்படியெல்லாம் நடிச்சுருக்கார் பாரு” என்று வேணியிடம் போட்டுக் கொடுத்தான்.
வேணி “என்னங்க இதெல்லாம்?” என்று முறைக்க…
“உண்மையிலேயே நல்ல சம்பந்தம் தானேம்மா. அதான்…” என்று அவர் மழுப்பலாகப் பதில் சொல்ல, அரசு அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தான்.
“இதுல முக்கியமான விஷயம் மருதன் மாமா டயலாக் தான். ஏதோ கோபத்தில் அன்னைக்குப் பேசிட்டேன். ஆனா நாயகத்துகிட்ட பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு. என்னோட உயிர் நண்பன் அவன். ஆனா தானா போய்ப் பேசவும் என் ஈகோ தடுக்குது. உன் வீட்டுல கனி வாக்கப்பட்டா நாங்க எப்படியும் உறவுக்காரங்களா ஆகிருவோம்.
இப்ப இல்லாட்டாலும் பின்னாடி நாங்க பேசிக்க இந்த உறவே சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால எனக்காக அந்தச் சம்பந்ததையே முடிச்சு வை அண்ணானு அவர் அண்ணாகிட்ட சொல்லியிருக்கார்” என்று அவன் சொல்லி முடித்ததும். “அப்படியாங்க? ஆனா ஏன் எல்லாம் செய்தவர் கல்யாணத்துக்குப் போகக் கூடாதுனு சொன்னீங்க?” என்று ஈஸ்வரி கேட்டார்.
“அது இப்ப என் அண்ணன் உளறினது போல அப்பயே உளறி என்னை மாட்டிவிட்ருவாரோனு நினைச்சேன்” என்று முனங்கினார் மருதன்.
“ஹா…ஹா…! மாமா, அப்பா இரண்டு பேரும் இவ்வளவு நட்பை வச்சுக்கிட்டு அப்புறம் ஏன் பிரிச்சு இருக்கணும்? ஒரு நாள் பேசியிருந்தா எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து இருக்குமே?” என்று கேட்டான் அரசு.
“நீ சொல்றதும் நியாயம் தான் மருமகனே! ஆனா ஏதோ சாதாரணமா ஆரம்பிச்சது பெரிய வார்த்தைகளை விட்டுட்டுச் சண்டை போட்டுக்கிட்டோம். ஆனா எனக்கு வருஷம் செல்ல, செல்ல என் தப்பு எனக்குப் புரிஞ்சது. நாயகம் என் நல்லதுக்குத் தானே சொன்னான் ஏன் கேட்காம போனேன்னு ரொம்பவே வருத்தப்பட்ட சமயத்தில் தான் அண்ணா கனியை பத்தி கேட்கவும் அப்படிச் சொன்னேன். அவசரமா வார்த்தையை விட்டுவிட்டு அப்புறம் அவதி படுவாங்கன்னு சொல்லுவாங்களே? அது போலத் தான் என்னோட விஷயத்தில் ஆகிருச்சு. ஆனா அப்பப்ப உங்களோட எல்லாம் பேச முடியாம போன கடுப்புல ஏதாவது கோபத்தில் வந்து வீட்டில் திட்டிக்கிட்டுக் கிடப்பேன். ஆனா நீ ஏன் மருமகனே இப்ப அந்த இடத்தை விக்க விடாம செய்த?” என்று கேட்டார்.
“அந்த விஷயத்தை நாம அப்புறம் பேசலாம்” என்று முறைப்புடன் பதில் சொன்னான்.
இவன் ஏன் இப்படி முறைக்கின்றான்? என்று அவர் புரியாமல் குழம்பினார்.
அதைக் கண்டு கொள்ளாமல் தந்தையின் புறம் திரும்பி “மருதன் மாமாவை ஈகோ தடுத்துச்சு. ஆனா உங்களுக்கு என்னப்பா? நீங்க பேசிருக்கலாம்ல?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்…! பேசியிருக்கலாம்… அதுக்குத் தான் முதல் அடியா உங்க அக்கா கல்யாணத்தை நடராஜன் சம்பந்தி வீட்டில் முடிச்சு வச்சேன். நண்பர்களா தான் பேச முடியல. உறவினர்களா பேசலாம்னு நினைச்சேன். ஆனா மருதன் கல்யாணத்துக்கு வராம போனது ரொம்ப வருத்தம் தான்.
அது மட்டும் இல்லாம நானா போய் மருதன்கிட்ட பேசாததுக்குக் காரணம் என் மேல இருக்கிற கோபத்தையும், என்கிட்ட விட்ட சவாலையும் மனசுல வச்சுக்கிட்டு அவன் விவசாயத்தை விடாம செய்யட்டும்னு நினைச்சு தான் அமைதியா இருந்தேன். ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கலைனாலும் எங்க இரண்டு பேர் சிந்தனையும் ஒன்னும் போலத் தான் இருந்திருக்கு” என்றார்.
நாயகம் சொல்லி விட்டு நண்பனின் கையைப் பிடித்து அழுத்தி விட்டார்.
ஈஷ்வரியும், வேணியும் அவர்களின் நட்பை நினைத்து பெருமையுடன் இருவரையும் பார்த்தார்கள்.
நங்கை அப்போது திகைத்து போனவள் தான். வெளியே சண்டை போட்டிருந்தாலும் இருவரும் உள்ளுக்குள் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை.
அரசுவிற்கு ஏற்கனவே இந்த விஷயங்கள் சிறிது நாட்களுக்கு முன் கனியின் மூலம் தெரியும் என்பதால் அவனுக்கு அதிக அதிர்ச்சி இல்லை. ஆனால் இருவரின் நட்பையும் நினைக்கும் போது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள்.
சிறிது நேரத்தில் தன் திகைப்பில் இருந்து தெளிந்த நங்கை, அரசுவை அர்த்தமாகப் பார்க்க, அவளின் பார்வை புரிந்து தன் மாமன் புறம் திரும்பியவன் “மாமா எனக்கு ஒரு சந்தேகம் அதுக்குப் பதில் சொல்லுங்க” என்று கேட்டான்.
“என்னய்யா தமிழு?” என்று மருதன் கேட்க…
“நங்காவை பொண்ணு கேட்டு ஏதாவது சம்பந்தம் வந்துச்சா?” என்று கள்ள சிரிப்புடன் கேட்டான்.
அவன் சிரிப்பை பார்த்து ‘அடேய்…! இதுவும் உனக்குத் தெரிஞ்சுருச்சா?’ என்பது போலச் செல்லமாக முறைத்தார்.
நங்கை தன் தந்தையின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
எல்லாரும் ‘அது என்ன?’ என்பது போலப் பார்க்க…
“அதான் உனக்கே தெரிஞ்சுருக்கே அப்புறம் என்ன கேள்வி?” என்று முணுமுணுத்தார்.
“இந்தக் கேள்வி கேட்டது நான் இல்லை. நங்கா சார்பா நான் கேட்குறேன். இந்தக் கேள்விக்குப் பதில் தெரிஞ்சா தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்குவாளாம்” என்று சோகம் போலச் சொன்னான்.
அவர் நங்கையைப் பார்த்தார். அவள் கண்ணிலும் கேள்வி தெரியவும் “ம்ம்… ஒரு நாலு சம்பந்தம் வந்துச்சு. ஆனா நானும், நாயகமும் சம்பந்தி ஆகணும்னு உங்க சின்ன வயசுல பேசிப்போம். ஆனா நாங்க யார்கிட்டயும் அதைச் சொல்லிக்கிட்டது இல்லை. ஏன்னா… நீங்க வளர்ந்த பிறகு எப்படி இருப்பீங்கன்னு தெரியாது இல்லையா? சண்டைக்குப் பிறகு சின்ன வயசுல இருந்தே உன்னையும் கனியையும் பார்க்க பவளம் போறான்னு தெரியும். ஆனால் ஏனோ அவளைத் தடுக்க ஒரு நாளும் தோணலை.
ஏன்னா… உங்க மேல அந்த அளவுக்குப் பாசம் வச்சுருக்கா. அதோட அன்னைக்கு ஒரு நாள் அவளை அடிச்சு ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன் பிள்ளையை. அதனால் அவ அழுத அழுகை இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு. உங்களைப் பார்த்தா தான் அவளுக்குச் சந்தோஷம்னு புரிஞ்சதால பார்க்கட்டும்னு விட்டுட்டேன்.
இப்ப ஒரு இரண்டு வருஷமா என் மகள் கிட்ட மாற்றத்தை பார்த்தேன். அவ உன்னை விரும்புறாளோன்னு ஒரு எண்ணம். அதோட நாயகமும் நானும் பேசிக்கிட்ட படி உங்க கல்யாணம் நடந்தா நல்லது தானே அதான். அவளுக்கு வந்த வரன் எல்லாம் அவளுக்கு இப்ப கல்யாணம் பண்றதா இல்லைன்னு சொல்லி தட்டி கழிச்சேன்” என்றார்.
அவர் சொல்லி முடித்ததும் தந்தையின் அருகில் வந்த நங்கை சலுகையாய் அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
அதைப் பார்த்து “அப்ப நானும் எங்க அப்பா தோள்ல சாஞ்சுகிடனுமா?” என்று கேட்டான் அரசு.
அவன் பேச்சுப் புரியாமல் மற்றவர்கள் பார்க்க…
ஆனால் அதைப் புரிந்தவரோ “டேய் மகனே… எங்க இருந்துடா நீ எல்லாத்தையும் கண்டு பிடிச்ச?” என்று அலுப்பாய் கேட்டார் நாயகம்
“ஹா…ஹா…” என்று சிரித்த அரசு “அது எல்லாம் சொல்ல முடியாது” என்று பிகு செய்தான்.
இப்ப என்ன என்பது போல வேணி பார்க்க…
“அப்பா, அம்மா முறைக்கிறாங்க” என்று மாட்டி விட்டான் கள்ள சிரிப்புடன் அரசு.
“நீ அப்ப இருந்து என்னை மாட்டிவிடுற வேலை தான பார்க்குற. இப்ப மிச்சத்தையும் சொல்லி மாட்டி விடு” என்றார் அலுப்பாக.
“எனக்கும் இரண்டு வரன் வந்துச்சாமே அப்படியாப்பா?” என்று அப்பாவியாகக் கேட்டான்.
நங்கை அதற்குத் திடுக்கிட்டு அவனைப் பார்த்து முறைக்க… அவளைப் பார்த்து யாரும் அறியாத வண்ணம் கண்ணைச் சிமிட்டினான்.
‘அடப்பாவி…! எல்லார் முன்னாடியும் என்ன வேலை பார்க்கிறான்?’ என்று நங்கை முகத்தைக் குனிந்துக் கொண்டாள்.
“என்மேல கோபமா இருந்த மருதனே அவன் பொண்ணுக்கு வந்த வரனை என் கூடச் சம்பந்தி ஆகணும்னு ஆசைப்பட்டு வேண்டாம்னு சொல்லிருக்கான். அப்படி இருக்கும் போது நான் மட்டும் வரனை வர விடுவேனா?” என்று கேட்டவர் மகனை கிண்டலுடன் பார்த்து “என் மகன் சந்நியாசியா போகப் போறான்னு சொல்லி வந்த வரனை வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று சொல்லி “ஹா…ஹா…” என்று சத்தமாகச் சிரித்தார்.
“அப்பா… நான் எப்ப சந்நியாசியா போறேன்னு சொன்னேன்?” என்று கடுப்புடன் கேட்டான்.
“நீ உங்க அக்கா கேட்டப்ப எல்லாம் அப்படித் தானடா சொல்லிட்டு இருந்த?”
“ஹான்…! அது எனக்கு நங்காவை பிடிச்சிருந்தது. ஆனா நீங்க அப்ப மருதன் மாமா மேல கோபமா இருக்கீங்கன்னு நினைச்சேன். உங்களுக்குப் பிடிகாததைச் செய்யக் கூடாதுனு நினைச்சேன். ஆனா நீங்க மாமா கூடச் சேர சந்தர்ப்பம் பார்த்துட்டு இத்தனை வேலை பார்த்து வச்சீங்கன்னு தெரியாதே. எனக்கு இப்ப தானே தெரிய வந்தது” என்று வெளியே சொன்னவன் ‘அது மட்டும் இல்லாம வேறு காரணமும் இருக்குப்பா. அதான் உங்க கிட்ட என் மனசு என்னனு காட்டிக்க முடியலை’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
“உங்க அக்கா கேட்கும் போதெல்லாம் நீ வேணாம்னு சொல்லவும் நான் உனக்குப் பவளத்தைப் பிடிக்கலை போல இருக்கு. அதான் வேண்டாம்னு சொல்றேன்னு நான் நினைச்சேன். ஆனா எப்படியும் மருதன் கூடச் சேர்ந்த பிறகு உன்கிட்ட பேசி பவளத்தைக் கட்டிவைக்கணும்னு நினைச்சுதான் வேற சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன்” என்றார் நாயகம்.
“ஆக மொத்தம் என்னை எல்லாரும் கிறுக்கச்சி ஆக்கிருக்கிங்க. உனக்குப் பிடிக்காதுன்னு அவரும், உங்க அப்பாவுக்குப் பிடிக்காதுனு நீயும் நல்லா தான் விளையாடிருக்கிங்கடா அப்பாவும் மகனும்’ என்று எரிச்சலுடன் சொன்னார் அம்ச வேணி.
இப்போது அப்பாவும், மகனும் கள்ளர்கள் போல முழித்துச் ‘சாரிம்மா… மன்னிச்சுரு அம்சா…’ என்று ஒன்றாகச் சொல்லி அவரைச் சமாதானம் படுத்தினார்கள்.
சிறிது நேரம் நாயகமும், மருதனும் செய்து வைத்த வேலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பின்பு அரசு மருதனிடம் பேச நினைத்திருந்த விஷயத்திற்கு வந்து பேச்சை ஆரம்பித்தான்.
“நீ எதுவுமே யோசிச்சுச் செய்ய மாட்டியா மாமா?” என்று மருதவாணனிடம் கோபமாகக் கேட்டான்.
அவன் திடீரென அப்படிக் கேட்கவும் “எதுக்கு மருமகனே இவ்வளவு கோபம்? நான் என்ன செய்தேன்?” அவன் எதற்கு இவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று புரியாமல் முழித்தார்.
“அன்னைக்கு எதுக்கு அப்படி ஆத்துக்குள்ள இறங்கி வந்த? தண்ணி தான் விடப் போறாங்கன்னு தெரியும் தான? இதை அன்னைக்கே கேட்டுருப்பேன். ஆனா எல்லாரும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தீங்க. அதுவும் அப்ப தான் உயிர் பிழைச்சு வந்தவரை திட்டமுடியாது பாரு?” என்று கடுப்புடன் கேட்டான்.
அவன் கேட்க குடும்பமே மருதனை சுற்றி அமர்ந்திருந்தது. எல்லாருக்குமே அதே கேள்வி இருந்ததால் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க காத்திருந்தார்கள்.
எல்லோரின் முகத்தையும் பார்த்த மருதன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
“ம்ம்…! அது கொஞ்ச நாளாவே மனசுல ஒரு குடைச்சல் மருமகனே. பவளத்தைக் கேட்டு மாப்பிள்ளை வீடு வர ஆரம்பிச்சதில் இருந்தே அப்படித்தான். உனக்கு அவளைக் கட்டிவைக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா நானா எப்படி வந்த பேசன்னு தயங்கி, தயங்கி நாளு ஓடுச்சு. அந்த நேரத்தில் தான் அன்னைக்கு உங்க இரண்டு பேரையும் ஒன்னா பார்த்தேன். தங்கம்மா ஆத்தா வீட்டுக்கு போய்ட்டு இருந்தீங்க.
உங்க இரண்டு பேரையும் அப்படி ஜோடியா பார்க்கவும், என் ஆசை இன்னும் அதிகம் ஆகிருச்சு. அன்னைக்கு ராத்திரி பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு. நாயகம் என்கிட்ட எப்படி நட்பா இருப்பான். ஒரு நல்ல நட்பை இழந்துட்டேனேன்னு ரொம்ப வருத்தம் வந்துருச்சு. அன்னைக்குச் சண்டை போட்டதும் ஞாபகம் வந்துச்சு. நான் அப்ப கோபத்தில் என்ன பேசினேன்.
எப்படி நடந்துக்கிட்டேன்னு கூடத் தெரியல. அதோட நீ வேற கை ஓங்கவும் நான் பார்த்து வளர்ந்த பையன் என்னை அடிக்க வர்றானேன்னு கோபம். எல்லாம் சேர்ந்து உங்க கூட ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு விலகி போனேன்.
ஆனா சுலபமா அந்த நேரத்தில் நிலத்தை விக்க நினைச்சது எவ்வளவு தப்புன்னு போகப் போகப் புரிஞ்சது. நிலத்தை விக்க முதலில் ரொம்பத் தயங்கினேன். ஆனா என்னை வாட்டின வறுமை, சகலைங்க முன்னாடி நான் கீழே மட்டமா தெரிஞ்சது, ஒரு விசேஷத்துக்குப் போனா கூட மதிப்பில்லாம போனது எல்லாம் சேர்ந்து என்னை நிலத்தை விக்க முடிவெடுக்க வச்சது.
பேக்டரிகாரன் நிரந்தர வேலை தர்றான்னு சொன்னது கொஞ்சம் நல்ல யோசனையா இருந்துச்சு. சம்பளத்துக்கு வேலைனாலும் பரவாயில்ல. வானம் பார்த்து ஏமாந்து போகத் தேவையில்லை. எப்பயும் வருமானம் வரும்னு தான் ஒத்துக்கிட்டேன்.
அப்ப நாயகம் தடுக்கவும் ஏதோ வீம்பு சண்டை நடந்துச்சு… பிரிச்சுட்டோம். ஆனா இப்ப என் பிள்ளை வளர்ந்து நிக்குது. பிள்ளை மனது பெத்தவனுக்குத் தெரியாதா என்ன? அவ மனசு படி நடக்க என்ன வழி? எப்படி நாயகத்துகிட்ட வந்து பேசுறதுன்னு அதே யோசனை தான் கொஞ்ச நாளா. அன்னைக்கும் அதே யோசனையா தான் அந்த வயலில் இருந்து வந்தேன்.
என் சிந்தனை எல்லாம் அதில் இருந்ததால தண்ணி திறந்து விடப் போறதே எனக்கு மறந்து போயிருச்சு. ஞாபகம் வந்தப்ப பாதி ஆத்துக்கு வந்திட்டேன். அதுக்குப் பிறகு எதுக்குத் திரும்பி போகணும்னு முன்னேறினா கால்ல கண்ணாடி பாட்டில் குத்திருச்சு. அதுக்குப் பிறகு நடந்தது தான் தெரியுமே” என்று தன் மனநிலையைப் பகிர்ந்துகொண்டார் மருதவாணன்.
அவர் சொன்னதைக் கேட்டு அம்மாவும், மகளும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள். எதற்கு அவர் அப்படி யோசனையுடன் இருந்தார் எனத் தெரியாமல் குழம்பியவர்கள் ஆயிற்றே!
அதோடு தன்னைப் பற்றிய கவலையில் தான் அவர் ஆபத்தில் மாட்டிக் கொண்டார் என்று வருந்திய நங்கைக்குக் கண்கள் கலங்கியது.
அதைக் கவனித்த அரசு ‘அழாதே!’ என்று சைகை காட்டினான்.
அவன் சைகையில் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் மனதில் அழுதால் கண்ணில் முத்தம் தருவேன் என்று அவன் சொன்னது வந்து போக, ‘நான் அழலையே’ என்று காட்டி உதட்டை இழுத்துச் சிரிப்பது போல வைத்து காட்டினாள்.
அவளின் முன்னெச்சரிக்கையில் அரசுவிற்குத் தன்னால் சிரிப்பு மலர்ந்தது.
அவர்களைக் கவனியாமல் “பவளத்துக்கு விருப்பம் இருக்கும்னு நினைச்சேன். ஆனா அவகிட்ட இப்ப கேட்டப்ப கல்யாணத்துக்கு ஏன் வேண்டாம்னு சொன்னா? அதான் எனக்குப் புரிலை” என்றார் மருதன்.
“அது என்மேல அவளுக்கு ஒரு கோபம் மாமா. அதான் அப்படிச் சொன்னா. அதை நாங்க பேசி சரி பண்ணிக்கிட்டோம்” என்று விளக்கினான் அரசு.
“என்னமோப்பா… உங்க கல்யாணம் நல்ல படியா நடந்தா அதே எனக்குப் போதும்” என்றார்.
“அது எல்லாம் நல்லா நடக்கும் மாமா. ஆனா அது நல்லா நடக்கணும்னா நீங்க எனக்குச் சில உறுதிகள் தரணும். அதோட இன்னும் ஒரு விஷயத்துக்கும் எனக்கு விளக்கம் வேணும்” என்று சொல்லி நிறுத்தினான்.
“என்ன மருமகனே? சொல்லுங்க!” என்று மருதன் கேட்க…
“டேய் தமிழ்…! என்ன உறுதி, அது இதுன்னு சொல்லிட்டு இருக்குற. என்ன இதெல்லாம்?” என்று கேட்டார் நாயகம்.
மற்றவர்களும் அப்படி என்ன கேட்க போகிறான் என்று புரியாமல் பார்த்தார்கள்.
“அப்பா! இது மாமாவும் நானும் பேசி தீர்க்க வேண்டிய விஷயம். அது மட்டும் இல்லாம இனி நம்ம குடும்பத்துக்குள்ள வேற எதுவும் பிரச்சனை வராம இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைன்னு வச்சுக்கோங்க” என்று சொல்லி நாயகத்தை அமைதியாக்க முயல…
அதைப் புரிந்துக் கொண்டவரும் “சரிப்பா பேசு! ஆனா உன் மாமன் மனசு வருந்துற மாதிரி எதுவும் பேசிறாதே!” என்றார்.
‘ஆஹா…! நான் அப்படி வருத்தப்பட வச்சா நங்கா என்னைச் சும்மா விடுவாளா என்ன? கண்மாய்க்குள்ள பிடிச்சு தள்ளிவிட்டுற மாட்டா? இப்ப கண்மாய் நிறையத் தண்ணி வேற கிடக்கு’ என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
உதட்டை தாண்டி வந்த சிரிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு தீவிரமாகப் பேச்சை ஆரம்பித்தான்.
“மொத விஷயம் இனி உங்க வாயில் இருந்து கெட்ட வார்த்தையே வர கூடாது. நாம சாதாரணமா பேசுற சில வார்த்தைகளோட வீரியமே அதிகம். அப்படி இருக்கும் போது நீங்க பேசுற அநாகரிகமான வார்த்தைகள் எப்படி மத்தவங்களுக்குப் பாதிப்பை தரும்னு நினைச்சு பாருங்க மாமா.
உங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரியவன் இல்லை. ஆனா நீங்க பேசிய வார்த்தை தான் என்னை அன்னைக்குக் கையை நீட்ட வச்சது. நான் அப்படிச் செய்துட்டு என் அப்பா ஸ்தானத்தில் இருக்குறவரை போய் அடிக்கக் கையை ஓங்கிட்டேனேன்னு பல நாள் வருந்தி இருக்கேன். அதனால தான் சொல்றேன்” என்று சொன்னான்.
‘அதைச் சொல்லுய்யா! நான் சொல்லியே திருந்தலை. நீ சொன்னாலும் கேட்குறாரான்னு பார்ப்போம்’ என்று மெதுவாக முணுமுணுத்தார் ஈஸ்வரி.
“நீ சொல்றது எனக்கும் புரியுதுயா. நானும் அதை விடணும்னு தான் பார்க்கிறேன். ஆனா பாரு எனக்குக் கோபம் வந்தா தன்னால வந்துருது. நான் என்ன பண்ண சொல்லு?” என்று அப்பாவியாகக் கேட்டார்.
“ஹான்…! ஒன்னும் பண்ண வேணாம் மாமா. இனி வாயில வார்த்தை மாறி வரும் போதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு உன் பொண்ணும், மருமகனும் உன் வீட்டுக்கு வர்றது நின்னு போய்ரும்னு நினைச்சுக்கோ. தன்னால வார்த்தை உன் தொண்டையைத் தாண்டி வெளியே வராது” என்று நக்கலுடன் சொன்னான்.
அவன் அப்படிச் சொன்னதும் அதிர்ந்த மருதன் “அட…! என்ன மருமகனே இப்படிச் சொல்லிட்ட? நானே ஒத்தை பொண்ணை வச்சிருக்கேன். அப்படி இருக்கும் போது நீ இப்படிச் சொல்லலாமா?” என்று கேட்டார்.
“பின்ன உன்னை எப்படி இந்த விஷயத்தில் சரி பண்ணுறது? அந்த ஒத்தை பொண்ணைப் பார்க்கணும்னா இனி அசிங்கமா பேசாதே!” என்று அரசு அவருக்குச் செக் வைக்க…
‘சரி’ என்று தலையை உருட்டினார் மருதன்.
அவரின் உருட்டலை பார்த்து அனைவரும் மெல்லிய சத்தத்துடன் சிரிக்க… அதனைப் பார்த்து அவருமே சிரித்து விட்டார்.
“அவ்வளவு தானா? இன்னும் இருக்கா மருமகனே?” என்று மருதனே எடுத்துக் கொடுக்க…
“ஹ்ம்ம்…! இருக்கு… இருக்கு. இப்ப ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். முன்னாடியே நிலத்தை விக்க முடிவு பண்ணித்தானே அது பெரிய விஷயம் ஆச்சு. அப்புறமும் ஏன் திரும்ப இப்ப ஒரு நிலத்தை விக்கப் போனீங்க?” என்று கோபத்துடன் கேட்டான் அரசு.
“ஏன்யா? அதில் என்ன தப்பு இருக்கு? அன்னைக்குப் பேக்டரிக்கு விக்கக் கூடாதுனு தானே பிரச்சனை வந்துச்சு. ஆனா இப்போ அப்படி இல்லையேய்யா. அந்த மண்ணுல என்ன போட்டாலும் விளைய மாட்டீங்குதுய்யா. அதான் இடத்தைக் கை மாத்தி விட்டுட்டு வேற எடத்துல ஒரு நிலத்தை வாங்கிப் போடுவோம்னு நினைச்சேன்” என்றார் மருதன்.
“நீங்க வேற இடம் வாங்க நினைச்சது தப்பு இல்ல. ஆனா அந்த இடத்தை விக்க நினைச்சது தான் பெரிய தப்பு. சரி அதுதான் விக்க நினைச்சாலும் நீங்க விக்கிற நிலம் யார்க்கிட்ட போகுதுன்னு பார்த்து விக்க ஏற்பாடு பண்ணி இருக்கணும். நீங்க அதைச் செய்யாம விட்டதால தான் நான் விக்க விடாம செய்தேன்” என்றான்.
“என்ன தமிழ் சொல்ற? அந்த நிலத்தை வாங்க இருந்தது யாரு?” என்று இப்போது நாயகம் குறுக்கிட்டு கேட்டார்.
“சொல்றேன்ப்பா” என்றவன் மருதனிடம் “நீங்க விக்க நினைச்சது யார்கிட்ட மாமா?” என்று கேட்டான்.
“அந்த நிலம் பக்கத்து ஊரோட சேர்ந்த நிலமா தானே வருது. அதான் அந்த ஊர் பய ஒருத்தன் கேட்டான். நானும் சரி தான் இவ்வளவு தூரம் வந்து இந்த வயல்ல வேலை பார்த்தும் நமக்குச் சரியா எதுவும் விளைய மாட்டீங்குதே. அவனா வந்து வழிய கேட்குறான். இதை வித்துட்டு நல்ல நிலமா நம்ம ஊர் பக்கத்துலையே வாங்கிப் போட்டுருவோம்னு நினைச்சேன்.
அதுவும் அவன் விவசாயத்தில் புதிய முறை எல்லாம் முயற்சி செய்து பார்க்க போறேன். அதுக்கு இப்படி விளையாத நிலம்தான் எனக்கு வேணும்னு சொன்னான். சரி விளையாத நிலத்தை அவனாவது விளைய வச்சு பார்க்கட்டும்ன்னு தான் விக்கச் சம்மதம் சொன்னேன்” என்றார்.
அவர் சொல்லி முடித்ததும் “உனக்கு அடுத்தும் விவசாயம் செய்ய நிலம் வாங்கணும்னு எப்படி மாமா நினைப்பு வந்துச்சு? உனக்குத் தான் விவசாயம்னாலே பிடிக்காதே” என்று கிண்டலுடன் கேட்டான் அரசு.
“அதுவா…? அது… நான் பார்த்து வளர்ந்த ஒரு பையன் விவசாயத்துல ஆர்வமா இறங்கி புதுசு புதுசா என்ன என்னமோ பண்ணி நல்ல பேர் வாங்குறான். விவசாயக் கூட்டத்தில் முத்து முத்தா பேசி யோசனை சொல்றான். ஒரு சின்னப் பையன் அவ்வளவு சாதிக்கும் போது அவனோட மாமன் நான் ஓரளவாவது விவசாயத்தில் முன்னேறி காட்ட வேண்டாமா? அதான்” என்றார் அரசுவை நேர் பார்வையாகப் பார்த்து.
அவர் தன்னைத் தான் சொல்கிறார் என்று புரிந்தவன் இன்னும் கிண்டலுடன் பார்த்து “ஆஹா… பொய் சொல்லாதே மாமா! எங்க அப்பாக்கிட்ட போட்ட சவால்ல ஜெயிக்கணும்னு தான் நீ திரும்ப விவசாயம் செய்ய ஆரம்பிச்ச. ஆனா இப்ப அப்படியே மாத்தி சொல்றயே?” என்று கேட்டான்.
“அதுவும் நிஜம் தான் மருமகனே. ஆரம்பத்தில் நாயகம் மேல இருந்த கோபத்தில் சவால்ல ஜெயிக்கணும்னு தான் தீவிரமா விவசாயம் செய்தேன். ஆனா வருஷம் போகப் போக என் கோபம் குறையும் போது உன்னோட உழைப்பு என் கண்ணில் பட்டுச்சு. உனக்கு இருந்த உழைப்பு ஏன் இவ்வளவு பெரிய மனுஷன் என்கிட்டே இல்லைன்னு தோனுச்சு.
அதோட நீ ஸ்கூல் பிள்ளைகளை எல்லாம் கூட்டிட்டு வந்து அவங்களுக்கும் விவசாயம் தெரியணும்னு நினைச்ச பாரு…? அது தான் என்னோட முழு மாற்றத்துக்கும் காரணம். இப்ப படிக்கிற பல பிள்ளைகளுக்கு விவசாயம்னா என்னனே தெரியாது. அவங்களுக்கு நீ விவசாயத்தோட அருமையைச் சொல்லி புரிய வச்சு அவங்கள்ள யாராவது விவசாயம் செய்துற மாட்டாங்களான்னு நீ நினைக்கிற. ஆனா எனக்கு விவசாயம்னா என்னன்னு தெரியும். சில நேரம் கஷ்டப்பட்டாலும் பல நேரம் நமக்கு முத்து முத்தா வர விளைச்சலை வச்சு நமக்குப் பணத்தையும் தருது.
அதே நேரம் உலகத்துக்கே ஆதாரமான சாப்பாட்டுக்குத் தேவையான தானியங்களை நாம தான் உருவாக்குறோம்னு நினைக்கும் போது பெருமையாவும் இருக்கு. அந்தப் பெருமையைத் தந்தது இந்த விவசாயம் தான். இப்ப நான் மாருதட்டி சொல்லிக்குவேன். நான் ஒரு விவசாயின்னு” என்று உணர்ச்சிக்கரமாகச் சொல்லி முடித்தார்.
அவர் கடைசி வார்த்தையைச் சொல்லி முடிக்கும் போது எல்லாரும் லேசாகக் கை தட்டினார்கள்.
கை தட்டி முடித்த நாயகம் “இப்பதான் மருதா எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. உன்கிட்ட இந்த மாற்றம் வரணும்னு தான் எதிர்பார்த்தேன். இப்படி நீ மாறுனதுக்காவே நாம பேசாம இருந்தது தப்பே இல்லைன்னு தான் தோணுது” என்றார்.
“ஹ்ம்ம்… என்னவோ போ! கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குனு நீ சொல்ற. சரிதான்…!” என்ற மருதன் அரசுவிடம் “இன்னும் நீ நிலத்தை ஏன் விக்க விடலைனு முழுசா சொல்லலையே மருமகனே! நான் அவனும் விவசாயம் செய்யப் போறான்னு நினைச்சுதான் அவன்கிட்ட விக்க நினைச்சேன். ஆனா நீ சொல்றதை பார்த்தா வேற காரணம் இருக்கும் போலயே! என்ன காரணம் அது?” என்று கேட்டார்.
“ஆமா மாமா! அவன் அப்படிச் சொல்லித்தான் இடம் கேட்டுருக்கான். அதே போல ஒவ்வொருத்தர்கிட்டையும் ஒரு காரணம் சொல்லிருக்கான். என் பிரண்டு இரண்டு பேரு அந்த ஊர் காரங்க தான் அவங்க மூலமா எனக்குச் செய்தி வந்துச்சு. அதோட நீங்க விக்கப் போறதும் தெரிஞ்சதும் திரும்ப நீங்க ஒரு பிரச்சனைல மாட்டிக்கக் கூடாதுன்னு தான் மொத அவனைக் கூப்பிட்டு ஒரு பொய்யான காரணம் சொல்லி அவன் வாங்குறதை தள்ளி போட்டேன். அப்புறமா தான் இன்னும் நல்லா விசாரிச்சு பார்த்ததுல தான் உண்மையான காரணம் தெரிச்சது. அவன் வாங்க முயற்சி செய்தது ரியல் எஸ்டேட்க்காக” என்றான்.
“என்ன? என்னய்யா சொல்ற?” என்று நாயகமும், மருதனும் திடுக்கிட்டு கேட்க…
“ஆமாப்பா… இடத்தை வாங்கிப் போட்டு சுத்தி வளச்சு அவங்க எடம்னு போர்டு வச்சு குறைஞ்ச விலைக்குத் தாறோம்ன்னு விளம்பரம் பண்ணி கூவி கூவி விக்கத் தான் இந்த ஏற்பாடு” என்று கோபத்துடன் சொன்னான்.
“என்ன மருமகனே இப்படிச் சொல்ற? நான் இதை எதிர்பார்க்கவே இல்லையே” என்று மருதன் பதற…
“அதான் மாமா அவனுங்க சாமர்த்தியம். அதும் ஒரே ஆளை வச்சு இடம் வாங்கினா எல்லாருக்கும் ஈசியா தெரிஞ்சிரும்னு வேற, வேற ஆளை ஏற்பாடு பண்ணி ஒரு குழு போல வேலை செய்துருக்கானுங்க. அதுவும் அடுத்த நிலத்துக்காரங்களுக்குச் சந்தேகம் வராத மாதிரி பேசிருக்கானுங்க. என் பிரண்டு காதுக்கு இந்த விஷயம் வரவும் அவங்க திட்டத்தில் உங்க இடமும் வரவும் என் கிட்ட சொன்னாங்க.
அப்புறம் நானும் என் சில நண்பர்களும் விசாரிச்சு பார்த்ததுல ஒரு பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனிகாரன் தான் இதுக்குக் காரணம்னு தெரிய வந்தது. விவசாய நிலம் இந்த மாதிரி ரியல் எஸ்டேட்காரன் கைக்குப் போய் நாசமாகக் கூடாதுனு சில வேலைகள் எல்லாம் செய்தோம். எங்க இளைஞர் விவசாய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்தக் கம்பெனி ஓனரை பார்த்து பேசி அவங்க நிலம் வாங்குறதை நிறுத்தினோம்” என்றான்.
“நிறுத்தியாச்சா? எப்படிப்பா? ஆனா இப்படி விஷயம் நடந்ததே வெளியே தெரியலையே?” என்று நாயகம் புரியாமல் கேட்க…
“ஆமாப்பா… வெளியே விஷயம் வர விடலை நாங்க. அவனுங்க எப்படி மறைமுகமா வேலை பார்த்தானுங்களோ அதையே தான் அவங்க வழியில் நாங்க செய்தோம். அந்தக் கம்பெனி ஓனர் நிலத்தை வாங்குறதை நிறுத்த முடியாதுன்னு சட்டம் பேசினான். அவனுக்குப் பேசி புரியவச்சு அவனைச் சரி கட்ட எங்களுக்கு மூனு வாரம் ஆச்சு” என்றான்.
“நல்ல வேலை செய்தீங்கயா” என்று நாயகம் நிம்மதி பெருமூச்சு விட…
‘இதுக்குத் தான் நீ எடத்தை விக்க விடலையா? நீ சூப்பர் மாமா’ என்பது போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நங்கை.
மருதன் சிலையாய் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். அவரை உலுக்கிய அரசு “என்னாச்சு மாமா?”என்று கேட்டான்.
அவன் உலுக்கலில் சுதாரிப்புக்கு வந்தவர் “அது என்ன மருமகனே எல்லாப் பயலும் என்னையே குறி வச்சு வாரனுங்க. பத்து வருஷத்துக்கு முன்ன அந்தச் சுந்தரம் பைய என்னென்னமோ சொல்லி என்னைக் குழப்பி விட்டான்.
இப்ப நான் நிம்மதியா விவசாயம் பார்த்துப் பொழப்பை ஓட்டலாம்னு பார்த்தா இப்பவும் இவனுங்க என் வழியிலேயே வாரானுங்க. அவனுங்களுக்கு எல்லாம் என்னைப் பார்த்து எப்படித் தெரியுது?” என்றவர் தொடர்ந்து கோபத்தில் எதுவோ சொல்ல வந்தவர் கப்பென வாயை மூடினார்.
அவர் என்ன பேச வந்திருப்பார் என்பது புரிந்த அரசு அவரை முறைத்தப்படி ‘அந்தப் பயம் இருக்கட்டும்’ என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
பெண்கள் தலையைக் குனிந்து கொண்டு நமட்டுச் சிரிப்பு ஒன்றை சிந்தினர்.
“ஹா…ஹா…! உன் மருமகனுக்கு நல்லா பயப்படுற மருதா” என்று சிரித்தார் நாயகம்.
“வேற என்ன செய்ய? என்னோட ஒரே மருமகன் ஆச்சே!” என்றவர் “ஆனாலும் எல்லாப் பயலுக்கும் என்னைப் பார்த்தா கேனை பய போலத் தெரியுதா? அம்புட்டு பயலும் என்னை மாட்டிவிடுறானுங்க” என்று புலம்பினார்.
“நீ கேனை இல்ல மாமா அப்பாவி. யார் என்ன சொன்னாலும் நம்பிடுற. எதையும் முழுசா ஆராயாம சட்டு சட்டுன்னு முடிவு எடுத்துட்டு பின்னாடி வருத்தப்படுற. அதான் உன்னோட வீக்னஸ். இனி எதைச் செய்தாலும் அதுக்குப் பின்னணில என்ன இருக்குன்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்த்துட்டு முடிவெடு. அதான் உனக்கு மட்டும் இல்லை, எல்லாருக்கும் நல்லது. எதையும் செய்துட்டு அப்புறம் வருத்தப்படுறதை விட முன்னாடியே யோசிச்சு செயல் படுத்துறது நல்லது” என்றான்.
“நீ சொல்றதும் சரித்தான்ய்யா. இனி எதையும் யோசிச்சே செய்றேன்” என்ற மருதன் தொடர்ந்து “ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லைய்யா? அது ஏன் சில பேர் விவசாய நிலத்தை வாங்கவே படையெடுத்து வாறாங்க? அவனுங்க அப்படி வர்றது மட்டும் இல்லாம ஊருக்குள்ள பிரச்சனையையும் இழுத்து விட்டுட்டு போய்டுறானுங்க” என்று எரிச்சலுடன் சொன்னார்.
“ஹ்ம்ம்…! என்ன செய்ய மாமா? எனக்கும் அந்த வருத்தம் இருக்கு. விவசாய நிலத்தை எப்படி எல்லாம் அழிக்க முடியுமோ அப்படியெல்லாம் அழிக்க அத்தனை வழியிலேயும் அதைச் செய்துக்கிட்டு தான் இருக்காங்க. இப்ப நம்ம கண்ணு பட நடந்த இரண்டு பிரச்சனைல இருந்து நம்ம ஊரும், நம்ம பக்கத்து ஊரும் தப்பிச்சிருக்கு. ஆனா எல்லா நேரமும் எல்லா ஊரும் அப்படித் தப்பிக்க முடியுறது இல்லை. ஒருத்தன் போனா இன்னொருத்தன்னு நிலத்தை அழிக்கப் படையெடுத்து வந்துக்கிட்டு தான் இருக்காங்க.
அவங்க கைக்கு நிலம் போய் நாசமா போகாம இருக்கணும்னா விவசாயியா இருக்குற நாம தான் விழிப்புணர்வா இருக்கணும். நிலத்தை வச்சுப் பிசினஸ் பண்றவங்களுக்குத் தரிசு நிலமும் ஒண்ணுதான், விவசாய நிலமும் ஒண்ணுதான். அவங்க கண்ணுக்கு இந்த நிலத்தில் இருந்து எப்படி எல்லாம் பணத்தைப் பெருக்கலாம்னு யோசனை வருமே தவிர, இது விவசாய நிலம் இதை அழிச்சா நாளைக்கு நம்ம தலைமுறைக்குத் தேவையான தானியம் எப்படிக் கிடைக்கும்னு யாரும் யோசிக்கிறது இல்லை.
பணம், விஞ்ஞானம்னு அதுக்குப் பின்னாடி ஓடுறவங்களுக்கு அவங்க ஓட தேவையான ஆதாரமே சாப்பாடு தான்னு நிறையப் பேருக்கு உரைக்க மாட்டீங்குது. அந்தச் சாப்பாட்டை நமக்குக் கிடைக்க ஆதாரமா இருக்குற நிலத்தின் அருமை பலருக்கு புரிய மாட்டீங்குது. அதுக்குத் தான் நாளைய தலைமுறையா இருக்குற பள்ளிக்கூடப் பிள்ளைகளை வரவச்சு அவங்களுக்கு விவசாயத்தின் அருமைகளைப் புரிய வைக்க முயற்சி பண்றேன்.
அந்தப் பிள்ளைங்க எல்லாம் பலரும் பல வேலைக்குப் போகலாம். அப்படி என்ன வேலைக்குப் போனாலும் கொஞ்சமாவது விவசாயத்தோட அருமை அவங்க மனசில் பதியட்டும் தான் இந்த ஏற்பாடு” என்று சொல்லி முடித்தான் தமிழரசன்.
“நீ செய்றது ரொம்ப நல்ல காரியம் ய்யா. பாரு விவசாய நிலத்தோட அருமை ஒரு விவசாயியான எனக்கே புரியாம தான நிலத்தை விக்கணும்னு அந்தக் குதி குதிச்சு எடுத்து சொன்ன நாயகத்தோட சண்டை போட்டுன்னு எத்தனை பிரச்சனையை இழுத்து விட்டேன். அப்படியிருக்கும் போது எங்கயோ சொகுசான வாழ்க்கை வாழற நிலத்தை வச்சுப் பிசினஸ் பண்றவங்களுக்கு எப்படிப் புரிய போகுது” என்று வருத்தத்துடன் மருதன் சொன்னார்.
“நீ பரவாயில்லை மருதா இப்பவாவது விவசாயத்தோட அருமை புரிஞ்சு மாறிட்ட. ஆனா சிலர் பட்டண வாழ்க்கைக்கும், சில பிள்ளைங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிறது தான் கவுரவம்னு அவங்க நிலத்தை எல்லாம் ஏதோ ஒரு ரியல் எஸ்டேட் காரனுக்கும், இல்ல விவசாயம் இல்லாத வேற உபயோகத்துக்கும் வித்துட்டு போயிடுறாங்க. அவங்களுக்கு எல்லாம் விவசாய நிலத்தை அழிக்கிறது சுலபம். ஆனா ஒரு விவசாய நிலத்தை உருவாக்குறது எவ்வளவு கஷ்டம்னு புரியுறது இல்லை” என்று வருத்தத்துடன் தன் மன ஆதங்கத்தைப் பகிர்ந்தார் நாயகம்.
“உண்மைதான் ப்பா. விவசாய நிலத்தை விக்கணும்னு நினைக்கிறவங்க இன்னொரு விவசாயிக்கு வித்தாலும் பரவாயில்லை. ஆனா விவசாயம் இல்லாத வேற உபயோகத்துக்கு விக்கிறது ரொம்பத் தப்பு. அப்படி விக்கக் கூடாதுன்னு ஒவ்வொரு விவசாயியும் நினைக்கணும். அவங்க அதில் உறுதியா இருந்தாலே பல விவசாய நிலம் காப்பாத்தப்படும்.
அது மட்டும் இல்லாம விவசாயியே விக்கக் கூடாதுன்னு உறுதியா இருந்தாலும் சில பெரிய மனுஷங்க அந்த உறுதியை கடை பிடிக்க விடுறது இல்லை. ஏதோ ஒரு வழியில் அவங்களை மடக்கி விக்கத் தூண்டுறாங்க. விவசாயிக்கு இது போல எத்தனையோட தடைகள். அந்தத் தடைகளை நாம மட்டும் நினைச்சா தகர்த்தெரிய முடியாது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நினைச்சா தான் முடியும்” என்ற அரசு “மாமா நீ விக்கப் போன நிலத்தில் நான் சொல்ற சில வேலைகள் செய். உன் நிலம் எப்படிச் செழித்து வளருதுன்னு உன் கண்ணால பார்ப்ப” என்றான்.
“என்னய்யா சொல்ற? உண்மையாவா? என்னனு சொல்லு. உடனே வேலையை ஆரம்பிக்கிறேன்” என்றார் மருதன்.
அவருக்குத் தேவையான சில இயற்கை முறைகளைச் சொன்னவன் “இது போல எத்தனையோ வழிமுறைகள் இருக்கு மாமா. அதை நாம சரியா கடைபிடிச்சு செய்துட்டு வந்தாலே சில தரிசு நிலத்தைக் கூட விளைநிலமா நம்மால மாத்தி காட்ட முடியும்” என்றான்.
பின்பு சிறிது நேரம் விவசாயத்தைப் பத்தி பேசிக் கொண்டு இருந்தவர்களை “அப்படியே கல்யாண விஷயத்திலும் ஒரு முடிவுக்கு வந்துருங்க” என்று அம்சவேணி இடையிட்டு சொல்ல…
“நமக்கு ஒரு கவலைனா. அம்சாக்கு ஒரு கவலை” என்று வேணியைக் கேலி செய்த நாயகம் கல்யாண பேச்சை ஆரம்பித்தார்.
பெரியவர்கள் கல்யாண பேச்சில் மூழ்க, நங்கையைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தான் தமிழரசன்.