அழகி
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அழகி
எழிலன்பு
‘இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கிறேனே’ என்று கெஞ்சிய என் இமைகளுக்குச் செவி சாய்க்காமல், மெல்ல மெல்ல என் இமைகளைப் பிரித்தேன்.
அடித்துக் கொண்டிருந்த அலாரம், மணி ஆறு ஆகிவிட்டது என்று எனக்குத் தகவல் சொன்னது.
அதனை அமர்த்திவிட்டு, கட்டிலை விட்டு இறங்கிய நான், நேராக என் பிம்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியின் முன் சென்று நின்றேன்.
பெரிய கருவிழிகளும், எடுப்பான நாசியும், பளபளத்த கன்னங்களும் என் கருகரு வண்ணத்தை எடுப்பாகக் காட்டிக் கொண்டிருந்தன.
நான் அழகி தான்!
கண்ணாடியில் என் முகம் பார்த்து, பெருமையுடன் நினைத்துக் கொண்டேன்.
என்னை இப்போது யாராவது பார்த்தால், ‘இந்த நிறத்தை வைத்துக் கொண்டு உனக்கு இந்தப் பெருமை எல்லாம் தேவையா?’ என்று கேட்பார்கள்.
ஏன்? இந்த அழகுக்கு என்ன குறையாம்? என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரு குறையும் இல்லை.
நான் கருவண்ணத்தில் இருக்கிறேனே என்று என்றுமே கலங்கியது இல்லை.
ஏன் கலங்க வேண்டும்?
கருமை எனது தோலின் நிறம் தானே தவிர, அது என் அடையாளம் இல்லையே? என் அடையாளம் நான் தானே தவிர என் வண்ணம் அல்ல! பின்னே ஏன் கலங்க வேண்டும்?
ஆனால், என்னைப் பெற்றவளுக்கு நான் இப்படிச் சொன்னால் பிடிக்காது. சித்தாந்தம் பேசுகிறேன் என்பார்கள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இதில் என்ன சித்தாந்தம் வந்தது? என்று கேட்டால் அதற்கும் ஒரு பேச்சு விழும்.
ஏன் இந்தப் பேச்சு என்றால், எல்லாம் இந்தப் பாழாய் போன திருமணத்திற்குத் தான்.
என்னடா திருமணத்தை இவள் இப்படிச் சொல்கிறாளே… திருமணம் என்றாலே வெறுப்பவள் என்று நினைக்கிறீர்களா?
அது தான் இல்லை.
திருமண ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் எனக்கும் உண்டு.
அதற்காக எப்போது என்னை ஒருவன் கரம் பிடிப்பான் என்று ஏங்கி போயே இருக்க எனக்குப் பிடிக்காது.
ஆனால், அப்படி நினைக்க வேண்டும் என்பது தான் என்னைப் பெற்றவளின் விருப்பம்.
என் பிறப்பையும், இன்னாரின் பிள்ளையாய் நான் பிறக்க வேண்டும் என்று முடிவு செய்து என்னைப் படைத்த இறைவன், நான் இன்னாருக்கு தான் மனைவியாக வேண்டும் என்பதையும் எழுதி வைத்திருப்பான் தானே?
அப்படி எழுதி வைத்திருந்தால், கண்டிப்பாக என்னவன் என்னைத் தேடி வரப் போகிறான் என்பது தான் என் வாதமாக இருக்கும்.
“கயல் எழுந்திட்டியா?” அம்மாவின் சத்தம் சமையலறையிலிருந்து வந்தது.
நான் கண்ணாடியின் முன் நின்று என் அழகை ரசிப்பது என் அம்மாவிற்கு மூக்கில் வேர்த்துவிட்டது போலும். கண்ணாடியை பார்த்துப் பழிப்பு காட்டிவிட்டு, குளியலறைக்குள் புகுந்தேன் நான்.
குளித்துத் தயாராகி நான் வெளியே வந்த போது, எனது தங்கை அப்போது தான் தூங்கி எழுந்து முகத்தைக் கூடக் கழுவாமல் டைனிங் ஹாலில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, எனக்குக் காஃபி?” நானும் என் தங்கைக்கு எதிரே அமர்ந்து குரல் கொடுத்தேன்.
“வந்து எடுத்துட்டு போ…” அம்மாவின் பதில் தான் வந்தது.
“ம்ப்ச்” என்று எனக்குச் சட்டென்று சலிப்பு ஏற்பட, நானே எழுந்து உள்ளே சென்று காஃபியை ஊற்றிக் கொண்டேன்.
குளித்துத் தயாராகி வந்திருந்த என்னை, என் அம்மா மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தார்.
நான் ஒரு தோள் குலுக்கலுடன் வெளியே வந்து அமர்ந்து காஃபி குடிக்க ஆரம்பித்தேன்.
அப்போது வாக்கிங் சென்றிருந்த அப்பா வீட்டிற்குள் வந்தார்.
“குட் மார்னிங் பா, வாக்கிங் முடிச்சிட்டீங்களா?” நான் கேட்க,
“எஸ்டா கயல்…” என்றவர், என் அருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.
என்னையும், என் தங்கையையும் ஒரு பார்வை பார்த்தவர், “என்ன இது இப்படி வந்து உட்கார்ந்திருக்க? முகத்தைக் கூடக் கழுவாம உன்னைக் காஃபி குடிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?” என்று என் தங்கையிடம் அதட்டலாகக் கேட்டார் அப்பா.
“ச்சு, போங்கப்பா… எனக்கு எழுந்ததும் காஃபி குடிச்சால் தான் குடிச்சது போல இருக்கும்…” என்றாள் என் தங்கை.
“இப்படிச் சாக்கு போக்கு சொல்லாதே தேனு. இனி நீயும் அக்கா மாதிரி குளிச்சிட்டு வந்து தான் காஃபி குடிக்கணும்…” என் அப்பா கண்டிஷனாகச் சொல்ல, என் தங்கை தேன்மொழி என்னைக் கீழ் கண்ணால் பார்த்தாள்.
அவள் பார்வையைப் பார்த்ததும், அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்று எனக்குப் புரிந்து போனது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஆனாலும் நான் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல், காஃபியை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தேன்.
“அவளோட என்னைக் கம்பேர் பண்ணாதீங்கபா. அவள் குளிச்சிட்டு வந்தால் தான் கொஞ்சம் பார்க்கிற போல இருப்பாள். ஆனால், நான் அப்படியா? நான் குளிக்காம இருந்தாலும் அழகு தான்…” என்று அலட்டிக் கொண்ட படி என்னைப் பார்த்து கழுத்தை வெட்டிக் கொண்டாள்.
அவளின் பேச்சும், செயலும் என்னைச் சிறிதும் பாதிக்கவில்லை. இது எங்கள் வீட்டில் அடிக்கடி நடப்பது தான். எனக்கு இது புதிதில்லை என்பதால், அலட்சியமாக அதைக் கடந்தேன்.
“தேனு, என்ன பேசுற நீ? அவள் உனக்கு அக்கா. அவளை மரியாதையா பேசு…” என்று எனது தந்தை அவளை அதட்டினார்.
“இப்ப எதுக்கு அவளை அதட்டுறீங்க? அவள் அப்படி என்ன தப்பா சொல்லிட்டாள்? இருக்குறதை தானே சொன்னாள். கயல் உங்களை மாதிரி கண்ணங்கரேலுன்னு தானே இருக்காள். குளிச்சு சுத்த பத்தமா இருந்தால் தான், கொஞ்சம் பார்க்கிற போல இருக்காள். இல்லைனா கரிச்சட்டி மாதிரி இருப்பாள்.
அதனால் தான் அவளை நான் குளிக்காம ரூமை விட்டு வரக் கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன். அவளுக்கும் அப்படித்தான் தோனியிருக்கும். அது தான் என் பேச்சை மீறாம குளிச்சிட்டு வந்திருக்காள்…” என்று வேகமாகக் கிச்சனிலிருந்து வந்து என் தங்கைக்கு வக்காலத்து வாங்கினார் அம்மா.
“ஹாஹா…” என்று எனக்கு வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.
என் அம்மா அப்படித்தான். நான் விரும்பி செய்வதை என்னவோ அவர் சொல்லி அதற்குக் கட்டுப்பட்டுச் செய்தது போல் நினைத்துக் கொள்வார்.
எனக்குக் காலை, மாலை இரண்டு நேரமும் குளித்தால் தான் பிடிக்கும். எழுந்ததும் குளித்து விட்டால், எனக்கு அன்றைய நாளே புத்துணர்ச்சியாக இருக்கும்.
இதையும் கூட என் தங்கை, ‘நீ கருப்பாக இருப்பதால் தான் சும்மா சும்மா குளிச்சிட்டு இருக்க…’ என்று கேலி செய்வாள்.
சொல்லி விட்டு போ! எனக்கென்ன? நான் எப்படி இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். தினமும் நாலு வேளை குளித்தால் மட்டும் நான் வெள்ளையாகி போகிவிடப் போகிறேனா என்ன? என்று அலட்சியமாக நினைத்துக் கொள்வேன்.
அதோடு அம்மா இப்படிப் பேசுவதும் எனக்கு வருத்தத்தைத் தரவில்லை. இதுவும் எனக்குப் பழகிப் போனது தான். இப்படிச் சொல்லும் சிவந்த நிறமுடைய அம்மா எப்படித்தான் என் நிறத்தில் இருக்கும் தந்தையைக் கல்யாணம் செய்தார் என்று மட்டும் நான் அடிக்கடி நினைப்பேன்.
அம்மா ஒரு நாள் அதற்கும் பதில் சொன்னார். அவரின் அப்பாதான் பிடிவாதமாக அப்பாவுக்கு அம்மாவை கட்டி வைத்தாராம். அதற்கும் கூடச் சில நேரங்களின் செத்து போன தாத்தாவுக்கு அம்மாவிடமிருந்து திட்டு விழும்.
“இப்படி இரண்டு பிள்ளைகளுக்கும் வித்தியாசம் காட்டி பேசாதேன்னு உனக்கு எத்தனை முறை தான் சொல்லுது? அறிவு இருக்கா இல்லையா? கயல் என்னைப் போல் கருப்பா இருப்பது ஒன்னும் அவள் தப்பு இல்லை. உன்னைப் போல் தேனு சிவப்பா இருப்பது ஒன்னும் அவ்வளவு பெரிய சாதனையும் இல்லை…” என்று என் அம்மாவை கண்டித்துக் கொண்டிருந்தார் என் தந்தை.
“நீங்களும் தானே அவள் செய்றாள் நீயும் செய்யின்னு தேனுகிட்ட சொன்னீங்க? நான் சொன்னது மட்டும் குறைஞ்சி போயிடுச்சாக்கும்?” என்று என் அம்மாவும் சும்மா இல்லாமல் பதிலுக்குப் பேசினார்.
“நான் ஒன்னும் சின்னவளை மட்டம் தட்டி பேசலை. நல்ல பழக்கத்தைப் பழகுன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்…” என்று அப்பா அம்மாவை முறைத்தபடி சொன்னார்.
“நீங்க பேசினால் மட்டும் அது நல்ல பழக்கம். நான் பேசினால் மட்டும் அது மட்டம் தட்டுறதாக்கும்?” என்று அம்மாவும் பேச,
இவர்களில் இந்த வாக்குவாதம் இப்போதைக்குத் தீராது என்று எனக்குப் புரிந்து விட, நான் சத்தம் இல்லாமல் காலை உணவை கூடத் துறந்து விட்டு அங்கிருந்து எழுந்து வெளியே கிளம்பினேன்.
“ஏய், எங்கடி போற?” என்று அம்மா அந்த வாக்குவாதத்திலும் என்னைக் கண்டுவிட்டு கேட்டார்.
“எனக்கு வேலைக்கு நேரமாச்சுமா. நான் கிளம்புறேன்…” என்றேன்.
“நான் இன்னைக்கு உன்கிட்ட பேசணும். முதலில் இங்கே வா. வேலைக்கு இன்னைக்கு லீவு போடு…” அம்மா சொன்னதும் என் புருவத்தை யோசனையுடன் சுருக்கினேன்.
“என்னமா பேச போறீங்க? எதுவா இருந்தாலும் இப்ப சொல்லுங்க. என்னால் லீவு எல்லாம் போட முடியாது…” என்றேன்.
“நான் வேற என்ன பேச போறேன்? எல்லாம் உன் கல்யாண விஷயம் தான். உன் ஃப்ரண்டையும் வர சொல்லியிருக்கேன். இப்ப வந்துருவான். பேசிட்டு அப்புறம் நீ எங்க வேணுமானாலும் போ…” என்ற எரிச்சலுடன் சொன்ன அம்மாவை கேள்வியாகப் பார்த்தேன்.
இப்போது எதுக்கு என்னோட ஃப்ரண்டை வர சொல்லியிருக்காங்க? என் கல்யாண விஷயத்தில் அவன் கிட்ட அம்மா பேச என்ன இருக்கு? யோசித்துக் கொண்டே திரும்ப டைனிங் ஹால் போனேன்.
“அம்மா என்னப்பா சொல்றாங்க? சிவாவை ஏன் வர சொல்லியிருக்காங்க?” என் அப்பாவுக்கும் விஷயம் தெரியுமா என்று தெரிந்து கொள்ள அவரிடமே கேட்டேன்.
அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, என் பக்கம் திரும்பினார் அப்பா.
“என்ன தயக்கம்? சொல்லுங்க. இன்னும் எத்தனை நாளைக்குப் பொறுமையா இருக்க?” என்று அம்மாவும் அப்பாவை சொல்ல சொல்லி தூண்டினார்.
“அது வந்து கயல்…” அப்பா சொல்ல ஆரம்பித்த போது, எங்க வீட்டு காலிங்பெல் அடித்ததில் அப்பாவின் பேச்சு நின்று போனது.
“நான் போய்க் கதவை திறக்கிறேன்…” என்று எழுந்து ஓடினாள் என் தங்கை.
“ஹாய் இனிப்பு, குட்மார்னிங். என்ன இப்பத்தான் எழுந்தியா என்ன?” என்று என் தங்கையிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டே வந்தான் என் நண்பன் சிவா.
நானும் அவனும் காலேஜ் படித்த காலத்தில் இருந்தே நண்பர்கள்.
நட்பை கூட நிறத்தை வைத்து பிரித்தறியும் ஆட்களிடையே, என் நிறத்தை பார்க்காமல் என்னுடன் உண்மையான நட்பு பாராட்டியவன் தான் சிவா.
சிவாவின் வீடும், எங்கள் வீடு இருக்கும் தெருவில் தான் இருந்தது. அதனால், அவன் எங்கள் வீட்டிற்கும், நான் அவன் வீட்டிற்கும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செல்லுவோம்.
“நான் அப்பவே எழுந்துட்டேனாக்கும்…” என்று சொல்லிக் கொண்டே சிவாவை டைனிங் ஹாலுக்கு அழைத்து வைத்தாள் என் தங்கை.
“பார்த்தால் அப்படித் தெரியலையே? படுக்கையிலிருந்து நேரா எழுந்து வந்தது போல் இருக்கு. யார்கிட்ட பொய் சொல்லி ஏமாத்துற? அழுக்கு மூட்டை…” என்று அவளைக் கேலி செய்து சிரித்தான் சிவா.
“நானா அழுக்கு மூட்டை? நீங்க தான் அழுக்கு மூட்டை. தலையும் ஆளும் பாரு…” சிவா வெட்டியிருந்த லேட்டஸ்ட் மாடல் தலை முடியை காட்டி, அவனுக்குப் பழிப்பு காட்டினாள் என் தங்கை.
அவர்கள் இருவரும் அப்படித்தான். எதிரும் புதிருமாகத்தான் எப்போதும் சண்டை போடுவார்கள்.
அவர்கள் சண்டையை நானே பல நேரம் சுவாரசியமாகப் பார்ப்பேன். சிவா என்னிடமும் அப்படிப் பேசுவான் தான். ஆனால், எனக்குச் சும்மா சும்மா வாயடிக்கப் பிடிக்காது.
அதனால் தானோ என்னவோ, என் தங்கையுடன் சிவா நன்றாக வாயாடுவான்.
“ஹாய் அங்கிள், ஆன்ட்டி… குட்மார்னிங் கயலு. வேலைக்குக் கிளம்பிட்டியா என்ன?” என்று கேட்டுக் கொண்டே என் இன்னொரு பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சிவா.
“ஆமா சிவா. ஒன்பது மணிக்கு ஆபிசில் இருக்கணும். ஆனா, அம்மா தான் ஏதோ பேசணும்னு இழுத்துப் பிடிச்சி உட்கார வச்சுருக்காங்க…” என்றேன்.
“என்கிட்டயும் ஏதோ பேசணும்னு தான் ஆன்ட்டி வரச் சொன்னாங்க…” என்று என்னிடம் சொன்னவன், என் அம்மாவை பார்த்தான்.
“ஆமாப்பா சிவா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என்று அம்மா ஆரம்பிக்க, நானும் அவரைப் பார்த்தேன்.
“சொல்லுங்க ஆன்ட்டி…” சிவா அம்மாவிடம் கேட்க,
“உனக்கே தெரியும், நம்ம கயலுக்கு இதுவரை நிறைய வரன் வந்தது. ஆனால் ஒன்னும் கூடி வரலை. அதை நினைச்சா எனக்குக் கவலையா இருக்கு. ஆனா இவளோ அதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாம ஆபிஷிக்குப் போறதும் வர்றதுமா இருக்கா. இப்படியே எத்தனை நாள் இருக்க முடியும்? சின்னவளும் இப்போ படிப்பை முடிச்சுட்டாள். இனி அவளுக்கும் நாங்க பார்க்கணும்…” என்று பல நாள் புலம்பலை இன்று சிவா முன்னேயும் ஆரம்பித்தார் அம்மா.
“கவலைப்படாதீங்க ஆன்ட்டி. நம்ம கயலுக்கு என்ன குறை? அவளைப் புரிந்து கொண்ட மாதிரி கண்டிப்பா ஒரு நல்ல வரன் வரும்…” என்று சிவா சொல்லி வைக்க, நான் அவன் புறம் திரும்பி புன்னகைத்தேன்.
அவன் உதட்டிலும் என் புன்னகை தொற்றிக் கொண்டதை பார்த்தேன்.
“அவளுக்கு எந்தக் குறையும் இல்லைன்னு நாம தான் சொல்லிக்கணும். ஆனா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அப்படி நினைப்பாங்களா என்ன? இவள் போட்டோ பார்த்ததுமே, பொண்ணு ரொம்பக் கருப்பா இருக்கு, வேண்டாம்னு போய்டுறாங்க…” என்று அம்மா சலிப்பாகச் சொல்லிக் கொண்டார்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்று சிவாவிற்குத் தெரியவில்லை போலும். அமைதியாக இருந்தான். என்னை இரக்கத்துடன் ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டான்.
‘உன் இரக்கம் ஒன்னும் எனக்கு வேண்டாம் போடா…’ அவனைப் பார்த்து தலையைச் சிலுப்பினேன்.
என் மீது இரக்கம் காட்டும் அளவுக்கு என்ன குறைந்து விட்டேனாம் நான்?
“அதுதான்…” என்று இழுத்து என்னுடைய கவனத்தையும், சிவாவின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினார் அம்மா.
“என்ன ஆன்ட்டி, சொல்லுங்க…” சிவா அக்கறையுடன் கேட்டான்.
“என்னங்க, என்ன அப்படியே பார்த்துட்டு இருக்கீங்க? நீங்க கேளுங்க…” சிவாவுக்குப் பதில் சொல்லாமல், அப்பாவை பேச்சில் இழுத்தார் அம்மா.
என்னடா இது? அப்படி என்ன பேச போறாங்க? என்ற கேள்வியுடன் இருவரையும் நான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பா என்னையும், சிவாவையும் தயக்கத்துடன் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது.
“நீயே கேளு…” அம்மாவின் பக்கமே பந்தை திருப்பிப் போட்டு விட்டார் அப்பா.
‘யாராவது ஒருத்தர் கேட்டு முடிங்கபா, எனக்கு வேலை இருக்கு…’ என்று எனக்குக் கத்த வேண்டும் போல் இருந்தது. எனக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற அவசரம். எனது அலுவலகம் தூரமாக வேறு இருந்தது.
“நீங்களே சொல்லுங்க ஆன்ட்டி…” என்று சிவா கேட்கவும், இப்போதாவது அம்மா கேட்பாரா என்று அவரைப் பார்த்தேன்.
“தப்பா எடுத்துக்காதே சிவா…” என்று அம்மா தயக்கத்துடன் மெல்ல ஆரம்பித்தார்.
சிவா தப்பா நினைக்கிற போல அப்படி என்ன கேட்க போறாங்களாம்? எனக்கு ஒரே குழப்பமாகிப் போனது.
“என்னமா இது…” என்று நான் ஆரம்பிக்க,
“நீ கொஞ்ச நேரத்துக்குப் பேசாதே கயலு…” அம்மா என்னை அடக்கினார்.
‘அட போங்கப்பா!’ என்று எனக்குச் சலிப்பு தான் வந்தது.
“அது வந்து சிவா, கயலை பத்தி உனக்கு எல்லாம் தெரியும். நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. நல்லா படிச்சிருக்கா. ஒரு நல்ல பெரிய கம்பெனியில் இண்டிரியரா வேலை பார்க்கிறாள். குணமும் ஒரு குறையும் சொல்ல முடியாது…” என்று அம்மா என்னைப் பற்றிச் சிவாவிற்குத் தெரியும் என்று சொல்லிக் கொண்டே தெரிந்ததையே சொல்லிக் கொண்டிருந்தார்.
“இதெல்லாம் எனக்கே தெரியுமே ஆன்ட்டி?” சிவாவும் அதையே கேட்டான்.
“அதான் சொல்ல வர்றேன் சிவா. கயலை பத்தி உனக்குத் தெரியும். அவள் நிறம் ஒன்னு தான் அவளுக்குக் குறை. மத்தபடி…” என்று இழுத்தவர், “அதனால… உனக்கு விருப்பம் இருந்தால் நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ…” என்று அம்மா சட்டென்று விஷயத்தைப் போட்டு உடைக்க,
“அம்மா…” என்று நான் முதல் ஆளாக அதிர்ந்து கத்தினேன்.
சிவா கத்தவில்லையே தவிர எனக்குக் குறையாத அதிர்ச்சி அவன் முகத்திலும் பார்த்தேன்.
“சிவா, என் ஃபிரண்ட் மா. நீங்க என்ன கேட்குறீங்கன்னு புரிந்து தான் கேட்குறீங்களா?” நான் குரலை தாழ்த்தாமல் கேட்டேன்.
“புரியாம என்ன? புரிந்து உன் அப்பாகிட்டயும் கலந்து பேசிட்டு தான் கேட்குறேன்…” அம்மா அப்படிச் சொன்னதும் நான் அப்பாவை பார்த்தேன்.
அவரும் ஆமோதிப்பது போல் என்னைப் பார்த்து வைத்தார்.
முதல் முறையாகத் தோற்றுப் போனதாக உணர்ந்தேன். சற்று முன் கூட நிற பாகுபாடு பார்க்க கூடாது என்று அறிவுரை சொன்ன அப்பா, இப்போது அவரே என் நிறத்திற்கு ஒருவனும் திருமணம் செய்ய முன் வர மாட்டான் என்று முடிவே செய்து விட்டார் போலும்?
இப்போதும் எனக்கு அலட்சியமாகச் சிரிக்கத் தோன்றியது.
சிவாவை பார்த்தேன். அவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பதை அவன் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்.
உண்மையான நட்புடன் பழகிக் கொண்டிருப்பவனிடம் போய் இப்படிக் கேட்டால் அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வான்? என்று நினைத்துக் கொண்டு அவனின் கையைப் பற்றி மென்மையாக அழுத்தினேன்.
என் கை அழுத்தம் உணர்ந்து என் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
நான் அவனைப் பார்த்து நட்புடன் சிரித்தேன்.
என் சிரிப்பு அவனிடம் தொற்றவில்லை. ஆனால் அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சி இப்போது இல்லை என்றதும், எனக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.
“நீ சொல்லுப்பா சிவா… நான் இப்படிக் கேட்டது உனக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும். ஆனா, உன் ஃப்ரண்ட் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருப்பா. நாங்களும் அவளுக்கு ஒரு வரன் வரும் வரும்னு எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். ஆனா ஒன்னும் அமைய மாட்டிங்குது. அதை நினைச்சா இப்ப எல்லாம் என்னால் நிம்மதியா தூங்க முடியலை…” என்ற அம்மாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வந்ததைக் கண்டேன்.
அம்மாவின் கவலையும், கண்ணீரும் நிஜம் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதுக்காகச் சிவாவிடம் இப்படிக் கேட்கலாமா?
“உங்க வருத்தம் எனக்குப் புரியுது ஆன்ட்டி. ஆனா…” என்று சிவா திணறியபடி பேசுவதைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. அவனின் உள்ளங்கையை இன்னும் அழுத்தமாகப் பிடித்தேன்.
“எதுவா இருந்தாலும் சொல்லுப்பா சிவா…” அம்மா சொல்ல,
“எனக்கு… எனக்கு… தேனுவை பிடிச்சிருக்கு ஆன்ட்டி. அவளும், நானும் காதலிக்கிறோம். கயலுக்குக் கல்யாணம் ஆனதும் சொல்லலாம்னு இருந்தோம். நீங்க இப்படிக் கேட்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்று சிவா சொன்னதும், என் கண்களைப் பெரிதாக விரித்தேன்.
‘அட! எனக்கே தெரியாம இது எப்போ?’ என்று சந்தோஷம் கலந்த அதிர்ச்சி தான் எனக்கு.
வேகமாக என் தங்கையைப் பார்த்தேன். கைகளைத் தவிப்புடன் பிசைந்து கொண்டு அம்மா, அப்பாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஓஹோ! அது தான் சாரும், மேடமும் எங்க முன்னாடி சண்டை போடுற மாதிரி காட்டிக்கிட்டாங்களோ? பிராடுங்க…’ நான் மகிழ்ச்சியுடன் சிவாவுக்கு வாழ்த்து சொல்ல நினைத்து அவன் புறம் திரும்பினேன்.
ஆனால், அடுத்து அவன் பேசியதை கேட்டதும் என் முகத்தில் இருந்த மகிழ்ச்சி எல்லாம் இருந்த இடம் இல்லாமல் ஓடி போனது.
“கயல் கூட நான் பழகியது எல்லாம் சும்மா தான் ஆன்ட்டி. தேனுக்கிட்ட பேச எனக்கு வேற வழி தெரியலை. அதுக்காக நீங்க அவளைக் கட்டிக்கவே சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை…” என்று சிவா சொன்னது நிஜம் தானா என்று கண்களைச் சிமிட்டி சிமிட்டி உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தேன்.
உண்மைதான் என்பது போல் சிவாவின் முகம் தீவிரத்துடன் இருந்ததைப் பார்த்து, அதுவரை அவன் கையைப் பற்றி இருந்த என் கையைப் பட்டென்று விலக்கினேன்.
முணுக் முணுக் என்று என் மனம் வலித்தது.
அவன் என்னை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். ஃப்ரண்டாகப் பார்த்தவளை வாழ்க்கை துணையாகப் பார்க்க முடியாது என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால் அப்படி எதுவும் சொல்லாமல், என் தங்கைகாகத் தான் என்னுடன் பழகினான் என்று சொல்லிவிட்டானே…
அப்போது இத்தனை நாட்களும், நட்பு என்றதெல்லாம் பொய்யா? என் தங்கையுடன் பழக, என்னைப் பயன்படுத்திக் கொண்டானா? என்னால் இதைத் தாங்க முடியவில்லை.
வலித்தது!
எல்லாரையும் போல, இவள் கறுப்பி… இவள் எனக்கு வேண்டாம் என்று என் முகத்தில் அடிப்பதை போல் சொல்லியிருந்தாலும் கூடச் சிறிதும் வருந்தியிருக்க மாட்டேன்.
அம்மாவும், அப்பாவும் அப்போ இந்தப் பையனையும் இவளுக்குக் கட்டி வைக்க முடியாதா? என்பது போல் என்னைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
என் தங்கை நான் அழுகிறேனா என்று பார்த்தாள் போலும்.
நான் ஏன் அழ வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்?
எனக்கு ஏமாற்றமும், வலியும் இருந்தது தான்.
ஆனால் அது நான் நட்பாக இருந்தவன் பொய்த்துப் போனான் என்பதற்காக இல்லை. அவன் நட்பு பொய்த்து போனதே என்பதால் மட்டுமே!
நட்பே இல்லாதவன் மேல் நட்பு வைத்திருந்த என்னை நினைத்தே நான் வருந்தினேன்.
அதுவும் சில நொடிகள் தான்! சிவாவின் அருகில் அமர்ந்திருப்பது கூட எனக்கு அருவெருப்பாக இருக்க, பட்டென்று எழுந்து டேபிள் மேல் வைத்திருந்த என் கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தேன்.
அம்மா என் பின்னால் ஓடி வந்தார். வாசல் படியில் இறங்கியதும், என் கையைப் பிடித்து வெளியே ஓரமாக இழுத்துப் போனார்.
நான் அமைதியாக அம்மாவை பார்த்தேன்.
“சாரிடி. சிவாவும், தேனுவும் லவ் பண்றாங்கன்னு எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படிக் கேட்டுருக்கவே மாட்டேன். சிவா மூலமாவது உனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நினைச்சேன். ஆனால், இப்ப அதுக்கும் வழி இல்லாம போயிருச்சு. அதுக்காக நீ ஒன்னும் கவலைப்படாதேடி. நாங்க உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்ப்போம்…” அம்மா பேசிக் கொண்டே போனார்.
நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என்ற கவலையோ, வருத்தமோ, வேதனையோ, வலியோ எனக்குச் சிறிதும் இல்லை.
எனக்கே எனக்கானவன் என்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது.
ஏனெனில்,
நான் அழகி தான்!