IP 2

சாரல் 2

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

டிய மறுத்த அந்த தலை முடியை ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை வாரிவிட்டு, துவைத்தும் அழுக்கு சரியாக போகாமல் இருந்த அந்த சட்டை பேன்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு, ஆயா வாங்கி வைத்திருந்த இட்லி வடகறியை தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, வொர்க்‌ஷாப் செல்ல தாயாரானான் ஆதவன்,

கையில் ஏதோ பாத்திரத்தோடு வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த பொன்னம்மா,  கிளம்புவதற்கு தயாராக இருந்த பேரனை பார்த்தப்படி, “ஆதவா கிளம்பிட்டியா?  ஒரு பதினோறு மணிக்கா வீட்டுக்கு வர முடியுமா நைனா,” என்று கேட்டார்.

“எதுக்கு ஆயா?”

“மீன்க்காரம்மா எறா எடுத்துட்டு வந்திருந்ததுன்னு வாங்கினேன். நம்ம செண்பகத்துக்கு எறான்னா பிடிக்குமே, அதான் அதுக்கும் சேர்த்து வாங்கினேன். செஞ்சு வச்சா நீ எடுத்துட்டு போவேன்னு தான் கேட்டேன்.”

“சரி ஆயா எடுத்து வை, நான் வந்து எடுத்துட்டு போறேன்.”

“அப்புறம் முடிஞ்சா, செண்பகத்தை வந்து என்னை பார்க்கச் சொல்லு, அவக்கிட்ட கொஞ்சம் பேசணும்,”

“அப்போ நீயும் ரெடியா இரு. உன்னையும் அங்க கூட்டிட்டுப் போறேன்.”

“இல்லப்பா, அது முக்கியமான ஒரு விஷயம் பேசணும், செண்பகம் இங்க வந்தா தான் சரியா இருக்கும், அதனால இதை சொல்லியே அவளை வரச் சொல்லு,

“சரி சொல்றேன்.” என்றவன், எதற்காக? என்று காரணமெல்லாம் கேட்கவில்லை. “வரட்டுமா,” என்று சொல்லி விடைப் பெற்றுக் கொண்டு  வொர்க்‌ ஷாப்பிற்கு கிளம்பினான்.

செண்பகம் பொன்னம்மாவின் ஒன்றுவிட்ட தங்கையின் பேத்தி, தன் கணவர் இறந்ததற்கு பிறகு உறவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக, தன் ஒன்றுவிட்ட சகோதரியின் குடும்பத்தோடு மட்டும் தான் பொன்னம்மா உறவாடிக் கொண்டிருந்தார். தன் தங்கை மகன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும், செண்பகத்திற்கு திருமணத்தை முடித்துவிட்டு, சென்னை புறநகர் பகுதியில் சிறியதாக வீடுகட்டி குடியேறிவிட்டார். அவர்கள் அருகிலிருந்தவரை அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு பொன்னம்மா சென்று வருவார்.

ஆனால் அவர்கள் தூரமாக போன பின்பு, முன்போல் அவருக்கும் உடல்நலம் ஒத்துழைக்காததால் அங்கு சென்று வருவதை குறைத்துக் கொண்டார். ஆனால் செண்பகம் திருமணமாகி அருகிலுள்ளதால், அவளை மட்டும் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவார்.  அதேபோல அவளுக்கு பிடித்தமானதை சமைத்தும் தன் பேரனிடம் கொடுத்தனுப்புவார்.

அப்படி செண்பகத்தின் வீட்டுக்கு போய் வர இருந்த போது தான் அவருக்கு ஒரு ஆசை தோன்றியது. செண்பகத்தின் நாத்தனார் வருணாவை பொன்னம்மாவிற்கு மிகவும் பிடிக்கும். பொன்னம்மா வீட்டிற்கு போனாலே, மிகவும் மரியாதையாக வாங்க பாட்டி என்று அழைப்பாள். அன்பாக பேசுவாள், அடிக்கடி அவரது உடல்நலத்தை விசாரிப்பாள். எந்தவித ஒரு அலட்டலுமில்லாமல் இனிமையாக பழகும் வருணாவை நினைத்து அவருக்கே ஆச்சர்யமாக இருக்கும், இதுபோல ஒரு பெண் தன் பேரனுக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும்? தன் பேரனின் வாழ்க்கையே நல்லப்படியாக மாறிவிடும். அப்படியெல்லாம் நினைத்துக் கொண்ட பொன்னம்மா, வருணாவை போல ஒரு பெண் என்கிற எண்ணம் மாறி, வருணாவே தன் பேரனுக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைபட தொடங்கிவிட்டார்.

ஆதவனுக்கு வருணா கட்டிக் கொள்ளும் முறை தான் வருகிறது. செண்பகத்திடம் உரிமையாக, “உன் நாத்தனாரை என்னோட பேரனுக்கு கொடு,” என்று பெண் கேட்கலாம் தான், ஆனால் அவனது படிப்பு, வேலை, வீடு இதெல்லாம் அதற்கு தடையாக இருக்கிறதே,

பட்டப்படிப்பு படிச்சிருக்க அந்தப் பொண்ணுக்கு, நல்லா படிச்ச, ஏ.சி ரூம்ல வேலைப் பார்க்கும் வரனை தான் வருணாவின் அண்ணன் தேடுவான். பார்க்க லட்சணமா, அவங்க இருக்கும் வீடோட, இன்னும் வசதியா பார்த்து தான் கொடுக்க நினைப்பான்.

WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.

அதை விட்டிட்டு டிங்கர் வேலைப் பார்க்கிற, எப்பவும் அழுக்கு துணியோட இருக்கும், அதுவும் இந்த மாதிரி ஏரியாவுல இருக்க ஆதவனுக்கு வருணாவை கட்டிக் கொடுக்க சம்மதிப்பானா?” இதெல்லாம் பொன்னம்மா அடிக்கடி யோசித்து பார்ப்பது தான், இருந்தும் படிப்பு இல்லன்னாலும், டிங்கர் வேலையாக இருந்தாலும், வருணாவை அவளது அண்ணன் வீட்டில் இருப்பதோடு வசதியாக ஆதவனால் வைத்துக் கொள்ள முடியும்,  அதற்கேற்ற தகுதி ஆதவனிடம் இருக்கிறது.

அதனால் தான் ஆதவனின் கடுமையான உழைப்புக்கு பொன்னம்மா எப்போதும் தடை சொல்வதில்லை. இவர்கள் இரண்டுப்பேருக்காக அவன் இவ்வளவு உழைக்க தேவையில்லை, ஆனால் அவனுடைய எதிர்காலத்திற்கு உழைத்து தானே ஆக வேண்டும். ஓரளவுக்கு நன்றாக சம்பாதித்தால் தானே, வருணாவின் அண்ணனிடம் கௌரவமாக சென்று பெண் கேட்கலாம், இப்படிப்பட்ட சிந்தனைகள் தான் சிலகாலமாக பொன்னம்மாவின் மனதில் ஓடுகிறது.

இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவருக்கு தோன்றியது. அவருக்கு வயதாகி கொண்டே போகிறது.  ஆதவனுக்கும் திருமண வயது வந்துவிட்டது. முன்பு செண்பகத்தை பார்க்கச் சென்ற போதே, வருணாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அதுபோல் ஏதாவது வரன் வருவதற்குள், ஆதவனுக்காக வருணாவை பெண் கேட்டுவிட வேண்டும் என்று அவர் உறுதியோடு இருந்தார்.

ருணா தன் அறையில் உள்ள டிவிடி ப்ளேயரில் எதையோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க, அவளை தேடி அவளது அறையில் எட்டிப் பார்த்த செண்பகம்,

“வருணா, இன்னைக்கு நிறைய துணி இருக்கறதால, மொட்டை மாடியில் காய வைக்கப் போறேன். என்னை தேடாதே” என்று சொல்ல, இன்னும் டிவிடி ஆராய்ச்சியில் ஈடுபட்டவள், “சரி அண்ணி,” என்று அந்த நிலையில் இருந்தப்படியே தலையாட்டினாள்.

தாழ்ப்பாள் போடாமல் சாதாரணமாக கதவை சாத்திய செண்பகம், மொட்டை மாடிக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறினாள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியோடு சேர்ந்து ஐந்து தளங்களை கொண்டது. அவர்கள் இருப்பதோ மூன்றாவது மாடி,

செண்பகம் அந்தப்பக்கம் போனதும், இடுப்பில் துப்பட்டாவை கட்டிக் கொண்டு, ப்ளேயரில் பாடலை ஒலிக்க விட்ட வருணா,

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம்

அதை ஏற்க நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண அலைகள்

ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்

கூடு பாயும் குறும்புக்காரன் அவனே

என்ற பாடலுக்கு தகுந்தாற்போல் நடனமாடினாள். அதே நேரம் உச்சி வெயில் மண்டையை பிளக்க, அவர்களின் குடியிருப்பு வாசலில் தன் இருச்சக்கர வாகனத்தை நிறுத்தினான் ஆதவன், தன் ஆயா கொடுத்துவிட்ட பை வண்டியில் தொங்கிக் கொண்டிருக்க, அதை கையில் எடுத்தவன், உள்ளே நுழைந்து, அங்கிருந்த லிஃப்ட்டை கூட சட்டை செய்யாமல், கொஞ்சம் வேகமாக படி ஏறினான்.

கூறவா இங்கு எனது ஆசையை

தோழனே வந்து உளரு மீதியை

கோடி கோடி ஆசை தீரும் மாலை

வீட்டு வாசலுக்கு வரும்போதே பாடலின் சத்தம் ஆதவன் காதுக்கு கேட்டது. கதவு லேசாக திறந்திருந்தது,  ஆதவன் அழைப்பு மணியை  அழுத்தினான்.

வீட்டு வாசலோடு வருணாவின் அறை வாசலும் திறந்திருந்தது. வீட்டில் அழைப்பு மணி அடிக்கும் சத்தத்தை கூட காதில் வாங்காமல் மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். 

“அக்கா எங்க? கதவு தொறந்திருக்கு, பாட்டு சத்தம் கேட்குது. ஆனா காலிங்பெல் சத்தம் கேட்டும் அக்கா வரலையே,” என்று நினைத்தவன், “அக்கா, அக்கா, செண்பகம் அக்கா,” என்று குரல் கொடுத்துக் கொண்டே மெதுவாக உள்ளே நுழைந்தான்.

தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே

வாழ்நாளில் மிச்ச பாரம் காதல் ஏந்துமே

நீண்டநாள் வந்த கனவு தீரவே

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

தீண்டினால் உன் இளமை ஊறவே

நீயில்லாத நிழலும் எனக்கு தொலைவே

அந்த பாடலின் ராகத்திற்கு தக்கவாறு, தானும் பாடிக் கொண்டே ஆடியப்படியே திரும்பியவள், தன் அறை வாசலில் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதவனை பார்த்து அதிர்ந்தாள். அவளின் கைகள் அனிச்சையாக இடுப்பில் இருந்த துப்பட்டாவை உருவியிருந்தது. அதை தன் மீது போர்த்தியப்படியே, அறையை விட்டு வெளியே வந்தவள், “என்ன வேணும்?” என்று அதட்டலோடு கேட்டாள்.

அவள் இடுப்பில் இருந்து துப்பட்டாவை உருவும் போதே, அவளிடம் இருந்து பார்வையை அகற்றியவன், அவள் வெளியில் வந்து கேள்வி கேட்கவும் தான் திரும்பி அவளை பார்த்தான்.

“செண்பகம் அக்கா எங்க?”

“அண்ணி அவங்க ரூம்ல, இல்ல கிட்சன்ல இருப்பாங்க,”

“அவங்க இருக்க மாதிரி தெரியலையே,” அவன்  சொல்லவும் தான், செண்பகம் துணி காய வைக்க மேலே சென்றது அவளுக்கு ஞாபகம் வந்தது.

“அண்ணி துணி காய வைக்க மேல போயிருக்காங்க, ஆமா வீட்ல யாரும் இல்லன்னா, அப்படியே வீட்டுக்குள்ள வந்துடுவீங்களா? காலிங்பெல் அழுத்தணும்னு உங்களுக்கு தெரியாதா?”

“நான் அடிச்சேன். ஆனா உனக்கு கேட்கல, அமைதியா இருந்தா, யாரும் இல்லை போலன்னு நினைச்சிருப்பேன். ஆனா பாட்டு சத்தம் கேட்கவே தான், ஆள் இருக்காங்கன்னு உள்ள வந்தேன்.”

“வீட்டுக்குள்ள வந்தாச்சு இல்ல, குரல் கொடுக்க வேண்டியது தானே,” கடுப்போடு கேட்டாள். எவ்வளவு நேரம் அவள் ஆடியதை பார்த்திருந்தானோ, பள்ளியிலும் கல்லுரியிலும் மேடை ஏறி ஆடியிருக்கிறாள், எத்தனையோ பேர் அவள் ஆட்டத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவளின் அறைக்குள் தனியாக ஆடிக் கொண்டிருக்க, அங்கே ஒரு ஆடவன் நின்று தன் ஆட்டத்தை பார்த்தது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்தவனாக, “சாரி, வாசலில் குரல் கொடுத்தேன். ஆனா உனக்கு கேட்கல,  அதான் உள்ள வந்தேன். அதுவும் இப்போ தான், உன்னை கூப்பிட குரல் கொடுக்கறதுக்குள்ள பார்த்துட்ட,” என்று சமாளித்தாலும், சில நிமிடங்கள் நின்று அவள் ஆட்டத்தை பார்த்தது, இன்னும் அவன் கண்ணுக்குள்ளேயே இருந்தது.

“சரி உட்காருங்க, அண்ணி இப்போ வந்திடுவாங்க,” என்றவள் திரும்ப அறைக்குள் புகுந்து கொண்டாள். அவனும் அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

உள்ளே வந்தவளுக்கு இன்னும் கூட ஒருமாதிரி இருந்தது. எப்போது அவன் வந்தாலும் இதுபோல் தான் அறைக்குள் புகுந்து கொள்வாள். ஆளும் அவன் தாடியும், அழுக்கு ட்ரஸ்ஸும் இப்படி தான் அவனை நினைக்க தோன்றும், பொதுவா பரட்டை தலை, தாடி இப்படியான தோற்றத்தை பார்க்கும்போது ரவுடி மாதிரி தோன்றும் அவளுக்கு, அப்படிப்பட்டவன் தன் அண்ணியின் சகோதரன். அதனாலேயே உரிமையோடு வீட்டுக்கு வருகிறான். ஆனால் அவனோடு சாதாரணமாக நட்போடு பழக அவளுக்கு தோன்றியதே இல்லை, இப்படித்தான் அறைக்குள் வந்து ஒதுங்கிக் கொள்வாள்.

வெளியில் உட்கார்ந்திருந்த அவனும் அப்படித்தான் காக்க காக்க சூர்யா மாதிரி, ‘அவளுக்கு என்ன பிடிக்கல, அவ பார்வையிலேயே அது தெரியுது,’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான். அப்போது துணியை காய வைத்துவிட்டு செண்பகம் வீட்டுக்குள் வந்தாள்.

“ஆதவா, எப்போடா வந்த?”

“இப்போ தான்க்கா, ஆயா உனக்கு எறா வாங்கி செஞ்சுது, அதான் உன்கிட்ட கொடுக்க சொல்லி அனுப்பிவிட்டுச்சு,” என்று அங்கே மேசை மேல் வைத்திருந்த பையை அவள் கையில் கொடுத்தான்.

“ஆயாக்கு ஏண்டா இந்த கஷ்டம், நானே செஞ்சுக்க மாட்டேனா?”

“அது உனக்கு கொடுக்கணும்னு நினைச்சு செய்யுது, அதுல அதுக்கு சந்தோஷம்.”

“ஆயா எப்படிடா இருக்கு, வந்து ரொம்ப நாளானா மாதிரி இருக்கு, எனக்கும் அப்படி இப்படி நகர முடியாதப்படி வேலை,”

“ஆயா நல்லா தான் இருக்கு, உன்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம், அதான் உன்னை வீட்டுப்பக்கம் வர சொல்லுச்சு… நீ வந்து பாரு,”

“சரி நாளைக்கோ இல்ல நாளைன்னைக்கோ வரேன்னு ஆயாக்கிட்ட சொல்லு,”

“சொல்றேன். சரி அப்போ நான் வரட்டுமா?”

“இருடா, டீ போட்டு எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு போ,”

“உன்கிட்ட கொடுத்துட்டு உடனே வீட்டுக்கு ஆயா சாப்பிட வரச் சொல்லுச்சு, ஷெட்ல வேற நிறைய வேலை இருக்கு, சாப்பிட்டு வொர்க்‌ஷாப் போகணும், அதனால இன்னொரு முறை வந்தா குடிக்கிறேன்.” என்றவன் உடனே கிளம்பிச் சென்றான். அவன் சென்றதும் வருணா அறையிலிருந்து வெளியே வந்தாள்.

தவன் வந்து போன இரண்டாம் நாள் செண்பகம் பொன்னம்மாவை பார்க்க வீட்டுக்கு வந்தாள்.

“அடடே செண்பகம் வா வா,” பொன்னம்மா மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

“எப்படி இருக்க ஆயா?”

“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உன்னோட புருஷன், நாத்தனாரெல்லாம் எப்படி இருக்காங்க?”

“எல்லோரும் நல்லா இருக்காங்க ஆயா, ஆமா என்கிட்ட ஏதோ பேசணும்னு ஆதவன்கிட்ட சொல்லி அனுப்பிச்சிருந்தியே, என்ன விஷயம்?”

“பேசலாம், இப்போ தான வந்த, சோறாக்கறேன். சாப்பிட்டு அப்புறம் நிதானமா பேசலாம்,” என்றவர், சமையல் வேலைப் பார்க்க ஆரம்பிக்க, செண்பகமும் அவருக்கு உதவி செய்தப்படியே பொதுவான விஷயங்களை பேசினர்.

பின் சமையல் முடித்ததும் செண்பகத்துக்கு சாப்பாடு பரிமாறும் போது ஆதவனும் சாப்பாட்டுக்கு வந்துவிட்டான். பின் அவனும் செண்பகத்தோடு சேர்ந்து சாப்பிட்டான். சாப்பிட்டதும் ஆதவன் திரும்ப வொர்க்‌ஷாப் கிளம்பிவிட்டான். அதன்பின் பொன்னம்மா நிதானமாக செண்பகத்திடம் பேச வேண்டிய விஷயத்தை பேச ஆரம்பித்தார்.

“செண்பகம், நம்ம ஆதவனுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சுல்ல, காலாகாலத்துல அவனுக்கு கல்யாணத்தை முடிச்சிட்டா, சாகற காலத்துல நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்.”

“எதுக்கு ஆயா இப்படியெல்லாம் பேசற, நம்ம ஆதவனுக்கு கல்யாணம் பண்ணணும்னு நீ நினைக்கிறது நல்லதுக்கு தான், ஆனா ஏன் சாவறதை பத்தியெல்லாம் பேசற, எது எப்போ நடக்கனும்னு இருக்கோ, அந்த நேரம் வந்தா எல்லாம் நல்லப்படியா நடக்கும் ஆயா, அப்படியே உனக்கு ஏதாவது ஒன்னுன்னா, நாங்கல்லாம் இல்லையா, ஆதவனை அப்படியே விட்டிடுவோமா?”

“நீங்கல்லாம் அவனை கைவிட மாட்டீங்கன்னு எனக்கு தெரியாதா என்ன? ஆனா அவனுக்குன்னு ஒரு துணை இருக்குன்னா, அது எனக்கு நிம்மதி தானே, ஏற்கனவே என் பையன் வாழ்க்கை நாசமா போனதை நேருக்கு நேரா பார்த்தேன். இப்போ அவன் இருக்கானா? இல்லையான்னு கூட தெரியல, அதான் என் பேரனோட வாழ்க்கை ஒரு நிலைக்கு வந்தா சந்தோஷமா இருக்கும்,”

“ம்ம் புரியுது ஆயா, கவலைப்படாத அப்பாக்கிட்ட சொல்லி, ஆதவனுக்கு ஒரு வரன் பார்க்க சொல்லுவோம், பார்க்க ஆரம்பிச்சா சீக்கிரம் கைகூடி வந்திடும், நீ கொள்ளுப் பேத்தி பேரனை பார்த்துட்டு தான் சாகப் போற,”

“என் பேரனுக்கு கல்யாணம் ஆகறத என் கண்ணால பார்த்தாலே போதும், மத்தப்படி எனக்கு இவ்வளவு பேராசையெல்லாம் இல்ல, ஆதவனுக்கு வரன் பார்க்கிற விஷயமா தான் உன்கிட்ட பேசணும்னு தான் நான் உன்னை வரச் சொல்லியிருந்தேன் செண்பகம்,”

“அதான் அப்பாக்கிட்ட சொல்றேன்னு சொன்னேனே ஆயா,  கூடவே நானும் என் வீட்டுக்காரர்க்கிட்டேயும் சொல்லி வைக்கிறேன். எல்லாம் சேர்ந்து பார்த்தா சீக்கிரம் கைகூடி வரும், இல்ல நல்ல தரகரா பார்த்துக் கூட சொல்லலாம், நம்ம ஆதவனுக்கு என்ன? அவனுக்கு பொண்ணுக் கொடுக்க நீ நான்னு போட்டி போடுவாங்க,”

“அப்போ நீ உன்னோட நாத்தனாரை நம்ம ஆதவனுக்கு கொடுப்பியா செண்பகம்,” பொன்னம்மா பட்டென்று தன் ஆசையை சொல்லவும், செண்பகம் அவரை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“அது ஆயா, இதுல நான் எதுவும் முடிவு எடுக்க முடியாது. வருணா கல்யாண விஷயத்துல அவர் தான் ஆயா முடிவெடுக்கணும்.”

“புரியுது செண்பகம், மாப்பிள்ளைக்கிட்ட இதைப்பத்தி பேசிப் பாரேன்.”

“அவர் இதுக்கு ஒத்துக்குவாரான்னு தெரியல ஆயா, வருணா கல்யாண விஷயத்துல அவருக்குன்னு சில ஆசைங்க இருக்கு, அப்புறம் வருணாவும் இதுக்கு சம்மதிக்கணுமில்ல, ஆதவன் பத்தாவது தான் படிச்சிருக்கான். வருணா டிகிரி முடிச்சிருக்கா, அப்புறம் இந்த ஏரியா அவருக்கு சுத்தமா பிடிக்காது, உன்னை பார்க்க வரேன்னு சொன்னாலே, “ஏன் உன்னோட ஆயா வந்து உன்னை பார்க்க மாட்டாங்களா? அவங்களால தனியா வர முடியலன்னா, உன் தம்பியை கூட்டிட்டு வரச் சொல்லு, இல்லை நானே போய் கூட்டிட்டு வரேன்னு” சொல்லுவார். அப்படியே அனுப்புனாலும், ரொம்ப நேரம் அங்க இருக்காத, சீக்கிரம் கிளம்பிடுன்னு சொல்லி அனுப்புவார், கொஞ்ச நேரம் போயிட்டு வர்றதுக்கே இப்படின்னா, தன் தங்கச்சிய இது போல ஒரு ஏரியால இருக்க ஆதவனுக்கு கட்டிக் கொடுப்பாரா ஆயா, அதனால இதெல்லாம் ஒத்து வராது.”

“நானும் இதெல்லாம் யோசிச்சிருக்கேன் செண்பகம், ஆனா ஆதவன் சம்பாதியம் பத்தி உனக்கு தெரியாததா? உன்னோட அப்பாவும் அவனும் ஒன்னா தானே இடம் வாங்கினாங்க, பணமும் சேர்த்து வச்சிருக்கான். நினைச்சா உடனே வீடு கட்டிடலாம், அதுவரைக்கும் நல்ல வீடாப்பார்த்து வாடகைக்கு குடி போகலாம், படிப்புங்கிற ஒன்னை தவிர, மத்த விஷயத்துல ஆதவனுக்கு என்ன குறை செண்பகம்,”

“அய்யோ ஆயா, ஆதவனை நானே குறை சொல்ல முடியுமா? ஆனா அவரும் வருணாவும் ஒத்துக்கணுமே? அதான் யோசிக்கிறேன்.”

“இங்கப்பாரு, நீதான் சொல்றவிதத்துல மாப்பிள்ளைக்கிட்ட சொல்லணும், இல்லன்னா சொல்லு, நானே வந்து மாப்பிள்ளைக்கிட்ட,பேசறேன்.”

“அய்யோ வேணா ஆயா, அவருக்கு கொஞ்சம் முன்கோபம் வரும், கோபத்துல உன்கிட்ட ஏதாச்சும் சொல்லிட்டா, அதனால நானே மெதுவா நேரம் பார்த்து பேசறேன்.” என்றவள், நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பினாள். 

ன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்த ஆதவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தரையில் அமரவும், பொன்னம்மா ஆயா அவருக்கு உணவு பறிமாறினார். அதை சாப்பிட்டப்படியே, “என்ன ஆயா, செண்பகம் அக்கா அப்புறம் எப்போ கிளம்புச்சு?” என்று அவன் கேட்க,

“சாயந்தரம் டீ குடிச்சிட்டு கிளம்பிட்டா நைனா,” என்று பொன்னம்மா ஆயா பதில் கூறினார்.

“என்ன? ஏதாவது முக்கியமான விஷயமா? இங்க எதுக்கு அக்காவை வரச் சொன்ன?” என்று அவன் கேட்க,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நைனா, சும்மா தான், பார்க்கணும்னு தோனுச்சு, அதான்,” என்று பொன்னம்மா கூறினாலும், ‘எப்போதும் தானே சென்று பார்ப்பவர், இன்று இங்கு எதற்காக வரவைத்திருக்கிறார்?’ என்று புரியாமல் குழம்பியவன், அமைதியாக சாப்பிட்டான்.

பின் ஞாபகம் வந்தவனாக, “ஆயா, நம்ம ராஜூ இருக்கானே, அவனுக்கு கல்யாணமாம், வொர்க்‌ஷாப்க்கு வந்து பத்திரிக்கை வச்சிட்டு போனான். கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் தான் இருக்கு, உன்னையும் கண்டிப்பா கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரணும்னு சொல்லிட்டான்.” என்று சொல்ல,

“அப்படியா ரொம்ப சந்தோஷம், நான் எங்க வர்றது, நீ போயிட்டு வா நைனா,” என்றவர்,

“ராஜூக்கு உன்னை விட வயசு கம்மி தானே, அவன் கொஞ்சநாளில் குடும்பஸ்தனா ஆகப் போறான். அதேபோல உனக்கும் ஒரு கல்யாணத்தை செஞ்சு வச்சா, நான் நிம்மதியா என் கண்ணை மூடுவேன்.” என்றார்.

அதில் கோபம் வந்தவனாக ஆதவனோ, “ஆயா எதுக்கு சாவை பத்தியெல்லாம் பேசற, நீ இப்படி பேசறது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இனி இப்படியெல்லாம் பேசினா எனக்கு கெட்டகோவம் வரும் பார்த்துக்க,” என்று  கூற,

“சரி, ரொம்ப நாள் இருக்கேன் போதுமா? அதுக்காக உனக்கு கல்யாணம் செய்யாம இருக்க முடியுமா? எனக்குன்னு இருக்க ஒரே கடமை அதானே, சீக்கிரம் உனக்கு கல்யாணம் முடிச்சு, ஒரு கொள்ளுப் பேரனையோ, பேத்தியையோ பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார்.

“கல்யாணம் தானே, இன்னும் கொஞ்சநாள் போகட்டும்னு செய்துக்கலாம், ஆமாம் அதுக்கு தான் செண்பகம் அக்காவை வரச் சொன்னீயா?” என்று அவன் சரியாக கண்டுப்பிடித்துக் கேட்க,

“ஆமாம், ஏதாவது நல்லப் பொண்ணா பார்க்கா சொல்லி சொன்னேன். அவளும் சரி பார்க்கிறேன்னு சொல்லியிருக்கா,” என்றவர்,

“செண்பகத்தோட நாத்தனார் வருணா இருக்காளே, அவளும் உனக்கு கட்டிக்கிற முறைதான் வருது, அவங்களுக்கும் விருப்பம்னா,” பொன்னம்மா ஆயா சொல்லிமுடிக்கவில்லை.

“ஆயா ஏதாவது புரிஞ்சுதா பேசறீயா? அந்த பொண்ணு நல்லா படிச்சிருக்கு, அதை நான் கல்யாணம் செய்துக்கணுமா? செண்பகம் அக்காக்கிட்ட இப்படி ஏதாவது உளரி வச்சீயா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

அப்போதே அவன்  அவர்கள் விட்டிற்குச் சென்றது. வருணாவின் பிடிக்காத பார்வை, இவனிடம் அவள் எரிந்து விழுந்தது. அடுத்து இவன் கிளம்பும் வரை அவள் வெளியே வராதது எல்லாம் நினைவுக்கு வர, இது எப்போதும் நிறைவேறாத விஷயம் என்று மனதில் தோன்றவும், பொன்னம்மாவின் ஆசையையும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நினைத்தான். 

ஆனால் அவரது அந்த ஆசை எப்போதோ மனதில் விருட்சமாக வளர்ந்துவிட்டது என்பது அவனுக்கு தெரியாதே, இப்போதே இப்படி பேசுகிறவனிடம், இவனுக்காக செண்பகத்திடம் வருணாவை பெண் கேட்டதை சொல்ல வேண்டாமென்று பொன்னம்மா அப்போதே முடிவெடுத்தவர்,

“இல்ல நைனா, உன்கிட்ட கேட்காம செண்பகத்துக்கிட்ட சொல்வேனா, சும்மா முதலில் உனக்கு பொண்ணு பார்க்கணும்னு சொன்னா, அதைவச்சே வருணாவை கேட்டுப் பார்க்கலாம்னு நினைச்சேன்.” என்று சமாளித்தார்.

“புரியுது ஆயா, ஆனா அதெல்லாம் சரிப்பட்டு வராது, விக்னேஷ் மாமா அவளுக்கு நல்ல படிச்ச மாப்பிள்ளையா பார்க்க நினைச்சிருப்பார். அதுதான் சரி, அவங்க வீட்டை பார்த்தல்ல, அந்த பொண்ணு இந்த வீட்டில் வந்து வாழுமா? இப்படி யோசிக்காம ஆசையை வளர்த்துக்காத, அப்புறம் நடக்கலன்னா கஷ்டமாகிடும்,” என்று தன் ஆயாவுக்கு சொல்வது போல் தனக்கும் சொல்லிக் கொண்டான்.

பேரன் இவ்வளவு பேசவும், செண்பகத்திடம் வருணாவை பெண் கேட்டது தெரிந்தால், இவன் என்ன செய்வானோ? என்ற பயம் பொன்னம்மாவிற்கு இருந்தாலும், ஒருவேளை விக்னேஷிற்கும் வருணாவிற்கும் இதில் சம்மதம் இருந்தால், பேரனை எளிதாக சமாளித்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டினார்.

சாரல் வீசும்…