☔ மழை 29 ☔

“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடைய அரசை ஆளும் அரசன் அரசர்களுள் சிங்கத்திற்கு ஒப்பானவன்.

            -சாலமன் பாப்பையாவின் விளக்கம் (இறைமாட்சி அதிகாரம்)

சவி வில்லா…

 தலைகுனிந்து அமர்ந்திருந்தான் சித்தார்த். குனிந்திருந்த சிகைக்குள் கைவிரல்களை விட்டு கோதியவனைப் பரிதாபமாக ஏறிட்டான் இந்திரஜித். நாராயணமூர்த்தியும் சவிதாவும் செய்வதறியாது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தனர்.

மருமகள் வீட்டை விட்டு சென்றுவிட்டாள்! சென்றவள் பேத்தியையும் அழைத்துக்கொண்டு உடமைகளுடன் யாரிடமும் கூறாது சென்றிருக்கிறாள்!

அத்துடன் முந்தைய தினம் அவளுக்கும் மகளுக்குமிடையே மிகப்பெரிய போரே நடந்திர்க்கிறது. ஆனால் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. சவிதா பேத்தியின் நினைவில் கலங்கி போனார்.

நாராயணமூர்த்தி மைந்தனை எண்ணி நொந்து கொண்டவராய் “மனுசனுக்குப் பொறுமை வேணும் சித்து… மூளை இல்லயா உனக்கு? மனைவி கை நீட்டுறவன் மனுசனே இல்ல, மிருகம்… இன்னைக்கு வரைக்கும் சவிம்மாங்கிறத தாண்டி உங்கம்மாவ நான் பேசிருக்கேனாடா? என்ன தான் கோவம் வந்தாலும் கைநீட்டுவியா நீ?” என்று சீற்றத்துடன் முழங்க சவிதா அவரது கரத்தைப் பற்றி அமைதிப்படுத்தினார்.

“மூர்த்தி ப்ளீஸ்! அவன் செஞ்சதுக்கு அவன் தான் வருத்தப்படுறான்ல”

நாராயணமூர்த்தி பதிலளிக்கும் முன்னர் இந்திரஜித் முந்திக்கொண்டான்.

“இங்க இருந்து வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுதும்மா? இவர் வருத்தப்பட வேண்டியது அண்ணி கிட்ட… அவங்க எங்கனு தேடிப் பாக்கச் சொல்லுங்க”

சித்தார்த் விலுக்கென்று நிமிர்ந்தவன் “உன் பக்கத்துல தானே நான் இருக்கேன்… என் கிட்ட டேரக்டா சொல்ல மாட்டியாடா?” என்று கடுப்பேற கேட்க

“அண்ணிய அறைஞ்சவர் கிட்ட என்னால பேசமுடியாதும்மா” என்றபடி முகத்தைத் திருப்பிக்கொண்டான் இந்திரஜித்.

சித்தார்த் அவனது பதிலில் திகைத்தவன் எழுந்து அவனுக்கு நேராக நின்று “டேய் நான் பாத்து வளந்தவன்டா நீ! என் கிட்டவே ஆட்டிட்டியூட் காட்டுறீயா?” என்று காட்டமாய் கேட்க எரிச்சலுடன் திரும்பினான் இந்திரஜித்.

“இது தான் உங்க பிரச்சனை… நான் எதுக்குப் பேசாம இருக்கேனு புரிஞ்சுக்காம பேசமாட்டேங்கிறத மட்டும் பிடிச்சிக்கிட்டு தொங்குறது… அண்ணி அப்பிடி என்ன தப்பா சொல்லிட்டாங்க? அந்த ருத்ராஜியோட முக்தி என்ன பண்ணுதோ அதை சொன்னாங்க… அதுக்கு நீங்க கோவப்படுவீங்களா? அண்ணா உண்மைய சொன்னா அதை ஏத்துக்கணுமே தவிர இப்பிடி இயலாமைய கோவமா காமிக்கிறது ரொம்ப தப்பு… உங்க ருத்ராஜியோட முக்தி மக்களை ஏமாத்துறாங்கனு அண்ணி சொன்னா அது சரியா தான் இருக்கும்”

சித்தார்த் அதிர்ந்து போய் நின்றவன் சிகையை அழுந்த கோதியவன் கண்களை இறுக மூடித் திறந்து தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தான்.

இப்போது அவன் கோபத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவனது அன்பான மனைவியும் அருமையான மகளும் அவனை விட்டு தொலைவில் இருக்கின்றனர். இது அவர்களுக்குப் பாதுகாப்பல்ல! அவர்களைத் தேட வேண்டும்!

மூளை படபடவென கட்டளையிட உடனே அதை செயலாற்ற ஆரம்பித்தான் சித்தார்த். முதலில் மாதவனை அழைத்து யசோதரா பற்றி விசாரித்தான்.

“என்னாச்சு மச்சி? எதுவும் பிரச்சனையா?” என்று அவன் கேட்க நண்பனிடம் எதையும் மறைத்தறியாத சித்தார்த் அனைத்தையும் கூறிவிட்டான்.

“நீயா ரிப்போர்ட்டரை அறைஞ்ச சித்து? டேய் அந்தப் பொண்ணு உன் புரொபசலை அக்செப்ட் பண்ணணும்னு எவ்ளோ கஷ்டப்பட்டேனு மறந்துட்டியா நீ?”

“மேடி ப்ளீஸ்டா., ஆல்ரெடி எல்லாரும் என்னை வார்த்தையால கொன்னுட்டாங்க.. நீயாச்சும் புரிஞ்சுக்கோடா… அந்த ராகேஷோட ஆளால என் பொண்டாட்டி பிள்ளைக்கு எதுவும் ஆயிடுமோனு பயமா இருக்குடா… உன் வீட்டுக்கு வரலனா அவ எங்க தான் போனா?”

சித்தார்த் பதற்றத்துடன் பேசும்போதே இந்திரஜித்தின் குரல் இடைவெட்டியது.

“அண்ணா கௌதம் மாமா பேசுறார்” என்றபடி அவன் போனை நீட்டினான்.

“மேடி கௌதம் கால் பண்ணுறான்டா… என்னனு கேக்குறேன்” என்று மாதவனிடம் உரைத்தவன் அழைப்பைத்  துண்டிக்காமலே கௌதமிடம் பேச ஆரம்பித்தான்.

அவனோ எடுத்தவுடனே “ஏன் சித்து இப்பிடி பண்ணுன?” என்று வேதனையுடன் கேட்க சித்தார்த்துக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

“ப்ளீஸ் கௌதம், நீயாச்சும் என்னை புரிஞ்சுக்கடா.., நான் வேணும்னே செய்யலடா”

“யசோ இங்க தான் இருக்கா”

ஒரு வினாடி சித்தார்த்தின் இதயம் நின்று துடித்தது. கண்களில் கண்ணீர் பெருக புறங்கையால் துடைத்துக்கொண்டான்.

“நீ உடனே வந்து அவளை கூட்டிட்டு போ சித்து… நான் ஆல்ரெடி சொல்லிருக்கேன், ஒரு தடவை நீ வேண்டாம்னு அவ நினைச்சிட்டானா அவளோட மனசை யாராலயும் மாத்தமுடியாது.. எக்ஸ்ட்ரீம் லெவலுக்குப் போறதுக்கு முன்னாடி பேசி சமாதானம் பண்ணு”

கௌதமின் வார்த்தைகள் உண்மையை உடைத்துக் கூற அவனிடம் உடனே லோட்டஸ் ரெசிடென்சிக்கு வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

இந்திரஜித் வேகமாக வெளியேறுபவனை பார்த்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான். இனி பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற எண்ணம் அவனுக்கு! ஆனால் இனி தான் பிரச்சனையே தீவிரமடையப்போகிறது என்று நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டது விதி.

************

லோட்டஸ் ரெசிடென்சி…

ஒரு காலத்தில் மயூரியும் அவளும் தங்கியிருந்த அவர்களின் ஃப்ளாட்டில் மகளுடன் அமர்ந்திருந்தாள் யசோதரா. அவளருகே சாருலதாவும் ஹேமலதாவும் சோகம் கப்பிய முகங்களுடன் அமர்ந்திருக்க குழந்தைகள் மூவரும் என்னவோ பேசிக்கொண்டிருந்தனர்.

ஹேமலதா அவர்களைப் பார்த்துவிட்டு “நம்மளும் குழந்தைங்களாவே இருந்துருக்கலாம்ல யசோ… யாரை பத்தியும் கவலைப்படாம சந்தோசமா நம்மளோட சின்ன உலகத்துல வாழ்ந்திருப்போம்… ப்ச்… வளந்து என்னத்த கண்டோம்?” என்று வருத்தத்துடன் உரைக்க

“ம்ம்… அதை விடு ஹேமா… இனிமே நானும் சர்மியும் இங்க தான் இருக்கப்போறோம்… புரொவிசன்ஸ் வாங்கணும்… பால், நியூஸ் பேப்பருக்குச் சொல்லணும்… நிறைய வேலை இருக்கு” என்று சாதாரணமாக அவள் உரைக்க பெண்கள் இருவருக்கும் அதிர்ச்சி.

அப்போது “இங்க நிரந்தரமா தங்கி என்ன பண்ண போற யசோ?” என்ற கேள்வியுடன் வந்தான் கௌதம்.

அவனிடம் பதில் சொல்லாது விழித்தவளை ஆதுரமாகப் பார்த்தவன் “சித்து லவ்ஸ் யூ அ லாட்… ஒய் டோண்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் ஹிஸ் சிச்சுவேசன்? அவன் சர்மிய நினைச்சு டென்சன்ல இப்பிடி பண்ணீட்டான்… அவன் வந்து மன்னிப்பு கேப்பான்.. ஏன்னா சித்துக்கு உன் மேல இருக்குற காதல் அவனோட ஈகோவ விட பெருசு” என்றான்.

“என்ன சாக்குபோக்கு சொன்னாலும் மேன்-ஹேண்ட்லிங் இஸ் ராங்… அதை உங்க கிட்ட எதுக்குச் சொல்லுறேன் நான்?” கடுப்புடன் குறைபட்ட ஹேமலதாவை இப்போது அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

யசோதராவின் விழிகள் கேள்வியாய் அவனை ஊடுருவ ஹேமலதாவோ எனக்கு என்ன வந்தது என்று விட்டேற்றியாய் அமர்ந்திருந்தாள்.

யசோதராவின் விழிகளில் சோர்வு எழ “எல்லா ஆம்பிள்ளைங்களும் ஒன்னு தான்” என்று வேதனையுடன் முணுமுணுத்தாள்.

அவளைச் சமாதானம் செய்யுமாறு கௌதம் சாருலதாவிடம் வேண்ட அவளோ தன்னால் முடியவில்லை என்று கைவிரித்தாள்.

அப்போது “யசோ” என்ற சித்தார்த்தின் அழைப்பு காதில் விழ நால்வரும் ஒரு சேர வாயிலை நோக்கினர். குழந்தைகள் ஹாலுக்கு ஓடி வர சர்மிஷ்டா தந்தையைக் கண்ட சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள்.

ஓடி வந்தவளை தூக்கி அணைத்துக்கொண்ட சித்தார்த்தின் கண்களில் கண்ணீர் பளபளத்தது. அதை கண்டுகொண்ட யசோதரா அவனைப் பார்க்க விருப்பமின்றி எங்கோ வெறிக்க ஆரம்பித்தாள்.

கௌதம் சூழ்நிலையைப் புரிந்துகொண்டவனாக மற்றவர்களை அழைக்க சர்மிஷ்டா அப்பாவிடம் இருந்து வரமாட்டேன் என்று சிணுங்கினாள்.

ஹேமலதா அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு “அத்தை உனக்காக குக்கீஸ் செஞ்சிருக்கேன்… வேணுமா வேண்டாமா?” என்று கேட்க

“அப்பா நான் குக்கி சாப்பிட்டுட்டு உங்களுக்கும் கொண்டுவரட்டுமா?” என்று கேட்டாள் சித்தார்த்திடம் அவன் மகள்.

சித்தார்த் எதுவும் பேசாமல் புன்னகைத்தவன் ஹேமலதாவுடன் மகளை அனுப்பிவைத்தான். சில நிமிடங்களில் அந்த ஹாலில் யசோதராவும் சித்தார்த்தும் மட்டுமே தனித்துவிடப்பட்டனர்.

அவள் கரங்களைக் கட்டிக்கொண்டு நின்றாளேயொழிய சித்தார்த்திடம் பேசவில்லை.

அவன் வேறெதைப் பற்றியும் சிந்திக்காமல் “ஐ அம் சாரி யசோ… உன்னை ஹர்ட் பண்ணணும்னு நான் நினைக்கல… கோவத்துல அப்பிடி நடந்துக்கிட்டேன்… நீ வேணும்னா அதுக்குப் பதிலா என்னை அறைஞ்சிடுடி… ஆனா இப்பிடி என்னை விட்டு தூரமா போகாத” என்று கலக்கத்துடன் பேசிவிட்டு அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

யசோதரா உணர்வற்று சிலையாய் நிற்க அவளது தேகம் கற்பாறையாய் இறுகுவது அவள் கணவனாகப்பட்டவனுக்கு தெரியாதா என்ன? திகைத்து விலகியவனை விழிகளால் வெறித்தவளை கையாலாகாத்தனத்துடன் பார்த்தான் சித்தார்த்.

யசோதரா தொண்டையைச் செருமிக் கொண்டவள் “கோவத்துல அறைஞ்சேன்னு சொன்னல்ல” என்று பொறுமையாய் வினவ ஆமென தலையாட்டினான் அவன்.

“உன்னை ஹர்ட் பண்ணுனா எனக்குத் தான் வலிக்கும் யசோ… அது தெரிஞ்சும் நான் அறைஞ்சிருக்க கூடாது… அதுக்குக் காரணம் என்னோட கோவம் தான்” என்று பரிதவிப்புடன் அவன் கூற

“ஓ! அப்போ கோவம் வந்தா யாரா இருந்தாலும் நீ அறைஞ்சிடுவ… வெல்! சப்போஸ் நான் இருந்த இடத்துல உங்கம்மாவோ அப்பாவோ இருந்திருந்தா நீ என்ன பண்ணிருப்ப? இதே மாதிரி தான் அறைஞ்சிருப்பியா?” என்று கேட்டுவிட்டு விழிகளால் அவனை ஊடுருவினாள் யசோதரா.

சித்தார்த் எப்படி பதில் கூறுவான்? கட்டாயம் அந்த இடத்தில் அவனது பெற்றோர் இருந்திருந்தால் அவன் அறைந்திருக்க மாட்டான். அவன் மட்டுமல்ல, எந்தவொரு சராசரி ஆண்மகனும் கோபத்தில் தனது தாயாரையோ தந்தையையோ அடிப்பதில்லை, அவன் பைத்தியமாகவோ குணங்கெட்டவனாகவோ இல்லாத வரையில்.

ஆனால் எப்பேர்ப்பட்ட குணசீலனும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் கைநீட்டுவது அவனது மனைவியிடத்தில். அந்த அத்துமீறலுக்கு அவர்கள் பூசும் சாயம் கோபம்.

இந்த அறைகளும் சமாதானங்களும் இந்தியச் சமுதாயத்தில் இயல்பாகிவிட்டது என்பது வேறு கதை. சில மனைவிகள் கணவன் தன்னிடம் கைநீட்டுவது தன் மீதிருக்கும் உரிமையால் என்ற அழகான மாயையில் வாழ்வதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் யசோதராவால் அவ்வாறு எண்ண முடியவில்லை. ஒரு ஏமாற்றுக்காரனுக்காக இவன் எப்படி என்னை அறையலாம் என்ற ஆதங்கம் அவளுக்குள் தீயாய் பற்றி எரியும் போது சித்தார்த் என்ன சமாதானம் சொன்னாலும் அவளது செவியில் ஏறாது தானே!

எந்தவொரு காரியத்திற்கான மதிப்பும் அதன் அடிப்படை காரணத்தை வைத்தே அளவிடப்படும். இங்கே காரணமே சரியில்லை என்றால் காரியத்தை எப்படி மறக்கவோ மன்னிக்கவோ இயலும்?

சித்தார்த் தலையை உலுக்கிக் கொண்டவன் “ஓகே! நான் பண்ணுனது தப்பு தான்… அதுக்குத் தான் சொல்லுறேன், வேணும்னா நீ ஒன்னுக்கு ரெண்டா என்னை அறைஞ்சுடு… இப்பிடி தனியா வந்து நிக்காத” என்று அமைதியாய் கூற

“சீ வாய மூடு… நீ அடிச்சதே தப்புனு நான் சொல்லுறேன்… இதுல நானும் உன்னை அடிக்கணுமா? நான் ஆம்பர் ஹெட்டும் இல்ல, நீ ஜானி டெப்பும் இல்ல… நீ செஞ்ச தப்பை நான் செய்யப் போறதும் இல்ல… என்னை நிம்மதியா இருக்க விடு… கெட் அவுட்” என்று சீற்றத்துடன் பேசிவிட்டு வாயிலை நோக்கி கை காட்டினாள் யசோதரா.

“யசோ பிராப்ளமோட சீரியஸ்னெஸ் புரியாம பேசாத… நீயும் சர்மியும் இங்க தனியா இருந்தீங்கனா ராகேஷோட ஆளால உங்களை ஈசியா அட்டாக் பண்ணிட முடியும்… சொன்னா கேளு யசோ”

யசோதரா பொறுமையாய் அவனை நோக்கியவள் “நீ பெரிய ஹீரோ தானே… உன்னோட கார்ட்சை புரொடக்சனுக்கு அனுப்பு… போலீஸ்கு பிரஷர் குடு… அந்த ராகேஷ் அனுப்புன ஆளை கண்டுபிடிக்க என்ன செய்யணுமோ அதை செய்… ஆனா நானும் என் பொண்ணும் அங்க வரமாட்டோம்… நேத்து நீ அடிச்சது என் கன்னத்துல இல்ல, என் மனசுல… அந்தக் காயம் அவ்ளோ சீக்கிரம் ஆறாது” என்று கூறிவிட்டு கண்ணீரை மறைக்க திரும்பி நின்றாள்.

சித்தார்த்தின் பொறுமை மணல் கடிகாரத்தின் மேலடுக்கு மணலைப் போல சிறிது சிறிதாக காலி ஆகிக் கொண்டிருந்தது. அதன் கடைசி துகளும் கீழடுக்கை அடையும் முன்னர் இந்தச் சமாதானப்படலம் முடிவடைய வேண்டுமே என்ற பரிதவிப்பு அவனுக்கு.

ஆனால் யசோதரா பிடித்த பிடியில் நிற்க “ஏய் நீ இங்கயே இருந்துக்கடி… என் பொண்ணை நான் கூட்டிட்டுப் போகத் தான் செய்வேன்… உன்னால என்னைத் தடுக்க முடியாது” என்று அதட்டலாய் மொழிந்தான் அவன்.

யசோதரா திரும்பியவள் “என் பொண்ணை உன்னோட அனுப்பி வச்சா என்ன பண்ணுவ? கைக்குள்ள பொத்தி வச்சு பாத்துப்பியா? இல்லல்ல, அந்த முக்தி வித்யாலயால கொண்டு போய் தள்ளுவ… என்னால அதுக்கு சம்மதிக்கவே முடியாது… யூ நோ வாட்? பேரண்ட்ஸ் பிரிஞ்சாலும் பெண் குழந்தையோட பொறுப்பு அம்மா கிட்ட தான் இருக்கும்… சோ டோண்ட் ட்ரை டூ த்ரெடன் மீ” என்று சினமேற உரைக்க அடுத்த நிமிடம் அவளது கரம் சித்தார்த்தின் வசம் சிக்கிக்கொண்டது.

இறுக்கமாய் பற்றியவன் “ஹவ் டேர் யூ டு சே தட் வேர்ட்? வீ ஆர் நாட் செப்பரேட்டட்.. அண்ட் திஸ் செப்பரேசன் வோண்ட் ஸ்டாப் மீ டு மீட் யூ அண்ட் மை டாட்டர்… என்னமோ லீகலா பிரிஞ்சிட்ட மாதிரி பேசுற? ஏய் ஆமாடி… நான் சர்மிய அந்த ஸ்கூலுக்குத் தான் அனுப்ப போறேன்… உன்னோட சோ கால்ட் ஈகோவ விட என் பொண்ணு உயிரோட இருக்குறது எனக்கு முக்கியம்… அப்புறம் இன்னொரு விசயம், இங்க தங்கியிருக்கிறது நிரந்தரம்னு உன் மனசுல எதாச்சும் எண்ணம் இருந்துச்சுனா எரேஸ் பண்ணிடு… உன்னை நான் ஹர்ட் பண்ணிருக்கேன்… அந்தக் காயம் ஆறுற வரைக்கும் நான் காத்திருப்பேன்… மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வாரம்… அதுக்கு மேல பொறுமை காக்குறதுக்கு நான் புத்தன் இல்ல… மைண்ட் இட்” என்று அதிகாரமாய் முழங்கிவிட்டு அவள் கையை உதறினான்.

உதறிய வேகத்தோடு அங்கிருந்து வெளியேறியும் சென்றான் சித்தார்த். செல்பவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்ட யசோதராவோ என்ன நடந்தாலும் தன் மகளை முக்தி வித்யாலயாவிற்கு அனுப்பும் முடிவிலிருந்து சித்தார்த் பின்வாங்கப் போவதில்லை என்பதை புரிந்துகொண்டாள்.

கூடவே சட்டப்படியாகவா பிரிந்துவிட்டோம் என்ற கேள்வி வேறு! இவன் தன்னைக் காயப்படுத்தியதை மறக்க இந்த மகாபிரபு தயைகூர்ந்து அளித்த அவகாசம் ஏழு நாட்கள்!

இப்போது கூட தான் சொல்ல வருவதை இவன் புரிந்துகொள்ளவில்லை. இனி இவனைப் பற்றி சிந்திக்க என்ன இருக்கிறது? ஆனால் சித்தார்த் சொல்வதில் ஒரு விசயம் நியாயமானது. ராகேஷின் ஏவலில் இருந்து தன் மகளைக் காப்பது அவசியம்!

அவனிடமிருந்து காத்துவிட்டாலும் சித்தார்த் முக்தியில் அவளைச் சேர்த்துவிடுவானே! மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தவளுக்கு காதில் அபசுரமாய் ஒலித்தது சித்தார்த்தின் “என்னமோ லீகலா பிரிஞ்சிட்ட மாதிரி பேசுற?” என்ற கேள்வி! கூடவே முக்தியில் சர்மிஷ்டாவை சேர்த்தே தீருவேன் என்ற பிடிவாதமும்!

இதற்கு உபாயம் என்ன என்று யோசித்தாள் யசோதரா. அவளது கணவனோ நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு உதாரணமாய் தனது வாயாலேயே அந்த உபாயத்தை முழங்கிவிட்டுச் சென்றதை அறியாது படுவேகமாக காரில் சென்று கொண்டிருந்தான்.

அதே நேரம் ஹேமலதாவைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் கௌதம். அவளோ பேசினால் தானே! குழந்தைகள் ஓரமாய் விளையாட அவனும் பகீரத பிரயத்தனப்பட்டு விட்டான். ஆனால் அவனது மனையாள் மலையிறங்கவில்லை.

அவனும் மகனை வைத்து சமாதானக்கொடி பறக்கவிட்டான். அதுவோ பட்டொளி வீசி பறப்பதற்கு முன்னரே கிழித்தெறியப்பட்டது. மகளை வைத்து சமாதான தூது விடலாம் என்றாலோ அதற்கும் வழியின்றி அவன் பெற்ற வெண்புறாவோ குட்டி தோழமையுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

“ஹேய் பகவான்! ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்று வாய்க்குள் முணுமுணுத்தவனைப் பார்த்தபடி அவர்களின் அறைக்கதவைத் தட்டினாள் சாருலதா.

“என்னடாம்மா?” என்று கேட்ட கௌதமிடம்

“எனக்கு முக்தி ஃபவுண்டேசன்ல இருந்து கால் வந்துச்சு மாமா… அங்க சதாசிவன் டெம்பிள் வேலை முடியுற கண்டிசன்ல இருக்குதாம்… அவங்க ஃபவுண்டேசனோட கேலண்டர் போட்டோஷூட்டுக்கு அட்லாண்டிஷ்சை அப்ரோச் பண்ணிருக்காங்க” என்றாள் தயக்கத்துடன்.

அவளது விழிகள் காளி சொரூபத்திற்கு மாறிக்கொண்டிருந்த தமக்கையை அவ்வபோது தொட்டு மீள கௌதம் விசயத்தைப் புரிந்துகொண்டான்.

“நீ அங்க போய் போட்டோஷூட் நடத்த ஆசைப்படுறீயா?”

“அது வந்து…. பேமண்ட் ரொம்ப அதிகம் மாமா… அதை வச்சு அட்லாண்டிஷை இன்னும் டெவலப் பண்ணிடலாம்”

“உனக்கு அங்க போக விருப்பம் இருக்குதா?”

“மாமா…” என்று தயக்கத்துடன் அவள் இழுக்க ஹேலமதா அவசரமாக இடைவெட்டினாள்.

“நீ அங்க போய் வேலை பாத்து தான் அட்லாண்டிஷை வளக்கணும்னு அவசியமில்ல… நோ சொல்லிடு”

சாருலதாவின் முகத்தில் சோகம் படர கௌதமோ ஹேமலதாவிடம் திரும்பினான்.

“அவளுக்கு அங்க வேலை இருந்துச்சுனா போகட்டுமே ஹேமா… சும்மா ஒன்னும் அவளை அப்ரோச் பண்ணிருக்க மாட்டாங்க… நேஷனல் போட்டோகிராபி அவார்ட், சோனியோட அவார்ட்னு ரெண்டு அவார்ட் வின் பண்ணுன டேலண்டான பொண்ணைக் கூப்பிடுறது தான் கௌரவம்னு அவங்களே நினைச்சிருக்கலாம்… இது சாருவோட திறமைக்குக் கிடைச்ச வேலை… அவ ஒன்னும் ருத்ராஜியோட டிவோட்டியா போகப்போறதில்ல… ஜஸ்ட் அவங்க குடுக்குற வேலைய செய்யப்போறா… அதை தடுத்து அவ வளர்ச்சிக்கு குறுக்க நிக்காத”

ஹேமலதாவின் நெற்றியில் யோசனைக்கோடுகள்! சில நிமிடங்களுக்குப் பிறகு “ம்ம்…சரி… ஆனா போனோமா வேலைய முடிச்சோமா வந்தோமானு இருக்கணும்… ருத்ராஜி பஜனை பாடுறேன்னு ஆரம்பிச்சேனு வையேன்” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்டலாய் பேசியவளிடம் பணிந்து போனாள் அவளது தங்கை.

“டென் டேய்ஸ் போட்டோஷூட் தான் ஹேமுக்கா… எங்க டீம் முழுக்க போகப்போறோம்… வேலை முடிஞ்சதும் சென்னைக்கு வந்துடுவோம்கா… பிலீவ் மீ” என்று கொஞ்சியவள் எப்படியோ ஹேமலதாவை முழுமனதுடன் சம்மதிக்கவும் வைத்துவிட்டாள்.

கூடவே “அப்பிடியே மாமாவையும் மன்னிச்சிடேன்” என்று கௌதமிற்காக பரிந்து பேச ஹேமலதா முடியாதென்பது போல முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“யாரோ ஒரு சாமியாருக்காக என் கிட்ட கோவப்பட்ட மனுசனை என்னால மன்னிக்க முடியாது”

ஹேமலதாவின் பிடிவாதம் இப்போதைக்குத் தளராது என்பதை கௌதம் புரிந்துகொண்டான்.

அதே நேரம் சித்தார்த் மாதவனுடன் காவல்துறை ஆணையத்தில் ராகேஷின் பரோலை நீக்கும்படி சாந்தகோபாலனின் துணையுடன் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தான்.

“டோண்ட் ஒரி சார்… அக்யூஸ்டோட அப்பாவே சொன்னதுக்கு அப்புறம் யோசிக்க எதுவுமில்ல… அதே நேரம் இந்த பத்து நாள்ல ராகேஷ் யார் யாரை மீட் பண்ணுனார்னு என்கொயரி பண்ணுறதுக்குக் கொஞ்சம் டைம் வேணும்” என்று ஆணையர் கூறிவிட சற்றே நிம்மதியுற்றான் சித்தார்த்.

அவனது இந்நிம்மதியை அளிப்பதற்கான வார்த்தையை யசோதராவிடம் சிதறிவிட்டு வந்ததை அவன் மறந்தே போய்விட்டான்.

மழை வரும்☔☔☔