☔ மழை 22 ☔

மரபான நம்பிக்கைகளில் ஏற்படும் தளர்ச்சியும் பெரு நகர கலாச்சாரம் உருவாக்கும் வேர்களற்ற தன்மையும் இதுபோன்ற கார்ப்பரேட் தனிநபர் பக்திக் கலாச்சாரத்தை பெரிதும் ஊக்குவிக்கின்றன. இவர்களைப் பின்பற்றுகிறவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். நல்ல வசதி படைத்தவர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள். அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், ஐ.டி பணிகளில் இருப்பவர்கள், டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டவர் என எல்லாதரப்பினரையும் இந்தக் கூட்டத்தில் பார்க்கலாம். ஆன்மிக வெறுமையும் எதிர்காலம் குறித்த அச்சமும் பண்பாட்டு அடையாளச் சிக்கல்கள் காரணமாக புதிய குழுக்களில் அடையாளம் தேடும் முயற்சியும் இவர்களை ஆட்கொள்கின்றன.

                                                         –எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தினகரன் 29.10.2019

ஹோட்டல் கோல்டன் கிரவுன்…

மேலாண்மை இயக்குனரின் அறையில் சாந்தகோபாலனின் அருகே அமர்ந்திருந்தான் சித்தார்த். அவர் கலங்கிய முகத்துடன் இருக்க சித்தார்த் அவரைத் தேற்றிக்கொண்டிருந்தான்.

“என்னால சகுந்தலாவ சமாதானப்படுத்தவே முடியல சித்து… அவ இந்த தடவை ராகேஷை பாத்துட்டு வந்ததுல இருந்து புலம்பிட்டே இருந்தா… சரி வழக்கம் போல சரியாயிடுவானு நினைச்சேன்… ஆனா ஒரு வாரமா அவ அழுகை நின்ன பாடில்ல… ராகேஷை பரோல்ல எடுப்போம்னு சொல்லுறாடா… எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல சித்து”

சித்தார்த்திற்கு அந்த மனிதர் கலங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எவ்வளவு ஆளுமையும் கம்பீரமுமாக வலம் வந்தவர், கடந்த சில வருடங்களில் அந்த ஆளுமையும் கம்பீரமும் கிட்டத்தட்ட திரும்பிவிட்டது என்றாலும் அவ்வபோது அவரது மனம் மகன் நினைவில் ஊமையாய் அழுவது வாடிக்கை ஆகிவிட்டது.

அவரே அப்படி என்றால் அவரது மனைவி சகுந்தலா வெகுளிப்பெண்மணி. சிறையில் சென்று ராகேஷை பார்த்துவிட்டு வந்தால் பத்து நாட்களுக்கு அவன் புராணம் தான் ஓடும். அவனது ஆயுள் தண்டனையில் கிட்டத்தட்ட ஏழாண்டுகள் முடிவடைந்துவிட்டது. இது வரை ஒரு தடவை கூட சாந்தகோபாலன் அவனை பரோலில் எடுக்க முன்வரவில்லை.

மகனாயினும் அவன் செய்த பாதகம் சமுதாயத்தில் எத்தனை மாணவர்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டது என்பதை புரிந்துகொண்டவரால் அவரது மனைவிக்கு அதை புரியவைக்க முடியவில்லை.

“அவன் பண்ணுன தப்பை நான் இல்லனு சொல்லலைங்க… ஆனா இந்தத் தடவை அவனைப் பாத்தப்போ என் மகன் நொடிஞ்சு போயிட்டான்ங்க… மகனுக்குக் கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயசுல அவனை இப்பிடி ஜெயில்ல வச்சு பாக்குற துர்பாக்கியம் யாருக்கும் வரக்கூடாது… அவனுக்குத் தண்டனை முடிய இன்னும் ஏழு வருசம் இருக்குங்க… முடிஞ்சு போன ஏழு வருசத்துல நான் இதுவரைக்கும் அவனை பரோல்ல எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கேனா? இப்போ கேக்குறேன்னா அதுக்குக் காரணம் இருக்கு… ராகேஷுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலங்க… பத்து நாள், பத்தே பத்து நாள் பரோல்ல எடுங்க… என் பிள்ளைய கண்ணும் கருத்துமா பாத்துக்கிறேன்… அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் மறுப்பு சொல்ல மாட்டேங்க” என்று சகுந்தலா அழுதது இப்போதும் அவர் கண் முன் வந்து சென்றது.

சித்தார்த் அவரைத் தேற்றியவன் சகுந்தலாவின் வருத்தம் சரியானது தான் என்று கூற சாந்தகோபாலன் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது வெறித்தார்.

“எஸ்.ஜி சார் நடந்த எல்லாமே ரொம்ப பெரிய தப்பு தான்… ஆனா அது எதுவும் ராக்கி பா… ராகேஷ்கும் சகுந்தலாம்மாக்கும் இடைல இருக்குற உறவை மாத்திடாது… ஏழு வருசமா மகனை ஜெயில்ல போய் பாத்துட்டு வர்ற வருத்தம் அவங்களுக்கும் இருக்கும் சார்… இந்த ஏழு வருசத்துல அவங்க இப்பிடி அழுதிருக்காங்களா? இப்போ அழுறாங்கனா அதுக்குக் காரணம் இருக்கு… ராகேஷுக்கு உடம்பு சரியில்ல… அவனை பரோல்ல எடுத்து ட்ரீட்மெண்ட் பாத்து அனுப்பி வைங்க… அந்தக் கொஞ்சநாளாச்சும் சகுந்தலாம்மா அவனோட இருப்பாங்கல்ல”

நிதானமாக சாந்தகோபாலனுக்கு நிலமையை புரியவைத்தான் சித்தார்த். சாந்தகோபாலனோ இவனைப் போல ஒருவன் தனது மைந்தனுக்கு நண்பனாய் வாய்த்தும் கூடாநட்பில் சேர்ந்து இப்படி கெட்டழிந்தது ஏன் என்று கோடி முறையாக மனதுக்குள் நொந்து கொண்டார்.

ஆனால் மகனது பரோலுக்கு விண்ணப்பிக்க அவருக்கு இப்போதும் விருப்பமில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவரைத் தடுத்தது. சித்தார்த் அதை நன்றாகப் புரிந்துகொண்டவன்

“யாரும் பிறக்குறப்போவே கிரிமினலா பிறக்கிறது இல்ல எஸ்.ஜி சார்… ராகேஷ் மோசமான மனுசனா இருக்கலாம்… ஆனா உங்களுக்கு நல்ல மகனா தானே இருந்தான்… ஆடம்பரமான வாழ்க்கைய வாழ்ந்தவங்க ஒரு நாள் அது கைவிட்டுப் போச்சுனா கண்டிப்பா தடுமாடுறுவாங்க… ராகேஷோட தடுமாற்றம் தான் அவனை ஆல்வின் கூட சேர்ந்து கிரிமினல் ஆக்டிவிட்டீஸ்ல ஈடுபட தூண்டிச்சு” என்று எடுத்துக்கூற

“இப்போவும் எப்பிடி உன்னால அவனுக்குச் சப்போர்ட் பண்ணமுடியுது சித்து?” என விரக்தியான புன்னகையுடன் கேட்டார் சாந்தகோபாலன்.

“ஏன்னா இன்னைக்கு எனக்குக் கிடைச்ச நேம் அண்ட் ஃபேம்கு காரணம் ராக்கி பாய் தான்… எனக்கு முதல் வாய்ப்பை குடுத்தவன் அவன்… சாகுற வரைக்கும் என்னால அந்த நன்றிய மறக்க முடியாது எஸ்.ஜி சார்… இது கேக்குறதுக்குப் பைத்தியக்காரத்தனமா கூட இருக்கலாம்… ஆனா செய்நன்றிய மறக்குறது எனக்குப் பிடிக்காது சார்” என்று தெளிவாக இயம்பிய சித்தார்த் அவரை பரோலுக்கு விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தினான்.

அதே நேரம் சாந்தகோபாலனின் இல்லத்தில் சகுந்தலாவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான் மாதவன். அந்தப் பெண்மணிக்கு மகனை எண்ணி வருத்தம் ஒரு புறம் என்றால் அவன் செய்த காரியத்தால் உண்டான தலைகுனிவு மறுபுறம்.

மாதவனை ஏறிடவே அவருக்குத் தயக்கமாக இருந்தது. இருப்பினும் மகனை எண்ணி வருந்தும் மனம் அவரைப் பேச வைத்தது.

“நான் ஒன்னும் தியாகிய மகனா பெத்துக்கல மாதவா… அவனைப் பத்தி உன் கிட்ட பேசுற அளவுக்கு அவன் ஒன்னும் நல்லது பண்ணிட்டு ஜெயிலுக்குப் போகல… ஆனா உருக்குலைஞ்சு அவன் நின்னது இப்போவும் என் கண்ணுக்குள்ளவே இருக்குது மாதவா”

சகுந்தலாவின் கண்ணீர் மாதவனை வருத்தியது.

“அழாதீங்கம்மா… சித்து எஸ்.ஜி சார் கிட்ட பேசிட்டிருக்கான்… அவன் அவரோட மனசை மாத்திடுவான்மா… சார் கண்டிப்பா பரோலுக்கு அப்ளை பண்ணுவார்… சீக்கிரமே ராக்கி பாயை இதே வீட்டுல நீங்க பாப்பீங்க… இனிமே நீங்க அழக்கூடாது” என்று அவரைச் சமாதானம் செய்த மாதவனது மொபைலுக்கு அழைத்தான் சித்தார்த்.

சாந்தகோபாலன் ராகேஷின் பரோலுக்குச் சம்மதித்துவிட்டதாக அவன் கூறவும் மாதவன் அச்செய்தியைச் சகுந்தலாவிடம் பகிர்ந்தவன் அவர் முகமலர்ச்சியைப் பார்த்து நிம்ம்மதியுற்றான்.

சகுந்தலா முகம் தெளிவுறவும் அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் சித்தார்த்திற்கு அழைத்தான்.

“மச்சி மைண்ட் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்சா இருக்குடா… வாயேன், பீச் ஹவுசுக்குப் போவோம்” என்று அவன் அழைக்கவும் சித்தார்த்தும் மறுப்பின்றி சம்மதித்தான்.

காரணம் அவனுக்கும் தற்சமயம் குழப்பமான மனநிலை தான். அங்கே சென்று மாதவனுடன் மனம் விட்டுப் பேசினால் அந்தக் குழப்பம் தீரும் என்று எண்ணியவன் ஹோட்டலை விட்டுக் கிளம்பினான் சித்தார்த்.

*************

குமரகம்…

கேரளாவின் நீளமான ஏரியான வேம்பநாடு ஏரிப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான பகுதி. ஸ்படிகமாய் ஓடும் வேம்பநாடு ஏரியும் அதன் மீது பொன்னிற அன்னங்களைப் போல அசைந்தபடி மிதக்கும் கட்டுவள்ளங்கள் என்று அழைக்கப்படும் படகுவீடுகளும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களுமாய் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் ரசனைக்கு குறைவின்றி விருந்து வைக்கும் குமரகத்தில் தான் சாருலதா ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டிற்காக வந்திருந்தாள். அது முடிந்ததும் திருமணத்தையும் அவர்கள் தான் படம் பிடிக்க வேண்டும்.

அவளோடு நண்பர்களும் வந்திருக்க மணமக்கள் படகுவீட்டின் வெளிப்பகுதியில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கரம் கோர்த்தபடி நின்றிருந்தனர்.

ப்ரியா வட்டவடிவ ரிஃப்லெக்டரை அவர்களின் பக்கவாட்டில் பிடித்திருக்க ஒளியானது அதில் பட்டு எதிரொளித்து தம்பதிகளின் முகத்தில் பிரகாசமூட்ட இக்காட்சியை ட்ரைபோடில் வைத்திருந்த கேமராவால் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளினாள் சாருலதா.

முடிந்ததும் புகைப்படத்தைச் சரிபார்த்துக் கொண்டவள் அடுத்த காட்சிக்காக ப்ரியாவை மணப்பெண்ணின் புடவை முந்தானையை உயர்த்திப் பிடித்து நிற்குமாறு கூறினாள்.

அவர்கள் நிற்கவும் “ஓகே கய்ஸ்! ரெடி, ஒன்.. டூ… த்ரீ” என்று கூறவும் ப்ரியா அந்தப்பெண்ணின் முந்தானையைக் காற்றில் பறக்கவிட்டு விலகிவிட அதை சரியான ஷட்டர் ஸ்பீடில் படமாக்கினாள் அவள்.

அந்தப் புகைப்படம் பார்ப்பதற்கு புடவை முந்தானையானது காற்றில் மிதப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

அடுத்து கொச்சுவள்ளம் என்ற சிறிய தோணியில் படம் எடுக்க வேண்டும் என்பது தம்பதிகளின் ஆசை. அதற்காக தோணி ஓட்டும் நபரும் காத்திருக்க உப்பங்கழியின் நடுவே ஏரி ஓடும் போது படம்பிடிக்க ஆயத்தமான சாருலதாவை நோக்கி அவளது உதவியாளனும் நண்பனுமான சுரேஷ் மொபைலுடன் ஓடிவந்தான்.

“ஏய் சாரு நீ போட்டோ டிவிசன் காம்படிசன்ல வின் பண்ணிருக்க… இப்போ தான் ரிசல்ட் அனவுன்ஸ் பண்ணிருக்காங்க”

மொபைலை நீட்டியவனிடம் இருந்து வாங்கி பார்த்தவள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

ப்ரியாவும் இன்னொரு நண்பனான ஆகாஷும் அந்தக் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொள்ள தம்பதிகளும் அவளை வாழ்த்தினர்.

“ஆல் த பெஸ்ட் மேம்… இதே மாதிரி இன்னும் நிறைய ப்ரைசஸ் வின் பண்ணணும்… உங்களை நாங்க வெட்டிங் போட்டோஷூட்டுக்குப் புக் பண்ணுறதுக்குக் காரணமே இந்த பிரகதீஸ்வரர் டெம்பிள் போட்டோ தான்… அற்புதமா கலைநயத்தோட எடுத்திருக்கீங்க”

அவர்கள் அவள் எடுத்திருந்த பிரகதீஸ்வரர் ஆலயத்தின் புகைப்படத்தைப் புகழ்ந்து தள்ளிய போது அந்த ஆலய கோபுரத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்த இந்திரஜித் சாருலதாவின் மனக்கண்ணில் வந்து சென்றான்.

“இவங்க எல்லாருக்கும் நான் வின் பண்ணுனது தெரிஞ்சிருக்கு… அப்போ ஜித்துக்கும் தெரிஞ்சுருக்கும் தானே… ஆனா அவன் எனக்கு விஷ் பண்ணவேல்ல… அந்தளவுக்கு என் மேல கோவம் போல” என்று மனதிற்குள் ஆதங்கப்படவும் அவளது மனசாட்சி அவள் தலையில் குட்டியது.

“அடியே அந்தப் பையன் மூனுமணி நேரம் சிஸ்டம் முன்னாடி உக்காந்து உன் சைட்ல இருந்த மேஜர் ஃபால்டை சரி பண்ணுவான்… நீ நோகாம அதுக்கான கிரெடிட்டை ருத்ராஜிக்குக் குடுப்ப… அது மட்டும் நியாயமா? சரி அவன் தான் கோவப்பட்டுட்டான்… நீ ஏன் அவனுக்குக் கால் பண்ணல? பெடிக்யூர் பண்ணுன நெயில் உடைஞ்சா கூட என் நகம் போயிடுச்சு ஜித்துனு கண்ணீர் விட்டுக் கதறுற நீ கடந்த இருபத்தி நாலு மணிநேரத்துல அவனுக்கு ஒரு குட்மானிங்காச்சும் சொன்னியா?”

மனசாட்சி கேட்டதும் வாஸ்தவம் தானே! இப்போது அவனுக்கு அழைக்கலாமா என்று சாருலதா யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்திரஜித் பீச் ஹவுசின் மாடியறையின் நேரெதிரே இருந்த பால்கனியில் அமர்ந்து மடிக்கணினியுடன் அமர்ந்திருந்து எதையோ தீவிரமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

அவனிடமிருந்து சில அடிகள் தொலைவில் கிடந்த கவுச்சில் சாய்ந்திருந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர் மாதவனும் சித்தார்த்தும்.

திடீரென இந்திரஜித்தின் முகம் பிரகாசமுறவும் மாதவன் தனது முழங்கையால் சித்தார்த்தை இடித்தவன் அவனைப் பார் என்று கண்களால் சைகை காட்ட அவனும் தம்பியின் பக்கம் திரும்பினான்.

“வாவ்! அண்ணா சாரு இஸ் த வின்னர்… அண்ணா லுக் அட் திஸ் சைட்… ஷீ இஸ் த வின்னர் ஆப் நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட்… பிரகதீஸ்வரர் கோயில் கோபுரத்தை எவ்ளோ அழகா போட்டோ எடுத்திருக்கா பாருங்கண்ணா”

கண்கள் ஜொலிக்க இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கீழ் இயங்கும் போட்டோ டிவிசன் இணையதளத்தைப் பார்த்து உற்சாகத்துடன் கத்தினான் இந்திரஜித்.

சித்தார்த்தும் மாதவனும் அவனருகே சென்றவர்கள் மடிக்கணினியின் திரையைக் கவனிக்க அங்கே ‘வின்னர் ஆப் நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட் புரொபசனல் லெவல் – குமாரி சாருலதா’ என்று எழுத்துகள் கண்ணில் படவும் புருவங்கள் உயர அவளைத் தங்களுக்குள் பாராட்டிக் கொண்டனர்.

இந்திரஜித் இருவரிடமும் திரும்பியவன் “ஃபைனலி சொன்னத செஞ்சுட்டா அவ… நான் அவளை விஷ் பண்ணியே ஆகணும்ணா… சொல்லுங்க… அவளுக்கு என்ன கிப்ட் குடுக்கலாம்?” என்று தோழிக்குப் பரிசைத் தேர்ந்தெடுக்க அவர்களின் உதவியைக் கேட்கவும் இருவரும் முறுவலுடன் அவனைப் பார்த்தனர்.

மாதவனோ கண்களில் குறும்பு மின்ன “அவ புரொபசனல் போட்டோகிராபர்… அவளுக்கு என்ன கிப்ட் குடுத்தா யூஸ்புல்லா இருக்கும்னு யோசி… அது டெய்லி அவ யூஸ் பண்ணுறதா இருக்கணும்… ஒவ்வொரு தடவை அதை பாக்குறப்போவும் உன் நியாபகம் வரணும்… அதே நேரம் அதோட லைப் கொஞ்சம் அதிகமா இருக்கணும்” என்றான் மாதவன்.

இந்திரஜித் சில நொடிகள் யோசித்தவன் “யுரேகா… அவளுக்கு டெய்லி யூஸ் ஆகுறது கேமரா தான்… சோ நான் இருக்குறதுலயே பெஸ்ட் டி.எஸ்.எல்.ஆரை அவளுக்கு கிப்ட் பண்ணப்போறேன்” என்றான் குதூகலத்துடன்.

சித்தார்த்தும் மாதவனும் இவ்வளவு நேரம் யாருக்கு வந்த விதியோ என்று விட்டத்தைப் பார்த்ததை மறந்துவிட்டு இளையவனைக் குறுகுறுவென பார்த்து வைத்தனர்.

அவன் அவர்களின் பார்வை வீச்சை உணர்ந்து “ஏன் இப்பிடி குறுகுறுனு பாக்குறீங்க?” என்று ஓரக்கண்ணால் பார்த்து கேட்டபடி இணையத்தில் டி.எஸ்.எல்.ஆரைத் தேடத் துவங்கினான்.

“நீ இப்போலாம் அடிக்கடி சாரு புராணம் பாடுற… அவளுக்காக சந்தோசப்படுற… அவ கூட ஃபைட்னா ஃபிட்னெஸ் ரெஜிமன் கூட மறந்துட்டு சோகமா சுத்துற… வாட் இஸ் திஸ் ரா?” என்று கேட்ட சித்தார்த் அவனது ஒரு பக்கத்தில் முழந்தாளிட்டு அமர

“பையனுக்கு ஏதோ நியூ டிசீஸ் வந்திருக்கு சித்து” என்று மற்றொரு பக்கம் அமர்ந்தபடி மாதவன் கிண்டல் செய்தான்.

“என்ன டிசீஸ்டா? செவன் இயர்ஸ் பேக் நமக்கு வந்த டிசீசா மேடி?” என்று தெரியாதவன் போல கேட்டான் சித்தார்த்.

“பாத்தா அப்பிடி தான் தெரியுதுடா” என்றான் மாதவன்.

இருவரிடையே மாட்டிக்கொண்ட இந்திரஜித் பரிதாபமாக அவர்களைப் பார்த்து “ஏன் இப்பிடி? இது எத்தனை நாள் போட்ட ப்ளான்? என்னைக் கிண்டல் பண்ணுறதுல உங்க ரெண்டு பேருக்கும் அலாதி சந்தோசம்ல” என்று கூறிவிட்டு மீண்டும் கேமரா தேடலில் மூழ்க ஆரம்பித்தான்.

சித்தார்த்தும் மாதவனும் ஒருவரையொருவர் பார்த்தவர்கள் அவனிடமிருந்து மெதுவாக நகர்ந்தனர்.

மாதவன் சித்தார்த்திடம் “சித்து இப்போதைக்கு ராக்கி பாய் பரோல் விசயம் ஃபேமிலில யாருக்கும் தெரியவேண்டாம்டா” என்று கூற

“எப்பிடியும் நியூஸ் பேப்பர்ல வரப்போற செய்தி தான மேடி” என்றவனுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் மெதுவாய் ஆரம்பித்தது. சகுந்தலா மீதுள்ள அன்பால் அவன் சாந்தகோபாலனிடம் ராகேஷின் பரோல் விசயத்துக்குச் சம்மதம் வாங்கினான் என்றாலும் அவனுக்குள் ஒரு வித இனம்புரியாத கலவரம் மெதுவாய் ஆரம்பித்து விட்டது.

அனைத்துக்கும் காரணம் பாழாய் போன கனவு தான். அந்தக் கனவில் ராகேஷ் யசோதராவைக் கொல்வது போன்ற காட்சி அடிக்கடி வரும். துப்பாக்கியிலிருந்து தோட்டா புறப்பட்ட பின்னர் உண்டாகும் புகையிலிருந்து அது யசோதராவைத் துளைத்த பின்னர் வழியும் இரத்தம் வரை அனைத்தும் உண்மை போலவே இருக்கும் அந்தக் கொடுங்கனவு சமீப காலமாக அவனை வதைத்து வருகிறது.

அதையும் ராகேஷின் பரோலையும் ஒப்பிட்டுப் பார்த்த அவனது மனதில் கலவரம் மூண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லையே! ஆனால் வெறும் கனவிற்காக ஒரு அன்னையின் வேதனையை அவனால் அதிகரிக்க முடியாது.

“எனக்கு என்னமோ ராக்கி பாய் கொஞ்சம் மாறிருக்கலாம்னு தோணுதுடா மேடி…. ஏழு வருசம் வெளியுலகத்தை பாக்காம இருந்தவன் மனசு கண்டிப்பா தான் செஞ்ச தப்பை அசைபோட்டு பாத்திருக்கும்… அதனால அவனுக்குள்ள கண்டிப்பா எதாவது மாற்றம் வந்திருக்கும்”

மாதவன் அவன் தோளை அழுத்திவிட்டு “நீ சொன்ன மாதிரி மாறிருந்தா நல்லது தான்… எதுக்கும் நம்ம கவனமாவே இருப்போம் சித்து… ஆல்ரெடி ஒரு தடவை அவனை நம்புனதால நமக்கு உண்டான மனவருத்தத்தை மறந்துடக்கூடாதுடா… அவன் அவங்கம்மாவுக்கு நல்ல மகனா இருக்கலாம்… ஆனா அவன் ஒரு குற்றவாளி… அவன் ஜெயிலுக்குப் போக காரணம் உன்னோட ஒய்ப்… சோ நம்ம முழுசா அவனை நம்பிடக்கூடாது… முதல்ல பரோலுக்கு எஸ்.ஜி சார் அப்ளை பண்ணட்டும்… அதுக்கப்புறம் என்னென்ன ப்ரிகாசன்ஸ் எடுக்கணும்னு யோசிப்போம்… அது வரைக்கும் யாருக்கும் இந்த நியூஸ் தெரியவேண்டாம்” என்று மீண்டும் ஒரு முறை ராகேஷின் பரோல் விண்ணப்பம் பற்றிய தகவலை குடும்பத்தினரிடம் தெரிவிக்கவேண்டாமென கேட்டுக்கொண்டான்.

சித்தார்த் நண்பன் சொல்வது தனது நன்மைக்கே என்றுணர்ந்தவன் யாரிடமும் இது குறித்து மூச்சுவிடவேண்டாமென முடிவெடுத்துவிட்டான்.

மழை வரும்☔☔☔