TTA 8

தேன் 8
 
காலை பத்து மணிக்கு தயாராக இருக்கச் சொல்லி அவர்களை அழைத்துச் செல்ல இருந்த ஓட்டுநர் அலைபேசியில் முன்பே சொல்லியிருந்ததால் தம்பதியர் இருவரும் காலை கொஞ்சம் விரைவாக எழுந்து குளித்து தயாராகி கொண்டிருந்தனர். 
 
அவர்கள் செல்வது ஹேவ்லாக் தீவில் உள்ள கடற்கரைகளை சுற்றிப் பார்க்க தான், அதுமட்டுமில்லாமல் அங்கே கடற்கரையில் குளிக்கவும் வேண்டியிருக்கும் என்பதால் யாஷ்  சாதாரண டீஷர்ட்டும் ஷாட்ஸும் அணிந்திருந்தான்.
 
ரித்துவோ முட்டியை விட்டு கொஞ்சமே இறங்கியிருந்த பாவாடையும் கையை தூக்கினால் அவளின் வெண்ணிற வயிற்றுப்பகுதி நன்றாக தெரிவது போல்  ஒரு நவீன நாகரீக மேல் சட்டையும் உடுத்தியிருந்தாள். தலைமுடியை மொத்தமாக சேர்த்து குதிரைவால் கொண்டையாக போட்டிருந்தாள்.
 
அவள் தயாராகியதும் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று அவன் சொல்லியிருந்ததால், “நான் ரெடி போலாமா யாஷ்.” என்று கேட்டவளை, அதுவரை அலைபேசியில் மூழ்கியிருந்தவன் நிமிர்ந்து பார்க்க, அவள் மீதிருந்து பார்வையை அகற்றவே மிகவும் சிரமப்பட்டான்.
 
சட்டைக்கும் பாவாடைக்கும் நடுவில் மெல்லிய கீற்றாக தெரிந்த அந்த வெண்ணிற வயிற்றுப் பகுதி அவனை என்னவோ செய்தது. அதற்கும் மேலாக வாழைத்தண்டு போல் இருந்த இரண்டு கால்களில் மருதாணியின் சிவப்பு போகாமல் இருக்க அதுவும் அவளுக்கு அழகாக இருந்தது.
 
யாஷ் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவளுக்குள்ளும் வேதியியல் மாற்றங்கள். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “யாஷ் போலாமா?” என்று மீண்டும் அழைக்க,
 
அதில் மீண்டு வந்து, “போலாமே,” என்று சொல்லி எழுந்தவனுக்கு, அவளின் அருகில் இன்றைய நாள் எப்படி போகப் போகிறதோ என்ற பெருங்கவலை உண்டானது.
 
சிறிது நேரத்தில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வந்து அவர்கள் அறையில் இருக்க, சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் வந்துவிட்டதை அலைபேசி மூலம் கூறவும், இருவரும் தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.
 
முதலில் இருவரையும் விஜய் நகர் கடற்கரையில் கொண்டு போய்விட்ட ஓட்டுனர், அடுத்து செல்லவிருக்கும் ராதா நகர் கடற்கரையில் குளித்து கொள்ளலாம் இங்கு சிறிது நேரம் சுற்றிப் பார்த்தால் போதுமென்று சொல்லியனுப்பவே இருவரும் கடற்கரைக்கு கொஞ்சம் தொலைவில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். நீல நிறத்தில் கடலைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
 
ரித்து அமைதியாக அதைப்பார்த்தப்படி அமர்ந்திருக்க, “கடலைப் பார்த்தால் போதும் உடனே இப்படி உட்கார்ந்துடுவ போல, வா அப்படியே நடந்துட்டு வரலாம்,” என்று எழுந்தப்படியே யாஷ் கூறியப்படி தன் கையை நீட்டவும், அவளும் அவன் கைப்பிடித்து எழுந்துக் கொண்டது மட்டுமில்லாமல், அவன் கைக்கோர்த்து நடந்தவளுக்கு இந்த உலகையே வென்றுவிட்ட அளவுக்கு மகிழ்ச்சி உண்டானது.
 
அவனுக்குமே அவள் கையை விட மனம் வரவில்லை. அவனது அருகில் அவளுக்குரிய ப்ரத்யேக வாசனையோடு நெருக்கமாக நடந்து வந்தவளை கண்டு அவன் மனம் அவளிடம் கொள்ளைப் போனதை அவனால் மறுக்க முடியாது. 
 
அழகான பொருத்தமான ஜோடியாக பார்ப்பவர்களின் கண்ணுக்கு நிறைவாய் தெரிந்தவர்கள் கையோடு கைக்கோர்த்தப்படி கடலின் அருகில் சென்றுவிட்டனர். ஆனால் கடல் அலைகள் அவர்களது காலை தொடாத தூரத்தில் அவர்கள் நின்றிருக்க, “போய் காலை நனைப்போமா?” யாஷ் அவள் முகம் பார்த்துக் கேட்க,
 
“அய்யோ வேண்டாம், எனக்கு தண்ணீன்னா பயம்.” என்று மிரட்சியோடு ரித்து சொல்ல, நேற்றும் அங்கே ரெசார்ட்டில் உள்ள கடற்கரையில் இந்த வாக்கியத்தை கூறினாள். ஆனால் அப்போது அவன் அவளது முகத்தை பார்க்கவில்லை. ஆனால் இப்போதோ அவள் பேசும்போது அவளது முகத்தை பார்த்தவனுக்கு, இதே பாவனையை அவன் முன்னரே ஒருவரிடம் கண்ட தோரணை இருக்க, அது யார் என்பதும் அவனுக்கு ஞாபகத்தில் இருக்க, அப்போது தான் ‘இவளுக்கு என்னை முன்பே தெரியுமோ?’ என்பது போல் அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது.
 
அந்த சந்தேகத்தோடு அவள் முகத்தை சில நிமிடங்கள் பார்க்கவும், அப்போது “சோட்டீ,” என்று யாரோ அழைக்க, ரிதுபர்ணாவோ அந்த திசை நோக்கி  வேகமாக திரும்பினாள்.
 
யாஷ் நெஹ்ராவிற்கும் அந்த குரல் நன்றாக கேட்டது. அதிலும் அந்த குரலுக்கு ரித்து திரும்பியது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியை கூட்ட, ஏற்கனவே லேசாக துளிர்த்த சந்தேகம் இப்போது இன்னும் வலுவாக, “என்ன? யாராச்சும் உன்னை கூப்பிட்டாங்களா?” என்றுக் கேட்டான்.
 
“இல்லையே யாரோ சோட்டீன்னு கூப்பிட்டது போல இருந்துச்சு,” என்று அவள் கூற,
 
“அதுக்கு நீ ஏன் திரும்பணும்? அது என்ன உன்னோட பேரா?” என்று அவன் கேட்டான்.
 
தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து தடுமாறியவளுக்கு முதலில் என்ன பதில் கூறுவது என்பது புரியாமல் விழிக்க, அப்போது தான் விமான நிலையத்தில் பார்த்த அந்த குழந்தை ஞாபகத்திற்கு வர, “இல்ல ஏர்போர்ட்ல பார்த்த அந்த குழந்தை, அதான் சோட்டீ இங்க இருக்கோன்னு பார்த்தேன்.” என்று கூற,
 
“நம்ம ஏர்போர்ட்ல பார்த்த குழந்தை இங்க ஏன் வரப் போகுது?” என்று இன்னும் சந்தேகம் தீராதவனாக கேட்டவன்,
 
“என்னை உனக்கு முன்னமே தெரியுமா? என்னை இதுக்கு முன்ன நீ பார்த்திருக்கியா?” என்ற அவனது சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டான்.
 
‘பேசாமல் சொல்லிவிடலாமா?’ என்று அவள் நினைத்த நேரம், உண்மையாகவே விமான நிலையத்தில் பார்த்த குழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருக்க, “அங்கப் பாருங்க யாஷ். நம்ம ஏர்போர்ட்ல பார்த்த சோட்டீ. நான் நினைச்சது போல அவளை தான் கூப்பிட்டிருக்காங்க,” என்று சொல்லி குழந்தை இருந்த திசையை காட்ட, 
 
குழந்தையை பார்த்ததில் அவனது கவனமும் இப்போது குழந்தை பக்கம் திரும்ப அதன் அருகில் சென்றான். அவளும் அவனோடு சென்றாள். அங்கே தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் இருவரும் பேச்சுக் கொடுக்க, அதுவும் மழலை மாறாமல் இருவரோடும் பேசியது. 
 
குழந்தையை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த பெற்றோர்களும் இவர்கள் இருவரையும் விமான நிலையத்தில் பார்த்த ஞாபகம் வரவே அருகே வந்து பேசினர். பின் குழந்தையோடு அவர்கள் குடும்பமாக புகைப்படம் எடுக்க யாஷிடம் உதவிக் கேட்க அவன் எடுத்துக் கொடுத்து உதவினான். அவர்களும் இவர்கள் இருவரையும் நிற்கச் சொல்லி இவர்களது அலைபேசியில் உள்ள கேமரா மூலம் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொடுத்தனர்.
 
கடைசியாக ஒருமுறை குழந்தையை கொஞ்சிவிட்டு இருவரும் தனியாக வர, “சரி நீ நில்லு, உன்னை நான் போட்டோ எடுக்கிறேன்.” என்று சொல்லி ரித்துவை யாஷ் புகைப்படம் எடுக்க, அவளும் அவனை தனியாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தாள். பின் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
 
எடுத்த புகைபடங்களை இருவரும்  பார்வையிட்டப்படி இருக்க, “அவங்க எடுக்க சொல்லலைன்னா நமக்கு இப்படி போட்டோ எடுக்க தோனியிருக்காதுல்ல,” என்று யாஷ் கேட்டதற்கு,
 
“ம்ம் ஆமாம்,” என்று மட்டும் அவள் பதில் கூறினாள். அவனுக்கும் முக்தாவிற்கும் ஒருவேளை திருமணம் நடந்திருந்தால், இப்போது அவர்களது தேனிலவு பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்பது போல் ஒரு நொடி அவள் யோசித்துப் பார்த்தாள்.
 
பின்னரோ, ‘ச்சே, அதான் முக்தாவை கல்யாணம் செய்துக்கறதில் எனக்கு விருப்பமில்ல, அப்பா சொன்னதால தான் கல்யாணம் செய்துக்க இருந்தேன்னு யாஷ் சொன்னாங்களே, முக்தாக்கும் யாஷ் வேண்டாம்னு நினைச்சதால தான போனா, அப்புறம் எதுக்கு இதையே யோசிக்கிறேன்.’ என்று அவள் நினைவிற்கு தடைப் போட்டாள்.
 
அவளின் வெறும் ஆமாம் என்ற பதிலே இன்னும் எதையும் வெளிப்படையாக பேசும் அளவிற்கு நெருக்கம் இல்லாததை உணர்ந்த அவனும் அதைபற்றி மேலும் பேசாமல், “சரி கடலில் கால் நனைக்கலாம்னு சொன்னேனே, வா.” என்று அவளை கூப்பிட,
 
அவள் கண்கள் மீண்டும் மிரட்சியை காட்டவும், திரும்பவும் அதே முகம் அவனுக்கு ஞாபகத்திற்கு வர, அதை ஒதுக்கி தள்ளியவன், “நான் கூட இருக்கப்போ என்ன பயம்? வா ஜாலியா இருக்கும்,” என்று சொல்லி கைப்பிடித்து அவளை அழைத்துப் போக, அவளுக்குமே பழைய நினைவுகள் மனதில் வந்து போக, அவளது பயத்தை கூட மறந்து அவனோடு கடல் அலையில் நின்றாள்.
 
பின் இருவரும் கடைகள் இருக்கும் வீதிப் பக்கம் வந்தனர். “இளநீர் குடிக்கலாமா?” என்று யாஷ் கேட்க, அவளும் சரியென்று தலையசைத்தாள். இருவருக்கும் வாங்கியவன், அவளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு அவன் தனதை எடுத்துக் கொள்ள இருவரும் பருகினார்கள்.
 
பின் அப்படியே கடை வீதிப்பக்கம் வேடிக்கைப் பார்த்தப்படி நடந்துக் கொண்டிருக்க, தொப்பி, ஆடைகளெல்லாம் விற்றுக் கொண்டிருப்பதை பார்த்து, “தொப்பி வாங்கிக்கிறீயா?” என்று கேட்டான்.
 
“எதுக்கு யாஷ், தொப்பியெல்லாம்? வேண்டாம்,” என்று அவள் மறுக்க,
 
“உனக்கு போட்டா அழகா இருக்கும் வாங்கிக்க, ஏன் எதைக் கேட்டாலும் வேண்டாம்னு சொல்ற,” என்று கண்டித்தவன், 
 
“என்ன கலர்ல வேணும்,” என்றுக் கேட்டப்படியே தொப்பியை ஆராய,
 
“உங்களுக்கு எந்த கலர் பிடிக்குமோ, அதுவே வாங்குங்க யாஷ்.” என்று அவள் பதில் கூறினாள்.
 
“பிங்க் உனக்கு அழகா இருக்கும்,” என்று அதை வாங்கியவன், அதை அவளிடம் கொடுத்து, ” போட்டுக்க,” என்றான்.
 
அவளும் அதை அணிந்துக் கொண்டே, “நீங்களும் வாங்கிங்க யாஷ்” என்று கூற,
 
“எனக்கு வேண்டாம், போடப் பிடிக்காது.” என்று சொல்லி மறுத்துவிட்டான்.
 
தொப்பிக்கான பணத்தை கொடுத்துவிட்டு தள்ளி வந்ததும், “இந்த தொப்பியோட உன்னை ஒரு போட்டோ எடுப்போமா?” என்று கேட்ட யாஷ், அவளை எங்கு நிற்க வைத்து புகைப்படம் எடுப்பது என்று இடம் தேடினான். ஏனேனில் கடற்கரையை விட்டு இருவரும் தள்ளி வந்திருந்தனர்.
 
“இல்ல யாஷ், அடுத்த பீச்க்கு போவோம்ல அங்க எடுத்துக்கலாம், இப்போ டிரைவர் சொன்ன டைம் ஆயிடுச்சே, அவருக்கு போன் போடுங்க,” என்று சொல்ல, அவனுக்குமே அதுசரி என்று தோன்றவே, ஓட்டுனரை அலைபேசி மூலம் அழைத்தான்.
 
அடுத்து இருவரையும் ஓட்டுனர் ராதாநகர் கடற்கரைக்கு அழைத்து சென்றார். இங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டு சூரிய அஸ்தமனம் ஆகும்வரை இருக்கவும், ஏனெனில் இங்கு அதை நன்றாக இந்த இடத்தில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்.
 
இருவரும் அங்கு வரிசையாக இருந்த உணவகங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து மதிய உணவை முடித்துக்கொண்டு, கடற்கரைக்குச் சென்றனர். அங்கேயும் இருவரும் சில செல்ஃபிகள் எடுத்திக் கொள்ள, ரித்துவை தொப்பி அணிய வைத்து தனியாக சில புகைப்படங்களை யாஷ் எடுத்தான்.
 
ராதாநகர் கடற்கரையில் மக்கள் குதூகலத்தோடும் ஆரவாரத்தோடும் குளித்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் பரப்பிலேயே சிறிது நேரம் இருவரும் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தனர். 
 
பின் யாஷோ, “நாமும் போய் குளிப்போமா?” என்று ரித்துவிடம் கேட்க,
 
“அய்யோ வேண்டாம் யாஷ், நான்தான் சொன்னேனே எனக்கு தண்ணின்னா பயம்னு, நீங்க போய் குளிங்க, நான் சும்மா உட்கார்ந்திருக்கேன். அதுவுமில்லாம நம்ம கொண்டு வந்த பையை யார் பார்த்துப்பா? அதனால நான் இங்கேயே இருக்கேன், நீங்க போய் குளிங்க,” என்று அவள் கூற,
 
அதெல்லாம் வைக்க இங்க இடம் இருக்கும், கடல் குளிப்போம்னு யோசிச்சு தானே இன்னொரு ட்ரஸ் எடுத்துட்டு வந்த, அப்புறம் என்ன? நீ பயப்படாம வா. இங்கப்பாரு ஜாலியா எதைப்பத்தியும் கவலைப்படாம தண்ணீரில் மக்கள் எப்படி ஆட்டம் போட்றாங்க பாரு. இதெல்லாம் பார்த்தா எல்லோருக்குமே ஆசை வரும், உனக்கு வரலையா?” என்று அவன் கேட்டான்.
 
“எனக்குமே இப்படி ஜாலியா விளையாட ஆசையா தான் இருக்கு, ஆனா கடல் தண்ணீரில் அடிச்சிட்டு போயிட்டேனா என்ன செய்றது? அதான் பயமா இருக்கு யாஷ்.” என்று அவள் கூற,
 
“நான் கூட இருக்கேனே அப்படி உன்னை விட்டுவிடுவேனா? பயப்படாம சும்மா வா ரித்து,” என்று கைப்பிடித்து அவன் அழைக்கவும்,
 
“உன்னை விட்டுவிடுவேனா?” என்ற வார்த்தையிலேயே அவள் வானில் பறக்க ஆரம்பித்திருக்க, அவன் முதல் முறையாக அவளை ரித்து என்று அழைத்ததில் இந்த உலகம் முழுவதும் பறந்து பார்த்த மகிழ்ச்சி அவளுக்கு கிடைத்தது. 
 
அவனை இமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்க, “என்னோட முகத்தில் அப்படி என்ன தெரியுதுன்னு என்னையே பார்த்துட்டு இருக்க?” என்று அவன் கேட்க,
 
“முதல்முறை என்னை நீங்க ரித்துன்னு கூப்பிட்றீங்க யாஷ்.” என்று அவள் பதில் கூறினாள்.
 
“ஆமாமில்ல, என்னவோ இப்போ தான் நாம சகஜமா ஆயிட்டோமே, அதான் உன்னோட பேர் கூப்பிட தோனுச்சு போல, ஆனா நீ அப்படியில்லல்ல, ரொம்ப நாள் பழக்கம் இருப்பது போல் முதலிலிருந்தே  என்னோட பேரை நீ சொல்ற? எப்படி?” என்று அவன் கேட்க,
 
“ம்ம் ரொம்ப நாளான பழக்கம் தான்,” என்று அவள் தன்னை மறந்து கூறவும், அவன் அவளை சந்தேகத்தோடு பார்க்க,
 
அதை புரிந்தவளாக, “நீங்க அப்படித்தான் என்னை உணர வைக்கிறீங்க யாஷ்.” என்று பதில் கூறினாள். ஒருவிதத்தில் அது உண்மையும் கூட, ஒரு மாதம் தான் பார்த்து பழகியவன் என்றாலும், ஒரு யுகம் அவனோடு இருந்த நிறைவை அவனருகில் முன்பே  உணர்ந்திருக்கிறாள். இப்போது அப்படி அவனோடு வாழ வேண்டுமென்ற ஆசையும் அவளுக்கு தோன்றியது.
 
“இப்படி ஏதாவது பேசி கடலலையில் குளிக்காம நழுவலாம்னு பார்க்கிறீயா?” என்றவன் அவளை பிடிவாதமாக எழுப்பினான்.
 
தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைப்பதற்கென்று இருந்த இடத்திற்கு சென்று யாஷ் அதை வைத்தவன், அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். 
 
“அய்யோ வேண்டாம் யாஷ், பயமா இருக்கு வேண்டாம்,” என்று சொல்லியப்படியே ரித்து அவனோடு கடலுக்குள் சிறிது தூரம் செல்ல, ஒரு பெரிய அலை வந்து அவர்களின் உடலை தொட்டுச் செல்ல அதில் பயந்தவளாக அவனோடு ஒன்றினாள். அவனும் அவளை இறுக்கமாக பற்றிக் கொண்டான். அதுவும் அவள் இடையை, தண்ணீர் பட்டதில் அவளது மேல் சட்டை இன்னும் கொஞ்சம் தூக்கிக் கொள்ளவே அவளது வெண்ணிற மேனியை தான் அவன் பற்ற வேண்டியதாக இருந்தது. அது அப்போதைக்கு தற்செயல் தான் என்றாலும் அதன்பின் அது ஒரு சுகமான இம்சையாக இருக்க அப்படி பிடித்தவளை மீண்டும் அவன் விடவேயில்லை.
 
அதுபோல எவ்வளவு நேரம் கடலில் குளித்தப்படி விளையாடினார்கள் என்பதை இருவருமே அறியவில்லை. ஏனெனில் இருவருக்குமே அடுத்தவரின் அருகாமை பிடித்திருக்க, அந்த ராதாநகர் கடற்கரையில் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போல் மற்றவர்களை மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
 
முதலில் கடலைப் பார்த்து பயம், அடுத்து யாஷின் அருகாமையில் வெட்கம் இதெல்லாம் ரித்துவிற்கு முதலில் சங்கடத்தை கொடுத்தது. ஆனால் அதன்பிறகு அதையெல்லாம் யாஷ் மறக்கடித்திருந்தான். அதுவும் ஒவ்வொரு முறை அலை வரும்போதெல்லாம் அவனை அவள் ஒன்ற, ஒவ்வொரு முறையும் அணைப்பில் இறுக்கத்தை கூட்டி அவள் வெற்று மேனியில் அவனது கைகள் ஊர்வலம் வந்தது. இதில் அவனை நெருங்கும்போது அவனது உதடுகள் அவள் கன்னத்தில் பதியும்போதெல்லாம் சுகமான அவஸ்தையாக இருக்க, அதில் தன்னை மறந்து ஒன்றிப் போனாள்.
 
இருவருக்குமே கடலை விட்டு வெளியே வர மனசேயில்லை. ஆனால் நேரமாகிக் கொண்டிருந்ததே, அதனால் மனதேயில்லாமல் இருவரும் தங்கள் விளையாட்டை முடித்துக் கொண்டு வந்தனர். பின் உடைமாற்றுவதற்கு என்று ஆண்கள், பெண்கள் என்று இருவருக்கும் தனித்தனி இடங்கள் இருக்க, அங்கே சென்று உடை மாற்றிக் கொண்டு வந்தனர். 
 
அதுவும் ரித்து தன் ஈர கூந்தலை காய வைப்பதற்காக விரித்து விட்டிருந்தாள். இப்போது அவள் பைஜாமா குர்தாவில் இருந்தாள். இந்த நேரம் இந்த உடை உடுத்த வேண்டுமென்று அவள் எதுவும் திட்டமிட்டெல்லாம் செய்யவில்லை. அங்கே சென்னையில் பக்கத்து வீட்டு பெண்மணி தேர்ந்தெடுத்ததில் அவளுக்குமே பிடித்திருந்து தான் இந்த உடைகளையெல்லாம் தேர்ந்தெடுத்தாள். 
 
ஆனால் அதை உடுத்தும்போது யாஷ் என்ன நினைப்பானோ? என்ற பயத்தோடு தான் இன்று காலை அந்த உடையை அணிந்துக் கொண்டாள். அவன் பார்வையில் ரசனை தெரியவும் அவள் மனதிலிருந்த பயமும் அகன்றிருந்தது. ஆனால் கடலில் இப்படி ஆடை நனையும் அளவிற்கு அவள் குளிப்பாள் என்றெல்லாம் அவள் அறியவில்லை.
 
இப்போதோ வேண்டுமென்று தான் இந்த உடையை தேர்ந்தெடுத்து தான் அணிந்து வந்ததாக யாஷ் நினைப்பானோ என்ற பயம் மனதிற்குள் வந்து போனது. ஆனால் அடுத்த நொடியே, ‘ச்சே நான் ஏன் இப்படி யோசிக்கிறேன். தன்னுடனான நெருக்கம் யாஷ்க்கு பிடித்தமில்லாதது போல் தெரியவில்லையே, அதுவுமில்லாமல் இருவரும் கணவன், மனைவி எனும்போது எப்படி அது தவறாகும்?’ என்றெல்லாம் அவள் மனம் யோசித்து அமைதியானது.
 
கடலில் அதிக நேரம் இருந்ததால் இருவருக்கும் பசியெடுத்தது. அதனால் கடைவீதிப்பக்கம் நடந்துச் சென்று தேனீரும் சிற்றுண்டியும் சாப்பிட்டவர்கள் மீண்டும் கடற்கரை மணலில் வந்து அமர்ந்தனர். அதுவும் ரித்துவின் தோளில் யாஷ் கைப்போட்டு நெருக்கமாக அமர்ந்தான். முன்பு போல் இந்த நெருக்கம் இருவருக்கும் தயக்கத்தை கொடுக்கவில்லை. அதற்கு மாறாக இந்த நெருக்கம் அதன் எல்லையை தொட்டுவிடும் உணர்வை கொடுத்தது.
 
அவர்கள் அமர்ந்த சிறிது நேரத்திலேயே சூரியன் அஸ்தமனம் ஆக ஆரம்பிக்க, அந்த காட்சி ஒரு நெருப்பை பந்தை கடல் விழுங்குவது போல் தோன்றியது. இருவரும் அந்த காட்சியை தங்களின் அலைபேசியில் புகைப்படம் எடுத்தது மட்டுமில்லாமல், அப்படியே செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
 
அதன்பின் ஓட்டுனரை வரவழைத்து இருவரும் தாங்கள் தங்கியிருந்த ரெசார்ட் வந்து சேர்ந்தனர். அதன்பின் இரவுச் சாப்பாடுக்கு செல்லும் வரையுமே அவர்களுக்குள் பேச பொதுவான விஷயங்கள் அதிகம் இருந்தது.
 
பின்னரோ, “சரி டைம் ஆச்சு சாப்பிட போகலாமா?” என்று யாஷ் கேட்க,
 
“இன்னைக்கு ரெஸ்ட்டாரண்ட்ல என்ன மெனு இருக்கும் யாஷ். எனக்கு பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு,” என்று ரித்து கூறினாள்.
 
“என்ன மெனு இருக்கும்னு தெரியலையே, அங்க இருக்க மெனுவோட கூட ஏதாவது நான்வெஜ் சைட்டிஷ் வேணும்னா நாம தனியா ஆர்டர் செய்துக்கலாம்னு கபில் சொன்னான். ஆனா பிரியாணி இருக்குமான்னு தெரியல, வேணும்னா ரெசார்ட் விட்டு வெளிய போய் சாப்பிடலாமா?” என்று அவன் கேட்க,
 
“போலாம் யாஷ், நல்லா இருக்கும்,” என்று அவளும் ஆர்வம் காட்டினாள். 
 
பின் இருவரும் நடை பயணமாக ரெசார்ட்டை விட்டு வெளியே வந்தவர்கள் அருகில் ஏதாவது உணவகம் இருக்கிறதா? என்று பார்க்க, அப்படி ஏதுமில்லை. அங்கு ஒருவரிடம் விசாரிக்க இன்னும் சிறிது தூரம் சென்றால் வரிசையாக உணவகங்கள் இருக்குமென்று அவர் கூற, இருவரும் நடந்தனர். 
 
அங்கங்கே கடைகளிலும் தங்குமிடங்களிலும் மட்டுமே விளக்குகள் எரிய பாதையோ இருட்டாக இருந்தது. “என்ன யாஷ் இது ரோட்ல லைட்டே இல்லை.” என்று சொல்லியப்படி சிறிது பயத்தோடு அவனது கையை தன் இரு கைகளாலும் பிடித்தப்படி ரித்து நடந்து வந்தாள்.
 
அந்த நெருக்கம் அவனுக்கு பிடிக்க, “இது கூட நல்லா தான் இருக்குல்ல, இப்படி இருட்டான இடத்தில் நடந்துப் போறது, அதுவும் என்னோட கையை நீ பிடிச்சிக்க, இப்படி நெருக்கமா, ஜாலியா இருக்குல்ல,” என்று யாஷ் பதில் கூற, ரித்து வெட்கப்படுவது அந்த இருட்டிலும் அவனுக்கு நன்றாக தெரிந்தது.
 
இருவரும் உணவகங்களை தேடியப்படியே நடக்க, விசாரித்தவர் சொன்னது போல் அடுத்து வரிசையாக உணவகங்கள் தென்பட, அதில் பிரியாணி கிடைக்குமா? என்பதை விசாரித்து கிடைக்கும் என்று சொன்ன ஒரு உணவகத்திற்குள் நுழைந்து இருவருமே பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டனர்.
 
“ம்ம் கொஞ்சம் சுமாரா தான் இருக்கு,” யாஷ் சொல்லியப்படியே சாப்பிட,
 
“ம்ம் ஆனாலும் கொஞ்சம் வேற ஏதாவது சாப்பிடலாம்னு நினைச்சதுக்கு இது நல்லா தான் இருக்கு,” என்று சொல்லி ரித்து சாப்பிட்டாள்.
 
“உனக்கு பிரியாணின்னா ரொம்ப பிடிக்குமா?”
 
“பிரியாணின்னு இல்ல, காரசாரமா எந்த டிஷ் இருந்தாலும் பிடிக்கும், ஆஸ்திரிலேயாவில் என்னோட ஒரு தமிழ் ஃபேமிலி தங்கி இருந்தாங்க, அவங்க செட்டிநாடு பக்கம். அவங்க சமையலெல்லாம் காரசாரமா இருக்கும், சாப்பிட டேஸ்ட்டா இருக்கும், ரொம்ப பிடிக்கும்,” 
 
“சூப்பர். எனக்கும் தமிழ்நாட்டு சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும், அப்பாக்கு சப்பாத்தி செய்ய தான் தெரியும், இட்லி, தோசைன்னா மாவு தயார் செய்யல்லாம் தெரியாது. ஸ்கூல், காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் கொண்டு வந்த சாப்பாடு நல்லா இருந்துன்னு சொன்னா, உடனே ஹோட்டலில் வாங்கிக் கொடுப்பார்.” என்று தந்தையின் நினைவுகளில் மூழ்கிவிட, ரித்துவும் அந்த பேச்சில் மகிழ்ந்தாள்.
 
சாப்பிட்டு முடித்ததும் ரெசார்ட்டிற்கு திரும்பியவர்கள் மீண்டும் அறைக்குச் செல்லாமல் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு சென்றதும் தான் ஏன் வந்தோம் என்பது போல் இருவருக்குமே தோன்றியது. கடற்கரையை பார்த்ததுமே இன்று பகல் முழுவதும் கடலில் குளித்து விளையாடியது தான் ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ அந்த நெருக்கம் எப்போதும் வேண்டுமென்பது போல் இருவருக்கும் தோன்றியது.
 
அதிலும் யாஷ் நிலை தான் பாவம், தன் மனைவி தனக்கு முழுமையாக வேண்டுமென்பது போல் அவனது உடலில் ஒவ்வொரு அணுக்களும் சொல்லிக் கொண்டிருக்க, ‘இல்லை அவளைப்பற்றி முழுதாக அறிந்துக் கொண்டப் பின்னரே எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும்’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
 
“அடப்பாவி, இன்னைக்கு அவக்கிட்ட நீ நடந்துக்கிட்ட விதம் அப்படி ஒன்னும் தெரியலையே,” என்று மனசாட்சி கேள்விக் கேட்க,
 
‘அதுக்குன்னு புதுப் பொண்டாட்டியை பக்கத்தில் வச்சிக்கிட்டு, அதுவும் ஹனிமூன் வந்த இடத்தில் அதுக்கூட இல்லன்னா வரலாறு அப்புறம் என்னை தப்பா சொல்லாது,’ என்று அவன் மனசாட்சியிடம் அவன் பதில் கூறினான்.
 
“அதான் சொல்றேன். ஹனிமூன் வந்தும் இப்படி இருக்கணும்னு என்ன அவசியம்? இப்போ அவளைப்பத்தி தப்பா ஏதாச்சும் தெரிஞ்சா அவளை நீ விட்டுடப் போறீயா?” என்ற மனசாட்சியின் கேள்விக்கு,
 
‘அது எப்படி முடியும்? இனி வாழ்நாளுக்கும் அவக்கூட தான் என்னோட வாழ்க்கை. அவளை விட்டு பிரியவே மாட்டேன். அவளோட கடந்தக்காலம் எப்படியிருந்தாலும், நிகழ்காலமும் எதிர்காலமும் இனி என்னோட தான்,’ என்று உறுதியாக சொல்லிக் கொண்டான்.
 
“அப்புறம் என்னடா இன்னும் தயக்கம், அவளை முழுசா ஏத்துக்க வேண்டியது தானே,” என்று மனசாட்சி எடுத்துரைக்க,
 
‘ம்கூம் இது பேச்சை இதுக்கும் மேலேயும் கேட்டா என் நிலைமை ரொம்ப மோசமாகிடும்’ என்று சொல்லிக் கொண்டவன்,
 
“ம்ம் ரூம்க்கு போலாமா ரித்து, உனக்கு தூக்கம் வரல?” என்று அவளிடம் கேட்டான்.
 
பகல் போலவே இப்போதும் கடலில் விளையாட அழைப்பான் என்று அவள் மனம் எதிர்பார்த்து காத்திருக்க, தூங்கலாமா? என்ற கேள்வியில் அவள் மனம் ஏமாற்றமடைந்தது. ஏனோ அவன் அருகாமையில் கடல் அந்த அளவிற்கு அவளுக்கு பயத்தை அளிக்கவில்லை. அவனோடு இப்படி நேரத்தை செலவழிப்பது அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவனே சொல்லிவிட்டதால் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவனோடு அறைக்குச் சென்றாள்.
 
அந்த சூழ்நிலையை மாற்றவே அவளை அறைக்கு அழைத்து வந்தவனுக்கு இன்னும் சோதனைகள் மிச்சம் உள்ளதை அவன் அறியான்.
 
கடற்கரையில் உப்பு தண்ணீரில் குளித்ததால், உடை மாற்றும் போதும் கூட அங்கிருந்த நீரில் அவசரமாக ஒரு குளியல் போட்டு உடை மாற்றி வந்ததால், இருவருமே தூங்குவதற்கு முன் நன்றாக குளித்துவிட்டு தூங்கலாம் என்று நினைத்தார்கள். அதனாலேயே சாப்பிட்டதும் உடனே குளிக்க முடியாது என்பதால் தான் கடற்கரையில் நேரத்தை கடத்த எண்ணினர்.
 
இப்போதும் சாப்பிட்டு சிறிது நேரம் ஆகியிருந்ததால் குளிக்க முடிவு செய்து, அதன்படி யாஷ் முதலில் குளித்துவிட்டு எப்போதும் அணியும் டீஷர்ட், ஷாட்ஸ் அணிந்து வந்தான் என்றால், ரித்துவோ குளித்துவிட்டு ஒரு கையில்லாத மெல்லிய நைட்டீ அணிந்து வந்தாள். அது அவளது உடலழகை நன்றாகவே எடுத்துக் காட்டியது.
 
இன்னும் அவர்களின் உறவு முழுமையாகததால் அவளுக்குமே அவன் முன் இப்படி உடை அணிவது தயக்கமாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது? எடுத்து வந்த உடைகளில் ஒன்றை அணிந்து தானே ஆக வேண்டும், ‘அய்யோ அந்த ஆன்ட்டியோட போய் ட்ரஸ் எடுத்திருக்கவே கூடாது. அப்போ ஒன்னும் தெரியல, இப்போ சங்கடமாக இருக்கே,’ என்று நினைத்தப்படி தான் அந்த உடையை அணிந்து வந்தாள்.
 
அதைப்பார்த்தவனுக்கோ, ‘இவ காலையிலிருந்து நம்மளை இப்படி சோதிக்கிறாளே,’ என்று தான் தோன்றியது.
 
கவர்ச்சியான உடை அணிந்து வரும் பெண்களையெல்லாம் நேரிலேயே எத்தனையோ முறை பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் இப்படி தோன்றியதில்லை. ஆனால் இவள் தன்னவள் என்ற உணர்வு அவனது உணர்ச்சிகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்க, எங்கே அவன் கட்டுப்பாட்டை மீறி விடுவானோ என்று தோன்றியதால், 
 
நேற்று இரவு அவளது செய்கையை பார்த்து வியந்தவனுக்கு இன்று அவளைவிட ஆயிரம் மடங்கு தவிப்பு அவனுக்குள் இருக்க, “சரி குட்நைட் தூங்கலாம்,” என்று சொல்லி தொலைக்காட்சியை அணைத்தவன், போர்வையை முகம் வரை இழுத்துப் போட்டு உறங்க முயற்சிப்பது போல் அவன் நடந்துக் கொள்ள,
 
அவனது செய்கைகளை புரிந்துக் கொள்ள முடியாமல் ரித்து விழித்தாலும், ‘நல்லவேளை உடனே தூங்கிட்டாங்க, இல்ல அவங்க பக்கத்தில் தூக்கம் வராம நேத்து போல படுக்க சங்கடமா இருக்கும்,’ என்று நினைத்தப்படியே அவளும் வந்து அருகில் படுத்துக் கொள்ள, இன்றுமே காலையிலிருந்து சுற்றி திரிந்த அலுப்பில் இருவரும் சிறிது நேரத்திலேயே உறங்கினர்.
 
தேனன்பு தித்திக்கும்..