TTA 11

தேன் 11
 
ரிதுபர்ணாவும் அந்த பெண்மணியும் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் யாஷ் கவனிக்கவில்லை, அவன் அங்கே வரும்போது ரித்துவிடம் அந்த பெண்மணி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, ‘யார் அவர்?’ என்பது போல் அவன் யோசித்தப்படி வரும்போது தான், அவர் “பை சோட்டீ,” என்று அவளைப் பார்த்து கூறியப்படியே நடந்தார்.
 
அதைக்கேட்டு யாஷ் அதிர்ச்சியெல்லாம் ஆகவில்லை, ஏற்கனவே அவன் யூகித்தது தானே, அதனால் அவளைப் பார்த்தப்படி அவன் நிற்க, அவள் தான் அவன் கண்டுக் கொண்டானோ என்று பதட்டத்தோடு திரும்பினாள்.
 
அந்த பதட்டமே அவனது சந்தேகத்தை அதிகப்படுத்த, அவள் அருகில் வந்தவன், “அப்போ நீ சோட்டீ தானே? அப்படித்தானே அந்த லேடி உன்னை கூப்பிட்டாங்க? இப்போதும் நாம ஏர்ப்போர்ட்ல பார்த்த குழந்தையை கூப்பிட்டாங்கன்னு பொய் சொல்லாத, நீ சுஷாந்தோட கசின் தானே? எட்டு வருஷம் முன்ன அவங்க வீட்டுக்கு வந்த சோட்டீ நீ தானே?” என்று முதலில் சிறிது கோபத்தோடு பேசியவன், 
 
“இதை ஏன் என்கிட்ட மறைக்க நினைக்கிற ரித்து? நீதான் சோட்டீன்னு சொல்றதில் உனக்கு என்ன? சொன்னா நான் சந்தோஷம் தானே படுவேன். அப்புறம் உனக்கு என்ன தயக்கம்? எப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்ட? ஏன் நீதான் சோட்டீன்னு என்கிட்ட சொல்லல ரித்து,” என்று அவள் தான் சோட்டீ என்ற உண்மை தெரிந்த மகிழ்ச்சியில் பேச, 
 
அவனை நேருக்கு நேராக பார்த்து பேச முடியாதவள், “நீங்க சொல்றது எனக்கு புரியல யாஷ், நான் சோட்டீ தான், என்னை எங்க வீட்டில் அப்படித்தான் கூப்பிடுவாங்க, ஆனா நீங்க நினைக்கும் சோட்டீ நான் இல்ல, நீங்க சொல்ற சுஷாந்த் யாரு? அப்படி யாரையும் எனக்கு தெரியாது? நான் இதுக்கு முன்ன சென்னைக்கு வந்ததுமில்ல, உங்களை பார்த்ததுமில்ல, நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க யாஷ்” என்று தயங்கி தயங்கி பேசினாள்.
 
“அப்படியா? அப்போ அன்னைக்கு பீச்ல சோட்டீன்னு கூப்பிட்டதும் நீ திரும்பி பார்த்தீயே? அப்போ நான் கேட்கும்போது, வீட்டில் என்னை சோட்டீன்னு செல்லப் பேர் வச்சு கூப்பிடுவாங்கன்னு ஏன் சொல்லல, அதை ஏன் நீ மறைக்கணும்? எனக்கு தெரியக் கூடாதுன்னு தானே நீ நினைக்கிற? அதான் ஏன் ரித்து? நீதான் சோட்டீன்னு சொல்றதில் என்ன தயக்கம்? நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கே இதை நீ சொல்லியிருந்தா, எல்லா அப்பவே சரியா போயிருக்குமே ரித்து,” என்று அவன் கேட்க,
 
‘ம்ம் எல்லாம் சரியா தான் போயிருக்கும் யாஷ், இப்ப இருப்பதை விட என்னை தாங்கு தாங்குன்னு தாங்கியிருப்பீங்க, ஆனா இப்போ எனக்கு கிடைச்ச இந்த சந்தோஷம் அப்போ கிடைச்சிருக்குமான்னு எனக்கு தெரியல யாஷ், இப்போ உங்க மனசுல எனக்குன்னு ஒரு இடமிருக்குன்னு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஒருவேளை என்னைப்பத்தி தெரிஞ்சிருந்தா கல்யாணம் ஆனதால கடமைக்காக என்னை ஏத்துட்டு இருப்பீங்க, இப்போதோ என்மேல கோபமா இருந்த நீங்க, இவ்வளவு சீக்கிரம் மாறினதுக்கு என்மேல கொஞ்சமாவது அன்பு வச்சது தானே காரணம். இந்த அன்பை தான் நான் எதிர்பார்த்தேன். என்னைப்பத்தி சொல்லியிருந்தா இப்போ இருக்க சந்தோஷம் எனக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்,’ என்று மனதில் தான் சொல்லிக் கொண்டாள். 
 
ஆனால் அவனிடமோ, “சோட்டீ என்கிற என்னோட நிக் நேம் அவ்வளவு முக்கியமான ஒரு விஷயமா தெரியல, அதான் அதைப்பத்தி நான் சொல்லல, நீங்க சொல்றது போல, உங்களுக்கு தெரிஞ்ச சோட்டீ நானா இருந்தா, அதை சொன்னா அப்பவே நமக்குள்ள எல்லாம் சரியா போகும்னா, நீங்க சொல்றது போல அதை மறைப்பதில் எனக்கு என்ன இருக்கு யாஷ்?” என்று அவள் திருப்பிக் கேட்க, அவனுக்குமே கொஞ்சம் குழப்பாமனது.
 
அவள் தனக்கு தெரிந்த சோட்டீயாக தான் இருக்க வேண்டுமென்று மனசு எடுத்துரைத்தாலும், ஒருவேளை அவள் சொல்வது போல் இருக்குமோ? என்று புத்தியும் எடுத்துரைக்க,
 
“இங்கப்பாரு ரித்து, நீ ஒத்துக்கலன்னா என்னால நீ சோட்டீயா? இல்லையான்னு கண்டுப்பிடிக்க முடியாதுன்னு நினைச்சீயா? சுஷாந்த் இப்போதும் எனக்கு நெருக்கம் தான், அவன் பிஸ்னஸ்ல எப்போதும் பிஸியா இருப்பதாலும், இப்போ சிங்கப்பூர்ல இருப்பதாலும் தான் நாங்க ரொம்ப காண்டாக்ட்ல இல்ல,
 
இதுவே அவன் சென்னை வந்தா கண்டிப்பா என்னை பார்க்காம இருக்க மாட்டான். நானுமே அப்படித்தான், இங்கப்பாரு அவனுக்கு போன் போட்டா உன்னைப்பத்தி ஒரு நிமிஷத்தில் தெரிஞ்சிக்க முடியும்,” என்று அவன் சொல்ல,
 
“அப்படி ஒரு வாய்ப்பிருக்கும் போது, அப்போ உங்க ஃப்ரண்ட்க்கிட்டயே கேளுங்க, அவர் சொன்னதும் அப்போ நான் யாருன்னு உங்களுக்கு தெரியத் தானே போகுது, அதாவது நீங்க நினைக்கும் ஆள் நானா? இல்லையா? என்று தெரியத்தானே போகுது,” என்று அவள் அவன் கண் பார்த்து கூறினாள்.
 
அவள் இப்போதும் அப்படி பேசியதில் யாஷ் உண்மையில் குழம்பித் தான் போனான். “சரி சுஷாந்திடம் பேசிட்டு அப்புறம் இருக்கு உனக்கு,” என்று அவளிடம் கோபமாக உரைக்க, விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரவும், இருவரும் சென்றார்கள்.
 
யாஷ் கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவனது நிலை புரிந்து ரித்துவும் அமைதியாக கண்களை மூடி சாய்ந்துக் கொண்டாள். ஆனால் மனதில் ஆயிரம் சம்பவங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
 
எப்படியோ சுஷாந்த் மூலமாக யாஷ் அவள் தான் சோட்டீ என்று கண்டுப்பிடித்து விடுவான் என்பது உறுதி. அப்படியிருக்க அதை அவளே சொல்லியிருக்கலாம், ஆனால் சொல்ல தான் முடியவில்லை. 
 
யாஷை பொறுத்தவரை அவள் தன் நண்பன் சுஷாந்தின் உறவுக்காரி. அவர்கள் வீட்டிற்கு வந்தபோது அவளை பார்த்திருக்கிறான். அவளோடு பேசியிருக்கிறான். அவ்வளவு தான்,
 
ஆனால் ரித்துவிற்கு அப்படியில்லை. அந்த நாட்கள் தன் வாழ்வில் வந்திருக்கவே வேண்டாமென்று கூட சில முறை நினைத்திருக்கிறாள். அந்த நினைவுகளை மறக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறாள். இப்போதோ அப்போது யாஷை பார்த்திருக்கவில்லை என்றால் அந்த சூழலில் யாஷை மணந்திருக்க நினைத்திருப்பாளா? இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தனக்கு கிடைத்திருக்குமா? என்று யோசிப்பதும் உண்டு. ஆனால் அப்போதோ அந்த நாட்களின் நினைவுகளை அகற்ற முடியாமல் விபரீத முடிவுக்கு சென்றாளே, அந்த நாட்களை கடந்து வந்ததை நினைத்தால், இப்போது நினைத்தால் கூட மனதில் பாரம் ஏறிக் கொள்கிறது. அந்த பயணம் முழுதும் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.
 
ரிதுபர்ணாவின் குடும்பம் லக்னோவை பிறப்பிடமாக கொண்ட ஒரு பாரம்பரிய வசதியான குடும்பம். இப்போதும் அவளின் சித்தப்பா குடும்பம் அங்கிருக்கும் தொழிலை பார்த்துக் கொண்டு அவர்களின் பூர்வீக வீட்டில் வசிக்கிறார்கள். அவளின் தாத்தா ரித்வன் குப்தா, பாட்டி கலாவதி குப்தா இவர்களுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். ரிதுபர்ணாவின் தந்தை ரிஷிவர்த் குப்தா தான் வீட்டின் மூத்த மகன். அவருக்குப்பின் ஒரு தங்கை அடுத்து இரண்டு தம்பிகள்.
 
லக்னோவில் மட்டுமே தங்களது தொழிலை ரித்வன் நடத்திக் கொண்டிருக்க, முதலில் பூனாவில் அதை விரிவுப்படுத்தும் முயற்சியை ரிஷிவர்த் தனது பொறுப்பாக்கி கொண்டார். அதனால் அவர் அங்கேயே இருப்பது போல் இருக்க வேண்டி வரும் என்பதால், அவருக்கு திருமணத்தை முடித்தே பூனாவிற்கு அனுப்பி வைத்தனர்.
 
வீட்டில் பார்த்து முடித்த திருமணம் என்றாலும் தங்கள் வாழ்க்கை ஆரம்பமே தனிக்குடித்தன வாழ்க்கை என்பதால் ரிஷியும் ஸ்வராகிணியும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்தனர்.
 
ஸ்வராகிணி இயல்பிலேயே யாரோடும் அவ்வளவாக ஒட்ட மாட்டார். இதில் ஆரம்பத்திலேயே தனிக்குடித்தன வாழ்க்கை என்பதால் புகுந்த வீட்டோடு அத்தனை ஒட்டுதல் இல்லை. ஏதாவது விசேஷம், பண்டிகை என்றால் மட்டுமே லக்னோவிற்கு இருவரும் செல்வார்கள். அப்போதும் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கி தான் இருப்பார்.
 
இதில் அதற்குப்பின் அதுபோன்ற நாட்களுக்கு கூட அவர் செல்வதில்லை. அதற்கு காரணம் அவர் தாய்மை அடையாதது தான், ரிஷிக்கு பிறகு அவர் தங்கை, தம்பிகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து குழந்தைகளும் இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு இன்னும் கடவுள் அந்த வரத்தை அளிக்கவில்லை. பார்க்கும் உறவினர்களெல்லாம் அதைபற்றியே கேட்பதால் ஸ்வராகிணி வீட்டோடு ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்தார். பிறந்த வீட்டிற்கு செல்வதை கூட குறைத்துக் கொண்டார். கணவனை மட்டுமே தன் பிடியாக நினைத்து அவர் வாழ்ந்துக் கொண்டிருந்தார். 
 
ஸ்வராகிணியிடம் தான் குறை இருக்கிறது. ஆனாலும் ரிஷி அதை பெரிதாக கருதாமல் மனைவியை இன்னும் அதிகமாகவே நேசிக்க ஆரம்பித்தார். குழந்தையில்லாதது ஒரு குறையாக இருந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வாழ இருவரும் பழகிக் கொண்டனர். ஆனால் உறவினர் கேட்கும் கேள்விகளுக்கு பாதிக்கப்பட்ட இன்னொரு நபர் கலாவதி. இப்போது ரித்வன் குப்தாவும் உயிரோடு இல்லை. கடைசி மகன் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அவர் இறந்து விட்டார்.
 
கடைசி மகன் மட்டும் லக்னோவில் உள்ள தொழிலைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார். கலாவதியும் அவருடனே இருக்கின்றார். மற்ற இன்னொரு மகனும் மருமகனும் ரிஷிவர்த்தை போல வேறு மாநிலங்களில் தொழிலை விரிவுப்படுத்துக் கொண்டு வசிக்கின்றனர்.
 
தனித்தனியாக தொழிலை பார்த்துக் கொண்டு வெவ்வேறு ஊரில் இருந்தாலும் மகன்கள் மூவரும் அன்னையின் பேச்சைக் கேட்டு தான் நடப்பர். வீட்டில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை கலாவதி தான் எடுப்பார். சொத்துக் குறித்த அதிகாரங்களும் அவரிடம் தான் இருந்தது.
 
அதற்காக அவர் யாரையும் அடிமையாக நடத்துபவர் கிடையாது. அன்பால் வழிநடத்துபவர் தான், ஆனால் ஸ்வராகிணி விஷயத்தில் அவர் எதிராக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
பார்ப்பவர்களெல்லாம் இன்னும் ஏன் உன் மூத்தப் பிள்ளைக்கு குழந்தையில்லை. உன் மருமகளிடம் குறையா? இல்லை உன் மகனிடம் தான் குறையா? என்று அவரை காயப்படுத்தும் அளவிற்கு பேசவும், அவர் மகனை நேரில் அழைத்து பேசினார்.
 
மனைவியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்தாலும், தன் அன்னையிடம் உள்ள மரியாதையினால் அவளிடம் தான் குறை என்பதை ரிஷி கலாவதியிடம் மறைக்காமல் கூறிவிட்டார்.
 
அப்படியிருக்க தன் மகனை மற்றவர்கள் குறை சொல்வதை பொறுக்க முடியாத கலாவதி மகனுக்கு மறு திருமணம் செய்யும் முடிவை கூறினார்.
 
ஆனால் ரிஷிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை, அன்னையிடம் எவ்வளவோ மறுத்தும், “என்னோட மகனை யாரும் குறை சொல்றதை நான் விரும்பல, அதனால இந்த கல்யாணம் நடக்கும், இதனால் ஸ்வராகிணி வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஆனா அவள் ஏதாவது பிரச்சனை செய்ய நினைச்சா அவ உன்னைவிட்டு பிரிஞ்சு தான் ஆகணும்,” என்று முடிவாக கூறிவிட்டார்.
 
அன்னை சொன்னால் செய்யாமல் விடமாட்டார் என்பது ரிஷிக்கு நன்றாகவே தெரியும், அதனால் கடைசி முயற்சியாக வெளிநாட்டிற்கு சென்றாவது சிகிச்சை எடுத்து ஸ்வராகிணியின் குறையை தீர்க்க ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு ரிஷி அன்னையிடம் கேட்க, 
 
“இன்னும் ஒருவருடம் தான் அவகாசம், அதுக்குப்பிறகு என்னுடைய முடிவு தான் இறுதி முடிவு.” என்று மகனிடம் உறுதியாக கூறினார்.
 
“மருத்துவரிடம் மீண்டும் ஒருமுறை ஸ்வராகிணி தாயாக ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? வெளிநாட்டில் சிகிச்சை பெற வழியிருக்கிறதா? ஏதாவது ஒருவழியில் எங்களுக்கு வாரிசு வந்தாக வேண்டுமென்று ரிஷி கூற, அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தது தான் செயற்கை முறையில் கருத்தரித்தல், சரகோசி அதாவது வாடகை தாய் முறை.
 
2002 ல் தான் இந்தியாவில் வாடகை தாய் முறை சட்டம் இயற்றி வணிக ரீதியாக செயல்பட ஆரம்பித்தது. இப்போது அது ஒரு வியாபார நோக்கத்தோடு நடந்துக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே, ஆனால் அதற்கு முன்னரோ வசதியானவர்களுக்கு தங்கள் குறையை மறைக்க, தங்கள் சொத்திற்கு வாரிசு வேண்டுமென்பதற்காக பணத்தை செலவு செய்து இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவர்களின் உதவியை நாடினர்.
 
அப்போது இப்படி ஒரு முறையிருப்பது அதிகம் பேருக்கு தெரியாது. தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும் தயங்கினார்கள். அப்படியும் தங்களின் தேவைக்காக சிலர் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்ப, ரிஷியும் அந்த வழியில் தங்களுக்கு ஒரு வாரிசை பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
 
அதற்கான பரிசோதனைகளின் முடிவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதில் வாடகை தாயின் கர்ப்பபை மட்டுமல்ல, கருமுட்டை தானமும் அவர் தானம் செய்ய வேண்டுமென்பது தெரிய வர ஸ்வராகிணிக்கு இதில் துளி கூட விருப்பமில்லை.
 
குழந்தை இல்லையென்றால் என்ன? இறுதி வரை உனக்கு நான், எனக்கு நீ என்று வாழ்ந்துவிட்டு போகலாமே, இந்த குடும்பத்திற்கு வாரிசு தான் மற்ற பிள்ளைகள் மூலம் கிடைத்திருக்கிறதே, பிறகு என்ன? என்பது தான் ஸ்வராகிணியின் எண்ணமாக இருந்தது. ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற மனநிலையும் அவருக்கு இல்லை. இறுதி வரை இது தான் விதியென்றால் இப்படியே இருந்துவிட்டு போகலாமென்று நினைத்தார்.
 
ஆனால் தன் மாமியார் அப்படி விடமாட்டார். தன் கணவனும் அன்னை பேச்சை மீறமாட்டார் என்பது அவருக்கு தெரியும், எங்கே தன் கணவனிடமிருந்து தன்னை பிரித்துவிடுவார்களோ என பயந்து சிறிதும் மனதில் விருப்பமில்லாமல் அந்த முடிவுக்கு சம்மதித்தார்.
 
மனைவியின் மனது புரிந்தாலும் அவரை விட்டு பிரியக் கூடாது என்பதால் வேறுவழியில்லாமல் இந்த முடிவை எடுத்ததாக நினைத்துக் கொண்ட ரிஷிவர்த் குப்தாவிற்கு இதனால் ஏற்படும் பின்விளைவுகள் அப்போது தெரியவில்லை.
 
கலாவதியிடம் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள போவதாக கூறிவிட்டு வேறு மாநிலத்திற்குச் சென்று வாடகை தாய் முறையில் குழந்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கலாவதியிடம் ஸ்வராகிணி கருவுற்றிருப்பதாக ரிஷ்வர்த் பொய் கூறியவர், ஸ்வராகிணியோடு வெளிநாட்டிற்கு சுற்று பயணம் சென்றார். அவ்வப்போது குழந்தையின் வளர்ச்சிப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இந்தியா வருவார்.
 
கலாவதியின் மூன்றாவது மருமகளும் அந்த நேரத்தில் கருவுற்றிருந்ததால் கலவாதிக்கு அவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருந்ததால் அவரை சமாளிப்பது ரிஷிக்கு எளிதாக இருந்தது.
 
இப்படியே குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் கடந்தப்பின் தான் ரிஷ்வர்த் தம்பதியிரிடம் குழந்தையை ஒப்படைக்க, குழந்தையோடு நேராக இருவரும்  லக்னோவிற்கு தான் வந்தார்கள்.
 
பேத்தியை கண்டதும் கலாவதி பூரித்துப் போனார். ஊரைக் கூட்டி பேத்தியின் வரவை கொண்டாடினார். எப்போதும் தன் கையிலேயே வைத்திருந்தார். உடன் ரிஷியும் இருந்தால், ஏனோ ஸ்வராகிணிக்கு அவர்களெல்லாம் ஒரு பந்தமாக  தான் மட்டும் தனியாக என்ற உணர்வு தோன்றிவிடும்,
 
ரிஷிக்கு மனைவியின் உணர்வு புரிந்ததாலோ என்னவோ ஸ்வராகிணி இருக்கும் சமயத்தில் அவருமே குழந்தையின் அருகே செல்லமாட்டார்.
 
பிரசவத்தில் சிக்கல், ஸ்வராகிணிக்கு அதனால் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் என்றெல்லாம் கலாவதிக்கு சந்தேகம் வரக் கூடாது என்று ரிஷி பொய்களாக கூற, குழந்தைக்கு தாய்ப்பால் கூட கிடைக்கவில்லையே என்று கலாவதி உருகிப் போய்விட்டார்.
 
ஸ்வராகிணியால் குழந்தையை தனியாக பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் கலாவதி அவர்களோடு பூனாவிற்கு வந்தவர், ரிதுபர்ணா பள்ளி செல்லும் வரையுமே அங்கு தான் இருந்தார். ஒருவிதத்தில் ஸ்வராகிணிக்கு அது நிம்மதியை கொடுத்தது. என்னவோ குழந்தையை தன் குழந்தையாக ஸ்வராகிணியால் ஏற்றுக் கொள்ள முடியாததால் கலாவதி உடன் இருப்பது நல்லது என்றே நினைத்துக் கொண்டார்.
 
ஆனால் குழந்தையை தன் வீட்டு வாரிசு என கலாவதி சீராட்டி வளர்க்கும் போதெல்லாம் அதைப் பார்த்து அவரால் மகிழ்ச்சியடையும் முடியவில்லை. பாட்டியின் அருகாமையில் வளர்ந்ததில் ரித்துவிற்கு ஸ்வராகிணியின் ஒதுக்கமெல்லாம் தெரியவில்லை. தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த குழந்தையென்று ரித்துவிற்கு அது இது என்று கலாவதின் ஏதாவது சாப்பிட கொடுத்துக் கொண்டிருப்பார். அதனால் சிறுவயதில் ரித்து குண்டாக கொழுகொழுவென்று இருப்பாள்.
 
மூத்த மகனின் வாரிசு என்றாலும் ரிதுபர்ணா கடைசியாக பிறந்ததால் கலாவதி அவளை சோட்டீ என்று செல்லப் பெயர் வைத்து தான் அழைப்பார். அவளை மட்டுமல்ல தன் மகன்கள் வழிப் பேரப் பிள்ளைகள் அனைவரையும் அவர் செல்லப் பெயர் வைத்து தான் அழைப்பார். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் அனைவருக்கும் தன் கணவர் ரித்வன் குப்தாவின் பெயரின் முதல் இரண்டு எழுத்து ரித் என்று ஆரம்பிப்பது போல் தான் அவர்கள் பெயரெல்லாம் இருக்கும்,
 
அதனால் அவர் செல்ல பேர் வைத்து அழைக்க, குடும்பத்தில் அவர்களின் செல்லப் பெயர்களே பிரபலம், சில பேருக்கு உண்மையான பெயர் கூட தெரியாது. பள்ளி, கல்லூரிகளில் தான் அவரவர் உண்மை பெயரை முழுமையாகவோ இல்லை சுருக்கியோ அழைப்பர். அப்படி ரிதுபர்ணாவை பள்ளியில் அதிகம் ரித்து என்று சுருக்கி அழைப்பர்.
 
பேரப் பிள்ளைகள் பெரியவர்களான பின் கலாவதி முடிவெடுக்கும் பொறுப்புகளை பிள்ளைகளிடமே ஒப்படைத்துவிட்டு அவர்களோடு நேரத்தை செலவழிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் சொத்துக்கள் இன்னும் பிரிக்கப்படாமல் தான் இருந்தது. என் காலம் முடியும்வரை அனைத்தும் ஒன்றாகவே இருக்கட்டும் என்று கலாவதி கூறிவிட்டார். தொழிலில் வரும் லாபமே தேவைக்கதிமாக இருக்க, பிள்ளைகளும் அன்னையின் முடிவுக்கு தலையசைத்தனர்.
 
ஒரே இடத்தில் என்று இல்லாமல் அனைத்து பிள்ளைகள் வீட்டிற்கும் கலாவதி சிறிது சிறிது நாள் என தங்குவார். அதிலும் விடுமுறை தினங்கள் என்றால், பேரப் பிள்ளைகள் அனைவரையும் மொத்தமாக அழைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பிள்ளை வீட்டில் தங்கிவிடுவார்.
 
அப்படி ரிதுபர்ணா ஒன்பதாம் வகுப்பு முடித்த போது கலாவதி அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்திருந்தார். அங்கே கலாவதியின் மகள் மற்றும் மருமகன் இவர்களது தொழிலை விரிவுப்படுத்திக் கொண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தான் குடும்பத்தோடு தங்களது குடிப்பெயர்ப்பை அங்கே மாற்றிக் கொண்டிருந்தனர். 
 
கலாவதிக்கு மொத்தம் எட்டு பேரன் பேத்திகள். ரிஷிக்கு குழந்தையில்லாததால் அடுத்து அவரது மகளுக்கு தான் முதல் குழந்தை பிறந்தது, அவள் பெயர் இஷானி, அவளுக்கு இரு சகோதரர்கள் நிஷாந்த், சுஷாந்த். கலாவதியின் மூன்றாவது மகனுக்கு ரித்தேஷ், ரித்விகா என்று இரண்டு பிள்ளைகள், நான்காவது மகனுக்கு ரித்திமா, ரிதன்யா என்று இரண்டு மகள்கள். கடைக்குட்டியாக ரிதுபர்ணா.
 
இஷானிக்கு சிலமாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குச் சென்றிருந்தாள். நிஷாந்திற்கும் ரித்தேஷுற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. இருவரும் படிப்பை முடித்துவிட்டு அவரவர் தந்தைகளோடு தொழில் கற்றுக் கொண்டிருந்தனர்.
 
சுஷாந்த் பொறியியல் படிப்பில் இரண்டாம் வருடத்தில் இருந்தான். ரித்விகாவிற்கும் ரித்திமாவிற்கும் சில மாதங்கள் தான் வயது வித்தியாசம். இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர காத்திருந்தனர். 
 
அதேபோல் ரிதன்யா ரிதுபர்ணாவை விட நான்கு மாதம் பெரியவள். இருவரும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்லும் வயதில் இருந்தார்கள்.
 
ரிதுபர்ணா அந்த நேரம் பருவ வயதை அடைந்திருந்தாலும் இன்னுமே கலாவதியின் செல்ல பேத்தி என்பதால் தோற்றத்தில் பார்த்தால் குண்டாக கொழுகொழுவென்று குழந்தை முகம் மாறாமல் தான் இருந்தாள். ஆனால் அவள் மனதளவிலோ ரெண்டுங்கெட்டான் தான், பலமுறை குழந்தையை போல யோசிப்பது. சில முறை தன் வயதுக்கு மீறிய யோசனை என்று சுற்றிக் கொண்டிருப்பவள், அதே வயது ரிதன்யாவோ கல்லூரி பெண் போல் ஒல்லியாக நெடுநெடுவென்று வளர்ந்திருப்பாள். அவள் சிந்தனைகளும் அதே போல் முதிர்ச்சியாக தான் இருக்கும்,
 
இஷானி, ரித்தேஷ் தவிர மீதி அனைவரோடும் கலாவதி சென்னையில் இருக்க, நிஷாந்த் அந்த வீட்டிலிருந்தாலும் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவான். மீதி ஐந்து பேர் அவர்கள் விடுமுறை நாட்களை சென்னையில் மகிழ்ச்சியாக கழிக்க, அவர்களோடு சுஷாந்தின் தோழனாக யாஷும் இணைந்துக் கொண்டான்.
 
சுஷாந்தின் குடும்பம் சென்னைக்கு வந்து மூன்று வருடங்கள் தான் ஆகியிருந்தது என்பதால் யாருக்குமே தமிழ் இன்னும் சரளமாக பேச வரவில்லை. அவர்கள் என்றில்லை, கலாவதி குடும்பத்தில் ரிதுபர்ணா உட்பட யாருக்குமே தமிழ் தெரியாது. வெளிநாட்டில் படிக்க சென்று தான் அவள் தமிழ் குடும்பத்தோடு தங்கி தமிழ் கற்றுக் கொண்டாள்.
 
சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுஷாந்திற்கு மொழிப் பிரச்சனையால் மற்றவரோடு பழகுவது கடினமாக இருக்கவே யாஷோடு எளிதாக நட்பாகிக் கொண்டான். இருவரும் அடுத்தவர் வீட்டுக்குச் சென்று வரும் அளவிற்கு நெருக்கமாக இருக்க, இப்போது சுஷாந்த் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்திருப்பதால் யாஷ் அந்த சமயத்தில் அங்கு போக தயங்க, சுஷாந்த் தான் அவனை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தான்.
 
முதலில் தயக்கத்தோடு வீட்டுக்கு வந்தவனை அடிக்கடி வர தூண்டியது என்றால் அதில் ஒருவள் ரிதுபர்ணா. குண்டாக கொழுகொழுவென்று இருக்கும் அவளை பார்த்ததுமே ஏதோ இனம் புரியாத பாசம் அவனுக்கு தோன்றியது. 
 
அதேபோல் அவனை ஈர்த்த இன்னொருவள் ரித்விகா.  கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் யாஷிற்கு அந்த வயதுக்குரிய ஹார்மோன் மாற்றங்கள் ரித்விகாவை காதலோடு பார்க்க வைத்தது. அங்கிருந்த அனைவரும் அவர்களின் செல்லப் பெயர்களோடு தான் யாஷிற்கு அறிமுகம் ஆகியிருக்க, ரித்விகாவின் பெயரை மட்டும் எப்படியோ சுஷாந்த் மூலம் அறிந்துக் கொண்ட யாஷ், மனதில் ரித்து என்று அவளது பெயரை சுருக்கி அழைத்து பரவசமானான்.
 
தேனன்பு தித்திக்கும்..