TTA 10

தேன் 10
 
நீல் தீவிற்கு செல்வதற்காக யாஷும் ரித்துவும் கப்பலில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேர பயணம் அது, கப்பலில் ஏறுவதற்கு காத்திருந்த நேரத்தில் தான் இருவரும் கிஷனிடம் அலைபேசியில் பேசியிருந்தனர்.
 
யாஷ் கபிலனிடம் பேசியது போல் தான் கிஷன் அவர்களின் உற்சாக பேச்சை வைத்தே அவர்கள் தங்கள் வாழ்வை வாழ ஆரம்பித்துவிட்டனர் என்பதை புரிந்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இருவரும் அனுப்பி வைத்திருந்த புகைப்படங்களை பார்த்தபோதே அவர்களுக்குள் எல்லாம் சுமூகமாகிவிட வெகுநாட்கள் தேவையிருக்காது என்று நினைத்திருந்தார்.
 
அவர் எதிர்பார்த்தது போல் இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தது குறித்து, “எனக்கு இதுபோதும் யாஷ், இப்போ தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று நெகிழ்ச்சியாக பேசியவர்,
 
“சரி மிச்ச நாளும் நல்லா சுத்திப் பார்த்துட்டு சந்தோஷமா இருந்துட்டு வாங்க,” என்று சொல்லி அழைப்பை அணைத்திருந்தார்.
 
கப்பல் நீல் தீவை அடைந்ததும் இருவரும் அவர்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்க, அங்கேயும் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டுனர் அவர்களுக்காக காத்திருந்தார். இன்று மாலை வரை நீல் தீவை சுத்திப் பார்த்துவிட்டு மாலை 4 மணிக்கு புறப்படும் கப்பலில் நேராக போர்ட்பிளேயர் செல்ல வேண்டுமென்பதால், உடைமைகளை காரில் வைத்து விட்டு அவர்களை சுற்றிப் பார்க்க சொல்லிய ஓட்டுனர் இருவரையும் பரத்பூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.
 
அங்கு மக்கள் கடலின் உள்ளே செல்வதற்கான சில ஏற்பாடுகள் இருக்க, அதற்காக விரும்பிச் செல்பவர்கள் அதற்கான பணத்தை கட்டிவிட்டு கடலின் உள்ளே செல்லலாம், மற்றப்படி சிறுவர்கள் தான் கடலில் குளித்து விளையாடினர்.  மற்றவர்கள் கடற்கரையை ரசித்தப்படி இருந்தனர்.
 
கடலின் உள்ளே செல்வதற்கு போர்ட்பிளேயரிலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், இங்கே அவர்கள் காரை விட்டு இறங்கியதுமே இளநீர் சாப்பிட்டுவிட்டு கடற்கரை மணலில் சிறிது நேரம் நடந்தார்கள். 
 
பின் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். ரிதுபர்ணா இன்று முட்டியை விட்டு சற்றே இறங்கியிருந்த ஒரு கவுன் அதன் மேல் இடை வரை முழுக்கை உடைய கோர்ட் போட்டிருந்தவள் தலையில் ஹேவ்லாக் கடற்கரையில் வாங்கிய தொப்பியை அணிந்திருக்க, அவளை நிற்க வைத்து யாஷ் விதவிதமாக புகைப்படங்களை எடுத்தான்.
 
பின் கடைவீதிப்பக்கம் நடந்தப்படியே வேடிக்கைப் பார்த்தவர்கள் மதியம் 12.30 ஆனதும் அங்கே இருந்து சின்ன சின்ன உணவகங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
 
அடுத்து அவர்களை ஓட்டுனர் லஷ்மண்பூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நேச்சர் ப்ரிட்ஜ்(nature bridge) இருக்கிறது. இயற்கையாகவே ஒரு பாலம் போல் அமைந்த பாறையை சென்று பார்க்க வேண்டும், ஒரு குட்டி மலை மீது ஏறி செல்வது போல் இருந்த அந்த இடத்திற்கு படிக்கட்டு அமைப்பு இருக்க அதில் ஏறி அந்த இடத்திற்குச் செல்லவென இருந்த பாதையில் இரண்டு பக்கமும் கடைகள் இருக்க அதெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருவரும் பேசியப்படி நடக்க, அங்கே எலுமிச்சைப் பழச்சாறு விற்றுக் கொண்டிருக்க “யாஷ் லெமன் ஜூஸ் குடிக்கலாமா?” என்று ரித்துக் கேட்க, இருவரும் அதை வாங்கிக் குடித்துவிட்டு நடந்தார்கள். 
 
மேலே ஏறுவதற்கு தான் படிக்கட்டுகள் இருந்தது. இறங்கும் இடத்தில் கற்களும் மண்ணுமாக இருக்க, அதில் யாஷின் கைகளைப் பிடித்துக் கொண்டு ரித்து இறங்கினாள். அங்குச் சென்று பார்த்தால் கடல் உள்வாங்கியிருப்பது நன்றாக தெரிந்தது. ஏனெனில் அங்கே மற்ற கடற்கரையில் இருக்கும் வெள்ளை மணலாக இல்லாமல், மண்கள் இறுகி அங்கங்கே மேடு போல் இருக்க, பள்ளமாக இருந்த இடத்தில் நீரில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தது. அந்த இடமே ஈரமாக இருந்தது.
 
அவர்கள் பரத்பூர் கடற்கரையில் அத்தனை நேரம் செலவழித்துவிட்டு சாப்பிட்டு விட்டு வந்து பார்க்கும்போதே கடல் உள்வாங்கியிருந்தது. இங்கேயும் அதேபோல் இருக்கவே அவர்கள் நேச்சர் பிரிட்ஜ் அருகிலேயே சென்று அதைப் பார்த்தவர்கள் அங்கிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின் அந்த கடற்கரை குளித்து விளையாடுவதற்கு ஏதுவாக இல்லாததால் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு திரும்பினர்.
 
அடுத்து அவர்களை கப்பல் புறப்படும் துறைமுகத்திற்கு ஓட்டுனர் அழைத்துச் சென்றார். சிறிது நேர காத்திருப்பிற்கு பின் அங்கே உள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து கப்பலில் இருவரும் ஏறி அமர, கப்பல் ஒருமணி நேரத்தில் போர்ட்பிளேயரை அடைந்தது.
 
வந்த முதல்நாள் ஓய்வெடுக்கவென சென்ற காட்டேஜில் தான் அன்றிலிருந்து மூன்று இரவுகளுக்கு அவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதுவும் அதே மேலே உள்ள அறை தான்,
 
அந்த காட்டேஜில் உள்ள பணியாட்களே சமைத்து கொடுத்து விடுவதாக சொல்லவும், இரவுக்கென்ன உணவு வேண்டுமென்பதை சொல்லிவிட்டு இருவரும் தங்கள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியதும் யாஷ் ரித்துவை அணைத்துக் கொண்டான்.
 
“அய்யோ யாஷ் என்ன இது விடுங்க,” என்று அவள் சிணுங்க,
 
“நாம ஹனிமூன்க்கு வந்தது மாதிரியா இருக்கு ரித்து, டோண்ட் டிஸ்டர்ப்னு போர்ட் வச்சிட்டு, ரூம் கதவை சாத்திட்டு, ஏசியை அதிக கூலில் வச்சிட்டு ஒரு போர்வைக்குள்ள ரெண்டுப்பேரும் ஜாலியா இல்லாம இப்படி ஊரை சுத்திட்டு இருக்கோமே இது நல்லாவா இருக்கு, இதில் கட்டிப்பிடிக்கவும் கூடாதுன்னா எப்படி?” என்று அவன் செல்லமாக கோபித்துக் கொண்டான்.
 
“என்ன யாஷ் இது, திரும்ப நாம எப்ப அந்தமான்க்கு வருவோம்னு தெரியாது, நல்லா சுத்திப் பார்க்க வேண்டாமா?” என்று அவள் கேட்க,
 
“அப்படியே இன்னொரு முறை நாம இங்க வந்தாலும், வெறும் ஹேவ்லாக் தீவில் ரூம் புக் செய்துட்டு, வெறும் ரெசார்ட் பீச்சும் நம்ம ரூமும்னு பொழுதை கழிக்க வேண்டியது தான்,” என்று அவன் கூறி கண்ணடித்தான்.
 
“ம்ம் அந்த ரூம்க்கு தான் எட்டாயிரம் வாடகைன்னு நீங்க சொன்னீங்க யாஷ், இப்போ அங்கயே இருக்கலாம்னு சொல்றீங்க,” என்ற அவள் கேலியாக கேட்க,
 
“இப்போ எனக்கு வேலை இல்லை, அதுவுமில்லாம கபிலன் செலவில் இப்படி ஹனிமூன் வந்திருக்கோமே, அதான் ஒருமாதிரி இருந்துச்சு, ஆனா சீக்கிரம் எனக்கு வேலை கிடைத்திடும், அப்போ இப்படி என்னோட அழகான மனைவியோட டைம் ஸ்பெண்ட் செய்றதுக்கு காசை செலவழித்தாளும் தப்பில்லை,” என்று பதில் கூறினான்.
 
அதில் நெகிழ்ந்தவளாக, “உங்களோட இருக்கும் இடம் ஒரு சாதாரணமான இடமா இருந்தா கூட அது எனக்கு சொர்க்கம் யாஷ்,” என்று அவள் கூற,
 
“அங்கேயும் டோண்ட் டிஸ்டர்ப் போர்ட் மாட்டிடுவோமா?” என்று சரசமாக பேசவும், “போங்க யாஷ்,” என்று அவன் நெஞ்சில் குத்தியவள், அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.
 
பின் குளித்து இரவு உணவை முடித்துக் கொண்டதும், அந்த இரவு கணவன் மனைவி இருவருக்கும் சங்கம இரவாக இருக்க, விடிகின்ற நேரம் தான் கண்ணசந்தார்களே, 
 
பின் காலை மெதுவாக எழுந்து குளித்து தயாராகி, காலை உணவை முடித்துக் கொண்டு ஓட்டுனர் வரவும் அவர்கள் கிளம்பியது நார்த் பே மற்றும் ரோஸ் தீவுகளை பார்க்க,
 
அரைமணி நேரம் பயணத்தில் அந்த தீவுகளுக்கு செல்ல புறப்படும் படகு குழாமை அடைந்தார்கள். நார்த் பே தீவில் தான் கடலுக்குள் செல்லும் விளையாட்டுகள் இருக்க, சீ வாக்(sea walk) அதாவது கடலுக்குள் நடப்பது மற்றும் கடலுக்கடியில் சென்று பார்க்கும் கிளாஸ் போட்(கண்ணாடி படகு) இது இரண்டிற்கும் கபிலனே பணம் கட்டியிருந்தான்.
 
“இது இரண்டும் நன்றாக இருக்கும் மற்ற ஏதாவது என்றால் அங்கே சென்று பணம் கட்டி சென்று பாருங்கள். இல்லை அதற்கு பதிலாக வேறு மாற்றி கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஸ்கூபா டைவிங் கூட இருக்கு, அப்படி எதுவும் வேண்டாமென்றாலும் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். ஆனா இது இரண்டும் நல்லா இருக்கும், போய்ப்பாருங்க,” என்று கபிலன் அலைபேசியில் சொல்லியிருந்தான்.
 
ஆனால் அங்கிருந்த ஒவ்வொரு விளையாட்டிற்குமே ஒருவருக்கு ஆகும் செலவை பார்த்தால் யாஷ்க்கு மயக்கம் வராத குறை தான், ஆனாலும் ரித்து விருப்பப்பட்டால் செல்லலாம் என்று அவன் நினைத்துக் கேட்க,
 
அவளோ, “அய்யோ இந்த கடலலையில் நிக்கறதுக்கே பயமா இருக்கு, ஏதோ நீங்க இருக்கவே கொஞ்சம் பயமில்லாம விளையாட்றேன். இதில் கடலுக்குள்ளேயா? வேண்டவே வேண்டாம் யாஷ், இந்த கிளாஸ் போட்ல மட்டும் போவோம், சீ வாக் வேணும்னா நீங்க மட்டும் போயிட்டு வாங்க,” என்று பயந்தப்படி கூறினாள்.
அவர்களுக்காக அங்கே நியமிக்கப்பட்டிருந்த வழிக்காட்டி, “மேம் நாங்க ஒரு ஹெல்மெட் கொடுப்போம், அது அதிக வெயிட் தான், ஆனா கடலுக்குள்ள போனா வெயிட் தெரியாது, அதில் ஆக்ஸிஜென் கிடைக்கும் அதனால எந்த பிரச்சனையுமில்ல, 
 
பொதுவா வீஸிங், சைனஸ், ஹார்ட் பேஷண்ட், பிபி, டயப்பட்டீஸ் இந்த பிரச்சனை இருக்கவங்களுக்கு இதுல எல்லாம் அனுமதியில்லை, நீங்க யங் கப்பிள் தானே, அப்புறம் என்ன?
 
ஒருவேளை பயமா இருந்தா, கடலுக்குள்ள பேச முடியாது, ஆனா கை கட்டை விரலை மேல உயர்த்தி காட்டினா உடனே மேல கூட்டிட்டு போயிடுவோம், அப்படி இருக்கணும்னா சூப்பர்னு கைவிரலால காட்டணும், உள்ள போனா காதடைக்கும், அப்போ விரலால மூக்கை மூடி மூச்சு விட்டா அந்த காதடைப்பு போகும், அதனால பயம் வேண்டாம் மேம்,” என்று ஒரு நீண்ட விளக்கத்தை கூறினார்.
 
“அதான் நான் இருக்கேன் இல்ல ரித்து, அப்புறம் என்ன பயம், அதான் பிடிக்கலன்னா உடனே வெளிய கூட்டிட்டு வந்துடுவோம்னு சொல்றாங்களே, அப்புறம் என்ன?” என்று யாஷும் சொல்ல, ரித்து சம்மதித்தாள்.
 
பின் அந்த தீவுகளுக்கு செல்வதற்கான படகு வரவும், இவர்களோடு இன்னும் குறிப்பிட்ட அளவுக் கொண்டவர்களை ஏற்றிக் கொண்டு படகு புறப்பட்டது. நார்த் பே தீவை அடைய 20 நிமட பயணம், உயிர் கவச உடை கட்டாயம் அனைவரும் அணிய வேண்டுமென்று அவரவரோடு வந்த வழிக்காட்டிகள் சொல்லிக் கொண்டிருந்தனர்.
 
அடுத்து அந்தமான் நிக்கோபர் தீவுகளைப் பற்றி அந்தந்த மொழியில் சுற்றுலா பயணிகளுக்கு தகவல்களையும் கூறினர். அந்தமான் நிக்கோபர் தீவுகள் மொத்தம் 572 தீவுகளைக் கொண்டது. அதில் 37 தீவுகளில் தான் மக்கள் வாழ்கின்றனர். அதுவும் அந்தமான் தீவுகளில் தான், நிக்கோபர் தீவுகள் மனிதர்கள் செல்ல முடியாத அளவிற்கு அடர்த்தியாக இருக்கும், இங்கு ஜாரவாஸ், நிக்கோபரி காட்டுவாசிகள் வசிக்கின்றர். அதுவும் நிக்கோபர் தீவுகளில் நிக்கோபரி காட்டுவாசிகள் வசிக்க வாய்ப்புள்ளது. இங்கு கடலில் அதிகமான பவளப்பாறைகள் உள்ளது. அதேபோல் முத்து எடுப்பதும் இங்கு அதிகமாக உள்ளது. என்ற தகவல்களை அனைவருக்கும் கூறினர்.
 
அடுத்து படகு நார்த் பே தீவை அடைந்ததும், யாஷ், ரித்துவுடன் வந்த வழிக்காட்டி அவர்களை நேராக ஒரு சின்ன படகு மூலம் சீ வாக் செல்லும் கடல் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே இன்னொரு படகு நிற்க அதில் இருவரும் ஏறினர். யாஷ் டீஷர்ட், ஷாட்ஸும் ரித்து டீஷர்ட் ¾ பேண்டும் அணிந்திருந்ததால், அவர்கள் அந்த உடையுடனே செல்லலாம் என்று அவர் கூறிடவே அவர்கள் கடலில் இறங்க தயாரானர்கள். மீண்டும் ஒருமுறை அவர்களிடம் சொல்ல வேண்டிய குறிப்புகளை அங்கிருப்பவர்கள் கூறினார்கள்.
 
அவர்கள் அனுமதியோடு தான் கடலில் இறக்குக்கிறோம் என்று அவர்களிடம் கையெழுத்து வாங்கியப்பின், முதலில் தன்னை இறக்கிவிடச் சொல்லி அவர்களிடம் சொன்ன யாஷ், “ரித்து பயப்படாம வா,” என்று அவளிடம் கூறிவிட்டு செல்ல, படகில் இருக்கும் படிக்கட்டின் மூலம் அவனை கடலில் இறங்கச் சொல்ல, ஓரளவிற்கு நீரில் மூழ்கிய பின் அவன் தலையில் ஹெல்மெட் அணிவித்து அவனை இறங்கச் சொல்ல, அவன் இறங்கும்போதே கடலில் அதற்கென்று ஸ்கூபா டைவிங் கவசம் அணிந்த ஆள் ஒருவர் அவனை கடலுக்குள் அழைத்துச் சென்றார்.
 
அடுத்து ரித்துவும் அதே விதிமுறைகளை கடைப்பிடித்து இறங்கவும் அவளை கூட்டிச் சென்று யாஷோடு நிற்க வைத்து, அவன் கையோடு கைகோர்க்கும் வரை ரித்து பயந்துக் கொண்டே இருந்தவள், அதன்பின் தான் பயம் தெளிந்தாள். இருவரிடமும் அந்த கவசம் அணிந்தவர் பிடித்திருக்கிறதா என்று கையசைவில் கேட்க, இருவரும் சூப்பர் என்று கையசைத்து காட்டினர்.
 
அவர்களை அப்படியே கடல் அடியில் நடக்க வைத்தனர். பவளப் பாறையின் அருகே அவர்களை அழைத்துச் சென்று காட்டினர். மீன்கள் அவர்களை சுற்றி நீந்திக் கொண்டிருக்க, அவர்கள் இருவர் கையிலும் மீன்களுக்கான உணவை வைக்க மீன்கள் வந்து அந்த உணவை உட்கொள்ள அது புதுவித அனுபவமாக இருந்தது.
 
இப்படி குறிப்பிட்ட நிமிடங்கள் வரை கடலுக்குள் இருந்தவர்களை மீண்டும் வெளியே அழைத்து வந்தனர். முதலில் ரித்துவை வெளியே விட்டுவிட்டு அடுத்து யாஷை அழைத்து வரவும், அவனை ரித்து ஓடிப் போய் கட்டிக் கொண்டாள். உள்ளே இருந்தவரை ஒன்றும் தெரியவில்லை, வெளியே வரவும் தான் எப்படி உள்ளே இருந்தோம் என்று ஒருமாதிரி படப்படப்பாக அருகில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் உணராமல் இறுகி அணைத்திருந்தாள்.
 
“ஹே அதான் போயிட்டு வந்தாச்சே, அப்புறம் என்ன?” என்று சொல்லி யாஷ் அவளை விலக்கி விட,
 
“ஆமாம் மேடம் வெளிய அவ்வளவு பயந்தீங்க, உள்ள சூப்பரா போயிட்டு வந்துட்டீங்க, இங்கப் பாருங்க போட்டோ,” என்று உள்ளே அவர்கள் இருவரையும் சேர்த்து எடுத்த புகைப்படத்தை காட்டிய வழிக்காட்டி,
 
“ரெண்டுப்பேரும் சூப்பரா போஸ் கொடுத்திருக்கீங்க, உங்க போட்டோவை இந்த சீ வாக்கிற்கு ஒரு விளம்பரமா காட்டலாம்னு இருக்கோம், இதைப்பார்த்து நிறைய கப்பிள்ஸ் விரும்பி இதுக்கு வருவாங்க,” என்று கூறியவர்,
 
“உங்களுக்கு இதில் பிரச்சனை இல்லையே?” என்று கேட்க,
 
“ஒன்னும் பிரச்சனையில்லை,” என்று யாஷ் கூறினான்.
 
பின் இருவருக்கும் புகைப்படங்கள் அடங்கிய சிடியை கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டனர். அடுத்து கண்ணாடி படகு புறப்பட தயாராக இருப்பதால் அவர்களை சின்ன படகில் அழைத்துச் சென்று அந்த கண்ணாடி படகில் விட்டனர்.
 
மேலே பார்ப்பதற்கு சாதாரண படகு போல் இருக்க, உள்ளே படிக்கட்டுகள் மூலம் இறங்க சுற்றி கண்ணாடிகளால் மூடியப்படி இருந்தது அந்த படகு, அதில் வரிசையாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று இருவரும் அமர, சிறிது நேரத்தில் படகு புறப்படது. சிறிது தூரம் வரை கடல் நீரின் நீல நிறம் மட்டுமே தெரிய, அடுத்து கடலில் ஆழத்தில் செல்ல உள்ளே பலவகையான மீன்களும், பவளப் பாறைகளும் தெரிய ஆரம்பிக்க, அதில் பயணித்தவர்கள், ஆர்வத்தோடு அதை பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் என மகிழ்ந்திருந்தனர்.
 
அந்த பயணம் முடிந்து அனைவரும் வெளியே வரும்போது மயக்கமாக இருக்க வாய்ப்பிருக்கும் என்பதற்காக மாம்பழ சாறு அடங்கிய பாக்கெட்டை ஒவ்வொருவருக்கும் கொடுக்க, அதை குடித்தாலும் ரித்துவிற்கு மயக்கமாக இருக்க வாந்தி எடுத்தாள்.
 
பின் அந்த படகின் வெளிப்பகுதியிலேயே சிறிது நேரம் யாஷும் ரித்துவும் அமர, கொஞ்சம் கொஞ்சம் ஆட்களாக கடற்கரையில் கொண்டு போய் மக்களை சேர்க்க, கடைசியாக வந்த படகில் இவர்களும் ஏறிக் கொள்ள கரைக்கு வந்ததும், “இன்னும் மயக்கமா இருக்கா ரித்து,” என்று யாஷ் கேட்க,
 
“இல்ல வாமிட் பண்ணதும் பரவாயில்லை,” என்று அவள் பதில் கூறினாள்.
 
பின் ஈர உடையை அதற்குரிய இடத்தில் மாற்றிக் கொண்டு இருவரும் மதிய உணவை உட்கொள்ள, மதியம் நேரம் 1 மணி ஆகியிருக்க, அவர்களை கொண்டு வந்து இங்கு விட்ட படகு புறப்பட தயாராக இருக்க, அதில் அனைவரும் ஏறியதும் படகு ரோஸ் தீவிற்கு சென்றது.
 
ஆங்கிலேயர்களின் அலுவலகம் ஓய்வெடுக்கும் கட்டிடம் இதெல்லாம் பாதி இடிந்தும் இடியாமலும் இருக்க அதை தான் அங்கு சென்று பார்த்தார்கள். பின் அங்கிருந்து கிளம்பிய படகு போர்ட்பிளேயர் தீவை வந்து அடைந்தது.
 
அங்கிருந்து காரில் புறப்பட்டவர்கள் விரைவாகவே தாங்கள் தங்கியிருக்கும் காட்டேஜிற்கு வந்துவிட்டனர். 
 
மறுநாள் பாரட்டாங் தீவில் உள்ள இயற்கையாக உருவாகியிருக்கும் சுண்ணாம்பு பாறை குகையை பார்ப்பதற்கு விடியற்காலை நான்கு மணிக்கே தயாராக இருக்க வேண்டுமென்று ஓட்டுனர் சொல்ல,
 
“என்னது?” என்று யாஷ் அதிர்ச்சியானான்.
 
அந்த தீவிற்கு செல்ல காட்டுப் பாதையில் தான் செல்ல வேண்டும், அதற்கு காலை ஆறு மணிக்கும் அடுத்து காலை ஒன்பது மணிக்கும் தான் நுழைவு வாயிலை திறந்து வைத்திருப்பார்கள்.
 
கொஞ்சம் முன்னதாகவே சென்று காத்திருந்தால் தான் விரைவாக சென்று விரைவாக வர முடியுமென்பதால் ஓட்டுனர் 4 மணிக்கு தயாராக சொல்ல,
 
“4 மணிக்கு தானே யாஷ். போலாமே,” என்று ரித்து கூற,
 
“ஹே என்ன விளையாட்றீயா? நாம தூங்கறதே 2 இல்ல 3 க்கு தான், இதில் 4 மணிக்கு எப்படி ரெடியாகறது? இன்னேரம் நீதான் எனக்கு டயர்டா இருக்கும் யாஷ், அதனால இவ்வளவு சீக்கிரம் போக வேண்டாம்னு சொல்லணும், உனக்குப் பதிலா நான் சொல்றேன்.” என்று அவள் காதில் கிசுகிசுக்க,
 
ஓட்டுனர் முன்பு வெட்கப்பட கூட முடியாமல் அவள் தவிக்க,
 
அவர்கள் தேனிலவிற்கு வந்த தம்பதிகள் என்பதால், அவர்களின் நிலை ஓட்டுனருக்கு புரிந்ததோ என்னவோ, சரி ஒன்பது மணிக்கு திறக்கும் போது செல்லலாம், அதனால் காலை ஆறு மணிக்கு தாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.
 
அப்போதும் ஆறு மணியா? என்று யாஷ் அதிர்ச்சியாக, “போதும் யாஷ், டிரைவர் நம்மள என்ன நினைப்பார்.” என்று ரித்து சிணுங்கினாள்.
 
“அந்த டிரைவர் என்ன நினைப்பார் என்றெல்லாம் என்னால யோசிக்க முடியாது. இங்கப்பாரு ஏதோ இன்னைக்கு சீக்கிரம் கொண்டு வந்து விட்ருக்கார். அதனால சீக்கிரமா சாப்பிட்டு ரூம்ல போய் செட்டில் ஆனா தான் அவர் சொன்ன டைமுக்கு நம்மாள எழுந்திருக்க முடியும், சீக்கிரம் டின்னர் ரெடி செய்ய சொல்லி சொல்லிட்டு போகலாம் வா,” என்று சொல்லியப்படியே யாஷ் முன்னே செல்ல, ரித்துவிற்கோ வெட்கத்தால் சிவந்த முகத்தை மறைக்க வேண்டியதாக இருந்தது.
 
மறுநாள் ஆறு என்பது ஆறரையாகவும் தான் யாஷ், ரித்து கிளம்பினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணித்திற்கு பிறகு தான் காட்டுப் பாதையின் நுழைவு வாயிலை அடைந்தார்கள். இவர்களின் வண்டி நான்காவதாக அந்த வரிசையில் நின்றது.
 
ஒன்பது மணிக்கு தான் நுழைவு வாயில் திறக்கும், அதுவரை காத்திருக்க வேண்டும், இங்கே கையேந்திபவன் போல் இருக்கும் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு காத்திருங்கள் என்று ஓட்டுனர் சொல்லவும்,
 
“நீ காரிலேயே இருக்கியா ரித்து, நான் போய் டிஃபன் வாங்கிட்டு வரேன், அங்க போய் எப்படி நின்னுட்டு சாப்பிடுவ,” என்று யாஷ் சொல்ல,
 
“இல்ல யாஷ், நிறைய பேர் சாப்பிட்றாங்களே அப்புறம் என்ன? அப்படி சாப்பிட்றரும் ஜாலியா தான் இருக்கும், வாங்க சாப்பிடலாம்,” என்று ரித்து கூறியப்படி காரிலிருந்து இறங்கினாள்.
 
பின் ஒரு கடையை தேர்ந்தெடுத்து பயண நேரம் என்பதால் லேசான உணவாக  இட்லி வாங்கி சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து வந்து பார்த்த போது, வரிசையாக வாகனங்கள் காத்திருக்க, ஓட்டுனர் விரைவாக கிளம்ப சொன்னதும் சரிதான் என்று நினைத்துக் கொண்டார்கள்.
 
 பின் அருகில் ஒரு அம்மன் கோவில் இருக்க, அது தமிழர்களின் கோவில் என்பதற்கு சாட்சியாக தமிழ் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. அந்த கோவிலுக்குச் சென்று சாமிக் கும்பிட்டுவிட்டு வந்து வெளியில் மணல் மேடு போல் உள்ள இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
 
அடுத்து மணி 8.30 ஆகியதும் ரெஸ்ட் ரூம் போய்வந்து பயணத்தின் போது சாப்பிட சிற்றுண்டி, குளிர்பானம் அனைத்தும் வாங்கிக் கொண்டு சில நிமிடங்கள் காத்திருக்க, வண்டிப் புறப்பட தயாரானது.
 
காட்டு வழி பாதையென்பதால் முன்னே வனத்துறை வாகனம் செல்ல, பின்னே வரிசையாக அனைத்து வாகனங்களும் புறப்பட்டது. அங்கங்கே பாதையில் காட்டுவாசிகள் தென்படலாம், அவர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்தி அவர்களிடத்தில் செல்வதோ, இல்லை அவர்களுக்கு உணவு கொடுப்பதோ கூடாது. அதுவும் வண்டியை நிறுத்தவே கூடாது என்ற தகவல்களை ஓட்டுனர் கூறினார்.
 
பின் காட்டுப் பாதையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருக்க, அங்கங்கே குடிசைகள் கட்டி காட்டுவாசிகள் இருந்தனர். அதையெல்லாம் பார்த்தப்படி இருவரும் பயணம் செய்தனர். பொருட்கள் ஏற்றிச் செல்லும் ஒரு லாரியில் காட்டுவாசி சிறுவர்கள் பயணிக்க, “யாஷ் அங்கப் பாருங்களேன் சின்ன பசங்க போறாங்க,” என்று ரித்து காட்ட, அவனும் ஆமாம் என்று தலையாட்டியப்படி அவர்களை பார்த்தான்.
 
ஒருவழியாக அந்த பயணம் முடிந்து காரை நிறுத்திய இடம் கடலிலிருந்து பின்தங்கிய நீர்(backwater) ஒரு நீண்ட ஏரி போல் இருக்க, அந்த கரைக்குச் செல்ல வேண்டி இரண்டு பெரிய படகுகள் வந்து போய்க் கொண்டிருக்க, அதில் ஏறி அனைவரும் பயணித்தனர். 
 
அங்கே இவர்களுக்கென ஒரு வழிக்காட்டி தயாராக இருக்க, ஓட்டுனர் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, சுண்ணாம்பு பாறை குகையை பார்வையிட்டு வந்ததும், அங்கே இருந்த உணவகத்தை காட்டி மதியம் சாப்பாடு சாப்பிடும்படி சொல்லிவிட்டு திரும்ப கார் நிற்கும் அக்கரைக்கு சென்றுவிட்டார்.
 
அதே ஏரியில் வேகமாக செல்லும் படகுகளில் பத்து பத்து பேராக ஏற்றிக் கொண்டு அந்த குகையை பார்க்க அழைத்துச் சென்றார்கள். அப்படி ஒரு படகில் யாஷும் ரித்துவும் அவர்களோடு இன்னும் ஏழு பேர் மற்றும் அந்த வழிக்காடி என பத்துப் பேர் ஏறிக்கொள்ள படகு புறப்பட்டது. உயிர்கவச உடை கட்டாயம் அணிய வேண்டுமென்று சொல்லவே அனைவரும் அதை அணிந்துக் கொண்டனர்.
 
யாஷ், ரித்து இருவரும் அருகருகே அமர்ந்திருக்க, “ஹே ரித்து, இந்த ஹனிமூன் கப்பிள்ஸ்க்குன்னு எதுவும் ஸ்பெஷலா லைஃப் ஜாக்கெட் இல்லையா? ஒரே ஜாக்கெட்ல ரெண்டுப்பேரும் இருப்பது போல, பாரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கோம்னு தான் பேரு, ஆனா இந்த லைஃப் ஜாக்கெட் போட்டதும் நீ எங்கேயோ உட்கார்ந்திருக்க ஃபீல் கொடுக்குது,” என்று சொல்ல,
 
“அய்யோ யாஷ், ஒரு குடையில் ரெண்டுப்பேர், ஒரே ஆடையில் இருவர் இதுபோல ஒரே லைஃப் ஜாக்கெட்டில் ரெண்டுப்பேரா? புதிய கண்டுப்பிடிப்பு தான்,” என்று அவள் கேலி செய்தாள்.
 
உடன் வந்தவர்களிடம் இருவரையும் சேர்த்து யாஷ் புகைப்படம் எடுக்க கூறினான். அதேபோல் அவனும் அவர்களுக்கு எடுத்து உதவினான். இப்படியே கிட்டத்தட்ட அரைமணி நேர பயணமாக அவர்கள் இறங்குமிடத்திற்கு வந்தனர். இதுவரை நீரில் வேகமாக வந்த படகு, சேறு போல் இருந்த இடத்தில் மெதுவாக சென்று ஒரு பாலம் அருகே நின்றது. படகிலிருந்த ஒவ்வொருவரையும் பாலத்தில் ஏற்றிவிட, அவர்களோடு வந்த வழிக்காட்டு முன்னே செல்ல, இவர்கள் பின்னே சென்றனர்.
 
மேடு, பள்ளம், சரி சம பாதை என்று கிட்டத்தட்ட அரைமணி நேர நடைப்பயணம், வழியில் சில பார்க்காத அரிய வகை மரங்களை அந்த வழிக்காட்டி காட்டிக் கொண்டு வந்தார். அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.  பயணத்தின் நடுவில் ஒரு இடத்தில் எலுமிச்சை பழச்சாறு விற்றுக் கொண்டிருக்க, அதுவும் உப்பு சர்க்கரை என்று இரண்டும் கலந்து கொடுத்த பழச்சாறை பருக, அது தெம்பாக இருந்தது. அதன்பின் இன்னும் சிறிது தூரம் சென்றதும் குகை தெரிய, அதன் உள்ளே பகலிலேயே இருட்டாக இருந்தது.
 
ஒவ்வொருவரும் அவர்கள் கொண்டு வந்த அலைபேசியில் உள்ள வெளிச்சத்தின் மூலமாக உள்ளே உள்ள சுண்ணாம்பு பாறைகளை  பார்த்தனர். அதிலும் பிள்ளையார் வடிவம் அதுபோல் இன்னும் சில வடிவத்தில் அமைந்த சுண்ணாம்பு படிவத்தை வழிக்காட்டி குறிப்பிட்டுக் காட்டினார்.
 
சிறுது நேரம் அனைத்தையும் பார்த்திருந்தவர்கள், பின் வெளியே வந்து அதேபோல் பயணத்தை தொடர்ந்தனர். ஏரியில் 3 மணிக்கு மேல் தண்ணீர் உயர வாய்ப்புள்ளதால் அதற்குள் அனைவரும் பார்த்து திரும்பிட தான் காலையே வர சொல்வது, படகில் ஏறியவர்கள் திரும்ப படகு கிளம்பிய இடத்திற்கே வந்து, அங்கிருந்த உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு, அக்கரைக்கு செல்ல இருந்த படகு வந்ததும் அதில் ஏறி கரைக்கு வந்தனர்.
 
மீண்டும் வாகனங்கள் வரிசையில் நிற்க, தாங்கள் வந்த காரில் இருவரும் ஏறிக் கொண்டனர். அடுத்து சிறிது நேரத்தில் வாகனங்கள் புறப்பட சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர்கள் காட்டேஜை வந்து அடைந்தனர்.
 
மறுநாள் காலை தாமதமாக எழுந்து குளித்து தங்களது பொருட்களை பெட்டியில் எடுத்து வைத்தனர், இன்று அவர்கள் தேனிலவு பயணம் முடிந்து சென்னை கிளம்ப வேண்டும், மாலை 3 மணிக்கு தான் அவர்கள் விமானம் ஏற வேண்டும், ஆனால் காலையே அறையை காலி செய்ய வேண்டும்,
 
பெட்டிகளை காரில் வைத்துவிட்டு மதியம் வரை போர்ட் பிளேயரில் உள்ள அருங்காட்சியங்களை பார்த்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு விமான நிலையம் செல்வது தான் அன்றைய திட்டம்.
 
அதன்படி தயாராகி காலை உணவை முடித்துக் கொண்டு தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
 
முதலில் கடலில் உள்ள உயிரினங்கள் இன்னும் பலவற்றை தெரிந்துக் கொள்ள வைத்திருந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று அதை பார்த்தவர்கள், அடுத்து ஜாரவாஸ், நிக்கோபரி காட்டுவாசிகள் பற்றிய தகவல்கள், அவர்கள் வாழ்க்கை முறை இதையெல்லாம் பற்றி இருக்கும் அருங்காட்சியகத்தை பார்த்தனர்.
 
இதற்கே நேரமாகி விட, மதிய உணவை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றவர்களுக்கு, இந்த தேனிலவு பயணம் ஒரு இனிய அனுபவத்தை கொடுத்தது. இன்னும் பார்க்காத இடங்களும் சிலது இருக்க, மீண்டும் ஒருமுறை இங்கு வரும் எண்ணம் இருவருக்குமே இருந்தது.
 
விமான நிலையத்தின் விதிமுறைகளை முடித்துக் கொண்டு இருவரும் விமானத்திற்காக காத்திருக்க, யாஷின் கையோடு கைகோர்த்து அவனது தோளில் சாய்ந்து ரித்து அமர்ந்திருக்க, இருவருக்குமே இங்கு வருவதற்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் இருவரும் இருந்த முறைக்கு தானாகவே சிரிப்பு வந்தது.
 
விமானம் புறப்படுவதற்குள் ரெஸ்ட் ரூம் போய் வருவதாக யாஷ் சொல்லிவிட்டு புறப்பட, ரித்துவும் தண்ணீர் அருந்திவிட்டு வருவதற்காக எழுந்தவள், தண்ணீர் அருந்தியதும் தான் அமர்ந்திருந்த இருக்கைக்கு வரும்போது சோட்டீ என்று யாரோ அழைக்க, ரித்து திரும்பி பார்த்தாள்.
 
இந்த முறை அழைத்தது அவளைத் தான், இவள் திரும்பியதும் அருகில் வந்த பெண்மணி, “ஹே சோட்டீ, எப்படி இருக்க? என்னை அடையாளம் தெரியலையா? ஆனா எனக்கு உன்னை நல்லா தெரியும், உனக்கு கல்யாணம்னு சொன்னாங்க, மாமியார் வீட்டில் செட்டில் ஆகியிருப்பன்னு பார்த்தா, இங்க இருக்க? என்று கேட்டவர்,
 
“ஓ ஹனிமூனா? சரி எனக்கு ஃப்ளைட்க்கு டைம் ஆச்சு, நான் சாந்தினி. உன்னோட அம்மா ஸ்வாராக்கு என்னை நல்லா தெரியும், ஸ்வராவை கேட்டதா சொல்லு, பை சோட்டீ,” என்று அவளை பேசவிடாமல் படபடவென்று இந்தியில் பேசிவிட்டு அவர் செல்ல,
 
முன்போல் தனக்கு தெரிந்தவர்கள் பார்த்தால் தன்னைப்பற்றி வீட்டில் சொல்லிவிடுவார்களோ என்ற பயமெல்லாம் இப்போது ரித்துவிற்கு இல்லை. ஏனேன்றால் யாஷிடமிருந்து தன்னை யாராலும் இனி பிரிக்க முடியாது என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.
 
ஆனால் அந்த பெண்மணி சோட்டீ என்று விளித்ததை யாஷ் பார்த்தால் என்னாவது என்று பதறியவள், அவசரமாக யாஷ் சென்ற திசையை திரும்பிப் பார்க்க, அவனோ அவளுக்கு சற்று தொலைவில் தான் அவளைப் பார்த்தப்படி நின்றிருந்தான்.
 
தேனன்பு தித்திக்கும்..