MMSV 6

மையல் 6

தோ அதோ என்று பாலா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி நடைபெறும் நாளும் வந்தது. இன்று மாலை நேரம் நடக்கவிருக்கும் பார்ட்டியை சிலர் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். சிலர் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. பார்ட்டியை எதிர்பார்த்தவர்கள் என்றால், அது மதுரிமா, அஜய், சுஜனா தான்,

மீண்டும் விபாகரனை சந்திக்க போகும் ஆவலில் மதுரிமா இருந்தாள். அதேபோல் அன்று விமான நிலையத்தில் பார்த்தபிறகு அஜயும் சுஜனாவும் மீண்டும் பேசிக் கொள்ளவோ, இல்லை சந்தித்துக் கொள்ளவோ முயற்சிக்கவில்லை. 

அன்று வீட்டிற்கு போனதும் குறுஞ்ச்செய்தி அனுப்பியதோடு சரி, அதன்பின் அஜயின் அழைப்பை சுஜனா ஏற்கவில்லை. அதேபோல் அவளும் அவனிடம் பேசவும் இல்லை. விமான நிலையத்தில் நன்றாக தானே பேசினாள். பின் என்ன காரணம் என்று தெரியவில்லை, அவனது அழைப்பை அவள் தவிர்க்கிறாள். மனம் முழுதும் நேசம் இருந்தும், அவளுக்கு திருமணம் முடிவாகியிருக்கும் காரணத்தால்,  எந்தவிதத்திலும் தன் மனதில் உள்ளதை அவளிடம்  வெளிக்காட்டிக் கொள்ளாமல் அஜய் அவளை நட்பு ரீதியில் தானே அணுகினான். இருந்தும் சுஜனா ஏன் இப்படி செய்கிறாள்? என்பது அவனுக்கு புரியவில்லை.

அதற்கு எதிர்மாறாக தன் மனம்  அஜயின் பின் போகும் உண்மையை அறிந்ததால், அவனைவிட்டு தள்ளி நிற்க வேண்டும் என்று தான் சுஜனா அவனை  தவிர்த்து வந்தாள். ஆனால் அவனை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையாகவும் இருந்தது. தன் மனதை மறைத்துக் கொண்டு அஜயிடம் நட்புடன் பேசினால் என்ன என்று தோன்றினாலும், தன்னை மீறி தன் மனம்  அவனை அதிகம் தேடும் என்ற பயத்தால் அவனிடம் அலைபேசியில் கூட பேசவில்லை, இந்த நேரத்தில் தான் பாலா ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி பற்றி தெரிய வந்தது. கட்டாயம் இதில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று தன் தந்தை சொல்வார். அதனால் எப்படியும் அஜயை நேரில் பார்த்து தான் ஆக வேண்டும் என்பதை அவள் அறிவாள்.

எனவே இந்த பார்ட்டியில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால், இருவரும் இன்றைய மாலை நேரத்தை அதிகம் எதிர்பார்த்தனர்.

விபாகரனுக்கு இப்படி ஒரு பார்ட்டி ஏற்பாடு நடப்பதில் விருப்பம் இல்லை என்றாலும், பாலாவும் அஜயும் ஏற்பாடு செய்ததால் அதில் கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் சரி என்று அமைதியாகிவிட்டான்.

சாத்விக்கிற்கு பாலா அழைத்ததால் பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று இருந்தாலும் சுஜனாவின் வருங்கால கணவன் என்ற முறையில் அங்கு செல்ல விருப்பமே இல்லை. ஆனால் சாத்விக்கின் தந்தை வசந்தனுக்கோ சுஜனாவின் தந்தை அழைத்ததால் இந்த பார்ட்டிக்கு தானும் சாத்விக்கும் செல்ல வேண்டும் என்று இருந்தாலும் அது விபாகரனுடைய வியாபார சம்பந்தமான பார்ட்டி என்பதால் போக வேண்டுமா? என்று யோசித்தார்.

சாத்விக்கிற்கு வேண்டுமென்றால் விபாகரனுக்கும் யாதவிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கும் என்பது தெரியாமல் இருக்கலாம், ஆனால் வசந்தனுக்கு யாதவியோடு விபாகரனுக்கு ஏதோ ஒரு சம்பந்தம்  இருக்கிறது என்பது தெரியும், தன் முன்னே நின்று யாதவி எங்கே என்று கேட்டவன் ஆயிற்றே, 

அப்போது சாமானிய மனிதனாக இருந்தான். இப்போதோ, இந்தியாவை தாண்டி பேர் வாங்கிய தொழிலதிபர். அந்த பார்ட்டிக்கு சென்றால், விபாகரன் தன்னை அவமானப்படுத்துவானா? என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஆனாலும் அங்கு சென்று தானே ஆக வேண்டும், 

பெரிய பெரிய தொழிலதிபர்கள் கலந்துக் கொள்ளும் பார்ட்டி என்றாலும், தன் மகன் இப்போதைய முன்னணி நடிகன் என்பதாலும், அவர் ஒரு தயாரிப்பாளர் என்பதாலும் பார்ட்டி நடக்கும் இடத்தில் தங்கள் இருவருக்கும் எந்தவித கௌரவ குறைச்சலும் ஆகக் கூடாது என்று நினைத்தார். அதனால் அவர் பார்ட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பே பன்னீரை அனுப்பி சாத்விக்கிற்கு உண்டான மரியாதைக்கு அங்கு ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து வரச் சொன்னார்.

பார்ட்டியை முற்றிலும் தவிர்க்க நினைத்த ஒரே ஒருவர் தேவி தான், பார்ட்டி வேறு எங்கு நடந்தாலும் பரவாயில்லை, ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் இங்கு வீட்டிலேயே நடப்பதால் அதில் எப்படி கலந்துக் கொள்ளாமல் இருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை, ஏதாவது காரணம் கிடைக்குமா? என்று அவள் தவித்துக் கொண்டிருக்க, ரூபினி முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அவளை அழைத்தாள்.

கண்டிப்பாக அவள் பார்ட்டியில் கலந்துக் கொள்ள கூடாது என்று சொல்ல தான் ரூபினி அழைத்திருப்பாள் என்று நினைத்தப்படியே தேவி சென்றாள்.

“என்ன அண்ணி, எதுக்கு கூப்பிட்டீங்க?”

“ஒரு முக்கியமான விஷயம், அது என்னன்னா இன்னைக்கு பார்ட்டியில்,” முழுதாக சொல்லவில்லை அதற்குள்,

“எனக்கு தெரியும் அண்ணி. இன்னைக்கு பார்ட்டியில் நான் கலந்துக்க கூடாது அதானே?” என்றதும், ரூபினி அதிர்ச்சியாகிவிட்டாள்.

காரணம் விபாகரன் வீட்டுக்கு சென்ற போது தேவி வராததற்கு காரணம் அவள் தான் என்று தெரிந்துக் கொண்ட பாலா, “நீ தேவி விஷயத்தில ரொம்ப ஓவரா தான் போற ரூபி, நாங்க பொறுமையா இருக்கறதால அதை நீ உனக்கு சாதகமா எடுத்துக்காத, நீ அவளை வேலைக்காரியா நினைக்கலாம், ஆனா எங்களை பொறுத்தவரைக்கும் அவ இந்த வீட்டுப் பொண்ணு, அவளுக்கு நல்லப்படியா கல்யாணம் செஞ்சு அனுப்பணும், அதுவரைக்கும் அவளை கஷ்டப்படுத்தாம இரு, இன்னொரு முறை இப்படி நடந்துச்சு, நான் இப்படி பொறுமையா சொல்ல மாட்டேன்.” என்று கோபமாகவே பேசியிருந்தான்.

இந்த வேலைக்காரியால் தன் கணவனிடம் தான் திட்டு வாங்குவதை நினைத்து ரூபினிக்கு  தேவி மீது கோபம் வந்தாலும், அதனால் கணவன் வெறுப்புக்கு ஆளாகவும் அவளுக்கு விருப்பமில்லை, அதுவுமில்லாமல் பாலா சொன்னது போல் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டால், தேவி தானாகவே இந்த வீட்டை விட்டு செல்லத்தானே போகிறாள். அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தவள்,

“நீ பார்ட்டிக்கு வர்றதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஆனா நான் இப்போ எதுக்கு கூப்பிட்டேன்னா, அங்க எல்லோருக்கும் முன்னாடி என்னை அண்ணின்னு கூப்பிடாத, அப்புறம் கேக்கறவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது, ஏன் வேலைக்காரி உன்னை அண்ணின்னு கூப்பிட்றான்னு யாராச்சும் கேட்டா எனக்கு அது இன்சல்ட்டா இருக்கும், அதை மட்டும் ஞாபகத்தில் வச்சிக்கோ,

 அப்புறம் மது அப்பா வந்துருக்காரு, பார்ட்டி நடக்கப் போற இடத்தை மேற்பார்வை பார்க்கிறாரு, அவருக்கும் அங்க வேலை செய்றவங்களுக்கும் ஏதாச்சும் சாப்பிட வேணுமான்னு கேட்டடுட்டு வா,” என்று அவளை அனுப்பி வைத்தாள்.

ஒரே நம்பிக்கை ரூபினி தான், இப்போதும் அவர்களும் அவளது பிரச்சனைக்கு தீர்வாக அமையாததால் இனி என்ன செய்வது? என்ற குழப்பத்திலேயே சென்றவள், அங்கே மதுரிமாவின் தந்தை பூபதியோடு நின்றிருந்த பன்னீரை பார்த்து அதிர்ந்தாள்.

“இவர் எப்படி இந்த இடத்தில்,” என்று நினைத்தவள், அவர் பார்வையில் படாதபடிக்கு ஒளிந்துக் கொண்டு அவரை கவனிக்க ஆரம்பித்தாள்.

“பூபதி உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு,” என்று பன்னீர் சொல்ல,

“ஆமாப்பா, இப்போ உன்னை பார்த்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா பன்னீர், எப்படி இருக்க,” என்று பூபதி பன்னீரை விசாரித்தார். பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் போல் இருவரும் ரேஸ் நண்பர்கள். சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்சில் நடக்கும் குதிரைப் பந்தயத்திற்கு இருவரும் செல்வார்கள், அங்கு தான் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். 

“ஆமாம் பூபதி, நீ இங்க எப்படி?”

“இது என்னோட பொண்டாட்டியோட அக்கா வீடு, உனக்கு தெரியுமா பன்னீர், என்னோட பொண்ணு இப்போ ஒரு முன்னனி கதாநாயகி, மதுரிமா கேள்விப்பட்ருக்கல்ல, அதான் என் பொண்ணு,”

“என்னப்பா சொல்ற, மதுரிமா உன்னோட பொண்ணா, நான் சாத்விக் தம்பிக்கிட்ட தான் பி.ஏ வா இருக்கேன், எத்தனையோ முறை மது மேடமை பார்த்துருக்கேன், ஆனா அவங்க உன்னோட பொண்ணுன்னு தெரியாம போச்சே,”

“என்னது நீ சாத்விக்கிட்ட வேலை செய்றியா பரவாயில்லைப்பா, மதுவோட கால்ஷீட்ல்லாம் என்னோட சகலையும் இப்போ அவரோட பிள்ளையும் தான் பார்த்துக்கிறாங்க, அவங்க படிச்சவங்கன்னு நான் தான் எல்லாம் அவங்க பொறுப்பில் ஒப்படைச்சிட்டேன்.” என்று பந்தாவாக கூறிக் கொண்டார்.உண்மையில் எப்போதுமே யாரும் அவரை மதிப்பது கூட கிடையாது. இப்போது கூட அவரே தன்னை உயர்வாக காட்டிக் கொள்ள இங்கு வந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

“பரவாயில்லை பூபதி, நீ அடிக்கடி சொன்னது போல உன்னோட பொண்ணை பெரிய நடிகையாக்கிட்ட, அதுக்கும் ஒரு கொடுப்பிணை வேணும், உன்னை பார்த்து நானும் அப்படி ஆசைப்பட்டேன், ஆனா என்னோட ஆசை நடக்கலையே,”

“நீயும் அப்போ நிறைய ப்ரொட்யூஸர், டைரக்டர்ல்லாம் போய் பார்த்தீயே ஏன்ப்பா எதுவும் சான்ஸ் கிடைக்கலையா?”

“எங்க பூபதி, நீ சொன்னதை உன்னோட பொண்டாட்டியும் பொண்ணும் அப்படியே கேட்டாங்க, ஆனா எனக்கு தான் வந்ததும் சரியில்லை, வாச்சதும் சரியில்லையே, நல்ல சான்ஸ் ஒன்னு கிடைச்சது, ஆனா என்னோட பொண்டாட்டி ரத்னா இருக்காளே, அவ எல்லாத்தையும் கெடுத்துட்டா,

பொண்ணு சினிமாவுல நடிக்கக் கூடாதுன்னு அவசரம் அவசரமா ஒரு மாப்பிள்ளையை பார்த்து பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்தா, ஆனா அந்த ஓடுகாலி கழுதை எவனையோ இழுத்துக்கிட்டு ஓடிடுச்சு, அந்த அதிர்ச்சி தாங்காம என் பொண்டாட்டி நெஞ்சை பிடிச்சவ தான், அப்பவே உயிரை விட்டுட்டா, அப்புறம் சோத்துக்கு கூட வழியில்லாம திரிஞ்சுக்கிட்டு இருந்தேன்.

அப்புறம் ஒருத்தருக்கு சான்ஸ் கேக்கற விஷயமா வசந்தன் சாரை பார்க்கப் போனப்ப தான் சாத்விக் தம்பி எனக்கு வேலை கொடுத்தாரு, இப்போ ஏதோ என்னோட பொழப்பு ஓடுது, ஆனாலும் ஆத்தாளும் பொண்ணுமா என்னோட கனவை கலைச்சிட்டாங்க, அதுக்கு தண்டைனையா பொண்ணை பொத்தி பொத்தி வளர்த்து கடைசியில் அந்த பொண்ணே  என்னோட பொண்டாட்டி சாவுக்கு காரணமாயிட்டா, இத்தனையும் செஞ்சுட்டு போன அந்த ஓடுகாலி கழுதை உறுப்பட்டிருக்கும், ம்ம் இருக்காது.” என்று பன்னீர் பேசிக் கொண்டே போக அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவியோ அதிர்ச்சியில் சத்தமில்லாமல் அங்கிருந்து வந்தவள், தனது அறையில் வந்து கதறி அழுதாள்.

தன் அன்னை எங்கேயோ நல்லப்படியாக இருப்பார் என்று அவள் நம்பிக் கொண்டிருக்க, அவர் இந்த உலகத்தில் இப்போது இல்லை என்ற செய்தியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் தன் அன்னையின் இறப்பிற்கு தானே காரணம் என்று அவள் அறிந்த நொடி, தான் செய்த தவறுக்கு தனக்கு இத்தனை பெரிய தண்டனை கிடைத்ததற்கு, அன்றே தன் உயிர் பிரிந்திருக்கலாம் என்று நினைத்து நினைத்து அழுதாள்.

அந்த நேரம் அங்கு வந்த புவனா தேவி அழுதுக் கொண்டிருந்ததை பார்த்து,

“தேவி என்னடா, என்ன ஆச்சு? எதுக்கு அழற? யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா?” என்றுக் கேட்கவும், அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

“அப்புறம் என்ன உங்கம்மா தனம் ஞாபகம் வந்துடுச்சா,” என்றுக் கேட்க,

“ஆமாம் அம்மா ஞாபகம் தான், என்னோட அம்மா ஞாபகம் வந்துடுச்சு,” என்று புவனாவை கட்டிக் கொண்டு தேவி அழவும்,

அவளின் தன் அன்னை என்ற வார்த்தையை கேட்டு புவனாவோ தன்னை அறியாமல், “யாதவி என்னாச்சுடாம்மா, எதுக்கு இப்போ உங்கம்மா ஞாபகம் வந்துடுச்சு, அவங்க தான் எப்பவோ இந்த உலகத்தை விட்டு போயிட்டாங்களே, இப்போ எதுக்கும்மா அவங்களை நினைச்சு அழற, இன்னைக்கு ஏதாச்சும் அவங்களுக்கு நினைவு தினமா,” என்றுக் கேட்டார்.

“அன்றைக்கு எதிலிருந்து தப்பிக்கவோ எங்கம்மா இறந்துட்டாங்கன்னு தனம்மா சொன்னதுக்கு நான் தலையாட்டினேன். ஆனா நான் பாவி, அவங்க சொன்ன பொய்யை ஒத்துக்கிட்ட பாவத்துக்கு கடவுள் அதுக்கு முன்னமே எங்கம்மா உயிரை பறிச்சிக்கிட்டாரு, ஆனா என்னோட அம்மா சாவுக்கு நானே காரணம் ஆயிட்டேனே என்னை இந்த கடவுள் மன்னிப்பாரா?” என்று மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டவள், வெளியில் அழுதுக் கரைந்துக் கொண்டிருந்தாள்.

அவள் எதற்காக அழுகிறாள் என்று தெரியாமல், அவளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் புவனா வெறுமனே, “யாதவி யாதவி,” என்று அவளது பெயரை உச்சரித்தப்படி அவளுக்கு ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டிருந்தார்.

பார்ட்டிக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். தங்கள் வீட்டில் நடப்பதால் பாலா குடும்பத்தினர் தயாராகி வந்து விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். மதுரிமாவின் பெற்றோர்களும் அதில் அடக்கம்,

அஜயும் பாலாவுக்கு உதவியாக இருக்க முன்னமே வந்துவிட்டிருந்தான். அஜயை பார்த்த புவனாவும்,  இந்த நேரம் தேவியும் இங்கிருந்தால், அவளுக்கு அவனை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று நினைத்தார்.

ஆம் இப்போது பார்ட்டியில் யாதவி கலந்துக் கொள்ளவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தவளை புவனா எவ்வளவு தேற்றியும் அவள் அழுகையை நிறுத்துவதாக இல்லை, அழுது அழுது முகம் வீங்கி போயிருந்தது. எப்போதோ இறந்து போன அன்னைக்காக யாதவி இன்று ஏன் இப்படி அழுகிறாள் என்று புவனாவிற்கு புரியவில்லை, அவளது அன்னையை ஞாபகப்படுத்தும் படி எதுவோ நடந்திருக்கிறது, ஆனால் என்ன நடந்தது என்று யாதவி எதுவும் சொல்லவில்லை,

இந்த நேரத்தில் புவனா யாதவியை வற்புறுத்தவுமில்லை, இப்படி வீங்கிய முகத்தோடு அவள் எப்படி பார்ட்டியில் கலந்துக் கொள்ள முடியும்? அதனால் அவளை உறங்கும்படி சொல்லிவிட்டு அவர் வெளியே வந்தார்.

இந்த பார்ட்டியில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று யாதவி நினைத்தது போலயே, எந்தவித திட்டமும் தீட்டாமல் அவள் பார்ட்டியில் கலந்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இப்போதைக்கு சாத்விக், விபாகரனை விட, அவளின் தந்தை பன்னீரை சந்திப்பதை தான் அவள் விரும்பவில்லை, அவர் மட்டும் சரியாக இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் இத்தனையும் நடந்திருக்குமா? என்ற கேள்வி அவளுக்கு பெரிதாக தெரிந்தது.

அவள் நினைத்தது போல் பன்னீரும் பூபதியை பார்த்ததால்  அங்கேயே இருந்துக் கொண்டு அலைபேசி முலமாக வசந்தனுக்கு இங்கு ஏற்பாடெல்லாம் முறையாக நடக்கிறது என்று தகவல் அளித்துவிட்டார். பூபதியும் பன்னீரை நன்றாக உபசரித்து தன் அருகிலேயே நிறுத்திக் கொண்டார்.

பார்ட்டிக்கு தயாராகி வந்த பாலாவும்  மதுரிமாவும் தேவியை பற்றிக் கேட்ட போது, “அவளுக்கு உடம்பு சரியில்லை பாலா அதனால் அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்குறா,” என்று புவனா கூறினார்.

பார்ட்டி பாலா வீட்டின் முன்பக்கம் உள்ள தோட்டத்தில் நடந்தது. அங்கேயே பஃபே முறையில் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை பாலாவிற்கு அலுவலக ரீதியாக தெரிந்தவர்கள் வந்துக் கொண்டிருக்க, அடுத்ததாக ரூபினியின் பெற்றோர்கள் வரவும் அவளும் பாலாவும் அவர்களை  வரவேற்றனர். அடுத்து புவனாவும் மதுரிமாவும் அவர்களோடு பேச ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் மதுரிமாவின் கண்கள் விபாகரனின் வரவுக்காக வாசலையே பார்த்திருந்தது.

அதேபோல் அஜயும் சுஜனாவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, அவனை ஏமாற்றாமல் அவள் உடனே தன் பெற்றோர்களுடன் காரில் வந்து இறங்கினாள். இறங்கியவள் முதலில் அஜயை தான் பார்த்தாள். ஆனாலும் அவனை பார்க்காதவள் போல் அவள் கடந்து போக முயற்சிக்க, சுஜனாவின் தந்தை வீரராகவனோ அவராக சென்று, “ஹாய் அஜய்,” என்று கைகுலுக்கி பேசினார்.

தொழில் ரீதியாக அவருக்கு அஜயை ஏற்கனவே தெரியும், விபாகரன் இப்போது தான் இந்தியா வந்திருக்க, வியாபார ஒப்பந்தம் போடும் போது பாலாவுடன் அஜய் தான் இருந்து ஒப்பந்தங்களை தயார் செய்தான். அப்படி தான் அஜயை அவருக்கு தெரியும், இப்போது தந்தை அஜயோடு பேசவே சுஜனாவும் அங்கு  இருக்க வேண்டியதாக இருந்தது. அவர் இப்போது ஆரம்பிக்க இருக்கும் புதிய ப்ராஜக்ட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவளுக்கும் அங்கிருந்து நகரவே தோன்றவில்லை, நடுவில் தன் மனைவியிடமும் சுஜனாவிடமும் அவனை புகழ்ந்து வேறு பேசினார். இதற்கு நடுவில் ரூபினியின் தந்தை வீரராகவனுக்கும் நண்பன் என்ற முறையில் அவரை கூப்பிடவும், 

வீரராகவனும் அவர் மனைவியும் ரூபினியின் தந்தையை பார்ப்பதற்கு சென்றுவிட்டனர். சுஜனாவும் அவர்கள்  பின்னே செல்ல முயற்சிக்க, 

“சுஜா ப்ளீஸ் கொஞ்சம் நில்லு.” என்று அஜய் அவளை மெதுவாக அழைத்தான்.

அவனது அழைப்பில் அவளும் அங்கேயே நின்று கொண்டாள்.

“நான் போன் செய்தா ஏன் எடுக்கல சுஜா? என் மேல ஏதாச்சும் கோபமா?” என்று அவன் கேட்கவும்,

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையே, எனக்கு ஏன் உங்க மேல கோபம். ரொம்ப நாளுக்கு பிறகு நாம எதைச்சேயா பார்த்தோம், பேசினோம், அதோடு நிறுத்திக்கிறது  நல்லதுன்னு தோனுது.” என்று அவள் சொல்லவும், அவனும் அமைதியாக நகர்ந்து சென்று விட்டான். அவனிடம் அப்படி பேசியதற்கு சுஜனா வருத்தப்பட, அஜயும் அவலது பேச்சு கஷ்டமாக இருந்தது.

சுஜனா குடும்பம் வந்த சிறிது நேரத்தில் மஞ்சுளாவும் அர்ச்சனாவும், அர்ச்சனாவின் கணவன் விஜய்யும் வந்தனர். அவர்களை பாலா வரவேற்க, மதுரிமாவும் அவர்களை கண்டவுடன் மகிழ்ச்சியோடு அவர்கள் அருகே சென்றாள்.

 “வணக்கம் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? எப்படி இருக்கீங்க அர்ச்சனா,” என்று இருவரையும் அவள் விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன் ம்மா,” என்று மஞ்சுளா பதில் சொல்ல,

 “வாவ் மதுரிமா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க,” என்று அர்ச்சனா படபடத்தாள்.

“அப்புறம் மதுரிமா இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் விஜய்,” என்று தன் கணவனை அர்ச்சனா அறிமுகப்படுத்தவும்,

அவருக்கும் வணக்கம் வைத்தாள். இவர்கள் மூவர் மட்டும் வந்திருக்கிறார்கள், விபாகரன் வரவில்லையே என்று அவளுக்கு ஏமாற்றமாக இருக்க, அதை அவர்களிடம் எப்படி கேட்பது என்று அவள் தயங்கினாள்.

“அண்ணா கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க,” என்று அர்ச்சனா அவளை புரிந்தவளாக பதில் கூறவும், மதுரிமா மகிழ்ச்சியாக தலையாட்டினாள். மஞ்சுளாவும் அர்ச்சனாவின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

சாத்விக் தன் தந்தை வசந்தனோடு பார்ட்டிக்கு வந்திருந்தான். அவனுக்கு தன் தந்தையோடு வருவதில் துளி கூட விருப்பமில்லை, 

“நீங்க போங்க, நான் பின்னாடி வரேன்.” என்று வசந்தனிடம் சொல்லிப் பார்த்தான்.

ஆனால் அவரோ ஒத்துக் கொள்ளவில்லை, “வீரராகவன் நம்மள இன்வைட் செஞ்சுருக்காரு, அதனால நாம சேர்ந்து தான் போகணும்,” என்று தெளிவாக கூறிவிட்டார்.

அதனால் அவருடன் வரும்படியான சூழ்நிலை அமைந்துவிட்டது. அதற்கேற்றார் போல் உள்ளே நுழையும்போதே, வீரராகவனும் அவரது மனைவியும் சுஜனாவையும் அழைத்துக் கொண்டு வரவேற்க வந்துவிட்டனர்.

அதை கண்டு சாத்விக்கிற்கு எரிச்சலாக வந்தது. இப்படி ஒரு சூழலை தவிர்க்க தான் அவன் பார்ட்டிக்கு வருவதற்கே யோசித்தான். ஆனால் இதை தவிர்க்க முடியாது என்பதும் தெரியும், வேறுவழியில்லாமல்,

“ஹலோ சார்,” என்று அவருக்கு கைகுலுக்கினான்.

“என்ன சாரா? மாமான்னு சொல்லுங்க சாத்விக்,” என்று சொல்லிவிட்டு வீரராகவன் சிரிக்கவும்,

“அதெல்லாமல் கல்யாணம் ஆனா தானா முறையோடு கூப்பிட வந்திடும்,” என்று வசந்தனும் சொல்லிவிட்டு சிரித்தார்.

அவர்கள் பேசுவது சாத்விக்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இதை இன்னும் அதிகம் வளரவிடக் கூடாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். இப்போதைக்கு இங்கிருந்து செல்ல வேண்டும் என்று அவன் நினைக்கும் போதே,

“ஹாய் சாத்விக்,” என்று பாலா அழைத்தான். 

“சரி நீங்க பேசிட்டு இருங்க, இதோ வரேன்.” என்றவன் பாலாவை நோக்கிச் செல்ல,

“நீயும் மாப்பிள்ளை கூட போம்மா,” என்று வீரராகவன் சுஜனாவை பார்த்துக் கூறினார்.

வந்ததிலிருந்து சாத்விக் தன்னை பார்க்கக் கூட இல்லை என்பதை சுஜனா உணர்ந்திருந்தாலும், தந்தை சொல்லவே சாத்விக் பின்னாலேயே சென்றாள். தூரத்தில் பாலாவுக்கு அருகில் நின்றிருந்த அஜயும் அவர்களை தான் பார்த்திருந்தான்.

பாலாவும் அஜயும் மஞ்சுளாவின் குடும்பத்தாரோடு தான் நின்றிருந்தனர். உடன் மதுரிமாவும் புவனாவும் இருந்தனர். அவர்கள் அருகில் சாத்விக் வரவும், 

“சாத்விக் இது தான் விபாகரனோட பேமிலி, இவங்க அவனோட அம்மா, இவங்க விபாவோட சிஸ்டர், இவர் அவங்க ஹஸ்பண்ட் விஜய், நம்ம அஜயோட அண்ணா தான்,” என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தவன்,

“இது மது உனக்கே தெரியும், இவங்க என்னோட அம்மா,” என்று தன் குடும்பத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

பின், “சாத்விக்கை உங்களுக்கு தெரியாம போக வாய்ப்பில்லை, அதனால அறிமுகம் தேவையில்லை, இவங்க சுஜனா நம்ம சாத்விக்கை கல்யாணம் செய்துக்கப்போற பொண்ணு,” என்று அவர்களுக்கு சாத்விக்கை பாலா அறிமுகப்படுத்தவும், அப்போது தான் சாத்விக்கே சுஜனா தன்னோடு வந்திருப்பதை கவனித்தான். அந்த நேரம் இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்காததை குறித்து மிகப்பெரிய குற்ற உணர்வுக்கு ஆளானான்.

சாத்விக் திருமண செய்தி அனைவரும் அறிந்தது என்பதால் அதில் யாருக்கும் வியப்பு இல்லையென்பதால் சுஜனா தான் பெண் என்று தெரிந்ததில் அனைவரும் இருவரையும் வாழ்த்தினர். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தாலும், மஞ்சுளாவிற்கு மட்டும் மனம் சுணங்கியது.

சாத்விக் மேல் விருப்பம் இருந்ததால் தானே யாதவி தன் மகனை வேண்டாமென்று சொல்லிவிட்டுச் சென்றாள். அவள் சாத்விக்கை தேடித் தானே சென்றாள்? பிறகு அவள் சாத்விக்கை விட்டு எப்படி பிரிந்தாள். 

பார்ப்பதற்கு சாத்விக் நல்லமாதிரியாக தானே இருக்கிறான். பிறகு எப்படி யாதவியை அவன் ஏமாற்றினான். இப்போது யாதவி எங்கு இருக்கிறாள்.யாதவியின் மேல் உள்ள உண்மையான அக்கறையில் மஞ்சுளா மனதில் இந்த கேள்விகளெல்லாம் தோன்றியது.

இருந்தும் ஆரம்பத்தில் தன் மகனிடம் அவர் யாதவி எங்கு இருக்கிறாள்? ஏதாவது தெரிந்ததா? என்று கேட்பார். ஆனால் இப்போதெல்லாம் மகனுக்கு யாதவியை ஞாபகப்படுத்தக் கூடாது என்பதால் அவர் எதுவும் கேட்பதில்லை. ஆனால் அவன் யாதவியை மறந்தால் தானே ஞாபகப்படுத்த வேண்டும்,

இப்போதும் சாத்விக்கை விபாகரன் பார்க்கக்கூடுமே என்ற கவலை அவருக்கு இருக்க,

“ஆமாம் விபாகரன் சார் வரலையா பாலா, அன்னைக்கு ஏர்போர்ட்ல கூட அவரோட ரொம்ப பேச முடியாமப் போச்சு, இன்னைக்கு அவர் வருவார் தானே?” என்று சாத்விக் சொல்லவும்,

“விபு சாத்விக்கை ஏற்கனவே பார்த்திருக்கிறானா?” என்று மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார்.

மையல் தொடரும்..