MMSV 5

மையல் 5

“வாங்க வாங்க,” என்று வரவேற்ற விபாகரனின் அன்னை மஞ்சுளா அமைதியின் திருவுருவமாக இருந்தார். அவர் பின்னாலேயே ஆர்பரிப்புடன்,

“மதுரிமா ஆஆ வாவ் செம சர்ப்ரைஸ்.” என்றபடியே வரவேற்றது அர்ச்சனா. விபாகரனின் தங்கை,

அவளது அந்த ஆர்ப்பரப்பில் மதுரிமாவே கொஞ்சம் பயந்து  போனாள். அர்ச்சனாவிற்கும்  மதுரிமா இங்கு வருவது தெரியாது, தெரிந்திருந்தால்  இத்தனை இன்ப அதிர்ச்சியாக அவளுக்கு இருந்திருக்காது. இன்று பாலா தன் குடும்பத்தோடு  வரப்போகும் விஷயத்தை  விபாகரன் சொல்லும்போது கேட்டவளுக்கு, ஒன்றுவிட்ட தங்கையான மதுரிமா வருவாள் என்பது தெரியாது. அதனால் எதிர்பார்க்காமல் மதுரிமாவை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி அவளிடத்தில்,

“மதுரிமா உங்கக் கூட ஒரு செல்ஃபி எடுக்கணும், அய்யோ இன்னைக்கு என்னோட பேஸ்புக் அக்கவுண்ட்ல லைக்ஸா குவியப் போகுது. அப்புறம் உங்களோட ஆட்டோகிராஃப் கூட வேணும், ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்துட்றேன்.” என்றவள், இன்னும் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்ள நினைத்து  தன் அறைக்குச் சென்றாள்.

“எல்லாம் ஏன் நிக்கிறீங்க, உட்காருங்க,” என்று அஜய் கூறினான். 

பாலா குடும்பத்தோடு வரவிருக்கும் விஷயத்தை மஞ்சுளா அவனிடம் சொல்லி வீட்டுக்கும் வர சொல்லியிருந்தார். அதனாலேயே இப்போது அவன் இங்கு வந்தான்.

“அம்மா இது தான் மஞ்சும்மா, விபாவோட அம்மா, அப்புறம் இது அஜய், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன்  இல்ல” என்று பாலா இருவரையும் புவனாவிற்கு அறிமுகப்படுத்தினான்.

மஞ்சுளாவை பார்த்து ஒரு வணக்கம் வைத்தவர், அஜயை பார்த்து இவனை தான் தேவிக்கு வரனாக பாலா யோசித்து வைத்திருப்பதாக சொன்னது புவனாவிற்கு ஞாபகத்திற்கு வந்ததும் அவனை கொஞ்சம் ஆழந்து கவனித்தார்.

புவனாவை பார்த்து அஜயும் ஒரு புன்னகையை உதிர்த்தான். இவர்களின் நிறுவனத்திற்காக ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துக் கொடுத்த போது மதுரிமாவிற்கு அஜயை தெரியும், அதனால் அவனை பார்த்து ஒரு ஹாய் சொல்லியவள், பின் மஞ்சுளாவை பார்த்து வணக்கம் கூறினாள்.

அதேபோல் மஞ்சுளாவிடம்  பாலா தன் குடும்பத்தைக் காட்டி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினான்.

“உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம், முதல்ல உட்காருங்க,” என்ற மஞ்சுளா வேலையாட்கள் மூலமாய் அனைவருக்கும் பருக காபி கொடுத்தார்.

“அம்மா விபா எங்கம்மா,” என்று பாலா கேட்கவும்,

“இதோ இருக்கேன் டா” என்று சொல்லிக் கொண்டே விபாகரன் படிகளில் இருந்து இறங்கி வந்தான்.

விபாகரனை தான் மதுரிமாவிற்கு பார்த்திருப்பதாக பாலா சொல்லியிருந்ததால், அவனையும் கொஞ்சம் கவனத்தோடு புவனா உற்று நோக்கினார்.

மதுரிமாவும் முதன்முறையாக விபாகரனை நேரில் பார்ப்பதால், அவனது கம்பீரத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள். அதற்கேற்றார் போல்,

“வாவ் இதுதான் விபாகரனா? மேகஸின்ல பார்க்கறதை விட நேர்ல எவ்வளவு ஹாண்ட்ஸம்மா இருக்காருல்ல” என்று ரூபினியும் மதுரிமாவின்  காதில் கிசுகிசுத்தாள்.

அதற்குள் அவர்கள் அருகில் வந்துவிட்ட விபாகரன் புவனாவை பார்த்து, “எப்படிம்மா இருக்கீங்க, என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா,” என்றுக் கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன் ப்பா, அப்போ பாலா கூட ரெண்டு மூனு பேர் ஒன்னா வீட்டுக்கு வந்துருந்தீங்களா? அதான் சரியா ஞாபகத்துக்கு வரல, தப்பா நினைச்சுக்காதப்பா,” எனவும்,

“பரவாயில்ல விடுங்கம்மா, எப்பவோ பார்த்தது இல்லையா, மறந்து போயிருக்கும்” என்றவன், பின் மதுரிமா அருகில் உட்கார்ந்திருந்த ரூபினியை பார்த்து,

“ஹலோ சிஸ்டர்,   , சாரி உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியல, எப்படி இருக்கீங்க? எங்க பாலா உங்களை எப்படி பார்த்துக்கிறான்.” என்று கேட்கவும்,

“டேய் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு, இப்போ வந்து இந்த கேள்வியை இவளை பார்த்து கேட்பதற்கு பதிலா, என்னை பார்த்து கேட்ருக்கணும்டா, இப்போ அவ என்னை நல்லா பார்த்துக்குற நிலைமை தான் ஓடுது.” என்று சொல்லவும் ரூபினி அவனை பார்த்து முறைத்தாள். பிறகு விபாகரனை பார்த்து,

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் ண்ணா, பாலா உங்களைப் பத்தி அடிக்கடி பேசுவாங்க, அதுல இருந்தே உங்களை அடிக்கடி பார்க்கணும்னு நினைப்பேன், இப்போ தான் சான்ஸ் கிடைச்சுது, உங்களை சந்திச்சதுல சந்தோஷம்.” என்றாள்.

“சாரிம்மா, உங்க கல்யாணத்தப்போ நான் வெளிநாட்டுல இருந்தேன். அதான் என்னால உங்க கல்யாணத்துல கலந்துக்க முடியல” என்று விபாகரன் ரூபினியை பார்த்து மன்னிப்பு கேட்ட போது,

“ஆமாம் அப்போ வெளிநாட்டுக்கு போனவன் தான், இப்போ தான் நம்மள பார்க்க அவனுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுவும் அவனா நம்மள பார்க்க வரல, இப்பவும் நாம தான் அவனை பார்க்க வந்திருக்கோம்,” என்று தன் திருமணத்திற்கு கூட விபாகரன் வரவில்லையே, என்ற வருத்தத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு குறை போல் இப்போது பாலா பேசவும்,

“டேய் நான் உங்களை நேர்ல பார்த்து வாழ்த்து சொல்லலைனாலும், எவ்வளவு தூரத்துல இருந்தாலும்,  உன்னோட கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் என்னோட மனசு நினைக்கும் பாலா, நீயே என்னை புரிஞ்சிக்கலன்னா எப்படி?” என்று கேட்கவும்,

“என்ன பாலா இதைப்பத்தி இப்போ பேசிட்டு இருக்க, விபா எப்பவும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்கிறதா எத்தனை முறை நீயே வருத்தப்பட்ருக்க, அப்புறம் என்ன, மனசுல வருத்தத்தை வச்சிருக்காம, மறந்திடு,” என்று புவனா விபாகரனுக்கு ஆதரவாக பேசினார்.

“ஆமாம் தன்னை சுத்தி இருக்கவங்களை பத்தி நினைப்பில்லாம இப்படி வேலை வேலைன்னு ஓடி ஓடி அதுல என்ன கிடைக்க போகுது சொல்லுங்க, எப்போ தான் இவன் அதெல்லாம் புரிஞ்சிக்கப் போறானோ,” என்று தன் மகன் நிலையை குறித்த கவலையில் மஞ்சுளா பேசினார்.

“சரி விடுங்கம்மா எல்லாம் விபா கொஞ்ச நாளில் சரியாகிடுவான்.” என்று பாலா தான் அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டியதாக போனது.

பிறகு, “விபா இது யார்னு தெரியுதா?” என்று மதுரிமாவை காட்டிக் கேட்ட போது, உண்மையிலேயே அவனுக்கு அது யாரென்று தெரியவில்லை.

சில காரணங்களால் சில வருடங்களாக சினிமாவை வெறுத்துக் கொண்டிருப்பவன், திரைப்படங்கள் பார்ப்பதையே விட்டிருந்தான். அதனால் புதிதாக வந்த நடிகர் நடிகைகளை அவனுக்கு தெரியாது. 

மதுரிமாவை அவர்கள் நிறுவனத்தின் தயாரிப்புக்காக நடிக்க வைக்கலாம் என்று சொன்னது கூட அர்ச்சனாவின் கணவன் விஜய் மற்றும் அவன் சகோதரன் அஜயும் தான், இப்போதெல்லாம் நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்தால் தான் நம் தயாரிப்பு கொஞ்சம் பிரபலமாகும் என்று இருவரும் சொன்னதால், அந்த பொறுப்பை அவர்களிடமே விபாகரன் ஒப்படைத்திருந்தான். அதனால் மதுரிமாவை அவன் அறிந்து வைத்திருக்கவில்லை.

அதனால் சிறிது நேரம் யோசித்தவன், “இது தேவியா?” என்றுக் கேட்டான்.

அவன் தேவியையும் நேரில் பார்த்ததில்லை தான், ஆனால் எப்போதாவது பார்க்கும் சமயங்களில் பாலா தன் குடும்பத்தைப் பற்றி விபாகரனிடம் பேசுவான். அப்போது தேவி ஒரு வேலைக்காரியின் மகளாக வீட்டுக்கு வந்தது. அவளது அன்னை இறந்த பின்பும் அவளை தங்கள் மகளாக பாவித்து அவளுக்கு நல்ல கல்வியை கொடுத்து, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க பாலாவின் பெற்றோரை அவன் உயர்வாகவே நினைப்பான், பாலாவும் அவளை தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டதை பற்றி பேசும் போது, 

“என்னோட யதும்மாவும் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் பாதுகாப்போடு அடைக்கலமாய் சென்றிருப்பாளா? அப்படி ஒரு பாதுகாப்பில் இருப்பதால் தான், அவள் யாரையும் தேடி வரவில்லையோ, அப்படித்தான் இருக்க வேண்டும், அதைத் தாண்டி அவளுக்கு எந்த ஆபத்தும் ஏற்ப்பட்டிருக்கக் கூடாது, என்பது அவனது வேண்டுதலாக இருக்கும், அதனாலேயே தேவி என்ற பெயர் ஞாபகத்தில் உள்ளதால், அவன் தேவியாக இருக்குமோ என்று நினைத்துக் அப்படிக் கேட்டான்.

“டேய் இது மதுரிமா டா, இப்போதைய லீடீங் ஹீரோயின்ல இவளும் ஒருத்தி.” என்ற பாலாவின் பதிலில்,

“சாரி மது, நான் சினிமால்லாம் பார்க்கறதில்ல, அதனால எனக்கு உங்களை சரியா தெரியல,” என்று மன்னிப்புக் கேட்டான்.

“அய்யோ அதனால என்ன பரவாயில்லை விடுங்க,” என்று மதுரிமா கூறினாள்.

தன்னை விபாகரனுக்கு தெரியவில்லையே என்பதில் மதுரிமாவிற்கு ஒன்று வருத்தமோ, இல்லை கோபமோ ஏற்பட்டிருக்க வெண்டும், ஆனால் மற்றவர்கள் பார்வைக்கு எப்போதும் அவள் ஒரு நடிகையாக தெரிந்து, என்ன இருந்தாலும் இவள் நடிகை தானே என்று கீழிறக்கமாக பார்ப்பவர்களுக்கும், அத்துமீற நினைப்பவர்களுக்கும் மத்தியில் விபாகரனுக்கு தான் ஒரு சாதாரணமான பெண்ணாக தெரிந்ததில்,

அவள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல ஒரு ஆடவனை இப்போது பார்த்ததில், அவனை பற்றி முழுமையாக தெரியாத போதும், பார்த்ததுமே கொஞ்சமாய் அவன் பக்கம் சலனப்பட்ட மனது, இப்போது அவன் பார்வையில் தான் ஒரு சாதாரண பெண் தான் என்று தெரிந்த பின், அவள் மனம் அவனிடம் முழுமையாக சாய ஆரம்பித்துவிட்டது. 

“தேவி உங்கக் கூட வரலையா” என்று விபாகரன் கேட்டதும், புவனா ரூபினியை பார்த்தார்.

காலையில் கிளம்பும் போது தேவி வர மாட்டேன் என்று சொல்லும் போதே அவருக்கு ரூபினி மீது தான் சந்தேகம் வந்தது. இருந்தாலும் எவ்வளவோ எடுத்து சொல்லி அவளை அழைத்து வரத்தான் பார்த்தார். அவளும் அஜயை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் அவள் எதற்குமே அசராமல் வரவே முடியாது என்று மறுத்து விட்டாள்.  ஒரு அம்மா என்ற முறையில் தன் பேச்சை விட, ரூபினியின் சொல்லுக்கு அவள் மதிப்பு கொடுத்தது, புவனாவிற்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தாலும், தேவிக்கு திருமணம் முடிந்து செல்லும் வரை, ரூபினியும் தேவியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டுமே, அவள் பேச்சை மீறி ஒருவேளை தேவி இங்கே வந்தால், அதனால் ரூபினியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும், அதனால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள்  வரும் என்பதால், புவனா அதோடு அமைதியாகிவிட்டார்.

தன் அன்னை ரூபினியை பார்த்த பார்வையிலேயே தேவி இங்கு வராததற்கு அவள் தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது பாலாவிற்கு புரிந்தது. காலையில் தேவி மறுத்த போதே, அந்த சந்தேகம் இருந்தாலும், இப்போது அது உறுதியாகிற்று, இருந்தாலும் ரூபினியின் இந்த செயலை வளர விடக் கூடாது என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டவன், விபாகரனை பார்த்து,

“தேவிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை விபா, அதான் அவ இங்க வரல,” என்று ஒரு பொய்யான காரணத்தை கூறினான்.

அதன்பின் அர்ச்சனா வரவும் பேச்சுக்கள் திசை மாறியது, அர்ச்சனா விரும்பியது போல் மதுரிமாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டாள். இப்போது அர்ச்சனா விபாவின் தங்கை என்பதால், அவளது ஆர்ப்பாட்டமான அனுகுமுறையும் மதுரிமாவிற்கு பிடித்து தான் இருந்தது. அர்ச்சனாவுடன் நட்பு ரீதியாக பேசினாள். மதுரிமாவுடன் மட்டுமல்ல, அர்ச்சனாவும் ரூபினியும் கூட இந்த சிறிது நேரத்தில் நல்ல தோழிகளாக மாறியிருந்தனர்.

பின் மதிய உணவு சாப்பிட்டதும் நால்வரும் கிளம்ப தயாரான போது, “அப்புறம் விபா நம்ம ப்ராஜக்ட்டை ஆரம்பிக்கிறத்துக்கு முன்ன, ஒரு பெரிய பார்ட்டி வைக்கணும்னு நானும் அஜயும் நேத்து பேசிக்கிட்டு இருந்தோம், அஜய் உன்கிட்ட சொன்னானா?” என்று பாலா விபாகரனை பார்த்து கேட்க,

“எதுக்குடா இப்போ இதெல்லாம்,” என்று அவன் திருப்பி கேட்டான்.

“இது பெரிய அளவு ப்ராஜக்ட் டா, அதை நல்ல பெரிய பார்ட்டியா வச்சு செலப்ரேஷனோட ஆரம்பிக்கணும், பார்ட்டி என்னோட வீட்ல வைக்கலாம்னு தான் ப்ளான் செஞ்சுருக்கேன். இதோட ஏற்பாடெல்லாம் நானும் அஜயும் பார்த்துகிறோம், நீ பார்ட்டி அன்னைக்கு வந்தா மட்டும் போதும்,” என்று கூறவும் விபாகரனால் மறுக்க முடியவில்லை. பின்  நால்வரும் விபாகரன் குடும்பத்தினரிடம் விடைப்பெற்று சென்றனர்.

பாலா குடும்பத்தினர் சென்றதும், அஜய் அவன் வீட்டுக்கு சென்றுவிட்டான். விபாகரனும் வேலை விஷயமாக வெளியில் சென்று விட, வீட்டில் அர்ச்சனாவும் மஞ்சுளாவும் மட்டும் இருந்தனர்.

தனது அறையில் அம்ர்ந்திருந்த மஞ்சுளாவை தேடி வந்த அர்ச்சனா,  “அம்மா ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன், மதுரிமாவை பத்தி நீ என்ன நினைக்கிற, விபு அண்ணாக்கும் மதுரிமாக்கும் நல்லா பொருத்தமா இருக்கும் இல்லம்மா,” என்றதும்,

“என்ன அச்சு சொல்ற?” என்று அதிர்ச்சியாக கேட்டார்.

“என்னவோ தெரியல மதுரிமாவை பார்த்ததும் எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சு,  அதுமட்டுமில்ல மதுரிமா அண்ணனை வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருந்தா, கூடவே பாலா அண்ணா அம்மாவும் நம்ம அண்ணனையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க, இதெல்லாம் வச்சு பார்த்தா என் மனசுல தோனிய விஷயம் தான் அவங்களுக்கும் தோனியிருக்கும்னு நினைக்கிறேன், நீ என்னம்மா சொல்ற?” என்று கேட்க,

“எனக்கென்னமோ இது சரியா படல, ஏற்கனவே ஒரு சினிமாக்காரனால என்னோட பையன் வாழ்க்கை நாசமானது பத்தாதா?” என்றார் அவர்,

“தப்பு முழுக்க நீ உன் பையனுக்கு பார்த்து வச்சிருந்த பொண்ணால, அதுக்கு அந்த சினிமாக்காரனை குத்தம் சொல்ல முடியுமா? அது முடிஞ்சு போன கதைம்மா, இப்போ உன் பையனோட வாழ்க்கை சிறப்பா அமைய வேண்டாமா? விபு அண்ணாக்கு பொருத்தமான பொண்ணு அமையணும் இல்ல, அது ஏன் மதுரிமாவா இருக்கக் கூடாது.”

“நீ சொன்ன மாதிரி முன்ன தான் எல்லாம் தப்பா போச்சு, இனியாவது என் பையனோட வாழ்க்கை நல்லா இருக்க வேண்டாமா? சினிமால நடிக்கிற பொண்ணு என் பையனுக்கு பொருந்தி வருமா அச்சு,”

“அம்மா, மதுரிமா பழக நல்லவளா தான் தெரியுறா, பத்தாததுக்கு பாலா அண்ணாக்கு தங்கச்சி வேற, எல்லாம் சரியா வரும் ம்மா,”

“இருந்தாலும் நடிகைங்கன்னாலே அப்படி இப்படி கேள்விப் பட்றோம், இதுல மதுரிமா சாத்விக்கோட வேற நடிச்சிருக்கால்ல, நாளை பின்ன விபு சாத்விக்கை நேருக்கு நேரா சந்திச்சா, அவனுக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வராதா?”

“இப்போ மட்டும் அண்ணன் எல்லாம் மறந்துட்டா இருக்கு, கல்யாணம் செஞ்சுக்கோன்னு நீ சொல்லிக்கிட்டே இருந்தா, அண்ணன் வேண்டாம்னு மறுக்க தான் பார்க்கும், நீதான் அதிரடியா ஒரு முடிவு செய்யணும், எதுக்கோ மதுரிமா பத்தி நல்லா யோசி, எனக்கு இது சரியா வரும்னு தான் தோனுது.” என்று சொல்லவும்,

“சரி விபு கொஞ்ச நாள் இங்க தானே இருக்கப் போறான். பொறுமையா யோசிப்போம் என்று மஞ்சுளா கூறினார்.

இவர்கள் பேசிய அதே நேரம், வீட்டிற்கு வந்து புவனா தன் அறைக்கு செல்லவும், பின்னாலேயே வந்த பாலா, விபாகரன், அஜயை பற்றி கேட்டதற்கு,

“ரெண்டுப்பேரும் நம்ம பொண்ணுங்களுக்கு பொருத்தமா தான் இருப்பாங்க, நீ முன்ன சொன்னது போல, ப்ராஜக்ட் முதலில் ஆரம்பிங்க, அப்புறம் விபாக்கிட்ட இது சம்பந்தமா பேசு. அஜய், தேவி கல்யாணத்துக்கும் விபாக்கிட்ட தானே பேசணும், விபா என்ன முடிவு சொல்றானோ, அதுக்கேத்த மாதிரி அப்போ நாம மது, தேவிக்கிட்ட பேசுவோம், இப்போ பார்ட்டிக்கான வேலையை கவனி.” என்று கூறினார்.

அந்த நேரம் தேவி அறைக்கு வரவும், அங்கே அவளைப் பற்றி கேட்டதை சொல்லி, அவள் வராததை குறித்து புவனா கோபப்படவும், அவரை சமாதானம் செய்த பாலா,

“அதான் நம்ம வீட்ல பார்ட்டி அரேஞ் செஞ்சிருக்கோம் இல்லம்மா, அதுக்கு விபா குடும்பத்தோட வருவான். அப்போ தேவி அவங்களை பார்க்க தானே போறா,” என்று சொல்ல,

அதில் கொஞ்சம் அதிர்ச்சியாகி, “என்ன பார்ட்டின்னா,” என்று அவள் கேட்க,

“புது ப்ராஜக்ட் ஆரம்பிக்கிறதுக்கான பார்ட்டி தேவி, கொஞ்சம் க்ராண்டான பார்ட்டி, நிறைய வி.ஐ.பி ங்களை இன்வைட் செய்யப் போறேன், நிறைய பிஸ்னஸ் மேக்னெட்ஸ்ல்லாம் வருவாங்க, ம்ம் சுஜனா அப்பாவும் நம்ம பார்ட்னர் இல்லையா? அதனால் சாத்விக் கூட வர வாய்ப்பிருக்கு,” என்று அவன் சொல்ல தேவிக்கு மயக்கம் வராத குறை தான், 

விபாகரனின் வீட்டுக்கு போகாமல் தப்பித்தவள், இந்த பார்ட்டியிலிருந்து எப்படி தப்பிக்க போகிறாள். அதுவும் விபாகரன் பார்வையிலிருந்து மட்டுமல்ல, சாத்விக் பார்வையிலும் படாமல் அவள் தப்பிக்க வேண்டும், முடியுமா?

மையல் தொடரும்..