MMSV 3

மையல் 3

சென்னை விமான நிலையம்

ந்த இரவு நேரம் சுஜனா மிகவும் பதட்டத்தோடு சாத்விக்கிற்காக காத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பே படப்பிடிப்புக்காக போயிருந்த அனைவரும் திரும்பி வந்திருக்க, சாத்விக் மட்டும் இரண்டு நாள் கழித்து வருவதாக சொன்னவன், இதோ இன்னும் சற்று நேரத்தில் விமானத்திலிருந்து தரையிறங்க போகிறான். அவனை விமான நிலையத்திற்கே சென்று அழைத்து வருமாறு தன் தந்தை கூறியதால், இதோ அவனுக்காக வந்து காத்திருக்கிறாள் அவள்,

“சாத்விக்கை நாளை நேரில் சந்தித்துக் கொள்கிறேன், இப்போது இரவு நேரத்தில் சென்று அவரை எதற்கு அழைத்து வர வேண்டும், அதுவும் அவர் நம் வீட்டிற்கு வருவதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சாத்விக் அவர் வீட்டுக்கு தானே செல்ல போகிறார். பிறகு நான் எதற்கு போக வேண்டும்?” என்று அவள் பெற்றொரிடம் கேட்டதற்கு, இருவருமே சிரித்தார்கள்.

“உன்னோட வருங்கால கணவனை பார்க்க போ என்று அனுமதி கொடுத்தால், எதற்கு போக வேண்டும் என்று எங்களிடமே கேட்கிறாயே, சாத்விக்கிடம் பேச நிறைய இருக்காதா? நாங்களே சொல்லிட்டோமே, பிறகு  என்ன? போயிட்டு வா,” என்று கூறினர்.

ஆனால் அவளுக்கு தான் அதில் விருப்பமில்லை. இந்த சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் அவர்களுக்கு இதெல்லாம் சகஜமான ஒன்று தான், சாத்விக்கோடு இரவெல்லாம் இருந்தால் கூட ஏனென்று கேட்க மாட்டார்கள். அது தப்பில்லையா? என்று கேட்டால் கூட, சாத்விக்கை நீ கல்யாணம் தனே செய்துக் கொள்ளப் போகிறாய்?  பிறகு என்ன? என்று கேட்பார்கள். திருமணம் ஆன பெண்ணே இன்னொரு ஆடவனுடன் கைகோர்த்து நடனம் ஆடுவதும், கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதையும் வரவேற்கும் சமூகத்துடன் பழகுபவர்கள் ஆயிற்றே, அதனால் இந்த விஷயம் அவர்களுக்கு தவறாக தோன்றாது தான். ஆனால் இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கும் அவர்கள், இதுவரை இப்படி எல்லைமீறும் விஷயங்களை செய்ததில்லை. அதைப்பார்த்து வளர்ந்ததினாலோ என்னவோ கற்பு என்ற சொல்லுக்கான அர்த்தம் புரிந்து வைத்திருந்தாள் அவள்.

ஆனாலும் தனக்கு கிடைத்த சுதந்திரத்தின் எல்லையை தொட்டு பார்த்திடும் ஆசையும் ஆர்வமும் அவளுக்கு இருந்தது. நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்று தெரியாமல் அனைவரோடும் நட்பு என்ற பேரில் உல்லாசமாய் திரிந்தது ஒருகாலம், ஆனால் சிலவற்றை பட்டு தான் தெரிந்துக் கொள்ள முடியும் என்ற வகையில் அதில் இருந்த ஆபத்துகளையும் சந்தித்துவிட்டு தான், இப்போது இப்படி இருக்கிறாள். முன்பு போலென்றால், இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த பெற்றோரை அணைத்து நன்றி சொல்லிவிட்டு வந்திருப்பாள். ஆனால் இப்போதோ எதிலும் நாட்டமில்லாத ஒரு நிலையில் இருக்கிறாள். நண்பர்கள் வட்டத்தை வெகுவாக சுருக்கிக் கொண்டாள். ஆடம்பரங்களில் ஆசை இல்லாமல் மனம் எளிமையை விரும்பியது. நானா இப்படி மாறிப் போனது? என்று தன்னையே பலமுறை அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அந்த மாற்றம் ஏற்பட காரணமான நபரை இப்போது நினைத்துப் பர்த்தாள். அவள் அறியாமலேயே அவள் மனதில் ஒரு வகையான இதம் தோன்றியது. இருந்தாலும் அந்த நினைப்பை வலுக்கட்டாயமாக ஒதுக்கியவள், இப்போது சாத்விக்கை நினைத்தாள்.

இப்போது அவனை அழைப்பதற்காக அவள் வந்திருப்பது அவனுக்கு பிடிக்குமா? என்று தெரியவில்லை. அவன் ஒரு நடிகனாக இருந்தாலும், பெண்களிடம் அதிகமாக பேசமாட்டான் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அதுவும் அவனோடு திருமணம் முடிவானதும் தான், அவனை பற்றி அவள் தெரிந்துக் கொள்ள நினைத்ததே, ஏற்கனவே திருமணம் பற்றி தந்தை பேசியதும் அதிர்ந்தவள், சினிமாவில் நடிக்கும் கதாநாயகன் தான் அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், இது தனக்கு சரி வருமா என்று முதலில் யோசித்தாள். 

தந்தை சாத்விக் தான் மாப்பிள்ளை என்று ஒரு அறிவிப்பு போல் சொன்னாரே தவிர, அதில் அவளுக்கு விருப்பமா என்று கேட்கவில்லை. சில விஷயங்களில் தேவைக்கு அதிகமான சுதந்திரத்தை கொடுத்தவர்கள், திருமண விஷயத்தில் நீ சாத்விக்கை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவாக கூறிவிட்டனர். இப்போது திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பதில் தான் அவளுக்கு குழப்பம் இருந்ததே தவிர, யரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவள் எந்த வித ஆர்வமும் காட்டியதில்லை. அதனால் தந்தை சொன்னதுக்கு அவளும் சம்மதித்திருந்தாள்.

அப்போதைக்கு ஊடகங்களில் சாத்விக் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் பெண் அவள் தான் என்று சொல்லியிருக்கவில்லையென்றாலும், கூடிய சீக்கிரம் அதை பற்றி வெளியில் சொல்லவும், விரைவிலேயே நிச்சயதார்த்தம் செய்யவும் அவளது பெற்றோரும், சாத்விக்கின் பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். அதனால் சாத்விக்கிடம் பேச சொல்லி அவனுக்கென்று இருக்கும் யாருக்கும் தெரியாத தனிப்பட்ட எண்ணை அவளது தந்தை அவளிடம் கொடுத்தார்.

அவளும் ஒரு சிறு ஆர்வத்தோடு தான் சாத்விக்கிற்கு தொடர்பு கொண்டாள். சில நொடிகளுக்கு பின் அழைப்பு ஏற்கப்பட்டு அவனது குரல் கேட்டது.

“ஹலோ நான் சுஜனா,” என்று அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,

“சுஜனாவா சாரி நீங்க யாருன்னு எனக்கு தெரியல,” என்றவனது பேச்சில், கொஞ்சமாக அவள் மனதிற்குள் எழுந்த ஆர்வமும் அப்படியே அடங்கி போனது.

“என்னை தெரியவில்லையென்று சொல்கிறானே? உண்மையிலேயே என்னை அவனுக்கு தெரியவில்லையா? இல்லை விளையாடுகிறானா?” என்று அவள் சிந்தித்தப்படி இருக்க,

“ஹலோ யார் நீங்கன்னு கேட்டா பதிலையே காணோமே, ஆமாம் என்னோட பர்சனல் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்ற அவனது கேள்வியில் நடப்புக்கு வந்தவள்,

“சாத்விக் நான் சுஜனா, என்னை தெரியலையா? நம்ம வீட்ல நம்ம ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க, இன்னைக்கு உங்க மேரேஜ் பத்தின நியூஸ் தான் ஹாட் நியூஸ்.” என்று சொல்லவும் மறுமுனையில் சிறிது நேரம் மௌனம்.

அவன் தொடர்பில் இருக்கிறானா? என்று தெரியாமல், “ஹலோ சாத்விக்,” என்று அவளே பேசவும்,

“சாரி வேற ஒரு டென்ஷன்ல உங்க பேரை மறந்துட்டேன். இப்போ ஞாபகம் வந்துடுச்சு, நான் இப்போ கொஞ்சம் பிஸியா இருக்கேன். ஃப்ரீ டைம் கிடைக்கும் போது பேசலாம்,” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான் அவன்,

அவனது பேச்சு அவளை தவிர்ப்பதற்காக இருப்பது போல் சுஜனாவிற்கு தோன்றியது. இருந்தும் இன்னொரு பக்கம் உண்மையிலேயே அவனுக்கு வேறு ஏதும் வேலை இருக்குமா? என்றும் யோசித்தாள். அடுத்து அவனே பேசுவதாக கூறினானே, அதுபோல் அவனாகவே பேசட்டும் அப்போது அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று அவள் நினைத்திருக்க, அவனோ அவளிடம் அதன்பின் பேசவே இல்லை. இதோ இப்போது சிறிது நேரத்தில் அவன் வரப் போகிறான். அப்போதாவது இயல்பாக தன்னோடு உரையாடுவானா? என்று அவள் யோசித்தப்படி நின்றிருக்க,

“சுஜா,” என்ற குரலில், அவளை தான் அழைக்கிறார்கள் என்று தெரிந்து குரல் வந்த திசையில் நின்றிருந்தவனை திரும்பி பார்த்தவள், வியப்பில் ஆழ்ந்து போனாள். 

சற்று முன் யாரை நினைக்கக் கூடாது என்று வலுக்கட்டாயமாக ஒதுக்கினாளோ, இப்போது அவனை நேரில் பார்க்கவும், தன்னை மீறி மனதில் தோன்றிய மகிழ்ச்சியில் அவனை பார்த்து புன்னகைத்தாள்.

விபாகரனும் இன்று தான் சென்னை திரும்புகிறான். அதனால் அவனை அழைத்துச் செல்ல அஜய் விமான நிலையத்திற்கு வந்திருந்தான். வந்த இடத்தில் சுஜனாவை பார்ப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது.

விபாகரன் வரும் விமானம் தரையிறங்க சிறிது நேரம் கால தாமதமாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படி இருந்த போது தான் அவன் சுஜனாவை பார்த்தது. இத்தனை வருடங்கள் கழித்து அவளை பார்ப்போம் என்று அவன் நினைத்து பார்க்கவேயில்லை. அவளை பார்க்காமல் இருந்தானே தவிர, அவளை இதுவரை அவன்  நினைக்காமல் இருந்ததில்லை.

இருந்தும் அவளை பார்த்து பேச தயக்கம் கொண்டு அப்படியே தொலைவில் இருந்தப்படியே நின்றிருந்தான். அவள் முன்னே சென்று அவன்  நிற்பதை அவள் விரும்புவாளோ என்பதே காரணம், ஆனாலும் ஒருவித பதட்டத்தோடு அவள் நின்றிருப்பதை சிறிது நேரம் கவனித்து பார்த்தவன், மனம் தாங்காமல் அவள் அருகே சென்று அவளை அழைத்தான்.

இத்தனை வருடத்தில் கண்டிப்பாக அவனை அவள் மறந்திருக்க மாட்டாள் தான், மறக்காத அளவுக்கு இருவருக்குள்ளும் அப்படி நெருக்கமாக எந்த உறவும் இருந்ததில்லை என்றாலும், அந்த ஒரு சம்பவம் அது அவளது நினைவில் இருக்கும் வரை, அவனும் கண்டிப்பாக அவளது நினைவில் இருப்பான். இருந்தும்  அவனை பார்த்ததும் அவள் சங்கட நிலைக்கு ஆளாகிடக் கூடாதே என்று தான் ஒதுங்கி நின்றான். ஆனால் இப்போது அவனைக் கண்டதும் அவளது முகத்தில் தோன்றிய புன்னகையை கண்டு, மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் அவனை விட்டு அகன்று அவளை பார்த்து புன்னகைத்தான்.

“எப்படி இருக்க சுஜா?’

“ம்ம் நல்லா இருக்கேன். நீங்க?’

“நானும் நல்லா இருக்கேன். நாம எப்போ சந்திச்சது, அதுக்குப்பிறகு நிறைய முறை நான் உன்னோட ஃப்ரண்ட்ஸ சந்திச்சிருக்கேன். ஆனா யாருக்கும் உன்னைப்பத்தி எந்த தகவலும் தெரியலயே,” அவன் கேட்கவும், அவள் மீண்டும் புன்னகைத்தாள்.

அவன் தன்னை நினைத்திருக்கிறான் என்பதே அவளுக்கு நிறைவையும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. “அப்பவே நிறைய பேரோட பழகறதை நிறுத்தியாச்சு, இதுல சென்னைக்கு வந்ததும், எல்லோரோடவும் டச் விட்டுப் போச்சு,”

“எப்போ சென்னைக்கு வந்த, நீ வெளிநாட்டுக்கு போயிருப்பேன்னு சில பேர் சொன்னாங்க,”

“இல்ல அப்பவே நான் இங்க சென்னைக்கு வந்துட்டேன். ஆனாலும் யாருக்கும் தகவல் சொல்லல,” என்றாள். அதற்கு என்ன காரணம் என்பது அவனுக்கு புரிந்ததால், அதைப்பற்றி அவன் மேலும் கேட்க விரும்பவில்லை.

“ஆமாம் இந்த நேரத்துல இங்க இருக்க, யாராச்சும் முக்கியமானவங்க வராங்களா? இல்ல செண்ட்ஆஃப் செய்ய வந்தியா? ஆனா ரொம்ப டென்ஷனா இருக்க? ஒன்னும் பிரச்சனையில்லையே” என்று அவன் கேட்கவும்,

தன் பதட்டத்தை அவன் கண்டுக் கொண்டதில், ஒருபக்கம் மகிழ்ந்தாலும், இப்போது அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல், “அது. அது வந்து.” என்று இழுத்த போது,

“ஹாய் அஜய்,” என்ற குரலில் இருவரும் குரல் வந்த  திசையில் திரும்பினர். அங்கே பாலமுருகன் நின்றிருந்தான்.

“ஹலோ பாலா சார்,” என்று அஜய் சென்று பாலாவுக்கு கைகுலுக்கினான்.

“என்ன அஜய், விபாவை அழைச்சிட்டு போகவா வந்த,”

“ஆமாம், மஞ்சு அத்தையும் அண்ணியும் தான் சாரை அழைச்சிட்டு வர சொல்லி அனுப்பினாங்க, ஆமாம் நீங்களும் சாரை அழைச்சிட்டுப் போக தான் வந்தீங்களா? சார் உங்கக்கிட்ட சொல்லியிருந்தாரா?”

“இல்ல நேத்து பேசும்போது இன்னைக்கு வரப்போறதா சொன்னான். வேலை விஷயமா பார்த்தா பக்கா பிஸ்னஸ் மேனா மாறிடுவானே, அதான் ப்ரண்டா இப்பவே பார்த்து அவன் கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் செய்யலாம்னு வந்தேன்.” என்றவன், அப்போது தான் இருவரையும் பார்த்தப்படி நின்றிருந்த சுஜனாவை பார்த்தான். உடனே,

“ஹலோ சுஜனா எப்படியிருக்கீங்க?” என்று அவளை விசாரிக்கவும், அவளுக்கு பாலாவை அடையாளம் தெரியாததால், புரியாத பார்வை பார்த்தாள். அஜயும் கூட சுஜனாவை பாலாவிற்கு தெரியுமா என்பது போல் பார்த்தான்.

“என்ன என்னை அடையாளம் தெரியலையா? உங்க ஃப்ரண்ட் ரூபினியோட ஹஸ்பண்ட். ஒருமுறை நாம சந்திச்சிருக்கோம்” என்று பாலா சொன்னதும், நினைவு வந்தவளாக,

“ஓ சாரி. எனக்கு உடனே ஞாபகத்துகு வரல, நான் நல்லா இருக்கேன். ம்ம் ரூபி எப்படி இருக்கா?”

“நல்லா இருக்கா, ஆமா நீங்க எங்க இங்க,” என்றுக் கேட்டவன், 

“அஜய் உனக்கு சுஜனாவை தெரியுமா?’ என்று அஜயை பார்த்து கேட்டான்.

“ம்ம் ஆமாம் ரெண்டுப்பேரும் காலேஜ் மெட். ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் பார்க்கிறேன்.” என்று அவன் சொல்லவும்,

“அப்படியா, ரூபியும் சுஜனாவோட காலேஜ்மெட் தான், அப்போ உனக்கு என்னோட வைஃப் ரூபினியை தெரியுமா?” என்றுக் கேட்டான்.

“இல்ல Mr. பாலா,  நான் யூஜி படிச்ச காலேஜ்ல அஜய் பிஜி படிச்சாரு, அப்புறம் நான் சென்னை வந்து பிஜி படிச்சேன். அங்க தான்  ரூபி என்னோட   ஃப்ரண்ட்ஸ்,”  என்று சுஜனாவே விளக்கம் கொடுத்தாள்.

“ஓ ரமணா படம் போலன்னு சொல்லுங்க,” என்று சிரித்தான். கூடவே மற்ற இருவரும் சிரித்தனர்.

“ஆ அஜய் உனக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று  பாலா கேட்கவும்,  என்ன என்று அஜய் பார்த்தான்.

“அஜய் சார்மிங் ஸ்டார் சாத்விக் தெரியுமில்ல, அவரை மேரேஜ் செஞ்சுக்க போற லக்கி கேர்ள் சுஜனா தான்,” என்றவன், 

அவளை பார்த்து, “வாழ்த்துக்கள்” என்றான். ஆனால் அந்த விஷயம் அஜய்க்கு  எவ்வளவு வருத்தத்தையும் பாதிப்பையும் கொடுத்தது என்று பாலாவுக்கு மட்டுமல்ல, சுஜனாவுக்கு கூட தெரியாது. 

“ஓ அப்படியா வாழ்த்துக்கள்.” என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவன் கூறவும், அவள் லேசாக புன்னகைத்தாள்.

“ஆமாம் யாரை அழைச்சிட்டு போக வந்திருக்கீங்க சுஜனா,” என்று பாலா திரும்பவும் கேட்க,

“சாத்விக் தான் இப்போ பாரீஸ்ல இருந்து வர்றாரு,” என்று பதில் கூறினாள். 

அதற்குள் விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு வரவும் மூவரும் அதில் கவனம் செலுத்தினர். அது சாத்விக் வரும் விமானம், சிறிது நேரத்திற்கெல்லாம்  சாத்விக் வெளியே வந்தான். அதற்குள் அவனை கண்டுக் கொண்ட அவனது ரசிகர்கள் பல பேர் அவனை சூழ்ந்துக் கொண்டனர். சில ரசிகைகளும் அதில் அடக்கம், அவனை நேரில் கண்ட ஆர்ப்பரிப்போடு ஆளாளுக்கு அவனிடம் ஆட்டோகிராப் வாங்க,  இங்கு மூவரும் அவனை வேடிக்கை பார்த்தப்படி நின்றிருந்தனர்.

ரசிகைகள் அவன் மேல் விழுந்தப்படி ஆட்டோகிராப் வாங்குவதை பார்த்து அவன் மேல் சுஜனாவிற்கு ஒன்று பொறாமை வந்திருக்க வேண்டும். இல்லை தன் வருங்கால கணவன் ஒரு செலப்ரிட்டி என்பதில் பெருமையாவது பட வேண்டும். ஆனால் எந்தவித ஒரு உணர்வுமில்லாமல் அவனை பார்த்தப்படி அவள் நின்றிருந்தாள்.

ரசிகர்களை விலக்கிவிட்டு அவன் வருவதற்குள் சிறிது நேரம் கடந்துப் போயிருந்தது. அவன் வருவதை பார்த்து சுஜனா ஒரு எதிர்பார்ப்போடு நிற்க, சுஜனாவை இதுவரை பார்க்காத காரணத்தால், அவளை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அதனால் அவன் அவளை கவனிக்கவேயில்லை. ஆனால் அங்கே அவளோடு நின்றிருந்த பாலமுருகனை அவனுக்கு நன்றாக தெரியும், மதுரிமாவோடு இணைந்து நடித்த போது சிலமுறை பாலாவை அவன் பார்த்திருப்பதால், அவனை அந்த இடத்தில் கவனித்த சாத்விக் அவர்கள் அருகில் வந்தான்.

“ஹாய் பாலா இங்க என்ன?’

“என்னோட ப்ரண்ட ரிஸீவ் செய்ய வந்தேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்க புதுப்பட ஷூட்டிங்க்ல்லாம் எப்படி போச்சு,’

“ம்ம் எல்லாம் நல்லா போச்சு என்றவன், உடன் இருந்த இருவரையும் பார்த்து,

“இவங்கல்லாம்,” என்று இழுத்து தெரியாதது  போல் கேட்க, அதில் சுஜனாவின் முகம் வாடிவிட்டது. சாத்விக் அவர்கள் அருகில் வந்ததிலிருந்து சுஜனாவையே கவனித்துக் கொண்டிருந்த அஜய்க்கு அவளின் முகமற்றம் நனறாகவே தெரிந்தது. அதுவுமில்லாமல் அவளை யாரென்று தெரியாதது போல் சாத்விக் கேட்டது மற்ற இரு ஆடவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 

ஆனாலும் அந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்ட பாலா, “என்ன சாத்விக், சுஜனாவை நீங்க தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தணும், ஆனா தெரியாத மாதிரி கேக்கறீங்க, உங்களை ரிஸீவ் செய்ய தான் அவங்க இங்க வந்திருக்காங்க,” என்று கூறவும்,

சுஜனா என்ற பேரைக் கேட்டதும் அவள் யாரென்று அவனுக்கு தெரிந்துவிட்டது. அவள்  அலைபேசியில் பேசிய போதே, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்பதை சொல்லிவிடலாம் என்று நினைத்தவன், தன் தந்தையை கவனத்தில் நிறுத்தி, எதையும் அவசரமாக செய்துவிட வேண்டாம் என்ற முடிவோடு அவளிடம் பிறகு பேசுவதாக கூறி அலைபேசி அழைப்பை துண்டித்தான். 

அடுத்து அவளிடம் பேசாமல் அவன் இருந்ததிலேயே அவளுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்க, அவளோ இப்படி அவனை அழைத்து போக இந்த இரவு நேரத்தில் வந்திருப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அதில் எரிச்சலடைந்தவனாக, 

“இவங்களை போட்டோல பார்த்தது தான், நேர்ல பார்க்கவும் சட்டுன்னு கண்டுபிடிக்க முடியல,” என்று பாலாவிடம் கூறியவன், பின் சுஜனாவை பார்த்து,

“நான் என்னோட பி.ஏ க்கு போன் செஞ்சு சொல்லிட்டேன் சுஜனா, அவர் கொஞ்ச நேரத்துல வந்துடுவார். எதுக்கு தேவையில்லாம உங்களுக்கு கஷ்டம். நாம இன்னொரு முறை சந்திக்கலாம், இப்போ நீங்க வீட்டுக்கு போங்க,” என்றான்.

மற்ற இருவரின் முன்னிலையிலும் அவன் அப்படி சொல்லவும் திரும்ப ஒருமுறை அவள் முகம் வாடிவிட்டது. அதை மறைக்க முயற்சித்தவளாக,  முகத்தில் வலுக்கட்டாயமாக புன்னகையை வரவைத்து சிரித்தப்படியே,

“அதனால என்ன சாத்விக், உங்க பி.ஏ வரட்டும் அப்புறம் நான் கிளம்பறேன்.” என்றாள்.

அதற்கு மறுப்பு சொல்ல நினைத்தவன், பின் பாலா மற்றும் இன்னொரு ஆடவன் உடன் இருப்பதால் அவர்கள் முன் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று அமைதிக் காத்தான். இருந்தும் “இந்த பன்னீர் ஏன் இன்னும் வரல,” என்று கடுப்பானான்.

“சாத்விக் இது அஜய். சுதர்ஷன் க்ரூப் ஆப் கம்பெனி தெரியுமில்ல, அதோட சென்னை ப்ரான்ச் மேனேஜிங் டைரக்டர்.” என்று பாலா அறிமுகப்படுத்தியதும், இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

“சுதர்ஷன் க்ரூப் ஆப் கம்பெனியோட சேர்மன் விபாகரனை ரிஸீவ் செய்ய தான் நாங்க ரெண்டுப்பேரும் வந்தோம், அப்போ தான் சுஜனாவை பார்த்தோம்,

சுஜனாவும் அஜயும் காலேஜ்மெட்டாம், அப்புறம் சுஜனா என்னோட வைஃப் ரூபினியோட ஃப்ரண்ட்ஸ்,” என்று விளக்கம் கொடுத்தான்.

“ஓ அப்படியா,” என்று சாத்விக் புன்னகைக்க,

“அதுமட்டுமில்ல சாத்விக்,  கூடிய சீக்கிரம் சுஜனா அப்பாவும் நானும் பிஸ்னஸ்ல பார்ட்னரா இணையறோம், கூடவே விபாகரனும் தான், உங்களுக்கும் சுஜனாவுக்கும் மேரேஜ் முடிஞ்சா நீங்களும் ஒருவிதத்துல அந்த கம்பெனிக்கு டைரக்டரா ஆகிடுவீங்க, சோ எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு, அதனால நீங்க விபாவை பார்த்துட்டு தான் போகணும்,” என்று பாலா சொல்லவும்,

இதிலெல்லாம் சாத்விக்கிற்கு ஈடுபாடு இல்லையென்றாலும், பாலா சொன்னது போல் இந்த திருமணம் நடக்க போவதில்லை என்பதை மனதில் நிறுத்திக் கொண்டாலும், விபாகரனை பற்றி கேள்விப்பட்டிருப்பதால், 

“ஓ அதனாலென்ன பார்த்துட்டா போச்சு,’ என்றான்.

அதற்கேற்றார் போல் திரும்ப விமானம் தரையிறங்குவது குறித்து அறிவிப்பு வர, நால்வரும் விபாகரனுக்காக காத்திருந்தனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விபாகரன் வரவும், அங்கிருந்தே பாலா, அஜயை கவனித்தவன், இருவருக்கும் பொதுவாக கையசைத்தான். அதன்பின் தான் அவர்களோடு நின்றிருந்த சாத்விக்கை கவனித்தான். உடனே புன்னைகையோடு இருந்த அவன் முகம் மாறியது.

அவர்கள் அருகில் வந்ததும், “ஹாய் மச்சான்.” என்று பாலாவை அணைத்து விடுவித்தவன்,

“ஹாய் அஜய்,” என்று கூறியப்படியே அஜய்க்கு கைகுலுக்கினான்.

“ஹே விபா இது யாருன்னு தெரியுதுல்ல, சார்மிங் ஸ்டார் சாத்விக், உன்னை பார்க்க தான் காத்திருக்கிறார்டா,” என்று பாலா கூறியதும்,

“ஹலோ மிஸ்டர் விபாகரன்.” என்று சாத்விக் கையை நீட்டினான். விபாகரனோ பதிலுக்கு கைகொடுக்காமல் அப்படியே நின்றிருந்தான்.

மையல் தொடரும்..