MMSV 2

மையல் 2

“பிரபல தமிழ் முன்னனி நடிகர் தொழிலதிபர் மகளை மணக்க இருக்கிறார்.” என்று அன்றைய பத்திரிக்கையில் உள்ள தலைப்புச் செய்தியை தேவி படிக்க ஆரம்பிக்க, ஃபேஸ்பேக் போட்ட முகத்தோடு கண்களில் வெள்ளரி துண்டை வைத்து கண்களை மூடியப்படி சாய்வு நாற்காலியில் சாய்வாக அமர்ந்துக் கொண்டு மதுரிமா அதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சாத்விக் மதுரமான நடிகையை மணக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நடிகையின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது” என்ற கிசுகிசு செய்தியை கடைசியாக தேவி படித்து முடிக்கவும், “என்ன?” என்று கண்களில் இருந்த வெள்ளரி துண்டை கையில் எடுத்தப்படி அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

“ஹேய் ஃபேஸ்பேக் போட்ருக்க மது, பேசினா சுருக்கம் விழும்.” என்று தேவி பதறி, எழுந்து சென்று ஒரு ஈரத்துண்டை எடுத்து வந்து மதுரிமாவிடம் கொடுத்தாள். அதில் தன் முகத்தை துடைத்தப்படியே, “இந்த ப்ரஸ்க்காரங்க எப்படில்லாம் எழுதறாங்க பாரு தேவி, சாத்விக் என்னை கல்யாணம் செய்யவும் வாய்ப்பு இருக்குன்னு என்னோட  தரப்புல இருந்து சொல்லியிருக்கேன்னு போட்ருக்காங்க, நானோ இல்லை என் சார்பாவோ இப்படி போய் அவங்கக்கிட்ட சொன்னோமா? 

சாத்விக் கல்யாணம் செஞ்சுக்கப் போறதா அவங்க அப்பாவே ப்ரஸ்க்காரங்கக்கிட்ட சொல்லியும் இப்படியெல்லாம் நியூஸ் போட்றாங்க பாரேன்.”

“அவங்க பத்திரிக்கை விக்க இப்படியெல்லாம் நியூஸ் போட்றது சகஜம்னு நீதானே சொல்லியிருக்க மது, இப்போ ஏன் கோபப்பட்ற?”

“அதுக்காக இந்த நியூஸ்ல கூடவா,”

“சரி விடு, சாத்விக்கோட திருமண செய்தி கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ஒரு செய்தியை நீயும் பத்திரிக்கைக்கு கொடுத்திடு,” என்று தேவி யோசனை சொன்னதும்,

“அடடா பூவோட சேர்ந்து நாறும் மணக்கும்னு சொல்றது போல நீயும் கலக்குற தேவி,” என்று மதுரிமா பாராட்டிக் கொண்டிருந்தாள். இருவரும் அந்த பெரிய பங்களாவின்  வரவேற்பறையில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் அங்கே வந்த புவனா, “தேவி கையில் இருந்த பத்திரிக்கையை வாங்கி, “நிஜமாவே சாத்விக்கோட கல்யாண அறிவிப்பு உனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலையா மதும்மா,” என்றுக் கேட்டப்படி தேவி உட்கார்ந்திருந்த சோஃபாவில் அவள் அருகில் சென்று அமர்ந்தார்.

“பெரியம்மா நீங்க வேற விளையாடாதீங்க,” என்று அவள் சிரிக்க,

“நான் விளையாடல மது, சீரியஸா தான் கேட்கிறேன். உங்க ரெண்டுப்பேருக்குள்ள இருக்க கெமிஸ்ட்ரி வெறும் நடிப்புல மட்டும் தானா? நிஜத்துல இல்லையா?”

“ஹிஸ்ட்ரி ஸ்டூடண்ட் எதுக்கு கெமிஸ்ட்ரி பத்தில்லாம் பேசறீங்க,” என்று புவனா பேசிய விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போல் மதுரிமா விளையாட்டாக பதில் கூற,

“இன்னுமே என்னோட பேச்சை விளையாட்டா தான் எடுத்துக்கிட்டு இருக்க போல மது, ரெண்டுப்பேரும் ஒரே ஃபீல்ட்ல இருக்கீங்க, சாத்விக் உன்னை புரிஞ்சு நடந்துக்க வாய்ப்பு இருக்கு, உன் கூட சேர்த்து வந்த கிசிகிசுவை தவிர்த்து, சாத்விக் பத்தி எதுவும் தப்பா வந்ததில்ல, உனக்கும் சாத்விக்கிக்கும் ஏதோ இருக்குன்னு தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீ சாத்விக்கை கல்யாணம் செஞ்சுக்கிட்டா கூட நல்லா இருக்கும்னு ஆசைப்பட்றுக்கேன் தெரியுமா?” 

புவனாவின் பேச்சு மதுரிமாவிற்கு நெகிழ்ச்சியை உண்டாக்கியது. இவரோடு கூட பிறந்தவள் தானே அவளின் அன்னை மோகனா, ஆனால் இவரது மனம் போல் ஏன் அவளின் அன்னைக்கு இருக்கவில்லை. ரெண்டுப்பேருக்கும் சரிசமமாக தானே தாத்தா அவரது சொத்தை பிரித்துக் கொடுத்தார். அதை பெரியப்பாவோடு சேர்த்து நல்ல முறையில் உழைத்து அந்த சொத்தை இவர்கள் பன்மடங்கு பெருக்கவில்லையா? ஆனால் அவளின் தந்தையோடு சேர்ந்து தாத்தா கொடுத்த சொத்துக்களை ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, அதே வசதியுடன் வாழ வேண்டுமென்று மகளை ஒரு நடிகையாக மாற்றி, அவள் சம்பாதிக்கும் காசை இப்போதும் ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டிருக்கின்றனர் அவள் பெற்றோர்கள்.

இன்னும் இன்னும் அவள் நடித்து சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்ற பேராசையுடன் தான் இருவரும் இருக்கின்றனர். இதில் அவளது திருமணத்தை பற்றியெல்லாம் சிந்தித்து பார்ப்பார்களா?? அந்த எண்ணமே அவர்களுக்கு தோன்றியிருக்காது. மனதிற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லாமல், பெற்றவர்களின் கட்டாயத்தில் தான் அவள் சினிமாவில் நடிக்க நுழைந்ததே, அந்த துறையில் பெண்ணாக அவளுக்கு ஏற்பட்ட இடையூறுகளை வெற்றிகரமாக இந்த ஐந்து வருடத்தில் கடந்து வந்து, தன் பெண்மையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால் பெற்றவர்களாக அந்த அக்கறை கூட அவர்களுக்கு கிடையாது. எத்தனை பட வாய்ப்புகள் வரும்? அதில் எவ்வளவு வருமானம் வரும்? இதையெல்லாம் மட்டும் தான் இருவரும் கவனிப்பர். 

புவனாவிற்கு சுத்தமாக இதில் விருப்பமில்லை. தங்கையிடமும் தங்கை கணவனிடமும் எவ்வளவு பேசியும் இருவரும் கேட்கவில்லை. “உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் மதுவை படிக்க  வைத்து அவளுக்கு திருமணம் முடிக்கும் செலவு முழுக்க நாங்களே பார்த்துக் கொள்கிறோம், உங்கள் செலவுக்கான பணத்தை கூட கொடுக்கிறோம், மதுவை சினிமாவில் எல்லாம் நடிக்க வைக்க வேண்டாம்” என்று எடுத்து சொல்லியும் அவர்கள் இருவரும் காதில் வாங்கவில்லை. 

அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? சினிமாவில் அவளுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து அவளுக்காக தன் தொழிலை கூட மகனிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, புவனாவின் கணவன், அவளின் பெரியப்பா சிவகுரு தான் வந்து அவளுக்கு துணையாக இருந்தார். எந்த படம் ஒத்துக் கொள்ள வேண்டும், வேண்டாம், அதன் தயாரிப்பாளர் யார்? இயக்குனர், உடன் நடிக்கும் நடிகர் இத்தனையும் பார்த்து தான் அவர் அந்த படத்தை ஒத்துக் கொள்ள சொல்வார். இதற்கும் அவர்கள் சென்னையில் கூட அப்போது இல்லை. அவளுக்காக இங்கேயும் அங்கேயும் அலைந்துக் கொண்டிருப்பார்.

அவள் படம் ஒத்துக் கொண்டபின் வரும் அட்வான்ஸ் பணத்தையும் சம்பளத்தை மட்டும் அவள் பெற்றோர்கள் வாங்கிக் கொள்வர். சிவகுருவின் தலையீடு அவர்களுக்கு பிடிக்காது தான், ஆனால் பெரியப்பா முடிவு செய்யாவிட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று மதுரிமா கூறியதால் வேறு வழியில்லாமல், அவள் நடித்தாலே போதும் என்று அமைதியாகிவிட்டனர். இப்போது சிவகுரு உயிரோடு இல்லை, ஆனாலும் புவனா,சிவகுருவின் மகன் பாலமுருகன் இப்போது தன் தொழிலோடு சேர்த்து மதுரிமாவின் நடிப்பு சம்பந்தமான வேலையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அதற்கேற்றார் போல் புவனாவும் பாலமுருகனும் சென்னைக்கே வந்துவிட்டனர். 

இப்போதும் புவனா மற்றும் பாலமுருகனின் எண்ணம், மதுரிமா நடித்தது வரை போதும், சினிமாவை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்பது தான், அதிலும் புவனாவின் கவலை மதுரிமாவிற்கு நல்லப்படியாக திருமணம்  முடித்து வைப்பது தான், அதிலும் அவள் ஒரு நடிகை என்ற காரணத்தால், அவளது திருமணம் குறித்த கவலை புவனாவிற்கு அதிகமாகவே இருக்கிறது. அதை மதுரிமாவும் உணர்ந்ததால் தான், புவனாவின் பேச்சில் அவளுக்கு கோபம் வருவதில்லை.

“பெரியம்மா சாத்விக் மேல அப்படி ஒரு இன்ட்ரஸ்ட் இருந்தா உங்களுக்கு சொல்லாம இருப்பேனா? என்னை பொறுத்த வரைக்கும் சாத்விக் சினிமா ஃபீல்ட்ல ஒரு நல்ல ஃப்ரண்ட்ஸ், அதுதான் அவர் கூட எனக்கு  நடிக்க ஈஸியா இருக்கு.  மத்தப்படி வேற ஒன்னுமில்ல பெரியம்மா, நான் கல்யாணம் செஞ்சுக்கும் போது இந்த சினிமாவுக்கு முழுக்கு போடணும்னு நினைக்கிறேன். என்னை கல்யாணம் செஞ்சுக்க போறவர் என்னை ஒரு நடிகையா பார்க்கக் கூடாது. என்னை சாதாரண ஒரு பொண்ணா தான் பார்க்கணும், அப்படி ஒரு ஆளை பார்த்தா உடனே இந்த நடிக்கிறதெல்லாம் விட்டுட்டு  அவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டு செட்டில் ஆயிடுவேன். 

அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க பெரியம்மா, இப்போ நீங்க உடனடியா மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க ஆசைப்பட்டா, இதோ நம்ம தேவி இருக்கால்ல, அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைங்க,” என்று மதுரிமா தேவியை பார்த்து கைக்காட்டியதும், அதுவரை இருவரின் பேச்சை வேடிக்கைப் பார்த்தப்படி இருந்த தேவி அதிர்ந்தாள்.

“நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்.  ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க தான் நினைக்கிறேன். ஆனா அவ தான் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கா,” என்று புவனா அதற்கும் குறைப்பட்டார்.

“அய்யோ அம்மா ப்ளிஸ்  என்னோட கல்யாணப் பேச்சை எடுக்காதீங்க, நான் கல்யாணமே செய்துக்க போறதில்ல, நான் இப்படியே இருந்துட்றேன் ம்மா,” என்று தேவி கெஞ்சலாக கூறவும்,

“ரெண்டுப்பேரும் இப்படி ஏதாவது காரணத்தை சொல்லிக்கிட்டே இருக்கீங்க, அம்மாவா என்னோட கவலை உங்களுக்கு எங்க புரியுது?” என்று புவனா வருத்தமாக பேச, 

“அம்மா பொண்ணுங்களுக்கு கல்யாணம்னா கூடுதல் பொறுப்பு வந்துடும், அவங்க கொஞ்ச நாளைக்கு இப்படியே ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறாங்க, விடுங்களேன் ம்மா,” என்று சொல்லியப்படி பாலமுருகனும் அங்கே வந்து அமர்ந்தான்.

தங்கள் சகோதரனின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை நினைத்து இருவரும் மகிழ்ச்சியோடு புன்னகைத்தனர்.

“ம்ம் சப்போர்ட்டுக்கு கூட ஒரு ஆளா, இதுக்கு மேல என்னோட பேச்சு எடுபடுமா,” என்று புவனா குறைப்பட்டுக் கொண்டார். அடுத்து பேச்சு திருமணத்தை தவிர்த்து வேறு பக்கம் திசை மாறியது. நால்வரும் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ஓ நீங்கல்லாம் இங்க தான் இருக்கீங்களா? என்றபடி ரூபினி உள்ளே வரவும் தான், அவர்கள் சுற்றுப்புறத்தை கவனிக்க ஆரம்பித்தனர். 

ரூபினி பாலமுருகனின் மனைவி. அவர்களுக்கு திருமணமாகி இரு வருடங்கள் ஆகிறது. இரண்டு நாளாக  பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தவள், இப்போது தான் வந்திருக்கிறாள்.

“ஹாய் மது எப்போ வந்த? எப்படியிருக்க?” என்று தன் நாத்தனாரை விசாரித்தவள், அவர்களோடு இருந்த தேவியை பார்த்து கடுப்பானாள்.

“நேத்து வந்தேன் அண்ணி.” என்ற மதுரிமாவின் பதிலை கூட காதில் வாங்காமல், தேவியை பார்த்து,

“உனக்கு வேலையில்லையா? இவங்கக் கூட உட்கார்ந்துந்து கதை பேசிட்டு இருக்க,” என்று தேவியை பார்த்து கேட்டாள். ரூபினியின் அந்த கேள்வி யாருக்கும் பிடித்தமில்லை என்பது மற்ற மூவரும் ரூபினியை பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. ஆனால் அதற்கெல்லாம் அவள் கவலைப்படவில்லை.

“வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு அண்ணி.” என்று தேவி தயக்கத்தோடு கூறவும்,

“இதோ நான் வந்திருக்கேன் இல்ல, போய் எனக்கு தண்ணி எடுத்துட்டு வா, அப்புறம் எல்லோருக்கும் டீ போடு, அப்புறம் நாளைக்கு நான் ஒரு பங்க்ஷங்க்கு போகணும், என்னோட மெரூன் கலர் பட்டுப்புடவையை நல்லா அயர்ன் செஞ்சு வச்சிடு,” என்று  வேலைகளை அவள் அடுக்கிக் கொண்டே போனாள்.

“அப்பப்போ நீ இந்த வீட்ல வேலை செஞ்சவங்களோட பொண்ணுன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு,” என்று குத்தலாக வேறு பேசினாள்.

“ரூபி,” என்று பாலா ஏதொ கோபமாக சொல்ல வர, புவனா அவனை பார்வையால் அடக்கினார். அதற்குள் தேவியும் ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து ரூபினியிடம் கொடுத்தவள்,  ரூபினி சொன்ன வேலையை செய்ய கிளம்பிவிட்டாள்.

“மது இன்னைக்கு ஹாட் நியூஸ் என்னன்னு தெரியுமில்ல,”

“சாத்விக் மேரேஜ் நியூஸ் தான, இப்போ தான் தேவி படிச்சு சொன்னா அண்ணி.”

“உனக்கு தெரியுமா மது, சாத்விக் மேரேஜ் செஞ்சுக்க போறது வேற யாருமில்ல, என்னோட ஃப்ரண்ட் சுஜனா தான், காலேஜ்ல இருந்தே நாங்க பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்,”

“அப்படியா அண்ணி. ஆனா அதைப்பத்தி பேப்பர்ல நியூஸ் எதுவும் போடல போலயே,”

“ஆமாம் ப்ரஸ்க்கு மெதுவா சொல்ல இருக்காங்க, சுஜனா  மட்டுமில்ல, அவ பேமிலியும் எங்க பேமிலியும் நல்ல நெருக்கமானங்க, அதால தான் எனக்கு நியூஸ் தெரிஞ்சுது. அதுமட்டுமில்ல மது பாலாவும் சுஜாவோட அப்பாவும் புதுசா பார்டனர்ஷிப்ல பிஸ்னஸ் செய்யப் போறாங்க, எல்லாம் அப்பா ஏற்பாடு தான்,” என்று பெருமையோடு சொல்ல, மதுரிமா தன் அண்ணனை கேள்வியாக பார்த்தாள். இதுவரை அவன் பார்டனர்ஷிப்பில் தொழில் செய்ததில்லையே!! ஓரளவுக்கு லாபம் வந்தால் கூட போதுமென்று எதிலும் அகல கால் வைப்பதில்லை அவன், தன் மாமனாரின் தொழிலை இப்போது அவன் பார்த்துக் கொள்வது கூட, அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் தான், அப்படியிருக்க இப்போது இது என்ன புதிதாக பார்டனர்ஷிப் என்று நினைத்தாள்.

“அது என்னோட ஃப்ரண்ட் விபா புதுசா ஒரு பெரிய ப்ராஜக்ட் செய்யப் போறான். அதுக்கு நிறைய இன்வஸ்ட் தேவைப்படுது மதும்மா, அதான் என்கிட்ட அதைப்பத்தி பேசினான். கண்டிப்பா லாபம் வர கூடிய ப்ராஜக்ட் தான், அதான் ஓகே சொல்லிட்டேன். கூட இன்னொருத்தரும் பார்டனரா சேர்ந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் செய்தோோம். அப்போ தான் மாமா அவங்க ப்ரண்டை பத்தி சொன்னாரு, விபா சென்னைக்கு வந்ததும் வேலையை ஆரம்பிச்சிட வேண்டியது தான்,” என்று விளக்கம் கொடுத்தான்.

விபாகரனை பற்றி அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். அவன் கைப்பட்ட வியாபாரம் எல்லாம் வெற்றி தான், அவன் தன் சகோதரனின் நண்பன் என்பதும் அவளுக்கு ஏற்கனவே தெரியும், அவனை நேரில் பார்த்ததில்லை என்றாலும், செய்தித்தாள்களில் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். அவர்களின் தயாரிப்புக்களுக்காக ஒரு விளம்பரத்திலும் நடித்துக் கொடுத்திருக்கிறாள். அதனால் தன் சகோதரனின் இந்த முயற்சி வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கையில் அதற்கு மேல் எதுவும் அவள் கேட்கவில்லை.

இவர்கள் மூவரும் இங்கே பேசிக் கொண்டிருக்க, புவனாவின் கவனம் முழுவதும் தேவியை பற்றி தான் இருந்தது. பதினெட்டு வயதில் அவர்கள் வீட்டில் வேலை செய்ய வந்த அவளது அன்னை தனத்தோடு வந்தவள் தான் தேவி. அப்போதே வேலை செய்பவளின் மகள் என்று நினைக்காமல், தங்கள் விட்டில் ஒரு பெண் போலத்தான் அவரும் அவரது கணவர் சிவகுருவும் தேவியை நினைத்தனர். அப்போது திருமண வயதில் இருந்த தன் மகனிடனும், “இவளும் நம்ம மதும்மா போல தான் பாலா,” என்று தான் அவளை அறிமுகப்படுத்தினர். பாலாவும் அதற்குப்பிறகு தேவியையும் தன் தங்கையாக தான் பாவித்தான். ஐந்து வருடங்கள் கடந்த பின்பும் இதுவரை அப்படித்தான் அவர்கள் மனதில் தேவி என்றும் மாறாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறாள்.

ஆனால் ரூபினி மட்டும் தேவியை எப்போதும் வேலைக்காரியின் மகள், அவளும் ஒரு வேலைக்காரி என்று நினைப்பதும், அவளை அப்படி நடத்துவதும் புவனாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பாலாவிற்கும் பிடிக்காமல் தான் ரூபினியிடம் கோபமாக பேச முயற்சித்தான். ஆனால் தேவி குறித்து கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனைகள் வருவதை அவர் விரும்பவில்லை.

ரூபினி வீட்டில் வேலை செய்பவர்களை எப்போதும் கொஞ்சம் கீழாக தான் நடத்துவார்கள். அதனால் தான் ரூபினி தேவியிடம் இப்படி நடந்துக் கொள்கிறாள் என்பதை புவனா புரிந்துக் கொண்டதால் இப்படி அமைதியாக இருக்கிறார். தேவியும் ரூபினியின் செயல்களை பக்குவத்தோடு புரிந்து கொள்வதால் புவனாவின் இந்த அமைதியை தவறாக புரிந்துக் கொள்ள மாட்டாள் என்பதும் புவனாவிற்கு தெரியும், இருந்தாலும் இந்த நிலையை இப்படியே நீடிக்க விடாமல் ஏதாவது செய்தாக வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார் அவர்.

புவனா நினைப்பது மட்டுமில்லாமல் ரூபினிக்கு தேவியிடம் இப்படி நடந்து கொள்வதற்கு வேறு சில காரணங்களும் இருந்தது. ரூபினி தோற்றத்தில் சுமாராக தான் இருப்பாள். அப்படிப்பட்டவள் வேலைக்காரியான தேவியின் அழகை பார்த்து முதலில் பிரம்மித்து தான் போனாள். நாளடைவில் அது பொறாமையாகவும் மாறிவிட்டது. மதுரிமாவும் அழகு தான், இருந்தும் அவள் ஒரு நடிகை என்பதால், என் நாத்தானார் முன்னனி கதாநாயகி என்று சொல்லிக் கொள்வதில் ரூபினிக்கு பெருமை. ஆனால் தேவி அப்படியில்லை.

இதில் மதுரிமா பாலாவிற்கு உடன்பிறந்த சகோதரி இல்லையென்றாலும் ரத்த சம்பந்தம் இருவருக்கும் உள்ளது. ஆனால் தேவியை உடன்பிறவா சகோதரி என்று சொல்வதை தான் ரூபினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் அவளின் அன்னை வேறு, என்ன இருந்தாலும் அந்த பெண்ணை கொஞ்சம் தள்ளி நிறுத்து என்று வேறு ரூபினி பிறந்த வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் தூபம் போட்டுக் கொண்டே இருப்பார். அதனால் கணவன் இருக்குமிடத்தில் அவள் இருந்தால் ரூபினிக்கு பிடிக்காது. அவளை வேலைக்காரி என்று மட்டம் தட்ட பார்ப்பாள். 

தேவிக்கும் அது புரிந்ததால் எப்போதும் ரூபினி மற்றும் பாலாவிடம் கொஞ்சம் ஒதுங்கி தான் இருப்பாள். ஆனாலும் படப்பிடிப்பு இல்லாத ஓய்வு சமயத்தில் வீட்டிற்கு வரும் மதுரிமாவிற்காக அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிவிடும். தன் வீட்டு சூழ்நிலையை வெறுக்கும் மதுரிமா ஓய்வு நேரத்தில் எப்போதும் பெரியம்மா வீட்டிற்கு வந்துவிடுவாள். அதுவும் அவர்கள் சென்னை வந்தது அவளுக்கு இன்னும் வசதி. அப்படி தான் தேவியோடும் மதுரிமாவிற்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அதனால் தான் மதுரிமாவிற்காகவும் புவனாவிற்காகவும் தேவி ரூபினியை பொறுத்துக் கொள்வாள். அப்படி ரூபினியின் செயலுக்காக கோபப்பட்டாலும் தான், தன் அன்னை தனம் இப்போது உயிரோடு இல்லாத நிலையில் தேவிக்கு செல்வதற்கு வேறு போக்கிடம் ஏது? அதனால் இதெல்லாம் அவள் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டாள்.

வெளியில் இருந்து வந்ததால் ஃப்ரஷ் ஆகி வருகிறேன் என்று சொல்லி ரூபினி அவளது அறைக்குச் சென்று விட, மதுரிமா தேவியை தேடி சமையலறைக்குச் சென்றாள். புவனா ஏதோ சிந்தனையோடு அமர்ந்திருப்பதை பார்த்த பாலா.

“என்னம்மா, ரூபி பேசினதை நினைச்சு வருத்தப்பட்றீங்களா? தேவிக்கிட்ட இப்படி நடந்துக்காதன்னு அவக்கிட்ட சொல்லலாம்னு பார்த்தாலும், நீங்க தடுத்திட்றீங்க, அப்புறம் இப்படி வருத்தப்பட்றீங்க, ஏன் ம்மா,” என்றுக் கேட்டான்.

“பாலா, நாம தேவிக்காக ரூபினிக்கிட்ட பேச பேச ரூபினிக்கு தேவி மேல வெறுப்பு கூடிக்கிட்டே தான் போகும், கூடவே உங்களுக்குள்ளேயும் பிரச்சனை வரும், அதை தேவியும் விரும்பமாட்டா, கூட தேவி எல்லாம் புரிஞ்சு நடந்துக்கிற பொண்ணுடா, அதனால ரூபினி பேசறத பெருசா எடுத்துக்க மாட்டா,”

“ஆனாலும் நாம அமைதியா இருந்தா ரூபினி இருக்க இருக்க கொஞ்சம் ஓவரா தான் நடந்துக்கிறா ம்மா,”

“அதுக்கு தான் சீக்கிரமா தேவிக்கு ஒரு வரன் பாருன்னு சொல்றேன். கூடவே நம்ம மதுவுக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்யணும், இந்த ஜென்மத்துக்கு உன்னோட சித்தப்பா, சித்திக்கு இப்படி ஒரு எண்ணம் தோணாது. அதனால நாமதான் மதுவுக்கும் நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும், நம்ம பொறுப்புல இருக்க தேவிக்கும் நல்லப்படியா கல்யாணம் செய்து வைக்கணும், அதை சொன்னா நீ எங்க புரிஞ்சிக்கிற,”

“எனக்கு புரியாமலாம்மா, சும்மா கல்யாணம் செஞ்சுக்கன்னு சொன்னா ரெண்டுப்பேரும் வேண்டாம்னு தான் சொல்வாங்க, ஒரு நல்ல வரனா கொண்டு வந்தா அப்புறம் அவங்களுக்கு மறுக்க தோணாது.

என்னோட ஃப்ரண்ட் விபா சென்னை வரானில்ல, மும்பைல அவனோட தங்கையோட இருக்க அவங்க அம்மா விபாக்கு சீக்கிரம் கல்யாணம் செய்ய நினைக்கிறாங்க, எனக்கு ஒரு யோசனை, நம்ம மதுவுக்கு விபாவை பார்த்தா என்ன? அதுமட்டுமில்ல விபாவோட தங்கை புருஷனோட தம்பி அஜய். அவன் தான் விபாவோட சென்னை பிஸ்னஸை கவனிச்சிக்கிறான். நம்ம தேவிக்கு அவனை வரனா பார்க்கவும் ஒரு யோசனை இருக்கும்மா,”

“நல்லது தான் பாலா, இருந்தும் எடுத்தோம் கவுத்தோம்னு இல்லாம நல்லா யோசிச்சு முடிவு செய். ஏன்னா மது ஒரு நடிகை அவளை அவங்க குடும்பத்துக்கு பிடிக்கணுமில்ல, அதேபோல தேவியை நம்ம பொண்ணா நினைக்கிறோம், ஆனாலும் ரூபினி மாதிரி அவங்க நினைச்சிடக் கூடாதில்ல, அதனால பொறுமையாகவே இந்த விஷயத்துல முடிவு செய்வோம்.”

“அம்மா விபா விஷயத்தில் மதுவை நாம நம்பி கொடுக்கலாம், ஏன்னா நடிகைகளை பத்தி கீழாக எல்லாம் அவன் பார்க்கமாட்டான். அதேபோல தேவி விஷயத்திலும் விபா சொன்னா அஜய் வீட்ல மறுத்து பேச மாட்டாங்க, நாமும் தேவியை சும்மாவா அனுப்பப் போறோம், அவளுக்கு செய்ய வேண்டியதை சிறப்பா செஞ்சு தான் புகுந்த வீட்டுக்கு அனுப்புவோம். அதனால நீங்க ரெண்டுப்பேரை நினைச்சும் கவலைப்பட வேண்டியதில்ல, முதலில் விபாகரனோட சேர்த்து பிஸ்னஸ் ஆரம்பிப்போம், அப்புறம் இந்த கல்யாண விஷயத்தை மெதுவா ஆரம்பிக்கலாம்” என்றதும், புவனாவும் மகிழ்ச்சியோடு தலையசைத்தார்.

அங்கே சமையலறையில் மதுரிமா தேவியிடம் வருத்தத்தோடு பேசினாள்.

“அண்ணி உன்கிட்ட நடந்துக்கிறது எனக்கு பிடிக்கவே இல்லை தேவி, ஏன் எப்பவும் உன்னை வேலைக்காரி போலவே ட்ரீட் செய்றாங்க, கொடு நான் டீ போட்றேன்.”

“அய்யோ மது, இது என்னோட வீடு இல்லையா? இங்க நான் இந்த வேலையெல்லாம் செய்றதுல ஒன்னும் தப்பில்லையே, அண்ணி சொல்லாட்டியும் இதெல்லாம் நான் எப்போதும் செய்வேன்.”

“அதான் ஏன்னு கேக்கறேன். நீ நல்லா படிச்சிருக்க, அண்ணாவே நம்ம கம்பெனில உனக்கு நல்ல போஸ்ட்டா போட்டுக் கொடுக்கிறேன்னு சொல்றாங்க,  இல்லை வேறெங்காவது நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்றேன்னு சொல்றாங்க, ரெண்டையும் வேணாம்னு சொல்லிட்டு இப்படி வீட்டு வேலை செஞ்சுட்ருந்தா, அண்ணி இப்படித்தான் பேசுவாங்க, அது உனக்கு கஷ்டமில்லாம இருக்கலாம், ஆனா எங்களுக்கு கஷ்டமா இருக்குல்ல, இந்த கஷ்டத்துல இருந்து உனக்கு விடுதலை வேணும்னா பேசாம நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டு இந்த வீட்டை விட்டு போறது தான் பெஸ்ட் தேவி,” என்றதற்கு, 

“அதுக்காக இப்போ யாராச்சும் கல்யாணம் செஞ்சுப்பாங்களா? போ மது இப்போ எனக்கு கல்யாணத்துக்கு அவசரமில்ல, மெதுவா செஞ்சுக்கலாம்,” என்று சிரித்துக் கொண்டே கூறினாலும், திருமணம் என்ற வார்த்தை தேவியின் மனதில் கலவரத்தை உண்டாக்கியது.

மையல் தொடரும்..