MMSV 1

மையல் 1      

பிரபல தமிழ் திரைப்பட முன்னனி கதாநாயகன்

தொழிலபதிபர் மகளை மணக்க இருக்கிறார்.

ன்றைய செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இந்த செய்தி தான் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்தது

தமிழ் திரைப்பட முன்னனி நடிகர் சார்மிங் ஸ்டார் சாத்விக்கின் திருமணத்தை பற்றி, அவரின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் வசந்தன் நேற்று   அறிவித்தார். சாத்விக்கின் தற்போதைய திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை முன்னிட்டு நடந்த நூறாவது நாள் விழாவில் தான் அவர் இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர்கள் முன்பு அறிவித்தார். இது குறித்து சாத்விக்கிடமும் கேட்கலாம் என்றால் அவர் படப்பிடிப்பு காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். அவர் திருமணம் செய்ய போகும் பெண் தொழிலதிபரின் மகள் என்பதை தவிர, வேறெதுவும் அவர் தெளிவாக கூறவில்லை. எனவே விரைவில் சாத்விக்கின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்ற விளக்க செய்தியோடு, 

சாத்விக்கின் திருமண அறிவிப்பை குறித்து ஆண் ரசிகர்கள் மகிழ்ச்சியிலும், பல பெண் ரசிகர்கள் கவலையிலும் உள்ளனர். திருமண அறிவிப்பு வெளிவந்தாலும் இன்னும் தேதிகள் எதுவும் சொல்லப்படாத நிலையில், சாத்விக் மதுரமான நடிகையை திருமணம் செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த நடிகையின் தரப்பில் சொல்லப்படுகிறது. என்ற கிசுகிசுவும் ஒரு ஓரமாக பத்திரிக்கைகளில் அடங்கியிருந்தது.

அழகும் கம்பீரமும் நிறைந்த கதாநாயகனான சாத்விக்கிற்கு ஆண் பெண் ரசிகர்கள் ஏராளம். சில நிதர்சனத்தை உணராத கற்பனை உலகத்தில் மிதக்கும் ரசிகர்களுக்கு தான் சாத்விக்கின் திருமணம் கொண்டாட்டமும் சில பேருக்கு வருத்தமும், மற்றப்படி சாத்விக்கின் நடிப்பை ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு, தன் குடும்பம் தொழில் என்று தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இது வெறும் செய்தி மட்டும் தான், ஆனால் தங்கள் பத்திரிக்கைக்களின் விற்பனையை பெருக்க, சாதாரண செய்தியில் கூட சுவாரசியத்தை சேர்க்க வேண்டியுள்ளது.

ஆக மொத்தம் இன்று பலரின் வாய்க்கு அவலாக சாத்விக்கின் திருமண செய்தி மாறியுள்ளது. ஆனால் இன்றைய இந்த செய்தியால் உண்மையிலேயே அதிர்ச்சியும் கவலையும் உண்டானதும், சில ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வந்ததும் இருவருக்கு மட்டும் தான், அதில் ஒருவன் இந்த செய்தியின் நாயகன் சாத்விக், மற்றொருவன் விபாகரன். இவர்கள் இருவரது  நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்திருப்பவள் யாதவி.

பாரிஸ்

பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த சாத்விக் கோபத்தில்  கையிலிருந்த அலைபேசியை தூக்கி கட்டிலில் வீசினான். பின் அப்படியே அவனும் கட்டிலில் அமர்ந்தவன் கைகளால் தலை முடியை கோதி கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தான். அவனது கோபத்திற்கான காரணம் தமிழ் பத்திரிக்கைகளில் வந்திருந்த இன்றைய செய்தி தான், இதுவரை அவனைப் பற்றி எத்தனையோ பொய்யான செய்திகளும் கிசுகிசுக்களும் வந்தபோதெல்லாம் இப்படி கோபமோ வருத்தமோ கொள்ளாமல் சாதாரணமாக அதை கடந்து சென்றுவிடுவான். ஆனால் இன்று வந்த உண்மை செய்தியை தான் அவனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.  ஏனெனில் இது அவன் சம்மதம் இல்லாமல், அவனை கேட்காமல், அவன் தந்தையே எடுத்த முடிவு. அதுவும் இல்லாமல் அவனிடம் அனுமதி கேட்காமல், தானே இந்த செய்தியை பத்திரிக்கையாளரிடம் அறிவித்திருக்கிறார். இதில் அலைபேசியில் திரைப்பட துறையினர் மற்றும் தனிப்பட்ட நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொல்லவும் தான் அவனுக்கு விஷயம் புரிந்து, அலைபேசியின் உதவியோடு இன்று வந்த செய்தியை படித்தவன், என்னவாக உணர்ந்தான் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. தந்தை மேல் அத்தனை கோபமாக வந்தது. 

முதலில் தன் பி.ஏ பன்னீரை அலைபேசியில் தொடர்பு கொண்டான். 

“சொல்லுங்க தம்பி,”

“என்ன சொல்லுங்க, நான் இல்லாத நேரம் அங்க என்ன வேலை பார்க்கிறீங்க,  நீங்க எனக்கு பிஏ தானே? அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு சொல்ல மாட்டீங்களா? அப்பா ஃபங்க்ஷன்ல இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்திருக்கார். அதைப்பத்தி எனக்கு ஏன் நீங்க தெரியப்படுத்தல” என்று அவரிடம் கோபத்தை காட்டினான். 

“உங்களுக்கு தெரிஞ்சு தான் அப்பா இப்படி சொல்லியிருப்பாருன்னு நினைச்சேன் தம்பி, இப்படி ஒரு நல்ல விஷயத்தை என்கிட்ட கூட நீங்க சொல்லலையேன்னு நானே மனசுக்குள்ள வருத்தப்பட்டுக்கிட்டேன் தம்பி, அப்பா ஏன் தம்பி இப்படி செஞ்சுட்டாரு,”

அவர் அப்படி சொல்லவும் அவரிடம் ஏன் இப்படி கேட்டோம் என்றிருந்தது அவனுக்கு, தன் திருமணம் பற்றி தன்னிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் இருக்கும் தந்தையை வைத்துக் கொண்டு மற்றவரிடம் கோபப்படுவது நியாயமில்லை என்று உணர்ந்தான். அதுவுமில்லாமல் தங்கள் குடும்பத்திற்குள் நடப்பதை அவரிடம் போய் சொல்லுகிறோமே என்று அமைதியானான். ஐம்பது வயதை தாண்டியவரிடம் இப்படி கோபப்படுவது தவறு என்று நினைத்து,

“அது அப்பா என்கிட்ட முன்னமே சொன்ன விஷயம் தான், அதுப்பத்தி டீடெயிலா பேசி முடிவெடுக்கிறதுக்குள்ள  இப்படி பங்ஷன்ல எல்லோருக்கும் தெரியும்படி சொல்லுவார்னு எதிர்பார்க்கல, அதான் அங்க நடந்ததை ஏன் முன்கூட்டியே சொல்லலன்னு கேட்டேன். நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க, அப்புறம் இதை உங்கக்கிட்ட கேட்டதோட விட்டுட்டுங்க,.அப்பாக்கிட்ட போய் நான் உங்கக்கிட்ட கோபபட்டதை சொல்லிட்டு இருக்காதீங்க,” என்று அலைபேசியை அணைத்தான்.

பின் அவனே தன் தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

“சொல்லு சாத்விக்,”

“அப்பா, என்ன இது? என்கிட்ட கேக்காம ஏன் இப்படி ஒரு அறிவிப்பை ப்ரஸ்க்கு கொடுத்தீங்க?”

“நாம தான் முன்னமே இதைப்பத்தி பேசினோமே சாத்விக்,”

“நான் அப்போவே வேண்டாம்னு சொன்னதா ஞாபகம்.”

“இங்கப்பாரு சாத்விக், உனக்கு இந்த பொண்ணு பிடிக்கலையா? சரி வேற வரன் பார்க்கலாம், ஆனா நீ கல்யாணமே வேண்டாம்னு சொல்ற, அதுவும் அதுக்கு நீ சொல்ற காரணத்தை என்னால ஏத்துக்க முடியல, இங்கப்பாரு அப்பா எப்பவும் உன்னோட எதிர்காலத்தை யோசிச்சு தான் செய்வேன். சுஜனா ரொம்ப நல்லப் பொண்ணு, அவங்க அப்பா கோடீஸ்வரன். இந்த கல்யாணம் மட்டும் நல்லப்படியா நடந்தா சுஜனாவோட அப்பா பினான்ஷியலாவும் நமக்கு ஹெல்ப்ஃபுல்லா இருப்பாரு,”

“நீங்க பணத்தை பார்க்கிறீங்கப்பா, நான் மனசை பார்க்கிறேன். என்னோட மனசுல வேறொரு பொண்ணுக்கு இடம் கொடுத்துட்டேன். அதை உங்களுக்கு தெளிவா சொல்லியும் நீங்க இப்படி செய்றது நல்லா இல்லை,”

“இங்கப்பாரு சாத்விக், நீ நடிக்கிற சினிமா டயலாக் எல்லாம் நிஜத்துக்கு ஒத்து வராது. சாதாரண உன்னோட பி.ஏ வோட பொண்ணு உனக்கு மனைவியா? சரி ஒருவேளை அதை கூட ஏத்துக்கலாம்னு வச்சிக்க,  ஆனா அந்த பொண்ணு இப்போ எங்க இருக்கான்னு கூட தெரியல, நீ இப்போ எவ்வளவு பெரிய ஸ்டார். அப்படியிருந்தும் உன்னை தேடி அந்த பொண்ணு வரல, ஏன் அந்த பொண்ணு அப்பாவுக்கே அவ எங்க இருக்கான்னு தெரியல, அவளோட வாழ்க்கை பாதை மாறியிருக்கலாம், ஒருவேளை அவளுக்கு கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்,அப்படி நிலையே இல்லாத ஒரு உறவுக்காக நீ யோசிக்கிறது முட்டாள்தனமா இருக்கு சாத்விக்,”

“நீங்க சொல்றது எனக்கு புரியுதுப்பா, அவளோட வாழ்க்கை பாதை மாறியிருக்கு, அவ என்னை சுத்தமா மறந்துட்டான்னு எனக்கு தெரிய வரும்போது நான் என்னோட மனசை மாத்திப்பேன். அதுக்கு முதலில் யாதவியை நான் நேர்ல பார்க்கணும், அதுவரைக்கும் என்னால கல்யாணத்தை பத்தி முடிவெடுக்க முடியாது.

“சாத்விக் உன்னோட உளறலை நிறுத்து, இங்கப்பாரு சுஜனா வீட்ல நான் பேசிட்டேன். ப்ரஸ்க்கும் சொல்லியாச்சு, அதனால உன்னோட மனசை நீ மாத்திக்கிட்டு தான் ஆகணும் சாத்விக், எங்களுக்கு நீ ஒரே பையன் உன்னோட கல்யாணத்தை சிறப்பா நடத்துறது தான் எங்களுக்கு சந்தோஷம். அதனால அதை புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கோ, 26 வயசு பையன் நீ, அந்த பக்குவத்தோட நடந்துக்கோ, அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்.” என்று அழைப்பை துண்டித்தார்.

“ஆமாம் எனக்கு 26 வயசு ஆகுது. ஆனா 20 வயசுல எப்படி உங்க இஷ்டத்துக்கு என்னை நடந்துக்க வச்சீங்களோ, இப்பவும் அதே தான், எது எனக்கு தகுந்ததுன்னு முடிவு செஞ்சு என்னோட துறையில் நான் சாதிச்சிட்டேன். இன்னும் இன்னும் முன்னேறிக்கிட்டு தான் இருக்கேன். ஆனா தனிப்பட்ட என்னோட வாழ்க்கையில் மட்டும் நான் உங்கப் பேச்சை தான் கேட்கணும், ஆனா கண்டிப்பா இந்த விஷயத்தில் நீங்க நினைச்சது நடக்காதுப்பா,” என்று மனதிற்குள் கோபமாக சொல்லிக் கொண்டவன்,

“யாதவி நீ எங்க இருக்க? உனக்காக தான் இந்த போராட்டம். 21 வயசுல பக்குவம் இல்லாம உன்னை தவற விட்டுட்டேன். ஆனா இப்போ உன்னோட தான் என் வாழ்க்கைனு நான் தீர்மானம் செஞ்சுட்டேன். அதை உனக்கு புரிய வைக்க துடிக்கிறேன். நீ எங்க இருக்க யாதவி,” என்று வாய்விட்டு சொல்லி வேதனைப்பட்டான்.

கனடா

தேநேரம் அலைபேசியில் வந்திருந்த சாத்விக் பற்றிய செய்தியை படித்த விபாகரன் கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் இருந்தான். அவன் முன்னே மட்டும் சாத்விக் இருந்திருந்தால் அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரிந்திருக்காது. இப்படி ஒரு திருமண அறிவிப்பை எப்படி அவன் கொடுக்கலாம்? அப்படியென்றால் யாதவியின் நிலை. அவனை நம்பி தானே அவள் சென்றாள். இப்போது அவள் எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. ஆனால் இவனோ இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்று அறிவிப்பு கொடுக்கிறான்.

அவன் மட்டும் முன்பு போல் இருந்திருந்தால் நேருக்கு நேராக நின்று சாத்விக்கின் சட்டையை பிடித்து “யாதவி எங்கே?” என்று  கேள்விக் கேட்டிருப்பான். ஆனால் இப்போது சாத்விக்கை போலவே அவனின் ஒவ்வொரு செய்கையையும் ஊடகங்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கும், அதுமட்டுமில்லாமல் வியாபார விஷயமாக அவன் இருப்பது வேறொரு நாட்டில், அதேபோல் படப்பிடிப்பு விஷயமாக சாத்விக் இருப்பது வேறொரு நாடு, ஆனால் யாதவி, அவள் தான் எங்கே இருக்கிறாள்? என்று தெரியவில்லை. சாத்விக்கின் திருமண அறிவிப்பு யாதவியை வெளியே கொண்டு வருமா? சிந்தித்தப்படி அவன் அமர்ந்திருந்த போது அவனது அலைபேசி ஒலி எழுப்பியது. யார் அழைத்தது என்று பார்த்தவன், அதில் தெரிந்த பெயரை பார்த்து அழைப்பை ஏற்றிருந்தான். 

“விபாகரன் சார்.”

“சொல்லுங்க பாலாஜி, நான் தான் பேசறேன்.”

“சார் இன்னைக்கு தமிழ்நாட்டுல லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னு தெரியுமா?”

“இப்போ அதை தான் படிச்சிட்டு இருந்தேன். சாத்விக்கிற்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது அதானே?”

“ஆமாம் சார், சாத்விக்கோட கல்யாண செய்தி யாதவியை வெளிய கொண்டு வரலாம் இல்ல, நாம இன்னும் சாத்விக்கை நல்லா வாட்ச் செய்யணும் சார்,”

“நானும் அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன் பாலாஜி, ஆனா இந்த நியூஸ் பார்த்துட்டு யாதவி சாத்விக்கை சந்திப்பான்னு எனக்கு தோணல, எனக்கென்னமோ நீங்க இந்த வழியை விட்டுட்டு வேற ஏதாவது வழி யோசிச்சு சீக்கிரம் யாதவியை கண்டுப்பிடிக்கணும், இதுவரை நான் சாத்விக்கை ஃபாலோ செய்ய சொன்னதுக்கு காரணம் ஒருவேளை சாத்விக் அவங்க அப்பாக்கு தெரியாம யாதவியை மறைச்சு வச்சிருப்பானோன்னு தான், ஆனா இப்போ சாத்விக்கோட கல்யாண செய்தி அப்படி இல்லையோன்னு தான் நினைக்க வைக்குது. சாத்விக்கோட கல்யாண விஷயம் பகிரங்கமா பேப்பர்ல, நியூஸ்லல்லாம் வந்திருக்குன்னா அதுல அவனுக்கு சம்மதம் இல்லாமலா இருக்கும், அதனால நீங்க யாதவியை கண்டுப்பிடிக்க வேற வழி யோசிங்க,”

“சார் யாதவி காணாம போய் 5 வருஷம் ஆகுது. அவங்க சாத்விக் வீட்டுக்கு போன வரைக்கும் ஓகே, ஆனா அதுக்கு பிறகு அவங்க எங்க போனாங்கன்னு தெரிஞ்சிக்க எவ்வளவோ முயற்சி செஞ்சாச்சு, ஆனா இதுவரை எந்த க்ளூவும் கிடைக்கல, இப்போதைக்கு சாத்விக்கையோ இல்ல சாத்விக் வீட்ல இருக்க யாதவியோட அப்பாவையோ யாதவி தொடர்பு கொள்ள வாய்ப்பு இருக்குன்னு தான் அவங்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம், மத்தப்படி வேற எல்லா வழியிலும் யாதவியை கண்டுப்பிடிக்கிற முயற்சியில் தோல்வி தான் கிடைச்சிருக்கு சார்,”

“இப்படி சொன்னா எப்படி பாலாஜி, இந்த 5 வருஷமா அவங்களை சந்திக்க வரலன்னா அதுல அவளுக்கு இஷ்டம் இல்லன்னு தானே அர்த்தம். அப்படி இருக்கவ இனி எப்படி வருவா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு பாலாஜி, நாட்கள் மாதங்களாகி, மாதம் வருஷங்களாவும் ஆகிடுச்சு, இதுவரைக்கும் யாதவி எங்க இருக்கான்னு தெரியலன்னா, அப்போ அவ நல்லப்படியா இருப்பாங்கிற நம்பிக்கையே குறைஞ்சு போச்சு,”

“சார் அப்படி நீங்க பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, யாதவி இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியாம இருக்கலாம், ஆனா அவங்களுக்கு நீங்க பயப்பட்ற அளவுக்கு விபரீதமா நடக்கல, அப்படி ஏதாவதுன்னா நாங்க விசாரிச்ச வரைக்கும் எனக்கு தெரிய வந்திருக்கும்,”

“நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன் பாலாஜி, இன்னும் ஒரு வாரத்தில் இங்க என்னோட வேலை முடிஞ்சுடும், அப்புறம் என்னோட புது ப்ராஜக்ட் விஷயமா நான் கொஞ்ச நாள் சென்னைல தான் இருக்கப் போறேன். அப்போ நேர்ல பார்த்து யாதவியை கண்டுப்பிடிக்க என்ன செய்யலாம்னு ஏதாச்சும் வழி யோசிப்போம், அதுவரைக்கும் நீங்களும் ஏதாவது முயற்சி செய்ங்க,” என்று சொல்லி அலைபேசி அழைப்பை துண்டித்த விபாகரன் இப்போது கவலையில் ஆழ்ந்தான்.

டிடெடிக்டிவ் ஏஜென்சி வைத்து நடத்துபவன் தான் பாலாஜி, யாதவியை தேடி கண்டுப்பிடிக்கும் பொறுப்பை விபாகரன் அவரிடம் தான் ஒப்படைத்து இருந்தான். இதுவரை அவன் சொல்வது போல் யாதவிக்கு ஏதாவது அசாம்பாவிதம் நடந்திருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் யாதவியின் உடல்நலத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று புத்தி சொன்னாலும் காதல் கொண்ட மனது அதை கேட்க மறுக்கிறது. 

18 வயது கூட முடியாத பக்குவில்லாத வயதில் காதல் என்று ஒருவனை தேடிச் சென்றாள். ஆனால் அவன் கொடுத்ததோ ஏமாற்றம், அந்த ஏமாற்றத்தை அப்போது அவள் மனம் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கும்? திரும்ப வீட்டுக்கு கூட வரவில்லையென்றால் அந்த மனம் ஏமாற்றத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி பாதிப்படைந்த மனதோடு இருந்த அவளது நலத்திற்கு எந்த குறையும் இல்லாமல் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்? இருந்தாலும் யாதவிக்கு ஏதும் ஆகியிருக்காது என்று நம்பிக்கை தான்  இதுவரை அவனை கொஞ்சம் நிம்மதியாக வைத்துள்ளது.

இருந்தும் நம்பிச் சென்றவன் ஏமாற்றுக் காரன் என்று தெரிந்ததும், வீட்டுக்கு வராமல் ஏன் இப்படி எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கிறாள். அப்படிப்பட்டவள் இந்த திருமண அறிவிப்பை பார்த்து வரமாட்டாள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

அதேபோல் அவள் தந்தையை பார்க்க யாதவி வருவாள் என்ற நம்பிக்கை எப்போதுமே அவனுக்கு இருந்ததில்லை. முதலில் அவள்  தந்தை சாத்விக்கோடு இருக்கிறார் என்பதே அவளுக்கு தெரிந்திருக்காது. அப்படியே தந்தை எங்கே இருக்கிறார் என்று தெரிந்தாலும், அவரை காண ஓடி வருவதற்கு அவர் ஒன்றும் பாசமான பொறுப்பான தந்தை அல்லவே, அவர் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால், யாதவிக்கு ஏன் இந்த நிலைமை?

தன் மகள் காணாமல் போனதற்கு காரணம் சாத்விக் தான் என்று தெரியாமலேயே அவனுடன் இருக்கிறார் அவர், அப்படியே தெரிந்தால் மட்டும் என்ன செய்வார்? என் மகள் காணாமல் போனதற்கு நஷ்டஈடு வேண்டுமென்று கேட்டு தனக்கு லாபத்தை தேடிக் கொள்ளும் பாசக்கார தந்தை தானே அவர், அப்படியிருக்க அவரை யாதவி எப்படி தொடர்புக் கொள்ள முயற்சிப்பாள். ஆனால் அவளை எப்படி கண்டுபிடிப்பது? ஒன்றும் புரியாத நிலை தான் விபாகரனுக்கு என்றால், சாத்விக்கும் அதே நிலையில் தான் இருக்கிறான்.

அவளை தொலைத்த அந்த நாள். அவள் மனதை கஷ்டப்படுத்திய அந்த நாள். அவள் திரும்ப வீட்டுக்கு தான் செல்வாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ எங்கு சென்றாள் என்று தான் தெரியவில்லை. ஒருவேளை ஒரே உறவான அவள் தந்தையை சந்திக்க அவள் முயற்சி செய்யலாம் என்ற நம்பிக்கையில் தான் அவன் பன்னீரை தன்னுடனே வைத்திருக்கிறான். ஆனாலும் இத்தனை நாளாக அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

ஆரம்பத்தில் அவனும் மறைமுகமாக டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலம் யாதவியை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தான். ஆனால் அவள் எங்கே இருக்கிறாள் என்று எந்த தகவலும் இல்லை. ஆனால் தன்னால் தான் யாதவிக்கு இப்படி ஒரு நிலை என்று தெரிந்த போது அவனால் அவள் எப்படியோ போகட்டும் என்று அமைதியாக இருக்க முடியவில்லை. அவளுக்கு ஏதாவது விபரீதமாக நடந்துவிட்டதோ என்று மனதில் எப்போதும் பயம் சூழ்ந்துள்ளது நிஜம். அதுமட்டுமில்லாமல் அவள் மேல் காதல் கொண்ட மனது அவளின் நலத்தை அறியாமல், அவனுக்கென ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. ஏனெனில் அவனது வாழ்க்கையே அவள் தானே, அதை புரிய வைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை அவன் தவறவிட்டிருந்தான். மறுபடியும் தன் மனதை யாதவிக்கு புரிய வைக்கும் வாய்ப்பு அமையுமா? யாதவியை திரும்ப பார்க்க முடியுமா? என்று சாத்விக் ஏங்கிக் கொண்டிருந்தான்.

மையல் தொடரும்..