KPEM 8

மௌனம் 8

“டேய் மாப்ள… இந்த வீக்எண்ட் நம்ம பீச் ஹவுஸ் போலாமான்னு நினைக்கிறேண்டா..” என்று நிகேதன் சொல்ல, “ஹுஹும்” என்று ஃபைலை பார்த்துக் கொண்டே உம் கொட்டினான் சஞ்சய்.

“முதல்ல இந்த உம் கொட்றதை நிறுத்துடா..” என்று சொல்லிக் கொண்டே சஞ்சய் கையிலிருந்த ஃபைலை பிடுங்கி மேசை மீது வைத்தான் நிகேதன்,  உனக்கு இப்போ என்னடா வேண்டும் என்ற பார்வை பார்த்தான் சஞ்சய்.

“டேய் பீச் ஹவுஸ்க்கு நான் மட்டும் போகப்போறதா சொல்லல… நாம எல்லோரும் போலாம்னு சொல்றேன்… ஹே உனக்கு ஞாபகம் இருக்கா மாப்ள… எங்க மேரேஜ்க்கு முன்னாடி நாம அந்த வீட்டுக்கு போனோம்னா… மாமாவும் அத்தையும் தூங்கினதுக்கு அப்புறம் நீ, நான்,நவி,நிரு எல்லாம் நைட் பீச்ல போய் பேசிட்டு இருப்போமே…”

“டேய் நாம எல்லோரும்னு சொல்லாத… நீயும் ஜானுவும் தனியா பேச என்னையும் நிருவையும் கூட்டிட்டு போவ… தனியாப் போனா மாட்டிப்பன்னு பயம்… என்னமோ எல்லாரும் ஜாலியா பேசுவோம்னு சொல்ற…”

“சரிடா ப்ரண்டோட லவ்க்கு ஹெல்ப் பண்றது எவ்வளவு புண்ணியம் தெரியுமா..?? அதை விட்டுட்டு நான் சொல்ல வந்தத கேளேண்டா…”

“சரி சொல்லு…”

“டேய் நிருவுக்கும் நவிக்கும் பீச் ஹவுஸ்க்கு போகறது பிடிக்கும்னு உனக்கே தெரியும்… எங்க மேரேஜ்க்கு அப்புறம் நிரு சிங்கப்பூர் போய்ட்டா… அவ வரப்ப நீ ஊருக்குப் போயிருப்ப… அதனால இப்போல்லாம் பீச் ஹவுஸ் போறதே இல்லடா..

இப்போ நிரு வந்ததுல இருந்து அவளும் நம்ம கூட ஆஃபிஸ்க்கு வந்து பிஸி ஆயிட்டா… அதான் இந்த வீக்எண்ட் அங்கப் போலாம்னு ப்ளான் பண்ணேன்… அந்த வெற்றி வேற சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கான்… அவனுக்கு முழுசா இந்தியாவை சுத்திக்காட்ட முடியலைன்னாக் கூட மகாபலிபுரத்தையாவது சுத்திக் காட்டுவோமே..”

“என்னது மகாபலிபுரமா..??”

“ஆமாண்டா… நாம மகாபலிபுரத்துக்கு நிறைய தடவை போயிருக்கலாம்… ஆனா அந்த வெற்றி சின்ன வயசுல மகாபலிபுரத்துக்கு போயிருக்கானாம்.. எதுவும் சரியா ஞாபகம் இல்லையாம்… அதான் அப்படியே மகாபலிபுரத்துக்கும் போய்ட்டு வரலாம்னு டிசைட் பண்ணியிருக்கேன்…”

நிகேதன் சொன்னதும் சஞ்சய் வருவதாக ஒத்துக் கொண்டான். வெற்றி வருவதை சஞ்சய் விரும்பவில்லை என்றாலும் நீரஜா அங்கே சென்றால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பாள், அவளோடு எப்படியாவது பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்தான். இந்த மூன்று வருடமாவது அவள் தூரத்தில் இருந்தாள், இப்போது அவள் அருகில் இருந்தும் அவளோடு பேசாமல் இருப்பது சஞ்சய்க்கு கஷ்டமாக இருந்தது. காதல் இல்லையென்றாலும் பரவாயில்லை, நட்புடன் பேசும் வாய்ப்பையாவது எதிர்பார்த்தான்.

அவர்கள் திட்டமிட்டப்படி ஈ.ஸி.ஆரில் இருக்கும் கடற்கறை அருகிலிருக்கும் வீட்டிற்கு செல்வதென் முடிவெடுத்தனர். எப்போதோ நிகேதனின் அப்பா நீரஜாவிற்கு கடற்கரையில் விளையாட பிடிக்கும் என்பதற்காக அங்கே வீடு கட்டினார். அதன்பின் அவர்கள் அப்பாவும் அம்மாவும் இறந்த பிறகு அங்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டதில்லை,

அதன்பிறகு சஞ்சய் நிகேதன் ஒன்றாக தொழில் ஆரம்பித்து இங்கு சென்னையிலேயே இருக்க ஆரம்பித்ததும் தான் அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்கள்.  அப்போது என்ன தான் தன் மனைவியின் அண்ணன் மகனாக இருந்தாலும் ஜானவியின் அப்பா ஜானவியை தனியாக அனுப்ப தயங்கி அவரும் சந்திராவும் கூட வருவார்கள்.

வைஷ்ணவியும் வேண்டா வெறுப்பாக அவர்களோடு வருவாள். சஞ்சயோடு சில சமயம் அம்பிகாவும் வருவார்.  அனைவரும் ஓய்வாக அங்கு இருந்து பொழுதை கழித்து விட்டு வருவர்.

இப்போதும் அவர்களை எல்லாம் அழைக்க, ஜானவியின் பெற்றோர் வரவில்லை என்று மறுத்துவிட்டனர். வைஷுவோ எப்போதும் வேண்டா வெறுப்பாக செல்பவள் இப்போது ஆர்வத்தோடு செல்ல தயாரானாள்.

அம்பிகாவும் சஞ்சயோடு வர சம்மதித்ததால் அவரை கூட்டிக் கொண்டு சஞ்சய், நிகேதன் வீட்டுக்கு வந்ததும் அனைவரும் கிளம்ப தயாரானர்.

இரண்டு கார் எடுத்துக் கொண்டு செல்ல முடிவெடுக்க, சஞ்சயோடு அம்பிகா அவன் காரில் இருக்க நீரஜாவை தன்னோடு வரும்படி அவர் அழைத்தார்.  ஆரம்பத்தில் அம்பிகாவிற்கு சென்னை பழக்கமில்லாத போது நீரஜா இருந்தவரைக்கும் அவள் தான் அம்பிகாவிற்கு துணையாக சென்று வருவாள். நீரஜா சிங்கப்பூர் சென்றிருந்த தருணத்தில் ஜானவி அவருக்கு உதவியாக இருப்பாள். அதனால் அம்பிகா இருவருடனும் உரிமையாக பழகுவார்.

இப்போது அவர் அழைத்ததும் மறுக்கமுடியாமல் நீரஜா காரில் ஏறி பின் சீட்டில் அம்பிகாவோடு அமர்ந்தாள். சஞ்சயோ தன் அன்னைக்கு மனதிலேயே நன்றிக் கூறிக் கொண்டான்.

வைஷ்ணவியோ இதைப் பார்த்து கடுப்பானாலும் அவள் மூளைக்கும் ஒரு ஐடியா தொன்றியது.

“ஜானு… நீ கார்ல மாமாக் கூட முன்னாடி உட்கார்ந்துப்ப… நிருவும் சஞ்சய் கார்ல ஏறிட்டா… நான் எப்படி வெற்றிக் கூட உக்கார்ந்துக்கிட்டு வர்றது… அதனால நானும் அந்த கார்லேயே வரேன்…” என்றாள்.

சஞ்சயும் நீரஜாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும்,  அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை, அதனால் சண்டை, அதை எப்படி தீர்ப்பது என்று யோசிப்பவள் தான் ஜானவி, இதில் இப்போது தன் தங்கையின் நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள். அதனால் அதற்கு ஒத்துக் கொள்பவளா ஜானவி,

“அதனால என்ன வைஷு… நீ மாமாக்கூட முன்னாடி உட்கார்ந்துக்க… நான் சஞ்சய் கார்ல வர்றேன்… இவன் திடீர்ன்னு அத்தையோட போப்போறேன்னு அடம்பிடிப்பான்… அப்போ இறங்கி ஏறணும்…” என்று ஜெய்குட்டியை காரணமாக்கி நிகேதனிடம் சொல்லிவிட்டு சஞ்சய் காரில் ஏறப் போக, வைஷுவால் ஒன்றும் செய்ய முடியாமல் நிகேதனோடு காரில் ஏறிக் கொண்டாள்.

ஜானவியோ நீரஜாவிடம்… “நிரு நீ சஞ்சய் கூட முன்னாடி உட்கார்ந்துக்க… ஜெய்யோடு நான் அம்பிகா அம்மாக் கூட உட்கார்ந்துக்கிறேன்… அதுதான் சேஃப்… என்று சொல்ல அம்பிகாவும் அதை ஆமோதித்தார்… நீரஜாவோ ஜானவியை முறைத்துவிட்டு முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். சஞ்சய் ஜானவிக்கு மனதில் இரண்டு மடங்கு நன்றி சொல்லிக் கொண்டான்.

சஞ்சய் இருப்பதால் முகத்தை உம்மென்ன்று வைத்துக் கொண்டு வர வேண்டும் என்று நீரஜா நினைத்துக் கொண்டிருந்தாலும், சஞ்சயோடு ஜானவியும் அம்பிகாவும் பேசிக் கொண்டு வருவது மட்டுமில்லாமல் இடையில் அவளிடமும் ஏதாவது பேசிக் கொண்டு வரவே,  அதற்கு மேல் அவளாலும் அப்படி வரமுடியவில்லை. இயல்பாகி மூவரோடும் வளவளத்துக் கொண்டு வந்தாள். (சஞ்சயோடும் தான்)

அந்த கடற்கரை வீட்டிற்கு அனைவரும் சென்றதும், அங்கே உள்ள வேலையாட்களுக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டதால்,  அவர்கள் போட்டு வைத்திருந்த டீயை குடித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.

பின் ஷட்டில் காக் விளையாடலாம் என்று முடிவு செய்தனர். “டேய் மச்சான் நெட் எங்கடா இருக்கு…” என்று சஞ்சய் கேட்டதும்,

“எனக்கு தெரியும் பாஸ்… நான் எடுத்துக்கிட்டு வர்றேன்..” என்று நீரஜா சென்றாள்.

வீட்டிற்கு முன்னே உள்ள தோட்டத்தில் வலை கட்டி விளையாட இரண்டு கம்பிகள் நட்டு வைத்திருக்க, அதன் அருகே சஞ்சய் சென்றான். பின்னாலேயே நீரஜா அந்த வலையை கொண்டு வந்தாள். அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

அந்த கம்பியில் உள்ள ஆணி சரியாக இல்லாததால் அதை சஞ்சய் சரி செய்துக் கொண்டிருக்க, அந்த கம்பியின் துருப்பிடித்திருந்த பகுதி சஞ்சயின் உள்ளங்கையை பதம் பார்த்தது. ஆ.. என்று அலறி சஞ்சய் கையை எடுக்க இரத்தம் வெளிவந்தது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவோ பதட்டத்துடன்,  “என்ன ஜெய் பார்த்து செய்யமாட்டீங்களா…” என்று அவன் கையைப் பிடித்து, அவள் அணிந்து வந்திருந்த டாப், ஜீன்ஸ் உடையோடு போட்டிருந்த துப்பட்டாவை அவன் கையில் சுற்றினாள்.

அவள் ஜெய் என்றதும் சஞ்சய் அவளைப் பார்க்க,  அப்போது தான் அவளுக்கும் அது உரைத்து. “சாரி சஞ்சய்.. ஜெய்கூடவே இருந்து அவனை கூப்பிட்டு ஜெய்ன்னே வந்துடுச்சு…” என்று சொன்னப்படியே அவன் கையை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அவனும் அவள் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டான்.

இதற்குள் அவர்களை நோட்டம் விட வந்த வைஷுவோ சஞ்சய்க்கு காயம் ஏற்பட்டதை பார்த்து பதறி ஓடி வந்து, “சஞ்சய் என்னாச்சு… காயம் ரொம்ப ஆழமா..?? ” என்று கேட்டாள்.

“லேசா தான் வெட்டிக்கிட்டேன்… வேற ஒன்னுமில்ல…” என்று அவன் சொன்னதை கூட காதில் வாங்காமல், “என்ன நிரு… துப்பட்டாவை வச்சு சுத்திக்கிட்டு இருக்க…. கார்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்குமே அது கூடவா தெரியாது…” என்று நீரஜாவை கேட்டாள்.

“இல்ல வைஷு… முதல்ல ரத்தத்தை நிறுத்தணும்… அதான்…” என்று அவள் சொன்ன வார்த்தை காற்றில் தான் கரைந்துப் போனது. ஏனென்றால் வைஷு காரில் உள்ள முதலுதவி பெட்டியை எடுக்கப் போயிருந்தாள்.

அடுத்த நடவடிக்கையாக சஞ்சயை உட்கார வைத்து வைஷு அவன் கைகளுக்கு சிகிச்சை செய்துக் கொண்டிருந்தாள். இங்கே இந்த கலவரத்தின் அரவம் கேட்டு அனைவரும் வந்து அவர்கள் இருவரையும் சூழ்ந்துக் கொண்டனர். ஏனோ அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிடிக்காமல் ஜெய்யை தூக்கிக் கொண்டு நீரஜா விலகி சென்றுவிட்டாள்.

சஞ்சய்க்கு வலதுக் கையில் அடிப்பட்டிருப்பதால் அவனை தவிர மற்றவர் விளையாடலாம் என்று முடிவெடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

வெற்றியும் நிகேதனும் இப்போது விளையாட, வைஷு, ஜானவி, சஞ்சய், அம்பிகா அனைவரும் அங்கே நாற்காலி  போட்டு அமர்ந்திருந்தனர். நீரஜா மட்டும் நான் விளையாட வரவில்லை என்று சொல்லிவிட்டு சற்று தள்ளியிருந்த ஊஞ்சலில் ஜெய்யை அமர வைத்து ஆட்டி விளையாட்டுக் காட்டி கொண்டிருந்தாள்.

சஞ்சயின் பார்வையோ அங்கு நீரஜாவின் மேல் தான் இருந்தது. இப்போது தான் காரில் நன்றாக பேசிக் கொண்டு வந்தாள். அதற்குள் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா..?? என்று இருந்தது அவனுக்கு..

பின் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்க ஆயத்தமான போது ஜானுவும் நிருவும் கடற்கரைக்கு போகலாம் என்று நிகேதனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடற்கரை மணலில் நடக்க முடியாது என்று அம்பிகா வர மறுத்துவிட்டார். வைஷுவும் அம்பிகா மனதில் இடம்பிடிக்க “நான் ஆன்ட்டி கூடவே இருக்கேன்… நீங்க போங்க..” என்று கூறிவிட்டாள்.

வெற்றியும் ஒரு நண்பனோடு பேச வேண்டியிருக்கு என்று அவனுக்கு கொடுத்திருந்த அறைக்கு சென்றுவிட்டான்.  சஞ்சயோ “ஒரு மெயில் பார்க்க வேண்டியிருக்கு மச்சான்… நீ அவங்களை கூட்டிடுப் போ… நான் பின்னாடி வர்றேன்..” என்று நிகேதனை அனுப்பி வைத்தான்.

பின் சிறிது நேரம் மடிகணினியை பார்த்துக் கொண்டிருந்தவன், பின் அதை எடுத்து வைத்து விட்டு, கடற்கரைக்கு செல்ல, அங்கே ஜெய் குட்டியோடு நீரஜா கடற்கரை மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாள்.  அந்த குட்டியும் மண்ணில் கை வைத்து ஏதோ செய்துக் கொண்டிருந்தது.

“அப்படியே இவன் நிருவோட டிட்டோ தனு… பாரேன் மண்ணுல வீடு கட்றது… பீச்ல விளையாட்றது எல்லாம் இவனுக்கும் பிடிக்குது… இங்க தூரத்துல தான் லைட் வெளிச்சம் இருக்கு… இந்த இருட்டைப் பார்த்து பயப்பட்றானா பாரேன்… சீக்கிரம் தூங்கிடுவான்… இவனை வைஷுக்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு வரலாம்னு பார்த்தா… தூங்காம கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு இருக்கான்..” என்று ஜெய்யை பற்றி நிகேதனிடம் ஜானவி சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஜெய்க்குட்டி அத்தை செல்லம்… அத்தை மாதிரியே தான் இருப்பான்… இல்லடா  குட்டி…” என்று நீரஜா சொல்வதற்கு ஜெய் ஆமாம் என்று தலையை ஆட்டினான். அப்போது சஞ்சய் வந்து நிக்கி, ஜானுவோடு மண்ணில் உட்கார, அதை கவனித்த நீரஜா பின் அவர்களோடு பேசாமல் மும்முரமாக வீடு கட்டிக் கொண்டிருந்தாள்.

நீரஜா, ஜெய்யை தவிர மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தனர். திரும்பவும் சஞ்சயிடம் நீரஜா பேசாமல் இருப்பதை கவனித்த ஜானவி நிகேதனிடம், “தனு வாங்களேன் நம்ம ரெண்டுப்பேரும் சும்மா ஒரு வாக்கிங் போகலாம்…” என்று அழைத்தாள்.

ஜெய் பிறந்ததற்கு பின் தன்னை அதிகம் கவனிக்காத மனைவி இப்போது வாக்கிங் கூப்பிட்டால் மற்றதையெல்லாம் யோசிப்பானா நிகேதன், “ம்ம் போகலாம் நவி..” என்று எழுந்தான்.

“டேய் ரொம்ப தூரம் போகாதீங்க… ஸேஃப் இல்ல…” என்று எச்சரித்து அவர்களை அனுப்பிய சஞ்சய், பின் நீரஜா, ஜெய்யின் அருகே அமர்ந்து,. “ஜெய் கண்ணா… மாமாவும் உங்கக் கூட வீடு கட்டட்டுமா…” என்று கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீரஜா அவள் வேலையை தொடர்ந்தாள். ஜெய்யோ ம்ம் என்று தலையை ஆட்டினான்.

அவனும் மண்ணில் கையை வைக்க, அவனுக்கு ஏற்பட்டிருந்த காயம் வலிக்கவே ஆ.. என்று சினுங்கி கையை எடுத்துக் கொண்டான். அதை கண்ட நீரஜாவும் உடனே அவன் கையைப் பிடித்து, “அதான் காயம் இருக்குன்னு தெரியுதுல்ல… அதோட ஏன் மண்ணுல கையை வச்சீங்க… இன்ஃபெக்‌ஷன் ஆகப் போகுது… உப்பு தண்ணியில கை வச்சா வேற எரியும்…” என்று அவள் கையால் அவன் கையில் உள்ள மண்ணை தட்டிவிட்டாள்

சஞ்சய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி செய்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் வைஷ்ணவி அவனுக்கு சிகிச்சை அளித்தது ஞாபகம் வந்தது.

உடனே அவன் கையை விடுவித்தவள்,  “சாயந்தரம் உங்களுக்கு கிடைச்ச ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்டுக்கு இந்நேரம் உங்களுக்கு சரியா ஆயிருக்கணுமே…” என்று கேட்டாள்.

“அவ என்ன மேஜிக் பண்றவளா..?? அவ ட்ரீட்மெண்ட் கொடுத்தா உடனே வலி சரியாக… யார் ட்ரீட்மெண்ட் பார்த்தாலும் வலி சரியாக 2 நாளாவது ஆகும்…” என்றான் சஞ்சய்.

அதற்குள் அங்கு அவர்களுடன் அமர்ந்திருந்த ஜெய் குட்டிக்கோ போர் அடித்தது போலும், “அத்த வா… தண்ணி போலாம்… நுரை தண்ணி போலாம்…” என்று  தண்ணீர் அருகில் போய் நிற்க கூப்பிட்டான்.

“இருங்கடா செல்லம்… இன்னும் கொஞ்சம் தான் இருக்கு… முடிச்சிட்டு போலாம்… ” என்று நீரஜா சொன்னதும், “ஜெய் கண்ணா வா மாமா உன்னை கூட்டிட்டுப் போறேன்…” என்று சஞ்சய் அவனை அழைத்தான்.

உடனே அவனை பார்த்த நீரஜா, “இப்போ என்ன சொன்னீங்க…” என்றுக் கேட்டாள்.

“மாமாக் கூட வாடா… பீச்ல விளையாடலாம்னு கூப்பிட்டேன்..” என்று சஞ்சய் பதிலளித்ததும்,

“அதென்ன மாமான்னு சொல்றீங்க… இப்போ எல்லாம் அங்கிள் ஆன்ட்டி மயமா ஆயிடுச்சு… ஏன் நானே என்னோட ப்ரண்ட்ஸோட அம்மா அப்பாவை அப்படி தான் கூப்ட்றேன்… நீங்க மட்டும் மாமான்னு சொல்லிக்கிறீங்களே…”  என்று கேட்டாள்.

“ஏன் மாமான்னா என்ன..?? இல்ல அங்கிள்ன்னா என்ன..?? எல்லாம் ஒன்னு தானே…” என்று அவன் கேட்டதற்கு…

“அங்கிள்ன்னா வெறும் மாமாக்கு மட்டும் தானா…?? சித்தப்பா, பெரியப்பா எல்லோரையும் அப்படி கூப்பிடலாமே..” என்றுக் கேட்டாள்.

“ஆனா ஜானு என்ன அண்ணனா தான நினைக்கிறா… அப்போ அங்கிளை விட மாமாவே நல்லா இருக்கும்…” என்று சொன்னவன், மனதிலோ ஏன் அத்தையை கல்யாணம் செய்துக்கிட்டாலும் மாமா தானே… என்று சொல்லிக் கொண்டான்.

“அக்கா அண்ணனா நினைக்கிறா.. ஆனா தங்கை அப்படி நினைக்கலையே… ஜெய் சஞ்சயை மாமான்னு கூப்பிட்றதை பார்த்தா வைஷு என்ன நினைப்பா?? வைஷுக்கு இவன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கறது இவனுக்கு புரியுதா இல்லையா…?? இவன் வைஷுவை என்னவா நினைச்சுப் பழகுறான்…?? வைஷு ஒருவேளை லவ்வ சொன்னா என்ன பதில் சொல்வான்.. ??என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பற்றி சஞ்சய் மனதில் என்ன இருக்கிறது என்பதை விட வைஷுவை பற்றி அவன் என்ன நினைக்கிறான் என்பது தான் அவளுக்கு பெரிய கவலையாக இருந்தது.  வைஷுவோடு சஞ்சயை பார்த்தால் அவளுக்கு பொறாமை ஏற்பட்டாலும், வைஷு மேல் வெறுப்பு இல்லை,

வைஷு தான் அவளை எதிரி போல் பார்க்கிறாள். அவளோ வைஷுவை ஒரு போதும் அப்படி நினைத்ததில்லை, அவளுடன் நட்பு பாராட்ட தான் நினைப்பாள். இப்போது ஒருவேளை சஞ்சய் வைஷுவின் காதலை மறுத்தால் அதை அவள் எப்படி ஏற்றுக் கொள்வாளோ என்றிருந்தது. விரைவில் இதைப்பற்றி ஜானவியிடம் பேச வேண்டும் என்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

திடிரென்று அவள் மேல் தண்ணீர் பட்டது, யாரென்று திரும்பி பார்த்தால் சஞ்சய் ஜெய்யை பிடித்தப்படி  தண்ணீர் அருகில் நின்றுக் கொண்டிருந்தான். சஞ்சய் தான் அவள் மேல் தண்ணீர் அடித்திருந்தான். அவள் திரும்பியதும், ஜெய்யோ.. “அத்த வா தண்ணி… அத்த வா..” என்று ஆர்பரிப்போடு அழைத்தான்.

உடனே அவள் எழுந்து அவர்கள் அருகில் செல்ல, அப்போது ஒரு அலை வரவும் அவள் தடுமாறினாள். உடனே ஒரு கையால் ஜெய்யைப் பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் அவளைப் பிடித்தவன்,  “ஹே பார்த்து…” என்றான்.

பின் ஜெய்யை தூக்கிய சஞ்சய்,  ஒவ்வொரு அலை வரும்போதும் அவனை தூக்கியப்படியே அதில் ஜெய்யின் காலை நனைய வைக்க, ஜெய் சிரித்து மகிழ்ந்தான்.

அதன்பிறகு ஜெய்யை அலை வரும் இடத்தில் பிடித்தப்படி சஞ்சய் நிற்க வைக்க, ஜெய்யோ அவன் பிஞ்சு கைகளால் தண்ணீரை அள்ளி நீரஜாவின் மேல் தெளிக்க, அது அவள் மேல் படவேயில்லை.

“நாம அத்தை மேல அடிக்கலாமா…” என்று சஞ்சய் கேட்டுவிட்டு ஜெய்யின் கையைப் பிடித்து நீரஜாவின் மேல் அவன் தண்ணீர் தெளிக்க,

“ஹே நிறுத்துங்க… இப்போ நிறுத்தப் போறீங்களா.. இல்லையா..??” என்று தண்ணீர் பட்டதில் திணறியவள்,

“இப்போ உங்க மேலயும்… மாமா மேலயும் நான் தெளிக்கிறேன் பாரு…” என்று ஜெய்யிடம் கூறியவள்,  அவர்கள் இருவர் மேலும் தண்ணீரை தெளித்தாள்.

சிறிது நேரம் இப்படியே மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த, அந்த கடற்கரை மணலும், கடல் அலையும், வானத்தில் உலா வந்துக் கொண்டிருந்த நிலாவும், இவர்கள் இருவரின் இந்த சந்தோஷ நேரங்களின் நீட்டிப்பு எத்தனை நேரமோ..?? என்று சிந்தித்துக் கொண்டிருந்தது. 

மௌனம் தொடரும்..