KPEM 7

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

உயிரே என்னுயிரே…

என்னமோ நடக்குதடி…

அடடா இந்த நொடி…

வாழ்வில் இனிக்குதடி…

ஒரு நிமிடம்.. ஒரு நிமிடம்..

எனை நீ பிரியாதே…

என்னருகில் நீ இருந்தால்…

தலை கால் புரியாதே…

நிஜம் தானே கேளடி…

நினைவெல்லாம் நீயடி…

நடமாடும் பூச்செடி…

நீ என்னை பாரடி…

என்று காரில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அவளுடன் இருக்கும் இந்த நேரங்களை சஞ்சயும் சந்தோஷமாக அனுபவித்தப்படி வந்தான். அவளுடன் எத்தனையோ முறை காரில் பயணித்து இருந்தாலும்,  இன்று இருவரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும், இந்த மூன்று வருடம் பார்க்காமலும் பேசாமலும் இருந்ததற்கு,. இந்த நேரம் அவனுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. விரைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று அவன் நம்பினான்.

அவன் வீட்டிற்கு முன் கார் வந்து நின்ற பின்னும், நீரஜா இன்னும் தூக்கத்தில் தான் இருந்தாள். அவளது தூக்கத்தை கெடுக்காமல், அப்படியே தூக்கி கொண்டு போகலாமா என்று யோசித்தான். அப்படி சென்றால் ஒருவேளை அம்பிகாவே அமைதியாக இருப்பார். ஆனால் அவளுக்கு தெரிய வந்தால் தையாதக்கா என்று குதிப்பாளே, ஏற்கனவே பட்டது போதாதா? அதுமட்டுமில்லாமல் இன்னும் அவள் சாப்பிடவில்லையே, சாப்பிட்டு தான் அவள் தூங்க வேண்டும் என்று நினைத்து எழுப்பினான்.

சஞ்சய் எழுப்பியதும் திடுக்கிட்டு எழுந்த நீரஜாவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை, பின் அவனோடு காரில் வந்தது ஞாபகம் வந்தது. பின் காரிலிருந்து இறங்கும் போது பார்த்தால் வந்திருப்பது அவன் வீடு,

“என்ன உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க..” என்று கேட்டதும்,

“இந்த மழையில ஜானுவும் நிக்கியும் வீட்டுக்கு வர்றது சேஃப் இல்ல… அப்புறம் மதியத்துல இருந்து நீ சாப்பிடாம  இருக்க… வீட்ல போய் என்ன சாப்பிடுவ… அதனால தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.. அம்மா ஏதாவது செஞ்சு வச்சிருப்பாங்க வா…” என்றான்.

இப்போது அவளுக்கு இருக்கும் பசிக்கு இது தான் சரி என்று அவளும் அமைதியாகச் சென்றாள்.

அழைப்பு மணியை அழுத்திவிட்டு இவர்கள் காத்திருக்க, சில நிமிடங்கள் கழித்து வந்து கதவை திறந்த அம்பிகா, நீரஜாவை பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

“நிரு வா வா..” என்றவர், பின் அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்து, “என்ன நிரு உடம்பு சரியில்லையா…” என்று விசாரித்தார்.

பின் சஞ்சயிடம் திரும்பி, “என்ன சஞ்சய் நீரஜாக்கு என்ன ஆச்சு…” என்றுக் கேட்டார்.

“அம்மா நிருவுக்கு ஒன்னுமில்ல… அவ மதியத்துல இருந்து சாப்பிடல… ஏதாவது சாப்பிடக் கொடுங்க…” என்றான்.

நிலைமயை புரிந்துக் கொண்ட அம்பிகாவும் பின் அவளை உள்ளே அழைத்துச் சென்று ஃப்ரஷ் ஆக சொல்லிவிட்டு, டைனிங் டேபிளில் சாப்பாடை எடுத்து வைத்தார்.

மாற்றிக் கொள்ள உடை இல்லாததால், வெறும் முகம் கழுவிக் கொண்டு நீரஜா உணவு மேசைக்கு வர, சஞ்சயும் ஃப்ரஷ் ஆகி வேறு உடை மாற்றிக் கொண்டு அங்கே வந்தான். பின் அம்பிகா செய்து வைத்திருந்த இட்லியையும் சாம்பாரையும் பரிமாற, அதை சாப்பிட்ட நீரஜாவிற்கு அது தேவாமிர்தமாக இருந்தது.

“என்னம்மா நிரு… மதியத்துல இருந்து சாப்பிடாம இருந்திருக்க… கேண்டீன்ல ஏதாவது சாப்பிட கிடைச்சிருக்குமே… இப்படி பட்டினி இருந்தா உடம்பு என்னாகும்… ஏற்கனவே உனக்கு அல்சர் இருந்ததா நிக்கி சொல்லியிருக்கான்… அப்படி இருக்கும் போது கவனமா இருக்க வேண்டாமா…??”

“ஆன்ட்டி கேண்டின்ல வெறும் ஃபிரைட் ரைஸும், வெஜிடபிள் பிரியாணியும் தான் இருந்துச்சு… டாக்டர் கண்டிப்பா காரத்தையும், ஆயில் அயிட்டததையும் தவிர்க்க சொல்லியிருக்காரு ஆன்ட்டி…” என்று சொன்னவள், பின் நாக்கை கடித்துக் கொண்டு, “அய்யோ யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சதை சொல்லிட்டோமே” என்று நினைத்தாள்.

டாக்டர் என்று சொன்னதுமே, அம்பிகாவும் சஞ்சயும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

“என்ன நிரு சொல்ற… டாக்டர் சொன்னாரா… அப்போ இன்னும் இந்த பிரச்சினை உனக்கு சரியாகலையாமா…?”

“இல்ல ஆன்ட்டி… இப்போ சிங்கப்பூர்ல இருந்தப்ப திரும்பவும் வந்துடுச்சு… நிக்கிக்கிட்டயும் ஜானுக்கிட்டேயும் சொல்லிடாதீங்க.. அப்புறம் கவலைப்படுவாங்க…”

“சரிம்மா… ஆனா இனிமேயாவது கவனமா இரு… ஆனா இப்படி உடம்பை கெடுத்துக்கிட்டு சிங்கப்பூர்ல அப்படி என்ன வேலை செய்ய வேண்டிய கட்டாயம்…” என்ற போது அவள் சிங்கப்பூர் சென்றதற்கு தானும் ஒரு காரணமோ என்று ஒரு குற்ற உணர்வு சஞ்சய்க்கு வந்தது.

“என்ன ஆன்ட்டி… இதுக்குதான் யார்க்கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்… இப்போ என்ன நான் தான் இங்கேயே வந்துட்டேனே…”

“ஆமாம் இந்த நேரத்துல சாப்பிடாமலும் இருக்கக் கூடாதே… கேண்டின்ல இல்லன்னா என்ன… சஞ்சய் கூட போய் ஏதாவது வெளிய சாப்பிட்டிருக்கலாமே…

ஏம்பா சஞ்சய் நீயாவது அவ சாப்பிட்டாளா இல்லையான்னு கேக்கமாட்டியா…??” என்று நீரஜாவிடம் பேசிக் கொண்டிருந்த அம்பிகா சஞ்சயிடம் கேட்க ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை,

அதற்குள் நீரஜாவோ, “அவர் ரொம்ப பிஸியா இருந்ததால நான் தான் ஆன்ட்டி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அமைதியா இருந்துட்டேன்…” என்று சமாளித்தாள்.

“அப்போ நீயும் மதியம் சாப்பிடலையாடா… ” என்று நொந்துக் கொண்டவர், “இப்படி தான் நிரு… வேலை வேலைன்னு இவன் சரியா சாப்பிடறதேயில்ல…” என்று குறைப் பட்டுக் கொண்டார்.

“என்ன பாஸ் இப்படி வீட்ல அம்மா கையால சாப்பிட்றது எவ்வளவு லக் தெரியுமா… அதுவும் ஆன்ட்டி எவ்வளவு டேஸ்டா சமைக்கிறாங்க… இப்படி வேலை பிஸியில சாப்பிடாம இருக்கலாமா…” என்றாள்.

அவள் பேச்சில் அவள் அம்மாவிற்காக ஏங்குவது தெரிந்து சஞ்சய்க்கும் அம்பிகாவிற்கும் கஷ்டமாக இருந்தது.

“அய்யோ ஆன்ட்டி… என்ன சீரியஸ் ஆகிட்டீங்க… நான் உங்க டேஸ்ட் சமையலை புகழறதுக்கு நீங்க சந்தோஷப் பட வேண்டாமா…?? நான் எப்பவும் 3 இட்லி தான் சாப்பிடுவேன்… ஆனா இப்போ 5 இட்லி சாப்பிட்டேன் பாருங்க…” என்றதும்,

“ஆமா 3 இட்லி சாப்பிட்றதால தான் இப்படி ஒல்லியா இருக்க,  நல்லா சாப்பிட்டா தானே… உங்களயெல்லாம் நினைச்சாலே கவலையா இருக்கு.. சின்ன வயசுலையே சொந்தக்காரங்க வீடு, ஹாஸ்டல்ன்னு சரியா சாப்பிடாம உடம்பை கெடுத்துக்கீட்டீங்க… உனக்கு உங்க அண்ணனுக்குமாவது அம்மா அப்பா இல்ல… ஆனா இவனுக்கு நாங்க ரெண்டுப்பேரும் இருந்தும்… சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல் தான்,

அப்படியும் இவங்க அப்பா விட மாட்டாரு… இவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் வகை வகையா சமைக்க சொல்லி… அவன் சாப்பிடும்போது கூடவே இருந்து சாப்பிட வைப்பாரு… ஆனா இப்போ அவரும் இல்ல… இவனும் என் பேச்சை ஒழுங்கா கேட்டு நேரத்துக்கு சாப்ட்றதில்ல…” என்று வருத்தமாக சொல்ல,

“கவலைப்படாதீங்க ஆன்ட்டி… இப்போ தான் நான் ஆஃபிஸ்க்குப் போறேனே… இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றாள்.

“முதல்ல இவளை ஒழுங்கா சாப்பிடச் சொல்லுங்க… அப்புறம் என்னை கவனிக்கட்டும்…” என்றான் சஞ்சய்.

அதற்கு அவள் அவனை முறைக்க, “ஆமாம் நிரு… இனி இது மாதிரி நடக்காம இருக்க, எப்போதும் கையில் ஏதாவது சாப்பிட வச்சுக்க…” என்று அம்பிகா சொன்னதற்கு அவள் தலையாட்டிக் கொண்டாள்.

சாப்பாடு வேலை முடிந்ததும்,  “நிரு வா உன்னோட ரூமை காட்றேன்…” என்று அம்பிகா அழைக்க,

“அம்மா கால் வலியோடு நீங்க சும்மா மாடி ஏற வேண்டாம்… நான் காட்றேன்..” என்றான் சஞ்சய்.

“ஆமாம் ஆன்ட்டி… நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க… நான் பார்த்துக்கிறேன்…” என்று நீரஜா சொன்னதும்,

“சரி போகும்போது தண்ணியெல்லாம் எடுத்துக்கம்மா..” என்று அம்பிகா அவர்களை அனுப்பி வைத்தார்.

அவளை அந்த அறைக்கு அழைத்துப் போனவன் ஏ.சி யை ஓட விட்டு, எந்த ஸ்விட்ச் எதற்கு  உபயோகிக்க வேண்டும் என்று விளக்கி,  கூடவே கையில் எடுத்து வந்த  தண்ணீரையும் அங்கே வைத்துவிட்டு,

“நிரு படுத்துக்க… நீ கம்பர்டஃபிளா தானே ஃபீல் பண்ற… ஏதாவதுன்னா சொல்லு…” என்றான்.

“இல்லை ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… நான் படுத்துப்பேன்…” என்றாள்.

“இதே ட்ரஸோட படுத்துக்கறத கம்பர்டஃபிளா இருக்கான்னு கேக்கறான் போல… நல்லவேளை இன்னைக்கு சல்வார் போட்டுக்கிட்டு ஆஃபிஸ் வந்தேன்… ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வந்திருந்தா கஷ்டமாக போயிருக்கும் என்று நினைத்தாள்.

“ஓகே குட் நைட்…” என்றவன் அவன் அறைக்கு வந்துவிட்டான்.

ஆனால் அறைக்கு வந்தவனுக்கு தூக்கம் தான் வரவில்லை, அவன் நீரஜா இப்போது அவனுக்கு அருகில் இருக்கிறாள்.  அதுவும் அவன் வீட்டில், நினைக்க நினைக்க சந்தோஷமாக இருந்தது. ஒரு பக்கம் அவன் மனதோ  “டேய் இது தாண்டா உனக்கு நல்ல சந்தர்ப்பம்… இப்போ நீரஜா முன்னப் போல இயல்பா இருக்கா மாதிரி தோனுது… உன்னோட வீட்டில் வேற இருக்கா.. பேசாம போய் இப்பவே உன் மனசுல இருப்பதை சொல்லிடுடா…

அம்மாவும் இப்போதைக்கு மேல வர மாட்டாங்க… மாத்திரை போட்டா தூங்கிடுவாங்க… சோ இது தான் கரெக்ட் டைம் காதலை சொல்வதற்கு என்று நினைத்து, நினைத்ததை உடனே செயல்படுத்த அவன் அறையிலிருந்து வெளியே வந்தான். அவள் அறை கொஞ்சம் திறந்திருந்தது, கதவு திறந்திருக்கு அவள் இன்னும் தூங்கவில்லை போலும் என்று நினைத்தவன் அவள் அறையின் அருகே போய் உள்ளே செல்வதற்கு அனுமதிக்காக அறை கதவை தட்டப் போக, உள்ளேயிருந்து அவள் பேச்சுக் குரல் கேட்டது.

“ஆமாம் வெற்றி… நீ இருந்திருந்தா எனக்கு இந்த கஷ்டமேயில்ல… மதியம் நிக்கியால வர முடியலன்னாலும்… நீ வந்து என்ன கூட்டிக்கிட்டுப் போயிருப்ப… மதியம் சாப்பிடாம பட்டினியா இருந்திருக்க வேண்டாம்…  இன்னிக்கு பார்த்து நீ ஊருக்கு போகறதுப் போல ஆயிடுச்சே…” என்று அவள் வருத்தமாக பேசுவதை கேட்டதும், அதற்கு மேல் சஞ்சய் அங்கே நிற்காமல் அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.

சஞ்சய் வந்ததையோ பின் திரும்பி போனதையோ அறியாமல் அவள் தொடர்ந்து அலைபேசியில் வெற்றியோடு பேசிக் கொண்டிருந்தாள்.

“ஆனா இப்போ மட்டும் என்ன வெற்றி… சஞ்சய் என்னை சேஃபா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டாரு… அம்பிகா ஆன்ட்டி கையால சூப்பர் டின்னர் சாப்பிட்டு நான் ஹாயா இருக்கேன்… ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… சரி எனக்கு டையார்டா இருக்கு நான் ரெஸ்ட் எடுக்கணும்… போனை கட் பண்றேன்…” என்று அலைபேசியை வைத்தவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

“ஆஃபிஸ்ல இருக்கும்போது இந்த மொபைல்ல சிக்னல் இல்லாம… யாருக்கும் போன் பண்ண முடியாம இருந்தது.. இப்போ இவனோட மொக்கையை கேக்கவே மொபைல்ல சிக்னல் இருந்ததுச்சு போல என்று அவள் நினைத்தாலும், 

“ச்சே இங்க மழை எப்படின்னு விசாரிக்க தானே அவன் போன் பண்ணான்… இங்க நிலவரத்தை சொன்னதும்… எனக்கு அல்சர் இருப்பது தெரிஞ்சு விசாரிச்சான்… நான் இருந்திருந்தா உனக்கு இந்த கஷ்டம் இருந்திருக்காது இல்ல நீரஜ் என்று கேக்கும்போது பக்கத்துல நீ இருந்து மொக்கை போடாம இருக்கறது சந்தோஷமா இருக்குன்னு சொல்லவா முடியும்…. ஒருவேளை அவன் இங்க இருந்திருந்தா… அவனை ஹெல்ப்க்கு கூப்பிட்டு இருப்பேனோ என்னவோ..” என்று வெற்றியை பற்றி நினைத்தவள்,

வெற்றி இல்லாததே நல்லது தான், அதனால் தானே சஞ்சயுடன்  வர சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று இந்த நாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், சஞ்சய் அளவுக்கெல்லாம் வெற்றியால் இருக்க முடியாது, உண்மையிலேயே சஞ்சய்க்கு என்மீது  அக்கறை இருக்கிறது. அதனால தான் நான் சாப்பிடாமல் இருப்பது தெரிந்து  உடனே இங்க அழைத்துக் கொண்டு  வந்தான். மதியம் வேலை நேரத்தில் தான் என் நிலைமை அவனுக்கு  தெரியவில்லை, இல்லையென்றால் அப்படி கண்டுக் கொள்ளாமல் இருந்திருக்க மாட்டான். பாவம் அவனே சாப்பிடவில்லை, என்று சஞ்சய் பற்றியே நினைத்திருந்தவள், அந்த இனிமையான மனநிலையிலேயே உறங்கிப் போனாள்.

ஆனால் சஞ்சயின் உறக்கமோ சுத்தமாய் போனது. முதலாவது நீரஜாவை பற்றிய இனிமையான நினைவுகளில் இருந்தான். ஆனால் இப்போதோ, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த நீரஜாவிற்கு, எங்கேயோ இருக்கும் வெற்றி வந்தால் நன்றாக இருக்கும் என்று  தோன்றியிருக்கிறது. ஆனால் அருகில் இருந்த என்னிடம் உதவி கேட்க வேண்டுமென்று தோன்றவில்லையே,

நான் என்ன வேண்டுமென்றேவா அவளை கண்டுக் கொள்ளாமல் இருந்தேன்.  எவ்வளவு வேலை, சாப்பிடக் கூட ஏன் ரெஸ்ட் ரூம்க்கு கூட போக முடியாத அளவுக்கு வேலை இருந்ததே, நிக்கி வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான் என்று தானே நினைத்தேன், அதன்பின் விஷயம் தெரிந்ததும், அவள் மேல் இருக்கும் அக்கறையில் தானே இவ்வளவும் செய்தேன். அது அவளுக்கு தெரியவில்லையே, என்ற நினைப்போடு படுத்திருந்தான்.

மறுநாளோ நீரஜாவிற்கு இனிமையாகவே விடிந்தது. சஞ்சயிடம் பேசுவதற்கு இருந்த தயக்கங்கள் எல்லாம் சரியாகிவிட்டதாக தோன்றியது, இனி முன் போல் இருவரும் நட்பாக இருப்போம், அப்படியே தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிடலாம்  என்ற நினைப்போடு கீழே இறங்கி வந்தாள்.

எதிரில் சஞ்சய் ஜாகிங் முடித்துவிட்டு மாடி ஏறி வர, “குட்மார்னிங் பாஸ்..” என்றாள். அவன் வெறும் தலையை மட்டும் ஆட்டிவிட்டுப் போனதும்,

நேற்று மாலை வரை இருந்த நீரஜாவாக இருந்தால்,  “ஏன் ஐயாவால பதிலுக்கு குட்மார்னிங் கூட சொல்ல முடியாதாம்மா… இவனுக்கு போய் குட்மார்னிங் சொன்னேன் பாரு..” என்று நினைத்திருப்பாள்.

ஆனால் இப்போது இருந்த இனிமையான மனநிலையில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அம்பிகாவை தேடி சமயலறைக்குச் சென்றாள்.

“குட்மார்னிங் ஆன்ட்டி..”

“குட்மார்னிங் நிரு… பேஸ்ட் ப்ரஷ் எல்லாம் வேணுமாம்மா பல் தேய்க்க…”

“என்னோட பேக்லயே எல்லாம் வச்சிருப்பேன் ஆன்ட்டி… நான் ப்ரஷ் பண்ணியாச்சு..”

“அப்போ டீயா காஃபியா…?? இல்ல சஞ்சய்க்கு சத்து மாவு கஞ்சி செய்றேன்… அதை சாப்ட்றீயா..??”

“அய்யோ அதெல்லாம் வேண்டாம்… உங்க ஸ்பெஷல் டீயே கொடுங்க..”

“நேத்து வயிறு வலிச்சிருக்கும் நிரு… அதனால இஞ்சி இல்லாம வெறும் ஏலக்காய் போட்டு டீ தரேன்… இஞ்சி சூடு அதனால வேண்டாம்..”

“சரி ஆன்ட்டி…” என்றவள் உணவு மேசையில் அமர்ந்து செய்தித் தாளை எடுத்து படிக்க, அம்பிகா அவளுக்கு டீயை கொடுத்துவிட்டு சஞ்சய்க்கு எடுத்து வந்த கஞ்சியை ஆற வைத்துவிட்டு, அவரும் அமர்ந்து டீ குடித்தார்.

“ஏன் நிரு… உனக்கு என்ன டிஃபன் வேணும்னு சொல்லு… நான் செஞ்சு தரேன்..”

“இல்ல ஆன்ட்டி நான் காலையில குளிச்சிட்டு தான் சாப்பிடுவேன்… அதனால நான் வீட்டுக்கு போய் சாப்ட்டுக்கிறேன்… அதான் நேத்து சாப்ட்டேன் இல்ல…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சஞ்சய் தயாராகி கீழே வந்தான்.

“என்ன சஞ்சய் ரெடியாகி வர… ஆஃபிஸ்க்கா கிளம்பிட்ட…”

“ஆமாம்மா பேக்டரிக்கு போய்ட்டு ஆஃபிஸ்க்கு போகனும் அதான்…”

“சரி கஞ்சி ரெடியா இருக்கு குடி…” என்றவர், அவன் குடிக்க ஆரம்பித்ததும்,  “சஞ்சய் நிருவும் வீட்டுக்கு போகணுமாம் அவளை ட்ராப் பண்ணிட்டு போய்டு..” என்றார்.

“இல்லம்மா எனக்கு டைம் ஆயிடும்… நான் கால் டாக்ஸி புக் பண்றேன்.. அவளை போய்ட சொல்லுங்க… இப்போ தான் மழை நின்னுடுச்சே…” என்றான்.

பாவம் அவன் அதிகமா வேலை செய்வதை நேற்று தான் அவள் பார்த்தாளே,  இன்றும் அதிக வேலை இருக்கிறது போல் என்று நினைத்தவள், “ஆமாம் ஆன்ட்டி நான் கால் டாக்ஸியிலேயே போறேன்…” என்றாள்.

உடனே அவனும் வாடகை காருக்கு தொடர்புக் கொண்டு பேசி,  “வண்டி கிட்ட தான் இருக்காம்… 10நிமிஷத்துல வந்திடும்…” என்று சொல்லிவிட்டு கஞ்சி குடிப்பதில் கவனம் செலுத்தினான். நீரஜாவும் செய்தித் தாளில் பாதியில் விட்டதை  தொடர்ந்தாள்.

அப்போது சஞ்சய்க்கு அலைபேசியிலிருந்து அழைப்பு வர, அதை எடுத்துப் பார்த்தவன்… “சொல்லு வைஷு…” என்றதும்,  செய்தித்தாளிலிருந்து கண் எடுக்காமல் காதை மட்டும் கூர்மையாக்கிக் கொண்டாள் நீரஜா,  அம்பிகாவும் அவன் பேசுவதை கவனித்தார்.

அந்தப்பக்கம் வைஷு என்ன பேசினாளோ தெரியவில்லை, அதற்கு அவனோ.. “நான் சேஃபா வீட்டுக்கு வந்துட்டேன் வைஷு… நீ சேஃபா வீட்டுக்கு போய்ட்டல்ல…” என்றான்.

அவள் பதிலுக்கு என்ன சொன்னாளோ, அவனோ… “பார்த்து வைஷு மழை விட்டாலும் ரோட்ல தண்ணி நிக்கும்… அங்கங்க பள்ளமா இருக்கும்… அதனால 2வீலர்ல போகாத… தனியா ஆட்டோ, கால் டாக்ஸில போறது கூட சேஃப் இல்ல… நிக்கிக்கிட்டேயும் கார் இல்ல… இருந்தா அவனை ட்ராப் பண்ண சொல்லலாம்… அதனால பஸ்ல போ அதான் சேஃப்..” என்றான்.

அதை கேட்டுக் கொண்டிருந்த நீரஜாவிற்கோ, அவன் வைஷுவிடம் காட்டிய அக்கறை கூட பெரிதாக தெரியவில்லை, ஆனால் ரோட்ல தண்ணி நிக்கும்… பள்ளம் இருக்கும்.. தனியா ஆட்டோ, கால் டாக்ஸில போறதுக் கூட பாதுகாப்பில்ல… என்று சொன்னது தான் பெரிதாக தெரிந்தது.

அவளிடம் அப்படி அக்கறையாக சொன்னவன், இவளிடமோ மழை விட்டாச்சே கால் டாக்ஸில போகட்டும் என்று சொன்னதற்கு என்ன அர்த்தமாம்,  இவளை அழைத்துப் போக அவனுக்கு விருப்பமில்லை என்று தானே அர்த்தம்,

ஏதோ நேற்று இவள் நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு அழைத்து வந்திருக்கிறான். அதை இவளோ அக்கறை மண்ணாங்கட்டின்னு நினைத்ததை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டாள். காலையில் காலை வணக்கம் சொன்னதற்கு பதில் வணக்கம் சொல்லாதது கூட இப்போது ஞாபகத்திற்கு வந்தது.  இதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல்,

“ஆன்ட்டி டாக்ஸி வர்றதுக்குள்ள நான் தலைவாரிக்கிட்டு என்னோட பேகை எடுத்துக்கிட்டு வர்றேன்…” என்று மேலே போனாள்.

நீரஜா மனதில் என்ன நினைத்தாள் என்பதெல்லாம் அம்பிகாவிற்கு தெரியவில்லை என்றாலும், நீரஜா நினைத்ததையே தான் அவரும் நினைத்தார். அதனால் நீரஜா மேலே சென்றதும் சஞ்சயிடம்,

“சஞ்சய் போன்ல பேசினது ஜானுவோட தங்கை வைஷு தானே…” என்றுக் கேட்டார்.

“ஆமாம்மா..” என்று அவன் சொன்னதும்,

“சஞ்சய் நீ வைஷுக்கிட்ட அக்கறையா பேசினதை நான் தப்பு சொல்லல… ஆனா போன்ல பேசின அந்தப் பொண்ணுக்கிட்ட ஆட்டோ, கால் டாக்ஸில தனியா போக வேண்டாம்னு சொன்னவன்… நீ தானே நிருவை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்த… நீ தானே பாதுகாப்பா அவளை வீட்ல விடணும்… ஆனா  அவளை தனியா அனுப்பிறியேப்பா..” என்று கேட்டார்.

அப்போது தான் அவன் செய்த தவறு அவனுக்கு புரிந்தது. நேற்று அவள் வெற்றியோடு அலைபேசியில் பேசியதை கேட்டு, பொறாமையும் கோபமும் அவள் மீது அவனுக்கு ஏற்பட்டது.  அதன் விளைவு இப்படி செய்துவிட்டான். ஆனால் இப்போது தான் அன்னை சொன்னதும் தன்னுடைய தவறு புரிந்தது.

அதோடு இன்னொன்றும் புரிந்தது, இப்போது வைஷு இவனிடம் அக்கறையாக விசாரித்தது போல் தானே வெற்றியும் நீரஜாவை விசாரித்து இருப்பான். இதை அப்போது புரிந்துக் கொள்ளாமல் இருந்ததை நினைத்து அவனுக்கு வெட்கமாக இருந்தது.

தன் அன்னை பதிலுக்கு எதிர்பார்த்திருப்பதை உணர்ந்தவன், “அது வந்தும்மா… வைஷு இருப்பது சிட்டிக்கு வெளிய… அங்க மழை பெஞ்சா தண்ணி நிறைய நிக்கும்… ஆனா நிரு வீடு சிட்டிக்குள்ள  இருக்கு… அதான்ம்மா அப்படி சொன்னேன்… ஆனா நீங்க சொன்னது சரி தான்… நான் தான் அவளை பாதுகாப்பா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும்… அதனால நானே கூட்டிக்கிட்டுப் போறேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீரஜா மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

அவளைப் பார்த்தவன், “நிரு டாக்ஸி வேண்டாம்… நானே உன்னை ட்ராப் பண்றேன்..” என்றான்.

“எதுக்கு அதான் டாக்ஸி புக் பண்ணியாச்சே..  நான் அதுலையே போறேன்…” என்றாள் அவள்,

“நான் தான்ம்மா.. மழை விட்டாலும் ரோடெல்லாம் எப்படி இருக்குமோ… நீயே கூட்டிக்கிட்டு போய்டுப்பான்னு சொன்னேன்.. நீ கார்லேயே போம்மா..” என்றார் அம்பிகா.

“ஆன்ட்டி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல… கால் டாக்ஸி ட்ரைவரும் பாதுகாப்பா தான் வண்டி ஓட்டிக்கிட்டுப் போவாரு… இன்னமும் இந்த நாட்டுல நல்லவங்களும் இருக்க தான் செய்றாங்க ஆன்ட்டி… ஒரு பிரச்சனைன்னா ஓடி வந்து உதவி செய்யறவங்களும் இருக்காங்க… அதனால நீங்க பயப்பட வேண்டாம்… நான் பத்திரமா போய்டுவேன்…” என்று அவள் சொன்ன போது வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டது.

“டாக்ஸி வந்துடுச்சுப் போல… நான் கிளம்பறேன் ஆன்ட்டி…” என்றவள், “நேத்து செஞ்ச ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ் சஞ்சய்… நான் வர்றேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

நீரஜா மனதில் இருக்கும் காதல் சஞ்சய்க்கு புரிகிறதோ இல்லையோ, அவளுடைய கோபத்தை அவனால் புரிந்துக் கொள்ள முடியும்,  இப்போதும் அவளின் கோபம் அவனுக்கு புரிந்தது. கேலியாக பாஸ் என்று அவள் கூப்பிடும்போது அதில் உள்ள நெருக்கம் கூட இப்போது அவள் அழைத்த சஞ்சயில் இல்லை.

இப்படி நேற்று இருவருக்கும் இருந்த இயல்பான மனநிலை இரண்டு அலைபேசி அழைப்புகளால் இன்று திரும்பவும் பழைய நிலைக்கே வந்தது, அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டாலும், அலுவலக சம்பந்தப்பட்டதை தவிர நீரஜா சஞ்சயிடம் எதுவும் பேசுவதில்லை.  அன்று நடந்த சம்பவத்திற்கு சஞ்சய் நீரஜாவிடம் மன்னிப்பும் கேட்டான். “நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க..” என்று நீரஜா திருப்பிக் கேட்டாலும், அவனிடம் சரியாக பேசவில்லை.

இந்த முறை இந்த பிரச்சனைக்கு முழுக்க முழுக்க தான் மட்டுமே காரணம் என்பதை சஞ்சய் அறிந்திருந்தான். ஆனால் நீரஜாவை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வழி தான் அவனுக்கு தெரியவில்லை. 

                  மௌனம் தொடரும்..