KPEM 5
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மௌனம் 5
மேளச் சத்தம் கொட்ட சஞ்சய் அவன் மாமன் மகளுக்கு தாலிக் கட்டினான்.
திடுக்கென்று விழித்தாள் நீரஜா, “சேச்சே கனவா?? ஏன் தான் இப்படியெல்லாம் கனவு வருதோ… எனக்கும் சஞ்சய்க்கும் கல்யாணம் நடப்பது போல கனவெல்லாம் வரக் கூடாதா…?? என்று சலிப்போடு படுக்கையில் இருந்து எழுந்தாள். மணியைப் பார்த்தால் எட்டு என்று காட்டியது,
“அய்யோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா…? இன்னைக்கு ஆஃபிஸ் போகலாம்னு நினைச்சோமே… சரி நிக்கி கிளம்பி போகறதுக்குள்ள கிளம்பணும்…” என்று மனதில் நினைத்துக் கொண்டே குளியறையில் புகுந்தாள்.
ராத்திரியெல்லாம் சஞ்சய், மந்த்ரா, வைஷு, மற்றும் முகம் தெரியாத அவனின் மாமன் மகள், சஞ்சய் திருமணம் பற்றி அம்பிகா பேசியது என அனைத்தையும் சிந்தித்துக் கொண்டு இருந்ததால் சீக்கிரம் உறக்கம் வரவில்லை, பிறகு எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை, அதன் பலன் தான் காலையிலேயே இந்த கனவு.
காலை கடமையெல்லாம் முடித்து குளித்து தயாராகி அவள் மாடியிலிருந்து இறங்கி வரும் போது ஜானவி, நிகேதனோடு பேசிக் கொண்டே வெற்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதை பார்த்த நீரஜா, “என்னோட கெஸ்ட்டா வந்துருக்கான்… நான் வர்றதுக்குள்ள சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்… சாப்ட்றது, தூங்கறது, வெட்டியா பேசி மொக்கை போட்றது… இது மூன்றை மட்டும் தான் ஒழுங்கா செய்வான் போல…” என்று கேலியாக நினைத்தாள்.
சினிமாவில் வருவது போல் ஒரு நகைச்சுவை நண்பனாக தான் வெற்றியை நீரஜா நினைத்து கொண்டிருக்கிறாள். ஆனால் பின் வரும் நாட்களில் அவன் வில்லங்கமாகவும் மாறக் கூடும் என்று அவளுக்கு தெரியுமா என்ன…???
ஒரே அலுவலகத்தில் ஒன்றாக வேலைப் பார்த்து நண்பர்களாக மாறினார்கள் இருவரும், ஒருநாள் திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாக நீரஜாவிடம் வெற்றி தெரிவித்தான். அவள் சஞ்சயை மனதில் வைத்து அவனை மறுத்தாள். அவனும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, பின்பும் நட்பாக பழகினான். அவனே அதைப் பற்றி கவலை கொள்ளாததால் நீரஜாவும் அவனுடன் நட்பாக பழகினாள்.
அப்போது வேலையை விட்டு இந்தியா செல்லபோவதை நீரஜா சொல்ல, தனக்கும் இந்தியாவில் வேலை இருக்கிறது உன்னோடு வரலாமா..?? என்று அவன் கேட்டதும் நீரஜாவால் மறுக்க முடியவில்லை, அவனையும் இந்தியாவுக்கு உடன் அழைத்து வந்தாள்.
இந்தியாவில் இருக்கும் நண்பர்களுடன் புதிதாக தொழில் ஆரம்பிக்கும் வேலையாக தான் வெற்றி இந்தியாவுக்கு வர முடிவெடுத்தான். அப்படியே நீரஜாவின் குடும்பத்தாரோடு பழகி, அவர்கள் விருப்பத்தோடு திரும்பவும் நீரஜாவிடம் திருமணம் பற்றி பேச வேண்டும் என்பது தான் அவனது எண்ணம், ஆனால் இங்கு வந்த பின் தான் அவனுக்கு நீரஜா வசதியான வீட்டுப் பெண் என்று தெரிந்தது.
அவள் குடும்பத்தைப் பற்றி பேசியிருக்கிறாள் தான், ஆனால் அவள் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவள் என்று தான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இங்கு வந்து இவளைப் பற்றி தெரிந்ததும் அவளின் பணம் மீது மோகம் வரும் என்று வெற்றிக்கே இப்போது தெரியுமா என்ன…??
“குட்மார்னிங் கைஸ்…” என்று சொல்லிக் கொண்டே நீரஜா அங்கு வந்தாள்.
“குட்மார்னிங் நீரஜ்… ஹே என்ன இவ்வளவு லேட்டா எழுந்திருச்சு வர்ற… நான் சாப்பிட்டே முடிச்சிட்டேன்… சாரி உனக்காக வெய்ட் பண்ண முடியல… நான் ஒரு ஃப்ரண்ட பார்க்க சேலம் வரைக்கும் போக வேண்டியிருக்கு அதான், அப்போ வரட்டுமா நீரஜ்…” என்றான் வெற்றி.
“அய்யோ இவன் வெளிய கிளம்பறான் போல, அது தெரியாம தப்பா நினைச்சிட்டேனே…” என்று மனதிற்குள் வருத்தப்பட்டவள், அவனிடம்.. ” ஏன் வெற்றி அதுக்குள்ள உன்னோட ஃப்ரண்ட்ஸ பார்க்க போகணுமா… 2, 3 நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போகலாமே…” என்றாள்.
“இல்ல நீரஜ்… நான் இப்போ லீவ்ல தான் வந்திருக்கேன்… அதுமட்டுமில்லாம என்னோட ஃப்ரண்ட் 2 நாளுக்கு பிறகு டெல்லிக்கு போய்டுவான்… அதான் இப்பவே போய் பார்க்கணும்…” என்றான்.
“கார் வேணும்னா எடுத்துக்கிட்டு போங்களேன் வெற்றி” என்று நிக்கி கேட்க,
“இருக்கட்டும் நிக்கி… ரொம்ப தூரமெல்லாம் கார் ஓட்டினதில்ல… நான் பஸ்லேயே போயிக்கிறேன். நான் கால் டாக்ஸி புக் பண்ணியிருக்கேன்… என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன் செங்கல்பட்டுல இருந்து வர்றான்… நாங்க ரெண்டுப்பேரும் கோயம்பேடுல மீட் பண்ணிக்கிறதா ப்ளான்… அதனால கார் வேண்டாம்…” என்றான்.
“பார்த்து வெற்றி நைட்ல இருந்து விடாம மழை தூறிக்கிட்டு இருக்கு…. கேர்ஃபுல்லா போய்ட்டு வாங்க…” என்றான் நிக்கி.
சரி நிக்கி நான் பார்த்து போய்ட்டு வரேன்… சரி நீரஜ் நான் வர 2 நாளாகும் வரேன்….” என்று சொல்லும்போதே வாடகை கார் வந்துவிட்டது. “டாக்ஸி வந்துடுச்சு போல நான் கிளம்பறேன்…” என்று விடைப்பெற்றான். அவன் சென்றதும்,
“என்ன நிரு… வெற்றி வேலையை விட்டுட்டு புதுசா பிஸ்னஸ் ஆரம்பிக்கப் போறாரேமே… இவ்வளவு நேரம் அதைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தாரு… அப்புறம் அப்படி பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணும் போது சஞ்சயும் நானும் நல்ல ஐடியாஸ்ல்லாம் தரணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு…”
“ஆமாம் நிக்கி… அப்படி ஒரு ஐடியா இருக்கு வெற்றிக்கு… அப்போ ஏதாவது ஹெல்ப் கேட்டா செய் நிக்கி…”
“கண்டிப்பா நிரு…” என்றான்.
அதற்குள் ஜானவியோ, “என்ன நிரு தூங்கிட்டு இருப்பன்னு பார்த்தா குளிச்சு ரெடியாகி வர… இப்போ காஃபி தரவா..?? இல்லை ப்ரேக்பாஸ்டே சாப்பிட்றியா..” என்றுக் கேட்டாள்.
“காஃபி வேண்டாம் ஜானு… நான் ப்ரேக்பாஸ்ட்டே சாப்ட்றேன்… நீங்க சாப்டீங்களா…?”
“இல்லை இனிமே தான்…”
“அப்போ எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்… உக்காருங்க…” என்றவள்,
“நிக்கி நீ ஆஃபிஸ் போய்ட்ருப்பியோன்னு நினைச்சேன்” என்று நிகேதனை பார்த்துக் கேட்டாள்.
“இல்லடா இனி தான் போகணும்… இன்னிக்கு ஜெய்யை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும்… அதான் இப்ப போய்ட்டு கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்…”
“ஏன் ஜெய்க்கு என்ன..?? என்னாச்சு ஜானு…??”
“ஒன்னுமில்ல நிரு… கொஞ்ச நாள் முன்னாடி காய்ச்சல்னு டாக்டர்க்கிட்ட போனோமில்ல… அப்பவே காய்ச்சல் சரியானாலும் 2 வாரம் கழிச்சு இன்னொரு தடவை வாங்கன்னு சொன்னாங்க…
நானே போய்டுவேன்… மழையா இருக்கறதால நீ கார் ஓட்டிக்கிட்டு போகாத… நானே வந்து கூட்டிக்கிட்டு போறேன்னு நிக்கி சொன்னாரு…”
“ஓ அப்படியா… நிக்கி நான் இன்னிக்கு ஆஃபிஸ் வரலாம்னு இருக்கேன்… அதான் ஜெய்க்கு ஏதாவதுன்னா நானும் ஹாஸ்பிட்டல் போலாம்னு பார்த்தேன்…”
“என்ன நிரு அவசரம்… இப்போ தானே வீட்டுக்கு வந்த… கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வரலாமே…”
“இல்லை நிக்கி வீட்லேயே இருந்தா போர் தான்… அதான் ஆஃபிஸ்க்கு வரலாம்னு இருக்கேன்… நான் சிங்கப்பூர் போனப்போ நம்ம ஆஃபிஸ்க்கு வரலாமே… ஏன் சிங்கப்பூர் போகணும்னு கேட்ட… இப்போ ஏன் அவசரம்னு கேக்கற…??”
“இல்லை நிரு… நீயும் சஞ்சயும் சரியா பேசிக்கிறதேயில்லை… இதுல நீ இப்பவே ஆஃபிஸ்க்கு வரணுமா…??”
“அதெல்லாம் நான் சஞ்சய்க்கிட்ட பேசிட்டேன்…” என்று அவள் சொன்னதும், மற்ற இருவரும் வியப்பாக பார்த்தார்கள்.
“என்ன அப்படி பார்க்கீறீங்க…” என்று அவள் கேட்கவும்,
“ஒன்னுமில்ல நேத்து தான் சஞ்சய் சொன்னான்… நீ தான் அவனை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கறதாகவும்… நீ தான் முதலில் பேசணும்னு சொன்னான். அதான் நீயே பேசிட்டன்னு சொன்னதும், அவன் இப்போ எதுவும் தப்பு பண்ணலன்னு தெரிஞ்சுக்கிட்டியா…” என்றான்.
“அடப்பாவி… எதுவும் நான் நிக்கிக்கிட்ட சொல்லாததால நீ என் மேல தப்புன்னு சொல்லி வச்சிருக்கியா… நீ பண்ண தப்பு என்னன்னு நிக்கிக்கிட்ட நான் சொல்லமாட்டேன்னு உனக்கு ஒரு எண்ணம் இல்ல… என்னது நான் பர்ஸ்ட் பேசணுமா… அய்யோ நீ இப்படி சொல்லியிருப்பேன்னு தெரியாம நான் பாட்டுக்கு வீட்டுக்கு வந்து ஆன்ட்டிக்காக உன்கிட்ட பேசிட்டேனே… இருக்கட்டும் நேத்து நான் நினைச்சா மாதிரி நீயா பேசற வரைக்கும், இனி நானா பேச போறதில்லை..” என்று திரும்பவும் மனதிற்குள் முடிவெடுத்தாள்.
தான் கேட்ட கேள்விக்கு நீரஜா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று நிகேதனும் ஜானவியும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்த அவள்… “நான் ஒன்னும் அதுக்காக சஞ்சய்க்கிட்ட பேசல… பாவம் ஆன்ட்டி… அவங்களுக்கு எங்க சண்டையெல்லாம் தெரியாது… சஞ்சய் கல்யாணம் வேண்டாம்னு சொல்றாராம்… நீ கொஞ்சம் சொல்லக் கூடாதாம்மான்னு கேட்டாங்க… அதான் ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்கன்னு கேட்டேன்…” என்று அவள் கூறியதும் திரும்பவும் நிகேதனும் ஜானவியும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டார்கள்.
பின் ஜானவியோ… “என்னது அம்பிகா அம்மா சஞ்சய் ஏன் கல்யாணம் பண்ணிக்கலன்னு உன்கிட்ட கேக்க சொன்னாங்களா…?? நான் அம்பிகா அம்மாவை பார்த்தா சொல்றேன் எங்க வீட்டுப் பொண்ணுக்கு 26 வயசாகுது… இன்னும் கல்யாணம் வேண்டாம்னு சொல்றா… நீங்க கொஞ்சம் சொல்லக்கூடாதான்னு கேக்கறேன்…” என்று கேட்கவும்,
“ஜானு நான் என்னோட அண்ணனை உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டேன்னு… நீ என்னை இப்படி கல்யாணம் செஞ்சுக்க சொல்லி பழி வாங்கக் கூடாது…” என்றாள்.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் பாலிசின்னு வச்சிக்கோயேன்..” என்று ஜானவி சிரிக்க,
“அப்போ அடுத்த ஜென்மமும் இதே நிக்கியை கட்டிக்கிட்டு இன்பம் பெறணும்னு சாபம் கொடுத்துடுவேன்..” என்று நீரஜா கூறினாள்.
“அய்யோ வேண்டாம்.. நான் உன்கிட்ட கல்யாணம் பத்தி பேசமாட்டேன்” என்று ஜானவி சொன்னதும்,
“ஹே போதும் போதும்… உங்க ரெண்டுப்பேர் நடுவுல மாட்டக் கூடாதே… இந்த நிக்கியை பத்தி உங்களுக்கெல்லாம் தெரியல… என்னை மாதிரி ஒரு அண்ணனும்… என்னை மாதிரி ஒரு புருஷனும் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்…” என்றான் நிகேதன்.
“நிரு நம்மல கடவுள் தான் காப்பாத்தணும்…” என்று ஜானவி சொன்னதும் நீரஜா சிரித்தாள்.
“போதும் நிரு கிண்டலெல்லாம்…. நான் சீரியஸாவே கேக்கறேன்… இன்னும் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்றது சரியில்ல.. உனக்கு நல்லப்படியா கல்யாணம் செஞ்சு வைக்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கு…
எங்க கல்யாணம் அப்பவே… தங்கைக்கு கல்யாணம் பண்ணாம… இவன் பண்ணிக்கிறான் பாருன்னு… நம்ம ரிலேஷன்ஸ் எல்லாம் பேசினாங்க… நீ அப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னதாலையும்… மாமா நவி கல்யாணத்துக்கு அவசரப்பட்டதாலையும்… என் மேலேயும் நவி மேலேயும் நம்பிக்கை இருக்கறதாலயும் தான்… நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… ஆனா இன்னும் நீ எந்த பதிலும் சொல்லாம இருக்கறது சரியில்ல நிரு…” என்று ஒரு அண்ணனாக அவள் மீது நிகேதன் அக்கறையாக பேசினான்.
“எனக்கு புரியுது நிக்கி… இப்போ தானே நம்ம ஆஃபிஸ்க்கு வரப் போறேன்… இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடு… நானே அப்புறம் கல்யாணம் பத்தி பேசறேன்…” என்று நீரஜா அவனிடம் கூறினாள்.
“சீக்கிரம் நீ கல்யாணத்துக்கு ஒத்துப்பேன்னு எதிர்பார்க்கிறேன்…” என்று நிகேதன் சொன்னதும், எப்படி திரும்பவும் சஞ்சயோடு நட்பாக பழகி எப்படி தன் காதலை புரிய வைக்கப் போகிறோம், என்று நீரஜா சிந்தித்துக் கொண்டிருக்க,
“நிரு நீ இன்னைக்கு அம்மா வீட்டுக்கு வரப்போறதா சொன்ன இல்ல… நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து நேரா அங்கே தான் போறேன்… நீயும் ஆஃபிஸ்ல இருந்து நேரா அங்க வந்துட்றியா…” என்று அவள் சிந்தனையை கலைத்தாள் ஜானவி..
நீரஜா பதில் சொல்வதற்கு முன் நிகேதனே, “இன்னைக்கு முதல் நாள் என்பதால நிரு ஹாஃப் டே வொர்க் பண்ணட்டும்… உன்னை உங்க வீட்ல விட்டுட்டு அப்புறம் நிருவை கூட்டிக்கிட்டு நாங்க ரெண்டுப்பேரும் அங்க லன்ச்க்கு வர்றோம்… அப்புறம் ஈவ்னிங் எல்லாரும் கிளம்பிடலாம்…” என்றான். அதற்கு நீரஜாவும் ஒத்துக் கொள்ள பின் இருவரும் அலுவலகம் கிளம்பினர்.
அவர்கள் இருவரும் அலுவலகம் வந்ததும்… “நிரு சஞ்சய் வந்துட்ருப்பான்… நீ போய் அவனைப் பாரு… விஜி ஏதோ ஃபைல்ல ஸைன் பண்ணனும்னு சொன்னாங்க…. அதுக்குத்தான் நான் வந்தேன்… நான் போய் அவங்க வந்துட்டாங்களான்னுப் பார்க்கிறேன்…” என்று கூறிவிட்டு நிகேதன்சென்றுவிட்டான்.
“அய்யோ இவன் பாட்டுக்கு போய்ட்டானே… நானா போய் எப்படி சஞ்சய்க்கிட்ட பேசுவேன்..” என்று சிந்தித்துக் கொண்டே அவள் அவன் இருக்கும் அறைக்கு போக, அவன் அறை வாசலுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனின் காரியதரிசி என்ன வேண்டும் என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
அவளை பார்த்து நீரஜா அதிர்ந்தாள். வெள்ளை வெளேரென்று மாவு பொம்மை போல் இருந்தாள் அந்த காரியதரிசி, எவ்வளவு கவர்ச்சியாக கட்ட முடியுமோ, அவ்வளவு கவர்ச்சியாக புடவைக் கட்டியிருந்தாள்.
“இவள் தான் சஞ்சயின் பி.ஏ வா… முன்பு வேறு ஒருத்தி இருந்தாளே, இவள் என்ன இப்படி கிளாமரா ட்ரஸ் பண்றா..” என்று நினைத்தவளின் மனதில் இந்த விஷயம் நெருட,
“இன்னும் கொஞ்ச நேரம் இவளை பார்க்காத நிரு… அப்புறம் இன்னைக்கு நைட் இவ கனவுல சஞ்சயோட டூயட் பாடப் போறா..” என்று நினைத்து அவளிடமிருந்து தன் பார்வையை எடுக்கும் போது,
திரும்பவும் என்ன வேண்டும் என்று அந்தப் பெண் ஆங்கிலத்தில் கேட்டாள். நீரஜா சஞ்சயை பார்க்க வேண்டும் என்றதும், “அப்பாயின்மென்ட் இருக்கா..” என்று அந்தப் பெண் கேட்டாள்.
“ஐயா அப்பாயின்மென்ட்டோட தான் எல்லோரையும் பார்ப்பாரோ..” என்று மனதில் நினைத்துக் கொண்டு, “நீரஜா பார்க்கணும்னு சொன்னாங்கன்னு சொல்லுங்க..” என்று கூறிவிட்டு அவள் காத்துக் கொண்டிருக்க,
“ஹே நீரஜா எப்படி இருக்க… எப்போ சிங்கப்பூர்ல இருந்து வந்த…” என்று விசாரித்தாள் நிகேதனின் காரியதரிசி விஜி..
“ஹாய் விஜி… நான் நேத்து தான் சிங்கப்பூர்ல இருந்து வந்தேன்… என்ன இப்பத்தான் வர்றீங்களா… நிக்கி நீங்க வந்து இருப்பீங்கன்னு அவன் கேபினுக்கு போனான்…” என்றாள்.
“அப்படியா… என்ன பண்ண நீரஜா, மழையால லேட்டாயிடுச்சு…”
“அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க விஜி… உங்க குட்டி எப்படி இருக்கான்…”
“என்ன குட்டியா… அவன் இப்போ செவன்த் படிக்கிறான்…”
“ஓ.. நான் அவன் 4th படிக்கும் போது பார்த்தது… அதான் அவன் இன்னும் குட்டியாவே நினைச்சுட்டேன்…”
“ம்ம் பரவாயில்ல… இன்னைக்கு மழைன்னதும் அவனுக்கு ஸ்கூல் லீவ்… வீட்ல மாமியாரும் இல்ல.. தனியா இருந்தா மழையில ஆட்டம் போடுவான்… அதான் முக்கியமான வேலை இருக்கவே… ஆஃபிஸ்க்கு வந்தேன்… ஹாஃப் டே க்கு அப்புறம் வீட்டுக்குப் போகணும்… ஆமாம் நீ என்ன இங்க நின்னுக்கிட்டு இருக்க…”
“இல்லை விஜி இன்னையிலிருந்து நானும் ஆஃபிஸ்க்கு வரேன்… அதான் சஞ்சயை பார்க்கணும்… அவரோட பி.ஏ சஞ்சயை பார்க்க பர்மிஷன் கேக்க போயிருக்கா… அதான் நின்னுக்கிட்டு இருக்கேன்…”
“குட் நீயும் ஆஃபிஸ்க்கு வரப்போறியா வாழ்த்துக்கள்… ” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, அந்த பெண் சஞ்சயின் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
“ரேகா… மேடம் யாருன்னு தெரியாம நிக்க வச்சிருக்க… அவங்க நம்ம நிகேதன் சாரோட சிஸ்டர்… இந்த கம்பெனியில் அதிக ஷேர் இவங்களோடது… இந்த கம்பெனியே இவங்க பேர்ல தான் இருக்கு தெரியுமா..?? இனி இப்படியெல்லாம் செய்யாத…” என்றாள் விஜி.
“ஓ சாரி மேம்… சார் உங்களை வரச் சொன்னாரு” என்று சொல்லிவிட்டு அவள் இருப்பிடத்தில் உட அமர்ந்துவிட்டாள்.
“என்ன விஜி… இந்த ஆஃபிஸை பார்த்துக்கிறது சஞ்சயும் நிக்கியும்… என்னப்பத்தி பெருசா பேசறீங்க…” என்று விஜியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த நிகேதன்,
“விஜி இப்பத்தான் வர்றீங்களா… எந்த ஃபைல்ல ஸைன் பண்ணனுமோ அதை எடுத்து வைங்க… நான் சஞ்சயை பார்த்துட்டு வரேன்…” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான். பின் நீரஜாவிடம் திரும்பி..
“என்ன நிரு நீ இன்னும் சஞ்சயை பார்க்கலையா?” என்றுக் கேட்டான்.
“பாஸ் அப்பாயின்மென்ட்டோட தான் பார்ப்பாராமே… அவரோட பி.ஏ தான் நிக்க வச்சுட்டா… என்ன நிக்கி இவ்வளவு அழகான பொண்ணு சஞ்சயோட பி.ஏ… ஆனா உனக்கு இன்னும் விஜி தான் பி.ஏ வா…” என்றுக் கேட்டாள்.
“ஏம்மா நான் நவிக்கூட சந்தோஷமா இருக்கறது பிடிக்கலையா…” என்றவன்,
“சஞ்சயை பொறுத்தவரைக்கும் நல்லா வேலை செய்யணும்… இந்த பொண்ணு எப்படியிருந்தா என்ன… நல்லா வேலை செய்வா… அதான் சஞ்சய் இவளை பி.ஏ வா வச்சிருக்கான்… மத்தப்படி சஞ்சய் ஒரு சாமியார்ம்மா…” என்றதும்,
“நான் அவனுக்கு மன்மதன்ன்னு பேர் வச்சா.. நீ உன்னோட ஃப்ரண்டுக்கு சாமியார்ன்னு பேர் வக்கிறீயா… நல்ல ஃப்ரண்ட் தான் நீ..” என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தப்படி சஞ்சயின் அறையில் நுழைய, இவர்களை நிமிர்ந்து பார்த்த சஞ்சய்.. அவள் சிரிப்பதை பார்த்து அவனும் புன்னகைக்க, முகத்தை சுளித்து ஒழுங்கு காட்டி விட்டு அவன் எதிரில் அமர்ந்தாள்.
அதைப் பார்த்து மேலும் அவனுக்கு சிரிப்பு வர, அதற்குள் நிகேதனோ,
“சஞ்சய்… நிரு இன்னையிலிருந்து வேலையில ஜாயின் பண்ணிட்டா… அவளுக்கு இப்போ என்ன வேலை கொடுக்கலாம்..” என்றுக் கேட்டான்.
“அவ என்ன செய்ய நினைக்கிறாளோ… அதையே செய்யட்டும்… இதுல நான் என்ன சொல்ல…” என்று அவன் சொன்னப்போது,
“ஏன் நிக்கி… நான் இந்த ஆஃபிஸ்ல எம்.டி யா உட்கார்ந்து நிர்வாகம் பண்ணணும்னு நினைக்கிறேன்… உன்னோட ஃப்ரண்ட் அவர் பதவியை விட்டுக் கொடுப்பாரான்னு கேளு…” என்றாள்.
“நீ என்னோட இதய சிம்மாசனத்துல ராஜகுமாரியா உக்கார்ந்திருக்க… நீ சொன்னா உனக்கு அடிமையாவே இருப்பேன்… இந்த எம்.டி பதவியையா விட்டுக் கொடுக்க மாட்டேன்..” என்று மனதில் நினைத்தவன்_
“இந்த கம்பெனியோட ஓனரே மேடம் தான்… அவங்க கேட்டா எம்.டி பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேனா…” என்று நிகேதனிடம் கூறினான்.
“சரி சரி ஏதோ கம்பெனிக்கு லாபம் வர்றதால போனாப்போகுதுன்னு உன்னோட ஃப்ரண்டே எம்.டி யா இருக்கட்டும்… எனக்கு என்ன வேலைன்னு கேளு நிக்கி..” என்றாள்.
“மச்சான்… நம்ம ப்ராடக்ட்க்கு புதுசா ஆட் (விளம்பரம்) ரெடி பண்ணனும்… அதுக்காக ஆட் ஏஜென்சில இருந்து இன்னைக்கு ஆள் வர்றாங்க… நமக்கு எப்படி ஆட் வேணும்னு சொல்லனும்… அதனால அவங்கக் கூட மீட்டிங் இருக்கு… அதை இவளை அட்டண்ட் பண்ண சொல்லு… அப்புறம் என்ன வேலை கொடுக்கறதுன்னு பார்க்கலாம்…” என்றான்.
“ஹே சூப்பர்… எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு… நான் அவங்க கூட பேசி சூப்பரான ஆட் ரெடி பண்றேன்… இந்த முறை நம்ம ப்ராடக்ட் சூப்பரா ஸேல் ஆகும்…” என்று சந்தோஷப்பட்டாள்.
“நிரு நீ கொஞ்சம் வெளிய இரு…” என்று அவளை நிகேதன் அனுப்பி வைத்து விட்டு, “மாப்ள என்னடா இந்த வேலையை அவக்கிட்ட கொடுக்கிற.. அவ ஏதாவது சொதப்பப் போறா… நீயே இதை செய்யலாமில்ல…” என்றான்.
“அவ செய்வாடா… அவளுக்கு புது புது ஐடியாஸ் எல்லாம் வரும்… நாம ஃப்ர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஆட் போட்டோமே… அது நீரஜா என்கிட்ட சொன்ன ஐடியா தான்.. அதை ஏஜென்ஸிக்கிட்ட சொன்னேன் அவங்க இன்னும் அதுல சேர்க்க வேண்டியதை சேர்த்து ஆட் ரெடி பண்ணாங்க.. அது சக்ஸஸ் தானே ஆச்சு…” என்றான் சஞ்சய்.
“ஹே… இந்த சீக்ரெட்டை இப்போ தான் ரிலீஸ் பண்ற… இது நிரு கொடுத்த ஐடியாவா பரவாயில்லையே…” என்றவன், தன்னை விட தன் தங்கையின் திறமையைப் பற்றி சஞ்சய் தெரிந்து வைத்திருப்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டான்.
அதன் பின் வெளியே வந்தவன், “என்ன நிரு… சஞ்சய்க்கிட்ட பேசிட்டதா சொன்ன… பார்த்தா அப்படி தெரியலையே..” என்று கேட்டான்.
“அதை உன்னோட ஃப்ரண்ட் கிட்ட கேளு..” என்று அவள் சொன்னதும்,
“அம்மா ஆளை விடுங்க… உங்க ரெண்டுப்பேர்க்கிட்டேயும் இனி இதைப் பத்தி கேக்கவே மாட்டேன்..” என்று கையெடுத்து கும்பிட்டான் நிகேதன்.
பின் அனைவரும் அமர்ந்து வேலைப் பார்க்கும் இடத்திலேயே அவளையும் அமர வைத்து, “நிரு உனக்கு நாளைக்கு கேபின் ரெடி பண்ண சொல்றேன்… அதுவரைக்கும் இங்கேயே வேலைப் பாரு… இந்தா இதுல நாம இதுவரைக்கும் என்னென்ன ஆட் கொடுத்தோமோ அந்த டீடெய்ல் இருக்கு… அதைப் பார்த்துட்டு இரு… ஆட் ஏஜென்ஸில இருந்து ஆள் வந்ததும் உனக்கு இன்பார்ம் பண்ணுவாங்க… அப்புறம் நீ மீட்டிங் அட்டண்ட் பண்ணு… நான் என்னோட வொர்க் முடிச்சிட்டு கிளம்பறேன்… மதியம் வந்து உன்னை அழைச்சிட்டுப் போறேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அனைவருக்கும் அவளை அறிமுகப்படுத்தி விட்டு, அவன் வேலையை முடித்துவிட்டு, பின் சஞ்சயிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
பின் சஞ்சயும் நீரஜாவும் அவரவர் வேலையில் மூழ்கி விட, மழையும் விடாமல் பெய்து அதன் வேலையை செய்துக் கொண்டிருந்தது.
மௌனம் தொடரும்..