KPEM 4

மௌனம் 4

வெள்ளை நிற உடையில் வந்த அவள் ஒருவேளை தனியாக வந்திருந்தால் கண்டிப்பாக இது கனவு என்று தான் நினைத்திருப்பான் சஞ்சய், ஆனால் அவள் ஒரு கையில் ஜெய்யை தூக்கிக் கொண்டும்… இன்னொரு கையில் குடைப்பிடித்துக் கொண்டும் வரவே அவள் வருவது நிஜம் என்பதை உணர்ந்தான். ஆனால் கண்களை தான் அந்த தேவதையின் பக்கம் இருந்து வேறு பக்கம் திருப்ப முடியவில்லை அவனால்,

நீரஜாவும் அவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் அடுத்த நொடியே அதிர்ச்சியானாள். “இந்த சின்சியர் சிகாமணி இங்க என்ன பண்றான்… விட்டா ராத்திரி கூட ஆஃபிஸ்லயே இருப்பான் என்னோட ப்ரண்ட்… அவனோட அம்மா தனியா இருக்காங்களேன்னு பார்க்கிறான்… அப்படின்னு சொல்லிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான் இவளோட அண்ணன்.. இவன் என்னடான்னா இங்க ஜாலியா டீ குடிச்சிக்கிட்டு இருக்கான்…

இவன் இந்நேரம் ஆஃபிஸ்ல இருப்பான்… இப்பவே போய் ஆன்ட்டிய பார்த்துட்டு வரலாம்னு வந்தா… இவன் இங்க இருக்கானே… சரி நிரு என்ன தான் நடக்குதுன்னு பார்க்கலாமே… என்று மனதிற்குள் பேசிக் கொண்டே வந்தவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.

சத்தம் கேட்டு வந்து கதவை திறந்த அம்பிகா நீரஜாவை பார்த்து சந்தோஷப்பட்டார்.

“நிரு வா வா… இப்பயாச்சும் சிங்கப்பூர்ல இருந்து வரணும்னு தோனுச்சே… ஹே ஜெய்குட்டி அத்தை வந்ததும் அவளோட ஒட்டிக்கிட்டீங்களா…” என்று ஜெய்யை வாங்கிக் கொள்ள நீரஜா உள்ளே வந்தாள்.

“என்ன ஆன்ட்டி எப்படி இருக்கீங்க… இப்போ ஹெல்த் எப்படி இருக்கு…”

“இப்போ நல்லா இருக்கேன்மா… உனக்கும் உன்னோட சிங்கப்பூர் டாக்டர்க்கும் தான் நன்றி சொல்லணும்…”

“என்ன ஆன்ட்டி தேங்ஸ்ல்லாம் சொல்லிக்கிட்டு… அவ இங்க சென்னை ஹாஸ்பிட்டல் வரப்போ உங்களை செக் பண்றா… இங்க மெடிசன் கிடைக்குமோ கிடைக்காதோன்னு அங்க இருந்தே கொடுக்குறா..  அதை நான் எடுத்துக்கிட்டு வரேன்… இல்ல நிக்கிய வரவச்சு கொடுக்கிறேன்… இது ஒரு வேலையா… நான் இங்க வந்துட்டாலும் உங்களுக்கு தொடர்ந்து மெடிசன் வர ஏற்பாடு பண்ணிட்டேன் ஆன்ட்டி ” என்று அவள் எடுத்து வந்த மருந்துகளை எடுத்து கொடுத்தாள். ஜெய்யும் இறங்கி விளையாடச் சென்றான்.

“ஆமாம் போனவாரம் கோவில்ல ஜானுவை பார்த்தப்போ கூட நீ வரப் போறேன்னு அவ சொல்லலையே… இன்னிக்கு சஞ்சய் தான் நீரஜா வராம்மான்னு சொன்னான்..”

“சும்மா ஒரு சர்ப்ரைஸ் தான் ஆன்ட்டி.. நேத்து தான் நிக்கிக்கு போன் பண்ணி சொன்னேன்…”

“நீ தனியா அங்க சிங்கப்பூர்ல இருந்து கஷ்டப்படாம திரும்ப வந்தது சந்தோஷம் ம்மா…  இரு உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரேன் நிரு…”

“ஆமாம் ஆன்ட்டி உங்க டீ குடிச்சு எத்தனை நாள் ஆச்சு… உங்க டீ குடிக்கவே வந்தேன்…”

“ம்ம் டீ தரேன்…. அதுக்கு முன்னாடி சஞ்சய் வீட்ல இருக்கான்னு மெது வடை செய்யலாம்னு மாவரைச்சேன்.. சூடா போட்டு எடுத்துக்கிட்டு வரேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு,

“சஞ்சய் இங்க யாரு வந்திருக்காப் பாரு.. நீரஜா வந்திருக்காடா..” என்று மேலே இருக்கும் அவன் அறையை பார்த்து கீழே இருந்து குரல் கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றார் அம்பிகா…

“தோ வரேன்ம்மா…” என்று அவன் குரல் கேட்டது.

“அதான் வரும்போதே பார்த்தானே… அப்பக்கூட கீழே இறங்கி வரானாப் பாரு… எல்லாம் திமிறு”என்று அவள் முனக,

“மேடம் வந்ததும் நான் உடனே போய் பார்க்கணும்… ஆனா அவளை கூப்பிட ஏர்போர்ட்க்கு போனாலும், மேடம் என்கிட்ட பேசமாட்டாங்க… அம்மாவை பார்க்கத் தானே வந்தா.. அம்மாவை மட்டும் பார்த்துட்டு போகட்டும்” என்று சஞ்சய் புலம்பினான்.

அம்பிகா டீயும் வடையும் எடுத்துக் கொண்டு வரும் வரையிலும் அவன் வரவில்லை, பின் திரும்பவும் அம்பிகா குரல் கொடுக்க அவன் இறங்கி வந்தான். வந்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவள் எதிரில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.

“நீரஜாவும் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு,  அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜெய்யை ” ஜெய்க்குட்டி வா வடை சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.

“வடை ஆறினதும் அவனுக்கு கொடுக்கலாம்மா… இப்போ நீ சாப்பிடு..” என்றார் அம்பிகா,

அவள் எடுத்து சாப்பிட, சஞ்சயும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு வடையை எடுத்து இரண்டாக பிட்டு ஆற வைத்து கொண்டே “ஏம்மா நிரு சிங்கப்பூர்ல தான் வேலைப் பார்க்க போறதா சொன்ன… இப்போ திடிரென்று வந்துட்ட… இனி என்னப் பண்ண போற…” என்று அம்பிகா கேட்டார்.

“எதுக்கு அங்க தனியா இருந்து வொர்க் பண்ணணும்னு தோனுச்சு ஆன்ட்டி… அதான் உடனே வந்துட்டேன்… இனி நம்ம ஆஃபிஸ்க்கு போலாம்னு இருக்கேன் ஆன்ட்டி..” என்று நீரஜா சொல்ல,

“ஓ இனி அப்போ தேவதையின் தரிசனம் தினம் கிடைக்கும்…” என்று சஞ்சய் மனதில் நினைத்து சந்தோஷப்பட்டான்.

“ஆன்ட்டி அப்புறம் நான் லாஸ்ட் டைம் வந்தப்போ ஊருக்குப் போகணும்னு சொன்னீங்களே.. போய்ட்டு வந்தீங்களா..??” என்று நீரஜா கேட்க,

ஆறிய வடையை மிளகாய் எல்லாம் இருக்கா என்று பார்த்து அம்பிகா ஜெய்யிடம் கொடுக்க அதை அவன் வாங்கிக் கொண்டு திரும்ப விளையாட செல்ல, “போய்ட்டு வந்தேம்மா நிரு… ஆனால் ஏன் போனோம்னு இருக்கு…” என்றார்.

“ஏன் ஆன்ட்டி என்னாச்சு… “

“போன இடத்துல என் தம்பி பொண்ணை பொண்ணு கேட்டு ஒரு வரன் வந்துச்சு… என் தம்பி என்ன சொல்றான்னா.. சொந்தத்துல மாப்பிள்ளை இருக்க ஏன்க்கா அசல்ல கொடுக்கணும்… உன் வீட்டு மருமகளா என் பொண்ணு வரனும்னு ஆசைப்பட்றேன்.. நீ என்னக்கா சொல்றன்னு கேக்கறான்ம்மா.. நான் என்ன சொல்ல.. சஞ்சய்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேம்மா…

இவன் என்னடான்னா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டான்னு சொல்றான்.. என் தம்பியோ அடிக்கடி போன் போட்டு என்னக்கா முடிவு பண்ணியிருக்கேன்னு கேக்கறான்…” என்று அம்பிகா சொன்ன விஷயத்தை கேட்டு நீரஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

சஞ்சய்க்கோ, “அம்மா ஏன் இப்போ இதெல்லாம் இவக்கிட்ட சொல்றாங்க.. என்று இருந்தது.

“ஓ சார்க்கு கல்யாணத்துக்கு பொண்ணெல்லாம் பார்க்க ஆரம்பிச்சாச்சா… மந்த்ரா, வைஷு இல்லாம இப்போ மாமா பொண்ணு வேறயா… இவனுக்கு சஞ்சய்ன்னு யாரு பேரு வச்சது.. மன்மதன்னு பேரு வச்சிருக்கலாம்..” என்று நீரஜாவின் எண்ண அலைகள் ஓடிக் கொண்டிருக்க,

“ஏம்மா நிரு… இவனுக்கு கல்யாண வயசு வந்தாச்சு… அப்புறம் கூட இவன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்மா… இவன் அப்பாவும் இப்போ இல்ல… நான் தானே பொறுப்பா இருந்து இதெல்லாம் செய்யணும்…

ஊர்ல இருந்தாலாவது சொந்தக்காரங்கக் கூட இருக்கலாம்… இங்க இவன் இல்லாம தனியா இருக்க வேண்டியிருக்கும்மா… எனக்கும் பேரன் பேத்திக் கூடல்லாம் விளையாடணும்னு ஆசை இருக்காதா..?? நீயே கேளும்மா ஏன் இவன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றான்னு…” என்று அம்பிகா சொல்ல, நீரஜாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இவர்களுடைய சண்டைப் பற்றி அம்பிகாவிற்கு தெரியாது, அவள் சிங்கப்பூரிலிருந்து வரும்போதெல்லாம், சஞ்சய் வேலை விஷயமாக ஊருக்குச் சென்றிருப்பான். அப்போது அம்பிகாவை பார்க்க அவள் வந்தால்,  “ஏன்ம்மா நீ வர நேரம் பார்த்து சஞ்சய் ஊருக்கு போயிட்டானே.. நீ வந்திருக்கறத சொன்னேன்… அவன் போன் பண்ணி பேசினானா?” என்று அம்பிகா கேட்பார்.

அவளும், “பேசினோம் ஆன்ட்டி..” என்று  சொல்லி விடுவாள்.  இப்போது அம்பிகாவின் முன்பு சஞ்சயிடம் பேசி தான் ஆக வேண்டுமா என்று இருந்தது அவளுக்கு,

ஏற்கனவே அவளை எப்படி வழிக்கு கொண்டு வரப்போகிறோம் என்று தெரியவில்லை, இதில் அம்மா திருமணம் குறித்து வேறு பேச வேண்டுமா என்று இருந்தது சஞ்சய்க்கு,

அவர்கள் இருவரும் சிந்தனையில் இருக்க, “சஞ்சய் நான் கேட்டா தான் ஒன்னும் சொல்லமாட்டேங்கிற… நிரு கேக்கறதுக்காவது பதில் சொல்லுடா” என்று அம்பிகா சஞ்சயிடம் சொல்லவும்,

இதற்கு மேலேயும் பேசாமல் இருக்க முடியாது என்று நினைத்த நீரஜா, “என்ன பாஸ் அம்மா சொல்றா மாதிரி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே…” என்று கேட்க,

அவனைப் பார்த்து அவள் நேருக்கு நேராக பேசியதில் சஞ்சய் மகிழ்ந்தான். ஆனால் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவன், ” அம்மா நீங்க யார்க்கிட்ட குறை சொன்னாலும் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்… ” என்றான் அம்பிகாவை பார்த்து,

“நானே அனைத்தையும் மறந்து பேசினாலும், இவன் பேசுகிறானா பார்.. எல்லாம் திமிறு..” என்று மனதிற்குள் புலம்பினாள் அவள்,

“சரி ஆன்ட்டி அப்போ நான் கிளம்பறேன்… கொஞ்ச நேரம் ஜெய்யை பார்க்ல விளையாட வச்சு கூட்டிகிட்டு போகணும்…  அதான்…”

“சரிம்மா நீ கிளம்பு… ” என்றதும் இருவரும் ஜெய்யை தேட,

“அவன் கார்டன்க்கு போனான்மா… நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்று சஞ்சய் வெளியே சென்றான்.

அவன் போனதும் ” கவலைப்படாதீங்க ஆன்ட்டி நிக்கிக்கிட்ட சொல்லி பாஸ்கிட்ட கல்யாணம் பத்தி பேசச் சொல்றேன்… சீக்கிரமே உங்கக் கூட சண்டை போட ஒரு ஆள் வந்துருவாங்க… அப்புறம் உங்களுக்கு ஜாலியா டைம் பாஸ் ஆகும்..” என்று அவள் சொல்லவும் அம்பிகாவோ சிரித்தார்.

பின் அம்பிகா சமையலறைக்கு  சென்றதும், நீரஜா சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். என்னத்தான் அம்பிகாக்கு ஆறுதல் சொல்ல சஞ்சயிடம் திருமணம் பற்றி பேசினாலும்,. சஞ்சய்க்கு வேறு பெண்ணோடு திருமணம் நடந்திடுமோ…? என்று  ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.

ஏற்கனவே  மந்த்ரா,  இப்போது வைஷுக்கும் சஞ்சயை திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதோ என்று அவளுக்கு சந்தேகமாக இருக்கிறது. இப்போதோ இவனின் மாமாப் பெண் வேறு.. எப்படி தான் இந்த உம்மானாமூஞ்சியை அனைவருக்கும் பிடிக்குதோ…??  என்று நினைத்தாள், பின் “ஏன் நிரு உனக்கு எப்படி பிடிச்சுதோ அப்படித்தான்… என்று அவள் மனம் கேட்ட கேள்விக்கு அதுவே பதிலும் சொல்லியது.

ஜெய் தோட்டத்தில் தனியாக பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் சென்ற சஞ்சய்,

“டேய் இங்க நீ தனியா விளையாடிக்கிட்டு இருக்கியா.. சமத்துதாண்டா நீ…” என்று சொல்ல,

“ஆமா நா சமத்து…” என்றது அந்த குட்டி,

உடனே ஜெய்யை தூக்கிக் கொண்ட சஞ்சய்  “உன்னைப் பார்த்தாலே எனக்கு பொறாமையா இருக்குடா… உன்னோட அத்தைக்கு நீ தான் ஸ்பெஷல் இல்ல… உன்னை பார்க்க தான் இந்தியாக்கு வர்றா… உன்னோடவே எப்பவும் இருக்கா… உன்னோட அத்தையை மயக்கி வச்சிருக்கடா…” என்று சொல்ல ஜெய்குட்டி சிரித்தான்.

“ஜெய் கண்ணா… இந்த மாமாக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா…” என்று ஜெய்யிடம் கேட்டான் சஞ்சய்,

அந்த குட்டியோ சரி என்று தலையை ஆட்டி, “எனக்கு சாக்கேட் வாங்கி தர்றியா…” என்று கேட்டான்.

“என்னடா லஞ்சமா… உனக்கு சாக்லேட் என்னடா… டாய்ஸே வாங்கித் தரேன்… மாமா சொல்றத செய்வியா..??”

“ம்ம்… டிஷும் டிஷும் கன் வாங்கித் தர்றியா..??”

“ம்ம் கண்டிப்பா… நான் வீட்டுக்கு வரும்போது கன் வாங்கிட்டு வரேன்… அதை வச்சு நீயும் நானும் உங்க அப்பாவை டிஷும் டிஷும்னு சுடலாம் சரியா…”

“ம்ம்.. அப்புறம் நான், அத்த உன்ன டிஷும் டிஷும் சுட்றோம்…”

“அடப்பாவி நீதான் எனக்கு வில்லனா??” என்றவன், அவனை கீழே இறக்கி விட்டுவிட்டு.. ரோஜா செடியில் இருந்து அழகாக பூத்திருந்த அந்த வெள்ளை ரோஜாவை பறித்தான்.

பின் கீழே குனிந்து ஜெய்யிடம்… “ஜெய் கண்ணா இதை உன்னோட அத்தைக் கிட்ட கொடுக்கிறீயா…” என்று கேட்க, சரி என்பது போல் தலையை ஆட்டினான் அவன்,

முள் இருக்கும் இடம் படாதபடி சஞ்சய் அந்த பூவை ஜெய்யிடம் கொடுக்க, அந்த பூவை எடுத்துக் கொண்டு ஜெய் உள்ளே ஓடினான்.

“டேய் பார்த்துடா…” என்று சஞ்சய் பின்னே ஓட, நேராக அந்த பூவை எடுத்துக் கொண்டு போய் ஜெய் நீரஜாவிடம் கொடுத்தான்.

அப்போது சமையலறையில் இருந்து வந்த அம்பிகா, “அடடே நானே உனக்கு ரோஜா பறிச்சுக் கொடுக்கணும்னு நினைச்சேன்மா… அதுக்குள்ள இந்த குட்டி எடுத்துட்டு வந்து கொடுத்துட்டானா… என் செல்லம்…” என்று அம்பிகா குனிந்து ஜெய்யின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தப்படி சொன்னார்.

“ஆமாம்மா ரோஜா வேணும்னு கேட்டான்… நான் பறிச்சுக் கொடுத்தேன்… அதை அவனோட அத்தைக்கு எடுத்துட்டு வந்து கொடுத்திருக்கான்” என்று சஞ்சய் சொன்னதும் ஜெய் குட்டி அவனை திரும்பி பார்த்தான்.

நீரஜாவும் சஞ்சயை பார்த்துவிட்டு, பின் ஜெய்யிடம் திரும்பி,  “ஜெய் குட்டி அத்தைக்கு பூ எடுத்துட்டு வந்தீங்களா… என் செல்லம்..” என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

“போனாப் போகுதுன்னு பேசினா திரும்பி பேசல… இதுல வைட் ரோஸ் கொடுத்து சமாதானமா…?? இதுக்கு ஒன்னும் குறச்சலில்லை…” என்று மனதில் நினைத்தவள், அந்த ரோஜாவை கைப்பையில் வைக்கப் போனாள்.

அவள் பூவை தலையில் வைப்பாள் என்று ஆசையோடு பார்த்திருந்த சஞ்சய்க்கு ஏமாற்றமாக போக,

“எதுக்கும்மா அதை பேக்ல வைக்கிற… தலையில் வச்சுக்க…” என்று அம்பிகா சொன்னார்.

“இருக்கட்டும் ஆன்ட்டி… நான் அப்புறம் வச்சிக்கிறேன்..”

“எப்போ நைட் தூங்கும் போதா… இப்பவே வச்சுக்க… இங்கப்பாரு இன்னைக்கு வெள்ளை கலர்ல ட்ரெஸ் வேற போட்டுக்கிட்டு வந்திருக்க… இதுக்கு ரோஜா மேட்சா இருக்கும்…” என்று சொல்லி காதோரோமாக அந்த ரோஜாவை அம்பிகா வைத்துவிட்டார். அதைப்பார்த்து சஞ்சய் மனதிற்குள் சந்தோஷப்பட்டான்.

“அப்போ நான் வரேன் ஆன்ட்டி..” என்றவள், சஞ்சயைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு, “இது ஆன்ட்டிக்காக மட்டும் தாண்டா.. நான் பேசிக் கூட நீ பேசல இல்ல… இனி நீயா பேசற வரைக்கும் நான் பேசறேனா பாரு…” என்று மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பினாள்.

“எத்தனை முறை போன் பண்ணியிருப்பேன்… அப்பல்லாம் பேசாம என்னை சித்ரவதை செஞ்சல்ல… இப்போ நீ பேசினதும் நான் பேசணுமா…” என்று நினைத்து அவன் அறைக்கு சென்ற சஞ்சய் மறுநாளே அவளிடம் பேசத் தானே போகிறான்.

                மௌனம் தொடரும்..