KPEM 3

மௌனம் 3

வீட்டிற்குள் வந்ததும் வைஷ்ணவி கைப்பையை தூக்கிப் போட்டுவிட்டு கோபமாக அமர்ந்தாள். அவளின் கோபத்தை பற்றி தெரியாத அவளின் அன்னை சந்திரா நீரஜாவைப் பற்றி விசாரித்தார்.

“வைஷு நீரஜா வந்துட்டாளா..?? எப்படி இருக்கா?? நல்லா தானே இருக்கா..?? கொஞ்சமாவது குண்டானாளா..?? இல்லை அப்படியே ஒல்லியாத்தான் இருக்காளா..??” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

வைஷு கோபத்தோடு, “அம்மா போதும் கொஞ்சம் நிறுத்திறியா… உன் அண்ணன் பொண்ணு நல்லாத்தான் இருக்கா.. அவளைப் பார்த்து இன்னும் ஒரு வருஷம் கூட முடியல… அதுக்குள்ள ரொம்ப வருஷம் பார்க்காத மாதிரி உருகுற… இதுல உன்னோட பெரிய பொண்ணு வேற உன்னைவிட ரொம்ப உருகுறா…” என்று கத்தினாள்.

“ஏண்டி இப்போ இப்படி கத்துற… பாவம் அவளே இப்பத்தான் வீட்டுக்கு வரணும்னு முடிவு பண்ணி வந்திருக்கா… அக்கறையா விசாரிச்சா இப்படி கோபப்பட்ற…” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே நீரஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“நிரு தான் போன் பண்றா…” என்று வைஷுவிடம் சொல்லிக் கொண்டே “ஹலோ நிரு.. அத்தை பேசறேண்டா…” என்று நீரஜாவிடம் பேசினார்.

“அத்தை எப்படி இருக்கீங்க… மாமா நல்லா இருக்காரா…”

“எங்களுக்கு என்னம்மா… நாங்க நல்லாதான் இருக்கோம்… ஆமாம் உன்னோட பிரயாணம் எப்படி இருந்துச்சு..?? நீ எப்படி இருக்க…?? அதை சொல்லு முதல்ல… இப்போத்தான் வைஷு வீட்டுக்கு வந்தா… அவக்கிட்ட உன்னைப்பத்தி தான் கேட்டுக்கிட்டு இருந்தேன்…”

“எனக்கென்ன அத்தை நான் நல்லாத்தான் இருக்கேன்… இன்னிக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வந்து உங்களை பார்க்கிறேன் அத்தை…”

“அது வந்து நிரு… இன்னிக்கு தெரிஞ்சவங்க வீட்டு ரிஸப்ஷன்க்கு நானும் உங்க மாமாவும் போகலாம்னு இருக்கோம்… அதனால தான் இன்னிக்கு உன்னை பார்க்க கூட வரல…”

“அப்படியா இருக்கட்டும் அத்தை… நான் நாளைக்கு உங்களை வந்து பார்க்கிறேன்… மாமாவை கேட்டதா சொல்லுங்க…” என்று போனை வைத்துவிட்டாள்.

“பார்த்தீயா என்னமோ நிருவுக்காக உருகிறேன்னு சொன்ன… ஊர்ல இருந்து வந்ததும் எவ்வளவு அக்கறையா விசாரிக்கிறா பாரு… இப்ப மட்டுமல்ல போன்லயும் என்கூட அடிக்கடி பேசுவா… இன்னிக்கே என்ன பார்க்க வரேன்னு சொன்னா… நான் தான் ரிஸப்ஷன்க்கு போகறதால வரவேண்டாம்னு சொல்லிட்டேன்…

நிரு எல்லார்க்கிட்டேயும் அன்பா இருக்கறவ… அவக்கூட நல்லபடியா பழகுனா… உனக்கும் அவளை பிடிக்கும்… சரியா…” என்று கொஞ்சம் அறிவுரை வழங்கிவிட்டு சந்திரா சென்றுவிட்டார்

“எல்லாருக்கும் வசியம் வச்சிருக்காளா என்ன..?? எல்லாருக்கும் இவளை பிடிச்சிடுதே..” என்று வைஷு மனதுக்குள் புலம்பினாள்.

என்னவோ வைஷ்ணவிக்கு ஆரம்பத்தில் இருந்தே நீரஜாவை பிடிப்பதில்லை, சிறு வயதில் நீரஜா விடுமுறைக்கு சந்திரா வீட்டிற்கு வரும்போதெல்லாம் தன் அம்மா நீரஜாவையே கவனிப்பதாக வைஷு நினைப்பாள். தன் அம்மாவிடம் கேட்டதற்கு நிருவுக்கு அப்பா அம்மா இல்லை, அதனால் அவள் இங்கு இருக்கும் வரை நான் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.  இதில் ஜானவியும் நிகேதன், நீரஜாவுடன் தான் இருப்பாள். வைஷ்ணவி அனைவரையும் விட சிறியவள்,  நீரஜாவை விட வைஷு ஒரு வயது சிறியவள்.

அதனால் என்னவோ அனைவரும் நீரஜாவையே கவனிப்பதால் வைஷுவிற்கு அவளை பிடிக்காது. ஆனால் வைஷுவின் அப்பாவிற்கு வைஷு தான் செல்லம், ஆனால் படிப்பு விஷயத்தில் எப்பவும் நீரஜாவை தான் அவர் பாராட்டுவார். வைஷு நீயும் நீரஜா மாதிரி நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லும் போது அவளுக்கு கோபமாக வரும், அதனால் விடுமுறைக்கு நீரஜா வீட்டுக்கு வரும்போதெல்லாம் வைஷ்ணவிக்கு எரிச்சலாக இருக்கும்.

அதே போல் முதன்முதலில் நிகேதனுடன் சஞ்சய் சென்னைக்கு வரும்போது வைஷ்ணவி தான் அவனை முதலில் பார்த்தாள். அவள் அப்போது விடுதியில் இருந்து செமஸ்டர் விடுமுறைக்கு வந்திருந்தாள். அப்போதே அவளுக்கு சஞ்சயை பிடித்திருந்தது. அப்போது நீரஜாவுக்கும் படிப்பு முடிந்திருந்தது, ஆனால் தோழிகளோடு விடுமுறையை கழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி அவள் அப்போது சென்னைக்கு வரவில்லை.

சஞ்சயை நிகேதன் வீட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் வைஷ்ணவி சஞ்சயிடம் பேசுவதற்கு முயற்சி செய்வாள்.  ஆனால் சஞ்சய் சரியாக பேசமாட்டான். இப்படியே அவள் விடுமுறை முடிந்து திரும்பவும் விடுதிக்கு போக வேண்டியதாக இருந்தது. அப்போது தான் நீரஜா படிப்பு முடிந்து சென்னைக்கு வந்தாள். அதன்பிறகு வைஷ்ணவி சென்னைக்கு வரும்போதெல்லாம் சஞ்சய் நீரஜாவை அடிக்கடி ஒன்றாக பார்த்தாள். வைஷ்ணவியிடம் பேசக்கூட யோசித்த சஞ்சய், நீரஜாவிடம் சிரித்து சிரித்து பேசுவதை பார்க்கும் போது அவளுக்கு கஷ்டமா இருக்கும்,

ஆனால் இரண்டு பேரும் காதலிப்பதாக வைஷ்ணவி நினைத்தாள். அதனால் அவள் அமைதியாகவே இருந்தாள். இதில் அவள் படிப்பு முடிந்து சென்னைக்கு வரும்போது தான் நிகேதன் ஜானவி கல்யாணமும் நடந்தது. அப்போது சஞ்சயும் நீரஜாவும் பேசிக் கொள்ளவே இல்லை, அதன்பிறகு கல்யாணம் முடிந்ததும் நீரஜா சிங்கப்பூர் போக முடிவு செய்தாள்.  நிகேதனும் ஜானவியும் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவேயில்லை.

நீரஜா சிங்கப்பூர் போனபோது தான் சஞ்சயும் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தான். அவர்கள் இருவருக்குமிடையே என்ன பிரச்சனை என்று யாருக்கும் தெரியவில்லை, வைஷ்ணவியோ இருவரும் சண்டைப்போட்டு ஒருவரையொருவர் பிரிந்திருக்க வேண்டும், இல்லை ஒருவர் காதலை சொல்லி மற்றவர் அதை நிராகரித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

நீரஜா சிங்கப்பூர் சென்றதும் சஞ்சயும் வைஷ்ணவியிடம் நன்றாக பேசினான். திரும்பவும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். இதில் நீரஜா சிங்கப்பூரிலேயே இருக்கப் போவதாக சொன்னாள்… அவள் வரவில்லை என்றால் சஞ்சய் தனக்கு கிடைத்துவிடுவான் என்று வைஷ்ணவி கணக்கு போட்டாள்.

ஆனால் இப்போது திடிரென்று நீரஜா வந்திருக்கிறாள். ஆனால் அதிலும் ஒரு நல்லது அவள் வெற்றியோடு வந்திருப்பது, சஞ்சயை வெறுப்பேற்றுவதற்காக நீரஜாவும் வெற்றியும் காதலிப்பதாக சொன்னாலும், நிஜமாஜகவே அப்படி நடக்க வேண்டும்.. சஞ்சய் தனக்கு கிடைக்க வேண்டும் என்று வைஷ்ணவி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

அன்றைய மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்தான் சஞ்சய்.. பொதுவாகவே வியாபார திறமை மிக்கவன் அவன், இதில் இந்த மூன்று வருடம் நீரஜாவின் நினைவிலிருந்து தன்னை மீட்டெடுக்க அவன் இன்னும் வியாபாரத்தில் தன்னை தீவிரப்படுத்திக் கொண்டான். இப்போதும் அதே தீவிரத்தோடு மீட்டிங்கை முடித்தான். இது அவர்களின் புது தயாரிப்பை பற்றிய மீட்டிங்,

மீட்டிங் முடிந்து அவன் அறைக்கு வந்தவனை மீண்டும் சூழ்ந்து கொண்டது நீரஜாவின் நினைவுகள். அவளைப் பார்க்க ஏர்போர்ட்டிற்கே சென்றவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே அவள், அன்று தான் செய்தது தவறு தான், ஆனால் அன்று நீரஜா பேசியதும் தவறு தானே.. ஆனாலும் அவள் மேலிருந்த கோபத்தையெல்லாம் மறந்து அவளை பார்க்கச் சென்றான்.

ஆனால் அவள் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை, இதில்  வெற்றியை வேறு அழைத்து வந்திருக்கிறாள். அவன் வெறும் நண்பனாக தான் இருப்பான் என்று மனம் சொன்னாலும், அவள் மனதில் தன்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாள் என்பது தெரியாததால், வெற்றிக்கும் அவளுக்கும் காதல் அப்படி எதுவும் இருக்கக் கூடாது என்றும் சஞ்சயின் மனம் யோசித்தது.

அவன் சிந்தனையை அறைக்குள் வந்த நிகேதன் கலைத்தான்… “டேய் மாப்ள மீட்டிங் சக்ஸஸா முடிஞ்சிடுச்சுடா… இனி அதுக்கான வேலையை உடனே பார்க்க வேண்டியது தான்…”

“ம்ம் ஆரம்பிச்சுடலாம்…”

“டேய் என்னடா.. நான் எவ்வளவு ஹேப்பியா பேசிக்கிட்டு இருக்கேன்… நீ சுரத்தே இல்லாம பதில் சொல்ற…”

“ஒன்னுமில்ல கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்கு மச்சான்.. வேற ஒன்னும் இல்ல… சரி நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறேன்… நீ ஆபிஸை பார்த்துக்க…”

“சரி மாப்ள அதிசயமா நீயே வீட்டுக்குப் போகணும்னு சொல்ற… போய் ரெஸ்ட் எடு… சரி போகறதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லிட்டு போ”

“என்னடா..?”

“ஏண்டா நிருவை ரிஸீவ் பண்ண ஏர்போர்ட் வரைக்கும் வந்தீயே… அவக்கிட்ட ஏண்டா ஒரு வார்த்தை கூட பேசவேயில்ல…”

“அதை உன் தங்கச்சிக்கிட்ட கேக்க வேண்டியது தானே…”

“கேட்டேனே.. நீ சொன்ன பதிலை தான் அவளும் சொன்னா… ஆமா அப்படி என்ன சண்டை டா உங்களுக்குள்ளே…”

“அதை..”

“ம்ம் ஸ்டாப்… அதையும் உன்னோட தங்கச்சிக்கிட்ட கேளுன்னு சொல்ல தானே வர… அவக்கிட்ட கேட்டா உன் ப்ரண்ட் கிட்டயே கேளுன்னு சொல்வா.. ஆகமொத்தம் ரெண்டுபேரும் சொல்லப் போறதில்ல.. ஆளை விடுங்கடா சாமி….” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

அதற்கு சஞ்சய் சிரித்துக் கொண்டே… “டேய் மச்சான்.. உன்னோட தங்கச்சி என்மேல மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்கா… இதுல அவ இந்தியா வந்தப்பல்லாம் நான் ஊர்ல இல்லாததால நான் செஞ்ச தப்புக்கு தான் அவளை பார்க்காம இருக்கறதா நினைச்சுக்க கூடாதுல்ல… அதான் அவ வரப் போறா என்றதும் நான் ஏர்போர்ட்க்கு வந்தேன்… மத்தப்படி நான் எந்த தப்பும் செய்யல… அதனால உன்னோட தங்கச்சி தான் என்கிட்ட பர்ஸ்ட் பேசணும்… இதை நான் சொன்னதா உன்னோட தங்கச்சிக்கிட்ட சொல்லு… நான் வீட்டுக்கு கிளம்பறேன் பை..”  என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

“ஒருவேளை நவி சொல்றா மாதிரி ரெண்டுபேரும் லவ் தான் பண்றாங்களோ… அப்படி என்ன தான் நடந்திருக்கும் இவங்களுக்குள்ள..?? கொஞ்ச நாள் கவனிப்போம் ரெண்டுபேரும் என்ன தான் செய்றாங்கன்னு…” என்று நிகேதன் யோசித்தான்.

ஜெய்க்குட்டியோடு சிறிது நேரம் உறங்கிய நீரஜா குளித்து முடித்து  வெள்ளை நிற ஃபுல் சுடிதாரில் தயாராகி கொண்டிருந்தாள். பொதுவாக அவள் வழக்கமாக உடுத்துவது டாப், ஜீன்ஸ், லெகிங்ஸ், ஃபுல் ஸ்கர்ட் அது போன்ற உடைகள் தான், சுடிதாரெல்லாம் ஏதாவது நிகழ்வுக்கு தான், புடவை என்ற ஒன்றின் பக்கம் போகவே மாட்டாள். இப்போது அவள் சுடிதார் போட்டதே அம்பிகா ஆன்டிக்காக, அவர்கள் சஞ்சயின் அம்மா… அவர்களை பார்க்க தான் இப்போது அவள் தயாராகி கொண்டிருக்கிறாள்.

அவர்களுக்கு புடவை, சுடிதார் போட்டால் தான் பிடிக்கும், அதற்காக மற்ற உடைகள் போட்டால் ஏதாவது சொல்வார்கள் என்று இல்லை, இருந்தாலும் ஆபாசாமாக சில பேர் உடுத்திக் கொண்டு போவதை பார்த்து முகத்தை சுளிப்பார். அவளும் பொதுவாக அப்படி அணிவதில்லை, இருந்தாலும் இப்போது அடிக்கடி சுடிதார் போடவும் பழகிக் கொண்டாள். இதெல்லாம் சஞ்சய்க்காக என்று இல்லை, அவளுக்கு அம்பிகா ஆன்டியை மிகவும் பிடிக்கும், அதனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக் கொள்வாள்.

சிறு வயதிலேயே அம்மாவை இழந்த அவளுக்கு, தன்னிடம் பாசமாக பழகுபவர்களை பிடித்துவிடும். சந்திரா அத்தை, ஜானவி போலவே அம்பிகா ஆன்டியும் அவளிடம் பாசமாக பழகுவார்கள்.

நீரஜா தயாராகிக் கொண்டிருக்க, அவளுக்கு டீ கொடுக்க வந்தாள் ஜானவி. இன்று தான் வந்தாள் அதற்குள் எங்கோ செல்ல தயாராகி கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டே அவள் டீயை நீரஜாவிடம் கொடுக்க,

“உன்னோட மொக்கை டீயை எடுத்துக்கிட்டு வந்துட்டியா… நான் அம்பிகா ஆன்டியை பார்க்கப் போறேன்… அவங்க எனக்கு இஞ்சி, ஏலக்காய் எல்லாம் போட்டு மசாலா டீ கொடுப்பாங்க… அதனால இந்த டீயை நீயே குடி” என்று நீரஜா சொன்னாள்.

“அடிப்பாவி… தலைவலிக்கிறா மாதிரி இருக்கு ஜானு… உன் கையால ஒரு காபி கொடு… தலை வலியெல்லாம் பறந்துடும்னு சொல்வல்ல… அப்போ வச்சிக்கிறேன்” என்று ஜானு கோபப்பட்டாள்.

“அய்யோ கோச்சுக்காத ஜானு… நீ காபி போட்றதுல எக்ஸ்பர்ட்… ஆன்ட்டி டீ போட்றதுல எக்ஸ்பர்ட்… அதுக்கு தான் அப்படி சொன்னேன்..” என்று அவளை அணைத்து சமாதானப்படுத்தினாள்.

“ம்ம்.. சும்மா சமாளிக்காத.. ஆமாம் என்ன வந்ததும் அம்பிகா அம்மாவை பார்க்க கிளம்பிட்ட… அவ்வளவு முக்கியமா அவங்களை இன்னிக்கே பார்க்கணுமா என்ன..??” என்று கண்ணடித்து கிண்டலாக கேட்டாள்.

“ஏன் இன்னிக்கு போய் பார்த்தா என்ன..??”

“இல்லை அம்மா அப்பாவை கூட பார்க்காம முதல்ல  அவங்களை பார்க்கணும்னு கிளம்பிட்டியே அதான் கேட்டேன்…”

“எத்தனை தடவை சொல்றது உன்னோட கற்பனை குதிரையை ரொம்ப ஓட விடாதேன்னு… அத்தைக்கு போன் பண்ணேன்… அத்தையும் மாமாவும் வெளியப் போறாங்களாம்… அதுமட்டுமில்லாம ஆன்ட்டிக்கு மெடிசன் நான் இந்தியாக்கு வரும்போதே வாங்கிட்டு வரேன்னு அவங்கக்கிட்ட சொல்லியிருந்தேன்… அதை சாவகாசமாவா எடுத்துக்கிட்டு போவாங்க… அதான் இன்னிக்கே ஆன்ட்டியை பார்க்கப் போறேன்… போதுமா விளக்கம்..”

“ஓ அப்படியா… சரி சரி போய்ட்டு வா..”

“சரி வெற்றி என்ன செய்றாரு..?”

“அவர் நல்லா தூங்கறாரு…”

“சரி வெற்றி எழுந்தா… நான் வெளியப் போயிருக்கறதா சொல்லு… ஆமாம் ஜெய் எங்க…??”

“இப்போ தான் அவனுக்கு பால் கொடுத்து ப்ரஷ் ஆக்கிவிட்டேன்..”

“அப்ப ஓகே… நான் ஜெய்யை கூட கூட்டிட்டு போறேன்… அப்படியே வரும்போது அவனை பார்க்கிற்கு கூட்டிட்டு போய் விளையாட வச்சு கூட்டிட்டு வரேன்..”

“நிரு கார்ல தானே போற…?”

“ம்ம் ஆமா… ஒகே பை” என்று கூறிவிட்டு ஜெய்யை கூட்டிக் கொண்டு கிளம்பினாள்.

தனது அறையின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே தனது அன்னை கொடுத்த மசாலா டீயை பருகிக் கொண்டிருந்தான் சஞ்சய், “என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட என்று தன் அன்னைக் கேட்டதற்கு, நிகேதனிடம் சொன்ன தலைவலி என்ற பொய்யையே தனது அன்னையிடமும் சொல்ல,  சூடாக டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். உண்மையாக தலைவலி இல்லையென்றாலும் இப்போது மழை தூறிக் கொண்டிருக்க அதற்கு அந்த சூடான டீ இதமாக இருந்தது.

அவனது அறையின் பால்கனி வீட்டின் வெளிக் கேட்டை பார்த்தாற் போல் இருக்கும், அந்த கேட்டிலிருந்து வீட்டிற்கு வர கொஞ்சம் நடந்து வர வேண்டியிருக்கும், இரண்டு பக்கம் தோட்டமும் நடுவில் நடைபாதையும் அமைந்திருக்கும், அந்த தோட்டத்தை தான் சஞ்சய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும், இப்போதும் அவன் நினைவுகளை நீரஜாவே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.  அவன் தான் முதலில் பேச வேண்டும் என்று அவள் சொன்னாளாமே, அவர்களுக்குள் நடந்த பிரச்சினைக்கு பிறகு நிகேதன் திருமணம் முடிந்ததும்,  அவன் வெளியூர் சென்றிருக்க, நீரஜா சிங்கப்பூர் போகப் போகிறாள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தான் அவன்,

அவனுக்கும் அவள் மீது கோபம் இருந்தாலும், எத்தனை முறை அலைபேசியில் அழைத்திருப்பான். ஒரு தடவையாவது அவன் அழைப்பை ஏற்றாளா அவள், அதன்பிறகு அவன் அழைப்பதை விட்டுவிட்டான். பின் ஜானவியின் வளைகாப்பிற்கு வரமுடியுமா என்று தெரியவில்லை என்று அவள் சொன்ன போது அவனால் தான் அவள் வர மறுக்கிறாளோ என்று அப்போதும் அவன் வெளியூருக்குச் சென்றான். அவளும் வளைகாப்புக்கு வந்து போனாள். இப்போது என்னவென்றால் அவன் பேசவில்லை என்று குறைப்படுகிறாளாம்,

அவளை பார்த்ததிலிருந்து வேதனையாக இருந்த மனதிற்கு தோட்டத்தில் பூத்திருந்த வெள்ளை ரோஜாவை பார்க்கும் போது இதமாக இருந்தது.

தன் அன்னையை சென்னைக்கு அழைத்து வருவதற்கு முன் அவர்கள் வசிக்க போகும் வீட்டில் தோட்டமெல்லாம் இருக்க வேண்டும் என்று தேடி தேடி இந்த வீட்டை வாங்கினான். அப்பா இறந்த பின் ஊரில் அவர்கள் பொழுதுபோக்கே தோட்டத்தை பராமரிப்பது தான், அந்த அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு தோட்டத்துடன் இந்த வீடு இருக்கவே அதை வாங்கினான்.

ஆனால் வேலை அதிகம் இருக்கவே அன்னைக்கு துணையாக தோட்டத்தை பராமரிக்க அவனால் முடியவில்லை. புதிதாக செடிகள் வாங்கவும் இல்லை, அவர்களுக்கு இந்த ஊர் புதிது என்பதால் அவர்களும் அமைதியாக இருந்தார்கள்.

அப்போது தான் நீரஜா வந்தாள். முதலில் பார்த்தவுடனே அவன் அன்னையுடன் அவள் ஒட்டிக் கொண்டாள். அவளுக்கும் தோட்டக் கலையில் ஈடுபாடு உண்டு, ஒருநாள் அவன் அன்னையோடு வெளியில் சென்றவள், நான்கைந்து ரோஜா செடிகளை வாங்கிக் கொண்டு வந்தாள்.

அன்று அவன் வீட்டில் தான் இருந்தான். அவர்களுக்கு உதவுவதற்காக அவனும் தோட்டத்திற்கு சென்றான். அவன் பள்ளம் தோண்டிக் கொடுக்க, நீரஜா கையாலேயே ரோஜாச் செடிகளை நடச் சொன்னார் அம்பிகா. அவள் பேசிக் கொண்டே அந்த செடிகளை நட்டாள்.

“ஆன்ட்டி எனக்கு ரோஸ்ன்னா ரொம்ப பிடிக்கும், அதுவும் வைட் ரோஸ்ன்னா சான்ஸே இல்லை… வைட் மை ஃபேவரிட் கலர்… இந்த செடியில பூ பூக்க ஆரம்பிச்சதும் ஃபர்ஸ்ட் பூ சாமிக்கு செகண்ட் எனக்கு… வைட் ரோஸ்ன்னு இல்லை எந்த கலர் ரோஸ் பூத்தாலும் எனக்கு போன் பண்ணுங்க… நான் வந்து எடுத்துக்கறேன்… என்ன ஆன்ட்டி ஓகே வா..??”

“என்னம்மா உனக்கில்லாததா.. நீ எப்போ வேணாலும் வந்து எடுத்துக்கலாம்…”

“தேங்ஸ் ஆன்ட்டி… அப்படி என்னால வர முடியலைன்னா என்ன… சும்மா பந்தாவா ஆபிஸ் போய்ட்டு வரும் என்னோட அண்ணனும் உங்க பையனும் இருக்காங்களே… அவங்களை போஸ்ட் மேன் ஆக்கிடலாம்… என்ன சரியா..??” என்று கேட்க அம்பிகாவும் “ஆக்கிட்டா போச்சு..” என்று சிரித்தார்.

“என்ன பாஸ் டீல் ஓகே வா..” என்று கைவிரல்களை மடித்து கட்டை விரலை மட்டும் உயர்த்திக் அவனை பார்த்து அவள் கேட்க, அவனும் அதே போல் செய்து சிரித்துக் கொண்டே ஓகே என்றான்.

ஆனால் அந்த செடிகள் பூக்க ஆரம்பித்த போது அவள் இங்கு இல்லை. அம்பிகாவும் பூக்கள் பூக்கும் போதெல்லாம் நீரஜாவை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

இப்படி அந்த வெள்ளை ரோஜாவை பார்த்ததும் அவனின் தேவதையோடு இருந்த சுகமான நினைவுகளோடு அவன் பால்கனியில் நின்றிருக்க, வெள்ளை சுடிதாரில் உண்மையான தேவதை போல கேட்டை திறந்துக் கொண்டு அவன் தேவதை உள்ளே வர, தான் காண்பது கனவா என்று சஞ்சய் குழம்பினான்.

மௌனம் தொடரும்..