KPEM 21
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மௌனம் 21
ஜன்னல் கம்பிகளைப் பிடித்தப்படி வெளியில் வெறித்துப் பார்த்துக் கொண்டு நீரஜா தன் அறையில் நின்றிருந்தாள். இன்னும் சில மணி நேரங்களில் சஞ்சய்க்கும் அவனுடைய மாமன் மகளுக்கும் நிச்சயதார்த்தம், சஞ்சய் சத்தியம் செய்து கொடுத்ததும், அம்பிகா உடனே தன் தம்பியிடம் பேசி ஒரு வாரத்தில் நிச்சயத்திற்கு தேதியும் குறித்து, இதோ அந்த நாளும் வந்துவிட்டது. ஆனால் மனதளவில் நீரஜா மிகவும் உடைந்துவிட்டாள். இருந்தும் இத்தனை நாள் அதனால் தனக்கு எந்த பிரச்சனையுமில்லை என்பது போல் காட்டிக் கொள்ளவே அவள் தனக்குள் போராட வேண்டியிருந்தது. இதில் இன்று சஞ்சயுடைய நிச்சயதார்த்தில் அவளால் எப்படி கலந்துக் கொள்ள முடியும்? அவன் இன்னொரு பெண்ணின் கையில் மோதிரம் அணிவிப்பதை இவளால் நேருக்கு நேராய் பார்த்திட முடியுமா..??
கதவு திறக்கும் ஓசைக் கேட்டு அவள் திரும்பி பார்க்க, ஜானவி உள்ளே வந்தாள்.
“என்ன நிரு… இன்னும் நீ கிளம்பள…?? நாங்கல்லாம் ரெடியாயிட்டோம்… தனு நீ ரெடியாயிட்டியான்னு பார்க்கச் சொன்னாரு… அதான் வந்தேன்…”
“ஈவ்னிங் தானே எங்கேஜ்மென்ட்… இப்போ மணி 3 தானே ஆகுது… அதுக்குள்ள போகணுமா..?? இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பளாமே ஜானு…”
“சஞ்சயோட எங்கேஜ்மென்ட்க்கு நாம கெஸ்ட் மாதிரி போகறதா… சீக்கிரம் போகணும்னு தனு தான் சொன்னாரு… அதான் சீக்கிரம் கிளம்பியாச்சு… சரி நீயும் சீக்கிரம் ரெடியாகு… போகலாம்…” என்று ஜானவி சொன்னதற்கு, சுரத்தே இல்லாமல், ம்ம் என்று சொன்னாள் அவள்,
சிறிது நேரம் நீரஜாவையே உற்று பார்த்த ஜானவியோ, அவளை நேருக்கு நேராக பார்த்து, “நிரு… இப்பவும் உனக்கு டைம் இருக்கு… இப்பயாச்சும் உன்னோட மனசுல இருக்கறத சொல்லு… நீ சஞ்சயை நேரா பார்த்து லவ்வை சொல்ல வேண்டாம்… என்கிட்ட சொல்லு, தனுக்கிட்ட சொல்லி, சஞ்சய்க்கிட்ட பேசச் சொல்றேன்… என்ன இப்பயாச்சும் மனசுல இருக்கறதை சொல்றியா..??” என்றுக் கேட்டாள்.
“நான் எத்தனை முறை உன்கிட்ட சொல்றது ஜானு… அப்படியெல்லாம் என்னோட மனசுல ஒன்னுமில்ல…” என்று நீரஜா மறுத்ததும், ஜானவிக்கு கோபம் வந்தது.
“அழுத்தம்… ரொம்ப அழுத்தம்… இருந்தாலும் இவ்வளவு அழுத்தம் இருக்கக் கூடாது நிரு… உன்னோட மனசுக்குள்ளேயே எல்லாம் போட்டு புழுங்கிக்கிட்டு இருக்கணும்னு நீ நினைச்சா… நான் என்ன பண்ண முடியும்..??
இன்னைக்கு சஞ்சய்க்கு நிச்சயதார்த்தம், ஒரு மாசத்துல கல்யாணம்னு அம்பிகா அம்மா முடிவுப் பண்ணியிருக்காங்க… அவங்க நினைச்ச மாதிரி சஞ்சய்க்கு கல்யாணம் நடக்கட்டும்…. நீ இப்படி ரூம்ல உக்கார்ந்து வருத்தப்பட்டுக்கிட்டு இரு… இது நடக்கணும்னு தானே நீ விரும்புற… அப்படியே நடக்கட்டும்..” என்றாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே நிகேதன் ஜெய்யை தூக்கிக் கொண்டு அங்கு வந்தான்.
“என்ன நிரும்மா ரெடியா..??” என்றுக் கேட்டான்.
“இன்னும் இல்ல நிக்கி… நீங்க முன்னாடி போங்க… நான் கொஞ்ச நேரத்துல ரெடியாகி வந்துட்றேன்..” என்றாள் அவள்,
“இல்ல, நீ ரெடியானதும் எல்லோரும் சேர்ந்து ஒன்னாவே போகலாம்…” என்று ஜானவி சொன்னதற்கு,
“நிரு சொன்ன மாதிரி முதல்ல நாம போவோம் நவி… நிரு பின்னாடி வரட்டும்..” என்று நிகேதன் சொன்னான்.
“நான் அத்தக் கூட வருவ..” என்று ஜெய் உடனே நீரஜாவிடம் தாவினான்.
“ஜெய்க்குட்டி… அத்தை இன்னும் கிளம்பளம்மா… நீங்க அம்மா, அப்பா கூட போவீங்களாம்… அத்தை பின்னாடியே வருவேனாம்… வரும்போது உங்களுக்கு சாக்லேட் வாங்கிட்டு வருவேன்… அங்கேயும் உங்களுக்கு ஐஸ்கீரிமெல்லாம் தருவாங்க… சரியா..??” என்று அவள் சமாதானம் சொன்னதும், சரி என்று தலையாட்டியவன், உடனே தன் தந்தையிடம் தாவினான்.
ஜானவிக்கு கிளம்ப மனசே இல்லை, நீரஜா இல்லையென்று மறுத்தாலும், அவள் மனது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று புரிகிறது. சஞ்சய்க்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் என்பதை இவளாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை, பின் நீரஜா அதை எப்படி தாங்கிக் கொள்வாள். பேசாமல் நிகேதனை மட்டும் அனுப்பிவிட்டு, இவள் நீரஜாவோடு இருக்கலாம் என்று நினைத்தாலும், சஞ்சய் அந்த அளவுக்கு அன்னியமும் இல்லை. நீரஜாவை தனியே விடவும் மனம் வரவில்லை,
“நீங்க வேணா முன்னாடி போங்க தனு… நான் நீரஜாவோட வர்றேன்…” என்றாள்.
“நவி… நிரு இன்னும் ரெடியாகல… நீ ரெடியா தான இருக்க… அப்புறம் என்ன..?? நிரு கிளம்பி வருவா, நீ வா போகலாம்…” என்று அழைத்தான்.
“நிக்கி சொல்றதும் சரி தான் ஜானு… நான் கொஞ்ச நேரத்துல ரெடியாகி, பின்னாடியே வரேன்… நீங்க முன்னாடி போங்க..” என்று நீரஜாவும் சொன்னதும் தான், ஜானவி அரை மனதோடு நிகேதனோடு கிளம்பினாள்.
சஞ்சய் வீட்டில் எளிமையான முறையில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நிகேதனும், ஜானவியும் சென்ற போது, அம்பிகா தான் வாசலில் நின்றிருந்தார்.
“வாங்க வாங்க..” என்று வரவேற்றவர், நீரஜா வரவில்லையா..??” என்றுக் கேட்டார்.
“நாங்க கிளம்பும் போது, அவ ரெடியாகலம்மா… பின்னாடி வரேன்னு சொன்னா…” என்றதும், “சரி சரி உள்ள வாங்க” என்று அழைத்துக் கொண்டு போனார்.
உள்ளே சென்றதும் சஞ்சய் எதிர்பட, அவனும் இவர்களை வரவேற்றான். நிச்சயதார்த்தத்திற்கு தகுந்தாற் போல் பிரத்யேகமாக உடை அணிந்திருந்தான். அவனும் நீரஜா வரவில்லையா..?? என்றுக் கேட்டான். பளிச்சென்று புன்சிரிப்போடு இருந்த அவன் முகம், இந்த திருமணத்தை சந்தோஷமாக ஏற்பது போல் இருந்தது.
அம்பிகாவும் சந்தோஷமாக தான் இருந்தார். நிகேதனும் தன் நண்பனின் நிச்சயம் குறித்து சந்தோஷமாக இருந்தான். ஆனால் ஜானவியால் அப்படி இருக்க முடியவில்லை,
நிகேதன் சஞ்சயோடு அங்கேயே நின்று விட, அம்பிகா ஜானவியை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். அங்கு அதிகமாகவே கூட்டம் இருந்தது. ஆனால் எல்லாம் அன்னிய முகங்கள், சஞ்சயின் தந்தை இருந்த வரைக்கும் எந்த உறவினர்களோடும் அவர் நெருங்கியதில்லை என்று இவள் கேள்விப்பட்டிருக்கிறாள்.
அவர் மரணத்திற்கு பின்பும் அம்பிகா மட்டும் தான் சொந்தங்களோடு உறவாடுவார். சஞ்சய் அப்படியில்லை என்பதும் தெரியும், இருந்தும் இத்தனை ஆட்கள் வந்திருப்பது கொஞ்சம் திகைப்பாக தான் இருந்தது அவளுக்கு,
மாமாப் பெண்ணையே திருமணம் செய்யப் போவதால், எல்லா சொந்த பந்தங்களும் வந்திருப்பார்கள் என்று நினைத்தாள்.
“என்னம்மா… ஆஃபிஸ் ஸ்டாப்ஸை எல்லாம் இன்வைட் பண்ணலையா..?? வெறும் உங்க ரிலேஷன்ஸ் மட்டும் இருக்காங்க..” என்று அம்பிகாவிடம் கேட்டாள்.
“எல்லோரையும் கல்யாணத்துக்கு அழைச்சுக்கலாம்னு சஞ்சய் சொல்லிட்டான்ம்மா… அதான்..” என்றவர், அவளை தன் தம்பி மகள் வித்யாவிடம் அழைத்துச் சென்றார்.
அவளுக்கு அங்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தார்கள். “ஜானு இது தான் என்னோட தம்பி பொண்ணு வித்யா..” என்றவர், அவளிடம்…
“இது ஜானவி… சஞ்சயோட பெஸ்ட் ப்ர்ண்ட் நிகேதனோட பொண்டாட்டி..” என்று அறிமுகப்படுத்தினார். இருவரும் ஹலோ என்று கைகுலுக்கினர்.
“நீ பேசிக்கிட்டு இரும்மா… இதோ நான் வந்துட்றேன்..” என்று சொல்லி அம்பிகா வேலையாக சென்றுவிட்டார். யாரும் அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால், சில நிமிடங்கள் நின்றுவிட்டு பின் அவளும் வெளியே வந்து வரவேற்பறையில் உட்கார்ந்தாள்.
சிறிது நேரம் கடந்ததும் அனைவரும் நிச்சயதார்த்த சடங்குகள் செய்ய ஆயத்தமாக, இவளோ நீரஜாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். உறவினர்களெல்லாம் தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என எதிரெதிர் புறம் அமர்ந்தார்கள், மாப்பிள்ளையை வரச்சொல்லி பெரியவர்கள் சொன்னதும், அங்கு வந்தது சஞ்சய் அல்லாது வேறொருவனே!!
அரை மனதோடு சஞ்சயின் நிச்சயதார்த்ததிற்கு நீரஜா தயாராகினாள். அந்த நிகழ்ச்சிக்கு இவள் போகவில்லையென்றால் ஜானவி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால், அங்கு போவதாக முடிவெடுத்து கருநீல நிறத்தில் வெள்ளை கற்கள் பதித்திருந்த அனார்கலி சுடிதாரில் தாயாராகியிருந்தாள். தனது கைப்பையை கையில் எடுத்துக் கொண்டு அறையை பூட்டியவள் மாடியிலிருந்து இறங்கி வரும்போது அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது, இந்த நேரத்தில் யார்..?? என்று சிந்தித்தப்படியே சென்று கதவை திறந்தவள், அங்கு இருந்த நபரை பார்த்து அதிர்ந்தாள்.
உண்மையிலேயே ஜானவிக்கு காண்பது கனவா.. நிஜமா.. என்று புரியவில்லை, சஞ்சய்க்கும் வித்யாவிற்கும் நிச்சயதார்த்தம் இல்லையா..?? இன்னும் கூட அவளால் நம்பமுடியவில்லை, வித்யாவையும் வரவழைத்து அந்த மாப்பிள்ளையின் அருகே உட்கார வைத்ததும் தான் அவளால் நம்ப முடிந்தது. இப்போது மெல்ல ஒவ்வொன்றாய் அவளுக்கு புரிய ஆரம்பித்தது. வந்திருந்த உறவினர்களில் பாதி நபர்கள் அந்த மாப்பிள்ளையின் உறவினர்கள், அலுவலக வேலையாட்களை அழைக்காததுக்கும் இதுவே காரணம், அனைத்தும் புரிய ஆரம்பித்ததும் அவள் சஞ்சய்,நிகேதனை தேடிச் சென்றாள்.
இருவரும் வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் இருந்தார்கள். ஜானவி அவர்களை தேடி வரும்போதே, என்னவாக இருக்கும் என்று தெரிந்துக் கொண்டார்கள்.
“சஞ்சய்… இங்க என்ன நடக்குது..?? உங்களுக்கு நிச்சயதார்த்தம் இல்லையா..??” என்று அவள் சஞ்சயைப் பார்த்துக் கேட்க,
“என்னோட தங்கச்சிய விட்டுட்டு வேற ஒரு பொண்ணுக் கூட இவனுக்கு நிச்சயம் நடந்துடுமா என்ன..??” என்று நிகேதன் பதில் சொல்லிவிட்டு சிரிக்க, சஞ்சயும் உடன் சேர்ந்து சிரித்தான்.
“தனு… உங்களுக்கும் இந்த விஷயம் தெரியுமா..?? அதான் இவ்வளவு கூலா இருந்தீங்களா..?? ஆனா இதெல்லாம் எப்படி..?? சீக்கிரம் சொல்லுங்க.. இல்லை எனக்கு தலையே வெடிச்சிடும்…” என்று அவள் பரபரத்ததும் சஞ்சய் அவளுக்கு எல்லாவற்றையும் விவரித்தான்.
அன்று விஜயும் அவனுடைய அப்பாவும் வந்துப் போன பின், இருவரும் வெற்றியை என்ன செய்யலாம் என்று பேசிய பின், “நீ போய் உங்கப்பாவோட ப்ரண்ட பாரு மச்சான்..” என்று சொல்லிவிட்டு, சஞ்சய் கேபினிலிருந்து வெளியே போக அடியெடுத்து வைத்தப்போது,
“மாப்ள ஒரு நிமிஷம்… உங்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று நிகேதன் அவனை நிறுத்தினான். சஞ்சய் கேள்வியாக நிகேதன் முகத்தை பார்த்தான்.
“மாப்ள… அந்த விஜய்க்கும், அவங்க அப்பாக்கும் எண்ணமே தப்பா இருக்குடா.. அவங்க பேசறதே வேற.. நான் அந்த அர்த்தத்துல பேசல… ஆனா நானும் அதையே தான் கேக்கறேன்…
உனக்கும், நிருக்கும் நடுவுல ஒன்னுமே இல்லையா…?? நான் கேக்கற கேள்விக்கான அர்த்தம் புரியும்னு நினைக்கிறேன்… சொல்லுடா..?? உங்க ரெண்டுப்பேருக்கும் நடுவுல ஒன்னுமே இல்லையா..?? உண்மையைச் சொல்லு.. இங்கப்பாரு நீ இல்லைன்னு மட்டும் சொல்லாத… 3 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எப்படி இருந்தீங்க… இப்போ எப்படி இருக்கீங்க… இதுவே உங்களுக்குள்ள ஏதோ இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்டா…
சரி அதை கூட விடுடா.. இவ்வளவு நாள் ரெண்டுப்பேரும் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவங்க… இப்போ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதுக்கு என்ன அர்த்தம்டா.. அப்பவே எனக்கு சந்தேகம்… இருந்தாலும் நீ எதையும் காது கொடுத்து கேக்க தயாரா இல்ல… உன்கிட்ட என்ன பேசன்னு நானும் அமைதியாயிட்டேன்…
ஆனா நிருவுக்கு மாப்பிள்ளை பார்க்கறதைப் பத்தி சொன்னப்போ, வெற்றி மாப்பிள்ளை இல்லையான்னு கேட்ட, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்டா… இங்கப்பாருடா, இந்த விஜய் இல்லன்னா நீரஜாக்கு ஆயிரம் மாப்பிள்ளை கிடைப்பாங்கடா… ஆனா அவ மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளையா அவங்க இருப்பாங்களான்னு தான் தெரியல… அண்ணனா அவளுக்கு நான் நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்தாலும், அது அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்குமான்னு தான் தெரியல… இதுக்கப்புறமும் நீ அமைதியா இருந்தீன்னா, எனக்கு என்ன சொல்லன்னு தெரியலைடா..” என்று அவன் சொன்னதும்,
“இதுக்கும் மேல எதையும் மறைக்கப் போறதில்ல மச்சான்… நீ நினைச்சது சரி தாண்டா… நானும் நீரஜாவும் ஒருத்தரையொருத்தர் காதலிக்கிறோம்…. ஆனா இன்னும் ரெண்டுப்பேருமே அதை வெளிப்படுத்திக்கல… ஏதேதோ காரணத்தால 3 வருஷம் நாங்க எப்படியோ இருந்துட்டோம்… ஆனா நீரஜா எப்போ திரும்ப இந்தியா வந்தாளோ… அப்பவே என்னோட மனசை அவளுக்கு வெளிப்படுத்த நான் காத்துக்கிட்டு இருந்தேன்… ஆனா சரியான சந்தர்ப்பம் அமையல…
அப்புறம் அந்த சந்தர்ப்பமும் கிடைச்சப்ப தான், வெற்றியும் நீரஜாக்கிட்ட காதலை சொல்லப் போறதா சொன்னான்…. நீரஜா வெற்றி விஷயத்துல என்ன சொல்லப் போறாளோன்னு நான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்… அப்போ தான் வெற்றி பெங்களூர்ல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணான்… உனக்கு லைன் கிடைக்காததால, நீ எங்க இருக்கன்னு கேக்கற மாதிரி கேட்டு, நிரு அவனோட லவ்வை ஏத்துக்கிட்டதா சொன்னான்…
நான் ஒரு முட்டாள்டா… அவன் சொன்னதை அப்படியே நம்பிட்டேன்… நிருக்கிட்ட இல்லன்னாலும் உன்கிட்டயாவது இது உண்மையான்னு கேட்ருக்கணும்… அதைவிட்டுட்டு நீரஜா என்னை லவ் பண்ணலைன்னு வருத்தப்பட்டுக்கிட்டு உக்கார்ந்திருந்தேன்… அப்போ தான் அம்மா வித்யாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க… நானும் அம்மாக்காக அதுக்கு ஒத்துக்கிட்டேன்…
நீ நிருக்காக வேற மாப்பிள்ளை பார்க்கறது தெரிஞ்சதும் தான், வெற்றி பொய் சொல்லியிருக்கான்னு தெரிஞ்சுது… அப்புறம் நேத்து மந்த்ராவை பார்த்தப்ப தான் நிருவும் என்னை லவ் பண்றான்னு புரிஞ்சுக்கிட்டேன்… நிரு பெங்களூர்ல இருந்து அவசர அவசரமா கிளம்பியிருக்கா… என்கிட்ட பேசணும்னு நினைச்சிருக்கா… ஆனா அதுக்குள்ள என்ன ஆச்சுன்னு தெரியல… உங்கிட்ட வந்து வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லியிருக்கா… சரி இனியாவது மனசு விட்டு அவக்கிட்ட பேசலாம்னு தான் அவளை இன்னிக்கு வெளியே கூட்டிக்கிட்டு போக நினைச்சேன்… அதுக்குள்ள விஜயும், அவனோட அப்பாவும் வந்து பிரச்சனை பண்ணிட்டாங்க…” என்று அவன் முழுவதும் கூறி முடித்தான்.
இதைக்கேட்ட நிகேதனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, “நீயெல்லாம் பிஸ்னஸ் மேன் ன்னு சொல்லிக்காதடா.. படிப்பு, தொழில்னு எல்லாத்துலையும் பக்காவா இருக்க.. ஆனா லவ் விஷயத்துல இப்படி இருக்கியே… நீதான் இப்படின்னா, என் தங்கச்சி அதுக்கும் மேல இருக்கா… நான், நவி ஏன் ஆன்ட்டிக் கூட நீங்க ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்… ஆனா நீங்க ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்ணியும் இப்படி இருக்கீங்க…
சரி போனதெல்லாம் போகட்டும் விடு… இந்த சம்பந்தம் நின்னதும் நல்லதுக்கு தான்… இனியும் காலம் கடத்தாம, போய் நீரஜாக்கிட்ட பேசு… முதல்ல போ..” என்று அனுப்பி வைத்தான். ஆனால் இந்த முறையும் அவனுடைய அன்னையின் மூலம் எல்லாம் சொதப்பியது.
பிறகு தன் அன்னையுடன் அவன் வீட்டிற்குச் சென்றதும், நிகேதன் அவனை போனில் அழைத்தான்.
“என்ன மச்சான்… அவரை பார்த்தீயா..?? என்ன சொன்னாரு..”
“விஷயத்தை சொன்னேன் டா… அவருக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு… உடனே அவனை சும்மாவா விட்டீங்கன்னு கேட்டாரு… அப்புறம் அவனை அந்த வேலையை விட்டே தூக்கறன்னு சொன்னாரு… அந்த சிங்கப்பூர் ஆஃபிஸ்க்கும் போன் பண்ணி பேசினாரு… ஆனா இதுக்காகல்லாம் வேலையை விட்டு அனுப்ப முடியாது… வேணும்னா இப்போ அவனுக்கு ப்ரமோஷன் கிடைக்கறதா இருக்கு… அதை வேணும்னா கேன்சல் பண்ணிடலாம்னு அந்த ஆஃபிசர் சொன்னாரு… சரி நிருக்கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சதுக்கு கொஞ்சமாவது அவனுக்கு பாதிப்பு வரணும்… சரி அப்படியே பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்டா..”
“சரி போனதுக்கு இவ்வளவாவது பண்ண முடிஞ்சுதே… ஆனா வெற்றி மட்டும் திரும்ப நம்ம கண்ணுல மாட்னா அவ்வளவு தான்… அப்புறம் அவனை என்ன பண்ரேன்னு பார்..”
“எனக்கு மட்டும் என்னடா… அதை விட பயங்கர கோபம் இருக்கு அவன் மேல, சரி அதை விடு, நீ நிருக்கிட்ட பேசினியா… காதலை சொன்னியா..?? எப்போ உங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்…” என்றுக் கேட்டான்.
அதற்கு அவனோ… “நீ வேறடா… எனக்கு நேரமே சரியில்லன்னு நினைக்கிறேன்… நீரஜாக்கிட்ட பேசலாம்னு நினைக்கும் போதெல்லாம் ஏதாவது தடை வருது…” என்றவன் விவரத்தைக் கூற, அலைபேசியில் மறுமுனையில் இருந்த நிகேதனுக்கோ, இவனை என்ன செய்யலாம் என்றிருந்தது.
“டேய்… உன்கிட்ட என்ன சொன்னா… என்ன செஞ்சு வச்சிருக்க… அவ வரலன்னு சொன்னாளாம்… இவனும் சரின்னு தலையை ஆட்டினானாம்… சரி அவக்கூட வெளியில தான் போகப் முடியல… ரெண்டுப்பேரும் கார்ல ஒன்னா தானடா போனீங்க… அப்போ உன்னோட வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருந்த??”
“இல்லடா… அவ மூட் சரியில்ல அதான் பேச தயக்கமா இருந்துச்சு..” என்று இழுத்தான்.
“டேய் அவ மூட் சரியில்லாததுக்கு காரணமே உன்னோட இந்த அமைதி தான்டா… இதுல மேலும் விஷயத்தை சீரியஸா ஆக்க, ஆன்ட்டிக்கு ப்ராமிஸ்ல்லாம் செஞ்சுக் கொடுத்திருக்க… எனக்கு வர ஆத்திரத்துக்கு நீ நேர்ல இருந்திருக்கணும்…”
“மச்சான்… அம்மாக்கிட்ட ப்ராமிஸ் பண்ணதெல்லாம் பெரிய விஷயமில்லடா… அம்மாக்கு நீரஜாவை ரொம்ப பிடிக்கும்டா.. அவ தான் மருமகளா வரணும்னு ஆசைப்பட்டாங்க… அதை மனசுல வச்சு தான் உங்களுக்கு பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்..”
“இதெல்லாம் வக்கனையா பேசுடா… ஆனா காரியத்துல ஒன்னும் காட்டாத..”
“சரி இதுதான் நேரம்னு நீ என்னை வாராத… இப்போ என்னடா… நாளைக்கே நான் நிருக்கிட்ட என்னோட லவ்வ சொல்லிட்றேன் போதுமா..??”
“ஒன்னும் தேவையில்ல… நீ நாளைக்கு நீரஜாவை பாக்கறதை விட, நீ உன்னோட மாமாப் பொண்ணை தான் முதல்ல பார்க்கணும்..”
“எதுக்கு மச்சான்…??”
“எதுக்கா…?? நீ என் தங்கச்சிக்கிட்ட காதலை சொல்றதுக்குள்ள, பாவம் உன்னோட மாமாப் பொண்ணு, அவ தேவையில்லாம மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டா, அப்புறம் விஷயம் சீரியஸ் ஆயிடும்… அதனால முதல்ல அவளைப் பார்த்து, நீ நீரஜாவை காதலிக்கிற விஷயத்தை சொல்லு, முடிஞ்சா உன்னோட மாமாக்கிட்டேயும் பேசு…” என்றான். சஞ்சய்க்கும் அதுவே சரியென்றுப்பட்டது, அதனால் நிகேதன் சொன்னதுப்போல் தன் மாமன் மகளை காண அவன் செல்ல நினைத்தான்.
கதவை திறந்த நீரஜா, அங்கு வெற்றியை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை, அவனை பார்த்ததும் அவளுக்கு ஆத்திரம் தான் வந்தது.
“எங்க வந்த வெற்றி… உன்னோட முகத்துல முழிக்கவே நான் விரும்பல… அதனால மரியாதையா போய்டு….” என்று அவள் கோபத்தோடு உரைக்க,
“ஆனா நான் இப்போ உன்னோட முகத்துல இருக்க சோகத்தைப் பார்க்கணும்னு ஆசையா வந்திருக்கேன் நீரஜ்…” என்று சொல்லிக் கொண்டே அவளை தள்ளியப்படி வீட்டிற்குள் வந்தான் அவன்,
“ஆனா நான் நினைச்சா மாதிரி இல்லாம, ஜம்முன்னு சஞ்சயோட நிச்சயத்தர்த்தத்துக்கு ரெடியாகிட்ட… ம்ம் உன்னை பாராட்டியே ஆகணும் பேபி… சஞ்சயை தான் காதலிக்கிறேன்… அவனை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு… என்னோட காதலை நீ ஏத்துக்கல, ஆனா இப்போ உன்னோட சஞ்சய் இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கப் போறத நினைச்சு உனக்கு வருத்தமாவே இல்லையா நீரஜ்…?? அங்க சஞ்சயோட நிச்சயதார்த்தம், இங்க நீ ஏதாவது மூலையில உக்கார்ந்து அழுதுக்கிட்டு இருப்பன்னு நினைச்சேன்…. ஆனா அப்படி எதுவும் நடக்கலியே…”
“நான் எப்படி இருந்தா உனக்கென்ன வெற்றி… சஞ்சய் யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிப்பாரு… இதெல்லாம் உனக்கு அவசியமில்லாதது… இங்கப்பாரு ஒழுங்கா வெளியே போ…”
“அதெப்படி நீரஜ் இது எனக்கு அவசியமில்லாததா ஆகும்… நான் பத்த வச்ச வெடி… வெடிச்சு சிதறுவத நான் வேடிக்கைப் பார்க்க வேண்டாம்… நான் கூட இது இவ்வளவு அளவுக்கு வெடிக்கும்னு நினைக்கல பேபி… ஒரு போன் கால், இப்படி உன்னோட தலையெழுத்தையே மாத்தும்னு நான் நினைக்கவேயில்ல… இப்போ நான் நினைச்சது நடந்துடுச்சே… அதான் இப்போ உன்னோட நிலைமை என்னன்னு பார்க்க வந்தேன்…” என்று அவன் சொன்னதும் ஒன்றும் புரியாமல் அவள் அவனை பார்த்தாள்.
“என்ன… நான் என்ன சொல்ல வரேன்னு புரியலையா..?? சரி புரியற மாதிரியே சொல்றேன்… நீ சஞ்சயை தான் காதலிக்கிறேன்னு என்கிட்ட சொன்னப்போ, சும்மா ஒரு விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சேன்… அது என்ன தெரியுமா..??
அன்னைக்கு ஹோட்டல்ல இருந்து கிளம்பி ஏர்ப்போர்ட் போனதும், சஞ்சய்க்கு ஒரு போன் போட்டேன்… நீ என்னோட காதலை ஏத்துக்கிட்டதா ஒரு பொய் சொன்னேன்… ஆனா அதுக்கு சஞ்சயோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு எனக்கு அப்போ தெரியல… ஆனா இப்போ தெரிஞ்சுது… சஞ்சய் நான் சொன்னதை நம்பி இப்போ வேற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டானே பேபி, இவ்வளவு தானா அவனோட காதல்… இந்த தெய்வீக காதலுக்காக என்னை வேண்டாம்னு சொல்லிட்டியேம்மா..
என்னை வேண்டாம்னு சொன்ன நீ… உங்க அண்ணன் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டியே பேபி… இந்த வெற்றியோட நினைப்பு உனக்கு வரவே இல்லையாடா..?? சரி அதுக்காகல்லாம் நான் கோபப்பட மாட்டேன்ம்மா… சஞ்சயும் இல்ல, உங்க அண்ணன் பார்த்த மாப்பிள்ளையும் உன்னை இந்நேரம் வேண்டாம்னு சொல்லியிருப்பான்… இப்போதைக்கு உன்னோட ஒரே சாய்ஸ் நான் மட்டும் தான் பேபி… என்ன கல்யாணம் செஞ்சுக்கலாமா..??”
“ச்சீ நிறுத்து… உன்னோட கனவுல கூட அது நடக்காது…. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சாகறதே மேல்… அன்னைக்கு ஹோட்டல்ல நடந்ததைக் கூட ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நீ பண்ணதா நினைச்சுக்கலாம்… ஆனா சஞ்சய்க்கிட்ட நீ போன்ல பேசினதும், விஜய் வீட்டு ரிலேஷன்ஸ்க்கிட்ட நீ தப்பா பேசினதும் நீ ரொம்ப கேவலமானவன்னு சொல்லுது…
ஏதோ அன்னைக்கு போனாப் போகுதுன்னு உன்னை மன்னிச்சு விட்டேன்… என்னோட அண்ணாக்கிட்ட எந்த விஷயத்தையும் சொல்லல… ஆனா எப்பவும் இப்படியே இருப்பேன்னு நீ தப்பு கணக்கு போடாத…. ஒழுங்கு மரியாதையா வெளியப் போ..” என்று வாசலைப் பார்த்து கைக்காட்டினாள்.
“ஏய்… நீ சொன்னதும் நான் வெளியப் போய்டுவன்னு நினைச்சியா…?? நான் அதுக்காகவா வந்தேன்… இங்கப் பாரு, இப்போ இந்த டைம் இந்த வீட்ல நீ மட்டும் தான் இருக்க… அது தெரிஞ்சு தான் நான் வந்திருக்கேன்..” என்று அவன் சொன்னதும், உள்ளுக்குள் கொஞ்சம் நடுங்கி தான் போனாள் அவள்.
“அப்புறம் உங்க மாமாப் பொண்ணுக்கிட்ட பேசினீங்களா சஞ்சய்..?? அவ இதை ஏத்துகிட்டாளா..?? மாமாவும் ஒத்துக்கிட்டாரா..?? இந்த மாப்பிள்ளையை அப்புறம் தான் பேசி முடிச்சீங்களா..??” என்று ஜானவி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, மீண்டும் சஞ்சய் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்.
நிகேதன் சொன்னது போல இவன் வித்யாவை பார்க்க முடிவெடுக்க, அந்தநேரம் இவனை சந்திக்க ஒருவன் இவனின் அலுவலகத்திற்கே வந்திருந்தான். அவன் பெயர் சங்கர், அவனும் வித்யாவும் இரண்டு வருடங்களாக ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். வித்யாவின் அப்பா சஞ்சயோடு அவளின் திருமணத்தை பேச ஆரம்பித்ததும் தான் வித்யா தன்னுடைய காதலைப்பற்றி வீட்டில் சொல்லியிருக்கிறாள்.
ஆனால் சங்கரின் வேலை, அவனின் குடும்ப அந்தஸ்து இதில் வித்யாவின் அப்பாவிற்கு திருப்தி இல்லாததால், இந்த காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் வித்யாவின் திருமணத்தை உடனே நடத்த நினைத்து அம்பிகாவை அவசரப்படுத்தினார். அந்த அவசரத்தால் அம்பிகாவும் சஞ்சயை அவசரப்படுத்த, இவனும் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டதால் இந்த திருமணத்தை நிறுத்தும் வழியை தேடி, பின் வித்யா தன் காதலன் சங்கரை இங்கு அனுப்பினாள்.
சங்கர் அனைத்து விஷயத்தையும் கூறிய போது, நிகேதனும் சஞ்சயோடு இருந்தான். சஞ்சய், நீரஜா இணைவதற்கு வித்யாவால் எந்த பிரச்சனையும் இல்லை என்பதில் இருவருமே நிம்மதியடைந்தனர். பின் சங்கரிடம் அவர்கள் காதலுக்கு உதவி செய்வதாக கூறினார்கள். அதுகுறித்து தன் மாமாவிடம் பேசுவதற்காக சஞ்சயும், நிகேதனும் சென்றார்கள்.
முதலில் அவர் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். பின் சங்கருக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாக சஞ்சயும், நிகேதனும் உறுதி அளித்தப் பின் தான் அவர் சம்மதம் தெரிவித்தார். சஞ்சய்க்கும், வித்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நேரத்திலேயே வித்யாவிற்கும், சங்கருக்கும் நிச்சயம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அப்போது தான் நிகேதனுக்கு அந்த எண்ணம் தோன்றியது,
“டேய் மச்சான்… என்னடா சொல்ற… நீ சொல்றதெல்லாம் வேலைக்கு ஆகாது… இதுக்கும் மேலேயும் நான் நீரஜாக்கிட்ட பேசாம இருக்க முடியாது… இதுல எனக்கும், வித்யாக்கும் தான் நிச்சயதார்த்தம்னு ட்ராமா போடச் சொல்ற… அதெல்லாம் முடியாது…”
“ஹே இவ்வளவு நாள் லவ் சொல்லாம கடத்திட்ட, இப்போ இன்னும் 4 நாள் தானடா இருக்கு… ஏற்கனவே அம்பிகா ஆன்ட்டி நிச்சயத்துக்கு தேதி குறிச்சிட்டதா நவிக்கிட்ட சொல்லிட்டாங்க… இது எப்படியோ நிரு காதுக்கும் போயிருக்கும்… அதை அப்படியே மெயிண்டெயின் பண்ணி, அன்னைக்கு சர்ப்ரைஸா ப்ரோபோஸ் பண்ணுடா… முடிஞ்சா அன்னைக்கே உங்களுக்கும் சிம்பிளா எங்கேஜ்மென்ட் வச்சிடலாம்…”
“டேய் எனக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லி நிரு வருத்தமா இருப்பாடா.. இதுல இந்த சர்ப்ரைஸ்ல்லாம் வேலைக்கு ஆகாதுடா.. சொன்னா புரிஞ்சுக்கோ..”
“என் தங்கச்சிய பத்தி எனக்கு தெரியாதாடா… வருத்தத்தையெல்லாம் மனசுக்குள்ள போட்டு வெளிப்படையா காமிச்சுக்க மாட்டா.. அதேமாதிரி ஏதாவது பிரச்சனையா இருந்தா, அதையே நினைச்சு வருத்தப்படாம, அதுல இருந்து வெளியே வரத்தான் நினைப்பா… நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட விஷயத்தை கேட்டும் உடைஞ்சு போகாம தான இருக்கா… இப்போ உன்னோட கல்யாண விஷயமா கூட ஆன்ட்டிக்கிட்ட உன்னையே ப்ராமிஸ் பண்ண வச்சாளா இல்லையா…?? அவக்கிட்ட சர்ப்ரைஸா இப்படி லவ் சொன்னா அது இன்னும் சூப்பரா இருக்கும்டா..” என்று இன்னும் என்னன்னவோ பேசி சஞ்சயை சம்மதிக்க வைத்தான்.
“டேய்… அப்புறம் இந்த விஷயம் ஆன்ட்டிக்கு கூட சொல்ல வேண்டாம்… நவிக்கும் தெரிய வேண்டாம்… எல்லாருக்குமே அது சர்ப்ரைஸா இருக்கட்டும்… அப்புறம் உங்க மாமாக்கிட்ட பேசி, வித்யாவோட நிச்சயத்தை இங்கேயே நடத்த சம்மதம் வாங்கு… அவரையும் ஆன்ட்டிக்கிட்ட எதுவும் சொல்லிக்க வேணாம்னு சொல்லு… அப்படியே முடிஞ்ச அளவுக்கு உங்க நிச்சயத்துக்கான ஏற்பாடும் செஞ்சு வைப்போம்…”
“ஹே மச்சான்… இப்பவே எங்க எங்கேஜ்மென்ட்க்கு என்னடா அவசரம்..?? இப்போ தாண்டா காதலையே சொல்லப் போறேன்… அப்புறம் கொஞ்ச நாளாவது காதலிச்சிட்டு அப்புறம் மேரேஜ் பத்தி யோசிக்கலாம்டா..”
“இங்கப் பாரு மாப்ள… என் தங்கச்சி இப்போ தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்கா… ப்ரோபோஸ் பண்ண கையோட எங்கேஜ்மென்ட்ட முடிச்சு அவளை கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு… அதைவிட்டுட்டு, திரும்ப அவக்கிட்ட ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணி, அவ கோவிச்சுக்கிட்டு வேற ஏதாவது நாட்டுக்கு வேலைக்குப் போயிடப் போறா.. அதுக்கு தான் சொல்றேன்… அப்புறம் உன் இஷ்டம்..” என்று நிகேதன் சொன்னதும், ஏற்கனவே அந்த மூன்று வருடம், மற்றும் இந்த நான்கைந்து மாதங்கள் போதாதா..?? இதற்கும் மேலே என்றால் தாங்காது என்பதால் நிகேதன் சொன்னதற்கு சஞ்சய் சரி என்று தலையாட்டினான்.
“என்ன நடிக்கிறியா..?? நீ உன் அண்ணன் கிட்ட எதுவும் சொல்லாம தான், அவன் எனக்கு ப்ரோமோஷன் கிடைக்காம செஞ்சானா..??
இங்கப் பாரு, அன்னைக்கு நீ சொன்ன மாதிரி கோபத்துல உணர்ச்சிவசப்பட்டு தான் அப்படி செஞ்சேன்… என்னை வேண்டாம்னு சொன்ன உனக்கு சஞ்சய் ஈஸியா கிடைக்கக் கூடாதுன்னு நினைச்சேன்… அதுக்காக தான் அவன்கிட்ட அப்படி பேசினேன்… அதோட நான் ஒதுங்கி தான் இருந்தேன்…
நானா தேடிப்போய் ஒன்னும் அந்த மாப்பிள்ளை வீட்ல தப்பா சொல்லல… அவங்கக் கேட்டதால தான் சொன்னேன்.. ஆமாம் நான் சொன்னதுல அப்படி என்ன தப்பிருக்கு… சிங்கப்பூர் வர்றதுக்கு முன்னாடியே சஞ்சயை நீ காதலிச்சல்ல… அப்போ நான் ப்ரோபோஸ் பண்ணதும் நீ அந்த விஷயத்தை சொல்லியிருந்தா, நானா ஒதுங்கி போயிருப்பேன்… ஆனா நீ சொல்லல… என்னை வேண்டாம்னு மறுத்தும் என்கூட ப்ரண்டா பழகுன… அதான் நீ எப்படியோ என்னை ஏத்துப்பன்னு நம்பினேன்…
அப்புறம் சஞ்சய காதலிக்கிறதா சொன்ன… இப்போ அவனுக்கு நிச்சயதார்த்தம்னு சொன்னதும், வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடிவுப் பண்ணிட்ட.. இதுல நான் என்னமோ இல்லாததை சொன்ன மாதிரி உங்க அண்ணன் எனக்கு கிடைக்க இருந்த ப்ரோமோஷனை தடுத்துட்டான்… புதுசா பிஸ்னஸ் தான் செய்ய முடியல… இந்த ப்ரோமோஷனாவது கிடைக்கும்னு வெய்ட் பண்ணேன்… ஆனா அதுவும் கிடைக்காம உங்க அண்ணன் பண்ணிட்டான்… அதுக்கு அவன் அனுபவிச்சே ஆகணும்..”
“இங்கப்பாரு வெற்றி.. நான் எதுவும் நிக்கிக் கிட்ட சொல்லல… அவனுக்கு இதெல்லாம் எப்படி தெரிஞ்சுதுன்னு கூட தெரியாது… நான் வேணும்னா அவன்கிட்ட சொல்லி இந்த ப்ரோமோஷனை வாங்கி தரச் சொல்றென்… திரும்ப தேவையில்லாம ஏதாவது செஞ்சு பிரச்சனையை வர வச்சிக்காத… ஒழுங்கா போய்டு..”
“இங்கப் பார்… இப்படி ஒரு சான்ஸை நான் எப்படி மிஸ் பண்ணுவேன்… 3 நாளா ஆளை வச்சு உன்னையும், இந்த வீட்டையும் நான் வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்… அப்படி தான் உன்னோட சஞ்சய்க்கு எங்கேஜ்மென்ட்னு தெரிய வந்துச்சு… நீ வீட்ல தனியா இருக்கேன்னும் தெரிய வந்துச்சு… உங்க வீட்டு செக்யூரிட்டியும் இப்போ லீவ்ல போயிருக்கான், அன்னைக்கு மந்த்ரா வந்தா, இன்னைக்கு உன்ன என்கிட்ட இருந்து யார் பேபி காப்பாத்துவா.. சும்மா இருந்தவனை உன்னோட அண்ணன் சீண்டி விட்டுட்டான்… அதுக்கான தண்டனையை நீயும், உன் அண்ணனும் அனுபவிச்சே ஆகணும்…”
அவன் பேசிக் கொண்டே போக, நிலைமை சரியில்லாததை உணர்ந்த நீரஜா, அருகே இருந்த பூச்சாடியை எடுத்து அவனை தாக்க முயற்சித்தாள். ஆனால் அதற்குள் சுதாரித்த வெற்றியோ ஏற்கனவே தன் பாக்கெட்டில் தயாராய் வைத்திருந்த கைக்குட்டையை அவளின் மூக்கின் மீது வைக்க, அதில் இருந்த மயக்கமருந்தின் விளைவால் நீரஜா மயக்கமடைந்தாள்.
“இது உங்க ப்ளானா தனு…?? எதுல சர்ப்ரைஸ் கொடுக்கறதுன்னு இல்லையா..?? ” ஜானவி நிகேதனைப் பார்த்துக் கேட்டதும்,
“நல்லா கேளும்மா ஜானு… இதையே தான் நானும் கேட்டேன்… எனக்கே இந்த விஷயத்தை காலையில் தான் சொன்னாங்கம்மா… கேட்டதும் சந்தோஷம் தான்… இருந்தும் இந்த சர்ப்ரைஸ்ல்லாம் வேண்டாம்… நீரஜாக்கிட்ட இப்பவே சொல்லிடலாம்னு சொன்னேன்… ஆனா இவங்க கேட்கல..” என்று அங்கு வந்த அம்பிகாவும் குறைப்பட்டுக் கொண்டார்.
“எனக்கும் இதுல அவ்வளவா உடன்பாடில்லை ஜானு… அதுவும் நீரஜா பங்க்ஷன்க்கு வர்லன்னதும், நாம இப்படி செஞ்சுருக்கக் கூடாதுன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்… ஆனா இவன் தான் கேக்கல..” என்று சஞ்சயும் கூறினான்.
“நாங்க கிளம்பிவரும் போது அவ முகமே சரியில்ல… இதெல்லாம் பார்த்தும் கூட எப்படி தான் இவருக்கு சர்ப்ரைஸ் ப்ளான் கொடுக்க தோனுதோ தெரியல..” என்றாள் ஜானவி.
“ஜானு… நம்ம நீரஜா பத்தி எனக்கு நல்லா தெரியும்… ஃபீல் பண்ணாலும், ஒரு வீம்புக்காவது இந்த எங்கேஜ்மென்ட்க்கு கிளம்பி வருவா.. நீ ஒன்னும் பயப்படாத..” என்று சமாதானம் கூறினான்.
“சரி தனு…முடிஞ்சா இன்னிக்கே எங்கேஜ்மெண்ட்னு சொல்றீங்களே… நம்ம சார்பா யாரும் இந்த எங்கேஜ்மெண்ட்ல கலந்துக்க வேண்டாமா..??”
“அத்தை, மாமாவை தவிர வேற யாரும் முக்கியமானவங்கன்னு இல்லை நவி… அப்படி எங்கேஜ்மென்ட் நடந்தா, அப்போ அவங்களை போன் பண்ணி கூப்டுக்கலாம்.. அப்புறம் ஆஃபிஸ் ஸ்டாப்ஸ் தானே, அவங்க சொன்னா புரிஞ்சுப்பாங்க…” என்றான்.
பின் இன்னும் கொஞ்ச நேரம் நீரஜாவிற்காக காத்திருந்தனர். அவள் வரவும் இல்லை, அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், ஜானவியும் அம்பிகாவும் பயந்தார்கள். சஞ்சய்க்கும் கொஞ்சம் மனதில் கலக்கமாக தான் இருந்தது. நிகேதன் தான் அவள் வந்துவிடுவாள் என நம்பினான். ஆனால் அம்பிகா தான் வீடு வரைக்கும் சென்று பார்த்து, கையோடு தன் மருமகளை அழைத்து வரச் சொன்னார்.
அப்படி வீட்டில் வந்து பார்த்த போது, திறந்திருந்த கதவும், கீழே விழுந்து இருந்த பூச்சாடியும், அதற்கு அருகில் விழுந்திருந்த நீரஜாவின் கைப்பையும் அவளுக்கு ஏதோ ஆபத்து என்று எடுத்துரைத்தது.
நீரஜாவிற்கு என்ன ஆபத்து நேர்ந்தது என்று புரியாமல், ஜானவியும் சஞ்சயும் பயந்தனர். இதுவரையில் மற்றவர்களுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த நிகேதனோ, தன் தங்கைக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல், மிகவும் உடைந்துப் போனான்.
“மச்சான்… நிருக்கு என்னாச்சுடா..?? அவளை தனியா விட்டுட்டு வந்தது தப்பாடா..?? அய்யோ இதெல்லாம் என்னால தான… இப்போ என்னோட நிருக்கு என்னாச்சுன்னு தெரியலையே..” என்று அவன் புலம்பும் போது, மனதில் பயத்தை மறைத்து வைத்துக் கொண்டு, மற்ற இருவரும் அவனை தேற்றினார்கள்.
“நிரு எங்கப் போனா..?? அவளுக்கு என்னாச்சு..??” என்று நிகேதன் வாய்விட்டு புலம்ப, சஞ்சயும் அதையே மனதிற்குள் கேள்வியாய் கேட்க… நீரஜாவோ மயங்கிய நிலையில் வெற்றியோடு காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தாள்.
மௌனம் தொடரும்..