KPEM 2

மௌனம்  2

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாலும், ஜானவி அடிக்கடி வாசலை சென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு வயது ஜெய் குட்டிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த வைஷ்ணவி அவளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
          
“ஜானு.. ஏன் இப்படி வீட்டுக்கும் வாசலுக்கும் அலஞ்சுக்கிட்டு இருக்க… அதான் ஏர்போர்ட்ல் இருந்து கிளம்பிட்டதா.. போன் பண்ணாங்களே… அப்புறம் என்ன டென்ஷன்..”

“நீ சும்மா இரு, அவங்க அங்க இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் மழை பெய்யுது…அவங்க எப்படி வருவாங்க..??”

“ஆமா அவங்க நடந்து ஊர்வலமா வராங்க…??? மழையில நனைய..

இருந்தாலும் நீ ரொம்ப ஓவர், அங்க கார்ல ஏறி இங்க இறங்க போறாங்க, அப்புறம் ஏன் இப்படி பில்ட் அப் பண்ற…
பேசாம உள்ள போய் வேலையப் பாரு”

“எனக்கு தெரியும்… நீ ஒழுங்கா பிள்ளைக்கு சாப்பாடை ஊட்டு…” சொல்லிவிட்டு மறுபடியும் ஜானவி வாசலைப் பார்த்தாள்.

“என்னை விட உனக்கு நீரஜாவை தானே ரொம்ப பிடிக்கும்” என்று வைஷ்ணவி மனதில் நினைத்துக் கொண்டாள்.

வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது, ஜானவி வெளியே ஓடி வந்தாள்.

காரிலிருந்து இறங்கிய நீரஜா, “ஜானு..” என்று ஓடி வந்து ஜானவியை கட்டிக் கொண்டாள், அவளுடன் வெற்றியும் வந்தான், சஞ்சயும் நிகேதனும் காரிலிருந்த அவர்கள் உடமைகளை  எடுத்து கொண்டிருந்தனர்.

“நிரு என்ன இப்படி இளச்சுட்ட…. சரியா சாப்பிடறதில்லயா..??” என்று அக்கறையாக விசாரித்தாள் ஜானவி.

“நீரஜ் நீ ஏற்கனவே ஒல்லியா தான் இருக்க… இதுல நீ இளைச்சுட்டதா இவங்க சொல்றாங்க…” என்று வெற்றி கிண்டல் செய்தான்.

“அதில்லை வெற்றி… நம்ம மேல பாசமா இருப்பவங்களுக்கு நம்மல ரொம்ப நாள் கழிச்சு பார்த்தா அப்படி தான் தெரியும்…” என்று நீரஜா விளக்கம் கொடுத்தாள்.

நீரஜாவுடன் வந்த புதியவனை ஜானவி பார்க்க,

“ஜானு… இவர் பேர் வெற்றி… என்னோட வொர்க் பண்ணாரு… இந்தியால கொஞ்ச நாள் இருக்க வந்திருக்காரு… நம்ம வீட்ல தான் தங்கப் போறாரு…” என்று நீரஜா சொல்லி கொண்டிருக்க…

அவர்களின் உடமைகளை எடுத்து கொண்டு பின்னே வந்த சஞ்சய்க்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

“ஒ அப்படியா, இவர் எவ்வளவு நாள் வேணும்னாலும் இருக்கலாம்” என்று நீரஜாவிடம் சொன்ன ஜானவி வெற்றிக்கு வணக்கம் தெரிவித்தாள்.

சஞ்சய் கூட பொருட்களை எடுத்து வந்த நிகேதனோ, “நவி ரெண்டுபேரையும் வெளியிலேயே நிக்க வச்சு பேசறதா ஐடியாவா” என்று கேட்டான்.

“ஐயோ இல்ல தனு…” என்று சொல்லி அனைவரையும் ஜானவி உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள்.

உள்ளே நுழைந்ததும் நீரஜா சாப்பிட்டு  கொண்டிருந்த ஜெய் குட்டியிடம் சென்றாள்.

“ஜெய் குட்டி… அத்தை கிட்ட வாங்க… உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்டா செல்லம்..” என்று அவள் அழைக்க,

“அத்த…” என்று ஜெய் தாவிக் கொண்டான்.

அதை ஜானவியும் நிகேதனும் அதிசயமாக பார்த்தனர்.   பின் ஜானவியோ,

“பார்த்தீங்களா தனு… நாம எவ்வளவு சொல்லிக் கொடுத்தோம்… அத்தை வந்தா கோவிச்சுக்கனும்… அத்தை உன்கூட இல்லாம வெறும் வீடியோ சேட்டிங்லயே பேசி ஏமாத்தனதால நீ அத்தை கிட்ட பேசக் கூடாதுன்னு எவ்வளவு சொன்னோம்… எல்லாத்தையும் மறந்துட்டு அத்தைக்கிட்ட ஒட்டிக்கிட்டான் பாருங்க..”

“அவன் என்னோட பையன் நவி… நான் எப்படி தங்கச்சிக்கிட்ட எப்படி நடந்துக்கணும், பொண்டாட்டி கிட்ட எப்படி நடந்துக்கணும்..  ப்ரண்ட்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சு வச்சிருக்கேனோ அதேமாதிரி என்னோட பையனும் இருக்கான்… இல்லடா செல்லம்..” என்று ஜெய்யிடம் கேட்க,

அவன் ஆமாம் என்று தலையாட்டி நீரஜாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

“அப்படியெல்லாம் இல்ல நிக்கி… என்னோட செல்லத்துக்கு எல்லாரையும் விட அத்தையை தான் ரொம்ப பிடிக்கும்… என்னோட சமத்து…” என்று கூறி நீரஜாவும் ஜெய்யின் கன்னத்தில் முத்தமிட்டாள். பின் அருகில் இருந்த வைஷ்ணவியிடம் “எப்படி இருக்க வைஷு..” என்று விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன் நிரு…” என்று பதிலளித்த வைஷு பின்னர், “அப்படி சொல்லாத நிரு… உன்னை ரொம்ப நாள் கழிச்சு ஜெய் பாக்கறதால அப்படி சொல்றான்… நான் எப்பவும் அவன் கூடவே இருப்பதால பர்ஸ்ட் என்ன தான் பிடிக்கும் பாரு…” என்ற அவள்,

“ஜெய் குட்டி…. உங்களுக்கு அத்தை பிடிக்குமா..?? இல்லை சித்தி பிடிக்குமா..??” என்று கேட்க,

“அத்த பிடிக்கும்..” என்று ஜெய் நீரஜாவை கட்டிக் கொண்டான்.

“அப்படி சொல்லுங்க ஜெய்குட்டி…” என்று திரும்பவும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு… “வாங்க செல்லத்துக்கு நானே சாப்பாடு ஊட்றேன்..” என்று வைஷ்ணவியிடம் இருந்த சாப்பாடை வாங்கி நீரஜா ஊட்ட ஆரம்பித்தாள்.

“இந்த ரெண்டு வயசு குட்டிக்கு கூட இவளை பிடிச்சுடுது” என்று நொந்து கொண்ட வைஷு சஞ்சயை பார்க்க அவனோ அங்கு நின்றிருந்த வெற்றியை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அவளும் வெற்றியை பார்த்தாள். பின் நீரஜாவிடம் வெற்றியை யார் என்று கேட்க அவளோ நண்பன் என்று கூறினாள். ஏதோ வெற்றியை பார்க்க  தன்னுடைய பாதை சரியாகும் போல என்று வைஷு சந்தோஷமடைந்தாள்.

“வெற்றி நீங்க என்ன நிக்கறீங்க…?? நிரு ஜெய்ய பார்த்துட்டா இல்லையா… அதுக்கப்புறம் எல்லாமே மறந்திடுவா… நவி வெற்றிக்கு அவரோட ரூமை காட்டு… நீங்க போய் ப்ரஷ் ஆகிட்டு வாங்க வெற்றி சாப்பிடலாம்…” என்று நிக்கி சொன்னதும்,

“வாங்க வெற்றி..” என்று ஜானவி அவனை அழைத்துக் கொண்டு போக,

“நிரு… வெற்றி வெறும் ப்ரண்ட் தானா..?? இல்லை பாய் ப்ரண்டா..” என்று சஞ்சயை பார்த்து கொண்டே வைஷு கேட்க, வெறும் புன்னகையை மட்டுமே நீரஜா பதிலாக அளித்தாள் .

அவள் என்ன பதில் சொல்வாள் என்று சஞ்சய் எதிர்பார்க்க, அவளின் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் தவித்தான். அதுமட்டுமல்ல வந்ததிலிருந்து இன்னும் அவனிடம் அவள் ஒரு வார்த்தை பேசவில்லை, இன்னும் அவன் மேல் இருக்கும் கோபம் போகவில்லையா…?? இல்லை சஞ்சய் என்ற ஒருவனை மறந்தேவிட்டாளா..??

இதற்கு மேலும் அங்கிருக்க அவனுக்கு பிடிக்கவில்லை, “மச்சான்… நான் ஆபிஸ்க்கு போய் மீட்டிங்க்கான ஏற்பாடை பார்க்கிறேன்… நீ மெதுவா வா..” என்று சொல்ல,

“என்ன மாப்ள என்ன அவசரம்… இருடா லன்ச் டைம் வரப்போகுது சாப்பிட்டே போகலாம்… மீட்டிங்க்கு டைம் இருக்குல்ல…” என்று நிகேதன் சஞ்சயை தடுத்தான்.

“இல்லடா… நான் அங்கேயே ஏதாவது சாப்ட்டுக்கிறேன்… நீ பொறுமையா சாப்பிட்டு வா…” என்று அவன் பேச்சை மறுத்து கிளம்பும் போது,

“இருங்க சஞ்சய்… நானும் வீட்டுக்குப் போகணும் என்ன ட்ராப் பண்ணிடுங்க…” என்று வைஷ்ணவி கேட்க, “சரி வா..” என்றான் சஞ்சய்.

“வைஷு எதுக்கு அதுக்குள்ள வீட்டுக்கு போகணும்… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போ…” என்று நிகேதன் சொன்னதற்கு,

“இல்லை மாமா… எனக்கு வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கு… நான் அப்புறம் வரேன்… அக்கா கிட்ட சொல்லிடுங்க… வரேன் நிரு…” என்று விடைப்பெற்று சஞ்சயோடு சென்றாள்.

அவர்கள் சென்றதும் நிக்கி நீரஜாவிடம் வந்தான்.

“நிரு என்ன இது… சஞ்சய் எல்லாம் மறந்துட்டு உன்னை ரிஸீவ் பண்ண ஏர்போர்ட் வரைக்கும் வந்தான்… நீ இப்படி சஞ்சய் கிட்ட பேசாம இருக்கலாமா..?? பாரு அவன் ஹர்ட் ஆகிட்டான்னு நினைக்கிறேன்…”

“நானா உன்னோட ப்ரண்ட ஏர்போர்ட்க்கு வர சொன்னேன்… அவரா வந்தாரு… இப்போ அவரா போய்ட்டாரு… அப்படி எல்லாம் மறந்துட்டு இருந்தா வந்ததும் அவரா விசாரிச்சிருக்கலாமே… ஏன் செய்யல… இத முதல்ல உன்னோட ப்ரண்ட் கிட்ட கேளு… குட்டி நீங்க சாப்பிடுங்க செல்லம்” என்று இதுதான் என்னோட பதில் என்பது போல் ஜெய்யை கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்.

இதற்கு மேல் இவளிடம் பதில் கிடைக்காது என்று அங்கிருந்து சற்று தள்ளி வர, வெற்றிக்கு அறையை காட்டிவிட்டு, அங்கே அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு ஜானு கீழே இறங்கி வந்தாள், பேசினால் நீரஜாவுக்கு கேட்காத தூரத்திற்கு நிகேதன் அவளை  அழைத்துச் சென்றான்.

“என்ன தனு… சஞ்சய் வைஷு எங்க காணோம்..”

“சஞ்சய் ஆபிஸ்க்கு போய்ட்டான்… வைஷு வீட்டுக்குப் போறேன்னு சொல்லி அவன் கூடவே கார்ல போய்ட்டா…”

“என்ன தனு இப்ப தான் நிரு வந்திருக்கா… அதுக்குள்ள இவ எதுக்கு வீட்டுக்கு போனா… சஞ்சயையும் எதுக்கு அனுப்புனீங்க… சாப்பிட்டு போகலாம்ல…”

“வைஷு பத்தி உனக்கே தெரியுமில்ல… நீயும் நிருவும் க்ளோஸா இருக்கறத போல… வைஷு நிரு கூட அவ்வளவு க்ளோஸ் இல்லல்ல விடு… ஆனா நிருவால தான் சஞ்சய் கிளம்பிட்டான்..”

“என்ன சொல்றீங்க தனு…”

“நிருவை ரிஸீவ் பண்ண சஞ்சயும் கூட வந்தான்… ஆனா வீட்டுக்கு வரவரைக்கும் கூட நிரு அவன் கிட்ட பேசல… ஏன் நிருன்னு கேட்டா… ஏன் உன்னோட ப்ரண்ட் பேச வேண்டியது தானேன்னு கேக்கறா…”

“கரெக்ட் தானே தனு… அவ்வளவு தூரம் போன சஞ்சயே நிருக்கிட்ட பேசியிருக்கலாமே…”

“கரெக்டா தான்… ஆபிஸ் போனா தான் அதை அவன்கிட்ட கேக்கணும்…” என்றதும் இருவரும் சிரித்தனர்.

“போதும் தனு காமெடி… நான் ஏற்கனவே சொன்னது தான்… இவங்க ரெண்டுபேர்க்கு நடுவுல ஏதோ இருக்கு… அதான் இப்படியெல்லாம் நடந்துக்குறாங்க… இல்லன்னா 3 வருஷத்துக்கு பிறகு மீட் பண்ணாலும் ஏன் ரெண்டுப்பேரும் பேசாம இருக்கணும்…

அவங்க ரெண்டுப்பேரும் லவ் பண்ணியிருக்காங்க… ஏதோ சண்டை வந்திருக்கு… அதான் இப்படி பேசாம இருக்காங்க தனு…”

“அப்படி ஒன்னு இருந்தா… ரெண்டுப்பேரும் என்கிட்ட மறைக்க மாட்டாங்க… 8 வயசுல இருந்து நீரஜாவுக்கு எல்லாமே நான் தான்… அவ சஞ்சயை லவ் பண்ணியிருந்தா என்கிட்ட பர்ஸ்ட் சொல்லியிருப்பா… இதுக்கும் நானே அவக்கிட்ட கேட்டேனே அப்படி எதுவும் இல்லன்னு சொல்லிட்டாளே..”

அதேபோல தான் சஞ்சயும்… அவனோட அம்மாக்கு அப்புறம் என்கிட்ட தான் எல்லாம் ஷேர் பண்ணிப்பான்… ஒருவேளை நிருவை அவன் லவ் பண்ணியிருந்தா… என்கிட்ட சொல்லல்லாம் அவன் யோசிக்கமாட்டான்…”

“அப்புறம் அவங்களுக்குள்ள என்னவா இருக்கும் தனு… ஏன் அவங்க பேசாம இருக்கணும்…”

“நீதான் அவளுக்கு க்ளோஸ் ஆச்சே… நீயே அவக்கிட்ட இதப்பத்தி கேட்க வேண்டியது தானே…”

“அவ போனதடவை வந்தப்பவே கேட்டேன் தனு… அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா..??”

“என்ன சொன்னா…”

“உனக்கு ரொம்ப கற்பனை ஜாஸ்தியா இருக்கு ஜானு… அதை வேஸ்ட் பண்ணாத… ஏதாவது கதையோ, கவிதையோ எழுதி புக் போடு, என்னை விட்டுடுன்னு சொல்றா… இதுக்கூட நல்ல யோசனையா இருக்குல்ல… அதை செய்யலாம்னு பார்க்கிறேன்…”

“நீ எது வேணா செய்… ஆனால் உன் புருஷன் என்னை மறந்திடாதம்மா…”

“போதும் தனு… கேப் கிடைச்சா கடலை போட பார்ப்பீங்களே… நிரு மேட்டர்க்கு வாங்க….. நிருவுக்கும் சஞ்சய்க்கும் என்ன சண்டையா இருக்கும்…”

“நம்ம நிருவை பத்தி தான் உனக்கு தெரியுமில்ல நவி… சின்ன வயசுல இருந்தே அவளுக்கு பிடிக்காத விஷயத்தை யாராவது செஞ்சா அவங்க கூட பேசமாட்டா… சஞ்சய் பத்தி அவ ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கா…  அதான் நிரு அப்படி இருக்கா… நம்ம சஞ்சய் மட்டும் என்னவாம்… அதைப்பத்தியல்லாம் அவன் கவலைப்பட்ற ஆள் இல்லை… அதான் ரெண்டுப்பேரும் இப்படி இருக்காங்க… இத சஞ்சயே என்கிட்ட சொல்லியிருக்கான்…

இதை தவிர நீ நினைக்கிற மாதிரில்லாம் எதுவுமில்ல… சரி சாப்பாடு எடுத்து வை… நான் நிருவை ப்ரஷ் ஆக சொல்றேன்… வெற்றி வந்ததும் சாப்பிடலாம்…” என்று அவன் நீரஜாவிடம் போக,

“நீங்க என்ன சொன்னாலும் ரெண்டுப்பேரும் காதலிக்கிறாங்கன்னு தான் எனக்கு தோனுது தனு…” என்று ஜானவி மனதில் நினைத்துக் கொண்டாள்.

காரை வேகமாக சஞ்சய் ஓட்டுவதிலேயே, சஞ்சய்க்கு மூட் சரியில்லை என்று வைஷ்ணவிக்கு தெரிந்தது. இருந்தாலும் அவள் அமைதியாக இருக்கவில்லை, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல நீரஜா, வெற்றி பற்றி பேசினாள்.

“ஏன் சஞ்சய் நிரு கூட வந்திருக்காரே வெற்றி அவர் நிருவுக்கு வெறும் ப்ரண்டா மட்டும் இருப்பாருன்னு நினைக்கிறீங்களா…??”

“அவன் யாரா இருந்தா என்ன..?? இப்போ எதுக்கு அந்த பேச்சு வைஷு..”

“அது… வெற்றிய வீட்டில் தங்க வைக்கிறாளே… அதான் கேட்டேன்…”

“ஏன் ப்ரண்டா இருந்தா தங்க வைக்கக் கூடாதா..”

“இதுவரைக்கும் நிரு அப்படி யாரையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்ததில்லை… இப்போ மட்டும் கூட்டிக்கிட்டு வந்திருக்காளே… ஒருவேளை ரெண்டுபேருக்கும் லவ்வா கூட இருக்கலாமில்ல

ம்ம்… பரவாயில்லை ரெண்டுப்பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லாதான் இருக்கும்… என்ன நிரு ஒல்லியா இருக்கா… வெற்றி கொஞ்சம் குண்டா இருக்காரு… நிருவுக்கே பிடிச்சிடுச்சு அப்புறம் நமக்கு என்ன…?? இல்ல சஞ்சய்…”

“வைஷு… நான் இப்போ ஒரு முக்கியமான மீட்டிங்க அட்டண்ட் பண்ணனும்… நான் அதைப்பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்… ப்ளீஸ் கொஞ்சம் பேசாம வா…” என்று வைஷுவை அமைதிப்படுத்தினாலும், சஞ்சயின் மனமோ நீரஜா, வெற்றி பற்றியே நினைத்துக்  கொண்டிருந்தது.

தன் தோள் மீது தூங்கிவிட்டிருந்த ஜெய்யை தனது அறையிலேயே படுக்க வைத்தாள் நீரஜா, அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டதும் நிக்கியிடம் கொடுத்துவிட்டு, குளித்துவிட்டு வெற்றியோடு சேர்ந்து சாப்பிட்டதும், ஜெய்யை அவளது அறைக்கே கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள். அவளோடு விளையாடிக் கொண்டு இருந்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.

தூங்கிக் கொண்டிருந்த ஜெய்யை பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவிற்கு ஒரே ஆச்சர்யம்!! வந்தவுடனே அவளோடு ஒட்டிக் கொண்டான் இந்த குட்டி..

என்னதான் அடிக்கடி வீடியோ சேட்டில்  இவனோடு பேசியிருந்தாலும், அடிக்கடி அவள் அண்ணனும் அண்ணியும் இவனோடு சிங்கப்பூர் வந்து அவளை பார்த்துவிட்டு போனாலும், அவளைப் பார்த்ததும் அத்தை அத்தை என்று அவளோடு ஒட்டிக் கொள்வான் என்று இவள் எதிர்பார்க்கவில்லை,

எல்லாவற்றிற்கும் காரணம் அவள் அண்ணனும் அண்ணியும் தான், எப்போதும் அவள் மீது அக்கறையாக அவர்கள் இருந்து அவளை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பதால் இவனுக்குமே அவள் மீது பாசம் வந்துவிட்டது.

ஆனால் இவ்வளவு பாசமாக இருக்கும் குடும்பத்தைக் கூட அவள் விட்டுட்டு சிங்கப்பூர் சென்றதற்கு காரணம் சஞ்சய் தான், அப்போது அவன் மேல் ஆயிரம் மடங்கு கோபம்… ஆனால் அதையும் மீறி அதிகமான காதல்,

ஏர்போர்ட்டில் அவனைப் பார்த்ததும் சந்தோஷப்பட்டாலும், ஏதோ சஞ்சயோடு பேச தயக்கமாக இருந்தது. இதில் அவன் வெற்றியை பார்க்க, எவ்வளவு தன்னைஅவன் கஷ்டப்படுத்தினான். அதனால் கொஞ்சம் வெறுபேற்றுவதற்காக அப்படி நடந்துக் கொண்டாள்.

அவனே ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்தால் ஒன்றுமே பேசாமல் சென்றுவிட்டான். தப்பு செய்த அவனுக்கே அவ்வளவு இருக்கும் போது அவளுக்கு எவ்வளவு இருக்கும்?

அவள் தான் அவனுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவனோ அவளைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை போல, அவள் முன் தானே வைஷுவை வீட்டில் விட கூட்டிக் கொண்டு போனான்.

இங்கு வந்த போதெல்லாம் வைஷு சஞ்சய் பற்றி தான் பேசிக் கொண்டிருப்பாள். சஞ்சய் இப்படி அப்படி… சஞ்சயோட இங்கப் போனேன், அங்கப் போனேன் என்று வைஷு சொன்ன போதெல்லாம், அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் இன்று நேரிலேயே பார்த்துவிட்டாளே, அப்போ மந்த்ரா, இப்போ வைஷுவா… பிறகு எதற்கு ஏர்போர்ட்க்கு வந்தானாம்…?? இன்னும் அவள் மனதை கஷ்டப்படுத்தவா…??

அவள் சஞ்சய் பற்றிய யோசனையில் இருக்கும்போது ஜெய் தூக்கத்திலேயே சிரித்தான். இப்படி குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா..?? எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்திருக்கலாம், என்று அவள் மனம் யோசித்தது. ஜெய்யின் சிரிப்பை பார்த்ததும் திரும்பவும் சஞ்சயின் ஞாபகம் வந்தது.

ஜெய் பிறந்து இரண்டு நாள் கழித்து தான் அவள் வந்து பார்த்தாள். “நம்ம அப்பா அம்மா இல்லாததால அவர்களுக்கு பிறகு நீதான் எனக்கு முக்கியம் நிரு… நீதான் எங்க குழந்தைக்கு பேர் வைக்கணும்..”என்று நிகேதன் சொல்லும்போது,

“அப்பா அம்மாக்கு அப்புறம் பெரியவங்கன்னு அத்தை மாமா இருக்கும்போது என்னை எதுக்கு பேர் வைக்க சொல்ற நிக்கி..” என்றுகேட்டப்போது, 

“அத்தை மாமா தப்பா நினைக்கமாட்டாங்க… நீயே வை..” என்று அவன் கூறினான்.

“இவனுக்கு எல்லாமே வெற்றியா இருக்கணும்… அதனால ஜெய்ன்னு ஆரம்பிக்கற மாதிரி பேர் வைக்கலாம்..” என்று ஜெய் கிஷோர் என்று பேர் வைத்தாள்.

அந்த பேருக்கான இன்னொரு காரணம், அது ஆங்கிலத்தில் சஞ்சய் என்ற பெயரின் பாதி, அதனால்தான் அந்த பேரை வைத்தாள்.

அவளுக்கு சஞ்சயை ஜெய் என்று கூப்பிட தான் ஆசை!!  ஏனோ அப்படி கூப்பிடும் வாய்ப்பு இதுவரையிலும் அமைந்ததில்லை. ஏன் அவன் முழு பேர் சொல்லி கூப்பிட்டது கூட எப்போதாவது தான், இனியும் அந்த வாய்ப்பு கிடைக்காதோ என்னவோ…??

உன் பேர் சொல்ல ஆசை தான்…

உள்ளம் உருக ஆசை தான்…

உயிரில் கரைய ஆசை தான்…

ஆசை தான்… உன் மேல் ஆசை தான்…

இவள் சிந்தித்து கொண்டிருப்பதற்கு ஏற்றது போல் அவளது அலைபேசியில் இந்த பாடல் ஒலிக்க, அது தேவையில்லாத அழைப்பு என்று அதை துண்டித்தவள், இதற்கு மேல் ஏன் இந்த ரிங்டோனை வைக்க வேண்டும் என்று அதை  மாற்றினாள்.

                  மௌனம் தொடரும்..