KPEM 19

மௌனம் 19

அவசரமான இந்த உலகத்தில் பத்து நாட்கள் அதிவேகமாக ஓடிவிட்டது. ஆனால் சஞ்சய்க்கும், நீரஜாவிற்கும் பத்து நாட்கள் பத்து யுகங்களாக கழிந்தது.

மூன்று வருடமாக அவர்களுக்குள் நடைபெற்ற கண்ணாமூச்சி ஆட்டம், சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்திருந்த வேளையில், இப்போதோ திரும்பவும் தொடங்கிவிட்டது.

ஒரே அலுவலகத்தில் தான் இருவருக்கும் வேலை என்றாலும், ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர். அப்படியே சந்திக்க நேர்ந்தாலும், இருவரிடையும் பேச்சு வார்த்தைகள் என்பது இல்லை. இருவரும் அடுத்தவரின் திருமண அறிவிப்பை குறித்து கோபத்தோடும், வருத்தத்தோடும் சுற்றிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் நிகேதனோ நீரஜாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தான். அன்று ஜானவியை ஒருமுறை நீரஜாவிடம் பேச சொல்ல வேண்டும் என்று நினைத்தவன், ஜானவி வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை கூறினான்.

நிகேதன் சொன்ன விஷயத்தை கேட்டவளுக்கு அதிர்ச்சியே!! சில நாட்களாக இருவரின் நடவடிக்கைகளை பார்த்தவளுக்கு, அவர்களுக்குள் சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றோ இருவரும் வேறு ஒருவரை மணக்க சம்மதித்தது எதனால்..?? சஞ்சயிடம் இது குறித்து கேட்க முடியாது. நெருங்கிய நண்பனான நிகேதனாலேயே அவனிடம் பேச முடியவில்லையே, இவள் மட்டும் எப்படி கேட்க முடியும்? ஆனால் நீரஜாவிடம் கேட்க முடியுமே, நினைத்தப்படியே போய் கேட்கவும் செய்தாள். ஆனால் நீரஜா அவளிடம் கூட மனதில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை.

“நிரு… நான் உன் அண்ணிங்கிறத விட, நாம அத்தைப் பொண்ணு, மாமா பொண்ணுங்கிறத விட, நாம நல்ல ஃப்ரண்ட்ஸ்… எனக்கும் உனக்கும் காலேஜ்லயும், ஸ்கூல்லயும் நிறைய ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்க… ஆனா அவங்கக் கூட இருந்த நம்ம ப்ரண்ட்ஷிப்ப விட நாம ரெண்டுப்பேரும் தான் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்… நாம எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணியிருக்கோம்… அப்படி இருக்கப்போ சஞ்சயை பத்தி உன்னோட மனசுல இருக்கறத ஏன் சொல்ல மாட்ற…”

“ஏன்னா அப்படி என்னோட மனசுல எதுவும் இல்ல ஜானு.. அது தான் உண்மை…”

“நீ பொய் சொல்ற நிரு… நீ யார்க்கிட்ட வேணும்னாலும் பொய் சொல்லலாம்… ஆனா என்கிட்ட நீ பொய் சொல்ல முடியாது…”

“என்னோட மனசுல சஞ்சய் பத்தி எதுவுமே இல்ல ஜானு… அதுதான் உண்மை… நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க…”

“சரி நீ சொல்றது பொய்ன்னு தெரியும்… என்கிட்ட உண்மையை சொல்லலைன்னா கூட பரவாயில்ல… ஆனா இப்போ அவசரமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு எதுக்கு…??

நானும் தனுவும் காதலிச்சப்போ… அப்பா ஒத்துக்கமாட்டாருன்னு நான் பயந்தேன்… நான் அப்பா சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உன்கிட்ட சொன்னப்ப… நீ என்ன சொன்ன..??

மனசுக்குள்ள ஒருத்தரை வச்சுக்கிட்டு இன்னொருத்தரை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் ஜானு… அப்புறம் அது நரகமான வாழ்க்கையா ஆயிடும்னு சொன்னியே… இப்போ நீ வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்க ஏன் ஒத்துக்கிட்ட… அன்னைக்கு எனக்கு சொன்னதை நான் உனக்கு சொல்றேன் நிரு… நீ சஞ்சயை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சுக்கிட்டா.. அந்த வாழ்க்கையே நரகம் ஆயிடும்…”

“இதுலையே உனக்கு தெரியலையா ஜானு… உனக்கு அவ்வளவு சொன்ன நான் இப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்னா.. நான் சஞ்சயை லவ் பண்ணலைன்னு இப்பயாவது தெரிஞ்சிக்க..”

“இருந்தாலும் இவ்வளவு அழுத்தமா இருக்கக் கூடாது நிரு… நீ உன்னோட லைஃபை கெடுத்துக்கற… நீ மனசை விட்டு பேசினா தான் நாங்க சஞ்சய் கிட்ட பேச முடியும்… ஆனா நீ சொல்ல மாட்ட அப்படித்தானே… எப்படியோ போ..” என்று ஜானவி கோபம் கொண்டாள்.

நிகேதனிடமும் வந்து நீரஜா சொன்னதை கூறினாள். அவனும், “இதுக்கு மேல நாம என்ன செய்ய.. சஞ்சய் அவனோட மாமா பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க போறான்… அதனால நிருவுக்கும் நாம மாப்பிள்ளை பார்க்கறது தான் சரி” என்றான். அண்ணனாக அவனது கவலையும் ஜானவிக்கு புரிந்தது. அதனால் அவன் சொல்வது சரி என்று அமைதியாகிவிட்டாள்.

ஏதோ அலுவலக சம்பந்தமாக நிகேதனிடம் பேச சஞ்சய் அவனது அறைக்கு வந்தான்.

“மாப்ள வா வா… நானே உன்னைப் பார்க்க உன்னோட கேபினுக்கு வரலாம்னு இருந்தேன்… நீயே வந்துட்ட.. உக்காரு ஒரு முக்கியமான விஷயம் பேசணும் உங்கிட்ட…”

“என்னடா… நேத்து பேக்டரிக்கு போனியே அதைப் பத்தியா..?? நானே அதைப்பத்தி தான் கேக்க வந்தேன்…”

“ஹே அதில்லடா… நான் பேச வந்தது வேற… இந்த போட்டோவ பாரேன்… இது யார்னு தெரியுதா..??”

“தெரியலையே டா.. யாரிது..??”

“ராஜ் இண்டஸ்ட்ரீஸ் கேள்விப்பட்ருக்கல்ல… அதோட எம்.டி செல்வராஜ் இருக்காருல்ல… அவரோட சன் விஜய்.. இப்போ அவனும் அவங்க அப்பாவோட ஆஃபிஸ்ல ஜே.எம்.டியா இருக்கான்..”

“ம்ம் தெரியும் மச்சான்… நானும் ஒருதடவை ஒரு பிஸ்னஸ் மீட்டிங்ல ரெண்டுப்பேரையும் பார்த்திருக்கேன்…”

“ஹே அப்படியா… அந்த விஜய் எப்படிடா..?”

“ம்ம் நான் பேசின வரைக்கும் நல்ல பர்சனா தான் தெரிஞ்சுது… அவங்க இண்டஸ்ட்ரிய இன்னும் டெவலப் பண்ற ஆர்வம் அந்த விஜய்க்கிட்ட நிறையவே இருந்தது.. பட் பர்சனலா அந்த விஜய் பத்தி எனக்கு எதுவும் தெரியாது…”

“ஓஹோ… சரி இந்த விஜய் நம்ம நிருவுக்கு பொருத்தமா இருப்பானாடா..?” நண்பன் கேட்ட கேள்வி புரியாமல் சஞ்சய் கேள்வியாய் பார்த்தான்.

“தரகர்க்கிட்ட மாப்பிள்ளை பார்க்க சொல்லி நிருவோட போட்டோ கொடுத்திருந்தேண்டா.. 2 நாள் முன்னாடி நம்ம நவிக் கூட நிரு வெளியப் போயிருக்கா… அப்போ இந்த விஜய் நம்ம நிருவைப் பார்த்திருக்கான்… அப்புறம் தரகர் மூலமா நிரு போட்டோ பார்த்ததும் அவனுக்கு நிருவை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கான்… தரகர் இது நல்ல சம்பந்தம், பையன் நல்ல பையன் விட்டுடாதீங்கன்னு சொன்னாருடா.. நான் கேள்விப்பட்ட வரையும் அந்த விஜய் நல்ல ஆள் மாதிரி தான் தெரியுது.. இந்த சம்பந்தம் ஓகே ஆகற மாதிரி இருந்தா இன்னும் கொஞ்சம் டீப்பா விசாரிக்கணும்… இந்த விஜய்யை நிருக்கு பிடிக்குமாடா..??” என்று நிகேதன் பேச பேச சஞ்சய் குழம்பிப் போனான்

“என்னடா… திரு திருன்னு முழிக்கிற… இந்த விஜய் நம்ம நிருக்கு பொருத்தமா இருப்பானான்னு சொல்லுடா..??”

“ஹே மச்சான்.. நீ என்னடா சொல்ற… நீரஜாக்கு மாப்பிள்ளை பார்க்கிறியா..?? அப்போ வெற்றி..??”

“ஹே என்னடா உளர்ற..??”

“வெற்றி நீரஜாவ லவ் பண்ணான் இல்ல..”

“ஹே அந்த வெற்றியோட லவ்வ நிரு அக்சப்ட் பண்ணலேயே டா.. அதைப்பத்தி தான் அன்னைக்கு சொல்ல வந்தேன்… நீ எங்க காது கொடுத்து கேட்ட..”

“என்னடா சொல்ல வந்த..??”

“நீயும் நிருவும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்… ஆனா அந்த வெற்றி வந்து நீரஜாவை லவ் பண்றதா சொன்னான்… சரி நிருவே அவனுக்கு முடிவை சொல்லட்டும்னு நினைச்சேன்… அவளும் பெங்களூர்ல வச்சு அந்த வெற்றிக்கிட்ட அவனை காதலிக்கலன்னு சொல்லியிருக்கா…

அப்புறம் தான் உன்கிட்ட நான் பேச வந்தேன்…. ஆனா நீ உன்னோட மாமாப் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கறதா சொன்ன… நீரஜாக்கிட்டேயும் உன்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு கேட்டேன்…. ஆனா அவளுக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னு சொல்லிட்டா…. அதான் வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டேண்டா… நீரஜாவும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா… அவ முடிவை மாத்தறதுக்குள்ள ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கணும்…” என்று நிகேதன் பேசிக் கொண்டே போக,

அன்று நிகேதன் பேச வந்தது என்ன என்பதை கூட காதில் வாங்காமல் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று சஞ்சய் நினைத்துக் கொண்டான்.

“டேய் மச்சான் அது வந்து…” வெற்றி இவனிடம் கூறியதை பற்றி சொல்ல வந்த போது அறை கதவை திறந்துக் கொண்டு அங்கே நீரஜா வந்தாள்.

“நிக்கி…” என்று அழைத்தப்படி உள்ளே வந்தவள், சஞ்சயும் உடன் இருப்பதை கவனித்தாள். அவள் பார்வையே அவனை இங்கு அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை சஞ்சய்க்கு உணர்த்தியது.

“நிக்கி… லாஸ்ட் மன்த் நம்மளோட எந்த ப்ராடக்ட் அதிகமா ஸேல் ஆயிருக்குன்னு லிஸ்ட் கேட்டல்ல… இந்த ஃபைல்ல இருக்கு…”

“நிரு… அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… முதல்ல இந்த போட்டோவ பாரு…” என்று மாப்பிள்ளை போட்டோவை அவளிடம் கொடுத்தான். சஞ்சயோ தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த போட்டோல இருக்க ஆளை ஞாபகம் இருக்கா… அன்னைக்கு நவி கூட போனப்ப பார்த்தியாமே..”

“ஆமாம் நிக்கி… இப்போ ஞாபகம் வருது… ஜானுவும் நானும் ஷாப்பிங் போனப்போ அவளோட ஃப்ரண்ட் ஒருத்தியை பார்த்தா.. அந்த பொண்ணோட இவரும் இருந்தாரு… அந்த ப்ரண்டோட ரிலேடிவ்னு அறிமுகப்படுத்தினா..”

“இப்போ தரகர் மூலமா இந்த வரன் வந்திருக்கு… உன்னை ஏற்கனவே நேர்ல பார்த்ததால விஜய்க்கு உன்னை ரொம்ப பிடிச்சுடுச்சாம்… அதனால நமக்கும் ஓகேன்னா உடனடியா நிச்சயத்தார்த்தமே வச்சுக்கலாம்னு சொல்றாங்க… ஆனா நீ உடனேல்லாம் சொல்ல வேண்டாம்… இந்த விஜய் யை நேர்ல பார்த்து ஒருமுறை பேசு… அப்புறமா உன்னோட விருப்பத்தை சொல்லு… சரியா..??” என்று நிகேதன் கேட்டதற்கு நீரஜா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று சஞ்சய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ,

“நிக்கி… உனக்கு இந்த பையனை பிடிச்சிருந்தாலே போதும்… நான் தனியா பேசணும்னு அவசியமில்ல… இந்த சம்பந்தத்துல உனக்கு திருப்தின்னா நீயே முடிவெடு..” என்றாள். சஞ்சயோ அந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியோடு நின்றிருந்தான்.

“சரி நிக்கி நான் என்னோட கேபினுக்குப் போறேன்…” என்று அவள் வெளியேப் போக,

“மாப்ள.. நான் அந்த தரகர் கிட்ட பேசணும்… அப்புறமா நாம பேக்டரி பத்தி பேசலாம்..” என்று நிகேதனும் தொலைபேசியில் தரகர் எண்ணை அழுத்த, சஞ்சயும் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

தன்னுடைய அறையில் வந்து உட்கார்ந்தவனுக்கோ மனம் முழுவதும் குழப்பமே சூழ்ந்து இருந்தது. வெற்றி எதுக்காக இப்படி கூறினான்? நீரஜா அவனது காதலை ஏற்கவில்லையெனும் போது, ஏன் அப்படி சொல்ல வேண்டும்..??

அவன் தான் சொன்னான் என்றால், இவன் அதை எப்படி நம்பலாம்..?? வெற்றி சொன்னதை நிகேதனிடமோ.. இல்லை நீரஜாவிடமோ கேட்டு தெளிவுப் படுத்தியிருக்கலாம், அதை விட்டு வெற்றி சொல்லியதை நம்பி அவசரத்தில் என்னவெல்லாம் செய்துவிட்டான்?

ஏற்கனவே மந்த்ராவால் முட்டாளாகியது போதாது என்று, இப்போது வெற்றியால் முட்டாளாகிவிட்டான். இதனால் மனதில் உள்ளதை நீரஜாவிடம் வெளிப்படுத்த முடியாமலே போய்விட்டதே, இப்போது அவளுக்கு நிகேதன் மாப்பிள்ளை வேறு பார்க்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் நீரஜா வேறு ஒருவனை மணக்க ஒத்துக் கொண்டது ஏன்..?? அவள் மனதில் இவனுக்காக துளி கூட காதல் இல்லையா..?? நிகேதன் கேட்டதற்கு இவனை வேண்டாமென்று மறுத்துவிட்டாளாமே..?? ” இந்த கேள்விகளெல்லாம் மனதை குடைந்துக் கொண்டிருக்க, அப்போது இன்டர்காம் ஒலித்தது…

“சார்… Mr.கண்ணனோட அப்பாயின்மென்ட் கேட்ருந்தீங்கல்ல… அவர் அதை கன்ஃபார்ம் பண்ணிட்டாரு… இன்னிக்கு 4’o clock க்கு ஹோட்டல் அனுபமால உங்களை மீட் பண்ண சொன்னாரு..” என்று அவனுடைய பி.ஏ பேசினாள்.

தற்போது அவன் மனதில் இருந்த குழப்பங்களை ஒதுக்கிவிட்டு, வேலையில் கவனத்தை செலுத்த முயற்சி செய்தான்.

ஹோட்டல் அனுபமா

காத்திருக்க சொன்ன அறையில் உட்கார்ந்து உட்கார்ந்து பொறுமையிழந்த மந்த்ரா ஹோட்டலுக்கு வெளியே இருந்த புல் தரையில் சிறிது நேரம் நடமாட நினைத்து வெளியே வந்தாள்.

அந்த ஹோட்டலின் ரிஸப்ஷனிஸ்ட் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்காக அவள் வந்திருந்தாள். 4 மணிக்கு நேர்முகத் தேர்வு என்று சொன்னதால், 3 மணிக்கே அவள் வந்திருந்தாள். ஆனால் 4 மணியாகியும் இன்னும் நேர்முகத் தேர்வு நடைபெறவில்லை, அதனால் எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருப்பது என்று வெளியே வந்திருந்தாள்.

சிறிது காலமாகவே சென்னையில் ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தது. ஆனால் அதை செயல்படுத்தவும் மனதிற்கு தயக்கமாக இருந்தது. இதில் நீரஜாவிடம் பேசியப் பிறகு சென்னைக்கே சென்றுவிட்டால் என்ன..?? என்று தோன்றியதால் இந்த நேர்முகத் தேர்வுக்கு வர அவள் முடிவெடுத்தாள்.

பெங்களூரில் இருந்து கிளம்பும் போதே நீரஜாவிடம் விஷயத்தை கூற நினைத்தவள், பின் அந்த எண்ணத்தை கைவிட்டாள். அன்று நீரஜா பெங்களூர் ஹோட்டலில் பேசியதோடு சரி, அதன்பின் இவளை தொடர்புக் கொள்ளவே இல்லை, சஞ்சயிடம் பேசியதை சொல்ல சொல்லி அனுப்பியும் அவளிடமிருந்து ஒரு குறுந்தகவல் கூட வரவில்லை. இவளாக பேசி அதை கேட்கலாம் என்று நினைத்தாள்.

இருந்தும் அன்று இவள் உதவி செய்ததற்காக கூட நீரஜா நல்லவிதமாக பேசிவிட்டு சென்றிருக்கலாம், அதை நம்பி இவளாக போன் செய்து, அவளுக்கு அது தொந்தரவாக இருக்கக் கூடாதே என்றும் தோன்றியது.

நீரஜா பேசிய விதமே அப்படி அவள் நினைக்கக் கூடியவள் இல்லை என்பது தெரிகிறது.  இருந்தும் தயக்கத்தில் நீரஜாவை இவள் தொடர்புக் கொள்ளவில்லை, நேர்முகத் தேர்வுக்கு கிளம்பும் போதும் நீரஜாவிடம் பேசலாம் என்று நினைத்து பின் விட்டுவிட்டாள். ஒருவேளை வேலை கிடைத்தால், அப்போது இங்கு தங்குவதற்கான உதவியை அவளிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள். இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து வந்திருக்கிறாள், நேர்முக தேர்வு முடிந்ததும் பெங்களூருக்கு உடனே பஸ் ஏறி விட வேண்டும். சிந்தித்தப்படியே நடந்தவள், அப்போது தான் அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்துக் கொண்டிருந்த சஞ்சயை கவனித்தாள்.

நீரஜாவிடம் மன்னிப்பு கேட்டது போல், சஞ்சயிடமும் மன்னிப்பு கேட்கும் தருணத்தை இவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். முக்கியமாக அவனிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டுமே, நல்லவள் போல் நடித்து அவனை ஏமாற்றிவிட்டாளே, எனவே “சஞ்சய்..” என்று அவனுக்கு குரல் கொடுத்தாள்.

தன் பெயரை யாரோ அழைத்ததை கேட்டு திரும்பியவன், அங்கு மந்த்ராவை கண்டதும் கோபமானான். அதுவும் இன்றிருந்த அவன் மனநிலைக்கு அவளை ஏதாவது செய்தாலும் செய்துவிடுவான். அந்த அளவுக்கு அவள் மேல் அவனுக்கு கோபம் இருந்தது. எனவே அவள் கூப்பிட்டதை பொருட்படுத்தாமல் விறுவிறுவென்று கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

சஞ்சயின் இந்த செய்கையை மந்த்ரா எதிர்பார்க்கவில்லை. நீரஜா தன்னைப்பற்றி அவனிடம் கூறியிருப்பாள் என்று நினைத்தாள். ஆனா சஞ்சய் இப்போது நடந்துக் கொண்டதைப் பார்த்தால், அவனிடம் நீரஜா தன்னைப் பற்றி கூறவில்லையா..?? ஆனால் ஏன்..?? ஒருவேளை தன்னைப்பற்றி கூறினால், வெற்றி செய்ததையும் சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லவில்லையோ, எப்படி இருந்தாலும், அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமே, அதனால் அவன் கார் பார்க்கிங்கை அடையும் போது, இவளும் ஓட்டமும் நடையுமாக அங்கே சென்றாள்.

“ஏய்… உன்னை பார்த்தும் பார்க்காம வந்ததிலேயே தெரியலையா..?? உன்கூட பேச எனக்கு இஷ்டமில்லைன்னு… ஒழுங்கா நான் ஏதாவது பண்றதுக்குள்ள ஓடிப் போய்டு… இல்ல நான் ஏதாவது செஞ்சாலும் செஞ்சுடுவேன்… உன்னோட மூஞ்ச பார்க்கக் கூட எனக்கு பிடிக்கல..”

“சஞ்சய்… உங்க கோபம் எனக்குப் புரியுது… நான் செஞ்ச தப்புக்கு உங்கக் கிட்ட மன்னிப்பு கேக்க தான் வந்திருக்கேன்… நான் அப்படி பண்ணியிருக்கக் கூடாது சாரி..”

“செய்யறதெல்லாம் செஞ்சுட்டு சாரியா.. இங்கப் பாரு என்னைக் கடுப்பேத்தாத… நானே ரொம்ப நொந்துப் போயிருக்கேன்… என் லைஃப்ல எல்லாம் நல்லாப் போய்ட்ருந்துச்சு…

நல்ல அம்மா, அப்பா… நல்ல ப்ரண்ட்… பிடிச்ச படிப்பு, வேலை… அதேபோல பிடிச்சப் பொண்ணே மனைவியாவும் வரப் போறான்னு ரொம்ப சந்தோஷத்துல இருந்தேன்… ஆனா எப்போ உன்னைப் பார்த்தேனோ… அன்னைக்கே என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு… அன்னைக்கு நீரஜாக்கும் எனக்கும் நடுவுல விழுந்த விரிசல் இன்னைக்கு வர சரியாகல… இப்போ அவ என்னை விட்டு முழுசா விலகிடுவாளோங்கிற பயத்துல இருக்கேன்…

இவ்வளவுக்கும் காரணம் நீ… இதுல மன்னிப்பு கேக்கறீயா..??” என்று அவன் கோபத்தில் பேச மந்த்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

இவளைப் பற்றி தான் நீரஜா சஞ்சயிடம் எதுவும் கூறவில்லை என்று பார்த்தால், அவளின் காதலைப் பற்றியும் இவனிடம் பேசவில்லையா..?? மனம்விட்டு சஞ்சயிடம் பேச வேண்டும் என்று தானே  அன்று அவ்வளவு அவசரமாக கிளம்பினாள். பின் ஏன் இவனிடம் அவள் பேசவில்லை, அவள் யோசனையில் இருக்க,

“ஏய் உன்னை நான் போக சொன்னேன் இல்ல… நான் காரை எடுக்கணும் நகரு… இல்லை காரை மேல ஏத்தினாலும் ஏத்திடுவேன்…” என்று அவன் கத்தினான்.

“சஞ்சய் நீங்க நினைக்கிறா மாதிரியெல்லாம் எதுவுமில்ல… உங்களுக்கு தெரியுமா..?? நீரஜா உங்களை ரொம்ப லவ் பண்றா… அவளே அதை என்கிட்ட சொன்னா தெரியுமா..?? என்கிட்ட மட்டுமில்ல உங்க்கிட்டேயே அதை நேரா சொல்ல நினைச்சா… ஆனா அவ ஏன் இன்னும் உங்கக் கிட்ட பேசலைன்னு தெரியல..”

“என்ன சொல்ற… திரும்ப நீ ஏதாவது ப்ளான் பண்றியா..?? சுத்தமா என்னோட காதலுக்கு சமாதிக் கட்ட முடிவுப் பண்ணிட்டியா..??” என்று கொந்தளித்தான். ஏற்கனவே இவளின் பேச்சையும், வெற்றியின் பேச்சையும் கேட்டு ஏமாந்தது போதாதா.. இப்படி தானாக தேடி வந்து அவளே சொல்வதால், இதிலும் ஏதோ திட்டம் இருக்குமோ என்று பயந்தான்.

“சஞ்சய் நான் இப்போ முன்ன மாதிரி இல்ல… நான் மாறிட்டேன்… நான் நீரஜாவை நேர்ல பார்த்தேன்… கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவ பெங்களூர்க்கு வந்தால்ல… ஒரு ப்ரண்டோட மேரேஜ்க்கு… அப்போ தான் அவளை நான் பார்த்தேன்… அவக்கிட்ட மன்னிப்பும் கேட்டேன்… ” என்று அவள் சொல்லும்போது, அது உண்மையாக இருக்குமோ என்று அவன் யோசித்தான். இருந்தும் முழுதாக அவளை அவனால் நம்பவும் முடியவில்லை.

அவன் பார்வையே இவளை அவன் நம்பவில்லை என்பதை மந்த்ரா உணரவே, இவளை அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக இல்லையென்றாலும், நீரஜாவின் காதலைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று நடந்ததைப் பற்றி அவனிடம் கூற நினைத்தாள்.

“சஞ்சய்… உங்களுக்கு பெங்களூர்ல நடந்தது முழுசா தெரிஞ்சா தான் என்னை நம்புவீங்க… அதனால நான் சொல்றதை பொறுமையா கேளுங்க..” என்றவள் அன்று நடந்ததை அப்படியே அவனுக்கு விளக்கினாள். ஆனால் அதையெல்லாம் கேட்டவனோ கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்..

“வெற்றியை சும்மாவா விட்டீங்க… அவனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திருக்கணும்.. ஏன் அவனை விட்டீங்க..”

“நீரஜா அதைப் பெரிசுப் பண்ண விரும்பல சஞ்சய்… அதால கல்யாணப் பொண்ணுக்கு ப்ராப்ளம் வரும்… உங்களுக்கோ இல்லை அவன் அண்ணனுக்கோ தெரிஞ்சா கோபப்படுவீங்கன்னு தான் அமைதியா இருந்துட்டா..”

“இருந்தாலும் வெற்றியை விட்ருக்கக் கூடாது… இப்போ அவன் மட்டும் இங்க இருந்திருக்கணும்… சிங்கப்பூர் போனதால தப்பிச்சான்…” என்று கோப மனநிலையில் இருந்தவன், திடிரென மந்த்ரா சொன்ன அடுத்த விஷயத்தை நினைத்து கொஞ்சம் குழம்பிய மனநிலைக்கு மாறினான்.

“மந்த்ரா… நீ நிஜமா தான் சொல்றீயா..?? நீரஜா என்னை லவ் பண்றதா உன்கிட்ட சொன்னாளா..?? நிஜமா இதுல உன்னோட ப்ளான் எதுவும் இல்லையே..??” நம்ப முடியாமல் கேட்டான். ஒருவேளை வெற்றியோடு கூட்டு சேர்ந்து ஏதாவது திட்டமிடுகிறாளோ என்று பயந்தான்.

அவன் இன்னும் கூட அவளை நம்பாதது மந்த்ராவிற்கு கஷ்டமாக தான் இருந்தது. இருந்தும் அவனின் நிலையும் புரியத்தான் செய்கிறது. அவள் செய்த காரியத்தால் மூன்று வருடத்திற்கு மேல் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளதே,

“சஞ்சய்… நீங்க என்னை நம்ப வேண்டாம்.. நீரஜாவை நம்புவீங்கல்ல…” என்றவள், தன் கைப்பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து காண்பித்தவள்,

“இது நீரஜா கொடுத்த கார்ட்.. இப்போ நானே அவளுக்கு போன் செஞ்சு பேசறேன்… அவ வாயாலேயே உங்களை லவ் பண்றதைப் பத்தி சொல்ல வைக்கிறேன்..” என்றவள், நீரஜாவுக்கு தன் அலைபேசியில் இருந்து அழைத்தாள். அவள் அலைபேசியை ஸ்பீக்கரில் போட, அந்தப் பக்கம் மணி அடிக்கும் ஓசை சஞ்சய்க்கு கேட்டது.

“ஹலோ மந்த்ரா… எப்படியிருக்க..??” நீரஜா உற்சாகமாக பேசினாள்.

“நல்லா இருக்கேன் நிரு… நீ எப்படியிருக்க..??”

“நானும் நல்லா இருக்கேன்… உன்கிட்ட இருந்து போன் வந்ததுல ரொம்ப சந்தோஷம் மந்த்ரா..”

“ஆமாம் போன் பண்ணவே இப்படி சொல்றல்ல… அன்னைக்கு நான் இனி உனக்கு ஒரு நல்ல ப்ரண்ட்ன்னு சொன்னதோட சரி… அப்புறம் ஒரு போன் கூட உன்கிட்ட இருந்து இல்ல… சரி நீயே பேசுவன்னு நானும் இத்தனை நாளா பண்ணாம இருந்தேன்… ஆனா மனசு கேக்கல… அதான் பண்ணேன்.. நான் போன் பண்ணதுல உனக்கு ஏதும் தொந்தரவு இல்லையே…??”

“ஹே மந்த்ரா ஏன் இப்படியெல்லாம் பேசற… ஊருக்கு  வந்ததும் வொர்க் டென்ஷன்ல போன் பண்ணாம விட்டுட்டேன்… அதுக்கு கோபமா..?? நான் அன்னைக்கு சொன்னா மாதிரி உன்னை நல்ல ப்ரண்டா தான் நினைக்கிறேன்… நீ எப்போ வேணாலும் போன் பண்ணலாம்..”

“எனக்கு தெரியும் நிரு… சும்மா தான் அப்படி சொன்னேன்… இருந்தும் எனக்கென்ன கோபம்னா.. அன்னைக்கு சஞ்சய்க்கிட்ட மனம்விட்டு பேசணும்னு அவசரமா கிளம்பிப் போன… போனதும் கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சுன்னு போன் பண்ணுவன்னு பார்த்தா… உன்கிட்ட இருந்து ஒரு மெசேஜ் கூட வரலியே… அதான் கோபம்…

சரி அதைவிடு… சஞ்சய்க்கிட்ட பேசினியா..?? உன்னோட லவ்வ சொன்னீயா..?? சஞ்சய் என்ன சொன்னாரு..?? உடனே கல்யாணம் செஞ்சுக்கிற ஐடியா இருக்கா..?? இல்லை இன்னும் கொஞ்ச நாள் லவ் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறீங்களா..??” என்று மந்த்ரா கேட்டதற்கு, நீரஜா மௌனமாக இருக்க… அவளிடம் இருந்து என்ன பதில் வரும் என்று சஞ்சய் எதிர்பார்த்திருந்தான்.

“மந்த்ரா… சஞ்சய்க்கிட்ட நான் மனம் விட்டு பேசணும்னு சொன்னது உண்மை தான், ஆனா அதை நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கன்னு நினைக்கிறேன்…” என்று அவள் பதில் சொன்னபோது, சஞ்சய் மட்டுமில்ல, மந்த்ராவும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.

“என்ன சொல்ற நிரு… சஞ்சயை நீ லவ் தான பண்ண… நான் செஞ்ச தப்பால தான நீ சஞ்சய் மேல கோபத்துல இருந்த… அதான நீ இதுவரைக்கும் சஞ்சய்க்கிட்ட உன்னோட மனசுல இருக்கறத சொல்லல… அன்னைக்கு நடந்த உண்மை தெரிஞ்சதும் சஞ்சயை பார்த்து மன்னிப்பு கேக்கணும் மனசு விட்டு பேசனும்னு சொன்னியே.. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்..??”

“ம்ம் சொன்னேன் தான்… ஆனா நான் சஞ்சயை லவ் பண்றேன்னு சொல்லலையே.. அன்னைக்கு சஞ்சய உன்கூட பார்த்ததும் தப்பா புரிஞ்சிக்கிட்டு ஏதேதோ பேசிட்டேன்… அதுக்காக சாரி கேக்கலையே அதனால சாரி சொல்லனும்னு சொன்னேன். ஒரு நல்ல ஃப்ரண்டா சஞ்சய்க்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சே… அதான் மனசுவிட்டு பேசணும்னு சொன்னேன்.. இதை நீ வேற மாதிரி எடுத்துக்கிட்டேன்னு நினைக்கிறேன்..
சரி நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்… ஃப்ரியா ஆனதும் நானே உன்கிட்ட பேசறேன்..” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

மந்த்ராவிற்கோ என்ன சொல்ல என்று தெரியவில்லை, ஏற்கனவே சஞ்சய் இவள் சொல்வதை நம்பவில்லை, இதில் நீரஜா வேறு இப்படி சொல்லியிருக்கிறாளே என்று நினைத்தாள்.

“சஞ்சய்… அன்னைக்கு நீரஜா உங்களை காதலிக்கிறேன்னு சொல்லல தான்… ஆனா அவ பேசின விதம், தவிச்ச தவிப்பு எல்லாம் அப்படி தான் இருந்துச்சு… ஆனா இப்போ ஏன் இப்படி பேசறான்னு தெரியல…” என்றாள் தயக்கத்தோடு,

“புரியுது மந்த்ரா… நீரஜா அவ வாயால எதுவும் சொல்லலன்னாலும், அவ மனசுல என்மேல காதல் இருக்குன்னு எனக்குப் புரியுது… அன்னைக்கு அவசர அவசரமா பார்க்க வந்தவ சாதாரணமா நட்புக்காகன்னாலும், அப்படி கூட என்கிட்ட அவ பேசலையே.. அதுக்குள்ள ஏதோ நடந்திருக்கு… அதான் அவ என்னைப் பார்த்து பேசவே இல்ல.. அதுவுமில்லாம அவளுக்கு என்மேல ஏதோ கோபம்..

ச்சே… இது தெரியாம.. நான் வெற்றி பேச்சைக் கேட்டு அம்மாக்கிட்ட மாமா பொண்ணை கல்யாணம் செய்துக்கிறதா ஒத்துக்கிட்டேன்… இப்போ நீரஜாவும் வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டா..”

“என்ன சொல்றீங்க சஞ்சய்… வெற்றி என்ன சொன்னான்..” என்று அவள் கேட்டதும், சஞ்சய் அவன் கூறியதை பற்றி சொன்னான்.

“நிரு என்கிட்ட உங்களை காதலிக்கிறதா சொல்லலைன்னாலும், வெற்றிக் கிட்ட உங்களை காதலிக்கிறதா சொல்லியிருக்கணும்… அதனால தான் அவன் பொறாமையில இப்படி உங்கக்கிட்ட சொல்லியிருக்கான்.. இது தெரியாம இப்படி பண்ணீட்டீங்களே..?? இப்போ என்ன பண்ணப் போறீங்க சஞ்சய்..??”

“ஒன்னும் பிரச்சனையில்ல… அம்மாக்கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருந்தாலும், உடனே ஏற்பாடு பண்ண வேண்டாம்.. கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லியிருக்கேன்… அதனால அம்மாவை சரிப் பண்ணிடலாம்… ஆனா அதுக்கு முன்னாடி நான் முதல்ல நீரஜாக்கிட்ட பேசணும்… இப்பயாவது என்னோட காதலை அவக்கிட்ட சொல்லணும்… இனியும் தாமதிக்கக் கூடாது…”

“ம்ம் அதுதான் சரி… உடனே அதை செய்ங்க…”

“ரொம்ப தேங்க்ஸ் மந்த்ரா… உன்னைப் பார்த்ததும் ரொம்ப கோபப்பட்டேன்… ஆனா உன்னை பார்த்ததால தான் எனக்கு இப்போ எல்லாம் தெளிவாச்சு.. ஆமாம் நீ பெங்களூர்ல இருக்கறதா சொன்ன… இங்க எப்படி..??”

“அது இந்த ஹோட்டல்ல ரிஸப்ஷனிஸ்ட் வேலைக்காக இன்டர்வியூக்கு வந்தேன் சஞ்சய். நான் வந்ததை நிருக்கிட்ட கூட சொல்லல… வேலை கிடைச்சா அப்போ சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.. லீவ் எடுத்துட்டு வந்திருக்கேன்… இன்னைக்கே பெங்களூர் போகணும்..”

“ஓ… நான் இப்போ இங்க மீட் பண்ண வந்த பர்சன்க்கு இந்த ஹோட்டலோட ஓனர நல்லா தெரியும்… நான் அவர்க்கிட்ட சொல்லி உனக்கு ரெகமண்ட் பண்ண சொல்றேன்… கண்டிப்பா உனக்கு இந்த வேலை கிடைச்சிடும்..”

“அய்யோ சஞ்சய் ரெகமெண்டேஷன்ல்லாம் வேண்டாம்… ஏற்கனவே எனக்காக ரெகமெண்ட் பண்ணி வேலை வாங்கிக் கொடுத்தீங்க… பட் அதை நான் மிஸ் யூஸ் பண்ணிக்கிட்டேன்… அதனால அதெல்லாம் வேண்டாம்…”

“இப்போ தான் நீ பழைய மாதிரி இல்லையே… அதுவுமில்லாம நீ நீரஜாக்கு செஞ்சது எவ்வளவு பெரிய உதவி… நீ மட்டும் இல்லன்னா, என்னாயிருக்கும்…. நினைச்சாலே பதறுது… அந்த உதவிக்கு நான் செய்யறது பெரிய உதவியே இல்ல..”

“நான் நீரஜாக்கு உதவி செஞ்சதா நினைக்கல சஞ்சய்… நான் ஏற்கனவே செஞ்சதுக்கெல்லாம் இதை கடவுள் கொடுத்த வாய்ப்பா தான் நினைக்கிறேன்… நீங்களும், நீரஜாவும் என்னை மன்னிச்சதே போதும்.. வேறெதுவும் வேண்டாம்…”

“இங்கப் பாரு… நான் ஒன்னும் தகுதியில்லாத ஆளுக்கு ரெகமெண்ட் பண்ணலையே… நீ ஏற்கனவெ அந்த வேலை தான செய்யற… அதனால நீ இதை மறுக்காத… நீ போய் இன்டர்வியூ அட்டண்ட் பண்ணு… நான் அவர்க்கிட்ட போன்ல பேசறேன்..”

“தேங்க்ஸ் சஞ்சய்…  அப்புறம் நீரஜாக்கிட்ட சீக்கிரம் பேசுங்க… இப்போதைக்கு நான் அவக்கிட்ட பேசுனா ஏதாவது உளரிடுவேன்… அதனால நீங்களாவது நீரஜாக்கிட்ட பேசிட்டு எனக்கு போன் பண்ணுங்க… இது தான் என்னோட நம்பர்..” என்று அவனிடம் தன் அலைபேசி எண்ணை கொடுத்தவள் அங்கிருந்து சென்றாள். அவனும் உடனடியாக நீரஜாவிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு அங்கிருந்து கிளம்பினான்.

சஞ்சய் கிளம்பிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நீரஜாவும் அலுவலக்கத்தில் இருந்து கிளம்பியிருந்தாள். மந்த்ரா அலைபேசியில் அழைத்தப் போது வீட்டில் அவளுடைய அறையில் தான் இருந்தாள்.

சஞ்சய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஒத்துக் கொண்ட போதே இனி தன் காதல் சஞ்சய்க்கு எந்த விதத்திலும் தெரியக் கூடாது என்ற முடிவில் இருந்தாள். அதனால் தான் அன்று ஜானவியிடமும், இன்று மந்த்ராவிடமும் சஞ்சய் மேல் காதல் இல்லை என்று கூறினாள். தனக்குள்ளேயே சஞ்சய் மேலிருக்கும் காதலை புதைத்துக் கொள்ள முடிவெடுத்து விட்டாள். ஆனால் அந்த உறுதி எப்போதும் அவளுக்கு இருக்குமா..?? இல்லை மனதில் உள்ள காதல் அந்த உறுதியை உடைக்குமா..?? 

மௌனம் தொடரும்..