KPEM 16

மௌனம் 16

தன் தோழியின் திருமணத்திற்காக பெங்களூர் சென்றிருந்தாலும் சஞ்சயின் ஞாபகமே நீரஜாவிற்கு அங்கு அதிகமாக இருந்தது. அவன் மனம்விட்டு பேச வேண்டும் என்றானே, தன்னுடைய காதலை சொல்ல நினைத்திருப்பானோ..?? இந்த நேரம் தான் இந்த திருமணம் நடக்க வேண்டுமா..?? பேசாமல் வெற்றியை மட்டும் திருமணத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, இவள் சஞ்சயோடு இன்று டின்னருக்கு சென்றிருக்கலாமோ..?? என்று அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, தன் தோழியின் வரவேற்பில் ஈடுபாட்டோடு கலந்துக் கொள்ள முடியவில்லை.

பொதுவாக அவளுக்குள் இருக்கும் கலகலப்பு காணாமல் போனதால், அவளின் நண்பர்கள் என்ன பிரச்சனை என்றுக் கேட்டு துளைத்தெடுத்துவிட்டார்கள். பிறகு தான் விசேஷத்திற்கு வந்துவிட்டு அதில் ஈடுபாடில்லாமல் இருந்திருக்கிறோம் என்பது உரைத்து, அன்று இரவு வரவேற்பு முடிந்ததுமே முயன்று தன் உற்சாகத்தை வரவைத்துக் கொண்டு தன் நண்பர்களோடு சேர்ந்து பேசி சிரித்து உற்சாகமாகிவிட்டாள்.

இன்னும் நடுவில் ஒருநாள் தானே இருக்கிறது, அதன்பின் சஞ்சயோடு பேசிவிடப் போகிறோம், அதுவரை காத்திருப்பதும் ஒரு சுகம் தானே, என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போகப் போகிறது என்பது தெரியாமலே போனது.

தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நண்பர்களோடு சேர்ந்து வெகுநேரம் பேசிவிட்டு அந்த உற்சாகத்தோடே உறங்கியவள், அதே உற்சாகத்தோடு காலையில் நடைப்பெற்ற தன் தோழியின் திருமணத்திலும் கலந்துக் கொண்டாள். இதில் முன்னாள் மாலை அந்த ஹோட்டலுக்கு வந்ததிலிருந்து இன்று திருமணத்திற்கு கிளம்பும் வரை, தன்னை இரு கண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்ததை நீரஜா கவனிக்கவில்லை.

திருமணம் முடிந்ததுமே சிங்கப்பூரிலிருந்து வந்த நண்பர்கள் முக்கிய வேலை காரணமாக உடனே கிளம்ப தயாராயிருந்தனர்.

“வந்தது தான் வந்தீங்க… அப்படியே சென்னைக்கு வந்து என்னோட ஃபேமிலிய பார்த்துட்டுப் போலாமே..” என்று நீரஜா அவர்களிடம் சொல்லிப் பார்த்தாள்.

“இப்போ கண்டிப்பா முடியாது நீரஜா… சீக்கிரம் நீயும் உன்னோட கல்யாண தேதியை சொல்லு… நாங்க உடனே வர்றோம்..” என்று அவளை கேலி செய்தனர். பின் முக்கியமான வேலை இருப்பதால், எங்களால் இங்கு இருக்க முடியாது என்ற காரணத்தை கூறவே, நீரஜாவும் ஒத்துக் கொண்டாள்.

திருமண மண்டபத்தில் இருந்து கிளம்பியவர்கள், நேரே ஹோட்டலுக்கு சென்று அவர்களின் லக்கேஜ்களை பேக் செய்துக் கொண்டு ஏர்ப்போர்ட்டிற்கு செல்ல தயாராயினர்.

நண்பர்கள் எல்லாம் கிளம்புவதால், நாமளும் அவங்கக் கூடவே கிளம்பிடலாம் வெற்றி…” என்று வெற்றியிடம் நீரஜா கூறினாள்.

நாம போகப் போற ஃப்ளைட்க்கு இன்னும் டைம் இருக்கு நீரஜ்.. நாம இப்போ அவங்கள வழியனுப்பிட்டு வரலாம் என்று வெற்றி சொன்னபோது,

அனைவரும் கிளம்பியதற்குப் பிறகு என்ன வேலை இருக்கிறது?  என்று நீரஜா யோசித்தாலும், சரி புக் பண்ண டைம்க்கு தானே கிளம்ப வேண்டும் என்று யோசித்தவள், பின் வெற்றியோடு சேர்ந்து நண்பர்களை வழியனுப்ப விமான நிலையத்திற்கு சென்றாள். அப்போதும் அந்த கண்கள் நீரஜாவை தான் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

பின் அவர்களை அனுப்பிவிட்டு திரும்பி ஹோட்டலுக்கு வரும்போதும் அப்போதும் அந்த கண்கள் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது. இதை கவனிக்காத நீரஜா, வெற்றியோடு அவர்கள் அறைகள் இருக்கும் தளத்திற்கு சென்றாள்.

நீரஜாவிற்கும், அவளின் நண்பர்களுக்கும் சேர்த்து அந்த ஹோட்டலில் அங்கு நான்கு அறைகள் திருமண வீட்டாரால் புக் செய்யப்பட்டிருந்தது. பெண்கள் இரண்டு அறைகளையும், ஆண்கள் இரண்டு அறைகளையும் உபயோகித்தனர். இப்போது நண்பர்கள் அனைவரும் சென்றுவிடவே, நீரஜா அவள் தங்கியிருந்த அறைக்கு சென்றாள். அறைக்குள் நுழைவதற்கு முன்னரே உடன் வந்த வெற்றியிடம்,

“வெற்றி… நாம போக டைம் இருக்கறதால கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்… கிளம்பறதுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி பேக் பண்ணிக்கலாம்… என்ன..??” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் நுழையவும், அவள் பின்னாலேயே வெற்றியும் அறைக்குள் வந்துவிட்டான்.

என்னதான் நண்பனாக இருந்தாலும், அவள் தனியாக இருக்க, அவளின் அறைக்குள்ளே அவன் வந்தது நீரஜாவிற்கு பிடிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் வெளியில் நின்றே சொல்லியிருக்கலாமே..?? என்று நினைத்தவள்,

“என்ன வெற்றி வேணும்…??” என்று கோபமாகவே கேட்டாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நீரஜ்…” என்று அவன் சொல்ல,

“ஏர்ப்போர்ட்டிலிருந்து நாம ரெண்டுப்பேர் மட்டும் தானே திரும்பி வந்தோம்… அப்பவே பேசியிருக்கலாமே..” என்றாள்.

“டேக்ஸில தானே வந்தோம்… ட்ரைவர் இருந்தாரில்லையா..?? உன்கிட்ட பர்ஸ்னலா பேசணும் நீரஜ்..” என்று அவன் திரும்ப சொல்ல,

“கிளம்பறதுக்கு முன்னாடி சாப்பிட்டுவிட்டு தானே கிளம்புவோம்… அப்போ ரெஸ்ட்டாரண்ட்ல பேசிக்கலாம்… இப்போ ரூமுக்கு போ..” என்று அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

அவனோ, “இது தான் நல்ல நேரம் இப்போதே பேசிடலாம்” என்று கூறினான். அவன் இவ்வளவு விடாப்படியாக இருக்கவே, அவளும் அரை மனதாக ஒத்துக் கொண்டாள்.

“நீரஜ்… நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்… உன்னையே கல்யாணம் செஞ்சுக்கணும்னு விரும்புகிறேன்…” என்று அவன் சொன்னபோது, அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“வெற்றி… நீ ஏற்கனவே ஒருமுறை என்கிட்ட ப்ரபோஸ் பண்ணியிருக்க… நான் அதை மறுத்திறுக்கேன்…அது உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்…”

“இருக்கு நீரஜ்… அப்போ உன்னை கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு தான் நான் அமைதியாயிட்டேன்… ஆனா என்னோட மனசுல உன்மேல இருக்க காதல் அப்படியே தான் இருக்கு நீரஜ்…”

“அப்படின்னு தெரிஞ்சிருந்தா… உன்னோட நட்பா இருக்கக் கூட நான் விரும்பியிருக்க மாட்டேன் வெற்றி… இப்போ நான் உன்கூட பழகுறத வச்சு, நான் எப்படியும் உன்னோட காதலை ஏத்துப்பன்னு நீ தப்பா புரிஞ்சிக்கிட்டியே…”

“ஏன் நீரஜ்… நான் உனக்கு தகுதியில்லாதவன்னு நினைக்கிறியா..?? என்னால கண்டிப்பா உன்னை சந்தோஷமா பார்த்துக்க முடியும் நீரஜ்.. மத்தப்படி நானும் நல்லா தானே இருக்கேன்… என்ன நான் கொஞ்சம் குண்டா இருக்கேன்… ஆனா அதனால ஒன்னும் பிரச்சனையில்ல நீரஜ்… டயட் ஐ மெயின்டெயின் செஞ்சா அதையும் சரிப்பண்ணிட முடியும்…”

“அய்யோ வெற்றி… இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… நான் உன்னை காதலிக்க முடியாது… ஏன்னா நான் சஞ்சயை காதலிக்கிறேன்… அவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்றேன்…. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ…”

“சஞ்சயை காதலிக்கிறியா..?? என்ன நீரஜ் சொல்ற… உன்னைப் பார்த்தாலே அவன்கிட்ட ஒரு அலட்சியம் இருக்கறத பார்த்திருக்கேன்… அவன் எப்பவும் உன்னோட கஸின் வைஷுக்கூடவே தானே சுத்திக்கிட்டு இருப்பான்… அவனையா நீ லவ் பண்ற… இப்படின்னு தெரிஞ்சிருந்தா, நான் இன்னும் ஸ்ட்ராங்கா என்னோட லவ்வை புரிய வச்சிருப்பேன் நீரஜ்…”

“புரிஞ்சிக்காம பேசாத வெற்றி… நான் ஒன்னும் சஞ்சயை இப்போ காதலிக்கல… 3 வருஷத்துக்கு முன்னாடி நான் சிங்கப்பூர் வர்றதுக்கு முன்னாடியே காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்… சில காரணங்களால என்னால என்னோட காதலை சஞ்சய்க்கிட்ட சொல்ல முடியாம போய்டுச்சு… இப்போ தான் என்னோட மனசுல இருக்கறத சஞ்சய் கிட்ட சொல்ற ஐடியால இருக்கேன்… தயவு செஞ்சு உன்னோட மனசை மாத்திக்க முயற்சி பண்ணு வெற்றி…” என்று பொறுமையாகவே அவனிடம் கூறினாள்.

“ஓஹோ… சஞ்சய் எல்லாவிதத்திலேயும் உனக்கு பொருத்தமானவன் இல்லையா? ரெண்டுப்பேருமே பணக்காரங்க… நீ என்னைப் போல சாதாரண ஆளை காதலிப்பியா..?? ஒரு புது பிஸ்னஸ் தொடங்கக் கூட பணமில்லாம சுத்திக்கிட்டு இருப்பவன்… நான் உனக்கு பொருத்தமானவனா இருப்பேனா..??”

“ஏன் வெற்றி இப்படியெல்லாம் பேசற… நான் என்னைக்கும் அப்படி நினைச்சதில்ல… உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு கூட நினைச்சேன் தெரியுமா..?? நிக்கிக்கிட்ட கூட உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண சொல்லியிருக்கேன்…. வேணும்னா உனக்கு எவ்வளவு பணம் தேவையோ சொல்லு… நான் நிக்கிக்கிட்ட சொல்லி கொடுக்க சொல்றேன்…” என்று அவள் சொன்னதற்கு,

“என்ன எனக்கு பிச்சைப் போட்றியா..??” என்று அவன் கோபமாக கேட்டதும், நீரஜா பயந்துப் போனாள்.

“உன்னோட பணக்கார புத்தியை காட்றியா..?? ” அப்படி எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நீ நினைச்சேன்னா… என்னை கல்யாணம் செஞ்சுக்க.. அப்போ உன்னோட சொத்தெல்லாம் எனக்கு கிடைச்சிடுமே..”  என்று அவன் சொன்ன போது,

அவனுடைய எண்ணம் எது என்று தெரிந்த போது, இப்படி ஒருவன் கூட பழகியிருக்கிறோமே..” என்று நினைத்தவள்,

“அப்போ இப்படி ஒரு எண்ணம் தான், நீ திரும்பவும் என்கிட்ட உன்னோட காதலை சொல்ல காரணமா..??” என்று கோபமாக அவனிடம் கேட்டாள்.

“ஆமாம் அப்படிதான் வச்சுக்கோயேன்… நீ இவ்வளவு பெரிய பணக்காரின்னு எனக்கு தெரியாம போச்சு… உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நான் எதிர்பார்த்ததெல்லாம் நடக்கும் தெரியுமா..?? ச்சே என்னோட கனவெல்லாம் பாழாயிடுச்சு…” என்றான் வெறுப்பாக,

“ச்சே நீ இப்படி ஒரு எண்ணத்தோட பழகியிருப்பன்னு நான் நினைக்கவேயில்ல வெற்றி… இதுக்கு மேலேயும் நம்ம ஃப்ரண்ட்ஷிப் தொடருவது எனக்கு சரியாப்படல… இதோட எல்லாம் முடிச்சுக்கலாம்… முதல்ல இந்த ரூம விட்டு வெளியப் போ..” என்று அந்த அறை வாசலை காட்டியப்படி அவள் சொல்ல,

அவன் வெளியே தான் போகிறான் என்று நினைக்க, அவனோ அறை கதவை சாத்த முயற்சித்தான்.

“ஹே.. எதுக்கு கதவை சாத்தற..??” என்று அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டே, அவன் அருகில் சென்று தடுக்க முயற்சிக்க, அதற்கு முன்னாடியே அவன் கதவை சாத்தியிருந்தான். அவள் அந்த கதவை திறக்க முயற்சிக்க.. வேகமாக சாத்தியதில் அந்த கதவு ஆட்டோமேடிக்காக லாக் ஆகிவிட்டது.

அவள் சாவியை கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த மேசை மீது வைத்திருந்தாள். அதை எடுக்க அவள் முயற்சிக்கும் முன்னரே, அவளை தடுத்து அவள் கையை வெற்றி கெட்டியாக பிடித்துக் கொண்டான்.  அவன் நினைத்தது நடக்கவில்லை என்ற வெறியில் இருந்தான்.

“வெற்றி என்ன பண்ற… என்னை விடு… இங்கப் பாரு நீ அளவுக்கு மீறி போற..” என்று அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.

“ஹே விட முடியாது டீ… நான் நினைச்சது தான் நடக்கல… உன்னை கல்யாணம் செஞ்சுக்க தான் முடியல… அட்லீஸ்ட் உன்னோட ஃபர்ஸ்ட் நைட்டாவது நடக்கட்டுமே…” என்று வெறியோடு அவளை அணுகினான்.

அவளோ அவனின் பிடியிலிருந்து விலக போராடிக் கொண்டிருந்தாள். “வேண்டாம் வெற்றி… நீ செய்யறது தப்பு…” என்று அவள் கூற அதை காதில் வாங்காமல், அவன் அவளை முரட்டுத்தனமாக படுக்கையில் தள்ளவும், யாரோ கதவை திறக்கவும் சரியாக இருந்தது.

அதிர்ச்சியோடு வெற்றியும், விடுதலை கிடைத்த உணர்வோடு நீரஜாவும் கதவருகே பார்க்க, அங்கிருந்த நபரை பார்த்ததும், ஒரு ஆச்சர்யத்தோடு எழுந்த நீரஜா,  “மந்த்ரா..” என்று ஓடிப் போய் கட்டிக் கொண்டாள்.

“ஒன்னுமில்ல நிரு… அதான் நான் வந்துட்டேன் இல்ல.. பயப்படாத..” என்று ஆறுதலாக மந்த்ராவும் நீரஜாவை அணைத்தாள்.

“ஹே.. யார் நீ…?? இங்க எப்படி வந்த..?? என்று கோபத்தோடு வெற்றி மந்த்ரா அருகில் வரவும், அந்த சமயம் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் நான்கு ஊழியர்கள் அங்கு வந்தனர். வந்தவர்களிடம் மந்த்ரா கன்னடத்தில் ஏதோ சொன்னதும், அவர்கள் வெற்றியை பிடித்துக் கொண்டனர்.

“ஏய் விடுங்கடா..” என்று வெற்றி கத்தினான். அந்த நேரம் அந்த ஹோட்டலின் மேனேஜரும் அங்கு வந்தார்.

வந்தவர் நேராக மந்த்ராவிடம், ” என்ன பிரச்சனை மந்த்ரா..??” என்று தமிழில் விசாரித்தார்.

“சார்… இந்த ராஸ்கல், தனியா இருக்கற இந்த பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் … நல்லவேளை நான் சரியான நேரத்துக்கு வந்தேன்…” என்று வெற்றி செய்ததை அவரிடம் கூறினாள்.

“ஹலோ… தெரியாம ஏதாச்சும் பேசாதீங்க… நாங்க ரெண்டுப்பேரும் ப்ரண்ட்ஸ்… நாங்க இங்க பேசிக்கிட்டு இருந்தோம்..” என்றான்.

“இல்ல சார்… இவன் பொய் சொல்றான்… இந்த பொண்ணு எனக்கு தெரிஞ்சவ தான்… இவளுக்கு ப்ராப்ளம்னு தெரிஞ்சு தான், நான் இங்க வந்தேன்…” என்றாள்.

“ஹலோ… இவ என்னோட ப்ரண்ட்… நாங்கல்லாம் ஒரு ஃப்ரண்ட் மேரேஜ்க்கு வந்தோம்… வரிசையா 4 ரூம் எங்களுக்காக தான் புக் பண்ணியிருந்தது… நாங்க ரூமை காலிப் பண்ற வரைக்கும் என்ன வேணாலும் செய்வோம்… அதுலெல்லாம் நீங்க தலையிடாதீங்க… இவ சம்மதத்தோட..” வெற்றி முழுதாக முடிக்கும் முன்னரே,

“ஹலோ மிஸ்டர்… என்ன பேசறீங்க… இது பேமிலியா வந்து நிறைய பேர் தங்கற ஹோட்டல்… டீசண்டான ஹோட்டல்… இங்க நீங்க மிஸ்பிகேவ் பண்ணா… நாங்க சைலன்டா இருப்போமா..?? போலீஸ்க்கு போனா உன்னை முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க… ஜாக்கிரதை..” என்று அந்த மேனேஜர் சொன்னதும், வெற்றி பயந்துவிட்டான்.

“நீரஜ்.. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்… என்னை விட சொல்லு… நான் இனி உன்கிட்ட எந்த பிரச்சனையும் பண்ணமாட்டேன்..” என்று கெஞ்சினான்.

மேனேஜரோ நீரஜாவை பார்த்து, “மேடம் போலீஸ் வரைக்கும் போனா பிரச்சனையை பெருசா ஆக்குவாங்க… எங்க ஹோட்டலுக்கும் ஒரு ப்ளாக் மார்க் விழுந்துடும்… அதான் ஒன்னும் நடக்கலையே.. இதை பெருசு பண்ணாம விட்டுவிடுங்க….” என்றார்.

“சார்… என்ன பேசறீங்க…?? இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது சார்…” மந்த்ரா கோபமாக சொல்ல,

“மந்த்ரா நீ சும்மா இரு…” என்ற நீரஜா… மேனேஜரை பார்த்து, “சார் அவனை விட்டிடுங்க… அவன் போகட்டும்..” என்றாள்.

ஏதோ சொல்ல வந்த மந்த்ராவை தடுத்தவள், வெற்றியை பார்த்து…”இனி என்னோட முகத்துலேயே முழிக்காத போய்டு..” என்றதும், விட்டால் போதும் என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.

நீரஜா பிரச்சனையை பெரிது பண்ணாததால், அந்த மேனேஜர் அவளுக்கு நன்றியை கூறிவிட்டு, மந்த்ராவிடம் அவளை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

தளர்ந்த நடையோடு நீரஜா வந்து கட்டிலில் உட்கார, மந்த்ராவும் அவளுக்கு ஆறுதல சொல்ல அருகில் உட்கார்ந்தாள். 

மௌனம் தொடரும்..