KPEM 15

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மௌனம் 15

நீரஜா இன்று அலுவலகத்திற்கு சீக்கிரம் வந்துவிட்டிருந்தாள். வைஷு விஷயத்தில் சஞ்சயிடம் கொஞ்சம் அதிகம் பேசிவிட்டதாக, அவளுக்கு தோன்றியது. வைஷு சஞ்சயிடம் தன் மனதில் இருப்பதை தெரிவிப்பதற்கு முன், வீட்டில் அதைப்பற்றி பேசியது தவறு தானே…?? திடீரென்று சஞ்சயிடம் வைஷுவை மணந்துக் கொள்வதைப் பற்றி கேட்டால், அவன் மனதில் உள்ளதை சொல்லத்தானே வேண்டும்.

இதை அப்போது புரிந்துக் கொள்ளாமல், அவள் வேறு சஞ்சயிடம் கோபமாக பேசிவிட்டிருந்தாள். அதற்கு மன்னிப்பு கேட்கவே, அலுவலகத்திற்கு சீக்கிரம் வந்திருந்தாள். ஏற்கனவே இருவருக்கும் நடுவே மூன்று வருடத்திற்கு முன் விழுந்த திரையே விலகாமல் இருக்க, இதில் இன்னும் அதை பெரிதுப்படுத்தாமல், மூடிய திரையை விலக்கும், முதல் முயற்சியாய், வைஷு விஷயத்தில் அவள் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடிவெடுத்திருந்தாள்.

அலுவலகத்திற்கு வந்ததும் நேராக சஞ்சய் அறைக்குத் தான் சென்றாள். ஆனால் அவன் இன்னும் வந்திருக்கவில்லை, சஞ்சய் வந்தால் தகவல் சொல்லும்படி, அவனது பி.ஏ விடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்தாள்.

ஆனால் வந்ததிலிருந்து அவளால் வேலையில் ஈடுபட முடியவில்லை, சஞ்சயிடம் அவள் கோபபட்டு பேசியதைக் குறித்து அவன் எந்த மனநிலையில் இருப்பான்? அவள் மன்னிப்பு கேட்க அவகாசம் கொடுப்பானா..?? இல்லை கோபப்படுவானா..?? இல்லை அவள் அவ்வாறு பேசியதில் வருத்தம் கொண்டிருப்பானா…?? என்ற சிந்தனையோடு அவள் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்க,

“நிரு….” என்று உற்சாகமாய் கத்தியப்படியே அவள் அறைக்கதவை திறந்து சஞ்சய் உள்ளே வந்தான். அவன் உள்ளே நுழையும்போதே அவள் ஆச்சர்யத்தோடு எழுந்திரிக்க, அவளின் அருகில் வந்தவன்,

திடிரென்று கையில் வைத்திருந்த இனிப்பை அவள் வாயில் திணித்தான்.  அவள் அவனது மனநிலையை பற்றி என்னென்னவோ சிந்தித்துக் கொண்டிருக்க, அவன் உற்சாகமாக வந்ததே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

“என்ன பாஸ்… ஸ்வீட் கொடுக்கற அளவுக்கு ஹாப்பி நியூஸ் என்ன…??”

“நம்ம ப்ராடக்ட்க்கு கொடுத்த புது ஆட் சக்ஸஸ் ஆயிடுச்சு, இதனால நமக்கு இன்னும் லாபம் கிடைக்கப் போகுது… இதுக்கெல்லாம் காரணம் நீதான் நிரு… “

“என்ன பாஸ்… இதுக்கெல்லாம் காரணம் ஆட் கம்பெனி தான்… அதுக்கு என்னைப் பாராட்டறீங்க…??”

“எனக்கு தெரியும் நிரு… ஆட் கம்பெனில உன்கூட மீட்டிங் முடிஞ்சதும் என்கிட்ட பேசினாங்க… இந்த புது ஆட் முழுக்க முழுக்க உன்னோட ஐடியால தான் உருவானதுன்னு சொன்னாங்க… மேடம் இந்த ஃபீல்ட்ல இல்லன்னாலும் அவங்களுக்கு நிறைய ஐடியாஸ் இருக்குன்னு பெருமையா சொன்னாங்க…

இப்போ இதனால நம்ம கம்பெனிக்கு லாபம் மட்டும் கிடைக்கப் போறதில்ல.. நம்ம கம்பெனி பாப்புலராவும் ஆயிடும்… அதுக்கெல்லாம் காரணம் நீதான்… தேங்க்ஸ் நிரு…” என்று சந்தோஷப்பட்டான்.

அவனுக்கு இருந்த சந்தோஷத்துக்கு அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, அவளை தூக்கி சுற்ற வேண்டுமென்று இருந்தது. ஆனால் ஏற்கனவே அவன் அவளிடம் நடந்துக் கொண்டதே போதாதா..?? அதனால் அடக்கி வாசித்தான்.

“என்ன பாஸ் இதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு… நம்ம கம்பெனிக்காக தான நான் செய்தேன்…” நீரஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிகேதன் அங்கு வந்தான்.

“நிரு கங்க்ராட்ஸ் டா… சஞ்சய் எல்லாம் சொன்னான்… சஞ்சய் உன்கிட்ட அந்த பொறுப்பை கொடுத்தப்பக் கூட நான் கொஞ்சம் தயங்கினேன்… ஆனா உன்னோட ஃபர்ஸ்ட் வேலையையே சூப்பரா முடிச்சிட்ட.. சூப்பர்..!!” என்று வாழ்த்து சொல்லி அவன் கொஞ்சம் இனிப்பை எடுத்து நீரஜா வாயில் வைத்தான். பின் நீரஜாவும் கொஞ்சம் இனிப்பை எடுத்து, சஞ்சய், நிகேதனுக்கு ஊட்டிவிட்டாள்.

“டேய் மாப்ள…இந்த விஷயத்தை நாம நம்ம வொர்க்கர்ஸ் கூட சேர்ந்து செலப்ரேட் பண்ணனும் டா..” என்று நிகேதன் கூற,

“ஆமாம் மச்சான்.. செலப்ரேட் பண்ணணும்… அதுமட்டுமில்லாம, லாபம் கிடைக்கறப்போ அவங்களுக்கு இன்க்ரிமென்ட்டும் கொடுக்கணும்… ” என்று சஞ்சய் சொல்ல, நீரஜாவும் “ஆமாம் நிக்கி…” என்று சஞ்சய் சொல்லியதை ஆமோதித்தாள்.

“கண்டிப்பா செஞ்சிடலாம்டா… சரி நாளைக்கே ஏதாவது ஒரு ரெஸ்ட்டாரன்ட்ல் இதை செலப்ரேட் பண்ணுவோமா…??” என்று நிகேதன் கேட்டதற்கு, நீரஜாவோ…

“நிக்கி… நாளை மறுநாள் உங்க கல்யாண நாள் வருதுல்ல… 2 வருஷமா உங்கக் கூட இருந்து அதை செலப்ரேட் பண்ண முடியல… அதான் அதை இந்த வருஷம் கொஞ்சம் பெருசா செலப்ரேட் பண்ணலாம்னு நினைச்சேன்… நம்ம ஆஃபிஸ் ஸ்டாஃப்ஸ் எல்லாரையும் கூப்பிட நினைச்சிருந்தேன்… இப்போ இந்த ரெண்டு விஷயத்துக்காகவும் சேர்த்து செலப்ரேஷன் வச்சா என்ன..??” என்று நீரஜா கூற,

“ஆமாம் மச்சான்… நீரஜா சொல்றப்படியே செய்வோம்… ஆனா ஈவ்னிங் பார்ட்டி வேண்டாம்… ஸ்டாஃப்ஸ்க்கு பார்ட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போக கஷ்டமாயிருக்கும்… அதனால லன்ச் டைம்ல செலப்ரேஷன் வச்சுப்போம்…” என்று சஞ்சய் சொன்னதும்,

“சரிடா… அப்படியே பண்ணிடலாம்… ஃபர்ஸ்ட் நம்ம ஸ்டாஃப்ஸ்க்கு இந்த விஷயத்தை சொல்லலாம்… அப்புறம் பார்ட்டிக்கான ஏற்பாடெல்லாம் செய்யலாம்..” என்று நிகேதன் கூறிவிட்டு வெளியே போனதும், சஞ்சயும் வெளியே செல்ல கிளம்பும் போது, காலையில் மன்னிப்பு கேட்க நினைத்து, அதை இன்னும் செய்யவில்லையே,  எப்போது கேட்பது என்று நீரஜா தயங்கியப்படி நின்றிருந்தாள்.

சஞ்சய்க்கும் அவள் ஏதோ சொல்ல வந்தது போல் தோன்ற, “என்ன நிரு ஏதாச்சும் சொல்லணுமா..??” என்று கேட்டான்.

“அது வந்து… நேத்து நடந்ததுக்கு உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்… சாரி பாஸ்.. வைஷு மேலயும் தப்பு இருக்கு… இருந்தும் உங்க மேல கோபப்பட்டு பேசிட்டேன்… ஐ யம் ரியலி சாரி…” என்றாள்.

“பரவாயில்ல நிரு… இதுக்கு நீ சாரி சொல்லணும்னு அவசியமில்ல… வைஷு விஷயத்தை வேற மாதிரி ஹேண்டில் பண்ணியிருக்கலாமோன்னு நானும் யோசிச்சேன்…

சரி நடந்தது நடந்துப் போச்சு… நீ இந்த விஷயத்துல என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்… சரி நிகேதன் என்ன பேசறான்னு கேட்போம் வா…” என்று அவளையும் வெளியே அழைத்துச் சென்றான்.

நீரஜா ஆசைப்பட்டது போல, நிகேதன், ஜானவி திருமண நாளையும்,  அவர்கள் நிறுவனம் சார்ந்த பார்ட்டியையும் சேர்த்து கொண்டாட முடிவெடுத்தனர். நிறுவன ஊழியர்கள், கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள், இவர்களை மட்டுமே அழைத்திருந்தனர்.

வெற்றி, தான் வந்த வேலையாக, தன் நண்பனை பார்க்க சென்றதால், அவனால் வரமுடியவில்லை.  வைஷுவும் வர விரும்பவில்லை என்று சொல்லி, தன் சகோதரிக்கு அலைபேசி மூலமாக வாழ்த்து சொல்லிவிட்டாள்.

அவள் எதனால் வர விரும்பவில்லை என்று அவளின் தந்தையை தவிர, எல்லோருக்கும் தெரியும் என்பதால், யாரும் அவளை வற்புறுத்தவில்லை. தந்தையிடமும் அவள் ஏதோ சமாதானம் கூறிவிட அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

அம்பிகாவும் மூட்டுவலி காரணமாக வர மறுத்துவிட்டார். நிகேதனும், ஜானவியும் அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி வாங்கினர்.  இந்த மூவரை தவிர, மற்றப்படி அழைத்தவர்கள் எல்லாம் பார்ட்டிக்கு வந்திருக்க, பார்ட்டி களை கட்டியது.

நிகேதன் திருமணத்தன்று இருந்த இறுக்கமான சூழ்நிலை இப்போது சஞ்சய், நீரஜாவிற்கு  இல்லாததால் இரண்டுப்பேரும் பார்ட்டியில் இயல்பாகவே இருந்தனர். ஆனால் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்ற தயக்கத்தோடு இருவரும் மனசுக்குள் போராடிக் கொண்டிருந்தனர். இருந்தாலும் வழக்கம் போல, மனசுக்குள் இருந்த தயக்கங்களை மறைத்து வைத்து பார்ட்டியில் மகிழ்ந்திருந்தனர்.

முதலில் நிறுவனத்தின் வளர்ச்சிக் குறித்த கொண்டாட்டமாக, அங்கு பணிபுரிபவர்கள் ஏற்பாடு செய்திருந்த கேக்கை நீரஜாவை வெட்ட சொல்லி சாப்பிட்டு மகிழ்ந்தனர். பின் நிகேதன், ஜானவி திருமண நாளுக்காக நீரஜா ஏற்பாடு செய்திருந்த கேக்கை நிகேதனும், ஜானவியும் சேர்ந்து வெட்டி, இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டனர்.

பின் நிகேதன் சஞ்சய்க்கு ஊட்ட, ஜானவி நீரஜாவிற்கு ஊட்டினாள்…. வந்திருந்த அனைவரும் கைதட்டி ஆராவரித்து, இருவருக்கும் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்…

சிறிது நேரக் கொண்டாட்டத்திற்குப் பின், நீரஜா இருவரையும் அமர வைத்து கேள்விகள் கேட்க, இருவரும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

“ஜானு, நிக்கி… அப்புறம் கடைசியா ஒரு கேள்வி… உங்க காதல் சக்ஸஸா கல்யாணத்துல முடிஞ்சதுல சந்தோஷம்… ஆனா காதலர்களாக இருந்தப்போது, நீங்க நினைச்சது ஏதாவது ஒன்னு நடக்காமலோ… இல்ல உங்க காதலில் ஏதாவது குறையோ தோனியிருக்கா… அதை சரி செய்யாமலே கல்யாணம் வரைக்கும் வந்தாச்சேன்னோ.. இல்லை அந்த லவ் பீரீயட்ல நினைச்சது நடக்காம போயிடுச்சேன்னோ ஃபீல் பண்ணியிருக்கீங்களா…??

ஜானு நீ தான் முதலில் இதுக்கு பதில் சொல்லணும்…” என்று நீரஜா கேட்க,

“எனக்கு அப்படி எதுவும் இருந்ததில்ல… காதலிக்கும் போதும் சரி, இப்போ கல்யாணத்துக்குப் பிறகும் சரி,  தனு எனக்குப் பிடிச்ச மாதிரி தான் நடந்திருக்காரு….

எனக்கு சின்ன வயசுல இருந்தே, உன்னையும், தனுவையும் ரொம்ப பிடிக்கும்… நீங்க லீவ்க்கு எப்போ வீட்டுக்கு வரூவிங்கன்னு எதிர்பார்ப்பேன்… இப்போ தனுவோட எனக்கு கல்யாணம் நடந்து, உங்க ரெண்டுப்பேரோட இருக்க வாய்ப்பு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்…

எனக்கு கல்யாணம் ஆனதுக்குப் பிறகு, என்னோட அப்பா, அம்மா, தங்கையை விட்டு வரனுமேன்னு முன்னாடியெல்லாம் தோனும்… ஆனா நாங்க காதலிச்சப்பிறகு அப்படி தோனுனதில்ல… இது நமக்குள்ள இருந்த உறவு முறையால மட்டும் ஏற்பட்டதில்ல…. அதுக்கும் மேல தனு கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, கல்யாணத்துக்கு பிறகும் சரி, அப்படி எனக்கு உணர வச்சிருக்காரு… அதனால எனக்கு நீ சொன்ன மாதிரியெல்லாம் தோனியதில்ல….” என்று ஜானவி சொன்னதும், அனைவரும் கைதட்டினர்.

“நிக்கி… உனக்கு அப்படி ஏதாவது ஃபீல் ஆகியிருக்கா…??”

“நவி சொன்னதை தான் நானும் சொல்வேன்… அவளுக்கு எப்படி கல்யாணத்துக்குப் பிறகு அவ அப்பா, அம்மாவை விட்டு பிரியாத மாதிரி ஃபீல் இருக்கோ… அதேபோல என்னைவிட அவ உன்னோட க்ளோசா இருப்பதை பார்த்து எனக்கும் நிறைவா இருக்கு… எனக்கு நீ சொன்ன மாதிரி தோனுனதில்ல…. ஒரு விஷயத்தை தவிர…” என்று அவன் பீடீகை போட்டு பேசியதும், ஜானவி உட்பட அனைவரும் கேள்வியோடு நிகேதனை பார்த்தனர்.

“அது என்னன்னா… நாங்க லவ் பண்ணப்போ… ஒரே ஒரு முறை லிப் டு லிப் கிஸ் வேணும்னு அவக்கிட்ட கேட்டேன்… கல்யாணத்துக்குப் பிறகு தான் அதெல்லாம்னு ஸ்டிரிக்ட்டா மறுத்துட்டா… என்ன இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி கிடைக்கிற கிஸ்ல தானே கிக் இருக்கு… அது தான் ஒரே ஒரு சின்ன குறை…” என்று ஜானவியை பார்த்து கண்ணடித்துக் கூற, அனைவரும் ஓஹோ, என்று கைதட்டி கூப்பாடு போட்டனர்.

அதேநேரம் நிகேதன் பேசியதில் நீரஜா சஞ்சயைப் பார்க்க, அவனும் அப்போது அவளை தான் பார்த்தான். நீரஜாவை பொறுத்தவரை அன்று அவர்களுக்குள் நடந்த சம்பவம் மறக்க வேண்டிய ஒன்று என்று தான் நினைப்பாள். கஷ்டப்பட்டு அதை மறக்கவும் முயற்சி செய்தாள். ஆனால் இப்போது நிகேதன் பேசியதில் அந்த சம்பவம் அவள் ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ திரும்பவும் சஞ்சயின் முகத்தை பார்க்கவே அவளுக்கு தயக்கமாக இருந்தது.

சஞ்சய்க்கும் அவளின் நிலை புரிந்தது, இந்த நேரம் வரையிலுமே அந்த சம்பவம் குறித்து, அவளிடம் மன்னிப்பு கேட்கவில்லையே என்று அவன் வருத்தப்பட்டான்.

“என்ன தனு… அப்பாவும், அம்மாவும் இங்க இருக்காங்க… அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?? இல்லையா..?? இப்படில்லாம் பேசறீங்க…??” என்று ஜானவி கொஞ்சம் மெதுவாக நிகேதன் காதில் கிசுகிசுத்தாள்.

“அதனால என்ன நவி…?? மாமாவும், அத்தையும் நம்ம பொண்ணை நல்லப்படியா தான் வளர்த்திருக்கோம்னு, உன்னை பெருமையா தான் நினைப்பாங்க… நமக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல, அவங்க அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க விடு…” என்றான். அவளும் தன் தாய், தந்தையரை நோட்டம் விட்டாள். அவர்கள் நிகேதன் சொன்னதுபோல் எதையும் கண்டுக்கொள்ளாதபடி அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

பின் பார்ட்டி செலப்ரேஷன் முடிந்து, அனைவரும் கிளம்பியிருக்க, ஜெய் குட்டியோடு சேர்த்து இந்த ஐவர் மட்டுமே இருந்தனர்.

“மச்சான்.. உங்க ஆனிவர்சரிக்கான என்னோட கிஃப்ட் டா..” என்று ஒரு சாவியை நிகேதன் கையில் சஞ்சய் கொடுத்தான்.

“கேண்டில் லைட் டின்னரோட ரெசார்ட்ல ரூம் புக் பண்ணியிருக்குடா… நீயும் ஜானவியும் நைட் வரைக்கும் ஜாலியா வெளிய சுத்திட்டு அப்புறம் கேண்டில் லைட் டின்னரை எஞ்சாய் பண்றீங்க… சரியா..??” என்று அந்த ரெசார்ட் பேரை கூறி அவர்களை செல்ல சொன்னான்.

“ஹேய் அதுக்கு தான் பார்டியை மதியம் வச்சிக்கிட்டியா..??”

“இதுக்கும் தான்… நம்ம ஸ்டாப்ஸ்க்காகவும் தான்…”

“டேய் மாப்ள எதுக்காகடா இதெல்லாம்… அதான் இவ்வளவு நேரம் செலப்ரேட் பண்ணனுமே இது போதாதா…??” என்று நிகேதன் கேட்டதற்கு, சஞ்சய் பதில் சொல்வதற்கு முன் நீரஜா இடைப்புகுந்தாள்.

“என்ன நிக்கி… ஆனிவர்சரியை நீங்க தனியா செலப்ரேட் பண்ண வேண்டாமா..?? அதனால ஜாலியா எஞ்சாய் பண்ணுங்க..” என்றவள், ஜானவி தூக்கி வைத்திருந்த ஜெய் குட்டியைப் பார்த்து,

“ஜெய் குட்டி.. அத்தைக் கிட்ட வாங்க… இன்னிக்கு நைட் அத்தைக் கூட தான் ஜெய் கண்ணா தூங்கப்போறான்.. இல்லடா செல்லம்…” என்று அவனை ஜானவியிடம் இருந்து வாங்கி தூக்கி வைத்துக் கொண்டாள்.

இதற்கு மேல் மறுத்தால், இவர்கள் இருவரும் கேட்க மாட்டார்கள் என்பதால், நிகேதனும், ஜானவியும் அதற்கு ஒத்துக் கொண்டனர்.

“நிரு… நைட் நீயும் ஜெய்யும் மட்டும் வீட்ல எப்படி தனியா இருப்பீங்க… அம்மாவும் கிளம்பிட்டாங்களே…” என்று ஜானவி கவலைப்பட,
.
“அதனால என்ன..?? நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்…” என்று சஞ்சய் சொன்னதும்,

“வேண்டாம்… நான் தனியாவே இருந்துப்பேன்..” என்று நீரஜா  அவசரமாக அதை மறுத்துக் கூறினாள்.

“இப்போ என்ன நவி… அத்தைக்கு போன் பண்ணா நைட் வீட்டுக்கு வந்துடப் போறாங்க… நிரு வீட்டுக்கே போகட்டும்..” என்று ஜானவி கவலையை தீர்த்த நிகேதன்… பின் சஞ்சயிடம்,

“மச்சான்… நாங்க கார் எடுத்துக்கிட்டு போய்டுவோம்… அதனால நிருவையும், ஜெய்யையும் வீட்ல ட்ராப் பண்ணிடு..” என்றான்.

சஞ்சயும் சரி என்று தலை அசைக்க, இதற்கும் வேண்டாம் என்று சொன்னால், கண்டிப்பாக யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து நீரஜா சஞ்சயோடு காரில் கிளம்பினாள்.

ஏதோ ஒரு இறுக்கமான சூழ்நிலை திரும்பவும் நீரஜாவை சூழ்ந்திருக்க, அந்த கார் பயணத்தில் வீடு வரும் வரையிலுமே அவள் மௌனமாகவே இருந்தாள். சஞ்சயும் அவள் நிலைப் புரிந்து அவளை தொந்தரவு செய்யவில்லை.

வீடு வந்ததும் சஞ்சய் காரை நிறுத்தினான். மடியிலேயே படுத்து ஜெய் உறங்கிவிட்டிருந்தான். அவனை தூக்கிக் கொண்டு அவள் இறங்க தயாராகும் போது,  “நிரு.. ஒரு நிமிஷம்..” என்று சஞ்சய் அவளை தடுத்து நிறுத்தினான்.

அவள் அவனை கேள்வியோடு பார்க்க, “நிரு… ப்ளீஸ் தயவு செய்து என்னை மன்னிக்கணும்… அன்னைக்கு நான் செஞ்சது பெரிய தப்பு தான்… அதுக்கு மன்னிப்பு கேட்க கூட நீ அவகாசம் கொடுக்காதது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு… அது உன்னை எந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னு இப்போக் கூட என்னால புரிஞ்சிக்க முடியுது… நான் அப்படி செஞ்சிருக்கவே கூடாது… ப்ளீஸ் நிரு, ஐ அம் ரியலி சாரி…” என்று கூறி அவளிடம் மன்னிப்பை எதிர்பார்த்தான்.

“பரவாயில்ல விடுங்க சஞ்சய்… இனி அதை பேசாம இருக்கறதே நல்லதுன்னு நினைக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

மன்னிச்சிட்டேன் என்று அவள் வாயால் சொல்லவில்லையென்றாலும், அதைப்பற்றி பேச விருப்பமில்லை எனும் போதே, அவள் ஓரளவுக்கு அவனை மன்னித்துவிட்டாள் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

“சரி நிரு… அதைப்பத்தி இனி பேசல போதுமா..?? அப்புறம் இன்னொரு விஷயம்… இன்னைக்கு செலப்ரேஷன் நம்ம கம்பெனியில எல்லோரும் சேர்ந்து செலப்ரேட் பண்ணது… ஆனா நான் உனக்காக தனியா ஒரு ட்ரீட் கொடுக்கனும்னு நினைக்கிறேன்… அதை அக்சப்ட் பண்ணிப்பியா..??”

“எதுக்காக அதெல்லாம்…” என்று அவள் ஏதோ சொல்ல வந்தபோது,

“ப்ளீஸ் நிரு… வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத… இது நீ இந்த விளம்பரம் சக்ஸஸ் ஆக காரணம்னு மட்டும் கொடுக்க நினைச்ச ட்ரீட் இல்ல… நாம நல்லா பேசியே 3 வருஷம் ஆச்சு… நாம மனசுவிட்டு பேச இது ஒரு நல்ல சான்ஸா இருக்குமே…. அதுக்கு தான் சொன்னேன்…” என்று சொன்னதற்கு அவள் அதை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தாள்… அதை அவன் சம்மதமாக எடுத்துக்கொண்டு,

“அப்போ நாளைக்கு ஈவ்னிங் உன்னை பிக்அப் பண்ணிக்க வீட்டுக்கு வரவா..??” என்றுக் கேட்டான்.

“அது… அது… மண்டே என்னோட ஃப்ரண்ட் மேரேஜ் பெங்களூர்ல நடக்குது… அவ என்னோட சிங்கப்பூர்ல வொர்க் பண்ணவ… அதுக்கு நானும் வெற்றியும் போறதா இருக்கோம்… நாளை மதியமே கிளம்பறோம்… அவ ரொம்ப க்ளோஸ், அதான் கண்டிப்பா வரேன்னு சொல்லியிருக்கேன்… சிங்கப்பூர்ல என்னோட வொர்க் பண்ண சில பேரும் மேரேஜ்க்கு வராங்க… அதனால நான் கண்டிப்பா போகணும்…”

அவள் அப்படி சொன்னதும் அவனுக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது. இந்த ட்ரீட்டை காரணமாக வைத்து அவனது  காதலை சொல்ல இருந்தான்.  இருந்தும் அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டான். அவள் வர ஒத்துக் கொண்டதே சந்தோஷம் என்று நினைத்தான்.

“பரவாயில்ல நிரு… சண்டே ஆஃபிஸ் டென்ஷன் இல்லாம இருக்கும்னு நினைச்சேன்… அதனால என்ன..?? நீ மேரேஜ் முடிச்சிட்டு வந்ததும் ட்ரீட் வச்சுக்கலாம்… ஓகே வா..??”

“சரி பாஸ், மேரேஜ் முடிஞ்சு வந்ததும் கண்டிப்பா வரேன்…” என்றவள் ஜெய்யை தோள் மேல் படுக்க வைத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினாள். அவனும் அவளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அவன் போனதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள், அந்த சம்பவம் குறித்து அவன் மன்னிப்பு கேட்டது, அவள் மனசுக்கு கொஞ்சம் இதமாகவே இருந்தது.

“நிரு… சஞ்சய்க்கூட டைம் ஸ்பெண்ட்றத விட, உனக்கு கல்யாணத்துக்கு போகறது தான் பெருசா..??” என்று அவள் மனம் கேள்விக் கேட்டது.

அவன் வேறு மனம்விட்டு பேசனும்னு சொன்னானே..?? பேசாம கல்யாணத்துக்கு போகாம விட்டுடலாமா..?? ஆனா ஏன் கல்யாணத்துக்கு போகலன்னு சஞ்சய் கேட்டா, என்ன சொல்றது..?? அதில்லாம எல்லோர்க்கிட்டேயும் கல்யாணத்துக்கு வர்றதா சொல்லிட்டோமே..?? வெற்றியை கூட சீக்கிரம் ஃப்ரண்ட பார்த்துட்டு  வந்துட சொல்லியிருக்கேனே..?? நடுவில் ரெண்டு நாள் தானே இருக்கு… அதுவரைக்கும் பொறுத்துக்க் முடியாதா நிரு..?? அதனால கல்யாணத்துக்கு போய்ட்டே வந்திடுவோம்…” என்ற முடிவோடு வீட்டுக்குள் சென்றாள் .

மறுநாள் ஒரு பதினோறு மணியளவில் சஞ்சய் நிகேதனின் வீட்டுக்கு வந்திருந்தான்… பொதுவாக கம்பெனி ஞாயிறு அன்று விடுமுறை என்றாலும், வீட்டில் இருந்தப்படி சில நாட்கள் நிகேதனும், சஞ்சயும் வேலை செய்வார்கள்.

நிகேதன் பெரும்பாலும் சஞ்சய் வீட்டிற்கு செல்வான். சஞ்சய் எப்போதாவது தான் இங்கு வருவான். அதுவும் நீரஜா சிங்கப்பூர் சென்றதில் இருந்து தான் அவன் வருகை குறைந்து இருந்தது. இப்போது நீரஜாவோடு எல்லாம் சரியாகிவிட்ட இந்த நேரத்தில், மனதில் மகிழ்ச்சியோடு நிகேதன் வீட்டுக்கு வந்தான்.

ஆனால் அவன் வந்த நேரம் நீரஜா வீட்டில் இல்லை, தோழியின் திருமணத்திற்காக பரிசு வாங்க, ஜானவியோடு சென்றிருந்தாள். அது ஒரு ஏமாற்றமாக இருந்தாலும், வந்த வேலை முக்கியம் என்பதால் நிகேதனோடு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

சிறிதுநேரம் வேலை பார்த்து முடித்ததும், இருவரும் சாதாரணமாக ஏதோ பேசியப்படி அமர்ந்திருந்தனர். அப்போது வெற்றி அவனது அறையில் இருந்து வந்தவன்,

“என்ன ரெண்டுப்பேரும் பிஸியா இருக்கீங்களா..??” என்றப்படி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான்.

“இல்ல வெற்றி சும்மா தான் பேசிக்கிட்டு இருக்கோம்… ஆமாம் நீங்க நீரஜா கூட ஷாப்பிங் போலயா..??”

“இல்ல நிக்கி… பொண்ணுங்கக் கூட ஷாப்பிங் போறது ரொம்ப கஷ்டம்… என்னோட மேரேஜ் கிஃப்ட்டையும் நீரஜாவே வாங்கிட்டு வந்துடுவா… அதுமட்டுமில்லாம முக்கியமான ஒரு ஃப்ரண்டை பார்த்துட்டு காலையில தான் வந்தேன்… திரும்ப 3 மணிக்கு பெங்களூர் போகணும்…. அதான் ரெஸ்ட் எடுக்கப் போறதா நீரஜ்க்கிட்ட சொல்லிட்டேன்…”

“இன்னும் எத்தனை நாள் லீவ்  இருக்கு வெற்றி… எப்போ திரும்ப சிங்கப்பூர் போகணும்…” என்று சஞ்சய் கேட்டான்.

“இன்னும் 1 வாரம் தான் லீவ் இருக்கு சஞ்சய்… அதுக்குள்ள இன்னொரு ஃப்ரண்டை பார்க்கணும்…”

“வெற்றி ஃப்ரண்ட்ஸ்ல்லாம் என்ன சொல்றாங்க… புது பிஸ்னஸ் பண்றதுக்கு எங்க ஹெல்ப் ஏதாவது வேணும்னா கேளுங்க… பணப் பிரச்சனைன்னா கூட சொல்லுங்க… நிரு ஏதாவது ஹெல்ப் உங்களுக்கு தேவைப்பட்டா செய்ய சொல்லி என்கிட்ட சொல்லியிருக்கா..”  என்றான் நிகேதன்.

“கண்டிப்பா நிக்கி… ஃப்ரண்ட்ஸ்க்கிட்ட பேசியிருக்கேன்… இப்போ லீவ் முடியப் போறதால, திரும்ப வர வேண்டியிருக்கும், அப்போ ஏதாவது ஹெல்ப்ன்னா கேக்கறேன்…

நிக்கி இப்போ சிங்கப்பூர் போறதுக்குள்ள உங்கக்கிட்ட வேற ஒரு விஷயமா பேசணும்னு இருக்கேன்… அதை இப்போ பேசலாமா..??”

“சொல்லுங்க வெற்றி… என்ன பேசணும்..??”

“நிக்கி… நான் நீரஜாவை காதலிக்கிறேன்… அப்புறம் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்றேன்…” என்று வெற்றி சொல்லிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த நிகேதனை விட சஞ்சய் மிகவும் அதிர்ச்சியானான்.

ஆனால் நிகேதனுக்கு இது அதிர்ச்சியாக இல்லை,  வெற்றிக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவன் ஏற்கனவே யூகித்தது தான்,  ஆனால் நீரஜாவிற்கு அப்படி ஒரு அபிப்ராயம் இருக்காது என்று தான் அவன் எண்ணம்.

“வெற்றி… இதுல முழுக்க முழுக்க நிருவோட விருப்பம் தான் முக்கியம்… பெங்களூர் போய்ட்டு வாங்க… அப்புறம் நீரஜாக்கிட்ட இதுப்பத்தி பேசலாம்…”

“எனக்கு இதுபோல ஒரு எண்ணம் இருக்கும்னு  நீரஜ்க்கு தெரியும்னு தான் நினைக்கிறேன்… இருந்தாலும், பெங்களூர்ல இதைப்பத்தி அவக்கிட்ட பேசலாம்னு இருக்கேன்… அதுக்கு முன்னாடி உங்க அபிப்ராயத்தை கேக்கலாம்னு தான் உங்கக்கிட்ட பேசினேன்… கண்டிப்பா நீரஜ் ஒத்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு நிக்கி…” என்றான் அவன்,

இரண்டு நாளில் தன்னோட காதலை வெளிப்படுத்திவிடலாம் என்று சஞ்சய் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்க, அதற்குமுன் வெற்றி நீரஜாவோடு பேசப்போவது குறித்து சஞ்சய்க்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. கண்டிப்பாக நீரஜா வெற்றியின்  காதலை மறுத்துவிடுவாள் என்று தொன்னூறு சதவீதம் நம்பிக்கை இருந்தாலும், பத்து சதவீதம் எங்கே நீரஜா வெற்றியின் காதலை ஒத்துக் கொண்டுவிடுவாளோ..?? என்ற குழப்பமும் சேர்ந்து அவனை பாடாய்படுத்தியது. 

மௌனம் தொடரும்..