KPEM 14

மௌனம் 14

மோகனிடம் இருந்து அவளை பிரித்த காரணத்தால்,  சஞ்சய், நீரஜா மேல் மந்த்ராவிற்கு கோபம் இருந்தது உண்மை தான், ஏதாவது ஒரு வகையில் அவர்களை பழி தீர்க்க வேண்டும் என்று அவள் மனது கொந்தளித்துக் கொண்டு தான் இருந்தது. அந்த கோபத்தில் தான்அவள்  நீரஜாவை சந்திக்கவும் சென்றாள்.

ஆனால் ஒருவேளை நீரஜா அவளை புரிந்துக் கொண்டால், மோகனிடம் தனக்காக நீரஜா பேசமாட்டாளா..?? என்ற நப்பாசை மந்த்ரா மனதில் இருந்தது.  ஆனால் அங்கு சென்றபின் நீரஜா பேசியவிதமே மந்த்ராவிற்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது. அந்த கோபத்தில் சஞ்சயை அவள் வலையில் விழ வைக்க போவதாக சொல்லிவிட்டு வந்தாள். ஆனால் சஞ்சயை அப்படியெல்லாம் வலையில் விழ வைக்க முடியாது என்பது மந்த்ராவிற்கு புரிந்து தான் இருந்தது.

இருந்தாலும் அவள் அப்படி பேசும்போது நீரஜாவின் முகம் போன போக்கும்,  சஞ்சய் அன்று மோகனிடம் நீரஜாவை காதலிப்பதை பற்றி சொன்னது,  அதற்கு நீரஜா மறுக்கமாட்டாள் என்று சொன்னது எல்லாம் வைத்துப் பார்த்த போது, இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை மந்த்ரா புரிந்து வைத்திருந்தாள். மோகனையும் அவளையும் பிரித்த அவர்கள் இருவரையும் அவள் பிரிக்க நினைத்தாள். ஆனால் அது எப்படி என்று புரியாமல் குழம்பினாள்.  நன்றாக யோசித்தவள், பின் ஒரு வழியைக் கண்டுப்பிடித்ததும் சஞ்சயை கண்காணிக்க தன் நண்பன் ஒருவனை ஏற்பாடு செய்தாள்.

அவளின் திட்டப்படி சஞ்சய் தினம் அலுவலகம்  செல்லும் வழியை தன் நண்பன் மூலம் அறிந்து அங்கு காத்திருந்தாள். அவனது  காரின் எண்ணையும் அந்த நண்பன் மூலம் தெரிந்துக் கொண்டாள். மந்த்ரா அவனுக்காக காத்திருக்கும் இடம் ரொம்ப ட்ராஃபிக் இல்லாத பகுதி தான், அந்த இடத்தில் நின்றிருந்தவள், சஞ்சயின் கார் வருவதற்காக காத்திருந்தாள். அவன் கார் வந்தபோது, திடீரென்று சஞ்சய் காரின் முன்னால் போய் விழுந்து தற்கொலை நாடகத்தை நடத்தினாள்.

யாரோ தன் காரின் முன்பு வந்து விழுந்ததை பார்த்து பதறியப்படி காரை நிறுத்திய சஞ்சய், இறங்கி போய் பார்த்தால், அது மந்த்ரா… அன்று ரெஸ்ட்ரான்ட்டில் பார்த்ததை விட மிகவும் சோர்ந்துப் போய் காணப்பட்டாள். அவன் அவளை நம்ப வேண்டும் என்பதற்காக அவள் அப்படி தயார் செய்துக் கொண்டு வந்திருந்தாள்.  அவனைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டாள். தற்கொலை செய்யும் அளவுக்கு அவள் வந்ததற்கு காரணம் என்ன..?? என்று சஞ்சய் யோசித்தான்.

மோகனுடனான காதல் முறிந்துவிட்டதால், இப்போது அவள் செய்யும் வேலையும் இல்லை, அடுத்த மாதம் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும், அவள் பணத்தை எதிர்பார்த்து, உடம்பு சரியில்லாத அன்னை காத்திருப்பார்கள், சரியான வேலையும் கிடைக்கவில்லை. அதனால் இறப்பது ஒன்றே வழி என்று அழுது நாடகமாடினாள் அவள்,

மோகனை எச்சரிக்க நினைத்தாலும், நீரஜா சொன்ன எல்லாவற்றையும் சஞ்சய் மோகனிடம் சொல்லவில்லை,  மந்த்ரா பத்தி நீரஜாவுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை, அவளிடம் எச்சரிக்கையாக இரு, அவளைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்தப் பின் திருமணம் செய்துக் கொள்.. என்று தான் மோகனிடம் சஞ்சய் சொல்லி வைத்திருந்தான்.

இதில் மோகன் போய் மந்த்ராவிடம் இதைப் பற்றி பேச, நீரஜா மூலம் மோகனுக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் என்ற பயத்தில் தன்னைப் பற்றி அவளே கூறிய பின் மோகனுக்கு ஏற்பட்ட மனக்கசப்பில் தான் அவர்கள் பிரிந்ததே, ஆனாலும் மந்த்ராவின் இன்றைய நிலையைப் பார்த்ததும் சஞ்சய்க்கு கஷ்டமாக தான் இருந்தது.  அவன் செய்த வேலை இருவரும் பிரியும் அளவிற்கு போகும் என்று அவன் நினைக்கவில்லை,

தன் தந்தை சொல்லிய பாடத்தை நன்றாக தன் மனதில் பதிய வைத்ததால், சஞ்சய் அவ்வளவு சுலபமாக யாரிடமும் ஏமாறமாட்டான். ஆனால் தற்கொலை வரைக்கும் ஒரு பெண் சென்றிருக்கிறாள், அதற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு அவனுக்கு இருந்தது. அதனால் அவளுக்கு உதவி செய்ய நினைத்தான்.  நீரஜாவும் எதுவும் அவனிடம் சொல்லாத பட்சத்தில், மந்த்ராவின் பழி உணர்வு சஞ்சய்க்கு தெரியவில்லை,

சஞ்சய் பொதுவாக யாருக்கும் சிபாரிசு செய்ய விரும்பமாட்டான். அவன் இரண்டுப்பேருக்கு சிபாரிசு செய்தால், அவனிடம் இருவர் சிபாரிசோடு வேலைக்கு வருவர், சிபாரிசோடு வேலைக்கு வருபவர்கள் பொறுப்போடு வேலை செய்யமாட்டார் என்பது சஞ்சயின் கருத்து, நிகேதனுக்கும் இந்த கருத்தில் உடன்பாடு உண்டு, அதனால் இருவருமே யாருக்கும் சிபாரிசு செய்யமாட்டார்கள்.

ஆனால் மந்த்ராவிற்கு உடனடியாக ஒரு வேலை வேண்டும் என்பதால், தனக்கு தெரிந்த நிறுவனத்தில் அவளுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தான். உண்மையிலேயே மந்த்ராவின் நிலை சஞ்சயிடம் சொன்னது போல் தான் இருந்தது. அவள் வருமானத்தை எதிர்பார்த்து தான் அவள் குடும்பம் இருக்கிறது. ஆனால் அடுத்த மாத வருமானம் இல்லையென்றால் சோற்றுக்கே வழியில்லை என்பதெல்லாம் கிடையாது, ஆனாலும் சஞ்சயிடம் அவள் அப்படி நடித்தாள்.

இக்கட்டான சமயத்தில் அவன் உதவி செய்ததற்காக, மந்த்ரா அவனுக்கு நன்றி சொன்னாள். இந்த விஷயம் நீரஜாவிற்கு தெரியவேண்டாம், இந்த விஷயத்தில் அவளிடம் நான் கோபமாக பேசிவிட்டேன், அதனால்  அவளிடம் இதை சொல்லாதீர்கள் என்று மந்த்ரா கூறினாள்.

மந்த்ரா மீது நீரஜாவிற்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்பதால், சஞ்சயும் இப்போது இந்த விஷயம் நீரஜாவிற்கு தெரியவேண்டாம் என்று நினைத்தான். ஒருவேளை மந்த்ரா முன்போல் இல்லாமல், இப்போது மாறியிருந்தால், சிறிதுகாலம் அவள் போக்கை கவனத்து, அவள் மாறியிருப்பது தெரிந்தால், மோகனிடம் அவளுக்காக பேசலாம்,  அவன் நினைத்தப்படி எல்லாம் நல்லபடியாக முடிந்தால் பின் நீரஜாவிடம் கூறலாம் என்ற நல்லெண்ணத்தில் இருந்தவனுக்கு, மந்த்ராவின் தீய எண்ணம் தெரியாமல் போனது.

நாட்கள் வேகமாக போனது, மந்த்ராவிற்கு வேலை வாங்கிக் கொடுத்த சஞ்சய், அவளை கவனிக்கும்படி அங்கேயே ஒரு வேலையாளிடமும் சொல்லி வைத்திருந்தான். அவளும் ஒழுங்காக இருப்பதாக தான் அவனுக்கு தகவல் வந்தது. அதனால் நிகேதன் திருமணம் முடிந்ததும் மோகனிடம் மந்த்ரா பற்றி பேசலாம் என்று நினைத்திருந்தான்.

இதில் அவன் விஷயத்தை விட்டுவிடுவானா..?? நிகேதன் திருமணத்திற்கு பிறகு நீரஜாவிடம் தன் காதலையும் வெளிப்படுத்த காத்திருந்தான். நிச்சயத்திற்குப் பிறகு மூன்று மாதம் கழித்து நிகேதனின் திருமணம் முடிவு செய்யப்பட்டப் படி நாட்கள் வேகமாக ஓடி, இன்னும் திருமணத்திற்கு இருபது நாட்கள் தான் இருந்தது.

நிகேதன் திருமண வேலையை கவனிப்பதால், சஞ்சய் அவனுடைய வேலையும் சேர்த்து பார்த்ததால், எப்போதும் பிஸியாகவே இருந்தான். இருந்தாலும் இடையில் நீரஜாவை பற்றி சிந்திக்கவும் செய்தான். அவள் முன்போல் அவனிடம் பழகுவதில்லை என்பதை உணர்ந்து தான் இருந்தான். ஒருவேளை அண்ணனின் திருமணம் என்பதால் அவளும் பிஸியாக இருப்பாள் என்று காரணத்தை தேடிக் கொண்டான்.

நீரஜாவும் சஞ்சயை நேரில் பார்த்து பேசும் சந்தர்ப்பம் கிடைத்தால், தன் மனதை கட்டுப்பாட்டில் வைத்து, உணர்ச்சிகள் எதுவும் முகத்தில் தெரியாதப்படி பார்த்துக் கொண்டாள். சஞ்சய் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரிந்ததும், தன் காதலை வெளிப்படுத்தலாம் என்று காத்திருந்தாள்.

இருவருமே மனதில் உள்ள காதல், முகத்தில் பிரதிபலிக்காதப்படி இருக்க நன்றாக பழகியிருந்தார்கள். அதுவே அடுத்தவர் மனதில் என்ன இருக்கிறது என்பது இருவருக்குமே தெரியாமல் போக காரணமாயிருந்தது.

இப்படியே சஞ்சய் தன் காதலை வெளிப்படுத்த நிகேதன் திருமணத்திற்கு காத்திருக்கும் போது, ஒருநாள் மந்த்ராவிடம் இருந்து அவனுக்கு அலைபேசி மூலம் அழைப்பு வந்தது.

அவளின் அழைப்பை ஏற்று அவன் “ஹலோ” சொன்னபோது, அவளோ பதட்டமாக,

“சஞ்சய்.. ஊரிலிருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு போன் வந்துச்சு… நான் உடனே ஊருக்கு போகணும்… ஆனா அம்மாக்கு ட்ரீட்மென்ட் பார்க்கற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல… எனக்கு இங்க மோகன் அப்புறம் உங்களை தவிர இந்த ஊர்ல யாரையும் தெரியாது சஞ்சய்… நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்… ப்ளீஸ் சஞ்…” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இங்கே சஞ்சயோ அழைப்பு துண்டிக்கப்பட்டதும், மந்த்ராவிற்கு என்ன பிரச்சனை என்பது தெரியாமல், திரும்ப திரும்ப அவளது அலைபேசிக்கு முயற்சித்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் அழைப்பு ஏற்க படவில்லை, மந்த்ராவிற்கு என்ன ஆனதோ..?? என்ற கவலை பிறந்தது. ஏற்கனவே அவன் காரின் முன்னால் அவள் வந்து விழுந்த தினம் அவனே அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறான். இப்போது மாலை நேரம் என்பதால் அவள் வீட்டிலிருந்து பேசியிருக்க வேண்டும் என்று யூகித்து, கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்ல தயாரானான்.

இங்கு மந்த்ராவோ தன் திட்டம் நிறைவேறப் போகிற ஆனந்தத்தில் வீட்டில் அமர்ந்திருந்தாள். சஞ்சயின் இரக்க குணத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள். அவள் வாடகைக்கு தங்கியிருந்த அறையின் வீட்டு உரிமையாளர்கள் இப்போது ஊரில் இல்லை, இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள்.

வேண்டுமென்றே அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்ற நாடகத்தை நடத்தினாள். பாதியிலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டால், கண்டிப்பாக என்னவோ ஏதோ..?? என்று பதறுவான் என்று வேண்டுமென்றே அலைபேசியின் அழைப்பை நிறுத்தினாள். அதன்படியே அவன் திரும்ப போன் செய்தபோது  அவள் வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் அவன் முயற்சியை கைவிட்டது தெரிந்ததும், அவன் கண்டிப்பாக வீட்டுக்கு தான் வருவான் என்று யூகித்தாள்.  உடனே நீரஜாவை தொடர்பு கொண்டாள்.

மந்த்ராவின் அழைப்பு தான் என்று வேண்டா வெறுப்பாக அதை ஏற்ற நீரஜா,

“ஹலோ..” என்றாள்.

“ஹாய் நீரஜா… எப்படியிருக்க…?? அண்ணனுக்கு கல்யாணம்னு சந்தோஷமா இருக்கியா..??”

“நான் எப்படியிருந்தா என்ன..?? எதுக்கு போன் பண்ணியோ.. அந்த விஷயத்தை சொல்லு… எனக்கு நிறைய வேலை இருக்கு….”

“நான் என்ன விஷயத்துக்காக போன் செஞ்சிருப்பேன்னு நீ நினைக்கிற…?? என்ன நீரஜா, எல்லாம் மறந்துப்போச்சா..?? நான் உன்கிட்ட விட்ட சவாலை மறந்துட்டியா..??”

சவால் என்றதும் நீரஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது… சும்மா இவளை கோபப்படுத்த தான் மந்த்ரா அப்படி பேசியிருப்பாள் என்று தான் நீரஜா நினைத்தாள். ஆனால் இப்போது எதற்காக அவள் இதைப்பற்றி பேச வேண்டும் என்று நீரஜா யோசித்தாள். உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு  சாதாரணமாக பேசினாள்.

“என்ன உளர்ற மந்த்ரா…”

“உளர்றனா…” என்று சிரித்தவள், “என்ன நீரஜா… நான் சஞ்சயை என்னோட வலையில் விழ வைக்கிறேன்னு உன்கிட்ட சொன்னேனே… மறந்திட்டியா..?? அப்படி மறந்தாலும் பரவாயில்ல… நான் அன்னைக்கு போட்ட சாவாலில் ஜெயிச்சிட்டேன்னு சொல்ல தான் போன் பண்ணேன்..”

“நீ என்ன சொன்னாலும் நம்ப, நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது… நீ சொல்றது பொய்… இப்படியெல்லாம் பொய் சொல்லி என்னை கஷ்டப்படுத்தறதா நினைச்சு போன் பண்ணியிருந்தா… நீ வீணா டைம் வேஸ்ட் பண்ணாம, உருப்படியா ஏதாவது வேலையிருந்தாப் பாரு… நீ சொல்ற எதையும் நான் நம்பமாட்டேன்…”

“ஆஹா.. சஞ்சய் மேல தான் உனக்கு எவ்வளவு நம்பிக்கை… ஆனா உன்னோட நம்பிக்கை இன்னும் கொஞ்ச நேரத்துல தூள் தூள் ஆகப் போகுது… இன்னிக்கு சஞ்சய் என்னோட வீட்டுக்கே வரப் போறாரு… நீ நம்பலன்னா எனக்குப் பரவாயில்ல… கடைசியில சஞ்சய்க்கிட்ட நீதான் ஏமாந்துப் போகப் போற… அப்புறம் சஞ்சய் உன்னை ஏமாத்திட்டதா புலம்பக் கூடாதில்ல… அந்த நல்லெண்ணத்துல தான் சொன்னேன்…

இவ்வளவு சொல்லியும் சஞ்சய் நல்லவரு… வல்லவருன்னு சொன்னா… நீ எப்படியாச்சும் போ… எனக்கென்ன..?? எனக்கு இதுல எந்த நஷ்டமும் இல்ல… இருந்தாலும் தெரிஞ்ச பொண்ணாச்சேன்னு சொன்னேன்…

இங்கப் பாரு நீரஜா… நான் சொல்றத ஒருவேளை எப்படி நம்புறதுன்னு யோசிக்கிறியா..?? அப்படின்னா என் பேச்சை நீ நம்ப வேண்டாம்… நீ இப்போ என்னோட வீட்டுக்கு வந்தாக் கூட உன்னோட சஞ்சய் லட்சணம் தெரிஞ்சிடும்… அப்புறம் உன் இஷ்டம்…” என்றவள் தன் வீட்டு முகவரியை நீரஜாவிற்கு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்…

தன் காதலன் இன்னொரு பெண்ணை தேடிப் போகிறான் என்று தெரிந்தால், எந்தப் பெண்ணும் அமைதியாக இருக்க மாட்டாள்.  கண்டிப்பாக அவள் சொன்னது மெய்தானா..?? என்று தெரிந்துக் கொள்ள நீரஜா வருவாள், என்று மந்த்ரா நம்பினாள்.

ஆனால் மந்த்ரா சொன்னதை நம்பி சஞ்சயை சந்தேகப்படக் கூடாது என்பதில் நீரஜா உறுதியாக இருந்தாள். சஞ்சய் ஒருபோதும் அப்படி செய்யமாட்டார்.  மந்த்ரா சும்மா என்னை சீண்டிப் பார்க்கிறாள், என்று சஞ்சய் மீது நம்பிக்கையோடு இருந்தாள். ஆனால் இந்த நம்பிக்கை இன்னும் சில நிமிடங்களில் தூள் தூளாகப் போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை.

“இவ சொன்னா அதைக்கேட்டு ஓடி வந்திடுவேன்னு நினைச்சுக்கிட்டாளா..?? ச்சே.. என்னோட மூட் ஐ ஸ்பாயில் பண்ணிட்டா..” என்று புலம்பிக் கொண்டே அவள் அறையிலிருந்து கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.

அப்போது நிகேதன் யாரோடோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். யாரோ என்ன..?? அவன் ஜானவியிடம் தான் பேசிக் கொண்டிருந்தான். அவள் வரும்போதா அவன் சஞ்சயைப் பற்றி ஜானவியிடம் பேச வேண்டும்?

அவர்கள் இருவரும் என்னப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. சரியாக நீரஜா படிக்கட்டுகளில் இறங்கி வரும்போது,

“பொதுவா சஞ்சய்க்கு ரெகமெண்டேஷன் பண்றதே பிடிக்காது நவி… அவனும் யாருக்கும் பண்ணமாட்டான்… அவன்கிட்ட ரெகமெண்டேஷனோட வந்தாலும் அதை ஏத்துக்க மாட்டான்… அப்படிப்பட்ட சஞ்சய், யாரோ மந்த்ராவுக்கு ரெகமெண்டேஷன் பண்ணி வேலை வாங்கிக் கொடுத்திருக்கான்… நான் எதேச்சையா அந்த கம்பெனி ஓனரை பார்த்தப்போ இந்த விஷயத்தை சொன்னாரு…

மந்த்ரா யாருன்னு தெரியல… ரெகமெண்டேஷன் செய்யற அளவுக்கு அந்த பொண்ணு சஞ்சய்க்கு வேண்டியவளா..?? இதுவரைக்கும் சஞ்சய் அந்த மந்த்ரா பத்தி எதுவும் என்கிட்ட சொன்னதில்ல…” என்று ஜானவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அன்றைக்கு மோகனைப் பார்த்த விஷயத்தை மட்டுமே சஞ்சய் நிகேதனிடம் தெரியப்படுத்தியிருந்தான். மந்த்ரா பற்றி மோகனை எச்சரிக்க நினைத்ததால், அவளைப்  பற்றி நிகேதனிடம் சொல்ல தோன்றவில்லை சஞ்சய்க்கு, அதேபோல் மந்த்ராவிற்கு வேலை வாங்கி கொடுத்த விஷயத்தையும் நிகேதனுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை, நீரஜாவும் மோகனைப் பார்த்ததை பற்றி சஞ்சயே நிகேதனிடம் சொல்வான் என்று நினைத்து மோகன் பற்றி நிகேதனிடம் கூறவில்லை,

நிகேதனும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை, தன் நண்பன் அவசியமான விஷயம் என்றால் தன்னிடம் சொல்லாமல் இருக்கமாட்டான் என்பது நிகேதனுக்கு நன்றாக தெரியும், ஏதோ பேச்சுவாக்கில் தான் இதை அவன் ஜானவியிடம் கூறிக் கொண்டிருந்தான்.

ஆனால் நீரஜாவால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை, தன் நண்பனிடமே மந்த்ராவை பற்றியும் அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்ததைப் பற்றியும் சொல்லாமல் மறைக்க வேண்டிய அவசியம் என்ன…?? அப்படியென்றால் மந்த்ரா சொன்னது உண்மையா..?? சஞ்சய் அவளைக் காண இன்று வீட்டுக்குப் போகப் போகிறாரா..?? ” சிந்திக்கக் கூட இயலாமல், மந்த்ரா சொன்னது உண்மையா..?? என்று தெரிந்துக் கொள்ள தன் அண்ணனிடம் கூட சொல்லாமல் உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

மந்த்ரா வீட்டின் முன்னால் காரை நிறுத்திய சஞ்சய் வேகமாக உள்ளே செல்ல, மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்தவள் அவனைப் பார்த்ததும் பதட்டமாக எழுந்தாள்…

“சஞ்சய் நீங்க கண்டிப்பா வரூவிங்கன்னு தெரியும்… நீங்க மட்டும் தான் எனக்கு இப்போ ஹெல்ப் பண்ண முடியும் சஞ்சய்… ப்ளீஸ் சஞ்சய்.. ஹெல்ப் பண்ணுங்க…” என்று கெஞ்ச

“கண்டிப்பா மந்த்ரா, ஆமாம் போன் ஏன் பாதியிலேயே கட் ஆயிடுச்சு…??” என்று அவன் கேட்டான்.

“அது பதட்டத்துல மயக்கமாயிட்டேன் சஞ்சய்… அதுல கைப்பட்டு கட் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்… ஹவுஸ் ஓனர் கூட வீட்ல இல்ல… தானா மயக்கம் தெளிஞ்சு இப்போ தான் எழுந்தேன்…”

“இப்போ நார்மலா தானே இருக்க…”

“ஆமாம் சஞ்சய், இப்போ கொஞ்சம் பரவாயில்ல… ஆனா அம்மாவை ஊருக்குப் போய் பார்த்தா தான் எனக்கு பதட்டம் குறையும்..”

“கவலைப்படாத, நான் பணம் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்… தனியா ஊருக்குப் போய்டுவல்ல… ப்ளைட்ல போனா சீக்கிரம் போய்டலாம்.. உங்க ஊரு பக்கத்துல அந்த ஃபெஸிலிட்டிஸ் இருக்கா… இல்ல ட்ராவல்ஸ்ல வண்டி அரேஞ் பண்ணனுமா..??” அக்கறையாக கேட்டான்.

மந்த்ராவின் மேல் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும் என்று சஞ்சய்க்கு  எதுவும் இல்லை, மந்த்ராவிற்கும், மோகனிற்கும் சுமூகமான உறவு இருந்திருந்தால், இந்த நேரம் மோகன் மந்த்ராவிற்கு உதவியாக இருந்திருப்பான். அப்படியில்லாமல் போனதுக்கு தான் தானே காரணம் என்ற காரணத்தால் தான் சஞ்சய் இவ்வளவு செய்வதும்,

“ஒன்னும் ப்ரச்சனையில்ல சஞ்சய்… தங்கை வீட்ல இருக்கா… அம்மாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி உடனே ட்ரீட்மென்ட் பார்க்க சொல்லியிருக்கேன்… பணம் தான் அவசர தேவை… அதனால பஸ்லேயே போகலாம்…” என்று பேசிக்கொண்டே இருந்தவள், திடிரென்று சஞ்சயை அணைத்து,

“உங்க உதவிய மறக்க மாட்டேன் சஞ்சய்… நீங்க இல்லன்னா எங்க அம்மா நிலைமை என்னாயிருக்கும்… ரொம்ப தேங்க்ஸ் சஞ்சய்…” என்று கூறியவள், அவனை விட்டு விலகாமலேயே நின்றிருக்க,

திடீரென்று அவள் செய்த செய்கையில் அதிர்ந்தவன், அவளை விலக்க முயற்சித்தான். அப்போது வாசலில் அரவம் கேட்டு சஞ்சய் திரும்பி பார்த்தபோது, அங்கே நீரஜா நின்றிருந்தாள்.

வீட்டின் உரிமையாளர் இல்லாத இந்த நேரத்தில் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், கண்டிப்பாக வருவது நீரஜாவகத்தான் இருக்கும் என்று யூகித்த மந்த்ரா திடிரென்று சஞ்சயை அணைத்தப்படி பேச ஆரம்பித்தாள். அவள் நினைத்ததுப் போலவே நடந்தது.

நீரஜாவோ சஞ்சயை ஒரு கோபப் பார்வை பார்த்துவிட்டு, கோபத்தோடு திரும்பி வீட்டிலிருந்து வெளியே சென்றாள். இந்த நேரம் நீரஜா இங்கு எப்படி?? என்று குழம்பிய சஞ்சய், உடனே மந்த்ராவை பார்க்க, அவளோ எதையோ சாதித்துவிட்ட திருப்தியில் அவனை பார்த்து புன்னகைத்தாள். அப்போதே சஞ்சய்க்கு மந்த்ராவின் திட்டம் புரிந்துப் போனது.

உடனே நீரஜாவை சமாதானப்படுத்த வெளியே ஓடினான். மந்த்ராவோ இனி அவர்கள் எப்படியாவது போகட்டும், என்று துளி கூட வருத்தமில்லாமல் அமர்ந்துவிட்டாள். அவர்கள் நிரந்தரமாக பிரிவார்களா..?? இல்லை சமாதானம் ஆகிவிடுவார்களா..?? இதைப்பற்றியெல்லாம் மந்த்ரா நினைத்துப் பார்க்கவில்லை, இந்த நேரம் மனதிற்கு பிடித்தவர்கள்  தன்னை விட்டு பிரிந்து போனால்  எப்படியிருக்கும் என்று சஞ்சய்க்கு தெரிய வேண்டும்,  நீரஜா அவளை எவ்வளவு கேவலமாக பேசினாள். இப்போது  தான் காதலித்த சஞ்சய் நல்லவன் இல்லையென்று  வருத்தப்படட்டும், அதுபோதும் என்று மட்டுமே நினைத்தாள். அதனால் சஞ்சய் நீரஜாவை எப்படி சமாதானப்படுத்த போகிறான் என்று பார்க்க அவளுக்கு தோன்றவில்லை,

நீரஜாவோ சரியாக மந்த்ராவின் முகவரியை கண்டுப்பிடித்து அந்த தெரு வரையில் வந்திருந்தாலும், மந்த்ராவின் வீட்டு எண்ணை கண்டுப்பிடிப்பதற்காக காரை தெருமுனையிலேயே நிறுத்திவிட்டு வந்தாள்.  அதனால் அவள் கார் இருக்கும் இடத்திற்கு நடந்துப் போக வேண்டியிருந்தது. அந்த தெருவில் ஆள்நடமாட்டம் குறைவாக தான் இருக்கும், அதுவும் இது இருள் பரவும் நேரம் என்பதால் அந்த தெருவில் ஆள்நடமாட்டமே இல்லை,

வீட்டு வாசலை தாண்டி அவள் சென்றிருக்க, “நீர…ஜா..” என்று கத்தியப்படியே சஞ்சய் அவள் அருகில் வந்துவிட்டான்.

அவன் கூப்பிட்டதும் திரும்பியவள், அவனை பார்த்து முறைத்துவிட்டு திரும்பி வேகமாக நடந்தாள். அவனோ அவள் கையைப் பிடித்து நிறுத்த போக,

“என்னை தொடாதீங்க சஞ்சய்…  மந்த்ராவை கட்டிப்பிடிச்ச கையால என்னை தொடாதீங்க…” என்று கோபமாக சொன்னப்படியே அவள் வேகமாக நடந்தாள்.

“நிரு… இங்க நடந்தது உனக்கு தெரியாது… அந்த மந்த்ரா…” முழுதாக அவன் சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் அவளோ…

“ச்சே…  மந்த்ரா என்கிட்ட சவால் விட்டப்போ.. நீங்க அந்த மாதிரி ஆள் கிடையாதுன்னு அவக்கிட்ட சொன்னேன்… ஆனா நீங்க..

மந்த்ரா பத்தி தெரிஞ்சும் அவக்கூட இப்படின்னா… நீங்க எந்த மாதிரி கேரக்டர்… உங்களை..” என்று ஏதோ சொல்ல வந்தவள் திரும்பி கோபமாக வேகத்துடன் கார் அருகில் வந்து காரில் ஏறப் போகும்போது, அவளை தடுத்து அவள் கையைப் பிடித்து சஞ்சய் அவளிடம் ஏதோ சொல்ல வாயெடுத்த போது,

“என்னை தொடாதீங்கன்னு சொன்னேன் இல்ல…” என்று அவன் பிடியை உதறினாள்.

அவள் அப்படி செய்தபோது அவனுக்கு கோபம் தான் வந்தது. அவளை மட்டுமே மனதில் நினைத்து அவளோடு சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையோடு அவன் காத்திருக்க, இங்கே என்ன நடந்ததென்று கூட தெரியாமல், கண்ணால் பார்த்ததை அறைகுறையாக புரிந்துக் கொண்டு என்னவெல்லாம் பேசுகிறாள் என்ற கோபத்தில்,

“நீ பார்த்ததுல அப்படி என்ன புரிஞ்சுது..?? இந்த மாதிரியா பார்த்த… என்று அவளை இழுத்து மிக இறுக்கமாக அணைத்தவன், “இல்ல இதுக்கும் மேல பார்த்தீயா..??” என்று அவன் இழுத்து அணைத்ததிலேயே அவனை மிரளப் பார்த்துக் கொண்டிருந்தவளின் இதழை முரட்டுத்தனமாக சிறைப் பிடித்தான்.

நீரஜா அவனின் பிடியிலிருந்து விலக முயற்சித்ததை கூட பொருட்படுத்தாதவன், சில நிமிடங்கள் அப்படியே அவளின் இதழை விடுவிக்காமல் இருந்தான். பின் அவள் மேல் எழுந்த கோபம், அவளை அணைத்ததும் படிப்படியாக குறைய அவன் பிடியை லேசாக தளர்த்தினான்.  அவளோ தன்னை விடுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்தவள், அவன் பிடி தளர்ந்ததும், அவனை தள்ளிவிட்டு விலகினாள்.

“ச்சே… நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல சஞ்சய்… அதுவும் ரோட்ல… ச்சே உங்களுக்கு அசிங்கமா இல்ல… என் அண்ணனோட ஒரு நல்ல ஃப்ரண்ட்ன்னு உங்கக்கிட்ட பழகினா… இவ்வளவு சீப்பா நடந்துக்கிறீங்க… என்னோட மூஞ்சியிலேயே முழிக்காதீங்க…” என்று கோபத்தில் கத்திவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டாள்.

“ச்சே எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம்… என்று நினைத்தவன், “நீரஜா.. நிரு..” என்று காரில் பின்னாடியே கத்தியவன், சிறிது தூரம் ஓடினான்.

பின் மந்த்ரா வீட்டு வாசலில் நின்றிருந்த தனது காரை எடுக்க வந்தவன்,  மந்த்ரா முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல், காருக்குள் ஏறப் போக… அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த மந்த்ரா…

“ஒரு நிமிஷம் சஞ்சய்… இந்தா உன்னோட பணம், இது எனக்கு தேவையே இல்லை…” என்று அதை அவன் கார் மீது வைத்தாள்.

“அப்புறம் ரொம்ப தேங்க்ஸ் சஞ்சய்… என்னோட ப்ளானுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததுக்கு… இவ்வளவு இளிச்சவாயனா நீ இருப்பன்னு நான் நினைக்கவேயில்ல… நான் சொன்னதையெல்லாம் அப்படியே நம்புற…” என்று சிரித்தாள்.

இப்போ தெரியுதா..?? மனசுக்குப் பிடிச்சவங்கள பிரியற வேதனை… எனக்கும் மோகனை பிரிஞ்சப்ப இப்படி தான் இருந்துச்சு… அதனால தான் இப்படியெல்லாம் செஞ்சேன்…” என்று அவள் செய்ததுக்கான காரணத்தைக் கூறினாள்.

“நான் செஞ்ச தப்பை திருத்திக்க நினைச்சேன்… அதனால தான் உனக்காக இவ்வளவும் செய்தேன்… நீ மாறினது உண்மைன்னா, உனக்காக மோகன்கிட்ட பேசலாம்னு கூட இருந்தேன்… ஆனா நல்லவேளை அந்த தப்பை நான் செய்யறதுக்கு முன்னாடியே நீ தடுத்துட்ட…

உன்னைப் போல ஒருத்தி மோகன்க்கு தேவையே இல்லை… அதுக்காக தான் எனக்கும் நீரஜாக்கும் நடுவுல இதெல்லாம் நடந்ததுன்னா.. மோகன்க்காக இதையும் நான் ஏத்துக்கிறேன்…” என்று கோபமாக சொல்லிவிட்டு அவன் காரை எடுக்க, அவன் சொன்னதை கேட்டு மந்த்ரா அதிர்ச்சியாக நின்றாள்.

வீட்டிற்கு வந்த பின்பும் கூட நீரஜா கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்கு வரும் வரையிலும் சஞ்சய் அவளோடு எத்தனையோ முறை அலைபேசியில் பேச முயற்சித்தான். ஆனால் அவள் அவன் அழைப்பை ஏற்கவில்லை, “இந்த நேரத்துல எங்கப் போயிட்டு வர நிரு..”  என்று நிகேதன்  கேட்டதற்கு  கூட அவள் பதில் ஏதும் பேசவில்லை.

தன் அறைக்கு வந்த பின்பு, மந்த்ரா பேசியது தான் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “தப்பு செய்ய வாய்ப்பு இல்லாத வரைக்கும் ஆண்கள் நல்லவங்களா தான் இருப்பாங்க…” அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா, அதை அவங்க யூஸ் பண்ணிக்க பார்ப்பாங்க…” என்று அவள் சொன்னபோது சஞ்சய் அதற்கு விதிவிலக்கானவன் என்று நினைத்தாள். ஆனால் இன்று..??

மந்த்ராவிடம் எப்படி நடந்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் அவளிடம் அப்படி நடந்துக் கொண்டது எதனால்..?? கண்டிப்பாக அதில் அவளால் காதலை பார்க்க முடியவில்லை, அவனிடம் அவள் பழகிய முறையை தப்பாக புரிந்துக் கொண்டானோ..?? என்றிருந்தது.

சிறு வயதில் பெற்றோர்கள்  துணையில்லாமல் சித்தப்பா வீட்டில் ஒரு பாதுகாப்பு தன்மை இல்லாமல் தான் நீரஜா வளர்ந்தாள். அவள் பருவம் அடைந்த போது, தன் அண்ணன் மகளை குறித்து சந்திராவிற்கு பயம், இதுவரையிலும் அவள் சிறுமியாக இருந்தாள். ஆனால் இந்த வயதில் ஆண்களால் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது என்பதுதான் அவரின் கவலை.

தன்னுடன் வைத்து நீரஜாவை அவரால் பார்க்க முடியவில்லையென்றாலும், அவள் விடுமுறைக்கு வரும்போதெல்லாம், தன் மகள்களையும் சேர்த்து இனி ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு புரிய வைப்பார். பெற்றோருடன் இருப்பதால் ஜானவியும், வைஷுவும் அதில் கவனக்குறைவாக தான் இருப்பர்.

ஆனால் நீராஜா அதை கடைப்பிடித்தாள். இப்போதும் அவளுக்கு ஆண் நண்பர்கள் இருந்தாலும், அவர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டு தான் பழகுவாள். அப்படிப்பட்டவள் சஞ்சயிடம் பழகும்போது அதை மறந்திருந்தாள்.

சிறுவயதிலிருந்தே தன் அண்ணன் சஞ்சயை பற்றி பேசி கேட்டவளுக்கு சஞ்சய் மேல் ஒரு மதிப்பு இருந்தது. அதுதான் அவனை முதன்முதலாக பார்த்த போது இயல்பாக பழக வைத்தது. அவன் மேல் காதல் வரவும் காரணமாக இருந்தது.

ஆனால் இன்று அவன் செய்த காரியத்தை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை, அதுவும் சாலையில் வைத்து, ஆள்நடமாட்டமே இல்லையென்றாலும், யாராவது பார்த்திருந்தால்..?? என்று நினைக்கும் போதே அவளுக்கு அவமானமாகவும் அறுவருப்பாகவும் இருந்தது. சஞ்சயை பற்றி அவள் உயர்வாக நினைத்து மனதில் எழும்பிய கோட்டை இன்று தானாகவே சரிந்து விழுந்தது.  மந்த்ராவுடன் நெருக்கமாக பார்த்ததை விட அவளிடம் அவன் அப்படி நடந்துக் கொண்டது தான் அவன் மீது அவளுக்கு அதிக கோபத்தை வரவழைத்தது.

வீட்டிற்கு வந்த சஞ்சய்க்கோ, எப்படி இதுபோல் ஒரு காரியத்தை செய்தோம் என்று அவன் மீதே ஆத்திரம் வந்தது. அவளுக்கு புரிய வைப்பதற்கு பதிலாக, அவளிடமே கீழ்த்தரமாக நடந்துக் கொண்டோமே..?? அவள் விருப்பம் இல்லாமல் அவளிடம் இப்படி நடந்துக் கொண்டோமே என்று தன்னையே கடிந்துக் கொண்டான்.

இதில் அவள் கடைசியாக பேசிய வார்த்தைகள் வேறு அவனை காயப்படுத்தியது. மந்த்ராவுடன் அவனை பார்த்ததும் நீரஜா கோபப்பட்ட போது, அது காதலால் ஏற்பட்ட பொறாமை என்று தான் நினைத்தான். ஆனால் அவளோ,  “அண்ணனோட ஃப்ரண்ட்ன்னு உங்கக்கிட்ட பழகினா இப்படி சீப்பா நடந்துக்கிட்டீங்களே..” என்று கேட்டபோது, ஒருவேளை அவளுக்கு அவன்மீது காதல் இல்லையோ..?? என்ற கேள்வி அவன் மனதில் பிறந்தது.

“ச்சேச்சே.. அப்படி இருக்காது… அவளை எப்படியும் சீக்கிரம் சமாதானப்படுத்தி விடலாம்..” என்று அவன் மனதில் நினைத்தான்.

ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, நீரஜாவால் சஞ்சய் செய்த விஷயத்தை எளிதில் மறக்க முடியவில்லை. சஞ்சயை நேரில் பார்த்தால் அந்த சம்பவம் ஞாபகத்திற்கு வரும் என்று அவனை பார்ப்பதை தவிர்த்தாள். அலைபேசியில் அவன் விளக்கத்தைகேட்கவும் விரும்பவில்லை யாரிடமும் இந்த விஷயத்தை கூறவும் விரும்பவில்லை. கல்யாண நேரத்தில் அவளை பார்த்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று இயல்பாக இருக்க பெரும்பாடுப் பட்டாள்.

இருந்தும் தன் தங்கையிடம் வித்தியாசத்தை நிகேதன் உணர்ந்தான். என்னவென்று கேட்டபோது,  “இந்த நேரத்துல அம்மா, அப்பா இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சு நிக்கி… என்று ஆதங்கப்பட்டாள்.

நிகேதனுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் விருப்பமேயில்லை, ஜானவியை காதலித்திருந்தாலும், நீரஜா திருமணத்திற்குப் பின் அவன் திருமணம் செய்துக் கொள்வதாக இருந்தான். ஆனால் ஜானவியின் திருமணத்திற்கு அவள் தந்தை  அவசரப்பட்டதால், பெண் கேட்கும் நிலைமை அவனுக்கு வந்தது. அப்போது கூட திருமணத்தை நீரஜா திருமணத்திற்கு பிறகோ, இல்லை இரண்டு திருமணத்தை ஒன்றாக நடத்துவதற்கோ அவரிடன் அவகாசம் கேட்கலாம் என்றிருந்தான்.

ஆனால் நீரஜாவோ இப்போதே உன் திருமணம் நடக்க வேண்டும் என்று அவசரப்படுத்தினாள். “அம்மா, அப்பா இறந்ததுக்கு அப்புறம் நம்ம தனிதனியா இருக்க வேண்டியதா ஆயிடுச்சு… இப்போ தான் நாம சேர்ந்து இருக்கோம்… இதுல எனக்கு முதலில் கல்யாணம் நடந்தா.. நான் வேற வீட்டுக்குப் போயிடுவேன்…

அதனால உனக்கு முதலில் கல்யாணம் நடந்தா.. ஜானு, நீ, நான் எல்லோரும் ஒரு பேமிலியா வீட்ல இருக்கலாம்… கொஞ்ச நாள் அதை எஞ்சாய் பண்றேன் நிக்கி…” என்று நீரஜா வற்பறுத்தியதால் அவனும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான்.

அவன் முதலில் திருமணம் செய்யப் போவதால், அவன் சொந்தப்பந்தங்களோ, அப்பா அம்மா இல்லாத பொண்ணை விட்டுட்டு கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அவன் திருமணம் செய்துக் கொள்ள போவதாக அவனை குறை கூறினர். அவர்கள் பேசியதை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை,

இருந்தும் நீரஜாவிற்கும் சஞ்சய்க்கும் கல்யாணம் செய்து வைத்தாள் என்ன..?? என்று அவனுக்கு அடிக்கடி தோன்றும்… தன் தங்கைக்கும், சஞ்சய்க்கும் கூட இதில் விருப்பம் இருப்பதாக நிகேதனுக்கு தோன்றியது. அதனால் தன் திருமணத்தின் போதே தங்கையின் திருமணத்திற்கு அஸ்திவாரம் போட்டால் என்ன..?? என்று அவனுக்கு தோன்றியது. அதனால் நீரஜாவிடம் தன் விருப்பத்தை நிகேதன் சொன்னான்.

சஞ்சய் மேலிருந்த காதலை விட அவன் மேல் கோபம் தான் நீரஜாவிற்கு அதிகம் இருந்து. இந்த நேரத்தில் திருமணத்தைப் பற்றி நிகேதன் பேசிய போது அதை அவளுக்கு மறுக்க தான் தோன்றியது.

“எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை… அதனால இந்த விஷயத்தை பேச வேண்டாம்” என்று மேலோட்டமாக கூறிவிட்டாள். நீரஜா இப்போது நல்ல மனநிலையில் இல்லை என்பது நிகேதனுக்கு புரிந்து தான் இருந்தது.

என்ன பிரச்சனை என்றுக் கேட்டால், அம்மா, அப்பாவை காரணம் கூறுகிறாள். அதனால் திருமணம் முடிந்ததும் அவர்கள் திருமணம் பற்றி பேசலாம் என்று அமைதியாகிவிட்டான்.

அங்கே அம்பிகாவும், நிகேதனுக்கு திருமணம் நடக்கும்போது, அதே வயதான சஞ்சய்க்கும் சீக்கிரம் திருமணத்தை நடத்துவதில் ஆர்வமாக இருந்தார். அவருக்கு நீரஜாவை பிடிக்கும், சஞ்சய்க்கும் நீரஜா மேல் விருப்பம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது.  என்வே நீரஜாவை திருமணம் செய்துக் கொள்ள விருப்பமா..?? என்று சஞ்சயிடம் கேட்டார்.

நீரஜாவை அவன் மணந்துக் கொள்வதில் தன் அன்னைக்கும் விருப்பம் என்பதில் சஞ்சய் சந்தோஷப்பட்டாலும், இந்த நேரம் நீரஜாவிடம் இதைப்பற்றி பேசினால், என்ன சொல்வாளோ..?? என்ற பயத்தில், இப்போது அவனுக்கு விருப்பம் இருப்பது போல் காட்டிக் கொண்டால், அம்பிகா நேராக நீரஜாவிடம் பேசிவிடுவார். அவள் அவனை காதலிக்கிறாளா..?? என்று தெரிந்தபின் அன்னையிடம் விஷயத்தை கூறலாம் என்று நினைத்த சஞ்சய், “அப்படி ஒரு எண்ணம் எனக்கு இதுவரையில் தோன்றியதில்லை… நீரஜா, நிகேதனிடம் இதைப்பற்றி பேசவேண்டாம்” என்று கூறிவிட்டான்.

சஞ்சயின் திருமணத்தை பொறுத்தவரை அது அவனது விருப்பப்படி தான் நடக்க வேண்டும், நாம் அவனை கட்டாயப்படுத்தக் கூடாது என்று சஞ்சயின் தந்தை  அடிக்கடி அம்பிகாவிடம் சொல்வார். அதனால் அம்பிகாவும் அமைதியாகிவிட்டார்.

நிகேதனின் திருமண நாளும் வந்தது. அதுவரையிலுமே நீரஜா சஞ்சயின் மீது கோபமாக தான் இருந்தாள்.  அவனை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், அவனை விட்டு ஒதுங்கியே இருந்தாள். சஞ்சயும் இந்த சந்தோஷமான தருணத்தில் அவளிடம் பேச முயற்சித்து அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று ஒதுங்கியே இருந்தான்.

முதலில் தங்கைக்கு என்ன பிரச்சினை என்று தெரியாமல் இருந்தாலும், பின் இத்தனை தினங்களுக்குள் சஞ்சய்க்கும், நீரஜாவிற்கும்  ஏதோ சண்டை என்பதை நிகேதன் யூகித்துவிட்டான். ஜானவி தான் அதைக் கண்டுப்பிடித்து அவனிடம் சொன்னாள்.  நண்பன் என்ற முறையில் நிகேதனும், தோழி என்ற முறையில் ஜானவியும் அவர்கள் இருவரிடமும் கேட்டுப் பார்த்தும், இருவரும் ஒன்றும் இல்லை என்று மழுப்பிவிட்டனர். இவர்களும் திருமணத்திற்கு பின் கேட்டுக் கொள்ளலாம் என்று அமைதியாகிவிட்டனர். திருமணமும் இனிதாக நடைவேறியது.

இதுவரையிலும் நீரஜா சமாதானமாகவில்லையே என்று சஞ்சய்க்கு கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. இதில்  இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டுமே அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்துக்கொண்டிருக்க, இப்போது வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு அவர்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது.

ஏற்கனவே அந்த வாய்ப்பை எதிர்பார்த்து நிகேதனும், சஞ்சயும் காத்துக் கொண்டிருந்தார்கள், அப்போது வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்தால் நிகேதன் செல்வது என்று முடிவெடுத்தனர். இப்போது நிகேதனின் திருமணம் முடிந்திருக்கும் சூழ்நிலையில் அவனை வெளியூருக்கு அனுப்புவது சரியாக வராது என்பதால் சஞ்சய் போவதாக முடிவெடுக்கப்பட்டது.

அப்போது நிகேதன் இங்கு இருந்து நிறுவனத்தை பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும், திருமணம் ஆகி தேன்நிலவு  கூட செல்ல முடியாதே என்று சஞ்சய் யோசித்தப் போது, நிகேதனும் ஜானவியும் பிறகு போய் கொள்வதாக முடிவெடுத்தனர். சஞ்சயும் ஊருக்கு கிளம்பினான். ஊரிலிருந்து திரும்பி வருவதற்குள் நீரஜா மனம் மாறியிருப்பாள், பிறகு அவளை சமாதானப்படுத்தலாம் என்று அவன் நினைத்தான்.

ஆனால் நீரஜாவோ வேறு முடிவை எடுத்திருந்தாள். அந்த சம்பவத்திற்கு பிறகு சஞ்சயை பார்க்கும் போது அதெல்லாம் ஞாபகம் வரும்போது அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. சஞ்சயும், நிகேதனும் நண்பர்கள் எனும்போது சஞ்சயை பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்கு அமையும், அதை தடுக்கவும் முடியாது.

அவளின் சஞ்சலத்தால், அவர்களின் நட்பை பிரிக்கவும் அவள் விரும்பவில்லை. அந்த சமயத்தில் தான் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு அவளை தேடி வந்தது. வெளியில் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், நண்பர்களோடு சேர்ந்து ஒரு நிறுவனத்தில்  விண்ணபித்து, இணையதளம் மூலமாக நேர்முகத்தேர்விலும் கலந்துக் கொண்டிருந்தாள். அந்த கம்பெனியிலிருந்து இப்போது வேலை கிடைக்கவே, அந்த வேலைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.

ஜானவியும், நிகேதனும் தடுத்த போதும், “நம்ம கம்பெனிக்கு வருவதற்கு முன் எனக்கு முன் அனுபவம் இருக்கணும்… அதனால் இந்த வேலைக்குப் போகப் போகப் போகிறேன்..” என்று அவர்களிடம் பேச வேண்டிய விதத்தில் பேசி சம்மதம் வாங்கி, சஞ்சய் ஊரிலிருந்து வருவதற்கு முன்னரே, அவள் சிங்கப்பூர் சென்றுவிட்டாள்.

ஊரிலிருந்து வந்த சஞ்சய்க்கோ, நீரஜா சிங்கப்பூர் சென்ற விஷயம் முதலில் கோபத்தை தான் வரவைத்தது. அவன் செய்தது குற்றம் தான்,  ஆனால் மனதில் காதல் இருக்கும் பட்சத்தில் இந்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாதா..?? அப்படி மன்னிக்க முடியாத குற்றமென்றால், அப்போது அவள் என்னை காதலிக்கவேயில்லையா..??” என்று வருத்தப்பட்டான்.

“ஒருவேளை அவள் மனதில் காதல் இல்லையென்றால், அவளிடம் கீழ்த்தரமாக நடந்துக் கொண்டது எவ்வளவு கேவலம்… நானா இதை செய்தேன்..?? என்று கூனி குறுகிப் போனான். என்னால் தானே அவள் வீட்டை விட்டும், ஊரை விட்டும் போய்விட்டாள்..” என்று வருந்தினான்.

அப்படியும் மனதில் ஒரு நம்பிக்கை, அவளுக்கு அவன் மேல் காதல் இருக்குமென்று, அதனால் அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தான். ஆனால் அவள் அவனுடைய அழைப்பை ஏற்கவேயில்லை.

இத்தனை நாள் ஆகியும் அவள் அவனை மன்னிக்க விரும்பவில்லை என்றால், ஏற்கனவே அவளிடம் நடந்துக் கொண்டது தவறு, இதில் அடிக்கடி இப்படியெல்லாம் தொந்தரவு செய்ய வேண்டுமா..?? அவளுக்காய் எப்போது என்னை மன்னிக்க மனது வருகிறதோ, அப்போது மன்னிக்கட்டும் என்று அமைதியாகிவிட்டான். ஒருமுறை அவள் விடுமுறைக்கு இந்தியா வர தயங்கியதாய் நிகேதன் சொன்னபோது, அவனால் தான் அவள் வர தயங்குகிறாளோ என்று வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டான்.

அவளும் அந்த சமயத்தில் இந்தியா வந்துப் போனதை அறிந்தபோது, என்னை பார்க்கக்கூட அவள் விரும்பவில்லையோ என்று வருத்தப்பட்டான். ஆனால் அடுத்த முறை அவள் வந்தப்போது அவனுக்கு அப்போது அவசியமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.

நீரஜாவிற்கோ சிங்கப்பூர் போன கொஞ்ச நாள் வரை சஞ்சய் மீதிருந்த கோபம் குறையாமல் தான் இருந்தது. அதனால் தான் அவன் அலைபேசியில் அழைத்த போது அவன் அழைப்பை ஏற்கவில்லை, ஆனால் நாட்கள் நகர, நகர அவன் மேலிருந்த காதல் அந்த கோபத்தை குறைத்துவிட்டது.

அதேபோல, மந்த்ரா விஷயத்தை யோசித்து பார்த்தபோது கூட, அன்று நடந்த சம்பவம் மந்த்ராவின் சதியாக இருக்கும் என்பது கூட அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அவள் விஷயத்தில் அவன் நடந்துக் கொண்டதை அவள் மறக்க கொஞ்சம் தாமதமானது. அவனை நேருக்குநேராக சந்திக்கவும் தயக்கமாக இருந்ததால் தான் அவன் ஊருக்குப் போனதும் அவள் அங்கு சென்று வந்தாள்.

ஆனால் இதெல்லாம் சிங்கப்பூர் சென்ற ஆரம்ப காலங்களில் தான், அதற்குப்பின் அவனிடம் இருந்து அழைப்பு வராதா..?? நிகேதனும், ஜானவியும் சிங்கப்பூர் வருகின்ற போது அவனும் கூட வருவானா..?? தன்னை காண… என்றெல்லாம் மனம் எதிர்பார்க்கும், நீ அவனை காதலிக்கிறாய்… அவனுக்கும் அதுபோல் உன்மேல் காதல் இருக்கிறதா..?? என்று தெரியவில்லையே..?? அப்படி இருக்கும்போது இதையெல்லாம் ஏன் எதிர்பார்க்கிறாய்..?? என்று மனம் கேள்வி கேட்கும்,

அப்படி காதல் இல்லையென்றால் அன்று அவன் செய்த காரியத்துக்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது..?? அதற்கு விளக்கம் கொடுக்கவோ..?? என்னை சமாதானப்படுத்தவோ அவன் முயற்சி செய்யவில்லையே..?? அப்போது அவன் என்னை காதலிக்கவில்லையா..?? என்று   நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு மனது வலிக்கும்.

இதில் அவள் அடுத்தமுறை இந்தியா வந்தபோது அவனை பார்க்கும் ஆவலில் வந்தாள். அவன் இல்லை என்றபோது, என்னை பார்க்க அவன் விரும்பவில்லையா..?? என்று வருந்தினாள். இதில் வைஷுவும் சஞ்சயை பற்றி பேசி வெறுப்பேற்றுவாள்.

இப்படியே அவள் பேசமாட்டாளா..?? அவன் பார்க்க வரமாட்டானா..?? என்மேல் காதல் இல்லையா..?? என்று சிந்தித்தே இருவரும் மூன்று வருடத்தை கழித்துவிட்டனர்.

இதில் நீரஜா அவன் மேலிருந்த கோபத்தில் சிங்கப்பூர் சென்றவள், அங்கு சென்றும் அவனைப் பற்றியே நினைத்திருந்ததால், திரும்பவும் இந்தியா வர முடிவு செய்தாள். அவனும் இனியாவது அவளிடம் தன் மனதில் உள்ளதை சொல்ல வாய்ப்பு கிடைக்குமா..?? என்று காத்திருந்தான்.

ஆனால் நீரஜா இந்தியா வந்தப் பின்பும் கூட, இருவராலும் அவர்கள் மனதில் உள்ளதை தெரியப்படுத்த, வெற்றி, வைஷு இவர்களால் தடைகள் வந்துக் கொண்டே இருக்கிறது. இந்த தடைகளையெல்லாம் மீறி அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருவருக்கும் கிடைக்குமா..??

மௌனம் தொடரும்..