KPEM 12

மௌனம் 12

தான் தேடி வந்த நீரஜாவைக் கூட மறந்து, சுற்றுப் புறத்தையும் மறந்து, அந்த வெள்ளை சுடிதார் போட்ட தேவதையையே பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய், அவள் தூரத்தில் தான் வந்துக் கொண்டிருந்தாள். அந்த ரயில் நிலையத்தைக் கூட அவள் ரசனையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்ததை அவன் கண் கொட்டாமல் பார்த்தான். என்னவோ இதுவரை எந்த பெண்களையும் நிமிர்ந்து பார்க்க தோன்றாதவனுக்கு அவளை மட்டுமே அப்படி பார்க்க தோன்றியது. அதிலும் அவன் தந்தை சொன்னது போல் மணி சத்தம் கேட்டதும் சொல்லவே வேண்டாம், அவள் தனக்கானவள் என்று அவன் முடிவே செய்துவிட்டான்.

தனியாக நடந்துக் கொண்டு வந்தவள், திடிரென்று பக்கத்தில் குழந்தையையும், அவர்கள் எடுத்து வந்த பைகளையும் ஒன்று சேர தூக்கிக் கொண்டு வரமுடியாமல் கஷ்டப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து அந்த குழந்தையை அவள் வாங்கிக் கொண்டாள். அந்த குழந்தையிடம் எதெதையோ காட்டி பேசிக் கொண்டு வந்தாள்.

அவளை தூரத்தில் இருந்துப் பார்க்க ஒரு தேவதையை போல தோன்றியவள், அருகே வர, வர தன் ஞாபகத்தில் இருக்கும் நீரஜாவின் உருவம், நிகேதனில் சாயல் எல்லாம் அவள் முகத்தில் தெரிந்தது.  அப்போ இந்த தேவதை தான் நீரஜாவா..?? இவளை தான் நான் அழைத்துப் போக வந்தேனா..?? என்ற கேள்வியோடு அவளையே அவன் பார்க்க, அவனுக்கு சற்று தொலைவில் வந்துக் கொண்டிருந்தவள், அந்த பெற்றோரை அழைத்து போக அவர்களின் உறவினர்கள் அங்கு நிற்கவும் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தாள். பின் அவர்களோடவே நடந்தப் படி அவனையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவள் அவனையே பார்க்கவும், அவனுக்கு அவள் தான் நீரஜா என்பதில் சந்தேகம் இல்லாமல் போனது. அவனும் அவளைப் பார்த்தப்படியே நிற்க, அவள் அவனை கடந்து சென்றாள். அந்த நேரம் அவள் ஒருவேளை நீரஜா இல்லையோ..?? நான் தான் தவறாக அப்படி நினைத்துவிட்டேனோ..?? என்று குழம்பினான். அவள் நீரஜா இல்லையோ என்று நினைக்கும்போதே ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தான். அவள் நீரஜா இல்லையென்றால் அவளை மீண்டும் எப்படி பார்க்க முடியும்…?? ஏன் பார்க்க முடியாது..?? அவள் எனக்கானவள் என்றால், கண்டிப்பாக அவளை நான் மறுபடியும் பார்க்க முடியும் என்று அவன் நினைத்தப்படி நின்றிருக்க, திடிரென்று அவள் தோள் மேல் ஒரு கை பட, திரும்பி பார்த்தால் அங்கே அந்த தேவதை நின்றிருந்தாள்.

அவனை முறைத்தப்படி நின்றிருந்தவள், “இது தான் என்னை கூட்டிட்டுப் போக வந்த லட்சணமா..?? நான் பாட்டுக்குப் போறேன்… நீங்க பாட்டுக்கு அப்படியே நிக்கிறீங்க… ஏதோ நிக்கி நீங்க வரப் போறதா சொன்னதாலயும்… உங்களை நான் ஏற்கனவே போட்டோல பார்த்ததாலயும் ஆச்சு… இல்ல நிலைமை கஷ்டமாயிருக்கும்…” என்று அவள் பேச,

“ஹோ.. அப்போ இவ தான் நீரஜாவா..??” என்று நினைத்தவன், அவள் தான் நீரஜா என்று தெரிந்த பின்னும் ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தான். இவள் என் நண்பனின் தங்கை அல்லவா..?? இவளை காதலிப்பது சரியாகுமா..?? நிக்கி என்ன நினைப்பான்…?? அப்படியே என் காதலை அவன் ஏற்றுக் கொண்டாலும், இவள் தன் அண்ணனின் நண்பனான என்னை காதலிப்பாளா..?? என்ற கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தான்.

“எனக்கொன்னும் பிரச்சனையில்ல… இந்த ஊர்ல தான் நான் பிறந்தேன்… வருஷா வருஷம் லீவுக்கு வரேன்… நானே வந்துடுவேன்னு சொன்னா நிக்கி கேட்டா தானே… ” என்று அவள் பேச,  அப்போது தான் அவள் பேசுவதை அவன் கவனித்தான்.

“உங்களை மட்டும் எனக்கு அடையாளம் தெரியாம இருந்திருந்தா… நான் பாட்டுக்கு வீட்டுக்குப் போயிருப்பேன்… நீங்க இங்க திரு திருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுருப்பீங்க பாஸ்..” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

“இது உனக்கு தேவையா டா..” என்று நினைத்தவன், “நீதான் வரேன்னு தெரிஞ்சு தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்… இருந்தாலும் நீ பாட்டுக்கு போகவே கொஞ்சம் குழம்பிட்டேன்..” என்றவன்  “உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்..” என்று கை குலுக்க, அவளும் பதிலுக்கு கை குலுக்கினான்.

“என்ன இவ ஊர்ல இருந்து படிச்சிட்டு இங்க வரா.. ஆனா ஒரே பேக் மட்டும் எடுத்துக்கிட்டு வந்திருக்காளே…” என்று நினைத்தவன், அவளிடமே அதைப்பத்தி கேட்க…

“அதுவா பாஸ்… நான் சித்தப்பா வீட்ல தானே தங்கிப் படிச்சேன்… அப்புறம் ஃப்ரண்டோட வீட்ல பேயிங் கெஸ்ட்டா இருந்தேன்… அதனால எனக்குன்னு தனியா திங்க்ஸ் எல்லாம் ரொம்ப இல்ல… இப்போ நான் ஃப்ரண்ட்ஸோட ஜாலியா வெகேஷனை எஞ்சாய் பண்ணிட்டு வரேன்… அதான் ஒரே பேக்… மீதி திங்க்ஸ் எல்லாம் சித்தப்பா வீட்ல இருக்கு… வேணுன்னும்போது மெதுவா எடுத்துக்கலாம்னு… ஊட்டில இருந்து நேரா இங்க வந்துட்டேன்…” என்றாள்.

இந்த ஒரு பேகை மட்டும் தூக்கிட்டு வர்றதுக்கா அவன் வந்தான்… அவளுக்கு தான் வீடு தெரியுமாமே அவளே வந்திருக்கப் போறாளே, என்று நினைத்தவனோ பின்…

“ஏன்டா.. அவ உனக்கானவன்னு மணி அடிச்சிருக்கு… அப்போ கூட உனக்கு புரியலையா..?? அவ உனக்கானவன்னு காட்ட தான்டா… விதி உன்னை இங்க வரவச்சிருக்கு…” என்று அவன் மனசாட்சி அவனுக்கு எடுத்துரைத்தது.

“போலாமா பாஸ்..” என்று அவள் கேட்டதும் இந்த உலகத்திற்கு வந்தவன், அப்போது தான் அவள் இவனை பாஸ் என்று கூப்பிடுவதை கவனித்தான்.

“ஆமா… என்ன நீ…?? என்னை பாஸ்ன்னு கூப்பிட்ற…?? என் பேரு சஞ்சய்.. தெரியுமில்ல..??”

“ஏன் தெரியாம..?? நிக்கி சொன்னான்.. எங்க கம்பெனியோட கூட என்னோட அண்ணனையும் நீங்க தான் கட்டி மேக்கிறீங்களாமே.. அதான் உங்களுக்கு ஸ்பெஷலா இந்த பேர்..”

“என்னமோ கொள்ளைக் கூட்ட தலைவனை கூப்பிட்ற மாதிரி இருக்கு…” என்று அவன் சொல்ல,

“அட அப்படியா இருக்கு… நான் அப்படி நினைச்சு கூப்பிடல பாஸ்… நம்ம தனுஷ், விவேக்கை பாஸ்ன்னு கூப்பிட்ற மாதிரி தான் கூப்பிட்டேன்..” என்று அவள் சொல்லிவிட்டு முன்னே போக,

“நான் இவளை ஹீரோயின் ரேஞ்சுக்கு நினைச்சா.. இவ என்னை காமெடியனா ஆக்கிடுவா போலையே…” என்று இவன் யோசித்தப்படி அப்படியே நின்றிருக்க,

முன்னே போனவள் அவன் இன்னும் நின்று கொண்டிருப்பதை பார்த்து திரும்பி அவன் அருகில் வந்தவள்,  “என்ன பாஸ்.. இப்போ தான் விவேக்ன்னு சொன்னேன்… அதுக்குள்ள காமெடியா திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இங்கையே நிக்கறீங்க… வாங்கப் போலாம்…” என்று அவன் கையைப் பிடித்துக் கூட்டி போனாள்.

வீடு போய் சேர்ந்ததும் அவன் ரயில் நிலையத்தில் முழித்துக் கொண்டு நின்றதைப் பற்றி  நிகேதன்  ஜானவியிடம் சொல்லி, சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். காரில் கூட அவனோடு வளவளத்துக் கொண்டு தான் வந்தாள். இதுவே வேறு யாராவதாக இருந்தால், “என்ன பொண்ணு இவ..” என்று மனதில் நினைக்க தோன்றியிருக்கும் சஞ்சய்க்கு, ஆனால் பார்த்த முதல் பார்வையிலேயே அவன் மனதுக்கு பிடித்தவளாக அவள் மாறிப் போனதால், அவளை ரசிக்க தான் தோன்றியது.

ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இவனை அவள் மூன்று வருடம் தவிக்க விடப் போகிறாள் என்று முன்பே தெரிந்திருந்தால், அவன் அவளை பேசச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்திருப்பானோ என்னவோ..!!

அதன்பின் வந்த நாட்களிலும் சஞ்சய், நீரஜா பழகுவதற்கான வாய்ப்புகள் வந்துக் கொண்டிருந்தது. அவனை போலவே, முதல் சந்திப்பிலேயே அம்பிகாவிற்கும் நீரஜாவை பிடித்துவிட, அவர்களை சந்திக்க அவள் வீட்டிற்கு போவதும், ஜானவி, நிகேதன் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க அதில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும் என்று அடிக்கடி இருவரும் பார்த்துக் கொண்டனர்.

அதிலும் நீரஜா சஞ்சயிடம் உரிமையோடு பழகினாள். திடிரென்று ஒருநாள் அவனை அலைபசியில் அழைப்பாள். “நான் ஷாப்பிங் போலாம்னு இருக்கேன்… ஜானுவை கூப்பிட்டால், நிக்கியும் அவளும் எங்கேயோ போறாங்களாம்… அதனால நீங்க என்கூட ஷாப்பிங் வர்றீங்களா..??” என்று கேட்பாள்.

அவன் வேலையிருக்கு என்று மறுத்தால், “எனக்கு தனியா ஷாப்பிங் பண்ணவே பிடிக்காது… எனக்கு இங்க வேற யாரு ஃப்ரண்ட்ஸ் இருக்கா..?? அதனால உங்களை கூப்பிட்டா… ரொம்ப பிகு பண்றீங்களே..” என்று கோபித்துக் கொள்வாள். அதன்பின் அவனால் அவளோடு செல்லாமல் இருக்க முடியுமா..??

திடிரென்று ஒருநாள் இரவில் அலைபேசியில் அவனை தொடர்பு கொள்வாள். “எனக்கு தூக்கமே வரல… ஏதாவது பேசிட்டிருப்போமா..?? ” என்று கேட்பாள்,  கரும்பு தின்ன கூலி வேணுமா..?? அவனும் இரவெல்லாம் அவளோடு பேசுவான்.

எனவே நீரஜாவின் இந்த அணுகுமுறையை சஞ்சய் காதல் என்று தான் நினைத்தான், அதனால் சீக்கிரம் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். அவள் கண்டிப்பாக அதை மறுக்க மாட்டாள் என்பதில் அவன் தீர்மானமாக இருந்தான். அவளை மனதளவில் மனைவியாகவே பாவித்தான்.

இவர்களின் இந்த நெருக்கத்தை பார்த்த மற்றவரும் இவர்கள் காதலிப்பதாக தான் நினைத்தனர். தன் தங்கைக்கு நல்ல முறையில் திருமணம் செய்யும் பொறுப்பு தனக்கிருப்பதால், சஞ்சயே நீரஜாவை மணந்துக் கொள்வதாக இருந்தால் நல்லதே என்று நிகேதன் நினைத்தான்.

பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை சில நாட்களாக நீரஜா போக்கியதால், அவளே தனக்கு மருமகளாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அம்பிகாவிற்கும் தோன்றியது. ஜானவிக்கும் இருவரின் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாக தான் மனம் நினைத்து சந்தோஷப்பட்டது.  ஏன் எப்போதாவது ஊருக்கு வரும் வைஷுவிற்கு கூட இந்த இருவரின் நெருக்கத்தை பார்த்து பொறாமை ஏற்படும்,

ஆனால் நீரஜாவிற்கோ சஞ்சயுடன் அவள் என்னவாக நினைத்து பழகுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை, அவனுடன் பழகுவது நட்பாகவா..?? இல்லை காதலா..?? என்று அவள் யோசிக்கவில்லை,

சிறுவயதிலிருந்தே தன் அண்ணன் சஞ்சயைப் பற்றி பேசியதை கேட்டு சஞ்சயிடம் அவளுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அதுவே அவனுடன் அவளை இயல்பாகவும் பழக வைத்தது. ஆனால் அது நட்பு மட்டும் தானா..?? இல்லை அதை தாண்டி அவன் மேல அவளுக்கு காதலும் இருக்கிறதா..?? என்று சிந்தித்துப் பார்க்க அவள் நினைத்ததில்லை, நினைத்துப் பார்க்கும் வாய்ப்பும் அவளுக்கு ஏற்படவில்லை,

ஆனால் அப்படி அவள் நினைத்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தான் மந்த்ரா வந்து சேர்ந்தாள். சஞ்சய், நீரஜா இருவருக்கும் நெருக்கமில்லாத  மந்த்ராவால் சஞ்சயுடனான காதலை நீரஜா உணர்ந்துக் கொள்ளவும் போகிறாள். அதே சமயம் சஞ்சயை விட்டு விலகவும் போகிறாள். 

மௌனம் தொடரும்..