KPEM 11

மௌனம் 11

அன்று இருவரும் மனதில் உள்ள காதலைச் சொல்லாமல் நட்பாக பழகிய போதே, மனதில் சந்தோஷத்தோடும், உற்சாகத்தோடும் சுற்றி திரிந்தனர். ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கும் போது அதற்கு இத்தனை தடை வருவதும் ஏனோ..?? இருவருக்குமே தெரியவில்லை, இருவருக்குமே அன்று இரவு பழைய நாட்களை மனம் நினைத்துப் பார்த்தது, அந்த நாட்கள் அப்படியே தொடர்ந்திருக்கக் கூடாதா..?? என்று மனம் ஏங்கியது.

சஞ்சயின் தந்தை சந்தானம்,  உடன் பிறந்தவர்களோடு அவரையும் சேர்த்து ஏழு பேர் என, ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். வசதிக்கும் ஒன்றும் குறைச்சலில்லை, எல்லாம் நிறைவாக இருக்கும் பெருமிதத்தோடு இருந்தவர்க்கு திருமண வயதும் வந்தது. தன் அன்னை  தனக்கு தீவிரமாக பெண் பார்க்க, அவருக்கோ அம்பிகாவை பிடித்துப் போனது, வேற்று ஜாதி பெண் என குடும்பத்தார் மறுக்க, தடைகளை மீறி அம்பிகாவை அவர் மணந்தார்.

ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்ததால் சந்தானத்தை ஒதுக்கி வைத்தனர் அவர் குடும்பத்தினர், சொத்துக்களில் அவருக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்காமல், அவர் திருமணத்தை காரணம் காட்டி, கொஞ்சம் பணம் மட்டும் கையில் கொடுத்து துரத்திவிட்டனர். அப்போது அவரின் தாய், தந்தையும் அமைதியாகவே இருந்தனர், அம்பிகா வீட்டில் அவ்வளவு வசதி இல்லையென்றாலும், அவர் தங்கையின் எதிர்காலம் குறித்து அவரை வீட்டில் சேர்க்க மறுத்துவிட்டனர்.

சந்தானத்தை பொறுத்த வரையிலும் தன் குடும்பத்தார் செய்ததற்கு காரணம் ஜாதியில்லை, பணம் அது மட்டுமே காரணம். அதுக்காக தான் அவர் திருமணத்தை காரணம் காட்டி அவரை துரத்திவிட்டதாக நினைத்தார். பணத்திற்கு முன்னால் பந்தம், பாசம் எல்லாம் பொய் என்றே அவர் நினைத்துக் கொண்டார்.

அதுக்காக அவர் பணத்தின் பின்னால் ஓடவில்லை,  தன்னை நம்பி வந்த பெண்ணை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.  அவருக்கு தெரிந்தது விவசாயமே,  தன்னிடம் உள்ள பணத்தில் ஒரு சிறிய நிலத்தை வாங்கி கடினமாக உழைத்தார். இப்போது அவருக்கு ஏக்கர் கணக்கில் நிலம் உள்ளது. சகோதர, சகோதரிகள் பாசமெல்லாம் அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் என்று வரும்போது வேஷமாக போய்விடுகிறது. அதனாலேயே ஒரு குழந்தைக்கு மேல் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

சஞ்சயை அவர் பார்த்து பார்த்து வளர்த்தார். பணத்தை மையமாக வைத்து தன்னை தள்ளி வைத்த தன் குடும்பம் இப்போது அதே பணம் இவரிடம் இருக்கிறது என்று உறவுக் கொண்டாடினர். ஆனால் அவர்களையெல்லாம் அவர் கொஞ்சம் தள்ளியே வைத்திருந்தார். தன் காலத்திற்கு பிறகு தன் மகனுக்கு இந்த உறவுகளால் பிரச்சனை வரக்கூடாது என்ற பயத்தால், சஞ்சயிடமும் சொந்தபந்தங்கள் காட்டும் அன்பெல்லாம் போலி, வேஷம் என்று சொல்லியே வளர்த்தார். அதனால் சஞ்சய்க்கும் உறவு முறைகள் மீதெல்லாம் ஒரு பற்றுதல் இல்லாமல் போனது.

விவசாயத்தை அவர் என்றும் கேவலமாக நினைத்ததில்லை, ஆனால் தன் மகன் தன்னைப் போல் கஷ்டப்படாமல் கோர்ட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு ஏ.சி அறையில் உட்கார்ந்து வேலைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் அவனை போர்டிங் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைத்தார்.

தன் தாய் தந்தையை தவிர யாரோடும் எந்த வகையிலும் உறவுக் கொண்டாடாமல் தனியாகவே இருந்த சஞ்சய்க்கு தன் அறையில் தன்னுடன் தங்கியிருந்த நிகேதன் மேல் ஒரு பற்றுதல் வந்ததும், நட்பாக பழக வேண்டும் என்று நினைத்ததும் ஏன் என்று இன்று வரையிலும் அவன் யோசித்துப் பார்த்து வியந்திருக்கிறான்.  அவனுக்குமே தன்னைப் போல் அப்போது சில உறவுகள் மேல் பற்றுதல் இல்லாமல் இருந்தது தான் காரணமோ…??

நிகேதனின் தந்தை மூர்த்தி, அவருக்கு கிடைத்த சொத்துகளின் பங்கு பணத்தை மையமாக வைத்து உழைத்து முன்னேறியவர்.  அதைப் பார்த்து அவர்களின் இளைய சகோதரர்களுக்கு பொறாமை, அவர்களுக்கு கிடைத்த பணத்தோடு மாமியார் ஊர் பக்கம் சென்று வியாபாரம் செய்து நஷ்டப் பட்டவர்கள் ஆயிற்றே, தன் அண்ணன் இப்படி முன்னேறியதில் ஒரு பக்கம் பொறாமை கொண்டாலும்,  அதை வெளிக்காட்டாமல் அவரிடம் அன்பாக இருப்பது போல் நடிப்பர். அது தெரிந்திருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களோடு  மூர்த்தி அன்பாகவே பழகுவார்.

தன் தங்கை சந்திராவும் அவள் கணவனும் (ஜானவியின் பெற்றோர்) மட்டுமே அவர் முழுதாக நம்பும் உறவினர். ஏனென்றால் சந்திராவின் கணவருக்கு பணத்தின் மேல் ஈடுபாடு இல்லாமல் அவர் வருமானத்தில் எளிமையாக வாழ்க்கை நடத்துபவர். சந்திராவும் கணவனுக்கு ஏற்ற மனைவி, அதனால் மூர்த்திக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். இரு குடும்பமும் ஒரே ஊரில் இருப்பதால் அவர்களின் உறவும் நல்ல முறையிலேயே இருந்தது. நீரஜாவும், நிகேதனும் சந்திராவின் பின்னாலேயே அத்தை அத்தை என்று சுற்றி  வருவர்.

நிகேதனுக்கு 11 வயதும், நீரஜாவிற்கு 8 வயதும் ஆன போது, மூர்த்தியும் அவர் மனைவியும் பிள்ளைகளை சந்திரா வீட்டில் விட்டுவிட்டு ஒரு விஷேஷத்திற்கு போக, வழியிலேயே ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டனர். எப்போதும் தன்னை விட தங்களது பிள்ளைகள் மேல் தன் கணவன் அதிக அன்பும் அக்கறையோடும் இருப்பதால் என்னவோ தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பிற்கு தன் கணவர் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் அந்த இடத்திலேயே உயிரை விட்டார் நீரஜாவின் தாய்.

ஆனால் பிள்ளைகளை அப்படியே விட்டுவிட்டு போக மனமில்லாமல் மூர்த்தி உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார். சொத்துக்களால் ஆபத்து ஏற்படாமல் அவர்களுக்கு சொத்து சேரும்படி அவர் உயில் எழுதினார். இருந்தும் அவர்கள் அனாதையாகி விடுவாரே, அதனால் அவர்கள் படிப்புக்கென்று தனியாக பணம் ஒதுக்கி,  அவர்களை வளர்ப்பவர்களுக்கு என்று சில சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு, அவர்களை விட்டுப் போக மனமில்லாமல் அவர் உயிரை துறந்தார்.

சந்திராவிற்கும் அவளது கணவனுக்கும் இரு குழந்தைகளையும் அவர்கள் பராமரிப்பில் பார்த்துக் கொள்ள ஆசை தான், ஆனால் தன் சகோதரர்கள் அதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது சந்திராவிற்கு தெரியும், எங்களுக்கு தான் உங்களை விட அவர்கள் மேல் உரிமை இருக்கிறது என்று போட்டிக்கு வருவர். காரணம் அந்த பிள்ளைகள் மேல் உள்ள அன்பு இல்லை, அந்த பிள்ளைகளை வளர்ப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் சொத்து தான் காரணம்.  மீறி இவர்கள் அந்த பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டால், சொத்துக்கு ஆசைப்படுவதாக குற்றம் சாட்டுவர். கண்டிப்பாக சந்திராவின் கணவரால் அதை தாங்கிக் கொள்ள முடியாது, எனவே இருவரும் அமைதியாக இருந்தனர்.

அவர்கள் நினைத்ததைப் போலவே மூர்த்தியின் சகோதரர்கள் இருவருக்கும் பிள்ளைகளை யார் வளர்ப்பதென்று போட்டி,  கடைசியில் இருவரும் நீரஜாவை ஒருத்தரும், நிகேதனை ஒருத்தரும் வளர்த்துக் கொள்வதாக முடிவெடுத்தனர்.  அந்த இரு பிள்ளைகளுக்கும் விருப்பம் இல்லாமலேயே இருவரும் தனி தனியாக இரு சித்தப்பா வீட்டில், அதுவும் வெவ்வேறு ஊரில் வளரும்படி ஆயிற்று, நிகேதனை கூட்டிக் கொண்டுப் போன சித்தப்பா அவன் படிப்பில் அக்கறை இருப்பதாக காண்பித்து அவனை போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். நீரஜா பெண் என்ற காரணத்தால் வீட்டிலேயே வளர்ந்தாள். அவள் அந்த வீட்டில் இருப்பதற்கு போர்டிங் ஸ்கூலே மேல் என்பது போல் தான் அவளை அக்கறையாக பார்த்துக் கொண்டனர்.

நிகேதனுக்கோ தன் தங்கை எப்படி சித்தப்பா வீட்டில் இருப்பாளோ..?? என்ற சிந்தனையில் ஹாஸ்டலில் கவலையாக இருப்பான். ஏனோ தனிமையில் கவலையாக இருக்கும் அவனை சஞ்சய்க்கு பார்க்க கஷ்டமாக இருக்கும், அதனால்  அவனிடம் சஞ்சய்க்கு நட்பு பாராட்ட தோன்றியது.

சிறிது நாட்களிலேயே சஞ்சயும் நிகேதனும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.  பள்ளி, விடுதி அறை எல்லா இடத்திலும் அவர்கள் நட்பு வலுப்பெற்றது. ஆனால் விடுமுறை என்று ஒன்று வந்தால், இருவரும் ஊருக்கு செல்வதில் தான் குறியாய் இருப்பர். சஞ்சய்க்கு எப்போது தன் தாய் தந்தையோடு போய் இருப்போம் என்று தோன்றும், நிகேதனுக்கோ தன் தங்கை நீரஜாவுடன் இருக்கும் நாளை மனம் எதிர்பார்க்கும்,

இரு பிள்ளைகளையும் வளர்க்கும் வாய்ப்பு தான் தங்களுக்கு கிடைக்கவில்லை, அதனால் அவர்களை விடுமுறக்காவது தங்கள் வீட்டுக்கு அனுப்பும்படி சந்திரா தன் சகோதரர்களிடம் கேட்க,  அந்த நேரத்தில் தன் குடும்பத்தாரோடு சுற்றுலா செல்லும் போது இந்த பிள்ளைகள் இடையூறு தானே என்பதால் அவர் சகோதரர்களும் சந்திரா கேட்டதற்கு ஒத்துக் கொண்டனர்.

நிகேதன், நீரஜா இருவரும் வருட பரிட்சை விடுமுறையின் போது சென்னையில் அவர்களுக்கு என்று பெரிய வீடு இருந்தாலும் அவர்கள் அத்தை வீட்டுக்கு செல்வதில் தான் அவர்களுக்கு சந்தோஷமே, ஜானவிக்கும் இவர்கள் இருவரும் வந்ததும் சந்தோஷமாகி விடும், வைஷ்ணவியும் ஆரம்பக்காலத்தில் நீரஜாவோடு இணக்கமாகத்தான் இருந்தாள். மொத்தத்தில் அந்த இரண்டு மாதமும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்,

சஞ்சய்க்கும் அந்த இரண்டு மாதம் தாய் தந்தையோடு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கும், இப்படியே அந்த இரண்டு மாதங்களுக்கும் சஞ்சய்க்கும், நிகேதனுக்கும் ஒருவரையொருவர் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட நேரமிருக்காது. அப்படியே இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

சஞ்சய்க்கோ தன் நண்பன் நிகேதனை தவிர அவன் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமிருக்காது, நீரஜாவைப் பற்றியோ, இல்லை தன் அத்தைக் குடும்பத்தைப் பற்றியோ நிகேதன் அவனிடம் கூறினால், சஞ்சய் அதை காதில் வாங்காவிட்டாலும் தன் நண்பனுக்காக அதை கேட்பது போல் உம் கொட்டிக் கொண்டாவது இருப்பான். முதலில் அதைப் புரிந்துக் கொள்ளவில்லையென்றாலும் பின் தன் நண்பனின் குணத்தை தெரிந்துக் கொண்ட நிகேதன் தன் குடும்பத்தைப் பற்றி பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டான். சஞ்சயின் தந்தை  விடுதிக்கு வரும்போதாவது நிகேதன் பார்த்திருக்கிறான். ஆனால் சஞ்சயை பொறுத்தவரை நிகேதனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள், அவன் விடுமுறைக்கு அவன் அத்தை வீட்டிற்கு சென்று வருகிறான் என்பதை மட்டும் தான் தெரிந்து வைத்திருக்கிறான்.

கல்லூரி படிப்பையும் (UG, PG) இருவரும் சேர்ந்தே முடித்தனர். அப்போது நிகேதன் தன் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்குப் போவதை குறைத்துக் கொண்டான். நீரஜாவை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுவான். சில சமயத்தில் நிகேதன் விடுதியில்  தனியாக இருக்க வேண்டுமே என்று அவனை சஞ்சய் தனது ஊருக்கு அழைத்துக் கொண்டுப் போய்விடுவான். ஆனால் நிகேதன் சஞ்சயை அப்படி அழைத்துப் போனதில்லை,

பொதுவாக சிறு வயதில் இருந்தே அத்தை வீட்டுக்கு போகும் போது இவர்கள் இருக்கும் இரண்டு மாதத்தில் அவர்களுக்கு செலவு அதிகரிக்கும் என்று அவனுக்கு புரியும், தன் மாமாவின் சம்பளத்தில் மாதம் மாதம் அவர்களின் பட்ஜெட்டிலேயே துண்டு விழும்,  இதில் இவர்கள் சென்றால் கொஞ்சம் கஷ்டம் தானே, இவர்களின் செலவுக்காக  வங்கியில் இருக்கும் பணத்தில் கொஞ்சம் தன் அத்தையிடம் கொடுக்க சித்தாப்பாக்களுக்கு மனசு வராது என்று அவனுக்கு தெரியும், அப்படியே கொடுத்தாலும் அத்தையும், மாமாவும் அதை வாங்கிக் கொள்ளமாட்டார்கள் என்றும் தெரியும், அதனால் அவனோடு சஞ்சயை எப்படி அழைத்து வருவது என்று அவன் யோசிப்பான்.

இதில் அவனது மாமா ஜானவியையும், வைஷுவையும் ஒரு வயதுக்கு மேல் அவனிடம் பழகவிடுவதில்லை, அதனால் தான் அவனும் இப்போதெல்லாம் அங்கு அதிகமாக தங்குவதில்லை. இதில் சஞ்சயை அழைத்துப் போவது என்பது எப்படி முடியும்? தன் நண்பனும் அதையெல்லாம் எதிர்பார்த்ததில்லை என்பது தெரிந்ததால் நிகேதனுக்கு அது பெரிய விஷயமாக தோன்றியதில்லை.

சஞ்சய்க்கு தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்பது ஆசை, நிகேதனுக்கும் தன் தந்தை ஆரம்பித்த தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது தான் ஆசை, அதனால் தான் நிர்வாகத்தை படிப்பாக எடுத்துப் படித்தனர். படிப்பு முடிந்ததும் இருவரும் பயிற்சிக்காக ஒரு நிறுவனத்தில் வேலை செய்தனர். அப்போது தான் சஞ்சயின் தந்தை உடல்நல குறைவால் இறந்தார். சஞ்சயை பொறுத்த வரையில் அது ஒரு பெரிய இழப்பு தான்,

தந்தையின் மரணத்திற்கு பிறகு தன் தாயை சொந்த ஊரில் தனியாக விட்டுவிட்டு இன்னொரு ஊரில் அவன் தனியாக வேலை பார்ப்பதை விரும்பவில்லை, சீக்கிரமே சொந்தமாக தொழில் ஆரம்பிக்கும் முடிவில் இருந்தான். அதேபோல் நிகேதனும் ஒரு வயதிற்கு மேல் தன் தங்கையின் பொறுப்பை தன் சித்தப்பாவிடம் இருந்து அவன் பெற்றுக் கொண்டான். அவளுக்கு தேவையானதை அவனே பார்த்து பார்த்து செய்தான்.  படிப்பு முடிந்ததும் சென்னைக்கு வர வேண்டும், நாம் நமது வீட்டில் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நீரஜா சொன்னதால் சீக்கிரமாக தன் தந்தை நடத்திய தொழிலை அவன் நடத்த முடிவு செய்தான்..

அப்போது தான் நிகேதனுக்கு அந்த யோசனை வந்தது,  சஞ்சய் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பதிலாக, இருவருமே அவனது தந்தையின் தொழிலை சேர்ந்து நடத்தினால் என்ன..?? என்று சஞ்சயிடம் கேட்டான். சஞ்சயோ கொஞ்சம் யோசித்தான். இப்போது அந்த கம்பெனியை நடத்துபவர்கள் நஷ்ட கணக்கு தான் காட்டுகின்றனர். உண்மையிலேயே அந்த கம்பெனி நஷ்டமாக தான் போகிறது. அதனால் அதை நாம் ஏற்று நடத்துவோம் என்று நிகேநன் சொன்னதும், புதிதாக தொழில் ஆரம்பிப்பதை விட நஷ்டத்தில் இருக்கும் கம்பெனியை ஏற்று நடத்துவது தன் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று சஞ்சயும் ஒத்துக் கொண்டான்.

அதன்படி அவன் அப்பா ஆரம்பித்த கம்பெனிகளில் முதலில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மட்டும் கவனம் செலுத்த நிகேதன் முடிவு செய்தான். ஏற்கனவே அதை நடத்துபவரோடு போட்ட ஒப்பந்தத்தில் வருகிற லாபத்தில் இவர்களுக்கு, அதாவது நீரஜாவிற்கு 40% பங்கும், அதை எடுத்து நடத்துபவர்களுக்கு 60% பங்கும் என்று இருந்தது. இப்போது நிகேதனும், சஞ்சயும் எடுத்து ஆரம்பித்த பின்னரும் அந்த ஒப்பந்தத்தை மாற்றவில்லை, அந்த 60 சதவிதத்தில் இருவரும் 30% பங்காக பிரித்துக் கொண்டனர்.

சென்னை வந்ததும் நிகேதன் அவன் வீட்டிலேயே இருந்துக் கொண்டான். சஞ்சயிடமும் அங்கேயே தங்கச் சொன்னான். ஆனால் அது சரி வராது என்று சஞ்சய் மறுத்துவிட்டான். சஞ்சய் இவனோடு சேர்ந்து பணி புரிய போவதால், சஞ்சயை அவர்கள் அத்தை வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினான். ஆனால் சஞ்சயின் குணத்துக்கு தான் யாரிடமும் இயல்பாக பழக முடியவில்லை, ஜானவி, சஞ்சயை பார்த்ததுமே அண்ணா என்று அழைத்தாள். ஆனால் சஞ்சய் தான் அப்படி கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

தொழிலை ஆரம்பித்த சிறிது  நாட்களிலேயே ஒரு வீடு வாங்கி தன் அன்னையை சஞ்சய் சென்னைக்கே அழைத்து வந்து விட்டான். தன் அன்னைக்கு இந்த ஊர் புதிது என்பதால் நிகேதன் அத்தை குடும்பத்தை அம்பிகாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.  சஞ்சய் யாரிடமும் சகஜமாக பழகவில்லை என்றாலும், அம்பிகா அவர்களிடம் நன்றாக பழகினார்.

இங்கு வந்த ஒரு மாதத்திலேயே சஞ்சய்க்கு இரண்டு விஷயங்கள் புரிய ஆரம்பித்தது, ஒன்று, தன் தந்தை சொல்வது போல் உறவினர்கள் என்றால் போலியாக பழகுவதென்பதெல்லாம் அனைவருக்கும் பொருந்தாது என்பதை நிகேதனின் அத்தை குடும்பத்தை வைத்து தெரிந்துக் கொண்டான்.

இன்னொன்று தன் நண்பனின் காதல், அவன் அத்தை வீட்டிற்கு போகும் போதெல்லாம், ஜானவியை பார்க்கும் போது அவனின் முக மாற்றத்தை  சிறிது நாட்களாக கவனித்துக் கொண்டிருக்கிறான் அவன், ஒருநாள் நேரடியாகவே தன் நண்பனிடம் அதைப்பற்றி கேட்டுவிட்டான். அதற்கு நிகேதனோ,

“டேய் மாப்ள.. எப்படிடா கண்டுப்பிடிச்ச… நீ சாமியார்ன்னு நினைச்சேன்…” என்று கேலி செய்தான்.

“டேய் விட்டா நீயே எனக்கு ஒரு காவி ட்ரஸ்ஸை கொடுத்து கையில  ருத்ராட்சத்தோட சாமியார் ஆக்கிடுவ போல… டேய் இதப்பத்தி ஏன்டா சொல்லல…”

“ஆமாம் நான் பேசறத நீ எப்போ காது கொடுத்து கேட்ருக்க… எதை சொன்னாலும் உம் கொட்டுவ… அதான் இதப்பத்தி சொல்லல…”

“டேய் அது வேறடா… உன்னோட காதலைப் பத்தி சொன்னாக் கூடவா கேக்காம போய்டுவேன்… சரி அதைவிடு… லீவ் விட்டதும் அத்தை வீட்டுக்கு ஓடி வந்தது வெறும் தங்கச்சிய பார்க்க மட்டும் இல்லைன்னு இப்போ தானே தெரியுது… “

“டேய் அப்படி இல்லடா… சின்ன வயசுலல்லாம் அப்படி நினைச்சதில்லடா… ஒருவேளை அப்படியே பழகியிருந்தாக் கூட எங்களுக்குள்ள இந்த காதலெல்லாம் வந்திருக்காதுன்னு தான் நினைக்கிறேன்… மாமா ஒரு ஏஜ்க்கு மேல ஜானவிய என் கூட முன்ன மாதிரி பழக விடலடா… அவருக்கு பயம் டா… லீவ்க்கு பையனை வரவச்சு, பொண்ணை அவன் கூட பழகவிட்டு சொத்தை மடக்கிப் போட ப்ளான் போட்றதா எங்க சித்தப்பாங்க சொல்லிடுவாங்கன்னு அவருக்கு தோனியிருக்கு… அதுல அவர் அப்படி செஞ்சாரு…

அப்போ தான் நான் லீவ்ல அங்க ரொம்ப தங்கறதை குறைச்சிக்கிட்டேன்…. ஆனா ஜானவியை பார்க்கணும், பேசணும்னு தோனும்… அப்புறம் அது லவ்ன்னு புரிய ஆரம்பிச்சது… ஆனா அவக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல… ஆனா நிரு அதை எப்படியோ கண்டுப்பிடிச்சுட்டா… ஜானவிக்கிட்ட நேராவே கேட்டுட்டா… நிரு கேட்டதும் தான் ஜானவிக்கும் என்மேல லவ் இருக்குன்னு தெரிஞ்சுது.. ஆனா அவளுக்கு மாமா மேல கொஞ்சம் பயம்… எப்பவாச்சும் தனியா மீட் பண்ணுவா… போன் பேசறது கூட ரேர் தான்.. அதான் அடிக்கடி பார்க்கும் போது இந்த கண்ணால பேசறது… அதையும் இப்போ நீ கண்டுப்பிடிச்சிட்ட…

டேய் மாப்ள… மாமா எங்க லவ்க்கு ஒத்துப்பாரான்னு கொஞ்சம் பயமா இருக்குடா… நீரஜாவை தான்டா நான் இதுல நம்பி இருக்கேன்… இப்போ உனக்கும் விஷயம் தெரிஞ்சிடுச்சு… நீயும் எனக்கு இதுல ஹெல்ப் பண்ணனும்டா…”

“டேய் கண்டிப்பா பண்றேண்டா.. உன்னோட லவ்க்கு என்ன ப்ராப்ளம் வந்தாலும் நான் இருக்கேன்டா… கவலைப்படாத என்று தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சஞ்சய்.

உறவுகள் மீது சஞ்சய்க்கு பற்றுதல் இல்லை என்றாலும், காதல், கல்யாணம் மீதெல்லாம் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதற்கு காரணம் அவன் தாய், தந்தை தான், அவர்கள் இருவரும் அவனுக்கு நல்ல பெற்றோர் மட்டுமில்லை, அன்யோன்மான கணவன், மனைவியும் கூட,  அவர்களை பார்த்து தானே அவன் வளர்ந்திருக்கிறான். அதனால் திருமண பந்தத்தின் முக்கியத்தை அவனும் அறிந்திருக்கிறான்.

அதிலும் அவனுடைய தந்தை அவனிடம் அடிக்கடி ஒன்று சொல்வார்,  “எத்தனையோ பொண்ணை போய் பார்த்தேன்டா… எனக்கு யாரையும் பிடிக்கல… உங்கம்மாவை பார்த்ததும் ரொம்ப பிடிச்சிடுச்சிடா… இவ உனக்கானவன்னு மணி அடிக்கும்னு சொல்வாங்களே… அப்படி உங்கம்மாவை பார்த்தப்போ… தூரத்துல ஏதோ சத்தம் கேட்டுச்சு… அப்பவே அவ எனக்கானவன்னு முடிவுப் பண்ணிட்டேன்…

இங்கப் பாரு சஞ்சய்… எங்களுக்காக நீ கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது… ஒரு பொண்ணை பார்க்கும் போது அவ உனக்கானவன்னு தோனும்… உனக்கும் சத்தம் கேக்கும்… அப்போ நீ கல்யாணத்தை பத்தி யோசிக்கணும்… அதுவரைக்கும் நாங்க உன்னை கட்டாயப்படுத்த மாட்டோம் என்ன..?? என்று அடிக்கடி சொல்வார்… ஆனால் இன்று வரையிலும் யாரைப் பார்த்தும் அவனுக்கு அப்படி தோன்றியதில்லை,

மொத்ததில் சென்னை அவனை எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் தன் விரும்பிய வேலையை செய்வதில் மகிழ்ச்சி இருந்தாலும், இதுவரையிலும் அவன் சொந்த ஊர், படித்த இடம், வேலை செய்த இடம் எல்லாவற்றையும் விட பரபரப்பான இந்த சென்னை அவனுக்கு அலுப்பையும் கொடுத்தது. அந்த அலுப்பை போக்கவும், சென்னையை அவனுக்கு பிடித்தமானதாக ஆக்கவும் அங்கு வந்து சேர்ந்தாள் அவள்,

திடிரென்று அன்று இரவு நிகேதனிடம் இருந்து சஞ்சய்க்கு போன் வந்தது.

“ஹலோ என்னடா..?”

“மாப்ள… ப்ரண்ட்ஸோட ஊட்டிக்குப் போன என் தங்கை நிரு அப்படியே சென்னைக்கு ட்ரெயின் ஏறிட்டாளாம்… டிக்கெட் எடுத்தப்போ சொல்லாம… ட்ரெயின் ஏறினதும் சொல்றா..

மாமா ஊர்ல இல்லாததால அத்தையை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக ஜானவி கூட நானும் வர்றதா சொல்லிட்டேண்டா… அத்தை வெறும் வயிற்றுல டெஸ்ட் எடுக்கணுமாம்… அதான் நான் காலையில அவங்கக் கூட போக வேண்டியிருக்கு… அதனால நீ போய் நிருவை கூட்டிட்டு வந்துடுடா… நீ வரப் போறதா நான் அவக்கிட்ட சொல்லிட்டேண்டா… என்ன சரியா…”

எல்லாம் முடிவுப் பண்ணிட்டு கேட்கும் நண்பனிடம் என்ன சொல்ல முடியும் சரி என்று ஒத்துக் கொண்டான் சஞ்சய்..

ஆனால் நீரஜாவை சஞ்சய் நேரில் பார்த்ததில்லை,  நிகேதன் சமீபத்தில் அவள் புகைப்படத்தை காட்டியப் போது கூட அவன் அதை மேலோட்டமாக தான் பார்த்தான். இப்போது  ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் அவள் முகம் அவனுக்கு அவ்வளவாக ஞாபகம் வரவில்லை, ஏதோ கொஞ்சம் தான் ஞாபகத்திற்கு வந்தது. இதை வைத்து அவளை கண்டுப்பிடிக்க முடியுமா..??

தன் நண்பனிடம் கேட்டால், என்ன நினைப்பான் அவன், என் தங்கை முகம் கூட உனக்கு ஞாபகம் இல்லையா என்று நினைப்பானே, இது என்னடா உனக்கு இப்படி ஒரு சோதனை என்று தன்னையே நொந்துக் கொண்டான்.

மறுநாள் காலை ரயில் நிலையத்திற்கு நேரத்துக்கு வந்துவிட்டான். அவன் வந்த நேரம் ரயிலும் சரியாக வந்து நின்றது. எப்படியோ தனக்கு ஞாபகம் இருக்கும் அந்த முகத்தை வைத்து அவளை கூட்டிப் போக வந்துவிட்டான். அவளுக்கும் தான் நிகேதன்  அவன் வரப் போவதை சொல்லி வைத்திருக்கிறானே, அவனுக்கு ஒருவேளை அவளை அடையாளம் தெரியவில்லை என்றாலும், அவள் இவனை கண்டுக்கொள்ள மாட்டாளா..?? என்ற தைரியத்தில் அவளுக்காக காத்திருந்தான்.

பார்க்கும் பெண்களையெல்லாம் இவள் நீரஜாவாக இருக்குமோ..?? என்று அவன் ஆராய்ச்சி செய்ய,  அவர்களில் சிலர் அவனை முறைத்துக் கொண்டும், சிலர் அவனை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டும் செல்ல,

“இந்த நிலைமை உனக்கு தேவையாடா…” என்று நொந்து போய் அவன் நிற்க, அப்போது தான் சற்று தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தான். அனைவரும் தூங்கி எழுந்த முகத்தோடும், கலைந்த தலையுமாக வந்துக் கொண்டிருக்க, அவளோ…

அப்போது தான் பூத்த வெள்ளை ரோஜாவைப் போல, வெள்ளை நிற சுடிதாரில், முதுகில் பையை மாட்டிக் கொண்டு நடந்து வந்தவளை பார்த்தவனுக்கு கண்களை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை. தான் அழைத்துப் போக வந்த நீரஜாவையும் மறந்து, அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எங்கோ ரயில்  கிளம்புவதற்காக ஒரு விசில் சத்தம் கேட்க, தன் தந்தை சொன்னது போல் அவளைப் பார்த்த போது விசில் சத்தம் கேட்டதும், மனமோ இவள் எனக்கானவள் என்று சொன்னது.

மௌனம் தொடரும்..