KPEM 1

மௌனம் 1

சென்னை விமான நிலையம்

சிங்கப்பூர் விமானம் தரையிறங்க அரைமணி நேரம் தாமதம் ஆகும் என்று அறிவித்து கொண்டிருந்தார்கள், விமானம் வர தாமதம் என்றதும், சஞ்சய்க்கு எரிச்சலாக இருந்தது.
அவளை மூன்று வருடம் கழித்து பார்க்கப் போகிறான், அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவலில், அவளை அழைத்து போக வந்த நிகேதனோடு அவனும் வந்தான்.

விமானம் வர, இன்னும் அரைமணி நேரம் தாமதம் ஆகும் என்று சொன்னதும் இப்போது சஞ்சய்க்கு கடுப்பாக வந்தது.
அவனது தவிப்பு அவளுக்குத் தான் புரியவில்லை என்றால் அவர்களுக்கும் புரியவில்லை. அவளை எப்போது பார்ப்போம் என்று அவன் தவிப்பது அவர்களுக்கு எப்படி தெரியுமாம்? அவளே அதை எதிபார்த்தாளோ? என்னவோ?

இந்த மூன்று வருடத்தில் அவள் மூன்று முறை இந்தியா வந்தாள். ஆனால் அவனால் தான் அவளை பார்க்க முடியாமல் போயிற்று..
அவனால் எப்படி பார்க்க முடியும்? அவள் தான் வேண்டுமென்றே அவன் இல்லாதபோது வந்தாளே! ஆனால் அவள் இனி இங்கு தான் இருக்கப் போகிறாள், அது தெரிந்தும் இன்றே அவளை பார்த்து விட வேண்டும் என்று முடிவோடு வந்திருக்கிறான் அவன், ஆனால் விமானம் வர தாமதமாகிறது.

அவன் இங்கு அவளை அழைத்து செல்ல வந்திருப்பதை அவள் பார்த்தால் சந்தோஷப்படுவாளா? இல்லை… அவனுக்கு நினைக்கும் போதே படபடப்பாக வந்தது, கை நகங்கள் தானாக வாயை நோக்கிச் சென்றது.

சஞ்சய் படபடப்புடன் நகங்களை கடித்து கொண்டிருப்பதை, சற்று தள்ளி நின்று கவனித்த நிகேதன் , உடனே அவன் அருகில் வந்தான்.

“டேய் மாப்ள.. அதான் நான் அப்பவே சொன்னேன், நீ ஆபிஸ்க்கு போய் மீட்டிங் அட்டண்ட் பண்ணு… நான் மட்டும் ஏர்போர்ட் வரேன் என்று, நீதான் இல்ல மீட்டிங்கிற்கு டைம் இருக்கு, நாம ஏர்போர்ட் போய்ட்டு.. ஒன்னாவே ஆபிஸ்க்கு போகலாம்னு சொன்ன… இப்போ டென்ஷனா இருக்க? இன்னும் ஃப்ளைட் வர அரைமணி நேரம் ஆகும்னு வேற சொல்றாங்க, நீ கிளம்பி போய் மீட்டிங் அட்டண்ட் பண்ணு, நான் இங்க இருந்து அவளை கூட்டிட்டு வரேன்”

தன் படபடப்புக்கான காரணத்தை தவறாக புரிந்து கொண்ட தன் நண்பனை பார்த்த சஞ்சய், “இவன் தெரிஞ்சு தான் இப்படி பேசுகிறானா? இல்லை இவனுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியவில்லையா? என்று குழம்பினான். இருந்தாலும் தன் நண்பனுக்கு கொஞ்சம் மூளை குறைவுதான், எதுவும் தெரிந்திருக்காது என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவனிடம்..

“மச்சான் நான் எங்க டென்ஷனா இருக்கேன்.. மீட்டிங்கிற்கு இன்னும் டைம் இருக்குன்னு எனக்கு தெரியும்.. நான் சாதாரணமாகத்தான் இருக்கேன்” என்று தன் பதட்டத்தை மறைக்க பார்த்தான்.

“உன்னோட முகமே, நீ டென்ஷனா இருக்கேன்னு சொல்லுது.. இதுல நகத்தை வேற கடிக்கிற… நீ டென்ஷனா இல்லைன்னு என்கிட்டயே சொல்றியா… எனக்கு தெரியும் மாப்ள, நீதான் 24மணி நேரமும் ஆபிஸ மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்க ஆளாச்சே.. உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா?” என்று நிகேதன் கூறியதும்,

“சே, இனிமே டென்ஷன் ஆனால் நகத்தை கடிக்க கூடாது, இவன் கண்டுபிடிச்சிடுவான்.. பரவாயில்லை நம்ம ஏன் டென்ஷன் ஆனோம்னு இவனுக்கு தெரியல..” என்று மனதில் நினைத்துக் கொண்டு, வெளியே,

“மச்சான், மீட்டிங்கு போக லேட் ஆயிடும்னு கொஞ்சம் டென்ஷனா தான் இருந்துச்சு.. ஓகே, நான் இதுக்கு மேல டென்ஷன் ஆகமாட்டேன்… நாம ரெண்டுபேருமே காத்திருந்து கூட்டிட்டு போவோம், அப்புறம் மீட்டிங் அட்டண்ட் பண்ணுவோம், கூல்” என்று தன் நண்பனை அடக்கினான். (இவர்கள் எதிர்பார்க்கும் அவள் வருவதற்குள் இவர்களின் அறிமுகம்)

சஞ்சயும் நிகேதனும் 29 வயது நிரம்பிய அழகான ஆண்மகன்கள், இருவரும் நெருங்கிய நண்பர்கள், எம்.பி. ஏ முடித்துவிட்டு உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை திறம்பட ஒன்றாக நடத்தி வருகின்றனர்.

இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்க போகிறது என்றதும் நீரஜாவிற்கு ஏதோ இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது, இந்த மூன்று வருடம் அவள் இங்கு இல்லை என்றாலும் தன் குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறாள். மூன்று முறை அவர்களை இங்கு வந்து சந்தித்து விட்டு சென்றிருக்கிறாள். அவள் குடும்பத்தாரும் அவளை அங்கு சென்று பார்த்து விட்டு வருவார்கள்.
ஆனால் அவனை பார்த்து மூன்று வருடம் ஆகிவிட்டது, இன்றே அவனை பார்க்க முடியவில்லை என்றாலும், சென்னை வந்தால் அவனை பார்க்க முடியாமல் போகாது, அதுவே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது, இதற்கும் அவனை பார்க்க கூடாது, பேசக்கூடாது, ஏன் அவன் நினைவே இருக்கக் கூடாது என்று தான் அவள் சிங்கப்பூர் சென்றது,

ஆனால் அப்படி இருக்கத் தான் அவளால் முடியவில்லை, அவள் சென்னை வர வேண்டிய அவசியம் வந்த போது கூட, அவன் இங்கு இல்லை என்று தெரிந்து தான் வந்தாள். ஆனால் இந்த மூன்று வருடத்தில் அவனை மறக்க தான் முடியவில்லை, இனியும் அவனை பார்க்காமலோ, அவனுடன் பேசாமலோ இருக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. இந்த மன நிலையில் சிங்கப்பூரில் இருப்பதில் எந்த பயனுமில்லை, அதனால் இதோ சென்னைக்கு உடனே புறப்பட்டுவிட்டாள்.

நீரஜா விமானத்தில் அவனை பற்றிய யோசனையில் இருக்கும்போதே, அவளோடு வந்த வெற்றி அவளை அழைத்தான். “நீரஜ்.. நீரஜ்.. நான் சொல்றதை கேட்டுகிட்டு தானே வர??” என்று அவன் அவளோடு பேசிக் கொண்டு வந்ததை கேட்டாளா? என்ற சந்தேகத்தோடு கேட்டான்.

“இவன் வேற, தொன தொனன்னு பேசிக்கிட்டே வரான்… இதை நான் கேட்டுகிட்டு வேற வரணும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு “கேட்டுகிட்டு தான் வரேன் வெற்றி, இருந்தாலும் மீதியை பிளைட்ல இருந்து இறங்கி, வீட்டுக்கு போனதும் பேசிப்போமா…” என்று அவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

“ஓகே டியர்” என்று அவனும் அமைதியாகிவிட்டான்.

விமானம் தரையிறங்கி, பயணிகள் வருவது தெரிந்தது சஞ்சய்க்கு, அவளின் வருகையை அவன் கண்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தது. அவனை அதிக நேரம் தவிக்கவிடாமல் உடனே அவன் கண்களுக்கு அவள் தெரிந்தாள்.

அவள் அதே போல் அழகாக இருந்தாள். அதே ஒல்லியான தேகம், ஆகாய நீல நிறத்தில் அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள். நீளமாகவும் இல்லாமல் குட்டையாகவும் இல்லாமல் அவள் முதுகை தொட்டுக் கொண்டிருக்கும் தலைமுடியை விரித்து இரு பக்கமும் கொஞ்சம் முடி எடுத்து கிளிப் போட்டிருந்தாள்.

அவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவன் கண்கள் சொல்லியது, ஆனால் அடுத்த நொடியே அவன் கண்களுக்கு அவளோடு இணைந்து நடந்து வந்தவன் தெரிந்தான். அந்த ஆடவனை பார்த்து அவனின் உற்சாகம் குறைந்து விட்டது. அவன் யார்? என்ற கேள்வியே சஞ்சய் மனதில் இருந்தது.

அவளை நிகேதனும் பார்த்து விட்டான், “டேய் மாப்ள, நீரஜா வந்துட்டாடா… என்று சஞ்சயிடம் தகவல் சொன்னான்.

விமானத்தில் இருந்து இறங்கி வெளியில் வரும் போதே நீரஜா சஞ்சயை பார்த்து விட்டாள். ஏனோ அவளுக்கு மனதில் உற்சாகம் பிறந்தது, இன்றே அவனை பார்ப்போம் என்று அவள் நினைக்கவே இல்லை, உண்மையில் இது அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தான்,

ஆனால் சஞ்சயின் பார்வை அவள் மீது இல்லாமல் வேறெங்கோ பார்த்தது, அந்த பார்வை வெற்றியின் மீது இருப்பதை தெரிந்து கொண்டாள் அவள், வேண்டுமென்றே அவனோடு நெருக்கமாக இணைந்து பேசிக்கொண்டே நடந்து வந்தாள்.

சஞ்சய், நிகேதன் அருகில் வந்த நீரஜா,”நிக்கி” என்று நிகேதனை கட்டிக் கொண்டு “உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா..??? என்றாள்.

“ஹே நானும் தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் நிரு” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான் அவன்,

“நிக்கி இது வெற்றி, என்னோட ஒன்னா வேலை செய்றார்.. இவர் சின்ன வயசிலேயே சிங்கப்பூரில் செட்டில் ஆயாச்சு.. சென்னைக்கு வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டார்… வெற்றியோட சில ஃப்ரண்ட்ஸ் இங்க தான் இருக்காங்க, அவங்கள மீட் பண்ண வந்திருக்காரு.. அதான் கூட்டிட்டு வந்திருக்கேன்” என்று வெற்றியை நிகேதனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

பரஸ்பரம் இருவரும் கை குலுக்கி கொண்டனர்.
இதையெல்லாம் சஞ்சய் ஒரு பார்வையாளனாக பார்த்து கொண்டிருந்தான். நீரஜா அவன் பக்கம் திரும்ப கூட இல்லை, அது கஷ்டமாக இருந்தாலும், வெற்றியை நீரஜா நண்பன் என்று அறிமுகப்படுத்தியது, ஏனோ அவன் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

நிகேதன் பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தவனை பார்த்த வெற்றி, நீரஜாவிடம் “நீரஜ் இது யாரு??” என்று கேட்டான்.

வெற்றி கேட்டதற்கு பதில் சொல்லாமல் சஞ்சய்யை ஒரு பார்வை பார்த்தாள் நீரஜா.
அவளின் பார்வையை சஞ்சயின் விழிகள் சந்தித்தது, அவன் மனதோ “ஒரு ஹாய் தான் இல்ல, ஏன் என்னை அறிமுகப்படுத்த கூட மாட்டாயா..??” என்று கேள்வி கேட்டது.

இருவரும் மௌனமாக இருக்கவே,”வெற்றி இது சஞ்சய், என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட், அப்புறம் என்னோட பிஸ்னஸ் பார்ட்னர்” என்று நிகேதனே சஞ்சயை அறிமுகப்படுத்தினான்.

வெற்றி “ஹாய் நைஸ் மீட்டிங் யூ” என்று கையை நீட்டினான், சஞ்சயோ சிரித்துக் கொண்டே கை குலுக்கினான்.

இதை பார்த்து கொண்டிருந்த நீரஜாவோ, என்கிட்ட “ஹாய், எப்படி இருக்க..?? ” என்று கேட்கக் கூட ஐயாவுக்கு கசக்குதோ..” என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவர்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு அனைவரும் ஏர்போர்டிலிருந்து வெளியே வந்தனர். சஞ்சய் காரை எடுக்க, நிகேதன் அவன் அருகில் அமர்ந்தான், பின் சீட்டில் நீரஜாவும் வெற்றியும் அமர்ந்தனர்.

விமான நிலையத்திலிருந்து வண்டி கிளம்பியதில் இருந்து, வெற்றி நீரஜாவிடம் பேசிக்கொண்டே வந்தான். நீரஜாவிற்கு அது பிடிக்கவில்லை என்றாலும் சஞ்சய்க்காக வேண்டுமென்றே அவனோடு பேசிக் கொண்டு வந்தாள்.
நிகேதனோ பேசாமல் இரண்டு காதிலும் பஞ்சை அடைத்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து விட்டான்.

சஞ்சய்க்கு தான் எரிச்சலாக இருந்தது, வெற்றி அவளோடு பேசிக் கொண்டிருப்பது மட்டும் இல்லாமல் நடு நடுவே நீரஜ், டியர் என்று அவன் உபயோகப் படுத்திய வார்த்தைகள் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது. அவளை பார்க்க ஆவலோடு வந்த அவனுக்கு, இப்போது ஏன் நாம் இங்கு வந்தோம் என்று தோன்றி விட்டது, அவனின் கோபத்தை அவன் கார் மீது கட்டினான், வேகமாக அவர்கள் செல்லும் இடத்திற்கு அந்த கார் பறந்தது.

                 மௌனம் தொடரும்..