IIN16

“பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்று விதமான மனநோய்களைப் பற்றி மருத்துவ உலகம் அதிகம் பேசியிருக்கிறது. மனச்சோர்வு எனப்படும் டிப்ரசன், சைகோசிஸ், டெல்யூசன் போன்றவையே. ஆனால் மனப்பிறழ்வுக்குறைபாடு என்பதோ நரம்பியல் சார்ந்த மனநலக்கோளாறாகும். உணர்ச்சிகளைக் கையாளுவதில் பற்றாக்குறை, இரக்கமின்மை மற்றும் மோசமான நடத்தைகள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். சைகோபாத்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக, ஏன் கவர்ச்சியாகக் கூட இருப்பார்கள். அவர்களை ஊன்றி கவனிக்கும்போது தான் மனசாட்சியற்று செயல்படுவதைக் கண்டுகொள்ள முடியும். அவர்களின் சமூக விரோத இயல்பானது பெரும்பாலும் குற்றச்செயல்களில் போய் முடிவடையும்.

                                            -From psychology today

போலீஸ் குவார்ட்டர்சில் இருந்தபடி தூரத்தில் பச்சையாகத் தெரியும் பொன்மலை காட்டைப் பார்த்தபடி காபி அருந்திக்கொண்டிருந்தாள் இதன்யா.

அந்தக் காடானது பொன்மலைக்கும் பூங்குன்றம் என்ற இன்னொரு மலை கிராமத்திற்கும் நடுவே அடர்ந்து விரிந்திருந்தது. பூங்குன்றத்தை ஒட்டிய பகுதிகள் ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் வனத்துறையின் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது. பொன்மலைக்கு அருகே இருந்த காட்டுப்பகுதிக்குள் செல்ல அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை என்றாலும் விலங்குகள் மீதான பயத்தால் அங்கே யாரும் செல்வதில்லை.

அப்படிப்பட்ட காட்டுக்குள் பூங்குன்றம் ரிசர்வ் ஃபாரஸ்ட் எல்லைக்கு முன்னேதான் சாத்தான் வழிபாடு செய்யும் கல்ட் கும்பல்கள் கூடும் குகை இருந்தது.

காட்டுக்குள் செல்ல பூங்குன்றம் சென்று வனத்துறை அதிகாரிகளின் உதவியைக் கேட்டுவிட்டு வந்திருந்தாள் இதன்யா. வனத்துறை ரேஞ்சர்கள் உதவியின்றி காட்டுக்குள் சென்ற மோப்பநாய் குழுவினருக்கு நடந்தேறிய சம்பவத்தைக் கேட்டறிந்த பிறகு முன்னெச்சரிக்கை இல்லாமல் போய் தனது உயிரைப் பணயம் வைக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை.

காபியைக் குடித்து முடித்தவள் பொன்மலைக்குச் செல்ல ஆயத்தமானாள்.

மேஜை மீது இருந்த புதிய மொபைலை எடுத்துக்கொண்டாள்.

கதவைப்  பூட்டிவிட்டு கீழ்த்தளம் வந்து பைக்கைக் கிளப்பியவள் நேரே போய் சேர்ந்த இடம் சாந்திவனம். அவளைப் பார்த்த முருகையா சல்யூட் அடிக்க புன்னகைத்தவள் “வீட்டுல மிச்செல் இருக்காளா?” என்று கேட்க

“ஐயாவ தவிர எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க மேடம்… ஏகலைவன் ஐயாவும் வந்திருக்காரு” என்றார்.

கலிங்கராஜன் இல்லாத நேரத்தில் ஏகலைவனுக்கு இங்கே என்ன வேலை என்ற கேள்வியோடு வீட்டின் அழைப்புமணியை அழுத்தினாள் இதன்யா.

கதவைத் திறந்தவர் குமாரி. இதன்யாவைக் கண்டதும் மெல்லிய பதற்றம் அவரது முகத்தில்.

“வாங்க மேடம்” என சொன்னபோதே குரல் தடுமாறியது.

ஏன் இந்த தடுமாற்றமென யோசித்தபடி உள்ளே வந்தவள் ஹாலில் அடியெடுத்து வைத்த போது ஏகலைவனின் குரல் காதில் விழவும் புருவத்தைச் சுருக்கியபடி அங்கே போய் நின்றாள்.

அவ்வளவு நேரம் சிரித்த முகமாக இருந்த கிளாராவின் வதனம் இதன்யாவைப் பார்த்ததும் கூம்பியது.

“மே..டம்” என்றபடி எழுந்தாள்.

ஏகலைவன் பேச்சை நிறுத்திவிட்டு இதன்யாவைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“கலிங்கராஜன் சார் இல்லையா?”

கேள்வி கேட்டவாறு ஏகலைவனுக்கு நடந்த உபசாரத்தை ஆராய்ந்தாள் அவள்.

“அவர் பிசினஸ் விசயமா கேரளா போயிருக்குறார்”

இப்போது கொஞ்சம் தடுமாற்றம் குறைந்திருந்தது கிளாராவின் குரலில்.

கவனத்தை ஏகலைவன் பக்கம் திருப்பியவள் “உங்க மருமகனைக் காப்பாத்த நீங்க இந்நேரம் லாயரைக் கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருப்பிங்கனு நினைச்சேன்… நீங்க இங்க உக்காந்து காபியும் பிஸ்கெட்டும் சாப்பிட்டுட்டிருக்கிங்க” என்றாள் இதன்யா.

“மிசஸ் கலிங்கராஜன் இனியாவோட டெத்தால ரொம்ப வருத்தப்பட்டாங்க… இப்ப நிஷாந்தை வேற நீங்க கஷ்டடில வச்சு விசாரிக்கிறிங்க… அவன் விவகாரத்தை மனசுல வச்சு என்னைக் கலிங்கராஜன் தப்பா நினைச்சுடக்கூடாதுல்ல… அதான் அவரோட ஒய்ப் கிட்ட பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்”

தெளிவாக தடுமாற்றமில்லாத நிதானமான குரலில் ஏகலைவன் சொன்னாலும் அவனது பேச்சு பொய் என்பதை உடனடியாகக் கண்டுகொண்டாள் இதன்யா.

“வெல்… உங்க பேச்சைக் கண்டினியூ பண்ணுங்க… நான் மிச்செல்லைப் பாக்க வந்தேன்”

“என் பொண்ணை நீங்க ஏன் பாக்கணும்?” இம்முறை கிளாராவின் குரலில் கோபம் துளிர்த்தெழுந்தது.

இதன்யா நமட்டுச்சிரிப்போடு எழுந்தவள் “இந்த வீட்டுப்பெரியவங்க வாயைத் திறந்தா பொய்யா கொட்டுது… ஆனா குழந்தைங்க அப்பிடி இல்ல… எல்லா உண்மையையும் மறைக்காம சொல்லிட்டாங்க… நான் மிச்செல் கிட்ட கேட்டுத் தெளிவடைய வேண்டிய ஒரு விசயம் பேலன்ஸ் இருக்கு… இந்தக் கேசுக்காக நான் எத்தனை தடவை உங்க வீட்டுக்கு வந்தாலும் நீங்க விசாரணைக்குக் கோ-ஆப்ரேட் பண்ணணும் ‘மிசஸ்’ கலிங்கராஜன்… உங்க பொண்ணைக் கொன்னவங்களைக் கண்டுபிடிக்கணுமா வேண்டாமா?” என்றபடி புருவத்தை ஏற்றியிறக்கினாள்.

அவ்வளவு தான்! கிளாரா கப்சிப். ஏகலைவனை நக்கல் சிரிப்போடு கடந்தவள் அங்கே சிலையாய் நின்ற குமாரியிடம் “மிச்செல் எங்க?” என்று கேட்டபடி அவரை அழைத்துச் சென்றாள்.

“அவர் ரூம்ல தான் இருக்கா மேம்… சின்னப்பசங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க”

“மிச்செல் ஏன் போகல?”

“அவ இன்னும் இனியாவோட மரணம் குடுத்த அதிர்ச்சில இருந்து வெளிய வரல”

மிச்செல்லின் அறை வந்ததும் “நான் அவ கிட்ட பேசிக்கிறேன்… நீங்க கிளம்பலாம்” என்றாள் இதன்யா.

குமாரி அவளைத் திரும்பி திரும்பி பார்த்தபடி போக மிச்செல்லின் அறைக்கதவைத் தட்டினாள்.

மிச்செல் கதவைத் திறந்ததும் “நான் உள்ள வரலாமா?” என்று கேட்டாள்.

“வாங்க மேம்” முகத்தில் சிரிப்பு இல்லை., ஆனால் குரலில் உயிர்ப்பு மீண்டிருந்தது.

அறைக்குள் சென்றதும் தனது பாக்கெட்டிலிருந்த மொபைலை மிச்செல்லிடம் நீட்டினாள் இதன்யா.

கண்கள் மலர வாங்கிக்கொண்டாள் அவள்.

“தேங்க்ஸ் மேம்”

“யூ ஆர் வெல்கம்”

அந்த மொபைலை பொக்கிஷம் போல தனது மேஜையறைக்குள் வைத்து மூடினாள் மிச்செல்.

இதன்யாவிடம் மீண்டும் நன்றி சொன்னாள்.

“தேங்க்ஸை விடு… எனக்கு உன் கிட்ட ஒரு சந்தேகத்தைக் கேட்டுக் கிளியர் பண்ணிக்கணும்… அதுக்காக தான் நேர்ல வந்தேன்… இல்லனா மொபைலை முருகையா கிட்ட குடுத்துவிட்டிருப்பேன்” என இதன்யா சொல்லவும் மிச்செல்லின் முகத்தில் குழப்பம்.

“என்ன சந்தேகம் மேம்?”

“நேத்து ராக்கிய போலீஸ் ஜீப்ல ஏத்துனப்ப உன்னைப் பாத்தேன்… உன் ஃபேஸ்ல சந்தோசம் தெரிஞ்சுது… ஏதாச்சும் காரணம் இருக்கா?”

மிச்செல் ஆம் என்றவள் “அவனையும் அவன் அண்ணாவையும் எனக்குப் பிடிக்காது மேம்” என்கவும்

“ஏன்?” என அடுத்த கேள்வி பிறந்தது இனியாவிடம்.

“அவன் ரொம்ப மோசம்” சொல்லும்போதே பதினைந்து வயது சிறுமியின் முகம் சிறுத்துப்போனது.

“புரியலமா”

“அவன்… அவன் ஒரு ட்ரக்ட் அடிக்ட்… நான் எவ்ரி சண்டே சர்ச்சுக்குப் போவேன்… சர்ச் பக்கத்துல ஒரு பாதை காட்டுக்குப் போகும்ல… அங்க யாருமே போகமாட்டாங்க… ஏன் போகக்கூடாதுனு ஒருநாள் க்யூரியாசிட்டில அங்க போனேன்… அப்ப அங்க அவன்…”

முடிக்க முடியாமல் திணறினாள். கண்களில் கண்ணீர் நிரம்பியது.

“ராக்கி… என் கிட்ட… இங்கலாம் தொட்டான் மேம்”

சொல்லி முடிக்கும்போதே அழுதுவிட்டாள் மிச்செல்.

அவள் காண்பித்த இடங்கள் எல்லாம் அந்தரங்கமாக இருக்கவும் இதன்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

“ராஸ்கல்…” பற்களைக் கடித்தவள் “அவனைப் பத்தி நீ யார் கிட்டவும் சொல்லலையா?” என்க

“இனியாக்காக்குத் தெரியும்… என் கூட சர்ச்சுக்கு வந்து, அங்க வச்சு அவனை அக்கா அறைஞ்சிட்டா” என்றாள் மிச்செல்.

இதை பற்றி ஏன் யாரும் தங்களது விசாரணையில் கூறவில்லை என்று இதன்யாவுக்கு ஆச்சரியம். மிச்செல்லோ அன்று ராக்கியை இனியா அறைந்தபோது சுற்றி யாருமில்லை என்று கூறினாள்.

“உன் பேரண்ட்சுக்கு இந்த விசயம் தெரியுமா?”

தெரியாதென தலையசைத்தாள் அவள்.

“ஏன் சொல்லலை?”

“பயமா இருந்துச்சு மேம்… ரோஷண் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவான்… அவன் எங்க பேரண்ட்சுக்கு ரொம்ப குளோசா இருந்தான்… நாங்க சொல்லிருந்தாலும் அவங்க நம்பிருக்கமாட்டாங்க”

இதன்யாவுக்கு அந்த வீட்டின் வாரிசுகளை நினைத்தால் பரிதாபமாக இருந்தது. பெற்றோரால் கூட அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

ரோஷண் தன்னை இனியா அவமானப்படுத்தியதாக உண்மை கண்டறியும் சோதனையில் சொன்னது ராக்கியையும் அவள் அடித்த சம்பவத்தைத் தொடர்புபடுத்தி தானோ? ஒரு பெண் கையால் அடிவாங்கினோமே என்ற ஈகோ கூட ராக்கியைக் கொலை செய்யத் தூண்டியிருக்கலாமே!

மிச்செல்லின் தோளில் ஆதரவாகத் தட்டிக்கொடுத்தாள் இதன்யா.

“பொண்ணுங்க எப்பவும் தைரியமா இருக்கணும் மிச்செல்… இனியா ராக்கிய அடிச்சதே அவ தைரியமான பொண்ணுங்கிறதுக்கு உதாரணம்… ஆனா வெறும் தைரியம் மட்டும் பொண்ணுங்களுக்குப் போதாது… கொஞ்சம் முன்னெச்சரிக்கையும் வேணும்… நீ இனியா மாதிரி தைரியமா இருக்கணும்… அதோட கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடவும் இருக்கணும்… இதை எப்பவும் மறக்கக்கூடாது… நான் கிளம்புறேன்… நீ குட்கேர்ளா நாளையில இருந்து ஸ்கூலுக்குப் போகணும்… ஓ.கேவா?”

“ஓ.கே மேம்”

மிச்செல்லிடம் பேசியதால் கிடைத்த புது தகலை மனதில் பதியவைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறியவள் கிளாராவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாமென ஹாலுக்கு வந்தாள்.

அங்கே ஏகலைவன் அணிந்திருந்த ப்ளேசர் இல்லாமல் ஃபார்மல் சட்டையோடு இருக்க அவனருகே காபி சிந்திய கறை.

“கிளாரா?”

“என் ப்ளேசர்ல காபி சிந்திடுச்சு… கிளாரா அதை க்ளீன் பண்ண வாஷிங் ரூமுக்குப் போயிருக்காங்க”

குமாரியிடம் வாஷிங் ரூம் எங்கே என கேட்டு போன இதன்யா அங்கே கண்ட காட்சியில் அருவருத்துப் போனாள்.

ஏனெனில் கிளாரா அங்கே சுத்தம் செய்யப்பட்ட ஏகலைவனின் ப்ளேசரைத் தன் மார்போடு அணைத்து கண்களை மூடி நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வை என்னவென புரிந்துகொள்ள தனியாய் எதுவும் படிக்க வேண்டுமென அவசியமில்லையே.

பார்த்ததும் என்ன இவள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறாள் என்ற அருவருப்பு மட்டுமே மிஞ்சியது இதன்யாவுக்கு.

“க்கும்”

அவள் தொண்டையைச் செருமிய சத்தம் கேட்டுத் திரும்பிய கிளாராவின் முகமோ இருண்டு போனது.

வேகமாக ஏகலைவனின் ப்ளேசரை மறைக்க முயன்றாள்.

“எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்ல மிசஸ் கலிங்கராஜன்… நான் கிளம்புறேன்னு சொல்லிட்டுப் போக வந்தேன்… பை த வே, நம்ம அடிக்கடி சந்திக்க வேண்டியது இருக்கும்”

இதற்கு மேல் அருவருப்பான சூழலில் இருக்கப் பிடிக்காத இதன்யா அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

என்ன பெண்மணி இவள்? இதே வீட்டில் இவள் பெற்ற பதினைந்து வயது பெண் குழந்தை இருக்கிறாள். இந்த நேரத்தில் வேறொரு ஆடவனின் ப்ளேசரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்கள் சொருக நிற்கிறாள்! சீ!

ஹாலில் அமர்ந்திருந்த ஏகலைவனை ஒரு பொருட்டாக மதியாமல் வெளியேறியவள் பைக்கில் ஏறியபோது ஒருவேளை கிளாராவின் இச்செய்கையைத் தான் இனியா பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் வரவும் ஏன் தனது கேவலமான குணத்தைக் கலிங்கராஜன் தெரிந்துகொள்ளக்கூடாதென கிளாரா இனியாவைக் கொல்ல கொலைகாரர்களை ஏவியிருக்ககூடாதென யோசிக்க ஆரம்பித்தாள்.