IIN 83

நீங்கள் அனாமதேயமாக இணையத்தில் உலவ டார்க்வெப்பை தான் பயன்படுத்தவேண்டுமென இல்லை. சாதாரணமாக சர்ஃபேஸ் வெப்பிலும் கூட உங்களால் அனாமதேயமாக உலவ முடியும். நீங்கள் டார்க்வெப்பில் புழங்கும் கிரிப்டோ கரன்ஸிகளை வாங்க கூடாது என சிலர் கூறலாம். கிரிப்டோ கரன்சிகள் சட்டவிரோதமானவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அப்படி இல்லை. கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமானவையே. ஆனால் டார்க்வெப்பில் யாரையும் நம்பி கிரிப்டோ கரன்சிகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நிபுணர்களும், சைபர் கிரிமினல்களும் மட்டுமே டார்க்வெப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தைப் பொதுவாக கேட்க நேரிடும். அப்படி இல்லை. சட்டப்பூர்வமான நிறைய வேலைகளுக்கும் அனாமதேய அடையாளங்கள் தேவைப்படுகையில் கட்டாயம் டார்க்வெப் பயன்பாடு என்பதைத் தவிர்க்க முடியாது.    

                                                          –From Internet

“கேஸ்ல பிசியா இருக்கேன்னு சொன்னேன்ல..” என்ற இதன்யா மொத்த காவல்துறையினரும் திகைத்துப் போய் நிற்பதை பார்த்துவிட்டுத் திரும்பியவள் ஏகலைவனைப் பார்த்ததும் “யூ ராஸ்கல்” என்று பற்களைக் கடித்துக்கொண்டு முன்னேற அதற்குள் மார்த்தாண்டன் பாய்ந்து சென்று அவனது கையை முதுகுக்குப் பின்னே வளைத்தார்.

ஏகலைவன் திமிறி விலகுவதற்குள் முரளிதரனும் வந்துவிட கான்ஸ்டபிள்கள் கைவிலங்கை பூட்டி ஏகலைவனை காவல் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றனர்.

“ஏய் என்னை விடுங்க… நான் யார்னு தெரியாம என் மேல கைவச்சிட்டிங்க… உங்க ஒவ்வொருத்தருக்கும் இதுக்கான தண்டனைய நான் குடுப்பேன்” என்று மூர்க்கத்தனமாகக் கத்திக்கொண்டே சென்றவனை அதிர்ச்சியோடு பார்த்தபடி நின்றான் ப்ராணேஷ்.

“என்ன பாக்குறிங்க? அவனை அரெஸ்ட் பண்ணி இழுத்துட்டு வர நாங்க போராடிக்கிட்டு இருந்தோம்.. நீங்க சாவகாசமா அவனை அழைச்சிட்டு வந்து என் கூட ரொமான்ஸ் வேற பண்ணுறிங்க… ஹீ இஸ் அ கோல்ட் ப்ளட் மர்டரர் அண்ட் சைகோபாத்… இதுவரைக்கும் இவனால ரெண்டு பேர் செத்துப்போயிருக்காங்க… நாலு பேர் இவனால ஜெயில்ல இருக்காங்க… தேங்க் காட்… அவன் உங்களை ஒன்னும் பண்ணல” என்றவள் “நீங்க போலீஸ் குவார்ட்டர்ஸ்ல போய் ரெஸ்ட் எடுங்க… இவன் கிட்ட இருந்து உண்மைய வெளிய கொண்டு வரணும்… என்கொயரிய முடிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தாள்.

அங்கே மார்த்தாண்டனோ அத்துமீறி வார்த்தைகளை வாரியிறைத்த ஏகலைவனின் கன்னத்தில் தனது கைவண்ணத்தைக் காட்டியிருந்தார்.          

அவரை அடிக்க பாய்ந்தவனை முரளிதரன் தடுக்க அங்கே வந்த இதன்யா “இவனை லாக்கப்ல போடுங்க” என்றாள் கோபத்தோடு.

ஏகலைவன் மூர்க்கமாக திமிறியவன் “என் லாயர் வராம நீங்க யாரும் என்னை அக்யூஸ்ட் மாதிரி ட்ரீட் பண்ண முடியாது” என்றான்.

“ஓஹ்! உன் லாயருக்குப் போன் பண்ணு… அவர் கிட்ட கேஸை பத்தி நாங்க டிஸ்கஸ் பண்ணிக்கிறோம்” என்று அனுமதி கொடுத்தாள் இதன்யா.

ஏகலைவன் வழக்கறிஞர் மனுவேந்தனின் எண்ணுக்கு அழைத்தான். அவர் அழைப்பை ஏற்றதும் விவரத்தைச் சொன்னவன் “மூனு பறவைங்களை வளக்குறவன் கிட்ட மசூதி பக்கத்துல இருக்குற மரத்துல உள்ள பறவைய கூண்டுல அடைக்கச் சொல்லுங்க” என்று சொல்லவும் அருகிலிருந்த கான்ஸ்டபிள் புருவம் சுருக்கினார்.

“என்னய்யா பறவை கிறவைனு சொல்லுற?” என அவர் அதட்ட ஏகலைவன் அவரை முறைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“போன்” இதன்யா கையை நீட்ட அவளிடம் தனது மொபைலை ஒப்படைத்தான் அவன்.

அவனை மார்த்தாண்டன் விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லவா என்று கேட்க “சாரோட லாயர் வரட்டும்… ஜாமீன்ல போயிடலாம்னு கனவு காணுறார்ல… அதை உடைச்சு காட்டுறேன்… அப்புறம் நம்ம நிதானமா விசாரிக்கலாம் மார்த்தாண்டன்” என்றாள் இதன்யா.

மார்த்தாண்டனே அவனை லாக்கப்புக்குள் வைத்து பூட்டினார். பின்னர் பொன்மலை காவல் நிலையமே பரபரப்பானது. மாதக்கணக்கில் அவர்களை அலைக்கழித்த கொலை வழக்கின் உண்மையான குற்றவாளி சிக்கியிருக்கிறான். அதுவும் இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு. அவனை இம்முறை எக்காரணத்தைக் கொண்டும் தப்பவிடக்கூடாதென்ற மும்முரத்தோடு ஒவ்வொருவரும் இயங்கிக்கொண்டிருந்தனர்.

இதன்யா மார்த்தாண்டனிடம் ஏகலைவனை மாஜிஸ்திரேட்டின் முன்னே நிறுத்தும் முன்னரே அவனிடமிருந்து அனைத்து உண்மைகளையும் வாங்கிவிடவேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தாள்.

ஏகலைவன் அவளைக் கொலைவெறியோடு பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனியாமல் மார்த்தாண்டனிடன் “லாயர் வர்றதுக்குள்ள இந்தாளுக்கு மெடிக்கல் செக்கப் செய்யணும் சார்… இல்லனா எனக்கு அந்தப் ப்ராப்ளம் இந்த ப்ராப்ளம்னு கம்பி நீட்ட சான்ஸ் இருக்கு” என்றாள்.

அதே நேரம் லாக்கப்பில் இருந்த ஏகலைவனுக்குத் தலை சுற்றியது. பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி தூரத்தில் தெரிந்த இதன்யாவின் உருவம் மறைந்து போய்விட யாரும் கவனிக்கும் முன்னரே நின்று கொண்டிருந்தவன் பொத்தென தரையில் வேரற்ற மரமாகச் சரிந்தான்.

அவன் விழுந்த சத்தம் கேட்டு கான்ஸ்டபிள் இதன்யாவிடம் கூற மார்த்தாண்டனும் அவளும் லாக்கப்புக்குள் சென்று என்னவென பார்த்தார்கள்.

அவனது உடல் அனலாய் கொதித்தது. என்னவானது இவனுக்கு? அவர்கள் யோசிக்கும்போதே முரளிதரனும் அங்கே வந்தார். காவல் நிலையத்திலிருந்த முதலுதவிப்பெட்டியிலிருந்து தெர்மாமீட்டரை எடுத்து அவனுக்குச் சோதித்தவர் அது நூற்று நான்கு டிகிரி பாரன்ஹீட்டைக் காட்டவும் திகைத்தார்.

“இந்தாளை உடனே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணனும்… இது ஹை ஃபீவர் போல இருக்கு”

அடுத்த சில நிமிடங்களில் அவன் பொன்மலை அரசு மருத்துவமனைக்கு மார்த்தாண்டன் மற்றும் சில காவல்துறையினரின் பாதுகாப்போடு அனுப்பிவைக்கப்பட்டான்.

மருத்துவர் அவனைப் பரிசோதித்துவிட்டு மயக்கம் தெளிந்ததும் உடல்நிலை எப்போதிலிருந்து சரியில்லை என்று விசாரித்தார்.

“ஈவ்னிங்ல இருந்து… டீஹைட்ரேட் ஆகி மயங்கி விழுந்துட்டேன்” என்றான் அவன்.

மார்த்தாண்டனிடம் “இவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் வந்திருக்கு சார்… இந்த மாதிரி டைம்ல நம்ம பாடிய குளிரவைக்க வேண்டிய வியர்வை சுரப்பி சரியா வேலை செய்யாது… இந்தச் சம்மர்ல டெம்பரேச்சர் கொடுமையா உயரும்னு சொல்லிருந்தாங்களே… அதோட விளைவு… நாளைக்கு மானிங் வரைக்கும் அப்சர்வேசன்ல இருக்கணும் சார்… ஸ்வெட் க்ளாண்ட்ஸ் ஒழுங்கா வேலை செய்ய ஆரம்பிச்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்றார் மருத்துவர்.

மருத்துவரைத் தனியே அழைத்துச் சென்றார் மார்த்தாண்டன்.

“சார் இந்தாளு பயங்கரமான சைக்கோபாத்… இவருக்குச் சின்ன வயசுலயே சைக்கோபதி இருந்திருக்கு… கூடவே போஸ்ட் ட்ராமடிக் டிஸ்சார்டரால கடுமையா பாதிக்கப்பட்ட ஆளு இவர்… ஒரு மர்டர் கேஸ்ல இந்தாளு தான் ப்ரைமரி அக்யூஸ்ட்… இவரை இப்பிடியே விட்டுட்டா தப்பிச்சுப் போகக்கூட வாய்ப்பு இருக்கு… நாங்க அவரை என்கொயரி பண்ணியே ஆகணும்”

மருத்துவர் யோசித்தார். அப்போதே ஏகலைவனின் வழக்கறிஞர் மனுவேந்தன் அங்கே வந்தார்.

“ஏகலைவன் சாரை எந்த ஆதாரத்தோட அடிப்படைல அரெஸ்ட் பண்ணுனிங்க? அவரை லாக்கப்ல வச்சு அடிச்சு துன்புறுத்துனிங்களா?” என படபடத்தார் மார்த்தாண்டனிடம்.

“ரிலாக்ஸ்… உங்க கிட்ட பேசிட்டுத்தான் அவரை விசாரிக்கலாம்னு வெயிட் பண்ணுனோம்… அவருக்கு வந்திருக்குறது ஹீட் ஸ்ட்ரோக்.. என் பேச்சை நம்பலனா டாக்டர் கிட்ட கேளுங்க”

மருத்துவரும் அதை உறுதிப்படுத்திய பிற்பாடே மனுவேந்தன் அமைதியடைந்தார்.

“நான் ஏகலைவன் சாரை பாக்கலாமா?”

“பாருங்க”

மனுவேந்தன் ஏகலைவனை வைத்திருந்த அறைக்குள் பிரவேசித்தார். அவரைப் பார்த்ததும் “எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்க

“இன்னும் முடிவைச் சொல்லல சார்… உங்க மேல இருந்த பயம் போயிருக்கலாம்” என்றார் மனுவேந்தன். அவர் அவ்வாறு சொன்னதும் அத்துணை சோர்விலும் பற்களைக் கடித்தான் ஏகலைவன். தன் மீது மற்றவர்களுக்கு இருக்கும் பயமே அவனுடைய ஆயுதம். இப்போது அந்த ஆயுதம் துருபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்ந்தால் அவன் நினைத்தது நடக்காதே!

“இந்தக் கேஸ்ல இருந்து நான் எப்பிடியாச்சும் உங்களை வெளிய கொண்டு வருவேன் சார்” என்றார் மனுவேந்தன்.

ஏகலைவனின் தலை மறுப்பாக அசைந்தது.

“நான் இந்தக் கேஸ்ல இருந்து தப்பிக்க விரும்பல… எனக்குனு இனிமே எதுவும் இல்ல லாயர் சார்… ஜெயிலுக்குப் போறதை பத்தி நான் கவலைப்படல… ஆனா அதுக்கு முன்னாடி நான் முடிக்க வேண்டிய வேலை ஒன்னு பாக்கி இருக்கு… அதை முடிச்சிட்டேன்னா சந்தோசமா ஜெயிலுக்குப் போயிடுவேன்”

“என்ன வேலை சார்?”

ஏகலைவன் மனுவேந்தனை உணர்வின்றி வெறித்தான்.

“நான் இங்க இருந்து தப்பிக்கணும்… அதுக்கு வழி சொல்லுங்க… என் வேலை என்னங்கிறது உங்களுக்குத் தெரியணும்னு அவசியமில்ல”

“சுத்தி போலீஸ் இருக்காங்க சார்… தப்பிக்குறது அவ்ளோ சுலபமில்ல”

“நான் சொல்லுறது போல செய்யுங்க”

ஏகலைவன் தனது யோசனையைக் கூறியதும் அவர் சரியென ஒப்புக்கொண்டார்.

“அப்ப நான் போய் நீங்க சொன்னதை செய்யுறேன் சார்” என கிளம்பியவர் வாயிலருகே சென்றதும் “ஒரு நிமிசம் சார்” என்றான் அவன்.

மனுவேந்தன் திரும்பியதும் “நான் ஜெயிலுக்குப் போனதும் என் ப்ராப்பர்டி எல்லாமே நிஷாந்துக்குப் போற மாதிரி செஞ்சுடுங்க… அதுக்குப் பேப்பர்சை ரெடி பண்ணிடுங்க… அப்புறம் உங்க மொபைலை எனக்குக் கடன் குடுங்க… பயப்படாம குடுங்க… என் கடமை முடிஞ்சதும் போலீஸ்ல சரண்டர் ஆனாலும் உங்க கிட்ட மொபைலைத் திருடுனதா தான் சொல்வேன்” என்றான் அவன்.

ஒரு நிமிடம் மனுவேந்தனின் மனம் கனத்துப்  போனது. அவருக்கு ஏகலைவனின் தகிடுதத்தங்கள் பற்றி ஓரளவுக்குத் தெரியும். இருப்பினும் நிஷாந்த் மீது அவனுக்கு இருப்பது உண்மையான அன்பாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதினார் அவர். ஏகலைவனால் யாரையும் உண்மையான அன்போடு அணுக முடியாதென அழுத்தமாக நம்பியவருக்கு ஏகலைவனின் இந்தப் பேச்சு சங்கடத்தைக் கொடுத்தது.

“சரி சார்” என்றவர் அவன் சொன்னதைச் செய்து முடித்துவிடும் தீர்மானத்தோடு தான் அங்கிருந்து வெளியேறினார்.

“என்ன சார் பண்ணிருக்கிங்க ஏகலைவன் சாரை? யாரைக் கேட்டு அவர் கையில விலங்கு மாட்டி அரெஸ்ட் பண்ணுனிங்க? போதாக்குறைக்கு அவரை மரியாதைகுறைவா நடத்திருக்கிங்க… லாக்கப்ல அவரை அடிச்சுத் துன்புறுத்திருக்கிங்க… அவரோட நெத்தி வீங்கியிருக்கு… விசாரணை கைதிகளை அடிச்சு துன்புறுத்துறது சட்டப்படி குற்றம்… அதுவும் ஏகலைவன் சார் சமுதாயத்துல ஒரு கௌரவமான இடத்துல இருக்குறவர்… அவரை விசாரணைங்கிற பேருல துன்புறுத்திருக்கிங்க” என்று மார்த்தாண்டனிடம் படபடத்தார் அவர்.

“என்ன ஒளறுறிங்க?” என்று அவர் திகைக்க

“சும்மா நடிக்காதிங்க சார்… ரோஷணை லாக்கப்ல அடிச்சு துன்புறுத்தி அவன் அங்கயே சூசைட் பண்ண காரணமா இருந்தவர் நீங்க தானே? ரோஷணோட லாக்கப் டெத்துக்கு நீங்க தானே காரணம்? அதையே ஏகலைவன் சாருக்கும் செய்ய பாக்குறிங்களா?” என்று மனுவேந்தன் பொய்க்கோபத்தோடு பேசவும் மார்த்தாண்டன் நிதானமிழந்தார்.

“விட்டா பேசிட்டே போறிங்க… நீங்க பாத்திங்களா ரோஷணை நான் லாக்கப்ல டார்ச்சர் பண்ணுனேன்னு… ஸ்டேசனுக்குள்ள வந்ததும் அவர் எங்களை மரியாதைக்குறைவா பேசுனதால ஐ ஸ்லாப்ட் ஹிம்… அவ்ளோ தான்… ஏகலைவன் ஹீட் ஸ்ட்ரோக்கால மயங்கி விழுந்தப்ப நெத்தியில இடிச்சிருக்கலாம்… நாங்க அரெஸ்ட் பண்ணுனப்ப அவர் கோ-ஆப்ரேட் பண்ணல… அது தான் அவரை ஹேண்ட்கஃப் போட்டு அரெஸ்ட் பண்ணுனதுக்குக் காரணம்… நான் அவரை லாக்கப்ல டார்ச்சர் பண்ணுனதுக்கு உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு லாயர் சார்?”

மனுவேந்தனுக்கும் மார்த்தாண்டனுக்கும் இடையே சூடான விவாதம் நடந்தேற அங்கே கூட்டம் கூடியது. நம் மக்களுக்குச் சண்டையை வேடிக்கை பார்ப்பதில் அத்துணை சுவாரசியம். விளைவு ஏகலைவனுக்குக் காவலுக்கு நின்ற கான்ஸ்டபிள்களும் அந்தச் சண்டையை வேடிக்கை பார்க்க வந்துவிட கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு மெதுவாக தனது கையில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த சலைனின் ஊசியைக் கழற்றிவிட்டு படுக்கையை விட்டு எழுந்தவன் யாருமறியாவண்ணம் மெதுவாக அங்கிருந்து வெளியேறினான்.

சண்டை நடந்த ஜோரில் யாருமே அவனைக் கவனிக்கவில்லை. மனிதர்களுக்குத் தான் இம்மாதிரி சண்டையை ரசிக்கும் குணம் இருக்கும், எனக்கில்லை என்பது போல சி.சி.டி.வி கேமரா தனது பதிவு செய்யும் வேலையைச் சரியாகச் செய்தது.

ஏகலைவன் விறுவிறுவென வெளியே வந்தவன் மருத்துவமனையின் முன்பகுதியில் காவல்துறையினர் தலைகள் தெரியவும் மெதுவாக பதுங்கி பின்பக்கம் சென்றான். பொதுவாக அங்கே ஆள் நடமாட்டம் இருக்காது. அங்கிருந்த கேட் பூட்டப்படாமலிருக்கவும் மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியேறியவனுக்குத் தலை சுற்றியது.

இருப்பினும் சமாளித்துக்கொண்டு மெதுவாக மரங்கள் அடர்ந்த கானகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்படியே காட்டுக்குள் போயும் விட்டான். பொன்மலையின் மூன்று பக்கம் காடு சூழ்ந்திருப்பது அவனுக்கு வசதியாகப் போய்விட காவல்துறையினரிடமிருந்து தப்பித்து காட்டுக்குள் வந்துவிட்டான் அவன்.

மரங்களினூட தெரிந்த பாதையில் நடக்கும் போதே ,மனுவேந்தனின் மொபைலிலிருந்து ஒரு எண்ணுக்கு அழைத்தான்

அழைப்பு ஏற்கப்பட்டதும் “பேசி ரொம்ப நாளாச்சு கலிங்கராஜன்” என்றபடி நடந்தான் ஏகலைவன்.

மறுமுனையில் கலிங்கராஜனோ யார் அழைத்திருப்பதென புரியாமல் திகைத்தார். பின்னர் தெரிந்த நபரின் குரல் என்று பிடிபடவும் “ஏகலைவன் சார்” என்றார் அவர்.

“யெஸ் ஏகலைவனே தான்… என் ஆளு கால் பண்ணி உங்களை ஒரு வேலைய செய்ய சொன்னானே.. செஞ்சிங்களா?” என்று விசாரித்தான் அவன்.

“உங்க ஆளா?” என்று கேட்கும்போதே “உங்களை பொன்மலைய விட்டுப் போகச் சொன்னவன், உங்க குழந்தைங்களை இதன்யா கூட பழகவிட்டு அவளுக்கு கேஸ் சம்பந்தமா க்ளூ குடுத்துடக்கூடாதுனு மிரட்டுனவன், உங்க பசங்களை கொடைக்கானல்ல வச்சு கடத்துனவன் – இப்ப புரியுதா யார் என்னோட ஆளுனு?” என்று சொல்லி கலிங்கராஜனை இடிந்து போக வைத்தான் ஏகலைவன்.

கலிங்கராஜனுக்கு உணர்வு மீண்டது. சற்று முன்னர் இதே மொபைல் எண்ணிலிருந்து பழக்கமற்ற குரலில் யாரோ அழைத்து மிரட்டியது நினைவுக்கு வந்தது.

“ஏன் சார்? எதுக்கு இப்பிடிலாம் செஞ்சீங்க?”

“ஓஹ்! உங்களுக்கு இப்ப விளக்கம் வேணுமா? இல்ல உங்க பசங்க உயிரோட இருக்கணுமா?” என்றான் ஏகலைவன் எகத்தாளத்தோடு.

கலிங்கராஜன் பீதியுற்றார்.

“என் பசங்களை எதுவும் பண்ணிடாதிங்க… உங்க ஆளு என் கிட்ட பேசுனப்ப ரசூல் பாய் பொண்ணு முபீனாவை கடத்தி காட்டு குகைக்குக் கொண்டு வரச் சொன்னான்… அந்தப் பாவத்தைத் தவிர வேற எது வேணும்னாலும் சொல்லுங்க”

ஏகலைவன் அசட்டையாக உச்சு கொட்டினான்.

“இப்போதைக்கு நீங்க அந்தப் பாவத்தைத் தான் பண்ணனும் கலிங்கராஜன்… இல்லனா உங்க மூனு பசங்களையும் கடத்தி ட்ராமாலாம் போட மாட்டாங்க என் ஆட்கள்… ஒரேயடியா பார்சல் பண்ணி மேல அனுப்பிடுவாங்க” என்றான் குரூரமாக.

கலிங்கராஜனுக்குச் சர்வமும் நடுங்கியது.

“வேண்டாம் ஏகலைவன்… நான் செய்யுறேன்” என்று வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார் அவர்.

மொபைல் அழைப்பைத் துண்டித்தவர் கொடைக்கானலில் இருந்து அன்று காலை தான் திருநெல்வேலிக்கு வந்திருந்தார். பிள்ளைகளையும் அழைத்து வந்துவிட்டார். கடத்தல்காரர்கள் இருந்த இடத்தைக் காவல்துறை கண்டுபிடித்த பிற்பாடே அவர் திருநெல்வேலிக்குத் திரும்பினார்.

அவர்கள் இருக்கும் பகுதி தெரிந்துவிட்டது. எப்படியும் இன்னும் ஒரு நாளில் அவர்களைப் பிடித்து விடுவோமென காவல் ஆய்வாளர் சுனில் சொன்னதால் தான் அவர் அம்முடிவை எடுத்தார்.

ஆனால் ஊருக்குத் திரும்பிய அன்றே யாரோ ஒருவர் போல மனுவேந்தனிடமிருந்து வந்த அழைப்பு அவரை ரசூல் பாயின் மகள் முபீனாவைக் கடத்தும் வேலைக்குக் கட்டாயப்படுத்தவும் மருண்டுவிட்டார்.

ஏகலைவனோ அனைத்துக்குப் பின்னரும் தானே இருப்பதாக வாய்வார்த்தையாக ஒப்புக்கொண்டு மிரட்டினான்.

கலிங்கராஜன் தர்மச்சங்கடத்தில் ஆழ்ந்தார். பிள்ளைகளின் நலனுக்காக வேறு வழியின்றி அப்பாவத்தைச் செய்ய துணிந்தார்.

அதே நேரத்தில் மருத்துவமனையிலிருந்து ஏகலைவன் தப்பித்த செய்தி பொன்மலை காவல் நிலையத்தை அடைந்தது. கூடவே சிங்கப்பூருக்குச் செல்வதாகச் சொன்ன பிரகதி அவளது அத்தை வீட்டுக்குப் போகவே இல்லை எனவும் ஒருவேளை நிஷாந்திடம் அடைக்கலம் தேடினாளா என்று பேராசிரியர் தேவநாதன் நிஷாந்திடம் மொபைலில் விசாரித்துக்கொண்டிருந்தார் சரியாக அந்தக் கணத்தில்.