IIN 82

டார்க்வெப் சட்டத்துக்கு புறம்பானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை அதில்லை. டார்க்வெப்பில் சிலர் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்தாலும் டார்க்வெப் உபயோகம் சட்டத்திற்கு புறம்பானது என்று எந்த நாட்டு சட்டத்திலும் சொல்லப்படவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் டார்க்வெப்பில் உலாவுவது சட்டரீதியானதே. இணைய கட்டுப்பாடுகள் கொண்ட நாடுகளான ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் இணையத்தில் அனாமதேயமாக உலாவுவதைத் தடை செய்திருக்கின்றன. எனவே அங்கு மட்டுமே டார்க்வெப் பயன்பாடு சட்டத்திற்கு புறம்பான காரியமாகக் கருதப்படும். டார்க்வெப் என்பது சர்ஃபேஸ் வெப்பை விட மிகவும் பெரியது என்ற கருத்து அனேகரிடம் உலாவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் சர்ஃபேஸ் வெப்பின் அளவை விட டார்க்வெப்பின் அளவானது சிறியதே! டார்க்வெப் என்பது டீப்வெப்பின் ஒரு சிறிய பகுதியே! இணையத்தில் முறைப்படி வகைப்படுத்தப்படாத பகுதியையே டீப்வெப் என்பார்கள். அதன் ஒரு பகுதியான டார்க்வெப் சர்ஃபேஸ் வெப்பை விட மிகவும் சிறியதே!

                                                          -From Internet

“அந்த புதன்கிழமை ஒரு மோசமான நாளா இருக்கும்னு நான் யோசிக்கவேல்ல… திடீர்னு முத்து என் வீட்டுக்கு வந்து காட்டு குகைக்கு வாங்கனு கூப்பிட்டான்… இந்த நேரத்துல எதுக்குனு நான் யோசிச்சப்ப ரோஷண் கொலை வழக்குல சிக்கக்கூடாதுனா நான் வரணும்னு அவன் சொன்னான்…. ரோஷணோட பேரைச் சொன்னதும் எனக்குப் பயம் வந்துடுச்சு… அவன் அன்னைக்குச் சென்னைக்குப் போறதா சொல்லிட்டுக் கிளம்புனான்… என்னால முத்து சொன்னதை நம்பவும் முடியல… இருந்தாலும் ரோஷண் மேல இருந்த பாசத்தால வேற வழியில்லாம நான் அவன் கூட கிளம்புனேன்”

பாதிரியார் பவுல் இனியாவின் சடலத்தை ராக்கி பார்ப்பதற்கு மூன்று மணி நேரங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

முத்துவோடு காட்டு குகைக்குப் போனவர் அங்கே கண்ட காட்சியில் இதயம் நொறுங்கிப் போனார். இனியாவின் சடலம் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு அங்கே கிடத்தி வைக்கப்பட்டிருக்க அதனருகே தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள் நவநீதம். அவளிடமிருந்து சில அடிகள் தொலைவில் இடிந்து போய் அமர்ந்திருந்தார் ஜான்.

அவர்கள் இருவரையும் அலட்சியமாகப் பார்த்தபடி போதைப்பொருள் அடங்கிய சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான் ரோஷண். சென்னைக்குப் போகவேண்டியவன் இங்கே என்ன செய்கிறான்?

அவனருகே திமிரின் மொத்த ரூபமாக நின்று கொண்டிருந்தான் ஏகலைவன்.

பாதிரியாருக்குச் சர்வமும் ஆட்டம் கண்டது. இனியாவின் சடலத்தினருகே ஓடிப்போனார் அவர்.

அவர் சடலத்தைத் தொடும் முன்னர் நவநீதம் தடுத்தாள்.

“என்ன இது? இது யாரு? ஊருக்குள்ள கலிங்கராஜன் பொண்ணைக் காணலனு ஒரு செய்தி போகுது… ஒருவேளை இது இனியாவா?” பதறிப்போய் கேட்டார் பவுல்.

“அவ செத்துட்டா ஃபாதர்”

உணர்வின்றி உரைத்தாள் நவநீதம். அங்கே கிடப்பவள் இனியா தான் என்பதை அந்த ஒரு வாக்கியம் சொல்லிவிட பாதிரியார் பவுலால் அந்த உண்மையை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

“என்ன?”

அதிர்ச்சியாய் அந்தக் குகையிலிருந்த ஒவ்வொருவரையும் பார்த்தார் பவுல்.

“என்ன நடந்துச்சு இங்க? ஏகலைவன் நீங்க ஏன் இவங்க கூட இருக்கிங்க? இனியா எப்பிடி இந்த நிலமையில? அவ எப்பிடி இங்க வந்தா? யாராச்சும் சொல்லுங்க” பதற்றத்திலும் பரிதாபத்திலும் பாதிரியாருக்கு வார்த்தைகள் கோர்வையாக வரத் தவறின.

ஏகலைவன் நக்கலாகச் சிரித்தபடி ரோஷணை அவர் முன்னே தள்ள, அவனோ போதையின் பிடியில் தள்ளாடி கீழே விழப்போனான். நல்லவேளையாகப் பாதிரியார் அவனைத் தாங்கிக்கொண்டார்.

“ரோஷண் இனியாவைக் கொன்னுட்டான் ஃபாதர்” என்றான் ஏகலைவன் தெள்ளத்தெளிவாக.

பாதிரியார் அதிர்ந்து போய் தள்ளாடிக்கொண்டிருந்தவனின் கன்னத்தைத் தட்டினார்.

“டேய் ரோஷண்! என்னைப் பாரு… நீ… நீ இந்தத் தப்பை செய்யல தானே? சொல்லுப்பா… நீ செய்யல தானே?” என அவனிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொள்ள துடித்தார்.

ஏகலைவன் அவனது டீசர்ட்டைப் பிடித்து இழுத்தவன் “ரோஷண்! நீ தானே இனியாவைக் கொலை பண்ணுன?” என்று கேட்க

“ஆமா… நான்ன்.. தான் இனியாவைக் கொன்னேன்… நான் தான் கொன்னேன்ன்” என்று ஹிப்னாடிசத்தால் பீடிக்கப்பட்டவனைப் போல உரைத்தவனின் விழிகள் கண்கள் போதையில் சிவந்திருக்க தடுமாறியபடியே சிரித்தான் சத்தமாக.

பாதிரியாரால் அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை. என்றாவது ஒருநாள் ரோஷண் மனம் திரும்புவான் என்று அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் கடைசி துகளும் காற்றோடு காற்றாகப் பறந்துபோய்விட மனிதர் நொந்து போனார். பேச்சற்று நின்றார்.

ஏகலைவன் அவரது அதிர்ச்சியைக் கண்டுகொள்ளாது ரோஷணுக்கும் முத்துவிற்கும் அடுத்தடுத்த கட்டளைகளை விதித்தான்.

“இவ உடம்பை காட்டுப்பாதையில போட்டுருங்க… இப்ப போனா தான் எஸ்டேட் ஆபிஸ்ல இருந்து நைட் ஷிப்ட் முடிச்சு ஆளுங்க வர்றதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் இவ உடம்பை அங்க கொண்டு போய் போட்டுருங்க… நவநீதம், ஜான் நீங்க ரெண்டு பேரும் இவங்க பின்னாடியே போங்க… இவ சடலத்துல இருந்த ரத்தம் முழுக்க வெளிய போயிடுச்சு… இருந்தாலும் இவ துணி கிழிச்சலோ இவங்களோட கால் தடமோ போலீசுக்குக் கிடைச்சா ரொம்ப கஷ்டம்… எந்த ஆதாரமும் இல்லாம அழிக்க வேண்டியது உங்க பொறுப்பு… அப்புறம் உங்க ஃபூட் பிரிண்ட்ஸ் அங்கங்க இருக்கணும்… போலீஸ் ஃபூட் பிரிண்ட்ஸை ஃபாலோ பண்ணுனா கூட குகைக்கு வர முடியாதளவுக்குக் கன்பியூஸ் ஆகணும்… இந்த ஸ்ப்ரேயை அங்கங்க அடிச்சிட்டுப் போங்க… அப்ப தான் மோப்பநாய் வச்சு தேடுனாலும் அவங்களால எந்த உண்மையையும் கண்டுபிடிக்க முடியாம போகும்”

ரோஷணும் முத்துவும் இனியாவின் சடலத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்ப நவநீதமும் ஜானும் அவர்களைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

இவ்வளவையும் வெறித்தபடி நின்ற பாதிரியாரிடம் வந்து நின்றான் ஏகலைவன்.

“உங்களுக்கு ஒரு வேலை இருக்கு ஃபாதர்” என்றபடி ஒரு பிக் ஷாப்பரில் சில துணிகள், கூந்தல் கற்றைகள், ஹாக்சா ப்ளேடு, ஆசிட் பாட்டில் இவற்றை எல்லாம் போட்டு அவரிடம் நீட்டினான்.

பாதிரியார் கோபத்தோடு அவனை வெறுப்பாகப் பார்த்ததும் சத்தமாகச் சிரித்தான்.

“இந்தக் குகையோட இண்டு இடுக்குல கூட எந்த ஆதாரமும் போலீசுக்குச் சிக்கிடக்கூடாது ஃபாதர்… அப்பிடி சிக்குச்சுனா உங்க ரோஷணும் போலீஸ்ல சிக்குவான்” என்றான் நக்கலாக.

பாதிரியார் தடுமாறினார். வெறுப்போடு அவனை ஏறிட்டவர் “கர்த்தர் உன்னைச் சும்மா விடமாட்டார்… நீ செஞ்ச தவறுக்கான தண்டனைய அவர் குடுப்பார்” என்றார்.

“ஓஹ்! சாபமா? ப்ச்! எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதிங்க ஃபாதர்… இதை பிடிங்க… பத்திரமா வச்சுக்கோங்க… நான் எப்ப கேக்குறேன்னோ அப்ப நீங்க குடுத்தா போதும்” என்றான்.

பாதிரியார் ரோஷணின் எதிர்காலம் கருதி அதை வாங்கிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் ரோஷணும் முத்துவும் திரும்பி வந்ததும் ரோஷண் அணிந்திருந்த சட்டையைக் கழற்ற சொன்னான் அவன். ஆங்காங்கே உதிரத்தில் நனைந்திருந்த அந்தச் சட்டையை பிக்சாப்பரில் போட்டு தன்வசம் வைத்துக்கொண்டான்.

“இது என் கிட்ட இருக்கும்… எப்ப நீங்க என் பேச்சை தட்டலங்கிற நம்பிக்கை வருதோ அப்ப இதை உங்க கிட்ட ஒப்படைப்பேன் ஃபாதர்… நீங்க மட்டும் எனக்குத் துரோகம் பண்ண நினைச்சிங்கனா இந்தச் சட்டை போலீஸ் கிட்ட போகும்…. அப்புறம் உங்க ரோஷண் ஜெயிலுக்குப் போவான்” என்று மிரட்டியவனின் முன்னே கையாலாகாதவராகி நின்றார் அவர்.

“அது மட்டுமில்ல… போலீசை சுத்தல்ல விட அப்பப்ப உங்க எல்லாருக்கும் நான் சில வேலைகளைச் சொல்லுவேன்… அதை தட்டாம செய்யணும்… இல்லனா இனியாவோட நிலமை தான் உங்க ஒவ்வொருத்தருக்கும் வரும்… ஞாபகம் வச்சுக்கோங்க”

பாதிரியார் அனைத்தையும் சொல்லிவிட்டு நிமிர்ந்தார்.

அவரது கண்களில் கண்ணீர்!

“அப்புறம் எதுவும் தெரியாத மாதிரி நான் வீட்டுக்கு வந்துட்டேன்… அதுக்கு அப்புறமா தான் ராக்கி இனியாவோட பாடிய காட்டுப்பாதைல பாத்து என்னைக் கூப்பிட்டு முருகையா ஊர் மக்கள் எல்லாரும் வந்தாங்க… பின்னாடி நடந்த எல்லாம் உங்களுக்குத் தெரியும்… ஏகலைவன் சொல்லித் தான் நவநீதம் கிட்ட நான் கிளாராவோட சால்வையைக் குடுத்துவிட்டேன்… அந்தச் சால்வைய ஒருநாள் கிளாரா குகைல மிஸ் பண்ணிட்டாங்க… அதை பத்திரப்படுத்துனு ரோஷண் கிட்ட ஏகலைவன் தான் சொல்லிருக்கார்… இனியாவோட ரத்தத்தை அந்தச் சால்வையை வச்சு துடைச்சு எடுத்திருக்காங்க… அதை ஆதாரமா வச்சு கிளாரா மேல பழி போட்டு ஏகலைவன் இந்தக் கேஸ்ல இருந்து தப்பிச்சார்… இந்தக் கேஸ் குளோஸ் ஆனதும் ஏகலைவன் ராக்கி கிட்ட ரோஷணோட சட்டையைக் குடுத்துவிட்டார்… அதை இதுக்கு மேலையும் பத்திரபடுத்த வேண்டாம்னு சொன்னவர் அதை முருகன் கோவில் சுவரைக் கட்ட வந்த கொத்தனார் கிட்ட குடுத்துடச் சொன்னார்… எதுக்காகனு எனக்குத் தெரியாது சார்”

பாதிரியார் தனது வாக்குமூலத்தைக் கொடுத்து முடித்ததும் விசாரணை அறையிலிருந்து வெளியேறினார்கள் முரளிதரனும் மார்த்தாண்டனும். சரியாக அந்நேரத்தில் காவல் நிலையத்துக்குள் வந்த இதன்யாவை அவர்கள் கண்டுவிட்டார்கள்.

“எங்க போனிங்க மேடம்? இங்க எவ்ளோ பெரிய விசயங்கள் வெளிய வந்திருக்கு தெரியுமா?” என்று கேட்டபடி அவளோடு விசாரணைக்குழுவின் அறைக்குள் சென்றார் மார்த்தாண்டன். முரளிதரனும் அவர்களைத் தொடர்ந்தார்.

“சோபியாவைப் பாத்து ஒரு முக்கியமான விசயம் விசாரிக்கப் போயிருந்தேன்” என்றவள் சோபியாவிடம் பேசிய அனைத்தையும் அவர்களிடம் விளக்கினாள்.

“ஜான், நவநீதம், முத்து, ரோஷண், ஏகலைவன் இந்த அஞ்சு பேரும் இனியாவோட மர்டர் ஸ்பாட்ல இருந்திருக்காங்க” என்று முடித்தாள் அவள்.

“ஃபாதரும் இதை தான் சொன்னார் மேடம்” என்று ஆரம்பித்த முரளிதரன் பாதிரியார் பவுலின் வாக்குமூலத்தை அவளிடம் கூறிவிட்டார்.

அனைத்து தகவல்களையும் ஒன்றிணைத்துப் பார்த்ததில் கொலைகாரர்கள் ரோஷணும் ஏகலைவனும் என்று புரிந்தது அவர்களுக்கு. ஆனால் மேற்சொன்ன இருவரையும் தவிர்த்து மிச்சமிருக்கும் நால்வரில் யாருமே கொலையை நேரில் பார்க்கவில்லை என்பது தான் வேதனை.

ரோஷணோ ஏகலைவனோ வாய் திறந்து கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம்! நேரடி சாட்சிகள் கிடைக்காத பட்சத்தில் சர்கம்ஸ்டான்ஷியல் எவிடென்சை அடிப்படையாக வைத்தும் ஏகலைவனைக் கொலை குற்றவாளியென சட்டம் தீர்மானிக்க வழியுண்டு.

ஆனால் ஏகலைவன் அவனால் முயன்றமட்டும் இந்த வழக்கை உடைத்து வெளியே வர முயல்வான். என்ன செய்யலாமென மூவரும் யோசித்தார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஏகலைவன் இந்நால்வரை வைத்து பல திட்டங்களைச் சாதுரியமாக வகுத்து தப்பியிருக்கிறான். இறுதி திட்டத்தில் பணத்தாசை காட்டி கோபாலையும் இதற்கு உடந்தையாக்கி இருக்கிறான்.

சி.சி.டி.வி பூட்டேஜை அழித்தது, கிளாராவுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டபோது முழு பழியையும் பாதிரியார், கோபால், நவநீதம் துணையோடு கிளாரா மீது போட்டு தப்பித்தது, சோபியாவை வைத்து ஜான், நவநீதம் மற்றும் முத்துவை உணர்வுரீதியாகப் பயமுறுத்தியே தனது காரியத்தை சாதித்திருக்கிறான்.

இவனை வெளியே விட்டுவைப்பது கட்டாயம் ஆபத்தில் முடியும். கூடவே ஏகலைவனைக் கைது செய்தால் மட்டுமே இனியாவை அவன் கொலை செய்ததற்கான சரியான காரணம் என்ன என்பது தெரியவரும். வெறும் ஊகங்களின் அடிப்படையில் யாரையும் குற்றவாளியாக்கிவிட முடியாது.

மகேந்திரனோடு போனவர்களிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றதும் கொஞ்சம் பரபரப்புற்ற மார்த்தாண்டன் மகேந்திரனின் சொந்த உபயோகத்துக்கான மொபைலுக்கு அழைத்தார்.

மகேந்திரன் அழைப்பை ஏற்றதும் “ஃப்ளைட் இந்நேரத்துக்கு லேண்ட் ஆகியிருக்குமேய்யா… இன்னுமா அவனை அரெஸ்ட் பண்ணல?” என்று கேட்டார்.

மறுமுனையில் மகேந்திரன் சற்று தயங்கினாற்போல பேசவும் மார்த்தாண்டனுக்குள் சந்தேகம் முளைத்தது.

“என்னாச்சுனு தெளிவா சொல்லுய்யா”

“சென்னைல இருந்து வந்த பேசஞ்சர் லிஸ்டுல ஏகலைவன் பேரு இருக்கு சார்… அந்தாளும் ஃப்ளைட்ல வந்திருக்கார் சார்… ஆனா எங்க பார்வைல அவர் சிக்கவேல்ல” என்றார் அவர்.

இது என்ன அடுத்த குழப்பம்? எப்படியோ பாடுபட்டு ஏகலைவன் தான் பிரதானக் குற்றவாளி என கண்டுபிடித்த பிற்பாடு இப்படி ஒரு திருப்பம் என்றால் அவருக்கும் தான் குழப்பமும் இயலாமையும் வராதா?

“அது எப்பிடியா அவன் உங்க பார்வைல இருந்து தப்பிச்சான்? உங்களைப் பாத்ததும் இன்விசிபிள் மேனா மாறி தப்பிச்சிட்டு ஓடிட்டானா? ஏர்போர்ட் முழுக்க ஒரு இடம் விடாம செக் பண்ணுங்க… அவன் இல்லாம யாரும் ஸ்டேசனுக்கு வரக்கூடாது” என்று கறாராகச் சொல்லி மகேந்திரனின் அழைப்பைத் துண்டித்தவர் சிறப்பு விசாரணை குழுவினரிடம் “ஏகலைவன் தூத்துக்குடிக்கு ஃப்ளைட்ல வந்திருக்கான்… ஆனா நம்ம ஆபிசர்ஸ் கண்ணுக்கு மறைவா அங்க இருந்து போனதா சொல்லுறார் மகேந்திரன்” என்றார்.

இப்போது மற்ற இருவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

எங்கே போயிருப்பான் அவன்? இம்முறை அவனைத் தப்பவிட்டால் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குவானோ?

நேரம் ஆக ஆக பதற்றம் தான் கூடியதே தவிர மகேந்திரனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.

தூத்துக்குடியிலிருந்து பொன்மலை வரும் வரை உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்களைச் சோதனை செய்துவிட்டு அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டது. சந்தேகப்படும்படி யாராவது வாகனத்தில் பயணித்தால் அவரை உடனடியாக கைது செய்யும்படி காவல் ஆணையர் கூறிவிட்டார்.

பொன்மலை சோதனை சாவடியில் வந்து நின்றது ஒரு கார். அதைக் காவல்துறையினர் சோதனையிட முயன்றார்கள். காரில் வந்த நபரும் அதற்கு மறுப்பு கூறவில்லை.

“சார் உங்க ஐ.டி ப்ளீஸ்” காவலர் கேட்டதும் தனது அடையாளச்சான்றை எடுத்துக் காட்டினார் அந்நபர். அடுத்து வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தையும் பரிசோதித்த காவலர்கள் பின்னிருக்கையில் ப்ளேசரால் முகத்தை மூடிப் படுத்துக் கிடந்த நபர் யாரென கேட்க

“என் கூட ஃப்ளைட்ல வந்த நபர்… ஏர்போர்ட்ல இறங்குனதும் மயங்கி விழுந்துட்டார்… உடனே நான் என் கார்ல ஏத்திட்டு ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போனேன்… டீ-ஹைட்ரேசனால மயங்குனதா டாக்டர்ஸ் சொன்னாங்க… அவருக்கு ட்ரிப்ஸ் போட்டு தூங்கவும் சொல்லிருக்காங்க… அதான் தூங்கிட்டிருக்கார்… டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே… சந்தேகப்படாதிங்க,.. நான்… ” என்ற அந்நபர் தான் யாரெனச் சொல்லிவிட்டு மருத்துவரிடம் போனதற்கான ப்ரிஸ்கிரிப்சனைக் காட்டியதும் காவலர்கள் சந்தேகம் தீர்ந்து அந்தக் காரை அனுப்பிவைத்தார்கள்.

கார் பொன்மலை எல்லைக்குள் நுழைந்தது. காரை ஓட்டிய நபர் இரவு ஆரம்பிக்கவிருந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் அந்த மலைவாசஸ்தலத்தில் இருளின் கரங்கள் பரவத் தொடங்கியதை ரசித்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

கார் போலீஸ் குவார்ட்டர்சை கடந்து போய் நின்ற இடம் பொன்மலை காவல் நிலையம்.

காரிலிருந்து இறங்கிய அந்நபர் காவல் நிலையத்தைப் பார்த்த அந்நொடியில் உள்ளே இருந்து வெளியே வந்தாள் இதன்யா.

அவளோடு வந்த முரளிதரன் அங்கே நின்ற நபரைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றார்.

இதன்யாவோ “நீங்களா? நீங்க இங்க என்ன பண்ணுறிங்க ப்ராணேஷ்?” என்றாள் குழப்பத்தோடு.

ஆம்! காரில் வந்து இறங்கியவன் ப்ராணேஷ். இதன்யா தவிப்போடு அவனைப் பார்த்தபோதே மனைவியை அணைத்தான்.

“ஒன் வீக்கா என்னோட கால்ஸ் எதுக்கும் நீ ஆன்சர் பண்ணல” என்று அவன் சொன்னபோதே காரின் பின்கதவு திறந்தது. அதிலிருந்து இறங்கினார் ப்ராணேஷால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பொன்மலைக்கு வந்து சேர்ந்த அந்நபர்.

ப்ராணேஷும் இதன்யாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நிற்பதைப் பார்த்ததும் அந்நபரின் கண்களில் மெல்ல மெல்ல சிவப்பேறியது! அவரது உதடுகள் மெதுவாக “இந்த முறையும் நான் ஏமாந்துட்டேன் தேவா” என்றன. அந்நபர் ஏகலைவன் என்று தனியே சொல்லவேண்டுமா என்ன?

ப்ராணேஷையும் இதன்யாவையும் கோபம் வழியும் விழிகளால் வெறித்தபடி நின்றவனை மொத்த காவல் நிலையமும் அடையாளங்கண்டு கொண்டது! அந்நேரத்தில் மார்த்தாண்டனுக்கு மகேந்திரனிடமிருந்து வந்த அழைப்பில் “சார் சி.சி.டி.வி ஃபூட்டேஜை செக் பண்ணுனோம்.. ஏகலைவன் பாஸ்ட் அவுட் ஆகி விழுந்ததும் யாரோ ஒருத்தர் அவனுக்கு ஹெல்ப் பண்ணி அவனைத் தன்னோட கார்ல அழைச்சுட்டுப் போயிருக்கார்… அது எங்க கவனத்துக்கு வராம போயிடுச்சு” என்றார் அவர்.

அவரும் அச்செய்தியைச் சொல்ல வாயிலுக்கு ஓடிவந்தவர் அங்கே கண்ட காட்சியில் திகைத்து பின்னர் ஏகலைவனை நோக்கி வேகமாகச் சென்றார். அடுத்து என்னவாகும்?