IIN 81

டார்க்வெப்பில் பாதுகாப்பாக நீங்கள் உலாவ விரும்பினால் அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உலவியைப் பயன்படுத்துவது சிறந்தது. கூடவே வி.பி.என்களைப் பயன்படுத்துவது நல்லது. அவை உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தரும். டார்க்வெப்பில் பாதுகாப்பற்ற தளங்கள் உண்டு. ஆர்வக்கோளாறின் காரணமாக அங்கெல்லாம் செல்வதைத் தவிர்த்தாலே நிறைய பிரச்சனைகள் தவிர்க்கப்படும். உங்களது கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது சிறந்த வழிமுறை. அதனால் உங்கள் கணினி டார்க்வெப்பின் மால்வேர்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும். உங்களது அடையாளத்தை டார்க்வெப்பில் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தவேண்டாம். கூடவே உங்களது சுயவிவரம், கடவுச்சொற்களை யார் கேட்டாலும் எந்தத் தளம் கேட்டாலும் கொடுக்காமல் இருப்பது நலம். உங்களது டார்க்வெப் உலவியில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செட்டிங்சை பலப்படுத்துங்கள். தரவிறக்கம் செய்யும்போது கவனமாக இருங்கள். அதுதான் உங்களது கணினிக்குள் மால்வேர் புகுவதற்கான வழி. இவற்றை எல்லாம் நீங்கள் கடைபிடித்தாலும் நூறு சதவிகிதம் டார்க்வெப்பில் பாதுகாப்பாக இயங்கலாம் என்று உறுதியெல்லாம் கொடுக்க முடியாது. எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது உங்களைப் பாதுகாக்கும்.
-From Internet


“நாங்க எல்லாரும் சாத்தான் குரூப்ல மெம்பரா இருந்தப்ப ரோஷண் என்ன சொல்லுவானோ அதைக் கேட்டு தான் நடப்போம் மேடம்… ஆனா ரோஷணுக்கே கட்டளை போடுற இடத்துல இருந்தவர் தான் ஏகலைவன் சார்”
சோபியாவின் பாதுகாப்புக்கு இதன்யா உறுதியளித்ததும் ஜான் நடந்தது என்னவென்பதைச் சொல்ல ஆரம்பித்திருந்தார். இதன்யாவும் சிறை அதிகாரியை வைத்து அவன் பேசுவதை பதிவு செய்யச் சொல்லியிருந்தாள்.
“அவருக்கு எந்தச் சாத்தான் குரூப் மேல திடீர்னு நம்பிக்கை வந்துச்சு… ஆனா சாத்தான் வழிபாடு கூட்டத்துல அவரை நாங்க யாரும் பாத்ததே கிடையாது… எங்க வழிபாட்டுக்குப் பிரச்சனை வந்தா ரோஷணுக்கு அவர் தைரிய குடுப்பார்னு அவன் சொல்லிருக்கான்… அப்ப தான் ஒரு நாள் திடீர்னு அதிகாலை நேரத்துல எனக்கும் முத்துவுக்கும் நவநீதம் கால் பண்ணுனா… என்னனு கேட்டதுக்கு கொஞ்சம் அவசரம் குகைக்கு வானு கூப்பிட்டா… என் பொண்ணுக்கு மறுநாள் பிறந்தநாள்… அதை கூட ஒதுக்கிட்டு நானும் குகைக்குப் போனேன்… அங்க”
பேசிக்கொண்டிருக்கையிலேயே ஜானின் குரல் தடுமாறியது.
“அங்க இனியாம்மா… இனியம்மாவோட சடலம் கிடந்துச்சு… அதை பாத்தப்ப நவநீதம் அதை பாத்ததும் பேய்னு நினைச்சு பயந்து அலறி மயங்கி விழுந்துட்டா… அங்க எங்க மூனு பேரை தவிர இன்னும் ரெண்டு பேர் இருந்தாங்க… ஒருத்தன் ரோஷண்… இன்னொரு ஆள் ஏகலைவன்… அன்னைக்கு ஏகலைவனோட முகத்துல நான் குரூரத்தைப் பாத்தேன்… பாக்குறப்பவே உடம்புல ஓடுற ரத்தம் முழுக்க உறைஞ்சு போச்சு… என்னால கை காலை நகர்த்தக்கூட முடியல”
“பேனிக் அட்டாக்” தனக்குள் சொல்லிக்கொண்டாள் இதன்யா.


“நவநீதம் மயங்கி விழுந்த ஓர்மை கூட எனக்கு இல்ல.. முத்து அவளுக்கு மயக்கத்தைத் தெளிய வச்சான்… எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா சுரணை வந்துச்சு… அப்பவும் ஏகலைவனைப் பாக்க எனக்குப் பயமா இருந்துச்சு… கோபத்துல சிவந்த முகம், இறுகுன தாடை, இரக்கம் துளி கூட இல்லாத குரூரமான பார்வை – இதோட மொத்த ரூபமா ஆறடிக்கு அரக்கன் மாதிரி நின்னார் அவர்… நாங்க கும்புடுற சாத்தானுக்கு ஆட்டுத்தலையும் ரெண்டு கொம்பும் உண்டு… ஆனா என் கண்ணுக்கு மனுசத்தலையோட சாத்தான் நிக்குற மாதிரி தெரிஞ்சுது மேடம்… அவர் பேசுனப்ப குகையே அதிர்ந்துச்சு”
“அவர் என்ன சொன்னார்?”
“அந்த இடத்துல ரத்தம் சிந்திக்கிடந்துச்சு… அதெல்லாம் சுத்தம் பண்ணச் சொன்னார்… அப்புறம் நவநீதத்தை இனியாம்மாவோட டெட்பாடியோட கீழ…” கண்களை இறுக மூடிக்கொண்டார் ஜான்.
“இதுக்கு மேல கேக்காதிங்க மேடம்.. எனக்கும் ஒரு பொம்பளை பிள்ளை இருக்கு”
இதன்யாவுக்கும் இனியாவிற்கு நேர்ந்த கொடுமையைக் கேட்பதற்கு மனம் வலித்தது. சொல்பவருக்கும் கேட்பவருக்குமே இப்படி வலிக்கிறது என்றால் அந்த வேதனையை அனுபவித்துத் துடித்து இறந்த பெண்ணுக்கு அந்நேரத்தில் எப்படி இருந்திருக்கும்?
ஜான் சமாளித்துவிட்டு நிமிர்ந்தார்.
“இனியாம்மாவோட உடம்புல எங்க கைரேகை பதியக்கூடாதுனு க்ளவுஸ் போட்டு எல்லா வேலையையும் செஞ்சோம்… என்னாலயும் நவநீதத்தாலயும் இனியாம்மாவ அந்தக் கோலத்துல பாக்கவே முடியல… அப்ப தான் எங்க கிட்ட அவரு பேசுனார்”
ஜானின் கண்களில் கலவரம் மூண்டது. அன்றைய நாளுக்கே பயணப்பட்டுவிட்டார் அவர்.
அன்று குகையில் இனியாவின் உடலின் கீழ்பாகத்தை தண்ணீர் வைத்து நவநீதம் சுத்தம் செய்ய அடுத்து அங்கே கொலை நடந்ததற்கு ஆதாரமாக கிடந்த உதிரப்பெருக்கையும், இனியாவின் முகத்திலிருந்து உறித்து எடுக்கப்பட்ட தோலையும் அப்புறப்படுத்தும் வேலையை செய்யத் தொடங்கினார்கள் ஜானும் முத்துவும். இருவரும் கனத்த இதயத்தோடு தான் அதைச் செய்தார்கள்.
மேற்கொண்டு எதையும் செய்ய தங்களால் இயலாது என்று சொல்லிவிட்டார்கள் இருவரும்.
ஏகலைவனுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்தவன் பேச்சு தந்திரத்தை எடுத்து விட்டான்.
“கலிங்கராஜன் உனக்குப் பண்ணுன துரோகத்தை நினைச்சுப் பாரு ஜான்… அவர் செய்ய நினைச்ச பாவத்தை நீ அதுக்குள்ள மறந்துட்டியா? யோசிச்சுப் பாரு, அவர் மட்டும் நினைச்சதை செஞ்சிருந்தா இந்நேரம் நீ பைத்தியக்காரனாட்டம் அலைஞ்சிட்டிருந்தப்ப ஜான்… அந்த கலிங்கராஜன் உனக்குச் செய்ய நினைச்ச துரோகத்துக்கு கடவுள்… ப்ச்… சாத்தான், அதுவும் நீ நம்புற இந்தச் சாத்தான் அந்தாளுக்குக் குடுத்த தண்டனை இது”
இனியாவின் சடலத்தையும் சாத்தான் சிலையையும் தனது விரல்களால் மாறி மாறி சுட்டிக் காட்டினான் ஏகலைவன்.
ஜானின் முகம் மாறுவதைத் திருப்தியோடு கவனித்தவன் அடுத்து முத்துவின் மனதில் விஷத்தைக் கலக்க ஆரம்பித்தான்.
“இவளை நீ உண்மையா காதலிச்ச… ஆனா இவ உன்னை விட்டுட்டு என் மருமகனைக் காதலிச்சா… காதலிக்க மட்டும் செய்யல” என்றவன் நிஷாந்தோடு அவள் ஒன்றாக இருந்ததைக் குறிப்பிடவும் முத்துவின் கண்கள் நெருப்பு கோளங்களாயின.
சடலமாகக் கிடந்த இனியாவைச் சுற்றி யாரும் இல்லையேன்றால் அவளது உடலை நூறு துண்டங்களாக வெட்டி வீசியிருப்பான் அவன். அந்தளவுக்கு மூர்க்கம் அவனிடம்.
ஆண்கள் இருவரையும் பேசியே கரைத்தவன் பெண்ணான நவநீதத்தை வழிக்குக் கொண்டு வர அச்சுறுத்தலை ஆயுதமாக்கினான்.
“நீ இங்க நடந்ததை வெளிய சொல்லுவ?”
அவன் கேட்ட விதமே திகிலூட்டியது அவளுக்கு. மரணபீதியோடு அவனைப் பார்த்தவள் “இ…இனி… யாம்மா பாவம் சா…ர்” என்று திக்கித் திணறி சொன்னதும்
“அப்ப நீ பாவம் இல்லையா? சோபியா பாவம் இல்லயா? இதே மாதிரி காயம் உன் உடம்புல, சோபியாவோட உடம்புல காயம் பட்டா உங்களோட நிலமை எப்பிடி இருக்கும்னு யோசி” என்றவனின் குரலில் குரூரம் சொட்டியது. அதன் முன்னே அவனது விழிகளில் சொட்டிய குரூரம் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட வராது.
அது ஜானையும் நவநீதத்தையும் ஒரே நேரத்தில் அலறி கதற வைத்தது.
“ஐயோ அப்பிடி எதுவும் பண்ணிடாதிங்க”
“என் மக அப்பாவி சார்… அவளை விட்டுருங்க”
இருவரும் கரங்கூப்பி ஏகலைவனிடம் மண்டியிட்டதும் மேனியாக் போல சிரித்தான் அவன்.

“இனியாவோட மரணம் பத்தி யாரும் வெளிய சொல்லக்கூடாது… இவ உடம்பை வச்சு போலீஸ் விசாரணை பண்ணுனாலும் நீங்க என் பேரை வெளிய சொல்லக்கூடாது… மீறி சொன்னிங்கனா வாழுறப்பவே உங்களுக்கு நரகத்தை காட்டுவேன்… இனியாவை உயிர்பலிக்காக கொன்னது சாத்தான்… புரியுதா?”
“புரியுது… நாங்க யார் கிட்டவும் சொல்ல மாட்டோம்”
அடுத்து முத்துவைப் பார்த்தான் அவன். அவனும் சொல்லமாட்டேன் என்று பயத்தோடு உறுதியளித்தான்.
“இப்ப சொல்லுங்க இனியாவை கொன்னது யாரு?”
“சாத்தான்”
ஒருமித்த குரலில் அவனைத் தவிர மிச்சமிருந்த நால்வரும் சொல்ல ஏகலைவனிடம் ஆணவ சிரிப்பு முகிழ்த்தது.
“நம்மளை பாத்ததும் ஒருத்தர் கண்ணுல பயம் வர்றது ராஜபோதையான அனுபவம்டா ரோஷண்…. எனக்கு அதை நீ குடுத்திருக்க… தேங்க்ஸ்” என்று ரோஷணிடம் ஃபிஸ்ட்பம்ப் செய்தான் ஏகலைவன்.
ரோஷணும் கிட்டத்தட்ட அரக்கன் போல தான் அவர்களின் கண்களுக்குத் தெரிந்தான் அந்நேரத்தில். முத்துவும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள முழு குகையையும் சுத்தம் செய்தார்கள்.
அப்போது தான் ரோஷணோடு வந்திருந்த பத்ரா இனியாவின் உடலை முகர்ந்து பார்க்கத் துவங்கியது.
தன் கால்களால் அவளது முகத்தில் மிதித்து விளையாடியது.
எங்கே அது இனியாவின் உடலைச் சேதப்படுத்திவிடுமோ என பயந்து ஜான் பத்ராவை விரட்ட முயல அதுவோ தனது கூரிய பற்களைக் காட்டி அவரை பயமுறுத்தியது.
ரோஷணிடம் வந்தவர் “அந்தப் பொண்ணு செத்துடுச்சு… அதோட உடம்பாச்சும் பெத்தவங்களுக்கு மிஞ்சட்டுமே” என்று கண்ணீருடன் சொல்லவும் அவன் அலட்சியச் சிரிப்போடு “பத்ரா” என்று உரத்தக்குரலில் ஓநாயைத் தன்னிடம் அழைத்துக்கொண்டான்.
இவ்வளவையும் சொல்லி முடித்த ஜானிடம் இதன்யா முக்கியமான கேள்வியொன்றைக் கேட்டாள்.
“நீங்க மூனு பேரும் போனப்ப அங்க இனியாவோட டெட் பாடி இருந்த வரைக்கும் ஓ.கே… அவளை கொன்னது யாரு?”
ஜான் பரிதாபமாக விழித்தார்.
“என் மக மேல சத்தியமா இனியாம்மாவ யார் கொன்னாங்கனு தெரியாது மேடம்… நாங்க ஏகலைவன் சார் கிட்ட இனியாம்மா எப்பிடி செத்தாங்கனு கேட்டதுக்கு சாத்தானுக்கு உயிர்ப்பலி வேணும்னு அவளைக் கொன்னுட்டாருனு சொன்னார்… போலீஸ் கேட்டாலும் அப்பிடி தான் சொல்லணும்னு மிரட்டுனார்”
“அதுக்கு நீங்க மூனு பேரும் ஒத்துக்கிட்டிங்க?”
“வேற வழியில்ல மேடம்… ஏகலைவன் சாரோட அதிகாரம் அரசியல்வாதல ஆரம்பிச்சு அரசு அதிகாரி வரைக்கும் விலைக்கு வாங்கும்… நம்ம போலீஸ் கிட்ட உண்மைய சொன்னா நம்ம மூனு பேரும் தான் இனியாவை கொன்னோம்னு பொய்ச்சாட்சி ரெடி பண்ணி நம்மளை உள்ள தள்ளிடுவாரு… இல்லனா நம்மளை கொன்னு போலீஸ்கு பயந்து ஓடிட்டோம்னு கதை கட்டி விடுவார்னு முத்து சொன்னான்”
இதன்யாவின் முகத்தில் கடுப்பேறியது.
“அவன் சொன்னான்னு நீங்க விசாரணைல சாத்தான் பேரை சொல்லி குழப்பிருக்கிங்க….உங்களுக்குலாம் மூளையே கிடையாதா? அப்பிடி பயப்படுறபடி ஏகலைவன் என்ன செஞ்சிட்டான்?”
ஏகலைவன் என்ற பெயரை அவள் சொல்லும்போதே ஜானின் தேகம் பயத்தால் நடுங்கியது.
“ரத்தம் காயாத இனியாம்மா உடம்பை நீங்க கண் முன்னாடி பாத்திருந்திங்கனா நீங்களும் பயந்திருப்பிங்க மேடம்… என் வாழ்க்கைல நான் பாக்காத காட்சி அது… அவர் தான் இனியாம்மாவ கொன்னுருக்கணும்… நாங்க யாரும் கொலை நடந்ததைப் பாக்கல… தான் சொன்னதை செஞ்சா என் மகளை எதுவும் செய்யமாட்டேன்னு ஏகலைவன் சார் வாக்கு குடுத்ததால இனியாம்மா மரணத்துக்குக் காரணமான சாட்சி எல்லாத்தையும் அழிச்சோம்”
ஜான் சொல்லி முடித்தார். இதன்யா அனைத்தையும் கேட்டு முடித்தவள் “ஆமா, கலிங்கராஜன் உங்களுக்கு என்னமோ துரோகம் பண்ணுனார்னு சொன்னிங்களே… என்ன துரோகம் அது?” என்றாள் குறுகுறுப்போடு.
“அது… வந்து… வேண்டாமே மேடம்” என்றார் மெதுவாக.
“அதுக்கும் இனியா கேசுக்கும்..”
“எந்தச் சம்பந்தமும் இல்ல மேடம்… கலிங்கராஜன் ஐயா மேல எனக்கு விரோதம் இருந்தது உண்மை… ஆனா போன தடவை நீங்க வந்து என் மகளைப் படிக்க வைக்கார், அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்யுறார்னு சொன்னிங்களே.. அப்ப எனக்குப் புரிஞ்சுது என் முதலாளிக்கு நான் செஞ்சது துரோகத்தை விட அவர் எனக்குப் பெருசா எந்தத் துரோகத்தையும் செய்யல… இனியாம்மாவ இழந்து அவர் நொறுங்கி போயிருப்பார்… சில விசயங்கள் வெளிய தெரியாம இருக்குறதே நல்லது மேடம்”
இனியாவின் வழக்குக்குச் சம்பந்தப்படாத நபர் என சம்பந்தப்பட்ட ஜானே சொன்னாலும் இதன்யாவால் அதை நம்ப முடியவில்லை. ஆனால் ஜான் உண்மையையும் கூறப்போவதில்லையே!
எனவே கிளம்ப ஆயத்தமானாள் அவள்.
“நீங்க மூனு பேர் செஞ்சது ரொம்ப பெரிய குற்றம்… அதுக்கான தண்டனை கண்டிப்பா கிடைக்கும்”
ஜான் நிராசையோடு விழிக்கையிலேயே கிளம்பியும் விட்டாள் அவள்.
அதே நேரம் பொன்மலை காவல் நிலையத்தில் மார்த்தாண்டன் சென்னை விமானநிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏகலைவன் பயணமாகவில்லை என்பதை உறுதிபடுத்தியிருந்தார். கூடவே அவன் தூத்துக்குடிக்குச் செல்லும் விமானத்தில் தான் ஏறியிருப்பதாகவும், அந்தப் பயணிகள் பட்டியலில் அவனுடைய பெயர் இருப்பதாகவும் தெரிய வரவும் மகேந்திரனோடு சில காவலர்களை தூத்துக்குடி விமானநிலையத்துக்கு அனுப்பிவைத்திருந்தார். விமானம் இறங்கியதும் அங்கேயே அவனைக் கைது செய்யும் ஏற்பாடு.
எனவே பாதிரியார் பவுல் சொன்ன பொய்யான வாக்குமூலத்தை ஓரங்கட்டிவிட்டு முரளிதரனுடன் இணைந்து உண்மையில் நடந்தது என்ன என்ற விபரத்தை வாங்க முயன்று கொண்டிருந்தார்.
பாதிரியார் பவுல் சொன்னதையே சொல்லவும் எரிச்சலுற்றனர் இருவரும்.
“நீங்க ஸ்டேட்மெண்ட் குடுக்கலனாலும் எங்களால ஏகலைவனை அரெஸ்ட் பண்ண முடியும் ஃபாதர்… அந்தாளு தான் இனியாவைக் கொன்னுருக்கான்னு ப்ரூவ் பண்ண ஃபாரன்சிக் ரிப்போர்ட் ஒன்னே போதும்… அப்பிடி இருந்தும் ரெண்டு மணி நேரமா உங்க கிட்ட நாங்க ரெண்டு பேரும் தொண்டை தண்ணி வத்த கத்துறதுக்குக் காரணம், உங்களோட பங்கு இந்தக் கொலைல அக்யூரேட்டா என்னனு தெரிஞ்சா மட்டும் தான் ஏகலைவனோட பங்கு எவ்ளோனு எங்களால தீர்மானிக்க முடியும்… இப்பவாச்சும் உண்மைய சொல்லுங்க ஃபாதர்” என்று அதட்டிக்கொண்டிருந்தார் அவர்.


“என் ஸ்டேட்மெண்டை நான் அப்பவே குடுத்துட்டேன்… இனியாவைக் கொலை பண்ணுனது ரோஷண்… அவன் போலீஸ்ல மாட்டிக்கக்கூடாதுனு நான் இந்த ஆதாரத்தை எல்லாம் ஒளிச்சு வச்சேன்”
இப்போது முரளிதரன் இடையிட்டார்/.
“சரி… என்ன காரணத்துக்காக தப்பே செய்யாத கிளாராவை மாட்டிவிட அவங்களோட சால்வைய நவநீதம் கிட்ட குடுத்துவிட்டிங்க?”
“அது… அது… நான் தான் சொன்னேனே ரோஷணைக் காப்பாத்த..”
“ஷட்டப் ஃபாதர்… ரோஷண் செத்தாச்சு… இன்னும் நீங்க யாரைக் காப்பாத்தணும்னு துடிக்குறிங்க? அவனோட தம்பி ராக்கியைவா? உண்மைய சொல்லுங்க… அவன் தானே இனியாவைக் கொன்னது?”
“இல்ல… ராக்கி அப்பாவி”
“பொய்… ராக்கியும் ரோஷணும் இனியாவைக் கொலை பண்ணிருக்காங்க… ரெண்டு பேரையும் காப்பாத்த நீங்க ஆதாரத்தை மறைச்சிருக்கிங்க… அதுல ரோஷண் மட்டும் எங்க கிட்ட மாட்டிக்கிட்டான்… அவனையும் வெளிய கொண்டு வர நீங்க முயற்சி பண்ணுனிங்க… ஆனா அவன் லாக்கப்லயே முத்துவால தற்கொலைக்குத் தூண்டபட்டுச் செத்துட்டான்… அவன் கூட சேர்ந்து இனியாவைக் கொலை பண்ணுன ராக்கியை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்க… எங்க கவனம் அவன் பக்கம் வரக்கூடாதுனு கிளாராவை மாட்டிவிட்டிட்டுங்க… இது தானே நடந்த உண்மை?”
முரளிதரன் நிதானமற்ற குரலில் ஆணித்தரமாகப் பேச பாதிரியார் பவுலும் நிதானம் தவற ஆரம்பித்தார்.
“இல்ல இல்ல… ராக்கிக்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல”
“அவன் தான் இந்தக் கொலையில ரோஷணுக்குக் கூட்டாளி”
“நோ சார்… அவன் அப்பாவி”
“அவன் தான் அக்யூஸ்ட் நம்பர் டூ”
“இல்ல… அவன் அக்யூஸ்ட் இல்ல… அக்யூஸ்ட் ஏகலைவன் சக்கரவர்த்தி தான்… அவன் கிட்ட இருந்து ராக்கியை காப்பாத்த தான் நான் பாடுபடுறேன்”
கத்தியபடியே உண்மையைச் சொன்னபடி எழுந்துவிட்டார் அவர்.
நிதானத்தை இழக்கும் மனிதனின் மூளைக்கு யோசிக்கும் திறன், சாதுரியமெல்லாம் மறந்து போகும். பவுலின் மூளையும் யோசிக்கும் திறனை இழந்தது. விளைவு அவரது வாயிலிருந்தே உண்மை வெளிவந்துவிட்டது.
முரளிதரனின் இதழில் மெல்லிய வெற்றிப்புன்னகை. இழந்த நிதானம் மீண்டது அவரது உடல்மொழியில்.
“நடந்த உண்மைய இப்ப சொல்லுங்க” என்றார் சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்துகொண்டு.
பாதிரியார் பவுலுக்குத் தொண்டை வறண்டு போன உணர்வு. மார்த்தாண்டன் தண்ணீர் பாட்டிலை நகர்த்தியதும் எடுத்து அருந்தினார்.
சில நொடிகள் கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்திக்கொண்டார். மனதிற்குள் ஆண்டவரிடம் பிரார்த்தித்தவர் தான் சிறைக்குப் போய்விட்டாலும் ராக்கியோடு துணை இருக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டார்.
பின்னர் முரளிதரனிடம் தனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லத் துவங்கினார்.
“இனியாவைக் கொலை பண்ணுன இடத்துல இருந்த வெப்பன்ஸ், அந்த நேரத்துல ரோஷண் போட்டிருந்த சட்டை இதெல்லாம் என் கிட்ட தான் இருந்துச்சு… நான் தான் ஒளிச்சு வச்சேன்… அதுக்குக் காரணம் அந்த ரெண்டு பசங்களோட எதிர்காலத்தை நினைச்சு எனக்குள்ள இருந்த பயம்… கடவுளுக்காக வாழ்க்கைய அர்ப்பணிச்சவன் நான்… குடும்ப உறவுகள் மேல அதிகமா அன்பு வைக்கக்கூடாது… இந்த உலகமே எங்க உறவா மாறுனதுக்கு அப்புறம் எங்க குடும்பத்து மேல நாங்க வைக்குற அன்பு சுயநலமானது… சுயநலம் ஆண்டவருக்குப் பிடிக்காத உணர்வு… இது எல்லாமே தெரிஞ்சும் ரோஷணையும் ராக்கியையும் நான் என் பசங்களா பாத்தேன்… தாயில்லாத பசங்கனு அவங்க மேல இருந்த இரக்கம் காலப்போக்குல பாசமா பரிணாமிச்சதை என்னால தடுக்க முடியல… ரெண்டு பேர்ல ரோஷண் தவறான பாதைய தேர்ந்தெடுப்ப கூட என்னால அவன் கிட்ட கோவப்பட முடியல… ராக்கிய நல்ல மனுசனா வளக்கணும்னு நினைச்சேன்… ரோஷணோட சாத்தான் வழிபாட்டுல எனக்கு உடன்பாடு கிடையாது… ஆனா அது அவனைக் கொலை செய்யுறளவுக்குத் தூண்டுனதுனு தெரிஞ்சதும் என் மனசு அவனைக் காப்பாத்தணும்னு தான் துடிச்சுது… அவனுக்காக நான் ஆதாரத்தை ஒளிச்சு வச்சேன்… ஆனா போலீஸ் கேட்டப்பவும் என்னால எந்த உண்மையையும் வெளிய சொல்ல முடியாதபடி நான் மௌனமா இருக்க காரணம் ஏகலைவன்”
பாதிரியார் ஏகலைவனின் பெயரைச் சொல்லி நிறுத்திய அதே நேரத்தில் அவன் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தான். மகேந்திரன் மற்றும் குழு அவனைக் கைது செய்ய வாகைகுளத்திலுள்ள விமான நிலையத்தில் காத்திருந்தார்கள்.